நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, நவம்பர் 30, 2024

சரணம் சரணம்..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை15
சனிக்கிழமை


முழுப் பரிசோதனையாகவே இருக்கட்டும் என்று கடந்த (21/11) வாரம் தஞ்சை அகர்வால் கண் மருத்துவமனைக்குச் சென்றோம்... 

சோதனைகளின் நிறைவில் கண்ணில் புரை ஏற்பாட்டுள்ளதாகவும் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரே கண்ணாடி  அணிவது பலன்  தரும் என்றும் சொல்லி விட்டார்கள்..

அறுவைச் சிகிச்சையில் எனக்கு விருப்பம் இல்லை..

குருவின் மகனுக்குக் கண்ணொளி வழங்கிய வரப்ரசாதம் ஸ்ரீ ஐயப்ப சரிதத்தில் உள்ளதாகும்..

ஸ்ரீ ஐயப்பன் சந்நிதியில் நின்று -  எனது கண் பிரச்னைகள் தீரட்டும் -  என்று அடியேனும் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்..

வேண்டுதலைச் சொல்லி யாசித்த நிலையில் இந்தப் பதிவினை ஒழுங்கு செய்தது புதன் கிழமை.. 

வியாழக்கிழமை (28/11) அன்று 
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்
மூலிகைப் பண்ணை உயர்நிலை மருத்துவரிடம் கண் பரிசோதனை அறிக்கையைக் காட்டியபோது, - இது சாதாரணம்.. Reading Glass அணிந்து கொள்ளலாம்.. கவலை வேண்டாம்..  -  என்று ஆறுதலாகச் 
சொல்லி விட்டார்..

எல்லாரும் நலம் பெறுவதற்குப் பிரார்த்தனைகள்..
ஃஃஃ


ஏற்றிடும் விளக்கு திருவிளக்காக 
ஏற்றம் அளித்திடும் ஐயப்பா..

போற்றிய சரணம் கேட்டுளம் மகிழ்ந்தே
காத்தருள் புரிவாய் ஐயப்பா..

சாற்றிய மாலை சந்தனம் குங்குமம் 
சாஸ்தா உந்தன் திருவடிக்கே..

ஏற்றிய தீபம் இருள் வினை தீர்த்து
பொன்னொளி காட்டும் அருள் வழிக்கே..

கண்ணொளி தருவாய் ஐயப்பா
கண்ணொளி தருவாய் ஐயப்பா

போற்றிய சரணம் பொன்மலர் என்றே 
பொற்றிரு வடியில் சாராதோ..

காற்றினில் கலந்து கானக வாசனின் 
திருச்செவி தன்னில் சேராதோ...

வெந்துயர் தீர்க்கும் விழிகள் இரண்டும்
என்துயர் தன்னைத் தீர்க்காதோ..

சந்ததம் காக்கும் அருட்கரம் தானும்  
தண்ணருள் தன்னைச் சேர்க்காதோ..

கண்ணொளி தருவாய் ஐயப்பா
கண்ணொளி தருவாய் ஐயப்பா..

வீற்றிருக்கும் திரு மலை தன்னை
விளிப்பவர் தமக்கு அருள்வாயே ..

கூற்றிருக்கும் கொடுவினையை நீக்கி 
குளிர் நலம் என்றும் புரிவாயே..
 
புகலிடம் அறியேன் ஐயப்பா
போற்றித் தொழுதேன்  ஐயப்பா..

புலி வாகனனே ஐயப்பா 
புதுநலம் அருள்வாய் ஐயப்பா

கண்ணொளி தருவாய் ஐயப்பா
கண்ணொளி தருவாய் ஐயப்பா

கனவிலும் உன்னை மறவாத 
வரந்தனை எனக்கு  அருள்வாயே
கசிந்திடும் மனதில் இசையாக
காலந்தோறும் திகழ்வாயே..

போற்றிடும் மொழியும் புண்ணியம் ஆக
 புதுநலம் அருள்வாய் ஐயப்பா..
நாற்றிசை நாயக நல்மணி கண்டா..
நன்மைகள் தருவாய் ஐயப்பா..

கண்ணொளி தருவாய் ஐயப்பா
கண்ணொளி தருவாய் ஐயப்பா..

பந்தளச் செல்வா  ஐயப்பா
பதமலர் பணிந்தேன் ஐயப்பா
வெந்துயர் தீர்ப்பாய் ஐயப்பா
வேதனை தீர்ப்பாய் ஐயப்பா..

வந்துனைக் காண ஐயப்பா
வரங்கள் வழங்கிடும் ஐயப்பா
சந்தனத்திருவடி ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா..

