நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

கோகுலாஷ்டமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோகுலாஷ்டமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 11, 2020

கிருஷ்ணா.. கிருஷ்ணா..


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஸ்ரீ கோகுலாஷ்டமி


ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மாநகருளானே..
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-


வஸுதேவ ஸுதம் தேவம் கம்ச சானூர மர்த்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ஓம் ஹரி ஓம்
ஃஃஃ

வெள்ளி, ஆகஸ்ட் 23, 2019

ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி



கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா!..
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறைந்ததம்மா!..


ஒருத்தி மகனாய் பிறந்தவனாம்!..
ஒருத்தி மகனாய் வளர்ந்தவனாம்!
உருவில் அழகாய் மலர்ந்தவனாம்!..
உயிரில் உயிராய் கலந்தவனாம்!.. 


ஆயர் பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ!..
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ!..


குருவாயூருக்கு வாருங்கள்..
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்!..
ஒருவாய் சோறு ஊட்டும் தாய் முன்
உட்கார்ந்திருப்பதைப் பாருங்கள்!..


படிப்படியாய் மலையில் ஏறி
பக்தி செய்தால் துன்பம் எல்லாம்
பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரி!..அட
படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!..


பன்னீர் மலர் சொரியும் மேகங்களே
எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே!..
தென்கோடித் தென்றல் தரும் ராகங்களே
எங்கள் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களே!.


ஏழைக் குசேலனுக்குத் தோழமை தாள் தந்து
வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான்!..
வாழிய பாடுங்கள்.. வலம் வந்து தேடுங்கள்..
வந்து நிற்பான் அந்தக் கண்ணன் என்பான்!..


கேட்டதும் கொடுப்பவனே.. கிருஷ்ணா.. கிருஷ்ணா!..
கீதையின் நாயகனே. கிருஷ்ணா.. கிருஷ்ணா!..
நீயுள்ள சந்நிதியே.. கிருஷ்ணா.. கிருஷ்ணா!..
நெஞ்சுக்கு நிம்மதியே.. கிருஷ்ணா.. கிருஷ்ணா!..


நம்பினார் கெடுவதில்லை - நான்கு மறை தீர்ப்பு..
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு..
பசிக்கு விருந்தாவான்.. நோய்க்கு மருந்தாவான்..
பரந்தாமன் சந்நிதிக்கு வாராய் நெஞ்சே!..

அனைவருக்கும்அன்பின் இனிய
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.. 

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!..
ஓம் ஹரி ஓம்
ஃஃஃ

வியாழன், ஆகஸ்ட் 25, 2016

ஸ்ரீ கிருஷ்ண தரிசனம்

இன்றைக்கென்று எவரையும் காணோமே!.. பொழுது வேறு இறங்கிக் கொண்டிருக்கிறது.. இருளாகிப் போனால் யார் உதவிக்கு வருவார்கள்!..

பரிதவிப்புடன் அந்தச் சாலையின் இப்புறமும் அப்புறமும் நோக்கிக் கொண்டிருந்தாள் - கோபிகா...

நீண்டு நெளிந்திருந்த சாலையில் எவரையுமே காணவில்லை..

விழிகளை உயர்த்தி வானத்தைப் பார்த்தாள்...

கூடுகளை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன பறவைகளெல்லாம்!..

மேல் வானம் மெல்ல மெல்ல செந்நிறமாகிக் கொண்டிருந்தது...

இன்னும் ஒரு பொழுதுக்குள் இருள் வந்து கவிந்து விடும்..

என்ன செய்வது?..

கண்களில் நீர் ததும்பியது - தனிமையை நினைத்து..


யமுனைக் கரையில் ஸ்ரீ கோகுலத்தில் தான் அவளுடைய வீடு...

நந்தகோபனின் மாளிகையிலிருந்து மூன்றாவது இல்லம் தான் அவளுடையது..

எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா!.. - என்றழைக்கும் யசோதா தேவிக்கு ஒரு வகையில் மருமகள் முறை...

