நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 28, 2018

அஞ்சலி

 

காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தின் பீடாதிபதி 
ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
உடல் நலக் குறைவால் 
இன்று காலை 
இறை நிழலை எய்தினார்கள்..

ஆன்மீகப் பணிகளுடன்
ஏழை மக்களுக்கு ஆதரவாக
சமூக நலப் பணிகளையும்
மேற்கொண்டவர்..

83 வயதான பெரியவர்..
ஸ்வாமிகளை சங்கரமடத்தில் தரிசித்து 
ஆசி பெற்ற நாள் நினைவுக்கு வருகின்றது..

எல்லா நிலை மக்களையும்
ஆன்மீகம் சென்றடைய
பாடுபட்டவர்...


கருத்து வேறுபாடுகள் பல இருப்பினும்
அனைவராலும் மதிக்கப்பட்டவர்... 

இறை நிழலை எய்திய 
ஸ்வாமிகளுக்கு
நெஞ்சார்ந்த அஞ்சலிகள்..


ஓம்
நம சிவாய
ஓம் 
***

செவ்வாய், பிப்ரவரி 27, 2018

நெல்லையில்.. 2

ஸ்ரீ கொடிமாடஸ்வாமியின் தரிசனத்தை அடுத்து
ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோயில்..

ஸ்ரீ காந்திமதி
ஸ்ரீ கொடிமாடசாமி மற்றும் பரிவார தெய்வங்களிடம்
விடைபெற்றுக் கொண்டு -

அப்படியே திரும்பி ஜங்ஷன் செல்லும் சாலையில்
இருந்த உணவகம் ஒன்றினுள் நுழைந்தோம்...

என்னென்ன இருக்கின்றன என்று கேட்டுக் கொண்டு
விருப்பமானதைச் சொன்னதும் - சில நிமிடங்களில்,

வட்டமான தட்டின் மேல்
வழுவழுப்பான தாள் ( Wax Paper).. அதன் மேல் இருந்தன -  இட்லிகள்...

கேட்டதற்கு - இதுதான் வழக்கம் என்று கறாராக சொல்லி விட்டார்கள்....

அப்போதைக்கும் இப்போதைக்கும் குரலில் வித்தியாசம் தெரிந்தது...

அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு சிலர் - சாப்பிட்டு முடித்ததும்
தட்டில் விரிக்கப்பட்டிருந்த தாளை எடுத்து அங்கிருந்த
பெரிய வாளியில் போட்டு விட்டு கை கழுவிக்கொண்டிருந்தனர்....

அதற்கு மேல் அங்கே சாப்பிட மனம் இல்லை...

ஒருவேளை -
உணவு அருந்தியபின் - அந்தத் தாள் நைந்து கிழிந்து
அதிலிருக்கும் மிச்சம் மீதி சட்னி சாம்பார் கீழே தரையில்
சிந்தி விட்டால் கழுவி விடச் சொன்னாலும் சொல்வார்கள்!...

நல்லவேளையாக மேஜையில் கூட ஏதும் சிந்தவில்லை...

புதிய GST வரி விதிப்புக்கு முன்னதாகவே கொள்ளையான விலை...

பணத்தைக் கொடுத்து விட்டு - 
தப்பித்தோம்.. பிழைத்தோம்!.. - என்று வெளியே வந்தோம்..


மீண்டும் பேருந்து நிலையம்.. 
நெல்லையப்பர் கோயிலுக்குச் செல்லும் பேருந்து காத்திருந்தது..

அடுத்த பத்து நிமிடங்களில் கோயில் வாசல்...


முன்பு ஒரு முறை சென்றிருக்கின்றேன்...
இருந்தாலும் மனைவி மகனுடன் இதுதான் முதல்முறை...


மண்டபத்தின் விதானத்து சிற்பங்கள்..
மதுரை மீனாட்சியம்மன் கோயில் புது மண்டபம் போல இங்கும் கடைகள்..

ஆனாலும், அந்த நெருக்கடியும் கூச்சலும் இங்கு இல்லை...

இருந்தாலும், கோயில் வாசலை அடைத்தாற்போல இரும்பு தடுப்புகள்...
ஆட்டோக்கள், தனியார் வாகனங்கள்..

பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின் அனுமதி....

காலை வேளையானதால் அதிக கூட்டமில்லை...


பளிச்.. என - தூய வெள்ளையில் பிரம்மாண்டமாக நந்தியம்பெருமான்...

திருவிடைமருதூர், கீழ்வேளூர் திருத்தலங்களிலும் இப்படித்தான்...

