நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 31, 2015

புகை எனும் பகை

இன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள்!..


புகைப் பழக்கம் உள்ளவர்களால் சுற்றுச்சூழல் கெடுகின்றது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புகைப்பழக்கத்தால் நுரையீரலில் புற்று நோய் ஏற்படுகின்றது என்று இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஆண்டு - 1950.


புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பேர்களுள் - இந்தியாவில் இருந்து வருடந்தோறும் ஐந்து லட்சம் பேருக்கு மேல் பரலோகத்திற்குப் பயணமாகின்றார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புகைப்பவர்களிடமிருந்து தள்ளி நிற்பதை விட தூரமாகச் சென்று விடுவது நலம்..

சிகரெட் புகையில் அடர்ந்திருக்கும் கார்பன் மோனாக்ஸைடு மிகக் கொடியது.

சிறு துளி நிகோடின் - ஒரு பூனையை முடித்து விடுகின்றது என்பது ஆய்வு..

சிகரெட் புகையினால் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன என்கின்றார்கள் .

என்றாலும் திருந்துவோரைக் காணோம்!..

புகைப்பவர்களின் நுரையீரல் கெட்டுப் போய் விடுகின்றது.

அதனால் சுவாச பிரச்னைகள் - மற்றவர்களுக்கும் பரவுகின்றது.

எனவே பச்சிளங்குழந்தைகளை அவர்களிடம் அனுமதிக்காமல் இருப்பது சாலச் சிறந்தது.

புகையிலையினால் என்ன நன்மை என்பது தெரியவில்லை..

அது விளைவிக்கும் கேடுகள் பற்பல..


Final Stage
எதையும் அறியாமல் புகையின்பத்தில் (!?) ஆழ்ந்து தமக்குத் தாமே தீ மூட்டிக் கொள்வதால் -

தம்மைச் சேர்ந்தவர்களையும் பெருந்துன்பத்துக்கு ஆளாக்குகின்றனர்.

புகையிலையினுள் புதைந்திருக்கும் நிகோடின் புகைப்பவர்களைப் புதைத்து விடுகின்றது.

எரிந்து புகையும் சிகரெட் புகைப்பவனையும் எரித்து விடுகின்றது.

காசு கொடுத்து புகையிலைப் பொருட்களுடன் புற்று நோயையும் வாங்குவதில் படித்தவனும் படிக்காதவனும் சிறப்பிடம் பெறுகின்றனர்.

ஒவ்வொரு சிகரெட்டும் - புகைப்பவனின் வாழ்நாளில் 18 நிமிடங்களைக் குறைக்கின்றது என்பது கூடுதல் செய்தி..

புகைப்பவனை நவீன எரிமேடைக்கு அனுப்பி வைப்பதைத் தவிர வேறொரு நல்லதையும் - புகையிலை செய்வதில்லை..மனிதனை அழிப்பதற்கு மனிதனால் உருவாக்கப்பட்டவை -
புகையிலை, பீடி, சுருட்டு, சிகரெட், பான்பராக், குட்கா - போன்றவை!..

எந்த ரூபத்தில் பயன்படுத்தினாலும் -
வாய், கன்னம், தொண்டை, நுரையீரல், கல்லீரல், உணவுக்குழாய்,
வயிறு, சிறுநீரகம் - என முழு உடலையும் சீரழித்து சிதைத்து -
சிதைக்கு அனுப்பி வைக்கும் வல்லமை பெற்றது - புகையிலை!..

சிகரெட் புகைப்பதனால் -
பக்கவாதம், ஒவ்வாமை, காசநோய், மலட்டுத் தன்மை, மாரடைப்பு - ஆகிய அதிரடிகள் நிச்சயம்!..

இவற்றுக்கும் மேலாக -

வாய், நுரையீரல்,சிறுநீரகம் - முதலான உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படுவது உறுதி!..

புகைப்பவர்கள் பத்து பேரினுள் - இருவர் பெண்கள் என்கின்றது உலக சுகாதார நிறுவனம்!.. 

தற்காலத்தில் - ஆண்களுக்கு இணையாக பெண்களும் புகைப்பிடிக்கத் தொடங்கியிருப்பது - குறிப்பிடத்தக்கது..


இத்தகைய புகையிலையின் தாயகம் - தென் அமெரிக்கா!..

இதன் காலம் கி.மு. 6000 என்கின்றார்கள்..

இந்த கொடூரத்தை - அங்கிருந்த பழங்குடி மக்களிடமிருந்து கைப்பற்றி - ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப் படுத்திய பெருமை -

இந்தியாவுக்குக் கடல் வழி கண்டு பிடிக்கின்றேன் என்று கிளம்பி - வழி தவறிப் போன கொலம்பஸுக்கு உரியது.

அந்தவகையில் கொலம்பஸ் செய்த கேடுகளுள் இதுவும் ஒன்று என்பர்.

நமது நாட்டில் இந்த புகையிலையை அறிமுகம் செய்தவர்கள் - ஐரோப்பியர்.

ஆயினும், அக்காலத்திலேயே - புகையிலையின் தீங்குகளை அறிந்திருந்தனர்.

அதனால் தான் - மற்ற நாடுகளிலும் பரப்பி விட்டார்கள் போலிருக்கின்றது!..


புகைப் பழக்கத்தை விட்டுத் தொலைப்பதற்கு உறுதுணையாக இருப்பது - உலர் திராட்சை.

அவ்வப்போது உலர் திராட்சையை சுவைப்பதனால் புகைக்க வேண்டும் என்ற உணர்வு கட்டுப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் - புகைப்பதால் இரத்தத்தில் கலக்கும் நிகோடினை - உலர்திராட்சை கரைத்து விடுகின்றது என்றும் கண்டறிந்திருக்கின்றனர்.

சேர்ந்தாரைக் கொல்லும் சினம்!..

சினத்திடம் சென்று சேர்ந்தாலும் சரி!.. 
சினம் வந்து சேர்ந்தாலும் சரி!..

