நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 24, 2024

ஐயாறு தேர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 11
புதன் கிழமை


காசிக்கு நிகரான திரு ஐயாறு திருத்தலத்தில் நிகழ்வுறும் சித்திரைப் பெருந்திருவிழாவில் கடந்த திங்கள் (22/4) அன்று தேரோட்டம்.. 

காலையில் புறப்படும் ரதங்கள் முற்பகலில் மேல ரத வீதியில் நிலை நிறுத்தப்படும்.. 

மாலையில் மீண்டும் வடம் பிடிக்கப்பட்டு முன்னிரவுப் பொழுதில் தேரடியை வந்தடையும்.. 

அந்த அளவில் நேற்று பெரிய தேர் நிலை அடைந்த நேரம் 8:30..

கிழக்கு ரத வீதியில் சிறிது தூரம் ஸ்ரீ ஷண்முகப் பெருமானின் திருத்தேர் வடம் பிடிக்கின்ற பாக்கியம் எனக்குக் கிடைத்தது..

எட்டரை மணிக்குப் பிறகு அம்பாள் ரதம் தேரடியை அடைவதற்கு நேரம் ஆகும் என்பதால் அந்த அளவில் இல்லம் திரும்பினேன்.. 

முழங்கால் பிரச்னை தீராத நிலையில் இந்த அளவுக்கு வரம் பெற்றிருப்பது பெரும்பேறு..

தேரோட்டத்தில் நான் பதிவு செய்த காட்சிகள் இன்றைய பதிவில்..


கீழுள்ள படங்கள் - 
திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பர் Fb ..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..


கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாற னாரே.. 4/38/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

செவ்வாய், ஏப்ரல் 23, 2024

நிறை நிலா


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்ரா பௌர்ணமி
சித்திரை 10
செவ்வாய்க்கிழமை


இன்று
சித்ரா பௌர்ணமி
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா...
- என்று, நிலவைக் காட்டி - குழந்தைக்குத் தாய்
சோறூட்டுவதில் இருந்தே  இயற்கைக்கும் நமக்கும் பிணைப்பு.. 

இதன்றியும்
குடும்பத்தினர், ஒன்று கூடி  இரவில் அதுவும் நிறை நிலா ஒளியில்  உணவருந்திய நாட்கள்  தான் குடும்பத்தின் இலக்கணம் பிரகாசித்தது..

அன்பும் பாசமும் நிறைந்திருந்த நாட்கள் அவை..
 

இன்றைக்குத்  தமிழ் மரபின்படி வீட்டு வாசலில் நிலாச் சோறு கொள்வார் உண்டோ?.. தெரியவில்லை..

கூட்டுக் குடும்பங்கள் கலைந்த போதே அது அழிந்து விட்டது..


அன்றைய குடும்பங்களில் 
சித்ரா பௌர்ணமியின் குதூகலம் நிலாச்சோறு என்ற பெயருடன்  பிணைந்திருந்தது..

குடிசையானாலும்  ஓட்டு வீடு என்றாலும் முன் வாசல் நிலாச்சோற்றுக்கான சொர்க்கபூமி.. 

காரை வீடுகளின் மாடித் தளங்களும் கதை கதையாய்ச் சொல்லும் நிலா ஒளியில் உணவருந்திய நாட்களை..


ஆற்றங்கரையில், ஆற்று மணற் திட்டுகளில் கூடிக் குளிர்ந்து நிலாச்சோறு உண்ட நாட்கள் பழைமையானவை..


சித்ரா பௌர்ணமி  நாளில்  கோயில்களில் பல்வேறு சிறப்பான வழிபாடுகள் நிகழ்த்தப்படுகின்றன..


வீடுகளிலும் நிறை விளக்கு ஏற்றி தெய்வங்களை வணங்கி நிற்பர்..

பொதுவாக குல தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள் பௌர்ணமி.. அதிலும் சித்ரா பௌர்ணமி எனில் மிகவும் சிறப்பு..

நிறைநிலா நாளின் இரவுப் பொழுதை ஆற்றங்கரைகளில் கழிப்பதே ஒரு கலாச்சாரம்.. இப்படி குடும்பத்துடன் கோயில்களில் ஆற்றங்கரைகளில் மகிழும் பழக்கம் தமிழர்களிடையே இன்னும் மறைந்து விடவில்லை.. 