பெருமானை வணங்கி விட்டு நெல்லையப்பரை நோக்கின கண்கள்...

என்ன புண்ணியம் செய்தன மனமே!.. - என்றிருந்தது...

பார்க்கப் பார்க்க பரவசம்... 
பார்த்துக் கொண்டேயிருக்கத் தோன்றியது...

நாம் பார்த்துக் கொண்டிருப்பதை விட 
எம்பெருமான் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்!...
- என்ற எண்ணமே நெஞ்சில் இனித்தது...

மூலஸ்தானம் தரிசனம் செய்யும்போதே
ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி, ஸ்ரீ வைரவர் தரிசனம்...

அருகில் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீ ஹரி பரந்தாமன்...

உள் திருச்சுற்றில் பிக்ஷாடனர் திருக்கோலம் கண்கொள்ளாக் காட்சியாகும்..

காணும் இடம் எல்லாம் கலைநயம் ததும்புகின்றது...

நீண்டு விரிந்த வெளித் திருச்சுற்று.... அழகழகான சந்நிதிகள்..

முருகப் பெருமானுக்காக தனிக் கோயிலே உள்ளது...நெல்லையப்பர் திருக்கோயிலின் தெற்காக
கிழக்கு நோக்கிய வண்ணம் அன்னை காந்திமதியில் திருக்கோயில்...

இரண்டு திருக்கோயிலையும் இணைப்பது சங்கிலி மண்டபம்...
வழியெங்கும் பேரழகான சிற்பங்கள்...

கோயிலுக்குள் திருக்குளம்.. ஆனாலும் கலங்கலான நீருடன் இருந்தது..

இதோ அம்பிகையின் சந்நிதி...

எதற்காகவோ கட்டணம் வசூலிக்கின்றார்கள்...

அம்மனின் சந்நிதிக்குள் நுழைகின்றோம்..

மனம் நம்மிடையே இல்லை...

பச்சைப் பசுங்கிளியாகப் பறந்து
அம்பிகையின் கருவறைக்குள்
சுற்றி வருவதைப் போன்றதொரு உணர்வு...

அம்பிகையும் அழகான பச்சைப் பட்டுடன்
அலங்கார ஸ்வரூபிணியாக அருள் பொழிகின்றாள்...

சந்நிதி முழுதும் மங்கலக் குங்குமத்தின் நறுமணம்...

மன நிறைவும் மங்கலமும் அருள் பிரசாதங்களாகின..

திருக்கோயிலினுள் -ஆங்காங்கே
படமெடுப்பதற்கு தடை என்று சொல்கின்றார்கள்..

எங்கும் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றதா.... கவனிக்கவில்லை...

ஆனாலும், தயக்கமாக இருந்தது... இருந்தாலும் விடவில்லை..

அங்கும் இங்குமாக எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்!...
திரும்பவும் திருச்சுற்றில் நடந்து
நந்தி மண்டபத்தினை அடைந்தோம்...

நேரமும் ஆகியிருந்தது.. ஜனங்களின் வருகையும் கூடியிருந்தது..

நந்தி மண்டபத்தின் முன்பாக நிறைய விளக்குகள்
ஜொலித்துக் கொண்டிருந்தன...

நந்தியம்பெருமானின் திருமேனி ஜகஜ்ஜோதியாக இருந்தது...

தவிரவும் அந்த மண்டபத் தூண்களில்
கலைநயம் மிக்க நடன மாதர்களின் சிலைகள் திகழ்ந்தன..

அருகிருந்த அலுவலகத்தில் சிலர் இருந்தார்கள்..

இங்கே படம் எடுத்துக் கொள்ளலாமா!.. -  பணிவுடன் கேட்டேன்....

படமா!... இங்கால...யா!...

ஒரு மாதிரியான ஏளனச் சிரிப்பு வெளிப்பட்டது - அவர்களிடமிருந்து...

அதெல்லாம் எடுக்கக் கூடாது!.. - மறுத்து விட்டார்கள்...


ஆயினும், திருவிழாக் காலங்களில்
திருக்கோயிலில் நடைபெறும் வைபவங்கள் -
ஐயனுக்கும் அம்பிகைக்கும் நிகழ்த்தப்படும்
அபிஷேகங்கள் உள்பட அனைத்தும்
படங்களாக  Fb ல் வெளிவருவது குறிப்பிடத்தக்கது...

