நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 31, 2020

வடிவேல் முருகா வருக..

ஸ்ரீ கந்த சஷ்டிக் கவசம்!..

துதிப்போர்க்கு வல்வினை போம்.. துன்பம் போம்!...
நூற்பயனை சொல்லிக் கொண்டு தொடங்கும் அற்புதப் பனுவல்..

கந்த சஷ்டிக் கவச பாராயணத்தால் விளையும் 
நன்மைகளைக் கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை..

சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன் 
தேவராய ஸ்வாமிகளின் திருவாக்கில் விளைந்த ஞான நூல்..

கந்த சஷ்டிக் கவசம் சித்தியாகி விட்டால்
கோள்கள் மற்றும் கொடுநோய்கள் குறித்து அஞ்ச வேண்டியதில்லை..

ஏனெனில் -
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்!.. - என்பது நூற்குறிப்பு..

தற்போது நம்மைச் சூழ்ந்துள்ள
கால நிலையை உத்தேசித்தால்
நமக்குக் கந்த சஷ்டிக் கவசமே காப்பு..
கந்தன் திருவடிகளே பாதுகாப்பு!...
***

ஸ்ரீ தேவராய ஸ்வாமிகள் அருளிய 
கந்த சஷ்டிக் கவசம்..

துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம்
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்
கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும்
நிமலர் அருள் கந்த சஷ்டிக் கவசந்தனை

அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி..


சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதி வேலோன்
பாதமி ரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி ஆட
மையல் நடனஞ் செயும் மயில் வாகனனார்
கையில் வேலால் எனைக்காக்க என்றுவந்து
வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹண பவனார் சடுதியில் வருக

திருஆவினன்குடி 
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விண்பவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிரநிர நிரென 
வசர வணப வருக வருக
அசுரர் குடி கெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளி ஐயும்
நிலைபெற்றென் முன் நித்தம் ஒளிரும்
சண்முகன் ஸ்ரீயும் தனியொளி ஒவ்வும்
குண்டலியாம் சிவகுகன் தினம் வருக


ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திரு வயிறுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணை முழந்தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
 ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

ஸ்ரீ ஸ்வாமிநாதன் 
என்றனை ஆளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்று
உன் திருவடியை உறுதி என்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனித வேல் காக்க
கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க
விதி செவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

ஸ்ரீ ஓதிமலை ஆண்டவன் (சத்தியமங்கலம்) 
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேல் இருதோள் வளம் பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

ஸ்ரீ குமாரஸ்வாமி - பண்மொழி
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க
முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை கையிரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் என்னை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வஜ்ரவேல் காக்க
அரையிருள் தன்னில் அணையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க

திருச்செந்தில்நாதன் 
தாக்க தாக்கத் தடையறத் தாக்க
பார்க்கப் பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வாலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம்ம ராக்ஷதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அன்னரும்
கனபூசை கொளும் காளியோட னைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட

பழனியம்பதி வாழ் பாலகுமரன் 
ஆனை அடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பல கலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சணமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலறிக் குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய் விட்டலறி மதி கெட்டோட
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

திருப்பரங்குன்றம் 
குத்து குத்து கூர்வடிவேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
விடுவிடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந்தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்து யரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம்
சூலை சயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல் விப்பிருதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅரை யாப்பும்

ஸ்ரீ குமரகோயில் - (குமரி மாவட்டம்)
எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்னும் அனைவரும் எனக்கா
மண்ணாள் அரசரும் மகிழ்ந்து றவாகவும்
உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரவண பவனே சைலொளி பவனே
பரிபுர பவனே பவம் ஒழி பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ் சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர் வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே
இடும்பனை அழித்த இனிய வேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா

விராலிமலை 
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழனிப் பதிவாழ் பாலகுமரா
ஆவினன்குடி வாழ் அழகிய முருகா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமராபுரி வாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என் நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனை
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை
நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாசவினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் ரக்ஷி அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக வேலா யுதனார்
சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்




வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்
பெற்றவள் குறமகள் பெற்ற வளாமே
பிள்ளை யென்றன்பாய் பிரியம் அளித்து
 மைந்தனென் மீதுன் மனமகிழ்ந்தருளித்
தஞ்சம் என்றடியார் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
நேசமுடன் ஒரு நினைவது வாகி
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு


ஓதியே செபித்து உகந்து நீறணிய
அஷ்டத் திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்னர் எண்மர் செயலது அருளுவர்
மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்
நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்
 எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாற் காண் வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்ட லக்ஷ்மிகளில்
வீரலட்சுமிக்கு விருந்துணவாகச்
சூரபத்மாவைத் துணிந்த கையதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்த முதளித்த
குருபரன் பழனிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்ய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோர் அரசே
மயில் நடமிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்...
சரணம் சரணம் சண்முகா சரணம்!..
***

முருகா சரணம் முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்.. 
ஃஃஃ

திங்கள், மார்ச் 30, 2020

சிவமே சரணம் 6


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பிணியும் பகையும் நீங்கிட வேண்டும்..
***
நாளும் பாராயணம் செய்வோர் தம் வாழ்வில்
நலம் பல சேர்க்கும் அற்புதத் திருப்பதிகம்..

ஸ்ரீ கமலாம்பிகை உடனாகிய ஸ்ரீ தியாகேசர்
திரு ஆரூர் 

இன்றைய பதிவில்
ஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த
அஞ்செழுத்துத் திருப்பதிகம்..


திருக்கடவூர் வீரட்டம் 
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்திலும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சகம் அற்று அடிவாழ்த்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே.. 1

மந்திர நான்மறை ஆகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே.. 2

ஸ்ரீ கற்பகவல்லி உடனாகிய ஸ்ரீ கபாலீஸ்வரர்
திரு மயிலை  
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்து
ஏனை வழிதிறந்து ஏத்துவார்க்கு இடர்
ஆன கெடுப்பன அஞ்செழுத்துமே.. 3

நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்ல நமன்தமர் கொண்டு போமிடத்து
அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே.. 4

கொங்கலர் வன்மதன் வாளிஐந் தகத்து
அங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில்
தங்கரவின் படம் அஞ்சும் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செழுத்துமே.. 5


ஸ்ரீ மனோன்மணி அம்பிகை உடனாகிய ஸ்ரீ சந்த்ரசேகரர்
உவரி 
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினை அடர்த்தெய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்செழுத்துமே.. 6

வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாடொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடி உகப்பன அஞ்செழுத்துமே.. 7

வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டை இராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்செழுத்துமே.. 8

ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனாகிய ஸ்ரீ பூவணநாதர்
கோயில்பட்டி  
கார்வணன் நான்முகன் காணுதற் கொணா
சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணம் ஆவன அஞ்செழுத்துமே.. 9

புத்தர் சமண் கழுக்கையர் பொய்கொளாச்
சித்தத்த வர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணிவார் வினைப் பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே.. 10

நற்றமிழ் ஞான சம்பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்து
உற்றன வல்லவர் உம்பர் ஆவரே..11


திருச்சிற்றம்பலம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

ஞாயிறு, மார்ச் 29, 2020

மகமாயி வருக 1

மங்கலங்கள் தந்தருளும்
ஸ்ரீ மாரியம்மன் திருவடிகளுக்கு
எளியேன் தொடுத்த தமிழ் மாலை
இன்றைய பதிவில்..
***

மாயி மகமாயி..
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே..
ஆஸ்தான மாரிமுத்தே..


மங்கலங்கள் தந்திடுவாள் மண் விளையச் செய்திடுவாள் 
என்று வரும் மக்களுக்கு ஆறுதலும் சொல்லிடம்மா...
ஆனைமுகன் ஓடிவந்து அன்னை என்று தானழைக்க
ஆறுமுகன் மடிதவழும் அற்புதமாய் வந்திடம்மா!...

