நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, செப்டம்பர் 22, 2023

திருப்புகழ்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 5
வெள்ளிக்கிழமை

இன்று
கதிர்காம திருப்புகழ்

முருகன் சந்நிதி - கதிர்காமம்

தனதனன தான தனதனன தான
தனதனன தானத் ... தனதான
 

திருமகள் உலாவும் இருபுயமு ராரி
திருமருக நாமப் ... பெருமாள்காண்

செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதருகு மாரப் ... பெருமாள்காண்

மருவும்அடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப் ... பெருமாள்காண்

மணிதரளம் வீசி அணியருவி சூழ
மருவுகதிர் காமப் ... பெருமாள்காண்..

அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் ... பெருமாள்காண்

அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் ... பெருமாள்காண்

இருவினையி லாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் ... பெருமாள்காண்

இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 

ஏ..மனமே!..
திருமகள் விளையாடுகின்ற 
புயங்களை உடைய திருமாலின் மருமகன் எனும் 
திருப்பெயர் கொண்ட  பெருமானைக்  காண்பாயாக.

மண்ணிலும் விண்ணிலும்
போற்றிப் புகழப் பெறும் திருப் பாடல்களை
அளித்தருளிய குமாரப் பெருமானைக் காண்பாயாக..

வணங்குகின்ற
அடியவர்களின் மனதில் 
விளையாடி மகிழ்கின்றவனும்
மரகத மயில் வாகனத்தை உடையவனும் 
ஆகிய பெருமானைக் காண்பாயாக..

மணியையும் முத்தையும் அள்ளி வீசுகின்ற 
அருவி சூழ்ந்து விளங்குகின்ற 
கதிர்காமப் பெருமானைக் காண்பாயாக..

பெரிய மலைகள் நீறாகவும் கொடிய அசுரர்கள் 
அழிந்து ஒழியவும் வீரப்போர் 
புரிந்த பெருமானைக் காண்பாயாக..

சடாமுடியில் பாம்பு பிறை கங்கை இவற்றைக் 
கொண்டிருக்கின்ற சிவபெருமானுக்கு
குருநாதனாகிய பெருமானைக் காண்பாயாக..

இருவினைகளாகிய 
நல்வினை தீவினை இல்லாதவர்களும்
கற்பக விருட்சத்தினை விட்டு
நீங்காதவர்களும் ஆகிய தேவர்களது குலத்திற்கு
ஈசனாக விளங்கும் பெருமானைக் காண்பாயாக..

இலகுவான வில்லினை உடைய வேடர் தம் குலக் கொடியாகிய வள்ளி நாயகியை அணைந்து 
மகிழ்கின்ற பெருமானைக் காண்பாயாக...
**
 
முருகா முருகா
முருகா முருகா..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், செப்டம்பர் 21, 2023

தீர்த்தன்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 4
வியாழக்கிழமை


பகீரதனின் கடுந்தவத்தினால் பூமிக்கு வந்தவள் கங்கா தேவி.. 

அப்படி வந்தபோது மிகுந்த ஆக்ரோஷத்துடனும் சற்றே அகந்தையுடனும் விண்ணிலிருந்து இறங்கினாள்..

அத்தகைய கங்கையைத் தனது ஜடா பாரத்தினுள் ஐக்கியப் படுத்திக் கொண்டார் ஈசன் எம்பெருமான்..

அதன் பிறகு -
பகீதரன் செய்த வேண்டுதலின் பொருட்டு - சிறைப்பட்ட கங்கையை - மண்ணில் தவழவிட்டு சிவபெருமான் அநுக்கிரகம் செய்தார் -  என்பது நாமெல்லாம் அறிந்ததே..

இந்நிகழ்வு தேவாரத்தில் பல பாடல்களிலும் குறிக்கப்பட்டுள்ளது..

தீர்த்தன், தீர்த்தம் - என்ற பதங்களை மிக உயர்ந்தவன் - மிக  உயர்ந்தது என்று பொருள் கொள்கின்றனர் ஆன்றோர்..

சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே!..

மக்கள் சென்று மூழ்கி எழுந்து வினைகளைத் தீர்த்துக் கொள்கின்ற தீர்த்தங்களாகத் திகழ்பவன் ஈசனே!.. - எனும் அப்பர் பெருமானின் திருவாக்கும் சிந்திக்கத் தக்கது..