அத்தகைய சினத்துடன் 
சரியாசனத்தில் அமர்ந்திருப்பது - புகை!..

புகை நல்வாழ்வுக்குப் பகை!..

நம் வாழ்வு நம் கையில்!..
வாழ்க நலம்!..
* * *

வியாழன், மே 28, 2015

அழிபசி தீர்த்தல்

காவிரிப்பூம்பட்டினம்!.

சோழர்களின் தலைநகரங்களுள் முதன்மையானது.

அந்நகரில் வருடந்தோறும் நிகழ்வுறும் இந்திரவிழாவினைக் காண்பதற்கு பெருவிருப்பத்துடன் இந்திர லோகத்திலிருந்து வருபவள் - மணிமேகலா தேவி!..

மணிமேகலா தேவி - மானுடப் பெண்ணாக வடிவந்தாங்கி விழாவின் கோலாகலங்களைக் கண்டு மகிழ்வுறும் வேளையில் -

அந்நாட்டின் இளவரசன் உதயகுமாரன் மங்கை ஒருத்தியைத் தொடர்ந்து சென்று அவளுக்கு துன்பம் தருவதைக் காண்கின்றாள்..

அந்த மங்கையின் நல்வினைப் பயன் மூண்டெழுந்ததால் - மணிமேகலா தேவியின் நெஞ்சத்தில் அவளைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகின்றது.

மணிமேகலா தேவியினால் அந்த மங்கையும் காப்பாற்றப்படுகின்றாள்..


மணிமேகலா தேவியினால் காப்பாற்றப்படுவள் - மணிமேகலை!..

கற்புக்கரசியாகிய கண்ணகிக்கு மகள் முறை..

கோவலனின் மனங்கவர்ந்த மாதவியின் மகள் - மணிமேகலை!..

கோவலன் - தன் அன்பு மகளுக்கு மணிமேகலை - என, பெயர் வைத்தது ஏன்!..

திரைகடல் ஓடி திரவியம் தேடிய பரம்பரை - கோவலனுடையது.

அவனுடைய முன்னோர்களுள் ஒருவர் - கடல் பயணத்தின் போது விளைந்த சூறாவளியிலிருந்து காப்பாற்றப்பட்டார்..

அப்படிக் காப்பாற்றியவள் - தெய்வ மங்கையாகிய மணிமேகலா தேவி..

அந்த நன்றிக் கடன்!..

உதயகுமாரனிடமிருந்து மணிமேகலையைக் காப்பாற்றிய - மணிமேகலா தேவி - அவளை மணிபல்லவத் தீவுக்கு அழைத்துச் செல்கிறாள்..

அங்கே - மணிமேகலை தனது முந்தைய பிறவியினை உணர்கின்றாள்..

மேலும்,

தீவின் காவல் தேவியான தீவதிலகாவின் அன்புக்குப் பாத்திரமாகின்றாள்.

அதன் பயன் - அங்கிருந்த கோமுகிப் பொய்கையிலிருந்து
அமுதசுரபி எனும் அட்சய பாத்திரம் கிடைக்கின்றது.

தக்கோர் கரத்தினில் சேர்க!.. -  என, ஆபுத்திரனால் விடப்பட்டது - அமுதசுரபி .

அமுத சுரபி -ஆண்டு தோறும் வைகாசிப் பௌர்ணமி அன்று வெளிப்படும்.

தக்கோர் யாரும் தென்படாததால் மீண்டும் பொய்கையினுள்ளேயே ஆழ்ந்து விடும்.

தீவதிலகா மணிமேகலையிடம் கூறினாள்..

அமுதசுரபி வெளியே வரும் நேரமிது.. பொய்கையை வலம் வந்து சுரபியைப் பெற்றுக் கொள்!..

அதன்படியே செய்தாள் - மணிமேகலை.

பொய்கையினுள்ளிருந்து வெளி வந்த அமுத சுரபி மணிமேகலையின் திருக் கரங்களில் வந்தமர்ந்தது.

இனி நீ உயிர்களுக்கு உணவளிக்கும் அறத்தினைச் செய்வாய்!..

- என வாழ்த்திய, தீவதிலகா - மணிமேகலையை மீண்டும் புகார் நகரில் கொண்டு வந்து சேர்த்தாள்.

மணிமேகலை தன் தாய் மாதவியுடனும் தோழி சுதமதியுடனும் சென்று - அறவண அடிகளை சந்திக்கின்றாள்.

அறவண அடிகள் - நலந்தரும் நல்லறங்களை எடுத்துக் கூறுகின்றார்.

அதன் விளைவு!..

மதுமலர்க் குழலாளாகத் திகழ்ந்த மணிமேகலை -
தன் எழிற்கோலத்தினைத் துறந்து - துறவுக்கோலம் பூணுகின்றாள்..

அமுத சுரபியுடன் பிச்சை ஏற்க நகருக்குள் புகுகின்றாள்..

பெருவனப்புடன் திகழ்ந்த மணிமேகலை - துறவு பூண்டு - தன்கையில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வருவதைக் கண்ட நகர மக்கள் வேதனையால் கண்கலங்கி நிற்கின்றனர்.

யாரிடம் முதலில் பிச்சை ஏற்பது!?.. மணிமேகலைக்கு சற்றே குழப்பம்.

அப்போது வருகின்றாள் - காயசண்டிகை!..

வானவீதியில் பறந்து திரியும் வல்லமை கொண்ட விஞ்சையர் குல மங்கை காயசண்டிகை. இவளது கணவன் - காஞ்சனன்.

இமயமலையின் அடிவாரத்திலுள்ள காஞ்சனபுரம் இவர்களுடைய நாடு.

வித்யாதரர்கள் எனவும் குறிக்கப்படும் இவர்கள் தென்னகத்தின் பொதிகை மலையைக் காண வருகின்றார்கள்.

மலை வளங்கண்டு மகிழ்ந்த வேளையில் - தேக்கிலையில் வைக்கப்பட்டிருந்த நாவல் பழத்தினைக் காண்கின்றாள் - காயசண்டிகை.