கொள்ளிடப் பேராற்றின் கரைகளை ஒட்டிய கிராமங்களில் நிலாச்சோறு விழா நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது..

கள்ளழகர் இறங்கிய வைகையில் நிலாச்சோறு  உண்பது பிரசித்தம்..

தஞ்சை பெரிய கோயிலில் - சித்ரா பௌர்ணமி அன்று கோயில் வளாகத்தில் பெருந்திரளாக மக்கள் கூடி, ஈசனை வணங்கிய பின்னர் கையோடு கொண்டு வந்திருக்கும் உணவை பகிர்ந்து உண்பதை பல ஆண்டுகளுக்கு முன் பார்த்திருக்கின்றேன்...

கால ஓட்டத்தில் இப்போது எப்படியோ..

சித்திரை மாதம் வசந்த காலத்துடன்  தொடர்புடையது.
இதனாலேயே கோயில் விழாக்கள் கோடை வசந்த உற்சவங்கள் எனப்பட்டன.. 

காவிரிப் பூம்பட்டினத்தில்   சித்திரை நிறை நிலா நாளினை ஒட்டி 28 நாட்கள் கொண்டாடப்பட்டதுவே இந்திர விழா..

திருவிழை மூதூர் வாழ்கஎன் றேத்தி
வானமும் மாரி பொழிக! மன்னவன்
கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக..  (32 - 34 வரிகள்)
- என்று  இந்திர விழா அறிவிப்பின்  (மணிமேகலை 3.3.3) போது மன்னன் வாழ்த்தப் பெற்றிருக்கின்றான்..
(திரு = திருமகள், விழை = விரும்பும், மூதூர் = பழைமை வாய்ந்த புகார் நகரம், ஏத்தி = வாழ்த்தி, மாரி = மழை.. கோள்நிலை = ஞாயிறு, திங்கள் முதலான கோள்கள், திரியா = மாறுபடாத, கோலோன் = செங்கோல் அறம் உடையவனாக)
(நன்றி - தமிழ் இணையம்)

சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென அந்நாள் - 64 (இந்திர விழவூர் எடுத்த காதை  - சிலப்பதிகாரம்)

(சித்திரை மாதத்துச் சித்திரை நாள் நிறைமதி சேர்ந்ததாக அந்நாள்)

என்று சிலப்பதிகாரம் பகர்கின்றது..
(நன்றி - தமிழ் இணையம்)

இந்த வரிகளுக்காக சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் சற்று திளைத்திருந்தேன்..

நேற்று திங்கட்கிழமை திரு ஐயாற்றில் தேரோட்டம்..

ஒரு சில படங்கள் மட்டும் இன்றைய பதிவில்..
இருந்தமிழே உன்னால் இருந்தேன் வானோர் 
விருந்தமிழ்தம் எனினும் வேண்டேன்..

வாழ்க தமிழ்..
வாழ்க நிலாச்சோறு..
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

திங்கள், ஏப்ரல் 22, 2024

மாத்ருஸ்ரீ..

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 9
திங்கட்கிழமை


மாத்ரு ஶ்ரீ வேங்கமாம்பாள்..

இவரே திருமலையில் முதன்முதலில் அன்னதானத்தைத் தொடங்கியவர்..

இவரது காலம் 1730 - 1817..

ஆந்திர மாநிலத்தின் தரி கொண்டா கிராமத்தில் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மங்கமாம்பா எனும் தம்பதியர்க்குப் பிறந்தவர்..

இளம் வயதிலே திருமணக் கோலம் கண்டு கணவரை இழந்த இவர் வேங்கடேசப் பெருமாள் மீது பக்தியுடன் பல நூறு  பாடல்களை இயற்றியதுடன் பெருமாளைத் தரிசிப்பதற்கு வருகின்ற அடியார்களுக்கு நீரும் சோறும் வழங்க ஆசைப்பட்டார்..

செல்வந்தர்களிடம் நன்கொடைகள் பெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்...

திருமலை வேங்கடவனையே தன்னுடைய கணவனாகக் கொண்டதால் இவர் இறுதி வரை மங்கல சின்னங்களுடன் வாழ்ந்ததாக அறிய முடிகின்றது..

