நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 15, 2022

தங்க புஷ்பம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 29
 வியாழக்கிழமை

இன்றொரு சிறுகதை
-; தங்க புஷ்பம் :-


செவலைப் பசு மேய்ச்சலில் மும்முரமாக இருந்தது. இன்னும் மணி நாலரை ஆகவில்லை என்று - தங்க புஷ்பத்துக்குப் புரிந்தது.. 

எப்படியென்றால்,

' ஸ்க்கூலு தான் இன்னும் விடலையே.. '

அந்த மூனாம் வரப்புலயே அரை மைல் தூரம் நடந்தா
ஸ்க்கூலு.. இந்த ஊர் பொண்ணு புள்ளைங்க எல்லாம் அங்க போயி தான் படிக்கிறாங்க...

யோசித்துக் கொண்டிருந்த போது தூரத்தில் யாரோ கைப் பையுடன் மூனாம் வரப்பில் வருவது தெரிந்தது.. 

வண்டிச்சாலை  இல்லையா என்று கேட்டால் - இருக்கு!.. அது பஞ்சாயத்து  ஆபீஸ் தண்ணி டேங்கி  புள்ளையார் கோயில் எல்லாத்தையும் சுத்திக்கிட்டு ஒன்றை மைல் போவும். இது குறுக்கால வயக்காட்டுப் பாதை.. 

அங்கேருந்து நடந்தா விருட்டுன்னு இங்கே வந்துடலாம். வண்டி சைக்கிள்  எல்லாம் அந்தப் பக்கம் போவும். சனங்க மட்டும் சாயங்காலம் வரைக்கும் இந்த வரப்புல  நடப்பாங்க. இருட்டிப் போனா அதுவும் இருக்காது..

' அது யாரு வர்றது?.. மூத்தவரு மக மாதிரி இருக்கே!.. அட..  நம்ம கோகிலாவே தான்!.. '

' நம்ம கோகிலா என்ன நம்ம கோகிலா?.. அவங்களுக்கும் நமக்கும் தான் பேச்சு வார்த்தை இல்லையே.. '

'  அதுவும் ஆச்சு பத்து வருசத்துக்கு மேல .. ஒரு சண்டை இல்லை.. சச்சரவு இல்லை.. அதுவா நின்னு போச்சு.. '

' அப்போ கோகிலாவுக்கு மூணு வயசு.. நா கலியாணம் ஆகி வந்த மறு வாரம்.. புளிக் குழம்பு வைக்கச் சொன்னாங்க.. ன்னு வச்சதுல.. உப்புக் கல்லு ரெண்டு சாஸ்தியா போச்சு.. தடால்.. புடால்.. ன்னு மாமியார் சண்டைக்கு வந்துட்டாங்க.. என்னாடி சமைக்கிறே.. ன்னு.. ஒரே சத்தம்.. '

' மூத்த மருமக நீங்க என்ன சொல்லி இருக்கணும்?..  அத விட்டுட்டு அவங்க கூட சேர்ந்துகிட்டு வக்கணையா சமைக்கத் தெரியலை.. அது இது.. அப்படி இப்படி.. ன்னு ஏகடியமா என்னான்ன பேசினீங்க?.. '

' உங்க அப்பாரு சைக்கிள் கடை வச்சிருந்து உங்கள
கட்டிக் கொடுத்திருந்தாரு.. ன்னா..
எங்க அப்பா மைக் செட் கடை வச்சிருந்து என்னய கட்டிக் கொடுத்திருக்காரு.. 
நா ஒன்னும் சும்மா வரலையே.. அஞ்சு பவுனு போட்டுக்கிட்டு ஆறு ஏக்கர் நெலத்தோடத் தானே வந்திருக்கேன்.. ' 

' எதுக்கு எம்மேல எளக்காரம்?..  வயசுல பெரியவங்க.. மாமியாராவது அனுசரிச்சு  போயிருக்கலாம்.. போகலையே!.. '

' சின்ன சின்ன பேச்சு எல்லாத்தையும் பெருசு பெருசா ஆக்கி குடும்பத்தையே கூறு போட்டுட்டாங்க.. வீடும் மனையும் அவங்களுக்கு.. ன்னு  சொல்லி கீழண்ட கொல்லையும் பத்தாயிர ரூவாயும் எங்க கிட்ட கொடுத்தாங்க.. '

' தகப்பன் மாதிரி சாமிநாத கொத்தனார் வந்தாரு.. பொழுதோட பொழுதா நாலு கருங்கல்லு நட்டு கூரையப் போட்டு மறப்பு கட்டிக் கொடுத்தாரு.. கொல்லைக் காட்டு மண்ணுல திம்சு கட்டையப் போட்டு மட்டப்படுத்தி .. வூடு.. ன்னு விளக்கேத்தி வச்சது.. '