கண்ணொளி தருவாய் ஐயப்பா
கண்ணொளி தருவாய் ஐயப்பா..

புகலிடம் நீயே புண்ணியம் நீயே 
புன்மை தவிர்ப்பாய் ஐயப்பா
பூத நாதனே  வேத நாதனே 
காத்தருள் புரிவாய் ஐயப்பா 

ஆயிரமாயிரம் அடியார் நடுவே  
அறிவாய் அடியனை ஐயப்பா 
தாயென வருவாய் ஐயப்பா  
சரணம் சரணம் ஐயப்பா..

கண்ணொளி தருவாய் ஐயப்பா
கண்ணொளி தருவாய் ஐயப்பா

ஓம் ஸ்வாமியே
சரணம் ஐயப்பா
 
ஓம் ஹரி ஓம் 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வெள்ளி, நவம்பர் 29, 2024

திருப்புகழ்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 14
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
பொது


தான தனத்த .. தனதான

நாளு மிகுத்த ... கசிவாகி 
ஞான நிருத்த ... மதைநாடும் 
ஏழை தனக்கு ...  மநுபூதி 
ராசி தழைக்க ... அருள்வாயே..

பூளை யெருக்கு ... மதிநாக 
பூண ரளித்த ... சிறியோனே 
வேளை தனக்கு ... சிதமாக 
வேழ மழைத்த ... பெருமாளே..
- அருணகிரிநாதர்  -


நாளும் மிகுந்த அன்புடன் 
நெகிழ்ந்த மனத்தினனாய்,
உனது திரு நடனத்தைக்
காண விரும்புகின்ற எனக்கும் 
அனுபூதி எனும் பேறு கிடைப்பதற்கு
அருள் புரிவாயாக...

பூளை மலர், எருக்கம்பூ, பிறை, பாம்பு 
ஆகிய இவற்றை ஜடாமுடியில்
அணிந்திருக்கின்ற சிவபெருமானின்
திருக்குமாரனே..

தனக்கு வேண்டிய சமயத்தில்
மகா கணபதியை யானையாக வரவழைத்த பெருமாளே..
 

முருகா முருகா
முருகா முருகா

ஓம்  சிவாய நம ஓம்
***

வியாழன், நவம்பர் 28, 2024

கிழங்கு வறுவல்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 13
வியாழக்கிழமை


குரு வாரத்தில் மஞ்சள் கலந்த உணவுகளால்
தோஷங்கள் தீர்கின்றன..

உருளைக்கிழங்கு மிளகு வறுவல் 

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு  250 gr
மஞ்சள் தூள் அரை tsp
மிளகுத் தூள் ஒரு tsp
சீரகத் தூள் ஒரு tsp
சோள மாவு ஒரு Tbsp
வெண்ணெய் தேவைக்கு
கல் உப்பு தேவைக்கு
கறிவேப்பிலை ஒரு இணுக்கு

செய்முறை :
உருளைக் கிழங்கைக் கழுவி -  தோல் நீக்கிக் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய துண்டுகளை இட்லி தட்டில் வைத்து அரை வேக்காட்டில் அவித்து  எடுக்கவும்.

சற்றே ஆறியதும் - 
இதனுடன் சோளமாவு,  மஞ்சள் தூள் மிளகுத் தூள்  
சீரகத் தூள் நுணுக்கிய உப்பு, ஆகியவற்றைச் சேர்த்து, தேவையானால் 
சிறிது தண்ணீர் தெளித்து பிசறிக் கொள்ளவும்.

வாணலியில் வெண்ணெய் இட்டு மிதமான சூட்டில் காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து - பிசறி வைத்துள்ள  கிழங்குத் துண்டுகளைப் போட்டு பதமாக வதக்கி - நிறம் மாறி வெந்ததும் இறக்கி வைக்கவும்.. 

(ஏற்கனவே வெந்த கிழங்கு என்பதை நினைவில் கொள்ளவும்)..

தயிர் சாதத்திற்கு நல்ல துணை..

தோலில் ஒவ்வாமை உடையவர்கள் சோள மாவினைத் தவிர்த்து விடவும்..

கடுமையான மசாலாக்கள் எதுவும் இல்லாத கிழங்கு வறுவல்...

ஆரோக்கியமானது..
 ஃஃ

நம்முடைய நலம்
நம்முடைய கையில்

ஓம் சிவாய நம ஓம்
***

புதன், நவம்பர் 27, 2024

நினைவெல்லாம் 7

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 12
புதன் கிழமை

அமுதே தமிழே நீ வாழ்க..