அது - பன்னிரண்டு ஆண்டு காலத்திற்கு தவத்தில் ஆழ்ந்திருக்கும் முனிவர் ஒருவர் - தவம் முடித்த பின் உண்பதற்காக வைத்திருந்த பழம்.

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டியதால் - அகந்தை கொண்டு - நாவற்பழத்தை காலால் சிதைத்து விடுகின்றாள் - காயசண்டிகை.

அதைக் கண்ட முனிவர் கோபங்கொண்டு சாபம் கொடுத்து விடுகின்றார்.

பழத்தைச் சிதைத்த நீ - என்னைப் போல பெரும்பசி கொண்டு பன்னிரண்டு ஆண்டுகள் அலைவாயாக!..

எங்கு சென்றும் காயசண்டிகைக்கு விமோசனம் கிடைக்காது என்பதால் - அவளைப் புகார் நகரில் விடுத்து விட்டு - காஞ்சனன் நாடு திரும்புகின்றான்.

அங்கே அறச்சாலைகளில் கிடைக்கும் உணவினை உட்கொண்டு -
அடங்காத பசியுடன் திரியும் காயசண்டிகை, தன்னுடைய நுண்னுணர்வினால் மணிமேகலையை புரிந்து கொள்கின்றாள்.

அவளே - மணிமேகலையை முதற்பிச்சைக்கு அழைத்துச் செல்கின்றாள்.

பெருந்தனவந்தனாகிய கோவலனின் அன்பு மகள் கால சூழ்நிலைகளினால் துறவுக் கோலத்துடன் பிச்சைக்கென நின்றபோது -

அவளுக்கு முதற்பிச்சையிட்ட இல்லத்தரசி - ஆதிரை!..

ஆதிரை - சாதுவன் எனும் பெருஞ்செல்வனின் மனைவி!..

தன் மனையின் முன் புனையா ஓவியம் போல் நின்றிருந்தவளைக் கண்டாள்.

மணிமேகலை யாரென நன்கு அறிந்திருந்தும் அவள் பூண்டிருந்த துறவுக் கோலம் கண்டு கை கூப்பினாள். வலம் வந்து வணங்கினாள்.

மணிமேகலையின் திருக்கரங்களில் இருந்த அமுதசுரபியில் முதற்பிச்சை இட்டாள்.

அப்போது மங்கை நல்லாளாகிய ஆதிரை கூறிய திருவாசகம் -

பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக!..

அமுத சுரபியில் - ஆதிரை இட்ட உணவினை தன் கரத்தால் எடுத்து அடங்காப் பசியினால் அல்லலுற்றிருந்த காயசண்டிகைக்கு உண்ணக் கொடுத்தாள்.

மணிமேகலை அளித்த உணவினால் தன் துயர் நீங்கப்பெற்ற காயசண்டிகை - அவளை வாழ்த்தினாள். அதன்பின்,

தன் கதையை மணிமேகலையிடம் கூறிய காயசண்டிகை - ஊரம்பலத்திலுள்ள ஏழையர்க்கு உணவளிக்கக் கூறியபடி - விண்ணில் ஏறி தன் நகருக்கு ஏகினாள்.


மணிமேகலை அற்றோர்க்கும் அலந்தோர்க்கு அமுதமெனும் உணவை வாரி வாரி வழங்கினாள்..

சிறைக் கூடத்தினுள்ளும் புகுந்து - சிறைப்பட்டோர்க்கு உணவு வழங்கினாள். அதனை உண்டோர் - கொடுங்குணம் நீங்கினர். நல்வழிப்பட்டனர்.

இதையறிந்த மன்னன் அரசவைக்கு அழைத்தான்.
மணிமேகலையை போற்றிப் புகழ்ந்து - வேண்டுவன கேள்!.. - என்றான்.

பேரானந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்த மணிமேகலை -
சிறைப்பட்டோர்க்கு விடுதலையை வேண்டி நின்றாள்!..

என்ன ஒரு கருணை!.. நினைக்கும் போதே மெய்சிலிர்க்கின்றது..

நல்லவர் அளிக்கும் உணவு அமிர்தத்திற்குச் சமம்..

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்!. 

- என்பது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை காட்டும் அறம்..

ஆதிரை , மணிமேகலை போன்ற மங்கையரால் பெருமையுடையது பாரதம்!..


சிற்றுயிர் முதற்கொண்டு பசிப்பிணி தீர்த்தல் என்பது பாரதத்தின் பண்பாடு!..

திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் - ஈசனிடம் படிக்காசு பெற்று மக்களின் பசிப்பிணி தீர்த்த திருத்தலம் - திருவீழிமிழலை!..

மக்களுக்காக ஆற்றிய அருந்தொண்டிற்காகத் தான் - திருப்பைஞ்ஞீலியில்,
சோறும் நீரும் சுமந்து வந்து -  அப்பர் பெருமானுக்கு அமுதூட்டி மகிழ்ந்தனன் - எம்பெருமான்..

புராணங்களும் திருமுறைகளும் பிறருக்கு உண்ணக் கொடுப்பதைப் பலவாறாகப் புகழ்ந்துரைக்கின்றன.

உண்ணும் போது ஒரு கைப்பிடி!.. - என்பது திருமந்திரம்.

தான் சுவைத்த கனி கொடுத்து ஸ்ரீராமனை உபசரித்த சபரி அம்மை,
ஈசனுக்கு மாங்கனியுடன் அன்னமளித்த காரைக்கால் அம்மையார்,

மாவடுவும் தயிர் சோறும் அளித்த அரிவாட்டாய நாயனார், 
நள்ளிரவில் விதை நெல்லைக்கொண்டு அமுதளித்த இளையான்குடி மாறனார், 

பிள்ளைக்கனி அமுது எனும் விருந்தளித்த சிறுதொண்ட நாயனார்,
கடுங்குளிர் பொழுதில் களி கொடுத்து களி கொண்ட சேந்தனார்,

இன்னும் எத்தனை எத்தனையோ புண்ணியர்கள் - நம் கண் முன்னே!..