அதெல்லாம் இப்போது கதைக்கு ஆகுமா?..

மரத்தடியில் இருந்து ஊர்க் கதைகளைப் பேசிக் கொண்டிருக்கும் அப்பனுக்காவது என் நினைவு வந்திருக்க வேண்டாமா?..

எங்கே மகளைக் காணோம்?.. - என்று..

நம்பிக்கை.. எல்லாம் நம்பிக்கை..

அத்தனையும் அந்த மாயக் கண்ணன் கொடுத்த நம்பிக்கை...

கண்ணன் இருக்கும் ஊரில் கன்னியரைப் பற்றி எதற்குக் கவலை?.. அவன் பார்த்துக் கொள்ள மாட்டானா!..

- என்ற தைரியம்.. நெஞ்சழுத்தம்!...

ஆனால், இன்றைக்கென்று கண்ணன் எங்கே போய் ஒளிந்து கொண்டானோ.. தெரியவில்லை...

நெஞ்சுக்குழிக்குள் படக்.. படக்.. - என்று சத்தம் வேறு கேட்க ஆரம்பித்தது..

சரி.. கோபிகைக்கு என்னதான் பிரச்னை?..

கோபிகாவின் அருகில் பாருங்கள்...

ஒரு கூடை இருக்கின்றதல்லவா!..
அது நிறைய மாம்பழங்கள் இருக்கின்றனவா!.. அவைதான் பிரச்னை!..

கோபிகா - தங்களுடைய மாந்தோப்பை சுற்றிப் பார்ப்பதற்காக
சற்று நேரத்திற்கு முன்பாக வந்தாள்...

அணில்களும் கிளிகளும் மைனாக்களும் மற்ற பறவையினங்களும் தின்று தீர்த்தது போக, ஏராளமான பழங்கள் தோப்புக்குள் உதிர்ந்து கிடந்தன..

அவற்றை அப்படியே விட்டுச் செல்ல அவளுக்கு மனம் இல்லை..

எல்லாவற்றையும் சேகரித்து எடுத்துச் சென்றால் - இல்லாதவர் எவருக்கும் உண்ணக் கொடுக்கலாமே!.. - என்ற தயாள எண்ணம் அவளுள் எழுந்தது...

அப்படியே முடிந்த வரைக்கும் கூடையில் சேகரித்தாள்..

ஆயிற்று.. கூடையும் நிறைந்து விட்டது.. பெருஞ்சுமையாகவும் ஆகிவிட்டது..

இப்போது - தலைச் சுமையாகத் தூக்கி வைத்துக் கொண்டு நடக்க வேண்டியது தான்..

ஆனால் - முடியவில்லை...

கீழே குனிந்து கூடையைத் தூக்கும் போது -
கூடை சரிந்து மேலே உள்ள பழங்கள் கீழே சிதறுகின்றன...

மீண்டும் அவற்றைப் பொறுக்கிக் கூடையில் வைத்து - கூடையைத் தூக்கினால் - மீண்டும் பழைய கதை தான்.. பழங்கள் சரிகின்றன...

இடுப்பில் தூக்கிக் கூடையை வைத்துக் கொண்டு நடக்கலாம் என்றால்,
பாலும் நெய்யுமாக உண்டு வளர்ந்த உடம்பு .. ஒத்துழைக்கவில்லை..

வெண்ணெயுடன் சர்க்கரையைச் சேர்த்த நிறத்தில் சற்றே கனத்த சரீரம்..

அவள் அழுது விடக்கூடாதே!.. என்பதற்காக, அவளைப் பூங்கொடி என்பார்கள்..

அதனால், அவளும் நம்பிக் கொண்டிருந்தாள் - தான் பூங்கொடி தான் என்று!..

இங்கே ஒரு வேடிக்கை!.. என்ன அது?..

சில பழங்களை எடுத்துக் கீழே போட்டுவிட்டால் -
கூடையை எளிதாகத் தூக்கிக் கொள்ளலாம்..