அப்படியானவற்றுள் ஒரு சில திருப் பாடல்கள் இன்றைய பதிவில்..


தூர்த்தனைச் செற்ற தீர்த்தன் அன்னியூர்
ஆத்த மாவடைந் தேத்தி வாழ்மினே.. 1/96
-: திருஞானசம்பந்தர் :-

காமாந்தகனாகிய இராவணனைத் தண்டித்த புனித னாகிய அன்னியூர் இறைவனை அடைந்து அன்புக்குரியவனாக அவனைப் போற்றி வாழுங்கள்.

தோத்திரமா மணலில் இலிங்கந் தொடங்கிய ஆனிரையிற்பால்
பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி
ஆத்தமென மறைநால்வர்க்கு அறம்புரிநூ லன்று உரைத்த
தீர்த்த மல்கு சடையாரும் திருவேட்டக் குடியாரே.. 3/66
-: திருஞானசம்பந்தர் :-


பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதிய நல்ல
தீர்த்தமும் சடையில் வைத்தார் திருப்பயற் றூரனாரே.. 4/32
-: திருநாவுக்கரசர் :-


பூத்தபொற் கொன்றை மாலை புரிசடைக் கணிந்த செல்வர்
தீர்த்தமாம் கங்கை யாளைத் திருமுடி திகழ வைத்து
ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்ப மேவி னாரை
வாழ்த்துமா றறிய மாட்டேன் மால்கொடு மயங்கி னேனே.. 4/44
-: திருநாவுக்கரசர் :-

தீர்த்தனை சிவனைச் சிவ லோகனை
மூர்த்தியை முதலாய ஒருவனைப்
பார்த்தனுக்கு அருள் செய்த சிற்றம்பலக்
கூத்தனைக் கொடி யேன்மறந்து உய்வனோ.. 5/2
-: திருநாவுக்கரசர் :-

ஒன்றா உலகனைத்தும் ஆனார் தாமே
ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே
நின்றாகி எங்கும் நிமிர்ந்தார் தாமே
நீர்வளிதீ ஆகாசம் ஆனார் தாமே
கொன்றாடுங் கூற்றை உதைத்தார் தாமே
கோலப் பழனை உடையார் தாமே
சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே
திருவாலங் காடுறையும் செல்வர் தாமே.. 6/78/1
-: திருநாவுக்கரசர் :-


ஆத்தம் என்றெனை ஆள்உகந் தானை
அமரர் நாதனைக் குமரனைப் பயந்த
வார் தயங்கிய முலை மட மானை
வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்த
தீர்த்தனைச் சிவனைச் செழுந் தேனைத்
தில்லை அம்பலத்துள் நிறைந் தாடுங்
கூத்தனைக் குரு மாமணி தன்னைக்
கோலக்காவினில் கண்டு கொண்டேனே..7/62
-: சுந்தரர் :-


கங்கை வார்சடையாய் கண நாதா
கால காலனே காமனுக்கு அனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால் விடையாய் தெளி தேனே
தீர்த்தனே திருவாவடு துறையுள்
அங்கணா எனை அஞ்சல் என் றருளாய்
ஆர் எனக்குறவு அமரர்கள் ஏறே.. 7/70
-: சுந்தரர் :-

நன்றி
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

புதன், செப்டம்பர் 20, 2023

நீதியும் ஜோதியும்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 3
 புதன்கிழமை


குறுக்காய் விழுந்து கெடுத்தாலும் 
முறுக்காய் எழுந்து தடுத்தாலும் 

அடியவர்க் கென்றும் பயமில்லை
கொடியவர்க் கென்றும் ஜெயமில்லை..

குலத்தின் தெய்வம் குளிர் நிலவாய்
கேட்டதைத் தருமே கடல் அளவாய்!..

கொடியார் நடுங்கிட வரும் தெய்வம்
அடியார்க்கு அமுதாய் வந்திடுமே..

அடங்கார் பகையை அறுத்தெறியும்
அடியார் வினையை துடைத்தெறியும்..

பிணியார் பகையை முடித்து விட்டு
பொங்கலும் பூசையும் தான் ஏற்கும்!..
 
சந்நிதி தேடி 3  - எனும் பதிவில் குல தெய்வம் குறித்து எழுதிய பாடல் அது.

இந்நிலையில்
கடந்த (15/9) வெள்ளியன்று இரவு குலதெய்வக் கோயிலில் இருந்து சிவாச்சாரியார் அலை - வழி அழைத்துப் பேசினார்..