அந்த வழியில் வந்ததால் தான் -  

வாடிய பயிரக் கண்டபோதெல்லாம் வாடினேன்!.. - என்று வருத்தமுற்று அணையா அடுப்பினை ஏற்றி வைத்தார் - அருட்பிரகாச வள்ளலார்.


சைவ வைணவ இல்லங்களில் - பொழுது விடியும் போதே - மனைமங்கலம் வாசற்கோலத்தில் தொடங்குகின்றது.

சிற்றுயிர்கள் வருந்தக்கூடாது என்பதனால் தான் அரிசி மாவுக்கோலம்..

முன்பெல்லாம் கிராமப்புறங்களில் - இரவு நேரத்தில் யாரும் பிச்சை கேட்டு வருகின்றார்களா.. - என்று காத்திருப்பார்கள்..

இரவில் எவரும் பட்டினியுடன் படுக்கக் கூடாது என்பது தர்ம சிந்தனை.

பகலில் இடாவிட்டாலும் - இரவு பிச்சையை யாரும் ஒதுக்கமாட்டார்கள்.

எவரும் வரவில்லை என்ற பின்னரே சோற்றில் தண்ணீர் ஊற்றுவர்.

வீட்டு வாசலில் ஒரு பாத்திரத்தில் சோறு வைப்பதும் உண்டு..

அலைந்து திரியும் நாய்களுக்கு ஆகட்டும் என்பது - அதன் நோக்கம்.

அதையெல்லாம் விட புண்ணியம் ஒன்றிருந்தது. அதன் பெயர் - அன்னக்காவடி!.

மேல் வளைவு இல்லாத - காவடியின் இருபுறமும் உரி போன்ற தொங்கலில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு வருவார்கள்.. 

காவடியின் இரு முனைகளிலும் மணிகள் பொருத்தப்பட்டிருக்கும். காவடியைத் தோளில் தாங்கி வரும் போது எழும் நாதமே - வழிக்குறிப்பு.

பெரும்பாலும் இரவில் மட்டுமே அன்னக்காவடியினர் வருவர். 

ஆனால் - யாரிடத்தும் எந்த வீட்டிலும் பிச்சை என்று கேட்கமாட்டார்கள்.

காவடியிலிருந்து எழும் மணியோசையே - குறிப்பு..

அன்னக்காவடி தெருவில் வரும் போதே எதிர்கொண்டு உணவளிப்பர் நம்மவர்கள். காரணம் - 

அன்னக் காவடியினரின் நோக்கம் - பிச்சை ஏற்று பிச்சை இடுதல்!..

தெருவில் திரிந்து பிச்சை எடுக்க இயலாதவர்களுக்கு உதவுவதே!..

நாற்பதாண்டுகளுக்கு முன் - தஞ்சையில் அன்னக் காவடியினர் தங்கியிருந்த மடம் ஒன்று இருந்தது. 

அங்கே என் தந்தை பல சமயங்களில் அன்னதானம் செய்திருக்கின்றார்.

கிராமத்தில் இருந்தவரைக்கும் - இரவில் வீட்டின் முன் பாத்திரத்தில் சோறு வைக்கும் பழக்கம் இருந்தது.

வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
இங்கு வாழும் மனிதர்க்கு எல்லாம்!..

- என்றார் மகாகவி பாரதியார்.

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!..

பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்
கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்!..

- என்றுரைத்தார் கவியரசர் கண்ணதாசன்.  


அன்னதானம் வழங்குவது பெரும் புண்ணியச் செயல் எனும் நம்பிக்கையை நம் மக்கள் கொண்டிருக்கின்றனர்.


அன்னதானம் என்றில்லை.. 
ஒரு குவளை நீர் அளிப்பதும் புண்ணியம் தான்..

இன்று மே மாதத்தின் இருபத்தெட்டாம் நாள்!..
உலக பசிப்பிணி தீர்க்கும் நாள்!..

வறியார்க்கொன்று ஈவதே ஈகை!.. - என மொழிந்த வள்ளுவப்பெருமான் -

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு!..

- என்றும் அருளினார்..

அப்படிப் பெற்ற ஊதியத்தை என்ன செய்வது!.. எங்கே வைப்பது?..

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி!..

வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
* * *

செவ்வாய், மே 26, 2015

சதுரகிரி

சிவகிரி எனவும் சித்தர்களின் கிரி எனவும் புகழப்படுவது -

சதுரகிரி !..

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ள திருத்தலம்.

மனிதர்களின் சிற்றறிவுக்கு எட்டாத ஆயிரக்கணக்கான ரகசியங்கள் சதுரகிரி மலைக்காட்டினுள் பொதிந்து கிடக்கின்றன.

மனிதனின் காலடித் தடம் பதியாத வனப்பகுதிகள் இன்னும் அங்கே உயிர்ப்புடன் விளங்குகின்றன.


யாரொருவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காத மனத்தினராய் - 
வேற்று மனிதர்களிடமிருந்து தம்மை ஒளித்துக் கொண்டு -
ஏதோ ஒரு நோக்கத்துடன் எவ்வுயிர்க்கும் இன்னல் விளைவிக்காத தன்மையராக - அங்கே பற்பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

சதுரகிரியின் அடர் வனத்தின் இருள் முடுக்குகளிலும் நெடிய மலைக் குகையின் இடுக்குகளிலும் - தம்மை இன்னும் மேல்நிலைக்கு உயர்த்திக் கொள்ளத் தவமிருக்கின்றனர்

இவர்களைத் தான் - சித்தர்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

துணிச்சலுடன் - அடர்ந்த மலைப்பகுதிக்குள் புகுவோருள் சிலர் - அத்தகைய சித்த புருஷர்களைத் தரிசித்திருக்கின்றனர்.

அவர்களுள்ளும் - சித்தர்களால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் சிலர்..

சித்தர்களால் எச்சரித்து அனுப்பப்பட்டவர்கள் பலர்..

