நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஆகஸ்ட் 31, 2013

ஸ்ரீ கிருஷ்ண தரிசனம்

ஸ்ரீமத் பகவத் கீதை

பத்தாவது அத்யாயம் - விபூதி யோகம்.

மகாகவி சுப்ரமணிய பாரதியார் வழங்கிய விளக்க உரையை அடியொற்றி வரையப்பட்டது!.. பிழை இருப்பின் பொறுத்து அருள வேண்டுகின்றேன்!..

பக்தியுடன் தியானம் செய்வதற்காக இறைவனின் பெருமை - விபூதி யோகத்தில் விரித்துக் கூறப்படுகின்றது. 

இறைவனே எல்லாவற்றிற்கும் பிறப்பிடம். அவனிடமிருந்தே எல்லாம் வெளிப்பட்டன. அவனே அனைத்திற்கும் முன்னோன்.  அவன் பிறப்பிலன். 

ஒவ்வொன்றிலுமிருந்தும் சிறந்தவை எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. இறைவனின் பெருமையைத் தனித்தனியே முற்றிலும் கூறுவது இயலாத காரியம்.  அசையும் பொருள்  அசையாப் பொருள் எதுவானாலும் இறைவனை விட்டுத் தனித்து நிற்க முடியாது. 

 

போர் முனையில் உற்றார் உறவினரைக் கண்டு சோர்வடைந்து விழுந்த அர்ச்சுனனைத் தட்டி எழுப்பி - அவன் மனம் தெளிவு பெறும்படிக்கு அருளிய பகவான், மேலும் சொல்லுகிறான்: 

 

பெருந்தோளுடையாய், பின்னுமோர் முறை நான் சொல்லப் புகும் மிகவுயர் சொல்லினைக் கேட்பாயாக!.. நீ எனக்கு உகந்தவன். ஆதலால், உனது நலம் வேண்டி,  இங்கு அதனை உனக்கு விளம்புவேன்.(1)

வானவர்கள் என் மகிமையை உணரார். பெருந்தகை முனிவரும் உணரார். ஏனெனில் அவர்களுக்கு  எல்லாவிதங்களிலும் ஆதி நானே.(2)

பிறப்பற்றவன், அநாதியானவன், உலகங்களுக்குத் தலைவன் என்று மயக்கம் தீர்ந்த – தெளிந்த அறிவுடன் - எவர் அறிகின்றாரோ அவர் பாவம் அனைத்தினும் விடுதலைப்பட்டவராவார்.(3)

மதியும், ஞானமும், மயக்கமின்மையும், பொறுமையும், வாய்மையும், அடக்கமும், அமைதியும், இன்பமும், துன்பமும், உண்மையும், இன்மையும், அச்சமும், அஞ்சாமையும்,(4)

துன்புறுத்தாமையும், நடுநிலைமையும், மகிழ்ச்சியும், தவமும், ஈகையும், புகழும், இகழும் - உயிரினங்களுடைய வெவ்வேறான இயல்புகளும் என்னிடமிருந்தே உண்டாகின்றன.(5)

முன்னை மகரிஷிகள் எழுவரும் நான்கு மனுக்களும் - தம் மனத்தால் என்னியல்பு எய்தினர். அவர்களுடைய மரபினரே இம்மக்களெல்லாரும்!.(6)

எவன் என்னுடைய இத்தகைய  பெருமையையும் யோகந்தனையும்  உள்ளபடி உணர்கின்றானோ - அவன் அசைவில்லாது யோகத்தில் அமர்கிறான். இதில் ஐயமில்லை.(7)


நான் அனைத்திற்கும் தொடக்கம். என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது இதனைப் புரிந்து கொண்ட அறிஞர்கள்,  நம்பிக்கையும் பக்தியும் கொண்டு என்னைத் தொழுவார்.(8)

அகத்தினை என்பால் வைத்து,  உயிரை என்னுள்ளே புகுத்தி-  தமக்குள்  விளக்கிக் கொண்டும் என் புகழைப் பேசிக்கொண்டும் எப்போதும் என்னிடமே இன்புறுகின்றார்கள்.(9)

எப்போதும் யோகத்தில் இருந்து  அன்புடன் என்னை வழிபடும் அவர்களுக்கு,  எந்த உபாயத்தின் மூலம் என்னை அடைவார்களோ அந்த ஞான வடிவாகிய யோகத்தை அளிக்கின்றேன்.(10)


அவர்களுக்கு இரங்கி, அவர்கள் உள்ளத்தில் - நிலைத்து நின்று , அறியாமை எனும் இருளை - ஒளிமயமான ஞான விளக்கினால் நானே அழிக்கின்றேன்.(11)

அர்ஜுனன் சொல்லுகிறான்: நீயே பரப்பிரம்மம். நீயே பரவீடு. நீயே தூய்மை. அனைத்தினுஞ் சிறப்புடைய தூய்மை . நின்னையே நித்திய புருஷன் என்றும், ஆதிதேவனென்றும், பிறப்பிலானென்றும், இறைவன் என்றும்,(12)