நல்ல செய்தி தான்..

அதன்படி,
தொடுக்கப்பட்டிருந்த வல்லடி வழக்கு தள்ளுபடியாகி விட்டது.. 

கோயிலின் வெளியிலும்  உட்புறமும் புதிதாக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு விட்டன..

சிவாச்சாரியார்கள் வழக்கம் போல கைங்கர்யங்களைத் தொடர்கின்றனர்..

இந்த நிலையே தொடர வேண்டும் என்பதே நல்லோர் தம் விருப்பம்..

இறைவன் நல்லருள் புரிய வேண்டும்.. 

எழுதி வைத்த பாடல் சிறிது மாற்றங்களுடன்!.


குறுக்காய் விழுந்து கெடுத்தோரும்
முறுக்காய் எழுந்து தடுத்தோரும் 

மிடுக்காய் எழுந்த சுடர் கண்டார்
நடுக்காய் நின்றார் நடை வீழ்ந்தார்

ஐயன் அவனே அருகில் இருக்க
அடியார்க் கென்றும் பயமில்லை

குணமே கெட்டுக் குறையே புரிந்தார்
கொடியவர்க் கென்றும் ஜெயமில்லை..

குலத்தின் தெய்வம் நிலவாய்க் குளிர்ந்து
கேட்டதைத் தந்தது மனம் நிறைவாய்!..

கொடியார் நடுங்கிட வந்தது தெய்வம்
அடியார்க்கு அரணாய் நின்றது தெய்வம்..

அடங்கார் பகையை அறுத்தெறிந்து
அடியார் பழியை துடைத்தெறிந்து

பிணியார் பகையை முடித்ததுவே
இனி யார் எதிராய் நிற்பதுவே..

பிணியார் பகையை முடித்த தெய்வம்
பொங்கலும் பூசையும் ஏற்றிடுமே..

ஊரும் உயிரும் தான் காத்து
ஒளியாய் திகழும் குல தெய்வம்..

நீதியும் ஜோதியும் தானாய் நின்று
நித்தம் அருளும் குல தெய்வம்..

நள்ளிருள் நட்டம் பயிலும் தெய்வம்
நாளும் நல்லருள் நல்கும் தெய்வம்

நல்லார் நாவில் இருக்கும் தெய்வம்
நயந்தார்கென்றும் அருளும் தெய்வம்

இல்லார் இடரைத் தீர்க்கும் தெய்வம்
பொல்லார் பகையைத் தொலைக்கும் தெய்வம்

உணர்வது ஒன்றே உலகில் வாழ்வு
உணரார் என்றால் என்றும் தாழ்வு..
**
 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

செவ்வாய், செப்டம்பர் 19, 2023

கணேச தரிசனம்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 2
 செவ்வாய்க்கிழமை


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு..
-: ஒளவையார் :-

நேற்று
வெங்கடேஸ்வரா நகர்
(எங்கள் புதிய குடியிருப்பில்)
ஸ்ரீ விஜயகணபதி 
திருவீதி எழுந்தருளினார்..


பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ  எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா..
-: ஒளவையார் :-
**
ஓம் கம் கணபதயே நம:

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

திங்கள், செப்டம்பர் 18, 2023

தமிழ் தந்தானை..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

புரட்டாசி முதல் நாள் 
 திங்கட்கிழமை

இன்று
ஸ்ரீ விநாயக சதுர்த்தி

சென்ற ஆண்டு உவரிக்குச் 
சென்றபோது எழுதிய பாட்டு இது..

உடல் நிலை தளர்வாக இருந்த நேரத்தில் 
உற்சாகமளித்ததும் உறுதுணையாக 
இருந்ததும் இந்த வரிகள்.. 

அந்த வகையில் 
மீண்டும் அதே பாடல்..


ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப்
போரானைக் கற்பகத்தைப் பேணினால் - வாராத
புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்
சத்திதருஞ் சித்திதருந் தான்..
-: பழந் தமிழ்ப்பாடல் :-
*

ஓரானைக் கன்று என 
வந்தானை போற்றி
சிவசக்தி வலம் செய்து 
நின்றானை போற்றி..

மாமேரு மலைதனில்
மலர்ந்தானை போற்றி
மா பாரதம் தன்னை 
வரைந்தானை போற்றி..

