நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 27, 2012

அண்ணாமலை

திருஞானசம்பந்தப்பெருமான் அருளிய திருஅண்ணாமலைத் திருப்பதிகத்திலிருந்து சில பாடல்கள்...

பூவார்மலர்கொண்டு அடியார்தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க் கருள்செய்தார்
தூமாமழைநின்று அதிரவெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம்பிணைவந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

அடியவர்கள் நறுமணமுடைய மலர்களை திருவடிகளில் தூவி வணங்கி வழிபடுகின்றனர். அதைக் கண்ணுற்ற வானவர்களும் புகழ்ந்து போற்றித் தொழுகின்றனர். யாருடைய  திருவடிகளில் ?.....

அழிவில்லாத வரத்தைப் பெற்று விட்டோம் என்று இறுமாந்து எல்லாருக்கும் இன்னல்களையும் இடையூறுகளையும் செய்து கொண்டிருந்த மூன்று அசுரர்களின் ஆணவத்தையும் அழித்து அவர்தம் முப்புரங்களையும் எரித்து ஒழித்ததோடல்லாமல் அவர்கள்  மூவர்க்கும் - யாரும் எதிர்பார்க்காதபடி - நல்லருளையும் வாரி வழங்கிய வள்ளல் பெருமானாகிய அண்ணாமலையார் தம் திருவடித் தாமரைகளில்!....

நீருண்ட கார் மேகங்கள் வானத்தில் கூடுகின்றன. சாரலாய்த் தூவி மழை பொழியத் துவங்குகின்றது. திடீரென எட்டுத் திசையும் அதிரும் வண்ணம் இடி முழக்கம். அடர்ந்த கானகத்தில் கூட்டங்கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்த  ஆடுகளும் காட்டுப்பசுக்களும் இடியோசையைக் கேட்டு அதிர்ந்து அச்சத்துடன் வரிசையாய் ஓடி வந்து,  மந்தையாய் ஒருங்கிணையும் அடிவாரத்தை உடைய அண்ணாமலையின் அண்ணலே!...  

அண்ணாமலையாரே!...

எங்கள் வாழ்வும் இப்படித்தான்!.

அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியுமாய் ...சிந்தை தடுமாறுகின்றோம்..
இடியோசையைக் கேட்டு  நடுங்கி அதிர்ந்து - அச்சத்துடன் ஓடி வந்த அந்த ஆடுகளுக்கும் காட்டுப் பசுக்களுக்கும் ஆதரவு  அளித்த அண்ணாமலையின் அடிவாரம் எங்களுக்கும்  அடைக்கலம் தாராதா?.....
 
அண்ணாமலையாரே!...எம்மையும் காத்தருள்வீராக!.....


கார்த்திகை மகாதீபத்தைத் தரிசித்தவருக்கு மறுபிறப்பு இல்லை என்பர். ஆனால் திருக்கார்த்திகை திருநாளில் திருஅண்ணாமலையை வலம் வந்து தரிசிக்கும் வாய்ப்பு எல்லாருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. 

அதனால்தான், திருஞானசம்பந்தப்பெருமான் நம் குறை தீரும் வழியை நமக்குக் காட்டுகின்றார்...



எனைத்தோரூழி அடியார் ஏத்த இமையோர் பெருமானார்
நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலர்  உறைகோயில்
கனைத்தமேதி காணாது ஆயன் கைம்மேற் குழல் ஊத
அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணா மலையாரே.



மலைச்சாரலில் மேய்க்கச் சென்றான் ஆயன் தன்னுடைய எருமைகளை.... நேரமாயிற்று....

கனைத்துக் கொண்டும் ஒன்றோடொன்று உரசிக் கொண்டும் அங்குமிங்கும் மேய்ந்து திரிந்த அவை மேய்ச்சலில்  சற்றே தொலைவுக்குப் போய் விட்டன. தன்  எருமைகளைக் காணாத ஆயன் திடுக்கிட்டவனாய்த் தன் கையிலிருந்த வேய்ங்குழலை ஊத,     

அவ்வளவுதான்... குழல் ஒலியை கேட்ட அளவில் அனைத்து எருமைகளும் வீடு திரும்பும் விருப்பத்துடன் ''திடு...திடு...'' என ஓடி வந்து ஒன்று திரளும் அடிவாரத்தை உடைய அண்ணாமலையில் வீற்றிருக்கும்  எம்பெருமானே!......

ஊழிகள் தோறும்  - அன்பில் நிறைந்த அடியவர்கள்  துதித்து மகிழும்படி, ஜோதி வடிவாய்த் திகழும்  அண்ணாமலையாரே!...    

கண் இமையாத வானவர்களுக்குத் தலைவனாய் விளங்கும் எம்பெருமானே!... 

நினைத்துத் தொழும் அடியவர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் நிமலனே!..  

அருட்பெரும் ஜோதியாய் கோயில் கொண்டுள்ள எம்பெருமானே! உம்மையன்றி எமக்கு வேறு புகலிடம் ஏது?...

அண்ணாமலையாரே!.....சரணம்!... சரணம்!...

திங்கள், நவம்பர் 26, 2012

பெரியகோவில் யானை

தஞ்சை மண்டலத்தில் இருந்து மூன்று யானைகள் புத்துணர்வு முகாமிற்கு புறப்பட்டு சென்றன.