சித்தர் பெருமக்கள் - கடைவிழியால் நம்மைப் பார்க்க மாட்டார்களா!.. 
வாழ்வின் சுக சௌபாக்கியங்கள் எல்லாம் நமக்கு வழங்க மாட்டார்களா!..

சித்தர்களால் வழிபடப்படும் சிவலிங்கத் திருமேனிகளைத் தரிசித்தால் - நம்முடைய பாவ மூட்டைகள் தொலையாதா!..

நாளும் பொழுதும் நோய்நொடி இன்றி - வாட்டும் வறுமை இன்றிக் கழியாதா!..  

- என்ற ஆசைகளுடன் மக்கள் நாளுக்கு நாள் மலையேறுகின்றனர்.


முப்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் - அமாவாசை பௌர்ணமியில் மட்டுமே மலையேறினர்.. 

அதிலும் குறிப்பாக ஆடி மற்றும் தை அமாவாசை தினங்கள் பிரசித்தமானவை.

ஆனால் இப்போதோ ஒவ்வொரு நாளும் சதுரகிரி மலைக்காட்டுக்குள் நிம்மதி தேடி ஜனங்கள் அலை பாய்கின்றனர். 

பொருள் பொதிந்த புனித மலை -
கடந்த பத்தாண்டுகளில் பொழுதுபோக்கு மலையாக மாறியிருக்கின்றது.

கடந்த வைகாசி அமாவாசை (17/5 ) தினத்தன்று சதுரகிரி மலையில் பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் - எட்டு பேர் உயிரிழந்தது வேதனையான ஒன்று..

சதுரகிரி மலைப்பயணம் ஆபத்தான ஒன்று என்பது மலையேறிச் செல்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அன்றைய தினம் மழை பெய்து கொண்டிருந்த சூழ்நிலையில் ஐந்தாயிரம் பேருக்கு மேல் மலையேறியிருக்கின்றனர்.

பகல் ஒரு மணியளவில் சதுரகிரி மலை உச்சியில் பெய்த கடும் மழையால் மலைச் சரிவுகளில் நீர்ப் பெருக்கு ஏற்பட்டு சிற்றோடைகள் அனைத்திலும்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது..

மலையில் பலாவடி கருப்பசாமி கோயில் அத்தியூத்து எனப்படும் சங்கிலிப் பாறை மற்றும் அடிவாரமாகிய தாணிப்பாறை பகுதிகளின் வழிநடை ஓடைகள் வெள்ளக்காடாகின.

இங்கே குளித்துக் கொண்டிருந்தவர்கள் நீரின் வேகத்தால் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இயற்கையை எதிர்கொள்ள இயலாது என்றாலும் -
அறிவிக்கப்பட்ட எச்சரிக்கையை - மக்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

ஆனாலும் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் எடுக்காததே - இத்தகைய உயிரிழப்புகளுக்குக் காரணம் என்கின்றார்கள்..

அடர்ந்த வனத்தினுள் அகலம் குறைந்த தடத்தில் பயணிக்கும் ஆயிரக் கணக்கான மக்களுக்கும் அரசு தான் பாதுகாப்பு தரவேண்டும் என்பது செய்தி!..

மலையடிவாரத்திலிருந்து கோயில் வரைக்கும் உள்ள உத்தேசமான ஒன்பது கி.மீ., தூரம் முழுதும் - குறுகலான வழித் தடமே!..

இத்தடம் ஆங்காங்கே குறுகலாகவும் சில இடங்களில் மிகக் குறுகலாகவும் உள்ளது என்கின்றனர்.

பள்ளத்தாக்கினை ஒட்டியுள்ள மலைச்சரிவுகளில் வெட்டுப் பாறைகளும் வழித்தடமே!..

இந்தப் பாதையை பாதுகாப்புள்ளதாக மாற்றுவதற்கு அறநிலையத்துறையும் வனத்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றது ஒரு நாளிதழ்!..

வெட்டவெளியில் கொட்டும் மழையில் - ஏறவும் முடியாமல் இறங்கவும் முடியாமல் நனைந்து கொண்டே நிற்கின்றார்கள் என்றும்,

நீர் வழிந்தோடும் ஓடைகளைக் கடக்க முடியாமல் தவிக்கின்றார்கள் என்றும்,

செய்தியறிந்த பின் தீயணைப்புத் துறையினர் வந்து மீட்கின்றார்கள் என்றும் - அந்த நாளிதழில் செய்தி!..

மக்களை எச்சரித்துக் கட்டுப்படுத்துவதற்கு போதுமான அளவில் காவல் துறையினர் அங்கிருப்பதில்லை. பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்றும்,

சிற்றோடைகளின் குறுக்காக பாலங்களும் மலைப்பாதைகளின் ஊடாக கொட்டகைகளும் வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.


மழைக் காலத்தில் - ஏற்படும் சோக நிகழ்வுகள் புதிதல்ல என்றாலும் - கைக் குழந்தைகளுடன் பெண்களும் ஆண்களும் ஆபத்தான மலைச்சரிவில் ஏன் ஏறிச் செல்லவேண்டும்!?..

கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் 
ஒவ்வொரு முறையும் தமக்கு சேதி சொல்ல வேண்டும் என்கின்றனர்..

மலையேறுபவர்கள் - ஆர்வக் கோளாறால் செய்யும் வேலைகளை - பாபநாசம் மலையிலும் குற்றால மலையிலும் சபரிமலையிலும் கண்ணாரக்  கண்டிருக்கின்றேன்.

மழை நேரத்தில் இடுக்கான அருவிகளில் தன்னிச்சையாகக் குளிக்க முற்படும் மக்களை என்ன என்று சொல்வது!?.சாதாரண நாட்களில் வழித்தடம்..  மழைக்காலங்களில் அதுவே சிற்றோடை..

சபரிமலைப் பயணத்தில் பெருவழிப் பாதையும் இப்படியே!.. பம்பையிலிருந்து சந்நிதானம் செல்லும் வழியும் இப்படியே!..