முனிவரெல்லாம் மொழிகின்றனர். நாரதரும் அவ்விதமாகவே நவில்கிறார். அசிதரும் தேவலரும் வியாசரும் அங்ஙனமே செப்புகிறார். இங்கு,  நீ - அதையே  எனக்கு நேரில் உரைக்கின்றாய்!.(13)

கேசவா! எதை என்னிடம் கூறுகிறாயோ - அவை அனைத்தும் உண்மையே என்று எண்ணுகிறேன். பகவானே! உன்னுடைய ஸ்வரூபத்தை அசுரர்கள் அறிந்து கொள்ளவில்லை. தேவர்கள் கூட அறிந்து கொள்ளவில்லை!.(14)

புருஷோத்தமா, உன்னை - நீயே அறிவாய்! பூதங்களானாய்! பூதத் தலைவனே! தேவ தேவ! வையத்தின் இறைவா!.(15)

எந்த மகிமைகளால் நீ இவ்வுலகங்களைச் சூழ்ந்து நிற்கிறாயோ, அந்த மகிமைகள் தெய்வத் தன்மையுடையன. அவற்றை எனக்கு மிச்சமின்றி உணர்த்த வேண்டுகிறேன்!.(16)

யோகியே! எவ்வாறு , உன்னை எப்போதும் தியானித்து  நான் உணர்வேன்? பகவனே! என்னால் தியானிக்குமாறு - எந்தெந்த ஸ்வரூபங்களில் இருக்கின்றாய்?.(17)

ஜனார்த்தனா!.. உன்னுடைய யோகத்தையும் பெருமையையும் விரிவாக மற்றொரு முறை சொல்க!. ஏனெனில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை. அமுதம் போன்ற சொற்களை மேலும் கேட்க வேண்டும் போல இருக்கிறது!. (18)

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: குரு குலத்தில் சிறந்தவனே! என் பெருமைகள் தெய்வாம்சம் உடையன. அவற்றுள் பிரதானமானவற்றை உனக்குச் சொல்லுகிறேன். எனது விஸ்தாரத்துக்கு முடிவே இல்லை!.(19)

அர்ஜுனா, உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான். அவ்வுயிர்களின் ஆதியும் நான்!. இடையும் அவற்றின் இறுதியும் யானே!.(20)


ஆதித்யர்களில் விஷ்ணு.ஒளிகளில் - கதிர்களுடன் கூடிய சூரியன். வாயு தேவர்களில் மரீசி. நக்ஷத்ரங்களுள் சந்திரன்.(21)

வேதங்களில் யான் சாமவேதம். தேவரில் இந்திரன். புலன்களில் மனம். உயிர்களிடத்தே உணர்வு நானே!.(22)

ருத்திரர்களில் சங்கரன். இயக்கர் அரக்கருள் யான் குபேரன். வசுக்களில் தீ. மலைகளில் மேரு.(23)

பார்த்தனே!. புரோகிதர்களின்  தலைவன்  பிரகஸ்பதி நான். சேனாதிபதிகளில் நான் கந்தன். நீர் நிலைகளில் கடல்.(24)

மகரிஷிகளில் பிருகு. வாக்குகளில்  ஓம் எனும்  ஓரெழுத்து  நானே!.  யக்ஞங்களில் ஜப யக்ஞம். மலைகளில்  இமாலயம். (25)

மரங்களில் அரசமரம். தேவரிஷிகளில் நாரதன். கந்தர்வருள்ளே சித்ர ரதன். சித்தர்களில் கபில முனி.(26)

குதிரைகளிடையே அமிர்தத்தில் பிறந்த உச்சை சிரவம்.  யானைகளில் ஐராவதம். மனிதரில் அரசன். (27)


ஆயுதங்களில் வஜ்ரம். பசுக்களில் காமதேனு. பிறப்பிப்போரில் மன்மதன். பாம்புகளில் வாசுகி.(28)

நாகர்களினிடையே அநந்தன். நீர் வாழ்வோரில் வருணன். பிதிர்களில்  அரியமான். அடக்கி ஆள்பவர்களில் யமன்.(29)

அசுரரில் பிரகலாதன். இயங்குனவற்றில் காலம். விலங்குகளில் சிங்கம். பறவைகளில் கருடன்.(30)

தூய்மை செய்வனவற்றுள் காற்று. ஆயுதம் தரித்தோரில்  ராமன். மீன்களில் சுறா. ஆறுகளில் கங்கை.(31)

படைப்புகளின் ஆதியும் அந்தமும் நடுவும் நானே!. அர்ஜுனா! வித்தைகளில் அத்யாத்ம வித்தை. பேசுவோரிடையே நானே பேச்சு!.(32)

எழுத்துகளில் அகரம். புணர்ப்புகளில் இரட்டைப் புணர்ப்பு. அழிவற்ற காலம் நானே! எல்லா பக்கங்களிலும் முகம் கொண்ட விராட ஸ்வரூபனும், எல்லாவற்றையும் சுமப்பவனும் நானே!.(33)
 
எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் நானே!. எதிர்காலப் பொருள்களின் பிறப்பு நானே!. பெண்களிடத்தில் நானே கீர்த்தி, வாக்கு, நினைவு, மேதை ஸ்திதி, பொறை.(34)

அங்ஙனமே, சாமங்களில்  பிருகத்சாமம். சந்தஸ்களில்  காயத்ரி. மாதங்களில் மார்கழி. பருவங்களில் இளவேனில்.(35)

வஞ்சகரின் சூது நான். ஒளியுடையோரின் ஒளி நான். நானே வெற்றி.  நானே நிச்சயம். உண்மையுடையோரின் உண்மையும் நானே!.(36)

விருஷ்ணி குலத்தாரில்  வாசுதேவன். பாண்டவர்களில் தனஞ்ஜயன். முனிகளில் வியாசன். கவிகளில் சுக்கிர கவி.(37)

ஆள்வோரிடத்தில் நானே செங்கோல். வெற்றியை விரும்புவோரிடத்தில் நீதியும் நியாய உணர்வும் நான். ரகசியங்களில் நான் மௌனம்! ஞானம் உடையோரிடத்தில் ஞானம் நானே!.(38)

மேலும் அர்ஜுனா!.. எல்லா உயிர்களிலும் விதை எதுவோ அது நானே!.. நான் இன்றி எது இருக்கக் கூடுமோ அத்தகைய - அசையும், அசையாததுமான பொருட்கள் எதுவும் இல்லை!.(39)

எதிரிகளைச் சரங்களால்  சுடுபவனே! என் திவ்ய மகிமைகளுக்கு முடிவே இல்லை!. பெருமைகளில் இந்த விரிவும் கூட ஓரளவுதான் என்னால் கூறப் பட்டது!.(40)

எவை எவையெல்லாம்  - பெருமையுடையதோ, உண்மையுடையதோ, அழகுடையதோ, வலிமையுடையதோ  -அவையெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்ததென்றுணர்!.(41)

அன்றியும், அர்ஜுனா!.. இதைப் பலவாறாகத் தெரிந்து கொள்வதில் உனக்குப் பயன் யாது?.. நான் இந்த உலகனைத்தையும் எனது சக்தியின் ஓர் அம்சத்தால் தாங்கிக் கொண்டு இருக்கிறேன்.(42)

இங்ஙனம் கண்ணனுடைய பெருமைகளைக் கேட்ட அர்ஜுனன் அவற்றை நேரில் காண வேண்டுமென்ற விருப்பமுற்று வேண்ட, கண்ணன்  அவற்றைக் காண்பதற்குரிய திவ்ய நேத்திரங்களை அளிக்கின்றான். அர்ஜுனன் அவற்றால் கண்ணனுடைய விஸ்வ ரூபத்தைக் கண்டு மகிழ்கிறான்.அநேக முகங்களுடனும், பற்பல ஆயுதங்களுடனும், சிறந்த ஆடை ஆபரணங்களுடனும் திகழ்ந்த  - விஸ்வரூபம் நறுமணம் கமழ விளங்கியது. 

விஸ்வரூபத்தில் வையம் முழுதும் ஒருங்கே அடங்கியிருப்பதைக் கண்ட அர்ஜுனன் வியப்புற்று - மயிர் சிலிர்த்து, தலை வணங்கிக் கைகளைக் கூப்பிக் கொண்டு சொல்லுகின்றான். 

வானத்துக்கும் பூமிக்கும் நடுவேயுள்ள இடைவெளியும் எல்லாத் திசைகளும் நின்னால் நிரம்பியிருக்கின்றன. உன்னுடைய அற்புதமும் உக்கிரமுமான இவ்வடிவத்தைக் கண்டு மூன்று உலகங்களும் சோர்வெய்துகின்றன.

இந்த வானவர் கூட்டமெல்லாம் நின்னுள்ளே புகுகின்றது. சிலர் அச்சமெய்தி நின்னைக் கைகூப்பிப் புகழ்கின்றனர். மகரிஷிகளும் சித்தர்களுமாகிய கூட்டத்தார் நின்னைப் புகழ்ந்துரைக்கின்றார்.

பெருந்தோளாய், பற்பல முகங்களும், விழிகளும், கைகளும்,கால்களும்,  வயிறுகளும், பயங்கரமான பற்களும் உடைய நின் பெருவடிவினைக் கண்டு, உலகங்கள் நடுங்குகின்றன!.. யானும் அங்ஙனமே!..

உக்கிர ரூபந் தரித்த நீ யார்? எனக்குரைத்திடுக!. தேவர்களில் சிறந்த நின்னை வணங்குகிறேன். அருள்புரிக!. ஆதியாகிய உன்னை அறிய விரும்புகிறேன். இங்கு உனது தொழிலை அறிகிலேன்!..

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: உலகத்தை அழிக்கத் தலைப்பட்ட காலமே நான் மனிதர்களை இங்குக் கொல்லத் தொடங்கியுள்ளேன். இங்கு இரு திறத்துப் படைகளிலே நிற்கும் போர் வீரர்கள் அனைவரினும் உன்னைத் தவிர வேறு யாரும் மிஞ்சமாட்டார்கள்  .