வயது முதிர்வு காரணமாக தஞ்சை பெரியகோவில் யானை செல்லவில்லை.



தமிழக கோவில்களில் உள்ள யானைகள் ஒவ்வொரு ஆண்டும் புத்துணர்வு முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு புத்துணர்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி ஜனவரி 12–ந்தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக தஞ்சை மண்டலத்தில் உள்ள திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோவில் யானை தர்மாம்பாள், மன்னார்குடி அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோவில் யானை செங்கமலம், திருப்புகலூர் அருள்மிகு அக்னீஸ்வரசுவாமி திருக்கோவில் யானை சூலிகாம்பாள் ஆகிய மூன்று யானைகளும் நேற்று புத்துணர்வு முகாமிற்கு புறப்பட்டு சென்றன.

இந்த மூன்று  யானைகளும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்பு இருந்து லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. இதனை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் திரு.இளங்கோ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆனால் தஞ்சை பெரியகோவில் யானை வெள்ளையம்மாள் இந்த ஆண்டு புத்துணர்வு முகாமிற்கு செல்லவில்லை. காரணம் இந்த யானைக்கு 62 வயது ஆகிறது.

தமிழகத்தில் உள்ள யானைகளில் அதிக வயதுடையது வெள்ளையம்மாள் . இந்த யானைக்கு வயது முதிர்வு காரணமாகவும்  நகம் மற்றும்  மூட்டு பகுதியில் வீக்கம் காரணமாகவும், டாக்டர்களின் ஆலோசனைப்படி இந்த ஆண்டு புத்துணர்வு முகாமிற்கு செல்லவில்லை.

இந்த யானையை நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தஞ்சை மாரியம்மன் கோவிலுக்கு பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த யானையின் வயதினை கருத்தில் கொண்டு புத்துணர்வு முகாமில் மற்ற யானைகளுக்கு வழங்கப்படும் மூலிகை மருந்து வகைகளையும் மற்ற நிவாரணப் பயன்களையும்  தனி கவனத்துடன் வழங்கி தமிழகத்தின் மூத்த யானையான வெள்ளையம்மாளை தமிழக அரசு கெளரவப்படுத்த வேண்டும் என தஞ்சை வாழ் மக்களும் இறையன்பர்களும் விரும்புகின்றனர்.

நாமும் வெள்ளையம்மாள் விரைவில் உடல் நலம் பெற்று இன்னும் பல்லாண்டு  வாழ்ந்து எல்லாரையும் ஆசீர்வதிக்குமாறு எல்லாம் வல்ல பெருவுடையாரை வேண்டிக் கொள்வோம்..

வாழ்க வெள்ளையம்மாள்!... வாழ்க பல்லாண்டு!...

கார்த்திகை தீபம்

தீபத் திருவிழா எனும் திருக்கார்த்திகைத் திருவிழா ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் திருக்கோயில்களிலும், தமிழர் தம் இல்லங்களிலும் கொண்டாடப்பட்டு வரும் உன்னதப் பெருவிழா ஆகும். தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும் இதற்கான சான்றுகள் உள்ளன என்கின்றனர்.

கார்த்திகை மாத வளர்பிறை கிருத்திகை நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் பெளர்ணமியும்   கார்த்திகை நட்சத்திரமும் கூடி வரும் நாளில் இல்லங்கள் தோறும் வரிசை வரிசையாக, அலங்காரமாக  திருவிளக்கேற்றி வைத்து  மக்கள்  வழிபடுவர். 

திருஞான சம்பந்தப் பெருமான் திருமயிலையில், நந்தவனத்தில் அரவந்தீண்டி மாண்டு கலசத்தில் சாம்பலாக இருக்கும் பூம்பாவை எனும் இளம் கன்னியை  மீண்டும்  உயிர்ப்பித்தருள திருப்பதிகம்  பாடும் போது  இந்த விழாவினை ''கார்த்திகை நாள் தளத்து ஏந்தி இளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு ''   என்று  சிறப்பித்துப் பாடுகின்றார் .

தீபத் திருவிழாவின் உட்பொருள் என்ன?   அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் விளைவதே!...

பிரம்மனும் விஷ்ணுவும் ''நானே பெரியவன்'' என வாதாடி, பல வருடங்கள் போரிட்டனர். இவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான்  இவர்கள் முன் சோதிப் பிழம்பாகத்  தோன்றி, ஜோதியின் அடியையும் முடியையும்  தேடிக் காணும்படி அசரீரியாகக்  கூறினார்.

எனவே ஜோதியின் திருமுடியைக் காண அன்னப் பறவையாய்  பிரம்மன் விண்ணுலகத்தில் தேடினார். ஜோதியின்  திருவடியைக் காண திருமால், வராகமாய் பாதாள லோகம் சென்று  தேடினார். அவர்களால் அடிமுடி காண முடியாதபடி  பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமான். அதனால் இருவரும் சிவபெருமானே முழுமுதல்  என்று ஏற்றுக்கொண்டு, தாம் கண்ட ஜோதியை எல்லோரும் காணும்படி அருள வேண்டும் என்று விண்ணப்பித்தனர். 