அன்றமரர் துன்பங்கள்
தீர்த்தானை போற்றி
ஔவைக்கு அருந்தமிழ்
தந்தானை போற்றி..

காவேரி கடுஞ்சிறை
விடுத்தானை போற்றி
கைதொழ எல்லாமும்
கொடுத்தானை போற்றி..

அரங்க மாநகர் தனைத்
தந்தானை போற்றி
ஆங்கொரு குன்றிலே
அமர்ந்தானை போற்றி..

தேவாதி தேவர் தொழ
நின்றானை போற்றி
தேவாரம் தனை மீட்டுத் 
தந்தானை போற்றி..

அச்சிறுத்தருள் செய்த
அழகானை போற்றி
ஆயிரத்தெழுவருடன்
வந்தானை போற்றி..

புன்கூரில் குளமொன்று
புரிந்தானை போற்றி
புறம்பயத்தில் தேனோடு
பொலிந்தானை போற்றி..

மருதீசர் மலைக் குன்றில்
மிளிர்ந்தானை போற்றி
உப்பூரில் வெயில் தனில்
அமர்ந்தானை போற்றி..

அமுதென்று அமரர்க்கு
ஆனானைப் போற்றி
கந்தனுக்கு வள்ளிதனைத்
தந்தானை போற்றி..

கும்பமுனி கும்பிடக்  
குளிர்ந்தானை போற்றி
குறை தீர்த்து குலங்காத்து
நிறைந்தானை போற்றி..

ஸ்ரீ வாதாபி கணபதி
வாதாபி தனை வென்று
வந்தானை போற்றி
வளர்பிறை அதனுடன்
நின்றானை போற்றி..

ஓங்கார ரூபமாய்
ஒளிர்ந்தானை போற்றி
ஓலமிட்டொரு குரல்
விளித்தானை போற்றி..

கலங்காமல் உயிர்தனைக்
காத்தானை போற்றி
கருதியே வந்தார்க்கு
கதியானை போற்றி..

செவிகேட்டு செந்தமிழ்
மகிழ்ந்தானை போற்றி
விதிமாற்றி விளக்கேற்றி
வைத்தானை போற்றி..

ஞானமே வடிவாக
வந்தானை போற்றி
தானமே தவமாக
இருந்தானை போற்றி..


கோள்வினை எல்லாமும்
தீர்த்தானைப் போற்றி
நாளெலாம் நல்வினை
சேர்த்தானை போற்றி..

கல்லானைக் கவியென்று
வளர்த்தானை போற்றி
பொல்லானை பொறுத்தருள்
புரிந்தானை போற்றி..18

போற்றியே போற்றி எனப்
போற்றிடு மனமே..
போற்றியே போற்றி என
வாழ்த்திடு மனமே..
**

அனைவருக்கும்
விநாயக சதுர்த்தி
நல்வாழ்த்துகள்
***
 
ஓம் கம் கணபதயே நம:

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

ஞாயிறு, செப்டம்பர் 17, 2023

சதுர்த்தி விழா


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 31
 ஞாயிற்றுக்கிழமை


பிள்ளையார் சதுர்த்தி..

சதுர்த்தி விழா சத்ரபதி சிவாஜி மகராஜ் காலத்திலேயே கொண்டாடப்பட்டிருக்கின்றது. 

இது இந்நாட்டின் கலாச்சார விழா..

இது மகாராஷ்டிர மாநிலத்தின் ஹிந்து மக்களின் குடும்ப விழா.. 

மகாராஷ்டிர மக்கள் விநாயக சதுர்த்தியன்று,  தத்தமது வசதிக்கேற்ப விநாயகர் சிலைகளை செய்து வைத்து - கோலாகலமாக விழா நடத்தி - ஏழைகளுக்கு தானங்கள்  வழங்கி மகிழ்கின்றனர்...

அடிமைப்பட்டுக் கிடந்த மக்களிடையே தேசிய உணர்வு வளர்வதற்காக - சுதந்திரப் போராட்ட காலத்தில், பால கங்காதர திலகர் - இவ்விழாவினை ஊக்குவித்தார்..

சிவ பாரம்பரியத்தில்  தங்கள் இல்லங்களில் பிள்ளையாரை வணங்குவதற்குத் தயங்குவதில்லை.. 

நாளடைவில் இவ்விழாவில் அரசியலும் ஆடம்பரமும் புகுந்து கொண்டன...