ஆதலால் நீ எழுந்து நில்!. புகழெய்து!. பகைவரை வென்று,   ராஜ்யம் செழிக்க ஆள்வாயாக!.. நான் இவர்களை ஏற்கெனவே கொன்று விட்டேன்!.. இடக் கையினால் காண்டீபத்தினை ஏந்தும் வீரனே!..  வெளிக் காரணமாக மட்டுமே, நீ  நின்று - உன் தொழிலைச் செய். 

கேசவன் சொல்லியதைக் கேட்ட விஜயன் தேகம் நடுங்க அஞ்சலி புரிந்தான். மீண்டும் கண்ணனை நமஸ்காரம் செய்து, அச்சத்துடன் வாய் குழறி வணங்கிச் சொல்லுகிறான்.


நீ ஆதிதேவன்!.. தொல்புகழோன்!.. நீ இந்த அகிலத்தின் பரம நிலையம்!. நீயே அறிவோன்!.. நீயே அறிபடு பொருள்!.. நீயே பரமபதம்!.. அநந்த ரூபா!.. நீயே இவ்வுலகினுட் பரந்து கிடக்கிறாய்.

உன்னை முன்புறத்தே வணங்குகிறேன்!.. உன்னைப் பின்புறத்தே வணங்குகிறேன்!. எல்லாமும் ஆவானே!. உன்னை எப்புறத்தும்  வணங்குகிறேன்!. நீ எல்லையற்ற வீரியமுடையாய்!. அளவற்ற வலிமையுடையாய்!.. சர்வத்திலும் நிலைத்திருக்கிறாய்!. ஆதலால் நீயே சர்வன்!.

இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல், நின்னைத் தோழனென்று கருதித் துடிப்புற்று, ஏ.. கிருஷ்ணா! ஏ.. யாதவா! ஏ.. தோழா! என்று தவறுதலாகவும் அன்பாகவும் அழைத்திருப்பதையும், விளையாடும்போதும், உறங்கும் போதும், உண்ணும்போதும், தனியிடத்தேனும் அன்றி மற்றவர் முன்னேயெனினும் நான் உனக்கு வேடிக்கையாகச் செய்திருக்கும் அவமதிப்புகளையும்  பொறுத்தருளும்படி வேண்டுகிறேன். அளவற்றோய்!..

சராசரமாகிய இவ்வுலகத்துக்கு நீ தந்தையாவாய். இவ்வுலகத்தால் தொழத்தக்கனை நீயே!..  மிகச் சிறந்த குரு நீயே!. உனக்கு நிகர் யாருமில்லை. எனில் உனக்கு மேல் வேறுயாவர்?.. மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே!

உன்னைப் பணிந்து வணங்கி, நின்பால் அருள் கேட்கிறேன். ஈசனே!.. வேண்டுதற்குரியாய்!..  மகனைத் தந்தை போலும், தோழனைத் தோழன் போலும்  அன்பனை அன்பன் போலும் நீ என்னைப் பொறுத்தல் வேண்டும்.

இதற்கு முன் காணாததை இன்று கண்டு மகிழ்ச்சியுறுகிறேன். எனினும் என் மனம் அச்சத்தால் சோர்கின்றது. தேவதேவா! எனக்கு நின் முன்னை வடிவத்தைக் காட்டுக!.

- என்று வேண்டிக்கொள்ள,

அதன் பேரில், கண்ணன் தமது விஸ்வரூபத்தைச் சுருக்கிக் கொண்டு, முன்போல் கைகளில் சாட்டையும் சங்கு, சக்கரங்களையுமேந்தி நின்று, தமது உண்மையான வடிவத்தைக் காட்டி, 

தம்மைக் காணவும், தம்மைப் பெறவும் பக்தி ஒன்றே சிறந்த வழி. ஆதலால் தம்மையே நேசித்திருக்கும்படி அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறான். 


கண்ணனின் பாஞ்சன்னியம் முழங்குகின்றது!.. 
பார்த்தனின் தேவதத்தம் ஒலிக்கின்றது!..

 

பார்த்தசாரதி தேரினை இயக்க,  
பார்த்தனின் காண்டீபம் எழுகின்றது!.. சரமழை பொழிகின்றது!.. 
நிமலனாகிய ஸ்ரீ கிருஷ்ணன் நினைத்தது நடக்கின்றது!..

பரித்ராணாய ஸாதூ⁴நாம் விநாஸா²ய ச து³ஷ்க்ருதாம்|
த⁴ர்மஸம்ஸ்தா²பநார்தா²ய ஸம்ப⁴வாமி யுகே³ யுகே³ ||4-8||

நல்லோரைக் காக்கவும் தீயன செய்வோரை அழிக்கவும் 
அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கின்றேன்!

எங்கெல்லாம்  யோகேஸ்வரக் கிருஷ்ணனும் 
வில்லினையேந்திய விஜயனும்  இருக்கின்றார்களோ -
அங்கெல்லாம் திருவும் ஆக்கமும் வெற்றியும் ஐஸ்வர்யமும்
நிலை தவறாத நீதியும் நிலைத்து இருக்கும்!..

சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்!..

புதன், ஆகஸ்ட் 28, 2013

ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி

என்ன தவம் செய்தனை!..

இயற்றியவர் :  ஸ்ரீமான் பாபநாசம் சிவன் (1890 - 1973)
ராகம் - காபி. தாளம்  - ஆதி.என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா

எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை


ஈரேழு புவனங்கள் படைத்தவனை
ஈரேழு புவனங்கள் படைத்தவனை 

ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில்
ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட
ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில்
ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட

ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில்
ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட 
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை!பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள
பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள
பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள
பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ளஉரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாய் கண்ணனை
உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாய் கண்ணனை
உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாய் தாயே
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை!சனகாதியர் தவயோகம் செய்தே வருந்தி
சாதித்ததைப் புனிதமாக எளிதில் பெற
என்ன தவம் செய்தனை!


சனகாதியர் தவயோகம் செய்தே வருந்தி
சாதித்ததைப் புனிதமாக எளிதில் பெற
என்ன தவம் செய்தனை யசோதா!

என்ன தவம் செய்தனை! 

அனைவருக்கும் ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி நல்வாழ்த்துக்கள்!

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!..

கண்ணன் வந்தான்


அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் 
கீதையிலே கண்ணன்!..


பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான்
பாரதத்தில் கண்ணன்!..
 
 
சிறையினிலே தான் அவன் பிறந்தான் 
மழையினில் வேறு மனை புகுந்தான் 
உறவறியாத குழந்தைக்கெல்லாம் 
உறவினனாக அவன் வருவான்!..
 
  
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
 
கேட்டவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாக கண்ணன் வந்தான்

அடையாத கதவிருக்கும் சந்நிதானம்!..
அன்பென்னும் சொல்லிருக்கும் சந்நிதானம்!..

சந்நிதானம்!..
கண்ணன் சந்நிதானம்!..

எங்கிருந்தோ வந்தான்.. 
இடைச்சாதி நான் என்றான்!..
 
 
இங்கிவனை யான் பெறவே 
என்ன தவம் செய்து விட்டேன்!..
கண்ணன்.. எங்கிருந்தோ வந்தான்!..


பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் - கண்ணனால் 
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது!..


நண்பனாய்.. மந்திரியாய்.. நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய்.. பார்வையிலே சேவகனாய்..

கண்ணன்!..

எங்கிருந்தோ வந்தான் 
இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே 
என்ன தவம் செய்து விட்டேன்!..

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!..


செவ்வாய், ஆகஸ்ட் 27, 2013

கண்ணன் வரும் நேரமிது

கங்கைக்கரைத் தோட்டம்  கன்னிப் பெண்கள் கூட்டம் 
கண்ணன் நடுவினிலே!..

கங்கைக்கரைத் தோட்டம்  கன்னிப் பெண்கள் கூட்டம் 
கண்ணன் நடுவினிலே!.. 
காலையிளங் காற்று பாடி வரும் பாட்டு 
எதிலும் அவன் குழலே!..  
 
கண்ணன் முகத் தோற்றங் கண்டேன் 
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்!..
கண் மயங்கி ஏங்கி நின்றேன் 
கன்னிச் சிலையாகி நின்றேன்!..
 
கண்ணன் முகம் கண்ட கண்கள் 
மன்னர் முகம் காண்பதில்லை!..
கண்ணனுக்குத் தந்த உள்ளம் 
இன்னொருவர் கொள்வதில்லை!.. 
(கவியரசர் கண்ணதாசன்)


கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
எண்ணம் என்னும் ஆசைப்படகு செல்லச் செல்ல
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள!..

அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்
ஆசை நெஞ்சை சொல்லப் போனால் அச்சம் அச்சம்
அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில் மிச்சம் மிச்சம்!..
(கவியரசர் கண்ணதாசன்)
 

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டு வரவேணுமடி தங்கமே தங்கம்!..
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்
ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்!.. 

ஆற்றங்கரை அதனில் முன்னம் ஒரு நாள் - என்னை
அழைத்துத் தனியிடத்தில் பேசியதெல்லாம் 
தூற்றி நகர் முரசு சாற்றுவேனென்று 
சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்!.. 


நேரம் முழுதிலும் அப்பாவி தன்னையே - நெஞ்சம் 
நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம்!.. 
தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால் 
பின்னர் தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்!.. 
(மகாகவி பாரதியார்)சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!..

திங்கள், ஆகஸ்ட் 26, 2013

கண்ணன் பிறந்தான்


கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா!..
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறைந்ததம்மா!..

ஒருத்தி மகனாய் பிறந்தவனாம்!..
ஒருத்தி மகனாய் வளர்ந்தவனாம்!
உருவில் அழகாய் மலர்ந்தவனாம்!..
உயிரில் உயிராய் கலந்தவனாம்!.. 

ஆயர் பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ!..
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ!..

