நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, நவம்பர் 19, 2023

அறங்கள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 3
ஞாயிற்றுக்கிழமை


ஐயன் அளந்த இருநாழி நெல் கொண்டு அம்பிகை முப்பத்திரண்டு வகை அறங்களையும் செய்ததாக நமது புராணங்கள் பேசுகின்றன..

காஞ்சியின் ஸ்தல வரலாறு இதுதான்..

அபிராமவல்லியைப் பாடும்போது, 

ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே.. 57

என்றும் 

நீடு உலகங்களுக்கு ஆதாரமாய் நின்று நித்தமாய்
முத்தி வடிவாய் நியமமுடன் முப்பத்து இரண்டு
அறம் வளர்க்கின்ற நீ..

என்றும் அபிராமி பட்டர் போற்றுகின்றார்..

திருஐயாறு மற்றும்
பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள தாமரங்கோட்டை  தலங்களில் அம்பிகையின் திருப்பெயர் அறம் வளர்த்த நாயகி..

என்னுடைய தொகுப்பில் இருந்து முப்பத்திரண்டு வகை அறங்கள்:
(இவற்றுள் பாட பேதங்களும் உள்ளன..)


1) ஆதுலர் சாலை
மருத்துவமனை அமைத்தல்.

2) ஓதுவார்க்கு உணவு 
கல்வி கற்போர்க்கு உணவு.

3) அறுசமயத்தோர்க்கு உணவு
துறவியர்க்கு உணவு.

4) பசுவுக்கு வாயுறை 
வாயில்லா ஜீவன்களைக் காத்தல்.

5) சிறைச் சோறு
சிறையில் இருப்போர்க்கு உணவு அளித்தல்.

6) ஐயம்
பிச்சையெடுத்து உண்போர்க்கு உணவிடுதல்.

7) நடைத் தின்பண்டம் 
வழிநடை செல்வோர்க்கு உண்ணக் கொடுத்தல்.

8) மகச் சோறு
கர்ப்பிணியரைக் காத்தல்.

9) மகப்பெறுவித்தல்
பேறுகாலம் பார்த்தல்.

10) மக வளர்த்தல்
பிள்ளை வளர்த்துக் கொடுத்தல்.

11) மகப் பால் 
தாய்ப்பால் ஊட்டுதல்.

12) அறவைப்பிணஞ்சுடுதல்
ஆதரவற்ற சடலங்களுக்கு கிரியை செய்வித்தல்.

 13) அழிந்தோரை நிறுத்தல் 
நன்றாக இருந்து வீழ்ந்தோர்க்கு உதவுதல்.

14) வண்ணார் சகாயம்
ஏழையர் துணி வெளுக்க உதவுதல்.

15) நாவிதர் கூலி
ஆதரவற்றோர்க்கு முடி திருத்தி உதவுதல்.

16) கன்யாதானம்
ஏழைக் கன்னியர்க்கு திருமணம் செய்வித்தல்.

17) சுண்ணம் 
தாம்பூலம் அளித்தல்.

18) மருந்து
நோய்க்கு மருந்து கொடுத்தல்.

19) காதோலை
ஏழையர்க்கு பூணூல் காதோலை/ வளையல் வழங்குதல்.

20) கண் மருந்து 
கண்ணுக்கு மருந்திடுதல்.

21) கண்ணாடி
கண் சிகிச்சைக்கு உதவுதல்.

22).தலைக்கெண்ணெய்
தலைக்கு எண்ணெய் தேய்த்து சீவி விடுதல்.

23) போகம் அளித்தல்
தம்பதியர்க்கிடையே சச்சரவு நீக்கி வைத்தல்.

24) அன்னதானம்
நாளும் வழிச்செல்வோர்க்கு அன்னம் வழங்குதல்.

25) பிறரறங் காத்தல் 
பிறரது அறத்தினை காத்து நிற்றல்.

26) தண்ணீர்ப் பந்தல்
கோடையில் தண்ணீர்ப் பந்தல் அமைத்தல்.

27) மடம் 
வழிச் செல்வோர் தங்கும் இடம் அமைத்தல்.

28) குளம்
குளம் அமைத்து பராமரித்தல்.

29) சோலை
கோயில்களில் நந்தவனம்
அமைத்தல்.

30) ஆ உரிஞ்சு கல்
விலங்குகள் உரசிக் கொள்வதற்கு மந்தையில்
கல் நிறுவுதல்.

31) ஏறு விடுத்தல் 
மந்தைக்கு காளை வாங்கிக் கொடுத்தல்.

32) உயிர்மீட்டல்
கொலைக் களத்தில் விலை கொடுத்து  உயிர்களை மீட்டளித்தல்..


யாவர்க்கும் ஆகிய அறங்கள்

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை 
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை 
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே..
-: திருமூலர் :-
 
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே 
செல்லும்வாய் எல்லாஞ் செயல்..
**
 
ஓம் சிவாய 
சிவாய திருச்சிற்றம்பலம்
***

17 கருத்துகள்:

  1. தலைக்கெண்ணெய் - வியப்பு.  இதுவுமா?

    பிறரறங்காத்தல்  -  நெகிழ்ச்சி 

    ஆ உரிஞ்சு கல்  -  ஆ....   ஆச்சர்யம்.  இப்படி கூடவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுபோல இன்னும் எத்தனையோ...
      இவை பொதுவாக வகுக்கப்பட்டவை..

      தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம் ..