தமிழகத்திலும் இத்தகைய ஆடம்பரம்  புகுந்து கொண்டது காலத்தின் கொடுமை..

அதுவரைக்கும் சிவ சமயத்தினரது வீடுகளிலும் கோயில்களிலும் நடத்தப்பட்ட விழா பொது வெளிக்கு வந்தது..  

சதுர்த்தி விழா - தடைகள் பலவற்றைக் கடந்திருந்தாலும்  - விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தினால் என்ன பயன்?.. - என்று கேட்கும் நிலையை
இன்றைக்கு எய்தியிருக்கின்றது..

ஆடம்பர விழா கொண்டாட்டங்களால் யாதொரு பயனும் இல்லை தான்..

பண்டைய நாட்களில்
பசுஞ்சாணத்தைப் பிடித்து அருகம்புல் வைத்து வழிபடுவர்.. அதெல்லாம் இன்றைக்கு மலையேறி விட்டது..

களிமண் கொண்டு பிள்ளையார் அமைத்து வணங்கி மூன்றாம் நாள் நீரில் கரைத்து விடும் பழக்கமும் நம்மிடையே இருந்தது.. 

இன்றைக்கு,  நீர்நிலைகளில் பிள்ளையாரைக் கரைக்கக்கூடாது - என்று வழக்காடு மன்றத்திற்குச் செல்கின்ற  அளவுக்கும் ஆளாகியிருக்கின்றது.. 
அந்த அளவுக்கு விநாயகர் வடிவமைப்பில் கலக்கப்பட்டிருக்கும் இரசாயனங்கள்..

மஞ்சளை அரைத்து - பிள்ளையார் பிடித்து வழிபடுவது தான் பவித்ரம்..

வீட்டில் இப்படியான வழிபாடு நடத்துவதற்கு இன்றைய சூழ்நிலையில்  யாதொரு தடையும் இல்லை..

இனிவரும் காலத்தில் எப்படியோ!..

விநாயக வழிபாடு என்பது தத்துவமாகும்..

எளிமையின் இலக்கணம் விநாயக மூர்த்தி.. 

பெற்றோருக்கு மரியாதை செய்வதும் ஊருக்கு உதவியாய் இருப்பதும் விநாயகர் நமக்குக் கூறுகின்ற அறிவுரைகள்..

பிள்ளையார் வழிபாடு யாருக்கானது?..  

நமக்கானது!.. கொழுக்கட்டையும் சுண்டலும் பூரணமும் நமக்கானவை.. 

நமது ஆன்ம நலத்திற்கானவை..


அதன்படி விநாயகரின்  
தத்துவத்தை உணர்ந்து 
வழிபட்டு நலம் பெறுவோமாக!..
**

கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கை தொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே!..

வக்ர துண்ட மஹா காயா 
சூர்ய கோடி ஸமப்ரபா 
நிர்விக்னம் குரு மே தேவ 
ஸர்வ கார்யேஸு ஸர்வதா:

வளைந்த துதிக்கையும்   கம்பீரமான திருமேனியும் கோடி சூரிய  பிரகாசத்தையும் உடைய விநாயகப் பெருமானே.,  
அனைத்துத் தடைகளையும் நீக்கி , எனது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறுவதற்கு அருள் புரிவீர்களாக!..
**
ஓம் 
கம் கணபதயே நம:

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

சனி, செப்டம்பர் 16, 2023

உறியடி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 30
சனிக்கிழமை

குருவாயூர்
க்ஷேத்திரத்தில்
நடைபெற்ற உறியடித் திருவிழா..


சிறு வயதில் உறியடி வைபவங்களைப் பார்த்ததுண்டு..

தமிழகத்தில் உறியடித் திருவிழா இப்போது நடத்தப்படுகின்றதா..

தெரியவில்லை..


Fb ல் கிடைத்த காணொளி..
நெஞ்சார்ந்த நன்றி..