ஸ்வாமி நெல்லையப்பர் (Fb)
அன்னை காந்திமதி (Fb)
தலைக்கு மேல் கைகூப்பி வணங்கியவாறு
கொடி மரத்தினருகில் வீழ்ந்து வணங்கி
அம்மையப்பனிடம் விடைபெற்றுக் கொண்டு
திருக்கோயிலில் இருந்து புறப்பட்டோம்...

அப்படியே அந்த வீதியில் காலார நடந்து அங்கேயொரு வணிக வளாகத்தின்
கீழ் தளத்தில் இருந்த உணவகத்தில் குளுகுளு... என, ஜிகர்தண்டா...

அங்கிருந்து புறப்பட்டு நெல்லை ஜங்ஷன்....அங்கே விற்கப்பட்ட உணவு வகைகள்
காலையில் சாப்பிட்டதை விட நன்றாக இருந்தன...

ஆனால் -

காசு கொடுத்தால் தான் நல்ல தண்ணீர்!...
- என்ற நிலைக்கு நாடு ஆளாகி இருக்கும் சூழ்நிலையில்

பயணிகளின் மீது மிகுந்த கருணையுடன்
காசு போட்டால் இயங்கும் இயந்திரத்தினை
ரயில்வே நிர்வாகம் அமைத்திருந்தது...மதியம் 2.30 மணியளவில் திருச்சி வரைக்கும் செல்லும்
Inter City Express   திருவனந்தபுரத்திலிருந்து வந்து நின்றது..

முன்பே பதிவு செய்யப்பட்டிருந்த இருக்கைகளில் பயணம் தொடர்ந்தது..

இரவு எட்டேகால் மணியளவில் திருச்சியை அடைய வேண்டும்..
ஆனால், அரைமணி நேர தாமதம்...

அங்கிருந்து 9.20 க்கு தஞ்சை பாசஞ்சர் வண்டியில்
எங்கள் பயணம் தொடர - இனிதே இல்லத்தை அடைந்தோம்...

இன்னும் எத்தனை எத்தனையோ 
காண வேண்டிய தலங்கள் நெல்லையில்!...

காலமும் சூழ்நிலையும் ஒத்துழைக்க வேண்டும்..

வாழ்க நலம்!...
*** 

ஞாயிறு, பிப்ரவரி 25, 2018

நெல்லையில்.. 1

விடியற்காலையில் உவரியிலிருந்து
நெல்லைக்குச் செல்லும் பேருந்து
எங்களுடன் புறப்பட்டு விரைந்தது...

ஆறரை மணிக்கெல்லாம்
நெல்லை புதிய பேருந்து நிலையம்...

நெல்லை புதிய பேருந்து நிலையம்
எப்போதுமே எனக்குப் பிடித்த இடம்...

நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கும்...

நெல்லைக்கு முன்னது -
தஞ்சை புதிய பேருந்து நிலையம் என்றாலும்,

மகா மட்டரகமான அதை விட
நெல்லை பேருந்து நிலையம் சுத்தம்.. ஒழுங்கு.. அழகு...

அந்த நேரத்திலும் அங்கிருந்த கடைகளில்
மணக்க மணக்க பாரம்பர்யப் பலகார வகைகள்...

தேநீர் மட்டும் அருந்தி விட்டு ஜங்ஷன் பேருந்து நிலையத்திற்குச்
செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தோம்...

அடுத்த பதினைந்து நிமிடத்தில் பழைய பேருந்து நிலையம்...

அங்கிருந்து
நெல்லையப்பர் கோயிலுக்குச் செல்லும் பேருந்தைப் பிடிக்கும் முன் -
அருகில் இருந்த கோயிலில் மணியோசை..

பேருந்து நிலையத்திலிருந்த கல்யாண விநாயகர் கோயிலில்
காலை பூசை நடந்து கொண்டிருந்தது... பெருமானை வணங்கிக் கொண்டோம்..


12 ஆண்டுகளுக்கு முன்னால் 
ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் வழியில் 
ஒரு மாலைப் பொழுதில் இங்கே தரிசித்த கோயில்
ஸ்ரீ கொடிமாடசாமி கோயில்..

ஆண்டுகள் பலவாக ஏகப்பட்ட மாற்றங்கள்...
இந்தப் பேருந்து நிலையத்துக்கு அருகில் தான்.. 
ஆனாலும், இருப்பிடம் சரியாகத் தெரியவில்லை

எனவே -
பிள்ளையார் கோயில் குருக்களை நெருங்கி அவரைக் கேட்டேன்...

கொடி மாடசாமி கோயில்....ன்னு இங்கே இருக்கே..
எந்த சாலை..ன்னு மறந்து போச்சு...
எங்கே இருக்கு...ன்னு சொல்ல முடியுமா!...

