நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 22, 2022

ஏழூர் பெருமை 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
திருமழபாடியில் பங்குனி புனர்பூசத்தில் நந்திகேசனுக்கும் சுயம்ப்ரகாஷினி தேவிக்கும் திருமணம் நிகழ்ந்த பின் திரு ஐயாறு சித்திரைத் திருவிழாவில் விசாகத்தை அனுசரித்து நிகழும் ஏழூர் வலம் தான் சப்த ஸ்தானம் எனப்படுவது..

நந்தீசனும் தேவியும்

இத்திருவிழா ராஜராஜ சோழரின்  பட்டத்தரசியாகிய உலகமாதேவியார் அவர்களால் தொடங்கி வைக்கப் பெற்றதாக சொல்லப்படுகின்றது..

ஆகையால் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து விளங்கும் பெருவிழா என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்..

ஆயினும், பன்னெடுங்காலமாகவே புகழ்  பெற்று விளங்கும் திருத் தலங்கள்  இவை என்பதில் ஐயமில்லை..  

சப்த ஸ்தானத் தலங்கள் அனைத்துமே பாடல் பெற்றவை எனில் அவற்றின் தொன்மை விளங்கும்..

சப்த ஸ்தானத் தலங்கள் எனப்படும் ஏழூர்கள்..
1. திரு ஐயாறு
2. திருப்பழனம்
3. திருச்சோற்றுத்துறை
4. திருவேதிகுடி
5. திருக்கண்டியூர் வீரட்டம்
6. திருப்பூந்துருத்தி
7. திருநெய்த்தானம்

இவற்றுள் திரு ஐயாறு, திருப்பழனம், திருநெய்த்தானம்
ஆகிய மூன்று தலங்களும் காவிரியின் வடகரைத் தலங்கள்.. ஏனையவை காவிரியின் தென்கரைத் தலங்கள்..

இவை ஏழினையும் ஒருங்கே தரிசித்து திருப்பதிகம் அருளிச் செய்திருப்பவர்
அப்பர் ஸ்வாமிகள்..

திரு ஐயாற்றில் இருந்து ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகி பல்லக்குடன் நந்தீசன் பல்லக்கும் புறப்படும் போது இரண்டு.. 

திருப்பழனத்திற்கு வந்து அங்கிருந்து புறப்படும் போது  மூன்று பல்லக்குகள்..

அவை காவிரி, குடமுருட்டி ஆறுகளைக் கடந்து திருச்சோற்றுத் துறைக்கு வந்ததும் அங்கிருந்து நான்கு..

அவை திருவேதிகுடிக்கு வந்ததும் அங்கிருந்து ஐந்து..

திருக்கண்டியூரில் இருந்து புறப்படும் போது ஆறு..

திருப்பூந்துருத்தியில் இருந்து புறப்படும் போது ஏழு.. 

பல்லக்குகள் ஏழும் குடமுருட்டி மற்றும் காவிரி ஆறுகளைக் கடந்து திருநெய்த்தானத்தை வந்தடைந்து  அங்கிருந்து புறப்படும்போது எட்டு.. எட்டு பல்லக்குகளையும் ஏக காலத்தில் தரிசிப்பது சிறப்பிலும் சிறப்பு.. நம்மையும் இறைவன் தரிசிக்க வைத்திருக்கின்றான்..


இவ்வேளையில் -
நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம்
ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யங்களைத் தந்தருள வேண்டும்என்று பிரார்த்தித்துக் கொள்வோம்..

இன்னும் பத்து நாட்களில் காவிரியில் நீரோடும்..


 ஓம்
பறையும்பழி பாவம்படு
துயரம் பலதீரும்
பிறையும்புன லரவும்படு
சடையெம்பெரு மானூர்
அறையும்புனல் வருகாவிரி
அலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில்
நெய்த்தானம் எனீரே.. 1/15/2
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

சனி, மே 21, 2022

ஏழூர் விழா 4

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஏழூர் பல்லக்குகள் இன்றும் தொடர்கின்றன.. 
(விடாது கருப்பு!..  என்பது உண்மை தானோ!..)

என்ன செய்வது?... எல்லாப் படங்களையும் நீங்கள் பார்த்துத் தான் ஆக வேண்டும்!..

இன்றைய பதிவில்,
திருநெய்த்தானம் கோயிலுக்குள் பல்லக்குகள் கடைக் காலில் நிறுத்தப் பட்டிருப்பதைக் காணலாம்..


பல்லக்கு திருப் பாதந்தாங்கிகளைப் பதிவில் சேர்க்க இயலாமல் போனது மிகவும் வருத்தம்.. எதிர்வரும் காலத்தில் அவர்களையும் பதிவில் சேர்ப்பதற்கு ஐயாறப்பர் அருள் புரிய வேண்டும்...

நண்ணியொர் வடத்தி னிழல் நால்வர்முனி வர்க்கன்று
எண்ணிலி மறைப் பொருள் விரித்தவர் இடஞ்சீர்த்
தண்ணின்மலி சந்த கிலொடு உந்திவரு பொன்னி
மண்ணின்மிசை வந்தணவு வண் திருவையாறே.. 2/32/4..
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வெள்ளி, மே 20, 2022

ஏழூர் விழா 3

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
முந்தைய பதிவுகளின் தொடர்ச்சியாக -
ஏழூர் பல்லக்கு விழாவில் 
திருச்சோற்றுத்துறை காட்சிகள்..


இன்றைய பதிவில் கோயிலின் முன்பாக பல்லக்குகள் கூடுவதையும் கோயிலுக்குள் செல்வதையும் இயன்ற வரை காட்டியுள்ளேன்..

எல்லாப் பல்லக்குகளின் பக்கவாட்டிலும் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் - என, சான்றோர்களின் ஓவியங்கள் கவினுற அமைக்கப்பட்டிருப்பது கண்டு இன்புறத்தக்கது..

பிறைதரு சடையின் மேலே பெய்புனல் கங்கை தன்னை
உறைதர வைத்த எங்கள் உத்தமன் ஊழி யாய
நிறைதரு பொழில்கள் சூழ நின்றநெய்த் தானம் என்று
குறைதரும் அடியவர்க்குக் குழகனைக் கூடலாமே.. 4.37.3
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***