      நீக்கு
    2. தலைக்கெண்ணெய் - இதுவும் தானம் செய்வதில்தான் வரும். இதற்கு அர்த்தம் எண்ணெய் தடவி சீவுவதில்லை. வருபவற்கு அல்லது மற்றவர்களுக்கு எண்ணெய் தேய்த்துக்குளிக்க, நல்லெண்ணெய் மற்றும் சீயக்காய் கொடுத்தல். முன்பெல்லாம் நாங்கள் வருஷ ச்ராத்தத்தின்போது வரும் பிராமணர்களுக்கு முதலில் தலைக்கு எண்ணெய், சீயக்காய் கொடுத்து அவர்கள் குளித்த பிறகு புது உடை கொடுத்து பிறகுதான் ச்ராத்தத்தை ஆரம்பிக்கும் வழக்கம் இருந்தது (30 வருடங்களுக்கு முன்பு).

      நீக்கு
  2. அறநெறி பற்றிய பதிவு அருமை. படங்களும் பாடல் பகிர்வும், செய்திகளும் அருமை. திருமந்திரத்தில் திருமூலர் சொன்னதை நம்மால் கடைபிடிக்க முடியும், முடிந்தவரை கடைபிடிப்போம்.
    வாழ்த்துகள், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமூலர் அருளியதை முடிந்தவரை கடைப்பிடிப்போம்.

      தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும்
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ..

      நீக்கு
  3. அருமை... முடிவில் திருக்குறளுடன் சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி தனபாலன்..

      நீக்கு
  4. அபிராம வல்லவன் தாயை வணங்கி நிற்கிறோம்.

    முப்பத்தி இரண்டு அறங்களும் கண்டு கொண்டோம் . நல்ல பகிர்வு . நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  5. ஓம் சிவாய
    வாழ்க வளத்துடன்...

    பதிலளிநீக்கு
  6. அறங்களின் தொகுப்பு மிகச் சிறப்பு துரை அண்ணா.

    அதில் ஆ உரிஞ்சு கல் - அட! சந்தையிலும் பிற இடங்களிலும் கூட மாடுகளும் பிற விலங்குகளும் கூடத் தங்கள் உடலில் அரிப்பு ஏற்படும் போது கற்களில், சுவற்றில் கூட உரசிக்கொள்ளும். அதற்குக் கல் நிறுவுதல்! வியப்பான விஷயம். எல்லா உயிர்களுக்கும் உதவுதல் என்று எவ்வளவு அருமையான விஷயங்கள்.

    ஐயம் - இது இப்போது பெரிய கேள்விக்குறி என்றே எனக்குத் தோன்றுகிறது. யாரை நம்பி இடுவது? ஐயம் இட்டு உண்?!!

    கடைசியாகச் சொன்னது கொஞ்சம் குழப்பம். எனக்கு - கொலைக்களத்தில் விலை கொடுத்து உயிர்களை மீட்டல்? அசைவத்திற்காகக் கொல்லப்படும் உயிர்களை மீட்டலா? இப்படி யோசித்த போது, அக்காலத்தில் யாகங்களின் போது உயிர்பலி கொடுத்ததாகவும், முனிவர்களும் கூட சாப்பிட்டதாகவும் வாசித்த நினைவு வந்தது.
    கொலைக்களம் என்றால் என்ன?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கெல்லாம் தனி விளக்கமாக ஒரு பதிவு காத்திருக்கின்றது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  7. அறங்கள் பற்றிய விளக்கம் அருமை. 14, 15, 16 - இவை, அந்த அந்தத் தொழில் செய்வோருக்கு உதவுதல் என்பதாகத்தான் இருக்கும். எப்போப் பார்த்தாலும் பிறருடைய துணிகளை வெளுத்து, காய வைத்து அதனைக் கொண்டு சேர்ப்பித்து....என்று ஊருக்காக உழைக்கும் ஈரங்கொல்லிகளுக்கு நாம் உதவவேண்டாமா?

    நம்மிடம் இருக்கும் பெண்ணை, சந்ததி வளர்வதற்காக இன்னொரு குடும்பத்திற்கு தானம் செய்வதே கன்யா தானம். திருமணச் செலவு என்பதெல்லாம் நம் வழக்கத்தில் கிடையாது. இது, பிற்பாடு ஏற்பட்டுவிட்ட விபரீதம் (கடந்த 200 ஆண்டுகளுக்குள்).

    பிறர் அறம் காத்தல் - ஒவ்வொரு சமூகத்துக்கும் உள்ள அறத்தை மற்றவர்கள் காக்கவேண்டும். இதன் அர்த்தம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    ஆ உரிஞ்சு கல் - இது பசுக்கள் (எருமைகள்....) தங்கள் உடம்பைத் தேய்த்துக்கொள்வதற்கான கல். பெரும்பாலும் மற்ற விலங்குகள் தேய்த்துக்கொண்டு பார்த்ததில்லை (இங்கு காட்டைப் பற்றிப் பேச்சில்லை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துகள் சிறப்பு..

      இதற்கெல்லாம் விளக்கமாக இன்னொரு பதிவு காத்திருக்கின்றது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
    2. 32 அறங்களையும் தொகுத்து அளித்தமைக்கு நன்றி. இக்காலத்தில் எவரும் அறியாதவை இவை எல்லாம். அறம் என்றாலே புரியுமானு சந்தேகம். தொடரும் பதிவுக்குக் காத்திருக்கேன்.

      நீக்கு
    3. இவற்றை பள்ளி நாட்களிலேயே எழுதி வைத்திருக்கின்றேன்..

      இப்போது விக்கியில் எடுத்து ஒழுங்கு செய்து எழுதியுள்ளேன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..