தஞ்சை பெரிய கோவிலில் திருஅண்ணாமலை 
அதன்படி சிவபெருமான் திருக்கார்த்திகை  அன்று ஜோதிப் பிழம்பாகக் காட்சியருளினார். இந்த வரலாறு தேவாரம் எங்கும் காணக் கிடைக்கின்றது.

இந்தத் தத்துவத்தை விளக்குவதே அண்ணாமலை தீபம் ஆகும். 

கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள். 

அமரர் இடர் தீர்ப்பதற்கு என்று சிவபெருமான் தன் நெற்றிக் கண்களினின்றும் தோற்றுவித்த ஆறு தீப்பொறிகளும் சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நின்றன. அந்தத்  திருக் குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் அறுவர் தம்  மடியேந்தி பாலுட்டிச் சீராட்டித் தாலாட்டினர். ஆறு குழந்தைகளும் அம்மங்கையரின் அன்பான  அரவணைப்பில் திருமுலைப்பாலுண்டு சரவணப் பொய்கையின் திருக் கரையினில் விளையாடிக் கொண்டிருந்தன.

திருக்குமாரர்களைக் காண என்று சிவபெருமானுடன் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளிய அம்பிகை தன் அன்பு செல்வங்களை  வாரி அணைக்க, ஆறு திருமேனிகளும் ஓருருவாகி ஆறு திருமுகங்களுடன் பேரொளிப் பிரகாச ரூபமாய் தேவியின் திருக்கரங்களில்  எழுந்தருளியது. ஐயனும்  அம்பிகையும்  கந்தனுடன் திருக்கயிலை மாமலைக்குத் திரும்பும் முன் கந்தனைக் கனிவுடன் பாராட்டிப்பாலூட்டி வளர்த்த  மங்கையர் அறுவர்க்கும் அருள் பாலிக்கச் சித்தம் கொண்டனர்.

அந்த மங்கையரும் சிவ சக்தியைப் போற்றிப் பணிந்து நின்றனர்.

சிவபெருமான் அவர்களை  நோக்கி "உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்! கார்த்திகை பெண்களாகிய  உங்களால் வளர்க்கப்பட்ட  எங்கள் செல்வன் கார்த்திகேயன் என்ற திருப்பெயருடன் மக்களால் வழிபடப்படுவான். நீங்கள் அறுவரும் ஒருங்கிணைந்து கார்த்திகை நட்சத்திரமாகத் திகழ்வீர்களாக!.. கார்த்திகை நாளில் கார்த்திகேயனை வணங்குவோர் எண்ணியதெல்லாம் ஈடேறப்பெறுவர். இக்கார்த்திகை நன்னாளில் கார்த்திகேயனைப் போற்றி விரதமிருந்து  வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டுவதாகுக!" என்று திருவாய் மலர்ந்தருளினார். 

இது கந்த புராணம் நமக்குக் காட்டும் நிகழ்ச்சி.  

இறைவனை நாளும் நல்ல விளக்கேற்றி வழிபடுவது நமது நாட்டில் தொன்று தொட்டு வரும் பழக்கம். அது என்றென்றும் நலம் தரும் என்பது நம் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை  .

முதல்நாள் பரணி தீபம். மறுநாள் திருக்கார்த்திகை தீபம்  கார்த்திகை அன்று பகலில் விரதம் இருந்து மாலையில் வீட்டினுள் - பூஜை அறை, கூடம்  எல்லா இடங்களிலும் திருவிளக்குகளை ஏற்றவேண்டும். வீட்டு  வாசலிலும், மாடத்திலும், (இன்று புதிதாகக் கட்டப்படும் வீடுகளில் தலை வாசலின் இருபுறமும் மாடம் அமைப்பதே இல்லை) வீட்டில் கொல்லைப்புறம் இருந்தால் அங்கும்,   கிணற்றடியிலும்,   சிறு விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். திருவிளக்கிற்கு பூஜை செய்து அதன் பிறகே உணவு உண்ண வேண்டும்.  

கார்த்திகை அன்று  இந்தத் திருவிளக்கின் சுடர்கள்அசைந்தாடி இல்லம் எங்கும் பிரகாசிப்பதைக் காணும் போது மகிழ்ச்சியுடன்   பக்தியும் தெய்வீகமும்  விளங்கும்

கார்த்திகை தீபத்தன்று திருண்ணாமலையின் உச்சியில்  மகா தீபம் ஏற்றப் படுகிறது. மிகப்பெரிய கொப்பரையில் 24 முழம் நீளமுடைய  துணியில்  கற்பூர தூளை சேர்த்து வைத்து சுருட்டி திரியாக்கப்படும். கொப்பரையில் நெய் வார்த்து இந்த சுடர் எரிக்கப்படுகிறது. இந்தப் பெருஞ்சுடர் நான்கு, ஐந்து  நாட்களுக்கு எரியும். 60 கி.மீ. தூரம் வரை இந்த சுடர் ஒளி தெளிவாகத் தெரிகின்றது. 

சிவ, விஷ்ணு ஆலயங்களின் முன்புறத்தில் வாழை மரத்தை நட்டு, அதனை சுற்றி அடைத்த தென்னை மட்டைகளுக்கு  கருவறையிலிருந்து   எடுத்து வந்த ஜோதியால் அக்கினியிடுவர். தீ மூண்டு சோதி வடிவாகத் திகழும். சிவபெருமான் ஜோதிப் பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர்.   இறைவனின்  ஒளி வடிவத்தை '' சொக்கப்பனை ''  உணர்த்தும்.   