என்ன ஒரு வித்தியாசம் என்றால் - சபரிமலையில் அருவிகள் கிடையாது.

ஆனாலும் - மலைச்சரிவுகளில் இறங்கி சுனைகளைக் கண்டறிந்து தண்ணீர் கொண்டு வருபவர்களும் உண்டு. 

ஆபத்தானது அழுதா நதிப் பள்ளம் மட்டுமே.. 

எந்த நேரத்தில் காட்டாற்று வெள்ளம் வரும் என யாருக்கும் தெரியாது!..

மலைப் பாதை முழுதும் களிமண் பரப்பியதைப் போலிருக்கும். 

காலமல்லாத காலத்தில் மழை என்றால் - கொட்டும் மழையில் நனைந்தபடி அப்படியே நிற்க வேண்டும். அதுவே பாதுகாப்பு!..

மழை நின்ற பிறகும் உடனடியாக மலை ஏறமுடியாது. 

வழுக்கியடித்தால் - ஒரு ஆளோடு அல்லாமல் பலரும் நிலை குலைந்து சரிவுகளில் விழ வேண்டியிருக்கும்.

அழுதா நதிக்கரையிலிருந்து பம்பை ஆறு வரையிலான பெருவழி எனும் பெரிய பாதை முழுதும் ஆபத்தானது.

அங்கெல்லாம் -  கொட்டகை போடு என்றோ, 
மண்டபம் கட்டு என்றோ - யாரும் கேட்கவில்லை..

பலாவடி ஸ்ரீகருப்பசாமி திருக்கோயில்
சதுரகிரியில் பலாவடி கருப்பசாமி கோயில் சிற்றோடையினுள்ளே தான் அமைந்திருக்கின்றது. நீரில் நின்றபடிதான் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

திடீரென மழை பெய்தால் - தெய்வம் மட்டுமே துணை!..

இத்தகைய சிற்றோடைகள் மீது பாலங்கள் வேண்டும் என்பது சரி... 

ஆங்காங்கே தடையாக இருக்கும் பெரும் பாறைகளைத் தகர்க்க வேண்டும் எனவும் கேட்கின்றார்கள்..


மலையின் ஊடாக வழித்தடத்தில் உள்ளது - படிவெட்டிப் பாறை!..

ஒருபுறம் மிகவும் குறுகலான படிவெட்டிப் பாறையின் மறுபுறம் ஆபத்தான சரிவு.. அபாயகரமான பள்ளத்தாக்கு!..

சாதாரண நாட்களிலேயே மக்கள் விழுந்து அடிபடும் இடம் - படிவெட்டிப் பாறை..

இந்தப் பாறை - மழை பெய்யும் போது எப்படியிருக்கும்!?..

மழைநேரத்தில் ஆற்றுக்குள் வழுக்கி விழுந்து மேலே ஏறமுடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றார்கள் - இவ்விடத்தில்!..

இந்த படிவெட்டிப் பாறையை உடைத்து சமப்படுத்தி - மக்கள் பள்ளத்தாக்கில் விழுந்து விடாமல் இருக்க கம்பித் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்பதும் கோரிக்கைகளுள் ஒன்று..

மூச்சுத் திணறல், ரத்தக் கொதிப்பு, நெஞ்சு வலி - போன்ற உபாதைகளை உடையவர்களுக்கு ஏற்றதல்ல - சதுரகிரி மலைப்பயணம் என்றாலும் - 

மூலிகைக் காற்றை நம்பி வந்து ஆபத்தில் சிக்கிக் கொள்பவர்களும் உண்டு..

இப்படியும் சில உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன என்கின்றார்கள்..

திருவிழா நாட்கள் அல்லாத சமயங்களில் - இங்கு சுற்றுலா வருகின்றவர்கள் அருவிக் கரைகளில் குடித்து விட்டு அத்து மீறுவதாக கூடுதல் செய்தி!..

இதன்படி - அடிவாரத்திலும் வழித்தடத்திலும் உச்சியிலும், 

அவசர சிகிச்சைக்கு மருத்துவ மையங்கள் தேவையாகின்றன.

மூலிகை வனத்தில் அலைய முற்படும் குடிகாரர்களை அடித்து விரட்ட புறக்காவல் நிலையம் அவசியமே!..  

ஆயினும் -  

மலையேறும் பக்தர்களுக்கு அடிவாரத்திலேயே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவுரை வழங்குவதாக வனத்துறையிரும் கூறுகின்றனர்.


சதுரகிரி - மருத்துவ மலை. வினைகளும் வியாதிகளும் தீர்கின்றன என்கின்றனர்.

மலை நெடுக மூலிகை வனம். சிற்றோடை எல்லாம் தீர்த்தம் எனும் சூழ்நிலையில் - 

மலையேறுபவர்கள் பலரும் காலணிகளுடன்!.. 

இது தான் - மருத்துவ மலைக்கு மக்கள் தரும் மரியாதையா!?..

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பக்தர்கள் கூடியது - 
அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மட்டுமே!..

ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.

சனி ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்கள் என்றால் -

கட்டு மூட்டையை!.. புறப்படு சதுரகிரிக்கு!.. - என்று ஆயிரக்கணக்கில் கூட்டம் திரள்கின்றது..

இத்தனை ஜனங்கள் கூடும் சதுரகிரியின் மலைப் பாதைகளில் - பாதுகாப்பான கழிவறை வசதிகள் ஏதும் இல்லை.


இந்த வருடம் ஜனவரியில் - சதுரகிரி மேம்பாட்டுப் பணிக்கு என வெளியான அரசாணையில் - 

மலைப் பாறைகளைத் தகர்த்து விட்டு படிக்கட்டுகள் அமைக்கவும் நீரோடும் ஓடைகளின் குறுக்கே பாலங்கள் கட்டவும் கழிப்பறைகள் குளியலறைகள் அமைக்கவும் பலருக்கும் பயன்படும் விதமாக விடுதிகள் எழுப்பவும் - திட்ட வரைவுகள் உள்ளன என்கின்றார்கள்.