நம்ம கோயிலுக்குப் பின்னால இருக்கே... அதான்!..
போய்க் கும்பிடுங்க!...

ஆகா!... ரொம்ப மகிழ்ச்சி!...

பிள்ளையாரிடம் விடை பெற்றுக் கொண்டு
வடக்குப் பக்கமாக இருந்த சாலையில் நடந்து எதிரே நோக்கினால் -
அந்த சாலையின் எதிர்ப்புறம் - ஸ்ரீ கொடி மாடசாமி திருக்கோயில்...

பன்னிரு ஆண்டுகளுக்குப் பின் கொடி மாடசாமி தரிசனம்..

மிக மிக நெருக்கடியான சூழ்நிலை..

என்ன ஆகும்?.. ஏது ஆகும்?.. - என, மனம் தவித்துக் கிடந்த நேரம்...

ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் வழியில்
நெல்லை பேருந்து நிலயத்தின் அருகில்
எங்கள் பேருந்து நிறுத்தப்பட்டது
அல்வா சாப்பிடுவதற்குத் தான்...

அந்த மாலைப் பொழுதில் -
சந்தன சாம்பிராணி வாசனையுடன் கோயில் மணி ஒலித்தது...

சரி.. ஏதோ ஒரு கோயில் - என்று சென்றால்
மண்டபத்தில் வரிசையாக தெய்வத் திருவடிவங்கள்...

கோயில் என்றால் முன்மண்டபம்.. மூலஸ்தானம் என்றெல்லாம் இல்லை..
இருபதடி நீள மண்டபத்தில் வரிசையாக தெய்வத் திருமேனிகள்..

அவ்வளவு தான்....

அங்கே பூ விற்றுக் கொண்டிருந்த சிறுவனிடம் கேட்டேன்..

என்ன சாமியப்பா?...

கொடி மாடசாமி.. பேச்சியம்மா!.. - என்றான்...

கை கூப்பி நின்றேன்.. கண்கள் கசிந்தன...

விஸ்தாரமாக பூசை.. தீபாராதனை நடந்தது...

எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டும்!.. - என, இரந்து நின்றேன்..

ரெண்டு பூவு வைக்கிறேன்... நெனைச்சது வந்தா காரியம் ஜயம்!... - என்றார்
பூசாரியார்...

இரண்டு நிறப் பூக்கள் மடிக்கப்பட்டு சாமி பாதத்தில் வைக்கப்பட்டன...

ஏழை மனுசங்களுக்கு இரங்கியருள வேண்டும் சாமி!..
- என்று,  மங்கல வார்த்தைகளைச் சொல்லி
காத்து நிற்கும் தெய்வங்களுக்குக் கற்பூரம் காட்டினார் - பூசாரியார்...

ரெண்டு மடிப்புகளையும் கொடுத்து ஒன்றை எடுக்கச் சொன்னார்..

ஒன்றை எடுத்துக் கொடுத்தேன்..
மறுபடியும் அந்த மடிப்பு சாமி பாதத்துக்குச் சென்றது...

அதை அவரே திறந்து காட்ட உள்ளிருந்தது - மல்லிகை...

மனம் பரவசமானது.. கண்ணீர் பெருகியது...

மற்றொன்றைப் பிரிக்க அதனுள் சிவப்பாக வேறொன்று...

கவலைப் படவேண்டா... நெனைச்சது நெனைச்சபடி நடக்கும்!...

சில வருடங்களுக்குப் பிறகு,
எண்ணிய எண்ணம் இனிதே நிறைவேறிய வேளையில்
என் மனம் கொடிமாடசாமியின் காலடியில் தான் கிடந்தது...

அந்த கொடி மாடசாமியைத் தான்
இதோ சில விநாடிகளில் தரிசிக்க இருக்கின்றேன்...

இருந்தாலும்
அப்படிப்பட்ட சாமி தரிசனத்துக்கு இத்தனை வருடம் தாமதமா!...

அதுவும் அவர் அறிந்த ரகசியமே!.. அவர் கொடுத்த வரமே!..


ஆவலுடன் சாலையைக் கடந்து
கொடிமாட சாமி எழுந்தருளியிருக்கும்
மண்டபத்தை நெருங்கினேன்..

விடியலிலேயே பூசைகள் முடிந்து
மாலை அலங்காரங்களுடன் மங்கல மூர்த்தி!...
வா.. மகனே.. வா!.. - என்பதாகத் திருத்தோற்றம்...