சிவபெருமான், தன் முறுவலால் முப்புரங்களையும் எரித்து திரிபுர தகனம் நிகழ்த்தியதும், அம்பிகை இறைவனை வேண்டித் தவமிருந்து இடப்பாகம் பெற்றதும் இந்த நன்னாளில் தான் என்பது ஐதீகம்.  
 
ஜோதிமலையாய், அருணாசலமாய் விளங்குவது  திருஅண்ணாமலை.  அனற்  பிழம்பாக எம்பெருமான் எழுந்தருளிய மலை   திருஅண்ணாமலை.  

யோகியர், சித்தர்கள், தவஞானியர் வாழ்ந்த மலை திருஅண்ணாமலை. இன்றும் அவர்கள் வாழ்கின்ற மலை திருஅண்ணாமலை. தன்னை நாடி வந்தவர்களுக்கு மட்டுமன்றி நினைத்தவர்க்கெல்லாம் நல்லருள் வழங்கும் மலை திருஅண்ணாமலை.. 

ஜாதி,சமய, இன,மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் முக்தி அருளும் மலை திருஅண்ணாமலை. முழுநிலா அன்று மக்கள் - வெள்ளமென வலம் வந்து வணங்கும்  மலை திருஅண்ணாமலை.

உண்ணாமுலை உ மையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம்  அறுமே!...
                                                                - திருஞான சம்பந்தர்.   

தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையும்  ஆட்கொள்வர்
ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நமது உள்ள வினைகளே!...
                                                                - திருநாவுக்கரசர்.

அண்ணா மலைஎம் அண்ணா போற்றி!...
கண்ணார் அமுதக் கடலே போற்றி!..
                                                              - மாணிக்கவாசகர். 

திருஅண்ணாமலைக்கே உரிய அற்புதத்  திருவிழா தீபத் திருவிழா.                  
திருவிளக்கின் பிரமாண்ட வடிவமே  அண்ணாமலை தீபம்.
Image - Thanks to Google
விளக்கேற்றி வைப்போம் ..... நம் இல்லத்திலும் .....உள்ளத்திலும்!...

ஞாயிறு, நவம்பர் 25, 2012

கார்த்திகை சோமவாரம்

சோமவாரம்.. பேச்சு வழக்கில்  திங்கட்கிழமையை இவ்விதம் குறிப்பர். திங்கட்கிழமையில் அமாவாசை வந்தால் அதற்கு ஒரு சிறப்பு!...சோமவார அமாவாசை என்று .. 

திங்கட்கிழமையில் பிரதோஷம் வருமாயின் சனிப்பிரதோஷம் போன்று சோம வாரப் பிரதோஷம் என தனிச் சிறப்பு.. எல்லா பிரதோஷ வழிபாட்டின் போதும் சிவபெருமான் எழுந்தருளியுள்ள மூலத்தானம் எனும் கருவறையை வலம் வருவதே வித்தியாசமாக இருக்கும். 

நந்தியம்பெருமானை வணங்கி வலமாக நடந்து வடக்கு புறத்தில் சண்டேசர் சன்னதியில் நின்று அபிஷேக தீர்த்தம் வழியும் கோமுகத்தைத் தாண்டாமல் திரும்பி வந்த வழியே நடந்து, இந்த முறை  நந்தியம்பெருமானை வணங்கி அப்பிரதட்சிணமாக சண்டேசர் சன்னதி வரை சென்று கோமுகத்தைத் தாண்டாமல் வணங்கி திரும்பவும்  நந்தியம்பெருமானிடம் வந்தால் அந்த வலமானது (C) சந்திர பிறையைப் போல விளங்கும்.  இதை சோமசூத்திரம் என்பர். சிவாலயத்தில்  பிரதோஷ தினத்தில் மட்டுமே  சோமசூத்திர வலம் செய்து வணங்க  வேண்டும்.  இது இப்படி இருக்க ..

கார்த்திகை மாத திங்கட்கிழமைகள் எல்லாமே வெகு சிறப்பானவை.. அந்த தினங்களில் சிவபெருமான் உறையும் திருக்கோயில்கள் எல்லாவற்றிலுமே சோமவார வழிபாடுகள் நிகழும். அதிலும் குறிப்பாக சங்காபிஷேகம் விசேஷமானது. திருக்கோவில்களின் சூழ்நிலைக்கேற்ப 108 அல்லது 1008 என சங்குகளில் வெட்டிவேர், விளாமிச்சை, பன்னீர், ரோஜா, ஏலம் என பல்வகைப்பட்ட வாசனாதி திரவியங்களில் நிறைந்த நன்னீரை நிரப்பி ஆகம முறைப்படி பூஜித்து அந்த நீரைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வர்.  

அந்தி நேரத்தில் நிகழும் இந்த  சங்காபிஷேகத்தை கண்டு தரிசிப்பதையும் அபிஷேக தீர்த்தத்தை தம் மேல் தெளித்துக் கொள்வதையும் அன்பர்கள் பெரும் பாக்கியமாகக்   கருதி மகிழ்வர். 