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே..14

உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறுநெய் பால் தயிர்  நன்றாகத் தூவுவார்
செறி மென் கூந்தல்  அவிழத் திளைத்து  எங்கும் 
அறிவு அழிந்தனர்  ஆய்ப்பாடி ஆயரே.. 16
-: பெரியாழ்வார் :-
***

ஓம் ஹரி ஓம்

ஓம் சிவாய திருச்சிற்றம்பலம்
***

வெள்ளி, செப்டம்பர் 15, 2023

திருப்புகழ்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 29
வெள்ளிக்கிழமை

இன்று
வயலூர் திருப்புகழ்


தானன தனத்த தானன தனத்த 
தானன தனத்த ... தனதான


தாமரையின் மட்டு வாசமல ரொத்த
தாளிணை நினைப்பி ... லடியேனைத்

தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்ப
தாருவென மெத்தி ... யவிராலி

மாமலையி னிற்ப நீகருதி யுற்று
வாவென அழைத்தென் ... மனதாசை

மாசினை யறுத்து ஞானமு தளித்த
வாரமினி நித்த ... மறவேனே

காமனை யெரித்த தீநயன நெற்றி
காதிய சுவர்க்க ... நதிவேணி

கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட
காதுடைய அப்பர் ... குருநாதா

சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க
சோலைபுடை சுற்று ... வயலூரா

சூடிய தடக்கை வேல்கொடு விடுத்து
சூர்தலை துணித்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்


மணம் நிறைந்த தாமரை மலருக்கு 
நிகரான உனது திருவடிகளைப் பற்றிய
நினைவு இல்லாதிருந்த அடியேனை.,

மகரந்தம் விரிகின்ற  கொன்றை,
சுரபுன்னை, மகிழம் எனும் மரங்கள் 
கற்பக விருட்சங்களைப் போல 
வளர்ந்து நிறைந்திருக்கும் 
விராலி மாமலையில்

 யாம் நிற்போம். அதை மனத்தில் வைத்து 
அந்தத் தலத்திற்கு நீ வந்திடு.. 
- என்று அழைத்து,

என் மனத்தில் இருக்கின்ற 
ஆசை குற்றங்களை ஒழித்து,
ஞான அமுதம்  அளித்த
அன்பினை இனி வருகின்ற 
நாட்களில் மறக்க மாட்டேன்..

மன்மதனை எரித்த
தீ விழி நெற்றியையும்,
வேகமாக வந்த  கங்கையைத்
தாங்கிய ஜடாமுடியையும்,

காட்டின் புற்றில் படமெடுத்து 
ஆடும் பாம்பை அணிந்த காதையும் 
உடைய தந்தையாகிய 
சிவபெருமானின்
குருநாதனே..

சந்திரனும், சூரியனும்,
நட்சத்திரங்களும் உலவுகின்ற
சோலைகள் சூழ்ந்திருக்கின்ற
 வயலூரனே..

திருக்கையில் தாங்கிய 
வேலினைக் கொண்டு -
சூர பத்மனது தலையைக் 
கொய்த பெருமாளே..
**

முருகா முருகா
முருகா முருகா.. 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வியாழன், செப்டம்பர் 14, 2023

க்ஷணமுக்தீசர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 28
வியாழக்கிழமை


ராஜேந்திரம்ஆற்காடு..

ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சோழப்பேரரசின் கூற்றங்களுள் ஒன்றாக இருந்ததாகச் சொல்லப்படுகின்ற - ராஜேந்திரம்ஆற்காடு..

அப்பேர்ப்பட்ட ராஜேந்திரம் ஆற்காடு காலப்போக்கில் -
தஞ்சை மாநகரின் வடபால் அமைந்துள்ள
ராஜாம்பாள்புரம் எனப்பட்ட அம்மன் பேட்டை கிராமத்திற்கு உட்பட்ட சிற்றூராகி விட்டது..

தஞ்சை நகரில் இருந்து வடக்கே திரு ஐயாறு நோக்கிப் பயணிக்கும் போது வெண்ணாறு பள்ளியக்கிரகாரம் கும்பகோணம் பிரிவு சாலையைக் கடந்ததும் ஒன்றரை கிமீ., தொலைவில் மணற்கரம்பை கிராமம்..  அடுத்தது அம்மன்பேட்டை ..
  
அம்மன்பேட்டையின் மேற்காக உட்புறமாக இராஜேந்திரம் ஆற்காடு கிராமம்.. 

இவ்வூரில் வயல்வெளிக்குள் இருக்கின்றது ஸ்ரீ அபயாம்பிகா உடனுறையும் க்ஷணமுக்தீஸ்வரர் கோயில்.. 

பிரதான சாலையில் இருந்து கோயிலின் வாசல் வரைக்கும் நல்ல சாலை அமைக்கப் பட்டிருக்கின்றது..