குருவாயூருக்கு வாருங்கள்..
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்!..
ஒருவாய் சோறு ஊட்டும் தாய் முன்
உட்கார்ந்திருப்பதைப் பாருங்கள்!..


படிப்படியாய் மலையில் ஏறி
பக்தி செய்தால் துன்பம் எல்லாம்
பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரி!..அட
படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!..


பன்னீர் மலர் சொரியும் மேகங்களே
எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே!..
தென்கோடித் தென்றல் தரும் ராகங்களே
எங்கள் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களே!.

ஏழைக் குசேலனுக்குத் தோழமை தாள் தந்து
வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான்!..
வாழிய பாடுங்கள்.. வலம் வந்து தேடுங்கள்..
வந்து நிற்பான் அந்தக் கண்ணன் என்பான்!..

கேட்டதும் கொடுப்பவனே.. கிருஷ்ணா.. கிருஷ்ணா!..
கீதையின் நாயகனே. கிருஷ்ணா.. கிருஷ்ணா!..
நீயுள்ள சந்நிதியே.. கிருஷ்ணா.. கிருஷ்ணா!..
நெஞ்சுக்கு நிம்மதியே.. கிருஷ்ணா.. கிருஷ்ணா!..
 
நம்பினார் கெடுவதில்லை - நான்கு மறை தீர்ப்பு..
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு..
பசிக்கு விருந்தாவான்.. நோய்க்கு மருந்தாவான்..
பரந்தாமன் சந்நிதிக்கு வாராய் நெஞ்சே!..

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!..

ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013

உவரியில் திருவிழா

உவரி.

கடம்ப மரத்தினடியில்  சிவலிங்கம் தோன்றிய திருத்தலம்.  ஸ்வாமிக்கு சுயம்பு லிங்கம் என்றே திருப்பெயர். இத்திருத்தலத்தில் -


இன்றும் - அரைக்கப்பட்ட சந்தனச் சாந்துதான் - பிரதானமான பிரசாதம்.

ஏன்!..

தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டுமென - எல்லாம் வல்ல சிவம்  - இங்கு நின்று ஒரு திருவிளையாடலை நிகழ்த்தியது.

ஒற்றையடிப் பாதையில் இடையூறாக இருந்தது கடம்ப மரத்தின் வேர் - என எண்ணிய மக்கள் , அதனை வெட்டி - அகற்றியபோது விளைந்த விபரீதத்தின் காரணமாக, வேரிலிருந்து குருதி பெருக - திருமேனி வெளிப்பட்டது. 

அந்த குருதியினை நிறுத்துதற்காக சந்தனம் அரைத்து சாற்றப்பட்டது. இறை நாட்டத்தின் விளைவாக -  இறைவனுக்கு மருந்தாகப் பூசப்பட்ட அந்த சந்தனமே பின்னர் - மக்களுக்கும் மருந்தாகி நிலைத்தது. அதனால் தானே -  


இத் திருத்தலத்தில், பலவகையான நோய்கள் தீர்கின்றதென மக்கள் அலை அலையாக ஆர்ப்பரித்து வந்து ஐயன் ஸ்ரீ சுயம்புலிங்க மூர்த்தியை வணங்கி வழிபட்டு வளமும் நலமும் பெறுகின்றனர்.

அலை அதிரும் வங்கக் கடலில் நீராடிய பின், திருக்குளத்திலும் மூழ்கி எழுந்து - திருக்கோயிலின் அருகே இயற்கையின் அற்புதமாக விளங்கும் நல்ல தண்ணீர் கிணற்றிலும் நீராடி - ஈர உடையுடன் - எம்பெருமானைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு , அவர்கள் திருக்கோயிலின் உள்ளே நுழையும் முன்பே - முதலில் வழங்கப்படுவது சந்தனச் சாந்து!..

திருநீறு - மூலஸ்தான மூர்த்தியைத் தரிசித்த பிறகுதான்!..

ஆண்கள் சட்டை அணிந்து கொண்டு கோயிலுக்குள் வருவதில்லை. அதனால், ஆண்களும் பெண்களும் சகல நோய்களையும் தோஷங்களையும் நீக்கும் சந்தனக் குழம்பினை உடலில் பூசிக் கொள்கின்றனர். நெற்றியில் திலகமாக தரித்துக் கொள்கின்றனர். 


வம்சத்தைக் காத்து அருளும் பெருமானை - கைகூப்பி வணங்கியவாறு, ஆனந்தக் கண்ணீர் பெருக - சுயம்பு லிங்க ஸ்வாமியின் சந்நிதியில் தம்மை மறந்து நிற்கின்றனர். 

குலம் காக்கும் தெய்வம் அல்லவா!.. ஆத்மார்த்தமான அன்பு பரிமாற்றம் ஆகின்றது!.. கடந்து வந்த பாதையில் - மலையாய் நின்ற துன்பம் எல்லாம் பெருமானின் திரு அருளால் பொடியாய்ப் போனதை உணர்கின்றனர். 