இறைவன் சோமசுந்தரர் எனத் திருப்பெயர் கொண்டு திகழும் ஒப்பற்ற திருத்தலம் மதுரையம்பதி. வியாழசோமேசர் எனத் திருப்பெயர் கொண்டு விளங்கும் தலம்  திருக்குடந்தை எனப்படும் கும்பகோணம்.

திருவிடைமருதூர், திருக்கடவூர், திருநாகேஸ்வரம், திருவையாறு, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருமயிலை, திருவொற்றியூர் - என  எல்லாத்  திருக்கோயில்களிலும் சிறப்பான  முறையில் சங்காபிஷேகம் நடத்தப் படுகின்றது.

இந்த திருத்தலங்களை விட மாறுபட்ட ஒரு திருத்தலம்  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து 12 கி.மீ. தொலைவில்  திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில்  தாமரங்கோட்டைக்கு அடுத்து  உள்ளது. அந்தத் திருத்தலம் பெரிய கட்டுமானங்களுடன் கூடிய கோயில் அல்ல. ஆனால் கார்த்திகை மாத சோம வாரங்களில் ஆயிரம் ஆயிரமாக மக்கள் திரளும் ஒரு திருத்தலம். கார்த்திகையில் விடாது பெருமழை பெய்தாலும் மக்கள் மனம் சலியாது கூடி நின்று கும்பிட்டு மகிழும் திருத்தலம். 

இறைவனுக்கு லிங்கத் திருமேனி கூடக் கிடையாது. அம்பாள் கூட  அருகில் இல்லை. பிள்ளையாரோ முருகனோ சண்டிகேசுவரரோ யாரும் கிடையாது. ராஜ கோபுரமோ, திருச்சுற்று மாளிகையோ, ஆடம்பர விதானங்களோ, அலங்கார மண்டபங்களோ கிடையாது. பிறகு  என்னதான் அங்கே விசேஷம்?..

ஆலமரம். பிரமாண்டமான ஒற்றை ஆலமரம்... அதுவும் வெள்ளை நிற ஆலமரம்... 

அதன் முன்பாக நெடுங்காலமாக வீற்றிருக்கும் நந்தியம் பெருமான்.. ஆலமரத்திற்கு  பிற்காலத்தில்  எழுப்பப்பட்ட ஒரு  சுற்றுச் சுவர். கிழக்குப் பக்கமாக   ஒரு சிறிய கதவு.. அப்படியானால் இறைவன் எங்கே ஐயா?.

இறைவன் தான் ஆலமர வேரில் இருக்கிறாரே !... என்னது?...

ஆம்!...ஆதி வழிபாடு!...

உருவமா?..அருவமா?.. ஆலமரத்தின் கீழ் கிழக்குப் பக்கமாக இரண்டடி உயரத்திற்கு சிவலிங்கம் போல ஆலமரத்தின் வேர் திரண்டுள்ளது.  அதுவே.. அந்த இயற்கையே சிவலிங்கம்.. இந்த சிவலிங்கத்திற்கு ஒவ்வொரு  வாரமும்  திங்கட்கிழமை மட்டும் இரவு பத்தரை மணிக்கு மேல் தில்லை திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்து நடை அடைத்த பிறகு,  இங்கே வழிபாடுகள் நடைபெறும். இந்த ஒருவேளை பூஜையை  தவிர்த்து  மற்ற நாட்களில் எந்த வழிபாடுகளும் கிடையாது. 

இந்த சிவலிங்கத்தை வருடத்தில் ஒரு  நாளாக தை மாதம் முதல் நாள் பொங்கலன்று  பகலில் மட்டுமே (சூர்ய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை) தரிசனம் செய்ய முடியும். இந்த சுவாமியின் திருப்பெயர்  பொதுஆவுடையார். திருத்தலத்தின் பெயர் பரக்கலக்கோட்டை. 

இந்த ஆலமரத்திலிருந்து சற்று அருகில் பெரிய குளம். அதன் கரையில் ஒரு புளிய மரம்  அதன் நிழலில் பானுகோபர், மகாகோபர்  என இரண்டு முனிவர்கள். அவர்களுக்கு இடையே - இல்லறம் சிறந்ததா? துறவறம்  சிறந்ததா?  - எனப் பிரச்னை !... இது தில்லையில் இறைவனிடம் போயிற்று..  ஈசன் சொன்னார்... உங்கள் பிரச்னையை எதிர்வரும் சோம வாரத்தன்று தில்லையில் அர்த்தஜாம பூஜை முடிந்த பின் வெள்ளால  மரத்தின் கீழிருந்து தீர்த்து வைக்கின்றேன்  என்று ...

அதன்படியே ஈசன் வந்தார். விசாரித்தார். அதற்கு சாட்சியாக பிள்ளையார் வந்தமர்ந்தார். ஈசன் தீர்ப்பு வழங்கினார்... என்னவென்று?.... இல்லறத்தில் துறவறம் சிறந்தது என்று ...

திருப்தியுற்ற  முனிவர்கள் ஈசனை வழிபட்டு மகிழ்ந்தனர்.. அந்த வழக்கமே இன்றும் இரவு பத்தரை மணிக்கு மேல் பூஜை தொடர்கிறது. ஈசன் விசாரித்து தீர்ப்பு சொன்னதால் பொதுஆவுடையார் என்றும் மத்யஸ்தபுரீஸ்வரர் என்றும்  திருப்பெயர்.