என் அப்பனே!.. - என்று மனம் இளகிப் போனது...நீ தகப்பன்.. நீயே தகப்பன்!.. என்றான பிறகு
என்ன செய்வேன்.. ஏது சொல்வேன்..  ஐயா!..
நின் பிள்ளை என்னை நீயே ஆண்டு கொள்..
பிரிவில்லாத இந்த உறவு
பின்னும் தொடரவேண்டும்!..

கற்பூர ஆரத்தி நிகழ்ந்தது.. 
மனம் கவலையற்று இருந்தது...

ஐயனின் அருளுடன்
நெல்லையப்பர் திருக்கோயிலை நோக்கி
எங்கள் பயணமும் தொடர்ந்தது...

கொடி மாடசாமி திருவடிகள் 
போற்றி.. போற்றி!... 
*** 

வெள்ளி, பிப்ரவரி 23, 2018

உவரியில்..

அழகன் முருகனின் ஆனந்த தரிசனம்...

திருச்செந்தூரில் இருந்து உவரிக்குச் செல்ல வேண்டும்..
புறப்படும் முன்பாக மறக்காமல்
பனங்கருப்பட்டி வாங்கிக் கொண்டோம்...

அதிலும் குறிப்பாக உடன்குடி கருப்பட்டி விசேஷம்...

மிளகு இஞ்சி சேர்க்கப்பட்ட சிறு சிறு வில்லைகளாகவும்
சாதாரணமாகவும் கிடைக்கின்றன...

இப்போதெல்லாம் நடமாடும் கருப்பட்டிக் கடையாக
சிறு வேன்களில் பலரகமான கருப்பட்டிகளை வைத்துக் கொண்டு
தஞ்சாவூரில் விற்றுக் கொண்டிருக்கின்றார்கள்..

விலை சற்று முன்பின்னாக இருக்கின்றது...
இருந்தாலும் திருச்செந்தூரில் வாங்குவது தனி சந்தோஷம் தான்...

முற்பகலில் உவரியை நோக்கிப் புறப்பட்டோம்...


திருச்செந்தூரிலிருந்து  கன்னியாகுமரி செல்லும்
கடற்கரைச் சாலையில் 40 கி.மீ தொலைவில் உள்ளது உவரி...

இந்த சாலை தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி (SH/176)
கடற்கரைச் சாலையாகும்..

இந்தச் சாலையில் செல்லும்போது
15 கி.மீ தொலைவில் குலசேகரன் பட்டினம்..
புகழ்பெற்ற ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் இங்கே தான் உள்ளது...

ஸ்ரீ முத்தாரம்மன் சந்நிதி
குலசேகரன் பட்டினத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் மணப்பாடு..

நெடுஞ்சாலையில் போகும் வழியிலேயே -
கடற்கரையோரத்தில் உள்ள மணல் மாதா ஆலயத்தைத் தரிசிக்கலாம்..

அடுத்த 23 கி.மீ தொலைவில் உவரி..
உவரிக்கு சற்று முன்னதாக கூட்டப் பனை எனும் சிற்றூர்...

இங்கிருந்து தான் -
உவரி ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலின்
தலபுராணம் தொடங்குகின்றது..

கூட்டப் பனையைச் சேர்ந்த கோனார் வீட்டுப் பெண்
விற்பனைக்குப் பால் கொண்டு சென்ற போது
வழியில் பல தடவை இடறி விழுந்ததனால் -

வழியில் மண்டிக் கிடந்த கடம்பங்கொடிகளை வெட்டி
அப்புறப்படுத்த முனைந்தனர் அவ்வூர் மக்கள்...

அவ்வேளையில்,  சிரசில் வெட்டுக் காயத்துடன்
ஈசன் எம்பெருமான் சுயம்பு லிங்கமாக வெளிப்பட்டார்..

அது கண்டு அஞ்சி நடுங்கிய மக்கள்
சந்தனத்தை அரைத்து அப்பி வணங்கி நின்றனர்..

கோனார் வீட்டுப் பெண்ணால் வெளிப்பட்ட ஈசனுக்கு
நாடார் ஒருவர் பனை ஓலைகளால்
குடில் அமைத்து விளக்கேற்றி வைத்தார்...

அந்த அளவில் -
கோனர் மற்றும் நாடார் சமுதாய மக்கள்
நாளும் நாளும் கொண்டாடி மகிழ்கின்றனர்...

எனினும், திருக்கோயில் எல்லாருக்கும்
பொதுவானதாகத் திகழ்கின்றது...