ஆனால் - அவ்வாறு செய்வதற்கு கோபிகைக்கு விருப்பமில்லை....

இதுக்குத் தான் கஷ்டப்பட்டு பொறுக்கினேனா?..

தனக்குத் தானே சுமையைச் சேர்த்துக் கொண்டவள் -
தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டாள்...

இவளைப் போலத்தானே நாமும் இருக்கின்றோம்...

ஆசை என்பது பழம் என்றால் - பழங்கள் இருக்கும் கூடையே பிரச்னை..

சில விஷயங்களைக் கைவிட்டால் பிரச்னை தீர்ந்து விடும்!..
ஆனால் - நாம் தான் விடுவதில்லையே!..

சரி.. சம்பவ இடத்திற்கு வருவோம்..

இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது - கோபிகாவின் நெஞ்சில்!..

அழைப்பவர் குரலுக்கு வருவேன்!.. - என்றானே, அந்தக் கள்வன்!..

அழைத்துத் தான் பார்ப்போமே!.. 
அன்றைக்குக் குன்றினை ஏந்திக் கோகுலத்தைக் காத்தவன் - 
கோதையின் குரல் கேட்டு வாராமல் போய்விடுவானோ!..



கிருஷ்ணா!... கிருஷ்ணா!..

ம்ஹூம்.. மாஞ்சோலையின் இலைகள் தான் அசைந்து கொண்டிருந்தனவே தவிர வேறொரு சலனமுமில்லை...

காலையில் உன் குரல் கேட்டேனே - என்
கண்ணனின் திருமுகம் பார்த்தேனே!..
சாலையில் உன் துணை வரவில்லையே - என்
சங்கடம் தீர்ந்திட வழியில்லையே!..

கோபிகாவின் கன்னங்களில் வழிந்திடக் காத்திருந்தன - கண்ணீர்த் துளிகள்..

அதோ.. கன்றுகளின் கழுத்து மணிகளின் சப்தம்..

உற்றுக் கேட்டாள் - கோபிகா..

ஆகா.. கூடவே குழலிசையும் கேட்கின்றது..

கண்ணன் வந்தான்.. அங்கே கண்ணன் வந்தான் - ஏழைக்
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்!..

பரவசமானாள் - கோபிகா!..

இதோ, கமலையும் செவலையுமாக - வீட்டுக்குச் செல்லும் ஆவலில் தாய்ப் பசுக்களை முந்திக் கொண்டு ஓடுகின்றன கன்றுகள்..

கண.. கண.. - என்ற மணி முழக்கத்துடன் தாய்ப் பசுக்களும் மற்ற இளங் கிடேறிகளும் அவற்றைத் தொடர்ந்திடும் வாட்டசாட்டமான காளைகளும்...

ஆநிரைகளின் ஓட்டத்தால் எழுந்த புழுதியின் ஊடாக, அதோ - புண்ணியன்..

வருகின்றான் ஸ்ரீ கிருஷ்ணன்!..

வாட்டம் போக்க வருகின்றான் - ஸ்ரீ ஹரிகிருஷ்ணன்...

அவன் வாயிதழ்களில் பொருந்தியதாய் - வேய்ங்குழல்!..

அதிலிருந்து பொங்கி வழியும் அமுதமாய் - வேணுகானம்

இதோ.. இதோ... அருகில் வந்து விட்டான்..

கோபிகை முகம் மலர்ந்தாள்..

கண்ணா.. இதோ இந்தச் சுமையை என் தலையில் ஏற்றி விடேன்!..

வேத வேதாந்தங்களும் காண்பதற்குக் காத்துக் கிடக்கும்
கடைவிழியால் நோக்கினான் - கண்ணன்...

அவ்வளவு தான்..
அவன் நிற்கவும் இல்லை.. நின்று, ஒரு மொழி சொல்லவும் இல்லை..

ஆநிரைகளைத் தொடர்ந்து சென்றே விட்டான்...