பொதுஆவுடையார் சுவாமியை நினைத்தபடி விபூதியை எடுத்து நோயுற்ற கோழி ஆடு மாடு எருமை - என எந்த உயிரினத்திற்கு பூசினாலும் சரி... அவை நோயில் இருந்து மீள்கின்றன... எனவே அவை உயிருடன் காணிக்கை ஆகின்றன.. கால்நடைகள் சுகமாக கன்று ஈனவும்   பால் பெருக்கத்திற்கும்  அருள்கிறார். விபூதியை எடுத்து விளை நிலங்களில் வீச நெல் முதலான தானியங்களையும், மா, பலா, தென்னை முதலான மரங்களையும் காப்பாற்றுகிறார். மக்களின் பிணியினைத் தீர்த்து கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார். 

எனவே மக்களின் அன்பும் காணிக்கையும் மலை எனக் குவிகின்றது. காணிக்கை என -  கால்நடைகள்  மந்தை மந்தையாகத் திரள்கின்றன. 

பெருமழை பெய்தாலும் மக்கள் நனையாதிருக்க பிரமாண்டமான பந்தலிட்டு கொடுக்கின்றனர் நிர்வாகத்தினர். 

வாருங்கள்... சோமவாரத்தில் அருள்மிகு பொதுஆவுடையார் சுவாமியை தரிசிப்போம்...

அன்பே அகல் விளக்கு!... மனமே காணிக்கை!...

வெள்ளி, நவம்பர் 23, 2012

கங்கை காவிரி கார்த்திகை


தமிழ் வருடத்தில் எட்டாவது மாதம். இதன் முதல் நாளே ஒரு சிறப்பான நாள்.  பொதுவாக  காவிரி, கங்கை முதலான நதிகளில் நீராடுவது புண்ணியம். கங்கையே காவிரியாக -  காவிரியே , கங்கையாக விளங்கும் ஒரு திருத்தலம்.. அது  எது?

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா?....  என்ற சொல் வழக்கு தஞ்சை மாவட்டத்தில் மிக பிரசித்தமானது. என்ன காரணம்?...

ஒரு சமயம் கங்கை தன்னால்தான் மக்களின் பாவங்கள் தொலைகின்றன என்று எண்ணி கர்வம் கொண்டாள். அந்த எண்ணத்தால் கங்கை பொலிவிழந்தாள்.. தன் எண்ணத்தால் விளைந்த பாவம் நீங்க இறைவனை நாடி பிராயச்சித்தம் அருளுமாறு கங்கை பணிந்து நின்றாள்.. கங்கையின் பிரார்த்தனைக்கு இரங்கிய ஈசன்  மயிலாடுதுறை காவிரியில் துலா ஸ்நான கட்டத்தில் நீராடும்படி ஆணையிட்டார்.

முன்னொரு சமயம்  காவிரி செய்த தவத்தின் பொருட்டு அம்பிகை மயிலாக உருமாறி காவிரிக் கரையினில் சிவ வழிபாடு செய்தனள். அம்பிகையின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் தானும் மயிலாகத் தோன்றி உமாதேவியுடன் ஆனந்தமாக ஆடி மகிழ்ந்தார்.. அந்தத் தாண்டவமே மயூர தாண்டவம். ஈசனும் அம்பிகையும் மயிலாகத் தாண்டவமாடிய  தலமே மயிலாடுதுறை. 

ஈசன் ஆணையிட்டபடி இந்த தலத்தில் கங்காதேவி துலா மாதமாகிய  ஐப்பசியில் காவிரி நீராடி மயூரநாதரைப் பணிந்து வணங்கி பாவம் நீங்கினாள் என்பதும், ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை காவிரியை விட்டுப் பிரியாமல் அவளுடனேயே பிரவாகமாகி கலந்திருப்பதாகவும் ஐதீகம்... 

அதன்படி ஐப்பசி முழுதும் மக்கள் காவிரியில் நீராடி மயூரநாதரைப் பணிந்து வணங்கத் தலைப்பட்ட வேளையில், வெகு தொலைவில் இருந்து காவிரியில் நீராடுதற்காக திரண்ட அடியார்களுள் நடக்க இயலாத ஏழை ஒருவரும் தன் அளவில் முயற்சிக்க - ஐப்பசி கடைசி நாளும் ஆகிவிட்டது.. 

உடன் வந்தவர்கள் விரைவாய் சென்றுவிட நடக்க இயலாதவர்  நிலை பரிதாபமானது.. மனம் உடைந்த அவர் கண்ணீர் மல்கி கசிந்து உருகினார். ஐப்பசி கடைசி நாள் மாலைப் பொழுதுக்குள்  காவிரியில் நீராட இயலாத தன் நிலையை எண்ணிக் கதறினார்.. ஏழை அழுத  கண்ணீர் ஈசனின் திருவடிகளை நனைத்தது.. அன்பே  வடிவான சிவமும் அந்த ஏழைக்கு அருள் பொழிய நினைத்தது.