ஆதியில் ஈசனுக்கு சந்தனம் பூசப்பட்டதால்
இன்றளவும் முதற் பிரசாதம் சந்தனம் தான்...

ஓலைக் குடிலாய் இருந்த கோயில்
நாளடைவில் கற்கோயிலாக மாறியது...

இங்கே உக்ரமாகத் திகழ்ந்த
ஸ்ரீ பத்ரகாளி, ஸ்ரீ மாடசாமி, ஸ்ரீ பேச்சியம்மன்,
ஸ்ரீ இசக்கி அம்மன் மற்றும் ஸ்ரீ முன்னோடியார்
ஆகிய திருக்கூட்டத்தினரைச் சாந்தப் படுத்துவதற்காகவே

ஈசன் சுயம்புவாகத் தோன்றிய திருக்குறிப்பினால்
திருக்கோயிலில் ஈசன் சந்நிதியைத் தவிர
வேறெந்த சந்நிதியும் கிடையாது...

துவார விநாயகர் - கர்ப்ப கிரக வாசலில் பிரதிஷ்டை..

மற்றபடிக்கு அம்பிகை, சண்டீசர், பைரவர்..
- என, எந்த சந்நிதியும் கிடையாது..

திருக்கோயிலுக்கு அருகில் தனிக் கோயிலாக
ஸ்ரீ பிரம்ம சக்தி அம்பிகை என ஸ்ரீ பத்ரகாளீஸ்வரி..

அருகில் தனிக் கோயிலாக
ஸ்ரீ முன்னோடியார் - பரிவாரங்களுடன்..

இதனையடுத்து தனி மண்டபத்தில்
ஸ்ரீ பேச்சியம்மன்.
வலப்புறம் ஸ்ரீ மாடசாமி..
இடப்புறம் ஸ்ரீ இசக்கியம்மன்...

தற்காலத்தில் எழுப்பட்ட கோயில்களாக -
சிவாலயத்திற்குப் பின்புறம் ஸ்ரீ கன்னிமூலை கணபதி..

ஸ்ரீ வன்னியடி சாஸ்தா கோயில்
குதிரை வாகனத்தில் ஸ்ரீ ஐயனார்
பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறமாக
ஸ்ரீ பூர்ணகலா ஸ்ரீபுஷ்கலா உடனாகிய
ஸ்ரீ வன்னியடி சாஸ்தா திருக்கோயில்...

திருக்கோயிலின் நேரெதிரே
சற்று தணிவான தெப்பக்குளம்..

கோயில் வாசலில் சிறப்பான மூன்று கிணறுகள்..

கடற்கரை அருகிருக்க இவை மூன்றும்
உப்புச் சுவையற்ற நல்ல தண்ணீர் கிணறுகள்...

அன்றைக்கு ஓலைக்குடிலில் ஏற்றப்பட்ட
திருவிளக்கு இன்றைக்கு பல்லாயிரம் மக்களுக்கு
ஆறுதலையும் தேறுதலையும் அளித்து
நம்பிக்கை நட்சத்திரமாக சுடர் விட்டுத் திகழ்கின்றது...

சில ஆண்டுகளுக்கு முன் -
புதிதாக தேர் வடிவமைக்கப்பட்டதைத் தொடர்ந்து
தற்போது புதிதாக ராஜகோபுரம் எழுப்பப்படுகின்றது..

அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன...

அந்தக் காட்சிகள் - இன்றைய பதிவில்!..

உவரி சிறிய கிராமம் தான்... ஆனாலும்,

தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக
உவரியின் கோயிலும் கடற்கரையும் அறிவிக்கப்பட்டுள்ளது...

திருச்செந்தூரில் இருந்து செல்லும் போது
உவரிக்கு முன்பாக உள்ள கூட்டப்பனை எனும் ஊரைக் கடந்ததும்

கிழக்காக புதிதாக புறவழிச்சாலை அமையப்பெற்று
சுயம்புலிங்க ஸ்வாமி கோயிலைக் கடந்து
நெடுஞ்சாலையில் சேர்ந்து கொள்கின்றது...

உவரி என்று பொதுவாக சொல்லப்பட்டாலும்
இவ்வூர் இரு பிரிவுகளாக அமைந்துள்ளது..

சுயம்புலிங்க ஸ்வாமி கோயிலின் அருகாக
இந்துக்கள் அதிகமாக இருக்கும் பகுதி
நாடார் உவரி எனப்படுகின்றது...