வெள்ளியில பிரம்பெடுத்து வீதிவழி வருபவளே..
தங்கத்தில பிரம்பெடுத்து தான் நடந்து காப்பவளே..
தஞ்சமென்று தவிக்குதம்மா தனித்திருந்து துடிக்குதம்மா...
தஞ்சம் ஒன்று அளித்திடவே தங்கமாரி வந்திடம்மா!...


வேப்பிலையை வீசி வரும் வித்தகியே மாரியம்மா
மஞ்சள் முகம் பூசி வரும் மாதரசி மாரியம்மா..
செந்தூரப் பொட்டுடனே செண்பகத்துப் பூமுடித்து
சிங்காரமாகி வரும் செல்லமுத்து மாரியம்மா!...


நாங்கள் உந்தன் மக்கள் என்ற நல்ல சொல்லும் மெய்யாகும்
  நல்ல சுடர் விளக்கினிலே எங்கள் அன்பு நெய்யாகும்..
சுற்றி வரும் பிணிகள் எல்லாம் அக்கினியில் தீயாகும்
வஞ்சகமும் கொடும்பகையும் வாழ்விழந்து பொய்யாகும்!..

தஞ்சை ஸ்ரீ முத்துமாரியம்மன் 
பூங்கரகம் ஏந்தி வரும் பொன்மகளே மாரியம்மா
பூவெடுத்து வணங்கி நின்றோம் புன்னை வன மாரியம்மா..
தங்கமுகம் காட்டிடுவாய் தஞ்சை முத்து மாரியம்மா
முன்நடந்து காத்திடுவாய் முத்தழகு மாரியம்மா!...

நாடிவந்து நடை கிடந்தோம் நாடிமுத்து மாரியம்மா
நல்ல துணை ஆகிடுவாய் பட்டுக்கோட்டை மாரியம்மா..
பக்கத்தினில் இருந்திடுவாய் பந்தலடி மாரியம்மா
தேறுதலும் தந்திடுவாய் தேரடியில் மாரியம்மா!...

கை விளக்கு ஏந்தி வந்தோம் கரம்பயத்து மாரியம்மா
வரும் பயத்தைத் தீர்த்திடுவாய் வடிவழகு மாரியம்மா..
அன்னை முகம் பார்த்திருந்தோம் ஆதிமுத்து மாரியம்மா
உன்னை நெஞ்சில் வைத்திருந்தோம் வண்ணமுத்து மாரியம்மா!..


வஞ்சகத்தை அறுப்பவளே வண்டியூரில் மாரியம்மா
நெஞ்சகத்தில் இருப்பவளே நின்று அருள் கொடுப்பவளே
தொல்லை வினை தீர்ப்பவளே தெப்பக்குள மாரியம்மா
தண்டெடுத்துக் காப்பவளே தஞ்சமொன்று அளிப்பவளே!..

உன்னிடத்தில் சொல்லாமல் யாரிடத்தில் சொல்லுவது
உந்தன் துணையில்லாமல் எப்படித்தான் வெல்லுவது...
வாடிவரும் மக்களைத்தான் வலங்கையில் காப்பவளே
தேடிவரும் மக்களைத்தான் தீவினையில் மீட்பவளே!..


குடந்தை நகரினிலே படைவெட்டி மாரியம்மா
குழந்தைகள் நலங்காக்க தடைவெட்டி வாடியம்மா..
கோடிமுத்து மணி விளக்காய் முகங்காட்டி நடந்து வர
ஓடி இற்று விழுந்தழியும் உயிர் குடிக்கும் கிருமிகளும்..

குடமுருட்டிக் கரையினிலே குலங்காங்கும் கோமளமே
வீரசிங்கன் பேட்டையிலே வெற்றி வடிவானவளே..
வந்தவர்க்கு பசி தணிக்கும் தங்க முத்து மாரியம்மா..
வந்து பிணி தீரடியோ திருவிளக்கு மாரியம்மா...