இன்றும் கோயில் நடை அடைக்கப்படும் முன்  இவரது கீர்த்தனைகள் இணைக்கப்படுகின்றன..

பெருமாளுக்கான உபசாரங்களில்  நிறைவாக செய்யப்படும் கற்பூர ஆரத்திக்கு வேங்கமாம்பா ஆரத்தி என்றே பெயர்..

இந்தப் புண்ணியவதி தொடங்கியதே இருநூற்று ஐம்பது ஆண்டுகளாக நடந்து வருகின்ற அன்னதானம்..

இந்நாட்டிற்குள் அந்நியர் புகுந்து தாக்கிக் கொள்ளையடித்த - காலங்கள் கடந்து போக, இன்றுவரை 
அன்னதானம் சிறப்புடன் நிகழ்கின்றது..
 
பொருள் உடையோரிடம் நன்கொடைகள் பெற்று மாத்ரு ஸ்ரீ பக்தர்களுக்கு வழங்கிய அன்னதானமே இன்று விரிவடைந்து விளங்குகின்றது..

 நன்றி ஸ்ரீவாரி
திருமலையில் மாடவீதிக்கு அருகிலுள்ள இவரது பிருந்தாவன வளாகத்தை  உயர்நிலைப் பள்ளியாக திருமலை  நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது.. ஆயினும் வேங்கமாம்பாளின் பிருந்தாவனத்திற்கு  அடியார்கள் எப்போதும் அனுமதிக்கப்படுகின்றனர் என்கின்றது விக்கி... 

1985 - ல் இரண்டாயிரம் பேர் சாப்பிடும் அளவில் கட்டப்பட்ட இந்த அன்னதானக் கூடம் இன்று ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் சாப்பிடும் விதமாக நான்கு  கூடங்களாக விரிவடைந்து உள்ளது..

இங்கு நாளொன்றுக்கு அறுபதாயிரம் பேர் வரை சாப்பிடுகின்றனர் என்று சொல்கின்றார்கள்..

நன்றி ஸ்ரீவாரி
ஏழை பணக்காரர், படித்தவர் படிக்காதவர் என்ற பேதமின்றி அனைவரும் அமர்ந்து வயிறார சாப்பிடுகின்றனர்..

நன்றி ஸ்ரீவாரி
திருமலையில் தங்கும் இடம், முடி காணிக்கை, உணவு என எல்லாவற்றையும் கட்டணம் இன்றி வழங்கச் செய்தவர் - 


அன்றைய ஆந்திர மாநிலத்தின் முதல்வர் திரு. N.T.ராமராவ் அவர்கள்..

நடுத்தர மக்களுக்குத் திருமலையில் இப்படியான நன்மைகளைச் செய்து தந்த நல்லோர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்..


ஓம் ஹரி ஓம் 
நமோ வேங்கடேசாய
***

ஞாயிறு, ஏப்ரல் 21, 2024

தேரோட்டம் 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 8
ஞாயிற்றுக்கிழமை


அஸ்திர தேவர்


பல்வேறு சிறப்புகள் உடைய தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பெருந்திருவிழா 18 நாட்கள் நடைபெறும்..

முளைப்பாரி

இதன்படி இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா
கடந்த பங்குனி 24 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு வாகனங்களில் ஸ்வாமி திருவீதி உலா 
நடைபெற்றது..
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று சித்திரை ஏழாம் நாள் (20/4) சனிக்கிழமை காலை 7 மணியளவில் ஸ்ரீ அல்லியங்கோதையுடன் தஞ்சை விடங்கப் பெருமானாகிய ஸ்ரீ தியாகராஜர் திருத்தேரில் எழுந்தருளினார்..

ஆரூரா தியாகேசா.. முழக்கத்துடன் அடியார்கள் வடம் பிடிக்க ராஜ வீதிகளில் 
திருத்தேரோட்டம் வெகு சிறப்புடன் 
நடைபெற்றது..


தேரோட்டத்தின் சில காட்சிகள் இன்றைய பதிவில்..
 தேர் நிலை

காத லாகிக்
  கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை
  நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும்
  மெய்ப்பொருல் ஆவது
நாதன் நாமம்
  நம சிவாயவே.. 3/1/1
-: திருஞானசம்பந்தர் :-
**
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***