மேனி சிலிர்க்க, கண்கள் பனிக்க, பார்த்த விழி பார்த்தபடியே - பரவசம் மேவி, சொல்வதற்கு ஏதும் இன்றி,  சிவானந்தப் பெருவெளியில் திளைக்கின்றனர்.

எந்த வினையானாலும் வந்த வழியே போய் விடுகின்றது!..

மனநோயால் பீடிக்கப்பட்டவர்களும் பேய் பிசாசு என தீய மாந்திரீகத்தால் பீடிக்கப்பவர்களும் 41 நாட்கள்  - இங்கே தங்கி வழிபட - தொல்லைகள் இல்லை என்றாகின்றன!..

தம்மை வழிபடும் அன்பர்களுக்கு - அவர்களுடைய வாழ்வில் எந்தப் பிரச்னையும் நேராமல் சுயம்பு லிங்கப் பெருமான் காத்தருள்கின்றார்.


அதனால் அல்லவோ - கடலில் நீராடி, ஈரத்துணியுடன் ஓலைக் கூடையில் கடல் மண்ணைச் சுமந்து கரையில் போட்டு - தத்தம் அன்பினை நேர்த்திக் கடனாக வெளிப்படுத்துகின்றனர்.

கல்யாண வரம், குழந்தை வரம் - என , வேண்டுவோர் வேண்டி வணங்கி, வரங்கள் பெற்று மகிழ்வது காலங்காலமாக,  கண்கூடாகக் கண்டு வரும் உண்மை!..

இத்தகைய பெருமைகளுடன் கூடிய உவரி -

திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினம்,  மணப்பாடு வழியாக நாகர் கோயில் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் 45 கி.மீ. தொலைவில் உள்ளது. (திருநெல்வேலியில் இருந்து திசையன்விளை வழியாக 70 கி.மீ.) திருச்செந்தூரிலிருந்து செல்லும் போது கூட்டபனை எனும் சிற்றூருக்கு அடுத்தது உவரி.

திருக்கோயிலின்  அருகிலேயே பேருந்துகள்  நிறுத்தப்படுகின்றன. 

உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலின் கடற்கரையை தமிழக அரசு சுற்றுலா தளமாக அறிவித்துள்ளது.

இத்திருத்தலத்தைப் பற்றிய முந்தைய பதிவு -->  உவரி தலவரலாறு

இங்கே - உவரி திருக்கோயிலில் - தானே எல்லாமுமாக, தனித்து விளங்கும் சுயம்பு லிங்கத்தின் மகத்துவம் மிகப்பெரியது. கருவறையில் - அம்பிகை மனோன்மணியாக உறைகின்றனள். எனவே தனியாக அம்பாள் சந்நிதி  கிடையாது. மேலும், இங்கே நவக்கிரக பீடமும்  கிடையாது.

மார்கழி மாதம் முழுதும், உதித்தெழும் சூரியன் காலையில் 7 மணியளவில் - மூலஸ்தானத்தில் தன் பொற்கிரணங்களால் ஈசனைத் தழுவி, வணங்கி வழிபடுகின்றான்.

கன்னி விநாயகர் சந்நிதி
திருக்கோயிலின் கன்னி மூலையில்  விநாயகர் திருக்கோயில் கொண்டு விளங்க -  தென்புறம் பூரண கலா, புஷ்கலா தேவியருடன் ஸ்ரீ ஹரிஹர புத்ரனாகிய ஸ்ரீ ஐயனார் - வன்னியடி சாஸ்தா என - திருப்பெயர் கொண்டு விளங்குகின்றார்.

ஸ்ரீ சாஸ்தா சந்நிதி
பாருக்குப் படியளக்கும் பரமேஸ்வரி - இத்திருக்கோயிலில் - ஸ்ரீபிரம்ம சக்தி அம்பிகையாக ஸ்ரீகாளி ரூபங்கொண்டு விளங்குகின்றனள். அவளுக்கு பரிவாரங்களாக - ஸ்ரீபேச்சியம்மனுடன்,

ஸ்ரீ மாடசாமியும் ஸ்ரீ இசக்கி அம்மனும், ஸ்ரீ முன்னோடியாரும், தத்தம் சேனை நாயகர்களுடன் விளங்குகின்றனர்.

பேர் விளங்கக் காக்கும் ஸ்ரீ பிரம்ம சக்தி அம்பிகைக்கு -  ஆவணி மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க் கிழமையைப் பிரதானமாகக் கொண்டு  - திங்கள் மற்றும் புதன் கிழமையுடன் மூன்று நாட்களுக்கு கொடை விழா நிகழ்கின்றது!.


மங்களகரமாக திங்கள் அன்று திருக்காட்சி அருளும் அம்பிகை, செவ்வாய் அன்று நடுப்பகலிலும் நள்ளிரவிலும் ஆர்ப்பரித்து விளங்குகின்றாள். உச்சிப் பொழுதுகளில் , ஊர் காக்க வேண்டி பூங்கரகத்துடன் எழுந்தருளும் போது,

ஸ்ரீ பேச்சியம்மன்  - தானும் வெளிப்பட்டு, வெறும் கையில் அக்னி ஏந்தி வலம் வருகின்றாள்.