கல்லூரியின்
தமிழ் வகுப்புகள் தொடர்கின்றன..


அன்றைய சூழலில் தமிழ்நாட்டில் 
எங்காவது ஆ ஊ என்றால் இங்கே கல்லூரிக்கு விடுமுறை என்றாகி விடும்..

இந்நிலையில் கிடைக்கின்ற நாட்களில் நடத்தப்பட்ட வகுப்புகளில் மனதில் பதிந்தவை இன்றைய பதிவில்..

குற்றாலக் குறவஞ்சி காட்டுகின்ற அழகு


ஓடக் காண்பது பூம் புனல் வெள்ளம்
     ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்கு
     வருந்தக் காண்பது சூலுளைச் சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
     புலம்பக் காண்பது கிண்கிணிக்கொத்து
தேடக் காண்பது நல்லறம் சீர்த்தி
     திருக்குற்றாலத் தென் ஆரிய நாடே..

எங்கள் நாட்டில் ஓடிப் பாய்வது பூக்களைச் சுமந்து வரும் நீர் மட்டுமே.  யோகியர்களிள் மனம் அடங்கி இருக்க - 

மெலிந்திருப்பது பெண்களின் இடை மட்டுமே.. 

துன்பப்படுபவை முத்துகளை ஈனுகின்ற சிப்பி சங்குகள் மட்டுமே.

நிலத்தில் போடப்படுபவை விதைகள்.. ஒலி எழுப்புவன கிண்கிணியின்  மணிகள் ..  

ஒவ்வொருவரும் ஈட்ட  முயல்வது நல்லறம் புகழினை மட்டுமே.. 

எனவே, 
இப்படியான  குற்றாலத் திருநாட்டில் 
வாடுவோரும் இல்லை வருந்துவோரும் இல்லை -
எனப் பாடுகின்றாள்.

குற்றாலத் திருநாட்டில் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் என்பது இப்பாடலின் உட்குறிப்பு.

இப்பாடலின் வழிநடையாக - ஊட்டி வரை உறவு +
எனும் திரைப் படத்தில் - அங்கே மாலை மயக்கம் யாருக்காக -  என்ற பாடலில் கவியரசர் தனது கவித் திறனைக் காட்டியிருப்பார்..

அன்றைய  வகுப்புகளில் மனதில் பதிந்த -
திருமூலரின் திருமந்திரப் பாடல்கள்..


பரவப் படுவான் பரமனை ஏத்தீர்
இரவலர்க் கீதலை யாயினும் ஈயீர்
கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கீர்
நரகத்தில் நிற்றிரோ நாள் எஞ்சினீரே ..

போற்றப்படுகின்ற சிவபெருமானை வணங்கித் துதிக்கவும் இல்லை.. இரந்து நின்றவர்க்கு கொடுத்ததும் இல்லை.. குடத்தில் நீர் எடுத்து ஊற்றி  மரங்களை வளர்க்கவும் இல்லை.. 
வாழ்நாள் குறைவுடைய 
நீங்கள்,  எஞ்சிய நாட்களில் நரகத்தில் நின்றிருக்கப் போகின்றீர்களோ?..

என்று, ஊருக்கான சமூக பங்களிப்பை ஒவ்வொருவரிடமும் வினவுகின்றார் திருமூல நாயனார்..

உள்ளங்கை நெல்லிக்கனி எனப் பொருள் விளங்கக் கூடிய இன்னொரு இன்தமிழ்ப் பாடல் :


யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை,
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி,
யாவர்க்குமாம் பிறர்க்(கு) இன்னுரை தானே.
-: திருமூலர் ;-
**
நினைவெல்லாம்
 தொடரும்

அமுதே உந்தன் புகழ் வாழ்க

ஓம்  சிவாய நம ஓம்
***

செவ்வாய், நவம்பர் 26, 2024

வலியது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 11
செவ்வாய்க்கிழமை

 எப்போதோ படித்த கதை..
சற்றே அலங்கரிப்புடன்


அரண்மனைக்கு   மீனவர் ஒருவர் 
வந்தார்..

வயதானவர் அவர்..

அவரிடம் பெரிய மீன் ஒன்று இருந்தது.. அந்த மீன் தங்க நிறத்தில் ஒளி வீசியது.. 

வாயிற் காவலர் மன்னரிடம் அழைத்துச் சென்றனர்..