கிருஷ்ணா!... கிருஷ்ணா!.. - மீண்டும் கூவினாள்...

ஏதும் பயனில்லை..

கேளாச் செவியனோ.. நீ!..

கோபிகாவின் மனம் பதறியது.. துடித்தது.. துவண்டது..


அன்று நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்..
மாம்பழம் வேண்டுமென்று நீ கேட்டாய்..
நான் கொடுத்தாலும் அதை நீ வாங்கவில்லை..
என் கன்னம் வேண்டும் என்று கேட்டனையே!..

பின்னும் ஒருநாள் - தூசு விழுந்து விட்டதா?..
என்று நீயாக கற்பனை செய்து கொண்டு
என் முகம் பற்றி விழிகளுக்குள் உற்று நோக்கி
உன் முகம் கண்டு களித்தனையே!..

அந்த பொழுதெல்லாம் மறந்து விட்டதா?.. 
ஏ.. கள்வனே!.. இது நியாயமா?..

கங்கையின் வெள்ளம் கண்ணீரோ - இல்லை
கன்னியர்கள் சிந்தும் கண்ணீரோ..
கண்ணனின் மனமும் கல்மனமோ.. - எந்தன்
மன்னனுக்கு இதுவும் சம்மதமோ?..


பாராமுகமாய்ச் சென்றனையே.. 
பாவை எனைப் பாவி எனக் கருதினையோ?..

ஆற்றாமையினால் கோபிகாவின் இதழ்கள் துடித்தன...

சட்டென மனம் இறுகிற்று.. ஒரு முடிவுக்கு வந்தாள்...
முயற்சி திருவினையாக்கும்!.. - என்று முனைந்தாள்...

தாவணியின் தலைப்பினை சுருளாகச் சுற்றித் தலையில் வைத்துக் கொண்டாள்..

ஒரு விநாடி மூச்சை நிறுத்தி - இரு கைகளாலும் மாம்பழக்கூடையைத் தூக்கி
சட்டெனத் தலையில் தாங்கிக் கொண்டாள்..

கன கச்சிதமாக உச்சந்தலையில் அமர்ந்தது - மாம்பழக் கூடை..

அப்படியும் இப்படியும் பார்த்தாள் - பழங்கள் ஏதும் விழுந்து விட்டனவா?.. என்று...

யாதொன்றும் விழவில்லை!..

கர்வமாக இருந்தது.. தனது சுமையைத் தானே தூக்கி விட்டோம்!.. - என்று...

சற்று முன் நடந்தவை எதுவும் - இப்போது நெஞ்சினில் இல்லை..

வீட்டை நோக்கி நடந்தாள்..

இன்னும் சற்று தூரம் தான்.. வீட்டுக்குச் சென்று விடலாம்...

கோபிகாவின் மனம் துள்ளியது.. துள்ளிக்குதித்த மனம் அடங்குவதற்குள் -

தன் வீட்டு வாசலில் யார்?.. கண்ணனா!..
அவன் தான்!.. அவன் எதற்கு வந்தான்?..

பாராமுகமாகப் பசுவின்பின் சென்றவன்
பாவை என் முகத்தைப் பார்த்திடவும் வந்தானோ?..

மனமே.. சொன்னால் கேள்.. மாயக்காரன் அவன்!..
அவன் விரிக்கும் வலைக்குள் விழுந்து விடாதே!..

ஏதொன்றும் பேசக்கூடாது... ஏன் பேச வேண்டும்?..
என்னைக் கண்டும் காணாதது போல் சென்றானே!..

என் பிரிவால் அவன் ஏங்கித் தவிக்க வேண்டும்!...
நீயின்றி நானில்லை - என்று துடிக்க வேண்டும்!..

பற்களைக் கடித்துக் கொண்டாள்.. பூவிதழ்களை இறுக மூடிக் கொண்டாள்..

தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்கின்றாளாம் - அவள்!...