ஸ்ரீ சமயபுரத்தாள் 
சமயபுர நாயகியே சஞ்சலங்கள் தீர்ப்பவளே
சாம்பிராணி வாசத்திலே சந்நதமும் கொடுப்பவளே...
கண்ணபுர நாயகியே.. கைகொடுத்துக் காப்பவளே
காலடியில் சரணடைந்தோம் சங்கடங்கள் தீர்த்திடுவாய்...

ஸ்ரீ வெக்காளியம்மன் - உறையூர் 
மக்கள் நிழல் நின்றிருக்க வெயிலிருக்கும் வெக்காளி
வந்து வரம் தந்திடம்மா நல்ல குறி சொல்லிடம்மா..
திக்கு திசை நடுநடுங்க திரிசூலக் கூர்முனையால் 
வஞ்சினத்து நோய்க்குறியை வெந்தணலில் தள்ளிடம்மா 

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் 
சிறுவாச்சூர் மாரியம்மா பெரும் பேரும் கொண்டவளே
சீறிவரும் சிங்கத்துடன் சீக்கிரத்தில் வாடியம்மா...
சின்னமணிச் சதங்கை எல்லாம் சிங்காரப் பாட்டிசைக்க
வந்தபிணி தீர்த்திடம்மா வாழ்வளித்துக் காத்திடம்மா..


கருமாரி உருமாறி கனக மணி தரும் மாரி
வேற்காட்டு எல்லையிலே வினையோட்டும் புகழ் மாரி..
அருள்மாரி ஆனவளே அஞ்சு குடை நாகவல்லி
ஆதரிக்க வேணுமம்மா அல்லலையும் தீர்ப்பவளே.. 

ஸ்ரீ வீரமாகாளி
என்னையும் ஏந்திக் கொண்ட என் அன்னை 
வீரமா காளியம்மா.. வெற்றி தரும் நீலியம்மா
சூழ்பிணியைத் தீர்த்திடவே சுற்றி வர வேணும் அம்மா...
கொப்புடைய நாயகியே குலங்காக்க வாடியம்மா
வெப்புடைய பிணிதீர்க்கும் திருவுடைய கோடியம்மா...

சின்ன முத்து பெரிய முத்து மாரி என்று வந்தவளே
சிந்தித்தவர் நெஞ்சத்திலே சீர்கொடுத்து நின்றவளே..
உன்னையன்றி ஒருதுணையும் ஊர்காக்க இல்லையம்மா
வந்து எங்கள் பிழைபொறுத்து வாழ்வருள வேணுமம்மா.. 

கோலவிழி மாரியம்மா குங்குமத்து தேவியம்மா..
ஆயிரங்கண் உடையவளே ஓங்கார நாயகியே
பரிதவித்து ஓடி வந்தோம் நேச முத்து மாரியம்மா
தேடி உன்னைச் சரணடைந்தோம் தேச முத்து மாரியம்மா..

ஸ்ரீ பேச்சியம்மன் 
ஊரெல்லாம் சந்நதிகள் ஒய்யார மண்டபங்கள்..
பேர் கொண்டு இருப்பவளே பெரும் பேச்சி ஆனவளே...
உனைக் கடந்து வந்ததுவோ ஊர் முழுக்க ஒருபிணியும்
கூர் கொண்டு அழித்திடம்மா ஆருயிரைக் காத்திடம்மா...

அஞ்சேல் என்று வந்த ஆரணங்கு
ஸ்ரீ பிடாரியம்மன் - குரால் நத்தம் (சேலம்) 
எல்லையிலே பிடாரி இளங்காளி ஆனவளே
எல்லாமும் அறிந்தவளே இந்தப் பிணி தான் எதற்கு?..
எங்கள் வழி பார்த்திடம்மா.. இன்னுயிரைக் காத்திடம்மா
எந்தப் பிழை என்றாலும் உந்தன் மனம் பொறுத்திடம்மா..

உந்தன் முகம் மறந்த குறை உருக்கொண்டு வந்ததுவோ
ஊர் முழுதும் வாடிடவே வக்கிரத்தில் நின்றதுவோ..
எந்தப் பிழை ஆனாலும் வந்த வினை தீர்த்திடம்மா
நல்லவர்கள் பூசையிலே நன்மைகளைத் தந்திடம்மா...