 " மகாராஜா நீடூழி வாழ்க .. அரிதான இந்த மீன் எளியேனின் வலையில் கிடைத்தது.. இந்த மீனை தங்களிடம் கொடுப்பது தான் முறை .. அதனால் தான் இங்கே கொண்டு வந்தேன்.. " - என்றார்  வணக்கத்துடன்...

மன்னரும் மகிழ்ச்சியுடன் மீனவருக்கு ஐந்தாயிரம் பொற்காசுகளைக் கொண்ட பொற்கிழியைக் கொடுத்தார்.

மகாராணிக்குக் கோபம்.. 

" காசின் அருமை  தெரிகின்றதா உங்களுக்கு!?.. "

அனலாகக் கொதித்தது அவளது மேனி..

 " அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?' அதைத் திரும்பப் பெறுங்கள்!.. " -  என்றாள்..

" முடிந்த வணிகத்தை மாற்றுவது அழகல்ல. தேவி!.. " 

மன்னர் மறுத்தார்.

" சரி.. அந்த மீனவனைக் கூப்பிட்டு இந்த மீன் ஆண் மீனா பெண் மீனா என்று கேளுங்கள்.
ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன் வேண்டும் எனக் கேளுங்கள்.. பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்று கேளுங்கள். எப்படியாவது அவனிடமிருந்து பொற்காசுகளைப் பிடுங்கி ஆக வேண்டும்.. " - என்றாள் உக்ரத்துடன்..

மீனவர்  அழைக்கப்பட்டார்.. 

கேள்விக் கணையை மகாராணியே தொடுத்தாள்..

" மீனவரே.. இது ஆண் மீனா பெண் மீனா?..  சரியாகச் சொல்ல வேண்டும்.. தவறாக இருப்பின் தலை உருண்டு விடும்!.."

மீனவர் சற்றும் தயங்காமல்  புன்னகையுடன் பதில் சொன்னார்..

 " இது ஆணோ  பெணோ.. அத்தனை நுணுக்கமாக அறிந்தேனில்லை -
வயதான காலத்தில் பார்வையும் சற்றே குறைவு..  இந்த மீன் மருத்துவ  குணங்களைக்  கொண்டிருப்பதாக உணர்ந்தேன். அதனால் தான் இதை மன்னருக்குக் கொண்டு வந்தேன்.. " -  என்றார் இயல்பாக...

இந்த பதிலைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் மேலும்  பொற்காசுகளை அள்ளிக் கொடுத்தார்.

மகாராணியின் கோபாக்கினியில் மேலும் நெய் வார்க்கப்பட்டது..

மீனவருக்கு பொற்காசுகள் கொடுக்கப்பட்ட போது  ஒரு காசு தரையில் விழுந்து உருண்டு ஓடியது. 

மீனவர் அதைத் தேடி எடுத்து மடியில் வைத்துக் கொண்டார்..

மீண்டும் மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள்.

" பேராசைக்காரன்!.. கீழே விழுந்த காசை  துப்புரவுப் பணியாளர் யாராவது எடுத்துக் கொள்ளட்டும் என்று விட்டானா பாருங்கள்!.. தேடி எடுத்துக் கொள்கின்றான்!.. -
- என்று மன்னரிடம் மூட்டி விட்டாள்.

மீனவர் நிதானமாக திரும்பிச் சொன்னார்..

மகாராணி!.. பேராசையினால் நான் தேடி எடுக்கவில்லை.. 
என்றாலும் நாணயங்களில் நமது மாமன்னரின் திருவுருவம் இருக்கின்றது. நாணயம் தவறி விழுந்ததையே என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. நாணயம் எவர் காலிலும் பட்டு விட்டால் - அதை என்னால் பொறுத்துக் கொள்ளவே  முடியாது.."' 

- என்றார் நெகிழ்ச்சியுடன்.

இதனால் மனம் மகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளுடன் கூடிய பொற்கிழியை வழங்கி -
பொன்னாடை ஒன்றையும் போர்த்தி கௌரவித்தார்.. 

மேலும் -
கடற்கரைக் கிராமம் ஒன்றையும் எழுதிக் கொடுத்தார். 

இப்போது மகாராணி  வாயை மூடிக் கொண்டாள். சொல்லுதற்கு ஏதும் இன்றிப் போனது..

இந்தக் கதை சொல்லுகின்ற தத்துவம்?..

பெரிதாக ஒன்றுமில்லை..

பணியுமாம் என்றும் பெருமை..
என்பது தான்..

இருந்தாலும் -
விதி வலியது.. 

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

நா நயம் வாக்கில்
நாணயம் நோக்கில்!..

நயம்பட உரை.. ன்னு
ஔவையார் சும்மாவா சொன்னாங்க!..