ஆனால், மனமோ சிறகடித்துப் பறந்தது - கண்ணனைக் கண்டதும்!..


கண்ணன் முகத்தோற்றம் கண்டேன்..
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்..
கண் மயங்கி ஏங்கி நின்றேன்..
கன்னி சிலையாகி நின்றேன்!..

மனக்குயில் குக்கூ!.. என்று கூவிற்று..
அதன்பின் எல்லாம் நாடகம் போல எல்லாம் நடந்தன..

வீட்டு வாசலில் - தன் எதிரில் வந்து நின்ற கோபிகையின் -
தலையிலிருந்த கூடையை, அவனாகவே இறக்கி வைத்தான் - கண்ணன்..

கண்ணன் என்னைக் கண்டு கொண்டான்..
கையிரண்டில் அள்ளிக் கொண்டான்..
பொன்னழகு மேனி என்றான்..
பூச்சரங்கள் சூடித் தந்தான்!...

கோபிகாவின் மனம் மருகிற்று.. உருகிற்று..

நாடி வரும் கண்ணன் கோலமணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன்!..

பூட்டிக்கிடந்த பூவிதழ்கள் திறந்து கொண்டன..

கண்ணனின் கோலமணி மார்பில் சாய்ந்திருந்தபடிக்கு - 
தலையை மட்டும் உயர்த்தி, அவனது முகம் நோக்கிக் கேட்டாள் கோபிகா!..


பழக்கூடையை தலையில் ஏற்றி விடும்படி சொன்னேன்.. 
அதைக் காது கொடுத்துக் கேட்கவில்லை - நீ!..

இப்போது நான் கேளாமலேயே வந்து - 
என் தலைச்சுமையை இறக்கி வைக்கின்றாயே?..
ஏனடா.. கண்ணா!.. இந்தப் பொல்லாத் தனம்?..

அதைச் செவியுற்ற
உள்ளங்கவர் கள்வனின் உதடுகளில் 
மந்தகாசப் புன்னகை மலர்ந்தது..

மெல்லிய குரலில் சொன்னான்..

நான் சுமைகளை இறக்கி வைப்பவன்!..

கோபிகையின் உள்ளமும் உணர்வுகளும்
பூக்களாகச் சரிந்தன
புண்ணியனின் திருவடிகளில்...
***
நன்றி - கேசவ் ஜி
இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி..

அவனன்றி ஆவதொன்றும் இல்லை..
ஆதியும் அவனே.. அந்தமும் அவனே!..

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
***  

சனி, செப்டம்பர் 05, 2015

ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி

கண்ணன் பிறந்தான்.. எங்கள் கண்ணன் பிறந்தான்..
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா!..
மன்னன் பிறந்தான்.. எங்கள் மன்னன் பிறந்தான்..
மனக் கவலைகள் மறைந்ததம்மா!..  


சீதக் கடல்உள் ளமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரோ பவளவாயீர் வந்து காணீரே.. (23)


மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகிழ்நகையீர் வந்து காணீரே.. (28)  



மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீலநிறத்துச் சிறுபிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங் கள்வந்து காணீரே கனங்குழை யீர்வந்து காணீரே.. (34)


மண்ணும் மலையும் கடலும் உலகேழும்
உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு
வண்ணம் எழில்கொள் மகரக் குழையிவை
திண்ணம் இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே.. (40)



முற்றிலும் தூதையும் முன்கைம்மேல் பூவையும்
சிற்றில் இழைத்துத் திரிதரு வோர்களை
பற்றிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன்தன்
நெற்றி இருந்தவா காணீரே நேரிழையீர் வந்து காணீரே.. (41)


எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பி
கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன் ஒலிகட லோதநீர்
வண்ணம் அழகிய நம்பீ மஞ்சனமாட வாராய்.. (157)




கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான்
பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன்னோடி
சிறுக் கன்று மேய்ப்பார்க்கு ஓர்கோல் கொண்டு வா
தேவ பிரானுக்குக் கோல் கொண்டு வா.. (174)


தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம்படு நாகத்தை வால்பற்றி ஈர்த்து
படம்படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்
உச்சியில் நின்றானால் இன்று முற்றும்.. (215)


தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம்மத் தளிதாழ் பீலி
குழல்களும் கீதமுமாகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டங்கண்டு
மழைகொலோ வருகின்ற தென்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி
நுழைவனர் நிற்பனராகி எங்கும் உளம்விட்டு ஊண்மறந்து ஒழிந்தனரே.. (254)


குன்றெடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய்க் குழலூதி ஊதி
கன்றுகள் மேய்த்துத் தன்தோழரோட கலந்துடன் வருவானைத் தெருவில்
கண்டுஎன்றும் இவனையொப்பாரை நங்காய் கண்டறியேன் ஏடிவந்து காணாய்
ஒன்றும் நில்லாவளை கழன்று துகலேந்திள முலையுமென் வசமல்லவே.. (257)



வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் திருச்சக்கரம் ஏந்துகையன்
உள்ள இடம்வினவில் உமக்குஇறை வம்மின் சுவடுரைக்கேன்
வெள்ளைப் புரவிக்குரக்கு வெல்கொடித் தேர்மிசை முன்புநின்று
கள்ளப் படைத்துணை யாகிப்பாரதம் கைசெய்யக் கண்டாருளர்.. (334)



மண்ணும் மலையும் மறிகடல்களும் மற்றும் யாவுமெல்லாம்
திண்ணம் விழுங்கியுமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
எண்ணற் கரியதோ ரேனமாகி இருநிலம் புக்கிடந்து
வண்ணக் கருங்குழல் மாதரொடு மணந்தானைக் கண்டாருளர்.. (336)

 பெரியாழ்வார் அருளிய திருப்பாசுரங்கள் 
பதிவினில் இடம் பெற்றுள்ளன..


நல்லோரைக் காக்கவும் தீயன செய்வோரை அழிக்கவும்
அறத்தை நிலை நிறுத்தவும்
நான் யுகங்கள் தோறும் பிறக்கின்றேன்!..
* * *

ஸ்ரீ வல்லபாச்சார்யர் அருளிய
மதுராஷ்டகம்


மூங்கில்களும் புல்லாங்குழல் வடிவாகி
புருஷோத்தமனின் புகழினைப் பாடி உய்வடைகின்றன..

ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தியாகிய இன்று
நாமும் - மன்னவன் புகழினைப் பாடி உய்வடைவோம்!..

வஸுதேவ ஸுதம் கம்ஸ ஜானூர மர்த்தனம்
தேவகி பரமானந்தம் வந்தே கிருஷ்ணம் ஜகத்குரும்..
* * *

இன்று ஆசிரியர் தினம்!..

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்!..




ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும்
அன்பின் வணக்கங்கள்!..

கல்வியும் ஞானமும் தழைத்தோங்குவதாக!..
வாழ்க நலம்!..
* * *

ஞாயிறு, ஆகஸ்ட் 17, 2014

ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி

உலகில் தீமைகள் அனைத்தும் ஒழிந்திடவும் அறங்கள் தழைத்தோங்கிடவும் திருப்பாற்கடலில் அனந்த சயனத்தில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீஹரி பரந்தாமன் மண்ணுலகில் அவதரித்த திருநாள் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி. 


சத்தியம் எங்கிருக்கின்றதோ - அங்கே இருப்பவன் ஸ்ரீகிருஷ்ணன். ஏனெனில் சத்தியம் என்பதே ஸ்ரீகிருஷ்ண ஸ்வரூபம்!.. என்பர் பெரியோர். 

அவ்வண்ணமே -  சத்திய ஸ்வரூபமாகக் காட்டியளித்தவன். சத்ய யுகத்தில் பிரஜாபதியானவர் சுதபா.  இவரது பத்னி - பிரிஸ்னி.