திருக்கயிலாய மாமலையில் சிவபெருமானின் மனம் அறிந்து பணிபுரியும் அதிகார நந்தி - இங்கே - உவரியில் தர்மத்தின் தலைவனாக  ஸ்ரீ மாடஸ்வாமி என திருப்பெயர் கொண்டு விளங்குகின்றார்.

இவர் சந்நிதியை விட்டு வெளியே எழுந்தருள்வது இல்லை. எனினும்,  கொடை விழாவின்  போது , உச்சிப் பொழுதுகளில் செண்டை மேளத்தின் உச்ச கதியில் அதிர்ந்து,  சிவன் அணைந்த பெருமாள் என சந்நிதியில் இருந்து வெளிப்பட்டு - ஸ்ரீ பிரம்ம சக்தி அம்பிகையுடனும் ஸ்ரீ பேச்சியம்மனுடனும் ஊர் சுற்றி வருகின்றார்.

தஞ்சம் அடைந்தவர் வாழ்வில் தடைகளைத் தகர்த்து, அல்லல்களை அகற்றி அடங்காத பேய்களை அடித்து விரட்டி - மக்களைக் காத்தருள்கின்றார்.

செவ்வாய் அன்று நள்ளிரவில் ஊர் மக்கள் மங்கலகரமாக மஞ்சள் பெட்டி காணிக்கை எடுத்துக் கொண்டு, மேள தாளத்துடன் வரும்போது சின்னஞ்சிறு பெண் குழந்தைகளின் மீது, ஸ்ரீ பேச்சியம்மன்  எழுந்தருள்கின்றாள்.

ஸ்ரீ பிரம்ம சக்தி அம்பிகையை,  ஸ்ரீ பேச்சியம்மனை, ஸ்ரீ மாடசாமியை குல தெய்வமாகக் கொண்டு எங்கெங்கோ வாழ்பவர் எல்லாம் குடும்பத்துடன், அந்த நடுச்சாம வேளையில் - கைகட்டி வாய் மூடி நிற்க - ஒவ்வொருவரையும் அழைத்து -

''அஞ்சாதே!..'' - என அபயம் அளித்தருளும் காட்சி காணக் கிடைக்காதது.

மனஅழுத்தமா, உடற்பிணியா,  ஊழ்வினையா, வினைப்பகையா - அனைத்துக்கும் விடை கிடைக்கும் அப்போது!..

மறுநாள் விடியற்பொழுதில் - நள்ளிரவில் நிவேதிக்கப்பட்ட படைப்புச் சோறும்  பழங்களும்  எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. பிரசாதத்தைப் பெறுவதற்காகவே காத்திருந்த மக்களும் பெறும் பேறு எனக் கொண்டு, கூடிக் களித்து உண்டு மகிழ்கின்றனர்.

புதன் கிழமை, அம்மையாகிய ஸ்ரீ பிரம்ம சக்தி - கொதிக்கும் மஞ்சள் நீரில்,  நீராடி மகிழ்கின்றாள்!.. மக்களைக் காத்து அருள்கின்றாள்!..

அந்த வைபவத்துடன், விடையாற்றி வருடாந்திர கொடை விழா இனிதே நிறைவுறுகின்றது!..

இங்கே  -  உயிர் பலி ஏதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 27 அன்று -  ஆவணி இரண்டாம் செவ்வாய்!.. 

அந்த நாளிற்காகவே -  ஆண்டு முழுதும் காத்துக் கிடக்கின்றது நெஞ்சம்!..

உவரியில் தேர் திருவிழா
கடல் தாண்டிக் கிடந்தாலும் - என் உள்ளம், உவரியில் தான் சுற்றிக் கொண்டிருக்கின்றது. குடி காக்கும் குல தெய்வம்  - குடி கொண்ட வீடு அல்லவா!..

அறியப்பட்டதால் ஆயர் குல மக்களுக்கும், பனை ஓலைப் பந்தலில் உளங் குளிர்ந்து அமர்ந்ததால் நாடார் குல மக்களுக்கும் உவரியே தாய் வீடு!..

கடற்கரையின் வெண்மணலில் காலார நடந்தால் - மனம் குளிர்கின்றது!..

கூடவே - பனங்கிழங்கையும் வேர்க்கடலையையும் தின்றபடி - சுவையான மோர் பருகினால் வயிறு குளிர்கின்றது!..

உவரி ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமியைத் தரிசித்து, பிரசாத சந்தனத்தைத் தரித்துக் கொண்டால்,

உடலும் உள்ளமும் ஒருசேர குளிர்கின்றது!.. மணக்கின்றது!..

வந்த வினையும் வருகின்ற வல்வினையும்  - வங்கக் கடலின் காற்றோடு காற்றாகக் கலந்து - எங்கோ போய்விடுகின்றன!..

வினையும் பிணியும் தீர்கின்றன!.. 
நலமும் வளமும் சேர்கின்றன!..

உவரியம்பதிக்கு வாருங்கள்!..   
உளங்குளிர்வதைப் பாருங்கள்!..