முருகா முருகா
முருகா முருகா
***

திங்கள், நவம்பர் 25, 2024

சோம வாரம் 2

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 10
திங்கட்கிழமை

இரண்டாவது
சோமவாரம்

இன்றைய தரிசனம்
திருமழபாடி


இறைவன்
ஸ்ரீ வைத்யநாதர்
அம்பிகை
ஸ்ரீ பாலாம்பிகை

தீர்த்தம்
லக்ஷ்மி தீர்த்தம்
தலவிருட்சம்
பனை


திருக்கோயிலின் வாசலில்
கொள்ளிடப் பேராறு


இறைவன் திருக்கரத்தில்
மழுவினை ஏந்திய வண்ணம் நடன தரிசனம்
நல்கிய திருத்தலம்..
 


நந்திகேசருக்கு சுயம்பிரகாஷிணி தேவியுடன்
திருமணம் நிகழ்ந்த திருத்தலம்..


மூவர் தேவாரம் பெற்ற
தலங்களுள் திருமழபாடியும் ஒன்று..

 


















அரியலூரில் இருந்து 29 கிமீ.. 
தஞ்சை நகரப் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயங்குகின்றன..


நல்வினைப் பயன் நான்மறையின் பொருள்
கல்வியாய கருத்தன் உருத்திரன்
செல்வன் மேய திருமழ பாடியைப்
புல்கி ஏத்தும் அது புகழாகுமே..
3/48/5
-: திருஞானசம்பந்தர் :-

ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய்
அடையலர்தம் புரமூன்றும் எய்தான் கண்டாய்
காலாலக் காலனையும் காய்ந்தான் கண்டாய்
கண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய்
பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்
பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய்
மாலாலும் அறிவரிய மைந்தன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் தானே.. 6/39/9
-: திருநாவுக்கரசர் :-

பொன்னார் மேனியனே புலித்
    தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் 
கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே 
மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் 
இனி யாரை நினைக்கேனே.. 7/24/1
-: சுந்தரர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

ஞாயிறு, நவம்பர் 24, 2024

நிலவே முகம் காட்டு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 9
ஞாயிற்றுக்கிழமை










படங்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி
பாரதீய சித்ரகலா

முருகா முருகா
முருகா முருகா

எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

சனி, நவம்பர் 23, 2024

சரணம் சரணம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 8
முதல் சனிக்கிழமை 

ஸ்ரீ சாஸ்தா பஞ்ச ரத்னம்


லோக வீரம் மஹாபூஜ்யம் 
ஸர்வ ரக்ஷாகரம் விபும்
பார்வதீ ஹ்ருதயா நந்தம் 
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் .1

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம் 
விஷ்ணு சம்போ: ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் 
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்.. 2

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

மத்த மாதங்க கமநம் 
காருண்யாம்ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் 
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்.. 3

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

அஸ்மத் குலேஸ்வரம் தேவம் 
அஸ்மத் சத்ரு விநாசனம்
அஸ்மத் இஷ்ட ப்ராதாராம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்.. 4

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

பஞ்ச ரத்நாக்ய மேதத் யோ 
நித்யம் சுத்த படேந்நர:
தஸ்ய ப்ரஸந்நோ பகவான் 
சாஸ்தா வஸதி மாநஸே..  5

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா


ஸ்ரீ சாஸ்தா தியான ஸ்லோகம்

பூதநாத சதானந்த
சர்வ பூத தயாபர
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ  நம:
              
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா..


ஏற்றிடும் விளக்கு திருவிளக்காக 
ஏற்றம் அளித்திடும் ஐயப்பா..

சாற்றிய மாலை சந்தனம் குங்குமம் 
சங்கர மைந்தன் திருவடிக்கே..

போற்றிய சரணம் பொன்மலர் என்றே 
பொற்றிரு வடியில் சாராதோ..

காற்றினில் கலந்து கானக வாசனின் 
திருச்செவி தன்னில் சேராதோ...

கண்ணொளி தருவாய் ஐயப்பா
கண்ணொளி தருவாய் ஐயப்பா..

இன்று 
கார்த்திகையின் தேய்பிறை அஷ்டமி


க்ஷேத்ர பாலகர் என விளங்கும்
ஸ்ரீ வைரவ மூர்த்தி தோன்றிய நாள்..

ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தி, வழுவூர்..

விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்ததோர் கோல கால வயிரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.. 4/73/6
-: திருநாவுக்கரசர் :-

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

ஓம் ஹரி ஓம் 
ஓம்  சிவாய நம ஓம்
***