வேத வித்துக்களான இந்த தம்பதியரின் மனம் ஒன்றிய வேண்டுதலின் பேரில் பூவுலகில் மூன்று முறை மடியில் மழலையாகக் கிடந்தவன் -

ஸ்ரீஹரி பரந்தாமன்!..

ஆதியில், சுதபா - பிரிஸ்னி தம்பதியரின் புத்ரனான ஹரி - பின்னாளில் காஷ்யபர் - அதிதி தம்பதியர்க்கு ஸ்ரீ வாமனனாகத் தோன்றினான். 


அதன் பின், துவாபர யுகத்தில் வசுதேவர் - தேவகி தம்பதியர்க்கு - அன்று சொன்ன வண்ணம் வசுதேவ சுதனாக - ஸ்ரீ கிருஷ்ணன் அவதாரம் செய்து -
சத்தியமாகவே காட்சி தந்தான்!.. 

இருள் சூழ்ந்த நள்ளிரவுப் பொழுதில் - கடுங்காவலுடன் கூடிய சிறைச் சாலைக்குள் நான்கு திருத்தோள்களுடன் சங்கு சக்ரம் தாங்கிய திருக்கோலத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி நிகழ்ந்தது.

அந்த வேளை -  சிம்ம ராசியில் சூரியன் இருக்க தேய்பிறை அஷ்டமி திதி. கௌலவ கரணத்தில்  ரோகிணி நட்சத்திரத்தின் நான்காம் பாதம். நள்ளிரவுப் பொழுதில் சந்திரோதய நேரம்.  ரிஷப லக்னம். புதன் கிழமை.

தேவகி மைந்தனாகப் பிறந்தாலும் - ஆயர்பாடியில் யசோதையின் மடியில் தவழந்தது அவன் நிகழ்த்திய நாடகம்!..



கோகுலத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்தது எதற்காக?..

இயற்கையை வாழ வைப்பதற்காக!..


கோபாலனாக வளர்ந்த வேளையில் - கோகுலத்தின் மக்கள் வழக்கமான - இந்திர பூஜைக்கு ஆயத்தமாகினர். 

அனைத்தும் அறிந்திருந்த கண்ணன் யாதொன்றும் அறியாதவனைப் போல - என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்!.. - என்று கேட்டான். 

மழையைத் தரும் இந்திரனுக்கு மரியாதை செய்வதற்காக விழா எடுக்கின்றோம்!.. - என்றனர் கோகுலத்தின் மக்கள். 

அதனைக் கேட்டு புன்னகைத்த கண்ணன் - 

இந்திரனா மழையத் தருகின்றான்?.. கோவர்த்தன கிரி அல்லவா மழையைத் தருகின்றது!. நீரின்றி அமையாது உலகு என்பதை நீங்கள் அறிந்ததில்லையா!.. சுனையும் அருவியும் ஆறும் குளமும் நீர் நிறைந்து விளங்குவதற்கு மலையும் மரங்களும் அல்லவா காரணம்!.. 


கோவர்த்தன கிரியில்  செழித்து வளர்ந்திருக்கும் மரங்களல்லவா - பயனுள்ள பூக்களையும் காய்களையும் கனிகளையும் வழங்குகின்றன!..  

பலவகையான சிற்றுயிர்களும் பறவைகளும் விலங்குகளும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்குக் காரணம் - கோவர்த்தன மலையும் அதில் அடர்ந்திருக்கும் வனமும் அல்லவா!.. ஆகவே கோவர்த்தன கிரிக்கு உங்கள் வழிபாட்டினை செய்யுங்கள்!.. - என்றருளினான். 

கிருஷ்ணனின் வார்த்தையைத் தலைமேற்கொண்ட மக்கள் அவ்வாறே செய்தனர். 

இதனால் மனம் கடுத்த இந்திரன் - மேகங்களை அழைத்து பிருந்தாவனத்தை மூழ்கடித்து விடும்படியாகக் கட்டளையிட்டான். 