' ஏழைக்கு மிச்சம் இது தான்.. னு ராத்திரி குடித்தனம்.. முந்தி விரிச்சு தூங்குனது.. அதுக்கப்புறம் பொறந்தவன் தான் முத்து..  அவனுக்கும் இந்த பங்குனி வந்தா பதினோரு வயசு.. ஆகப்போவுது.. '

' மூனாவது மனுசங்க மாதிரி மூஞ்சிய திருப்பிக்கிட்டு போறதுக்கா ஒரு வூட்டுக்குள்ள வாக்கப்பட்டது?.. '

' ஏதோ சாமி புண்ணியத்துல நடந்தது நடந்துடுச்சு.. வாசலுக்கு வந்து வா.. ன்னு மனசாரக் கூப்பிடணும்.. மாமனார் மாமியார் கண்ணு நல்லா இருக்கறப்பவே ரெண்டு குடும்பமும் ஒன்னாயிடனும்.. '

' ஒரு மாசத்துக்கு முன்னால பெரிய மச்சான் காச்சலா கெடந்தப்ப கூட ஒரு வார்த்தை சொல்லி விடலை.. காத்து வாக்குல சேதி வந்து ஆசுபத்திரிக்கு ஓடுனா அதுக்குள்ளே ஊட்டுக்கு அனுப்பி உட்டுட்டாங்க... ஊட்டு வாசலுக்குப் போகலாம்ன்னு  பார்த்தா மானம் தடுக்குது.. மரியாதி மறைக்குது.. '

' சாதி சனத்துக்குள்ள சண்டை எதுக்கு.. வம்பு எதுக்கு.. பார்த்துப் பேசி பச்சத் தண்ணி வாங்கிக் குடிக்கலாம்.. ன்னு பார்த்தா நேரங்காலம் வர மாட்டேங்குதே..  மனுசருக்கு நோவு நோக்காடு வர்றப்ப ஒரு சேதி.. நின்னு கேக்க நாதி இல்லேன்னா என்னா பொழப்பு இது .. சீ!.. '

அன்று நடந்தது அத்தனையும்  தங்கத்தின் நெஞ்சுக்குள் ஓடிக் கொண்டிருந்தது..

' ஆனாலும், மனசு கேக்குதா.. பொம்பளப் புள்ள ஒத்தையில வர்றாளே.. ' - என்று பதறிக் கொண்டு -  குரல் எடுத்துக் கூப்பிடுவதற்குள் கோகிலா - அவளே இந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்தாள்..

" சின்னம்மா.. நல்லா இருக்கீங்களா!.. சித்தப்பா எப்படி இருக்காங்க.. முத்துவ தான் தினமும் ஸ்கூல்ல பார்க்கிறனே?.."

செந்தளிப்பாக இருந்த முகத்தில் பூஞ்சிரிப்பும் வேர்வையும் பூத்திருக்க - வேர்வை அது மேலை வெயிலில் மினுமினுத்துக் கொண்டிருந்தது..

பூவாக நடந்து வந்தவளை கண்களால் அளவெடுத்தாள் தங்கம்..
 
' கோகிலா தாவணி போடுறதுக்கு நேரம் வந்துடுச்சி!.. ' - என்றது உள்மனசு..

" நல்லாருக்கேன் கோகிலா.. நீ எப்படியிருக்கே.. அப்பா அம்மா எப்படி இருக்காங்க.. காய்ச்சலா இருந்தாங்களாமே.. ஒரு வார்த்த சொல்லி விட்டுருக்கப்படாதா?.. அதுசரி.. நீ ஏன் தனியா வர்றே.. ஸ்க்கூலு வீட்டாச்சா?.."

கேட்டுக் கொண்டே அருகில் சென்ற தங்கம் ஆதரவுடன் தோளைத் தடவி அவளை அணைத்துக் கொண்டாள்..

"நாங்க எல்லாரும் நல்லா இருக்கிறோம் சின்னம்மா..  நான் ஸ்போர்ட்ஸ் கிளாஸ்ல சேந்திருக்கேன்.. நாளைல இருந்து ப்ராக்டீஸ்.. அதனால இன்னைக்கு முன்னாலயே அனுப்பிட்டாங்க!.. "

"போர்ஸ்.. ன்னா என்னா கோகிலா?... "

"ஓட்டப் பந்தயத்துல ஓடுறது.."

" பொண்ணுங்க அடக்க ஒடுக்கமா இருந்தாத்தான் வம்ச விருத்தி ஆகும்.. ஆம்பள மாதிரி தாண்டிக்கிட்டு இருந்தா ஒடம்பு என்னத்துக்கு ஆகும்?.. "

அந்த காலத்தில்  சாடை மாடையாய் ஆத்தா 
பேசிக் கொண்டு இருப்பார்கள்.. அது நினைவுக்கு வந்தது..