ஒரு கி.மீ தொலைவிலுள்ள தெற்குப் பகுதி மக்கள்
அன்றைய கொடுமைகளால் மனம் மாறிப் போனார்கள்... 

கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்து விட்டாலும், 
இன்றைய நாட்களில் அவர்களும் - வந்து
சுயம்புலிங்க ஸ்வாமியின் திருக்கோயிலில்
நேர்ந்து கொண்டு வணங்கி நிற்கின்றனர்...

தங்கள் இல்லங்களின் மங்கல நிகழ்வுகளை
இங்கே சிவாலயத்தில் வைத்துக் கொள்கின்றனர்...

உவரி கடற்கரையிலிருந்து தெற்காக நோக்கினால்
கப்பல் மாதா கோயில் தெரியும்...

இந்தக் கடற்கரையில் சமீபகாலமாக மணல் அரிப்பு நிகழ்கின்றது..
பெருங்கற்களைப் போட்டு தடுத்து வைத்திருக்கின்றனர்...


திருக்கோயிலின் வாசலில் அமர்ந்தபடி
அலையாடும் கடலைக் கண்டு மகிழலாம்...

அலையாடும் கரையில் அமர்ந்தபடி
அருளோங்கும் திருக்கோயிலைத் தரிசிக்கலாம்...


இத்திருக்கோயிலுக்கு
எத்தனை எத்தனை பெருமைகளோ!...

அத்தனையையும் உணர்ந்து கொள்ள
இன்னும் எத்தனை எத்தனை பிறவிகளோ!...

அத்தனை பிறவிகளிலும் 
ஐயனும் அம்பிகையும்
உடன் வரவேண்டும்!..

அதுவே ஆவல்.. பேராவல்!...


அந்த ஆவலுடனேயே 
எங்கள் பயணம் தொடர்கின்றது...
***
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே..
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***  

புதன், பிப்ரவரி 21, 2018

திருச்செந்தூரில்...

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில்
இரண்டு நாள் பயணமாக திருச்செந்தூர் உவரி மற்றும்
திருநெல்வேலி ஆகிய திருத்தலங்களுக்குச் சென்றிருந்தோம்...

அடுத்தடுத்த பதிவுகளினால் அங்கே எடுக்கப்பட்ட படங்களை வெளியிடுவதில் தாமதம் ஆகிவிட்டது...

இருந்தாலும்,
அன்பின் நண்பர்கள் அனைவரும்
நான் எடுத்த படங்களை ரசித்தே ஆக வேண்டும்...

திருச்செந்தூரில் இனிய உதயம்...


திருமிகு சீர்காழியார் அவர்கள் பாடிய -

காலை இளங்கதிரில் உந்தன் காட்சி தெரியுது - நீல
கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது!.. 

- எனும் இனிய பாடல் நினைவுக்கு வரும் என நம்புகின்றேன்...
திருச்செந்தூரின் கடலோரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்..
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்!..அசுரரை வென்ற இடம்
இது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் வரும்
ஐப்பசித் திங்களிலும் 
அன்பர் திருநாள் காணுமிடம்!...முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே..
முன்நின்று காக்கும் முதல்வனுக்கே!..
புகழ் மணக்கும் அவன் பெயர் சொன்னால்
பூச் சொரிந்தே மனம் பாடிவரும்!..முன்பெல்லாம் கோயிலைச் சுற்றிலும் நிறைய மயில்களைக் காணலாம்...
இப்போது அவைகளை அதிகமாகக் காண முடியவில்லை...

முக்கியமாக
அவைகளுக்கு உணவுப் பிரச்னையாக இருக்கும் என நினைக்கிறேன்..

திருக்கோயிலைச் சுற்றிலும் கிராமத்து மக்கள்
பாரம்பர்ய உணவுகளை விற்றுக் கொண்டிருப்பார்கள்...

கோயிலுக்கு வரும் அன்பர்கள் தாமும் உண்டு
மயில்களுக்கும் இட்டு மகிழ்வார்கள்..

காலகாலமாக நடந்து வருவது இந்தப் பழக்கம்...

கோயிலை ஒழுங்கு செய்வதாகச் சொல்லிக் கொண்டு
யாரோ சிலர் - காலை உணவு விற்றுக் கொண்டிருந்த
ஏழை எளிய மக்களைத் தடுத்து விரட்டி விட்டனர்...

இப்போது புட்டு, பணியாரம், அதிரசம் போன்றவை அங்கே கிடைப்பதில்லை...

நாழிக் கிணற்றின் அருகில் தான்
பனங்கிழங்கும் பதநீரும் கிடைக்கின்றன...