ஈசன் அடியவர் முன் தோன்றி, '' வருந்தற்க...நாளை கார்த்திகை முதல் நாள் உம் பொருட்டு கங்கை காவிரியிலேயே கலந்திருப்பாள்...நீராடி மகிழ்க..'' என்று அருள் புரிய, அது முதற் கொண்டு கார்த்திகையின் முதல் நாளும் புனித நாளாயிற்று.

அதன்படி ஐப்பசி தொடங்கி கார்த்திகை முதல் நாள் (முடவன் முழுக்கு) வரை பாவங்கள் விலகி புண்ணியங்கள் பெருகும்படிக்கு காவிரியே கங்கையாகத் திகழ்கிறாள்..
 
கார்த்திகையில் திருவண்ணாமலை தீபத்திருவிழா! 


அண்ணாமலைக்கு அரோகரா! என்று ஜோதி வடிவாய்த் திகழும் அண்ணா மலையாரைத் தரிசிக்கவும், வீட்டில்  வரிசை  வரிசையாய் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடவும் ஒட்டு மொத்த தமிழகமும் உற்சாகத்துடனும் பேராவலுடனும் காத்திருக்கும் மாதம் - கார்த்திகை மாதம் 

அதிலும் குறிப்பாக... கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமைகளில், சோமவார தரிசனம்  சிவாலயங்களில் சிறப்பான அபிஷேக அலங்காரங்கள், சுவாமி ஊர்வலம்
என கோலாகலமாக நிகழ்கின்றன. அந்த நாட்களில் வீட்டில் திருவிளக்கேற்றி வைத்து, திருவிளக்கின் முன் அமர்ந்து தேவாரம், திருவாசகம், சிவபுராணம், திருவிளையாடற் புராணம் முதலான ஞான நூல்களைப் படிப்பதும், கேட்பதும் மிகவும் சிறப்புடையது..

இதனால், நம் நெஞ்சில் இருள்  நீங்கி ஞான ஒளி பிறக்கும். இல்லத்தில் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகி துன்பங்கள்- கவலைகள் யாவும் தொலைந்து போகும்.

கார்த்திகை முதல் நாள்..

ஸ்ரீஐயப்பனுக்கு  மாலையணிந்து ''ஓம்...ஸ்வாமியே சரணம் ஐயப்பா!...'' என்று விரதம் துவங்குகிற அற்புத நாள்!

வழக்கமாக விரதம் ஏற்று சபரி மலைக்குச் சென்று தரிசனம் செய்யும் ஐயப்ப பக்தர்கள் மறுபடியும் மாலையணிவதற்குக் காத்திருக்கும் நாள் கார்த்திகை முதல் நாள்.. எல்லா விரதங்களும் எல்லா நியமங்களும் வலியுறுத்தும் ஒரே விஷயம்.... நீயே கதி என்று அவனைச் சரணடைதல்...அப்படிச் சரணடைபவர் முன் - இறைவன் ஜோதியாய் சுடராய் தோன்றுகின்றான்... என்பதே!...

 வழி காட்டும் வள்ளல் பெருமக்கள் கூறுவதும் இதைத் தான்!...

''தூண்டு சுடரனைய சோதி கண்டாய்'' - திருநாவுக்கரசர் .
''சுடுமால் எரியாய் நிமிர் சோதியனே'' - திருஞானசம்பந்தர்.
''பண்ணார் இன்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே'' - சுந்தரர்.
 
''சோதியனே...துன்னிருளே.. தோன்றாப் பெருமையனே'' - மாணிக்கவாசகர்.
''தீப மங்கள ஜோதி நமோ நம...''  - அருணகிரிநாதர்.

''வந்து உதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில்'' - அபிராமி பட்டர். 
''அருட்பெரும் ஜோதி..அருட்பெரும் ஜோதி.." - வள்ளலார்.

திருச்சிற்றம்பலம்!...

வியாழன், நவம்பர் 22, 2012

முதல் வணக்கம்


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேன்!. 
திருமூலர்
 
எல்லாருக்கும் எல்லா நலன்களையும், இக பர செளபாக்கியங்களையும் வாரித் தரும் வள்ளல் விநாயகப் பெருமானை இந்த வேளையில் மனம் நிறைய வணங்கிக்கொள்கின்றேன்...

வெகு நாளைய கனவு... நாமும் ஒரு வலைத்தளம் எழுத வேண்டும் என்று.. 

என்ன எழுதுவது என்பதை விட - எதற்கு எழுதுவது? என்ற வினா தான் பாடாகப் படுத்தியது. எப்படியோ துணிந்து விட்டேன். 

இனி.... அவ்வப்போது பகிர்ந்து கொள்வேன்...

நவீன தொழில் நுட்ப உலகில் இப்படியொரு வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தவர்கள் அனைவருக்கும் நன்றி... 

Thanks to Google!..

இது ஒரு தொடக்கம் தான்!.... அன்பினோர் எல்லாருக்கும் வணக்கம்!...  



திருக்கயிலாய மாமலையில் - அம்மையும் அப்பனும் ஆனந்தத் திருக்கோலம் கொண்டு - பிரணவ உருவமாய்ப் பொருந்திய வேளையில்,

ஒளியிலிருந்து ஒலியாக - ஓம் - எனுத் தோன்றியவர் விநாயகப் பெருமான்..

பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதி வரஅருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே!..

சிவபெருமான் தன்னை வழிபடுபவர் தம் இடரைக் களைவதற்காக யானை உருக்கொண்டு உமையன்னையுடன் கணபதியைத் தோற்றுவித்தார்!..