அதன்படி இடைவிடாது மழை பெய்ததும் அந்தப் பகுதியே வெள்ளக் காடாகிப் போனது. 

தனது வழிபாட்டினை நிறுத்தியதால் இந்திரன் பழி தீர்க்கின்றான் என்பதை உணர்ந்து கொண்ட கிருஷ்ணன் - இந்திரனின் கர்வத்தைப் பங்கம் செய்திடத் திருஉளம் கொண்டான். 

அடாத மழையைக் கண்டு அஞ்சி நடுங்கிய மக்களுக்கு அபயம் அளித்த கண்ணன் - கோவர்த்தன மலையைத் தன் திருக்கரத்தினால் தூக்கிக் குடையாகப் பிடித்து ஆருயிர்கள் அனைத்தையும் காத்தருளினான். 

எட்டுத் திக்குகளையும் அடைத்துக் கொண்டு ஏழு நாட்கள் பெய்தது மழை.

முடிவில் மேகங்களும் வறண்டு விழுந்தன.  


ஏதும் செய்ய இயலாதவனாகி தலை குனிந்து நின்ற இந்திரன் சரணடைந்தது - ஸ்ரீ கிருஷ்ணனின் திருப்பாதங்களில்!..

செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் தன்னிடம் அர்ப்பணம் செய்து விட்டு அனைத்திற்கும் ஆதாரமான - தன் திருவடிகளைச் சரண் அடைபவர் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெறுவர்!.. என்கின்றான் கண்ணன். 

நம்மை அவ்வழிக்கு உய்விக்கவேண்டியதும் அவன் தான்!..

அதைத் தான் மகாகவி பாரதியாரும் வேண்டுகின்றார்.


வருவாய் வருவாய் வருவாய் - கண்ணா
வருவாய் வருவாய் வருவாய்!..

உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா 
உயிரின் அமுதாய்ப் பொழிவாய் கண்ணா 
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா 
கமலத் திருவோடிணைவாய் கண்ணா!..

இணைவாய் எனதா வியிலே கண்ணா 
இதயந் தனிலே அமர்வாய் கண்ணா 
கணைவாய் அசுரர் தலைகள் சிதறக்
கடையூழி யிலே படையோ டெழுவாய்!..

எழுவாய் கடல்மீ தினிலே எழுமோர்
இரவிக் கிணையாய் உளமீதினிலே!..
தொழுவேன் சிவனாம் நினையே கண்ணா
துணையே அமரர் தொழும் வானவனே!..


ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி அன்று வீட்டில் உள்ள குழந்தைகளை - கண்ணனைப் போல் அலங்கரித்து மகிழ்வது பாரம்பர்ய பழக்கம். 


வீடெங்கும்  வண்ணக் கோலங்களிட்டு வாசலில் மாவிலை தென்னங் குருத்துத் தோரணங்களைக் கட்டி, பாலகிருஷ்ணனுக்குப்  பிடித்த பால், தயிர், வெண்ணெய், பழவகைகள், பலவகையான இனிப்புகள் மற்றும் சீடை,முறுக்கு போன்ற பலகாரங்களைப் படைத்து   -

கிருஷ்ணனின் பாதச் சுவடுகளை மாக்கோலத்தில் தங்கள் இல்லங்களுக்குள் பதித்து, 

ஸ்ரீகிருஷ்ணன் தங்கள் இல்லத்திற்குள் எழுந்தருளினான் என -  மகிழ்ச்சி பொங்க அவனை வழிபடும் வேளையில் -  

இயற்கையைக் காப்போம்!.. 
- என உறுதி கொண்டு அவ்வண்ணம் இயன்றவரை நடந்தால் -  

குன்றம் எடுத்த குளிர் மனத்தான் நம்மையும் 
குன்றாத வளங்களுடன் காத்தருள்வான் என்பது சத்தியம். 

ஏனெனில், சத்திய வடிவானவன் - அவனே!..
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!..
* * *