"அக்கா ஒத்துக்கிட்டிருக்க மாட்டாங்களே!.."

"ஆமா.. எல்லாத்தையும் இத்தோட நிறுத்திக்கணும்..  நாளைக்கே சடங்காயிட்டா ஸ்கூல் போறதோட வச்சிக்கணும்.. ன்னு அன்னைக்கே அம்மா சொல்லிட்டாங்க..."

மென்மையாகப் புன்னகைத்தாள் கோகிலா..

" ம்.. அதான் நல்லது.. ஓட்டத்துல ஓடுறது.. ன்னா பசங்க மாதிரி டவுசர் சட்டை போட்டுக்கணுமாமே!.."

தங்கத்தின் கேள்வி..

" ஆமாம்.. காலுக்கு ஷூ வும் போட்டுக்கணும்.. அப்பா வாங்கிக் கொடுத்துருக்காங்க..  அதுதான் இந்தப் பையில் இருக்கு.. " - என்றபடி கையில் இருந்த பையைத் திறந்து காட்டினாள்..

பைக்குள் இருந்த
காலணிகளைப் பார்த்த தங்கத்துக்கு பெருமை தாங்க முடியவில்லை..

" சரி.. கோகிலா..  பொழுதோட வீட்டுக்கு போ.. அக்காவுக்குத் தெரிஞ்சா சண்டைக்கு வந்துடுவாங்க!..  ஆடு பகை.. குட்டி ஒறவா.. ன்னு!.." 

" இல்லீங்க சின்னம்மா.. அம்மா முன்ன மாதிரி இல்லை.. உங்களப் பத்தித் தான் பேசிக்கிட்டு இருப்பாங்க!.." என்றாள் கோகிலா..

" அன்னைக்கு அப்பாவுக்கு உடம்பு முடியாம இருந்தப்போ நீங்க ஹாஸ்பிட்டலுக்கு வந்தீங்களாமே!.. "

விக்கென்று விம்மல். தங்கத்தின் மனசு நெகிழ்ந்து விட்டது..

" சரிம்மா..  நல்லா படிக்கணும் தெரியுதா.. காலத்துல நீ கெளம்பு.. நேரம் வரும் சேந்துக்கலாம்!.. "

தன்னைத் திடப்படுத்திக் கொண்டு
கோகிலாவை வழியனுப்பி வைத்த  தங்கம் மேற்கே நோக்கினாள்..

செம்மஞ்சளாக சூரியன்..

" ஏ.. சாமீ.. நாராயணா!.. "

ஸ்கூல் பிள்ளைகள் ஓடி வந்த நேரத்தில் -  பொன்முகமாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தான் சூரியன்..
***

12 கருத்துகள்:

 1. சந்தோஷ செய்திகள் ஒரு சாயங்கால நேரத்தில்.. குடும்பம் ஒன்றாகட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனமெங்கும் மகிழ்ச்சியே பயிராகட்டும்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  கதை அருமையாக உள்ளது. ஒரு கதையை நிஜம் போல அருமையாக சொல்லும் பாங்கு தங்களுக்கே உரியது. தங்கத்தின் உறவுகள் ஒன்றுக்கொன்று விட்டுத்தராது நல்லபடியாக இணையட்டும்.

  "நீர் அடித்து நீர் விலகாது" என்ற பழமொழியை பெரியவர்கள் காரணத்தோடுதானே சொல்லியிருக்கிறார்கள். அதுபோல் கதையாயினும் அவர்களின் இரு குடும்பங்களும் விரைவில் இணைய நானும் மனதாற வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // இரு குடும்பங்களும் விரைவில் இணைய நானும் மனதார வேண்டிக் கொள்கிறேன்.. //

   நானும் வேண்டிக் கொள்கிறேன்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா..

   நீக்கு
 4. பக்கத்து வீட்டு நிகழ்வு. இரு குடும்பங்களும் கோகிலா சடங்கில் ஒன்று சேர்ந்து ஊரையே அழைத்து விருந்து வைக்கப் போறாங்களே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிஜந்தான்...

   கோகிலா சடங்கில் ஒன்று சேர்ந்து ஊரையே அழைத்து விருந்து வைக்கப் போறாங்க...

   நாமும் வாழ்த்துவோம்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 5. பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

   நீக்கு
  2. மிக அருமையான கதை. உப்பு பெறாத விஷ்யத்திற்கு சண்டை போட்டு பிரிந்த குடும்பங்கள் உண்டு.
   இணைந்து வாழ வேண்டும் கோகிலாவின் சடங்கில் எல்லோரும் கலந்து மகிழ்வாய் இருக்கட்டும்.

   நீக்கு
  3. // கோகிலாவின் சடங்கில் எல்லோரும் கலந்து மகிழ்வாய் இருக்கட்டும்..//

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..