- என்று, திருஞானசம்பந்தர் தமது திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.

கஜமுக அசுரனை அழிப்பதற்காக சிவபெருமான் கஜமாமுகனைப் படைத்தார் என்பதனை -

''கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலும்
கயாசுரனை அவனாற் கொல்வித்தார் போலும்''

- என்று திருநாவுக்கரசரும் திருவீழிமிழலைத் திருப்பதிகத்தில் பரவுகின்றார்.

இத்திருக்குறிப்புகளினால் யானைமுக அசுரனை அழித்து அடியவரைக் காப்பதற்கே விநாயகர் தோன்றினார் என்பது நாம் கொள்ளத்தக்கது.

எளிமையே வடிவானவர் விநாயகப்பெருமான்.

நாம் அந்த எளிமையையே மனதில் சொல்லில் செயலில் கொண்டு, அவரை வழிபட நம்முள் பண்பும் பணிவும் மிகுத்து வரும் வண்ணம் நல்லருள் புரியும் நாயகன் அவர்.

பண்பும் பணிவும் நம்முள் பூத்து மலருங்கால் அந்தப் பூவாகிய இதயக் கமலத்துள் தாமே வந்தமர்ந்து நமக்கு நற்கதியினை அருள்கின்றார்.

முழுமுதற் பொருளாகிய வேழமுகத்தவனுக்கு மோதகம் சமர்ப்பித்து சரணடைய - பாதகம் எல்லாம் சாதகமாகும் என்பது ஐதீகம்.

விநாயகர் வழிபாடு தொன்மையானது.

ஆதியிலிருந்தே உள்ளது என்றும் -

மகேந்திர பல்லவனின் படைத்தளபதியான பரஞ்சோதி வடக்கே படை நடத்திச் சென்று வாதாபி என்னும் நகரை வெற்றி கொண்டபின் அங்கிருந்த கணபதியின் திருவடிவத்தை, பல்லவனின் வெற்றிக்கு அடையாளமாகத் தமிழகத்துக்குக் கொண்டு வந்து,

அதனை தனது சொந்த ஊராகிய திருச்செங்காட்டங்குடியில் எழுந்தருளச் செய்து வழிபட்டார். எனவே,

பரஞ்சோதியால்  தோன்றியது தான் விநாயகர் வழிபாடு என்றும் கூறுவர்.

இவரே பின்னாளில் ''சிறுதொண்டர்'' எனச் சிறப்பு பெற்று நாயன்மார்களுள் இடம் பெற்றவர்.

எது எப்படியோ!...

சிறு குழந்தைகள் முதல் பழுத்த பெரியோர் வரை அனைவருக்கும் இஷ்ட தெய்வமாக விளங்குபவர் விநாயகர்.

கஷ்டத்திலும் நஷ்டத்திலும் கை கொடுத்து - துக்க சாகரத்திலிருந்து நம்மைக் கரையேற்றிக் காத்தருள்பவர் விநாயகப்பெருமான்!. அதனால் தானே...  

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை 
கணபதி என்றிடக் காலனும் கை தொழும் 
கணபதி என்றிடக் கருமம் ஆதலால் 
கணபதி என்றிடக் கவலை தீருமே!... 

என்று பழந்தமிழ்ப் பாடலொன்று பகர்கின்றது. கவலையும் கஷ்டமும் நீங்கி விட்டால் கலையும் திறனும் சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றன.

அந்த நிலை கைகூடி வர - தமிழ் மூதாட்டியான ஒளவையார் நமக்கு வழிகாட்டுகின்றார். 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை 
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய் 
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு 
சங்கத்தமிழ் மூன்று தா!...

என்ற தீந்தமிழ்ப்பாடல் எல்லாருக்கும் விருப்பமான பிரார்த்தனைப் பாடல்களுள் ஒன்று.

விநாயகருடைய திருநட்சத்திரம் ''ஹஸ்தம்'' எனவும் ராசி ''கன்னி'' எனவும் கூறுவர். விநாயகருடன் ஐந்து மிகவும் தொடர்புடையது.

ஐந்து கரங்களும், அவர் இயற்றும் ஐந்தொழில்களும், ஐந்து முகங்களுடன் ஹேரம்ப கணபதியாக விளங்கும் திருத்தோற்றமும் இதனைப் புலப்படுத்தும். இவருடைய திருப்பெயர்களுள் பதினாறு சிறப்புடையன.

கணபதி தோத்திரங்களுள் ஆதிசங்கரர் அருளிய - ''முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்'' - எனத் துவங்கும் ''கணேச பஞ்சரத்னம்'' நல்ல தாளக்கட்டுடன் கேட்பவரை பரவச நிலைக்கு இட்டுச் செல்லும்.

ஒளவையார் அருளிய ''விநாயகர் அகவல்'' - எனும் ஞானநூலைத் தினமும் பாராயணம் செய்வோர்க்கு பலப்பல நன்மைகள் விளைவது கண்கூடு.

அருளும் பொருளும் அருளும் விநாயக மூர்த்தியை பொருளுணர்ந்து வணங்கி மேலும் செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்...சிந்திப்போம்...

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயகா விரைகழல் சரணே!..
* * *