மாறாக - பெரிய உணவகங்களில் எண்ணெய் பிசுக்குடன் செய்யப்படும்
சமோசா வகைகள் எல்லா இடத்திலும் தாராளமாக விற்கப்படுகின்றன..


இதோ நானும் வந்து விட்டேன்!.. என்று ஒரு காக்கை..
செந்தில் வேலன் நம்மையெல்லாம் காத்து நிற்க -
அவன் வீற்றிருக்கும் திருக்கோயிலுக்கான காவல் நாயகம் -
ஸ்ரீ சங்கிலி பூதத்தார் ஸ்வாமி..

மேலைத் திருவாசலுக்கு அருகில்
சிறு மண்டபத்தில் இவரைத் தரிசிக்கலாம்...

ஸ்ரீ சங்கிலி பூதத்தார் ஸ்வாமி
மேலைக் கோபுர வாசல்

கீழே மயில் அமர்ந்திருக்கும் இந்த மண்டபம் தான்
சில மாதங்களுக்கு முன் இடிந்து விழுந்தது..


வள்ளிக் குகையின் வாசலில் உள்ள சந்தன மலையில் கட்டப்பட்டுள்ள
நேர்ச்சை முடிச்சுகள்..


எத்தனையோ நூறாண்டுப் பழைமையுடையது வள்ளிக் குகை..

குறுகலான வழியில் சென்று முகவும் குனிந்து வாசலுக்குள் நுழைந்து
மூன்றடி பள்ளத்தில் இறங்கினால் - உள்ளே,

ஸ்ரீ வள்ளியம்மை தரிசனம் தருகின்றாள்...

அங்கிருக்கும் குருக்களோடு ஐந்து பேர் மட்டுமே நிற்கலாம்..

கடும் கோடையில் கூட குகையினுள் வெம்மை தெரியாது..

வள்ளிக் குகைக்குள் செல்வதற்கு
அறநிலையத்துறை கட்டணம் வசூல் செய்கின்றது....

வழக்கம் போல வள்ளிக் குகையின் உள்ளே சென்று தரிசனம் செய்து விட்டு
வெளியே வந்து குகையின் வாசலைப் படம் எடுக்க முயன்ற போது

கோயில் பணியாளர் தடித்த வார்த்தைகளுடன் ஓடி வந்தார்..

உடலெல்லாம் திருநீறு, ருத்ராட்சம் மற்றும் பூணூல்!..

கண்ணு தெரியலையா!.. எழுதிப் போட்டுருக்கு..ல்லே!...

கண்ணு நல்லாத் தெரியுது... 
அது இல்லேன்னா படம் எடுக்க முடியுமா?..
குகைக்குள் தானே எடுக்கக் கூடாது!..
நான் வெளியில் தானே எடுக்கிறேன்!..

இங்கா...ல எடுக்கவே கூடாது...லே!... - என்றபடி,
கேலக்ஸியை பறிக்க முயன்றார்..

அவரிடமிருந்து விலகிய நான் -

படம் எடுக்கக் கூடாது என்றீர்கள்... நான் எடுக்கவில்லை... 
அத்துடன் விட்டு விட வேண்டும்...
இந்த வேலையெல்லாம் செய்யக் கூடாது...
கோயிலில் இருப்பவருக்கு இவ்வளவு கோபம் ஏன்!?...

- என்றேன்...

வசைமாரி பொழிந்தார்... அவருக்கு என்ன பிரச்னையோ... பாவம்!..
பல கோயில்களில் இப்படிச் சில பேர் இருக்கின்றார்கள்...

திருச்செந்தில்நாதனின் தரிசனம் இனிதே நிகழ்ந்தது...
மகிழ்ச்சியுடன் அங்கிருந்து உவரிக்குப் புறப்பட்டோம்!..
***

நேற்று (20/2 ) திருச்செந்தூரில்
ஹேவிளம்பி ஆண்டிற்கான
மாசிப் பெருந்திருவிழா
திருக்கொடியேற்றம் நிகழ்ந்துள்ளது...

கீழுள்ள படங்கள்
முருகனடியார் திருக்கூட்டத்தினர்
Fb ல் வழங்கியவை..

அவர் தமக்கு 
மனமார்ந்த நன்றி..
பொன்னழகு மின்னி வரும் வண்ண மயில் கந்தா..
கண்மலரில் தண்ணருளைக் காட்டி வரும் கந்தா!..
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா.. முருகா.. வருவாய்.. அருள் தருவாய்..

முருகா!...
***