பதிவில் இடம் பெற்றுள்ள படங்கள் இணையத்திலிருந்து பெற்றவை.

எளியேனுக்கு சதுரகிரியைத் தரிசிக்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை.
ஆயினும், சில தினங்களாக - சதுரகிரியை ஆத்மார்த்தமாக தரிசித்திருந்தேன்.


சித்தர்களின் துணை கொண்டு மன்னர்கள் எழுப்பிய திருக்கோயில்களும்
சித்தர்களே எழுப்பிய திருக்கோயில்களும் - எத்தனை எத்தனையோ தமிழகத்தில்!..

ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு நியதிகள்!..

கடல் கொஞ்சும் ராமேஸ்வரத் தீவுக்குள் ஒரு பெருங்கோயில்!..
மருத நிலமாகிய தஞ்சையம்பதியில் மலையென ஒரு பெருங்கோயில்!..

மலைகளைக் குடைந்து திருப்பரங்குன்றம் முதலான பெருங்கோயில்கள்!..
மலைகளின் உச்சியில் பழனி திருப்பதி முதலான பெருங்கோயில்கள்!..

இவையெல்லாவற்றையும் எழுப்பியவர்கள் தமிழ்த் திருநாட்டைக் கட்டி ஆண்ட மாமன்னர்கள்!..

அவர்கள் அறிந்திருக்க மாட்டார்களா - சதுரகிரி மலையைப் பற்றி!?..
அவர்கள் அறிந்திருக்க மாட்டார்களா - சந்தன மகாலிங்கத்தைப் பற்றி!?..

அந்த மாமலையிலிருந்து ஒரு புல்லை அகற்றுவதற்கும் அஞ்சினர்..
அதனால்தான் - 
அங்கே ஒரு புள்ளியையும் பொறிக்காமல் போற்றி நின்றனர்.

ஆனால் - நாம்!?..

மலைப்பாறைகளைத் தகர்க்கவும் மரங்களைப் பெயர்க்கவும் முயல்கின்றோம்!..


சிவகிரியாகத் திகழ்வது - சதுரகிரி!.. 
இதன் மகத்துவத்தினை முழுமையாக அறிந்தவர் எவருமேயில்லை!..

மக்களை வழிப்படுத்துவதில் மகரிஷிகளின் தன்மை வேறு!..
சித்த புருஷர்களின் தன்மை வேறு!..

சித்தர்களுள் தலையானவர்களாகக் கருதப்படும் அகத்தியர், போகர், காலாங்கி நாதர், கோரக்கர், கொங்கணர், கருவூரார் போன்ற புண்ணியர்கள் மக்களுக்காக வடித்துக்கொடுத்த தெய்வத்திருமேனிகள் திருக்கோயில்களில் திகழ்ந்திருக்க, 

சித்தர் சிவவாக்கியரின் திருப்பாடல்கள் சிந்திக்கத்தக்கன. 

இந்தவூரில் இல்லையென்று எங்குநாடி ஓடுறீர்..
அந்தவூரில் ஈசனும் அமர்ந்து வாழ்வதெங்ஙனே?..

- என்று கேள்வி கேட்கும் சிவவாக்கியர் - சிவபெருமானையும் இராம பிரானையும் புகழ்ந்து பாடியவர்.

நட்டகல்லைச் சுற்றியே நாலுபுஷ்பஞ் சாற்றியே
சுற்றிவந்து மொணமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!..

- என்று தெய்வ தத்துவத்தை விளக்கிய சிவவாக்கியர் -

படைத்தும் காத்தும் அழித்தும் விளங்கும் பரம்பொருளைக் கல்லிலே காண முயற்சிக்காமல் - உள்ளிருக்கும் உணர்வினில் காண முயலுங்கள்!..

- என, உண்மையான சிவ தரிசனத்தை நமக்கு அறிவுறுத்துகின்றார்.

''தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்!..'' - என்பது திருமூலர் திருவாக்கு. 

''மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்!..'' 

- என்று உருகிப் போற்றும் அப்பர் பெருமான் - 

கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
கொங்கு தண்குமரித் துறை ஆடிலென்
ஓங்கு மாகடல் ஓதநீர் ஆடிலென்
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே!..

- என்றும் தெளிவு படுத்துகின்றார்.

தொண்டு செய்து நீங்களும் சூழவோடி மாள்கிறீர்
உண்டுழன்று நும்முளே உற்றுணர்ந்து பார்க்கிலீர்
வண்டுலாவு சோலைசூழ் வாழும் எங்கள் நாதனும்
பண்டுபோல நம்முளே பகுத்திருப்பன் ஈசனே!..
-: சிவவாக்கியர் :-

உண்மையை உணர்ந்து உய்வடைவோமாக!..
எல்லாம் வல்ல சிவப்பரம்பொருள் அந்நிலையை அருள்வதாக!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
* * *

வியாழன், மே 21, 2015

மலையில் பெய்த மழை

சதுரகிரி!..

சித்தர்களின் ராஜ்ஜியம்.

ஆபத்தான வழிப்பயணம்..

அபாயகரமான விலங்குகளின் உறைவிடம்..

வேறெங்கும் காண இயலாத அபூர்வ மூலிகைகள் மற்றும் வன மரங்களின் பிறப்பிடம்..

இன்னும் அறிந்து கொள்ள இயலாதபடிக்கு விளங்கும் எண்ணற்ற ரகசிய குகைகள் மற்றும் நிலவறைகளின் இருப்பிடம்.

இன்னும் எத்தனை எத்தனையோ மறைவான விஷயங்கள் நிறைந்த மலை!..

எல்லாவற்றுக்கும் மேலாக இத்தனையையும் தன்னகத்தே கொண்டு,

இடர்களைக் கடந்து இப்போதுதான் வந்தனையா!..

- என,  அன்புடன் புன்னகைக்கும் - புண்ணியன் விளங்கும் திருத்தலம்.

ஸ்ரீ சுந்தரலிங்கம்.. ஸ்ரீ சந்தனலிங்கம்!.. 