சூலத்தினில் பிடாரி சூட்சுமங்கள் ஆனவளே
சுற்றிவரும் பிணி முடித்து வெற்றி நடம் ஆடிடம்மா..
மஞ்சளுடன் வேப்பிலையாய் முன் நடக்க வேணுமம்மா
     பீடைகளை அரிந்தெடுத்து பிள்ளைகளைக் காத்திடம்மா..


தங்கக் கவசத்தில்
எங்கள் முத்து மாரியம்மன் 
எலுமிச்சம் மாலையுடன் எங்கள் குறை மாற்றிடம்மா..
வேப்பிலையை வீசி நடந்து வேதனையைத் தீர்த்திடம்மா..
நாடெங்கும் காத்திடவே எங்கள் முத்து மாரியம்மா
நல்ல தமிழ் சொல்லி வைத்தேன் நான் வணங்கும் மாரியம்மா!...

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

சனி, மார்ச் 28, 2020

ஸ்ரீ வேங்கடேச சரணம் 2

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பிணியும் பகையும் தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
திருமங்கையாழ்வார் அருளிச் செய்த
பெரிய திருமொழி
முதற் பத்து - பத்தாம் திருமொழி

ஸ்ரீ கோதண்டராமன் தில்லை விளாகம்
(திருத்துறைப்பூண்டிக்கு அருகில்)
கண்ணார்க் கடல்சூழ் இலங்கைக் கிறைவன் தன்
திண்ணாகம் பிளக்கச் சரம் செலவுய்த்தாய்
விண்ணோர்த் தொழும் வேங்கடமா மலைமேய
அண்ணா அடியேன் இடரைக் களையாயே.. {1038} 

இலங்கைப் பதிக்கு அன்றீறையாய அரக்கர்
குலங்கெட்டவர் மாளக் கொடிப்புள் திரித்தாய்
விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய
அலங்கல் துளப முடியாய் அருளாயே..{1039}

ஸ்ரீ கோதண்டராமன் - வடுவூர்
(மன்னார்குடிக்கு அருகில்)
நீரார்க் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏரால மிளந்தளிர் மேல்துயில் எழுந்தாய்
சீரார் திருவேங்கடமா மலைமேய
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே..{1040}

உண்டாய் உறிமேல் நறுநெய்அமுதாக
கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே
விந்தோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா அடியேனுக்கு அருள் புரியாயே..{1041}

ஸ்ரீ நரஸிம்ம மூர்த்தி - நாமக்கல் 
தூணாயதனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்
சேணார் திருவேங்கட மாமலை மேய
கோணா கணையாய் குறிக்கொள் எனைநீயே.. {1042}

மன்னா இம்மனிசப் பிறவியை நீக்கி
தன்னாகித் தன்னினருள் செய்யும் தலைவன்
மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய
என்னானை என்னப்பன் என்னெஞ்சில் உளானே.. {1043}

மானேய்மட நோக்கித் திறத்து எதிர்வந்த
ஆனேழ்விடைசெற்ற அணிவரைத் தோளா
தேனே திருவேங்கடமா மலைமேய
கோனே என்மனம் குடிகொண்டிருந்தாயே..{1044}

சேயன் அணியன் என் சிந்தையுள் நின்ற
மாயன் மணிவாள் ஒளிவெண் தரளங்கள்
வேய் விண்டுதிர் வேங்கட மாமலை மேய
ஆயன் அடியல்லது மற்ற றியேனே.. {1045}


வந்தாய் என்மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழுஞ்சுடரே எங்கள் நம்பி
சிந்தாமணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனியான் உன்னை விடேனே.. {1046}

வில்லார்மலி வேங்கட மாமலை மேய
மல்லார்த்திர தோள் மணிவண்ணன் அம்மானை
கல்லார்த்திர தோள் கலியன் சொன்னமாலை
வல்லாரவர் வானவராகுவர் தாமே..{1047}


ஓம் ஹரி ஓம் 
நமோ நாராயணாய..
ஃஃஃ