இத்திருக்கோயில்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மிகச் சிறப்பாக இருந்திருக்கும் என்பதற்கு கம்பீரமான - க்ஷணமுக்தீஸ்வரர் திருமேனியே சாட்சி..

கோயிலின் அமைப்பு
கால வெள்ளத்தில் கரைந்து விட பிற்காலத்தில் மராட்டியர்களால் எடுத்துக் கட்டப்பட்டு இருக்கின்றது..  

பின்னும் நலிந்துவிட்ட நிலையில் 2007 க்கு முன் புனரமைக்கப்பட்டு 2007 ஆகஸ்ட் 31அன்று கும்பாபிஷேகம் நடந்துள்ளது.. 

சந்நிதியை அடுத்த முன்மண்டபத்தை ஒட்டியவாறு ஸ்ரீ அபயாம்பிகா சந்நிதி.. 

கிழக்கு நோக்கிய கோயிலின் வாசலில் நந்திகேசர்.. பழைமை தெரிகின்றது..

ஒற்றைத் திருச்சுற்று உடைய இக்கோயிலின் தெற்கு கோட்டத்தில் தக்ஷிணாமூர்த்தி. நிருதி மூலையில் விநாயகர்..

மூலஸ்தானத்திற்கு நேர் பின்புறத்தில் ஸ்ரீ வள்ளி தேவகுஞ்சரி உடனாகிய முருகப்பெருமான்.. 

அடுத்து ஸ்ரீ மஹாலக்ஷ்மி.. வடக்கு கோட்டத்தில் ஸ்ரீ துர்கை.. எதிரில் சண்டேசர்.. தீர்த்தக் கிணறும் உள்ளது.. 

கோயில் வளாகத்தில் வேப்ப மரங்கள் நிழல் விரித்துக் கொண்டிருக்கின்றன..

நந்தீசருக்கு வலப்புறமாக நவக்கிரக மண்டபம்..

ராஜகோபுரம் அமையப்பெற வில்லை..
மூலஸ்தானம் மட்டுமே கருங்கல் கட்டுமானம்..

திருக்கோயிலின் அருகிலேயே எல்லைப் பிடாரி அம்மன் குடிகொண்டிருப்பது சிறப்பு..

சோழர் காலத்தில் இக்கோயிலுக்கு பெருநிதியங்கள் இருந்திருக்கலாம்.. இன்றைக்கு எப்படியோ தெரியவில்லை..

இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் இந்தக் கோயிலைப் பற்றி அறிந்தேன்..

ஆயினும், 
2/9 அன்று தான் கோயிலுக்குச் சென்றோம்.. அன்றைக்கு சம்வஸ்த்ர யாகமும் திருக்கல்யாண வைபவமும் நடத்தப் பெற்றது..

கோயிலைச் சென்று அடைவதற்குள் இரவாகி விட்டது.. பொழுதோடு சென்றிருந்தால் கோயிலின் சூழலைப் படம் பிடித்திருக்கலாம்..

வேறொரு நல்ல சமயம் சீக்கிரம் அமையட்டும்..

இந்தப் பகுதியில் சில கோயில்களின் கைங்கர்யங்களைக் கவனித்துக் கொள்வதற்கு  சிவாச்சாரியார் ஒருவர் தான் என்று பேசிக் கொண்டார்கள் .. 

எனவே இந்தக் கோயில் திறக்கப்படும் நேரம் சொல்லுதற்கு அரியது.. 

ஆனால் பிரதோஷ வழிபாடுகள் தவறாமல் நடைபெறுகின்றன.. 

அல்லலுற்று அலைகின்ற உயிர்களுக்கு அஞ்சேல் என்று அருள்வதற்கு ஸ்ரீ அபயாம்பிகை இருக்கின்றாள்.. ஆதரவு நல்குவதற்கு ஸ்ரீ க்ஷணமுக்தீஸ்வரர் இருக்கின்றார்..

மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே.. -- என்பது திருநாவுக்கரசரின் திருவாக்கு..

அவ்வண்ணமாக, க்ஷணமுக்தீஸ்வரர் - விநாடிப் பொழுதிற்குள் அருள் தரும் இறைவன் என்பது அர்த்தம்..

வேறென்ன வேண்டும் நமக்கு!..
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச்சென்று உருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நம சிவாயவே.. 4/11/7
-: திருநாவுக்கரசர் :-
***

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***