எனும் திருப்பெயர்களில் சித்தர்களுக்குச் சித்தராக சிவபெருமான் திகழும் திருமலைதான் - சதுரகிரி!..பெயரைக் கேட்கும்போதே - நாடி நரம்புகளில் அதிர்ச்சியும் ஆனந்தமும்  பெருக்கெடுத்து ஓடும்.

அதிர்ச்சிக்குக் காரணம் - ஆபத்தான மலைப்பயணம்!..

ஆனந்தத்திற்குக் காரணம் - அருள் பொழியும் சித்தர்களின் தரிசனம்!..

சதுரகிரியின் சுனைகளில் சுரக்கும் தீர்த்தங்களும் சதுரகிரியில் தழைத்துப் படர்ந்திருக்கும் மூலிகைகளும் மக்களின் நோய் தீர்க்க வல்லவை.

ஆயிரக்கணக்கான மூலிகைகளின் ஊடாக தவழ்ந்து வரும் காற்று மருத்துவ குணங்களுடன் இருக்கின்றது என்கின்றார்கள்..

இதனாலேயே - கடும் பயணத்தில் மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறி நோய்கள் தீர்கின்றன என்பது தெளிவு..

சதுரகிரியின் மகத்துவத்தை ஒரு பதிவில் கூறுவது என்பது இயலாத ஒன்று..

கடுமையான மலைப்பயணத்தில் ஒவ்வொருவருக்கும் வேண்டுதல்கள்!..

ஆனாலும் பொதுவான ஒன்று என்னவெனில் -

சித்தர்களில் ஒருவரையாவது தரிசிக்க மாட்டோமா!.. -  என்பது தான்..

நிறைந்த அற்புதங்களை உடையது சதுரகிரி..

ஸ்ரீ சுந்தர லிங்கம்
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் - எங்களுக்குத் தெரிந்த ஒருவர் - துறவு வாழ்க்கை பூண்டவர் - சதுரகிரிக்குச் சென்று வந்தார்.

சதுரகிரியில் சித்தர்களின் தரிசனம் பெற்றதை பரவசத்துடன் விவரித்தவர் அங்கிருக்கும் அபூர்வ மூலிகைகள் சிலவற்றையும் காண்பித்தார்.

சதுரகிரியின் சுனை நீரையும் வலி தீர்க்கும் வேரையும் என் தந்தைக்குக் கொடுத்தார்.

வலி நிவாரணியாகிய அந்த வேர் - என் தந்தையின் நெஞ்சுவலிக்கு உற்ற துணையாக இருந்து வேதனையைத் தீர்த்தது.

ஆயினும் - அந்த வேர் காலவெள்ளத்தில் கற்பூரம் போல கரைந்து போயிற்று.

இது போல எத்தனையோ மகத்துவங்கள் அவ்வப்போது அறியப்படுகின்றன.

ஸ்ரீ சந்தன லிங்கம்
சதுரகிரியின் அடர்ந்த காட்டினுள் - மதிமயக்கி வனம் என்ற பகுதியில் சிக்கிக் கொண்டு வழியறியாமல் தடுமாறித் தத்தளித்து - சில தினங்கள் கழித்து நாய்களால் வழி நடத்தப் பெற்று மலையடிவாரத்திற்கு வந்து சேர்ந்தவர்கள் பற்றிய செய்திகளும் அதிகம்.

மகத்துவம் மிக்க சதுரகிரியில் கடந்த சில தினங்களுக்கு முன் அமாவாசை அன்று ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 4,500 அடி உயரமுடையது சதுரகிரி.
64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவினை உடையது சதுரகிரி.


காலகாலமாக அமாவாசை பௌர்ணமி தினங்களில் மலையேறிச் சென்று சிவதரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டோர் - பல்லாயிரவர்.

இதற்கு முப்பதாண்டுகளுக்கு முன்னும் இப்படியொரு வெள்ளப்பெருக்கைக் கண்டுள்ளது சதுரகிரி.

சில ஆண்டுகளுக்கு முன் -  கையில் தீப்பந்தத்துடன் இரவில் மலை இறங்கிய ஆட்களால் -  தீவிபத்தும் நிகழ்ந்திருக்கின்றது.

ஆயினும் பக்தர்கள் அந்த சம்பவங்களில் இருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை.

அதன் விளைவுதான் - சமீபத்தில் நேர்ந்த துயரம்.


மலையடிவாரமாகிய தாணிப்பாறையிலிருந்து ஏழு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சுந்தரமகாலிங்கஸ்வாமி திருக்கோயில்.

ஆபத்தான தடத்தில் - வழுக்குப் பாறைகளில் நடந்து செல்கின்றவர்களின் துணிவு அசாத்தியமானது.

மலைப்பகுதியில் எந்தவொரு வசதியும் இல்லை என்கின்றார்கள்..நன்றி - தினமலர்
ஆயினும் - விழாக்காலங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் மலையேறுகின்றது.

எதையும் பொருட்படுத்தாத மனோபாவத்தினால் - ஆயிரக்கணக்கானவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பது சர்வ சாதாரணம் ஆகின்றது.

இந்நிலையில் மழை குறித்து முன்னெச்சரிக்கை செய்திருந்தும் -
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழக்கக் காரணம் அலட்சிய மனோபாவம்.

தாணிப்பாறையில் கூடுதலாக குவிந்திருந்த காவல் துறையினர் மலையேறிய பக்தர்களைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர். ஆனால் -

கடும் மழையையும் காட்டாற்று வெள்ளத்தையும் எதிர்பார்த்து - எச்சரிக்கை செய்த காவல் துறையினரிடம் பக்தர்கள் எதிர்வாதம் செய்துள்ளனர்.

வனத்துறை அலுவலர்களின் எச்சரிக்கையும் பயனற்றுப் போனது.

எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேளாமல் ஆயிரக்கணக்கானோர் மலையேறி இருக்கின்றனர்.

பிற்பகலில் பெய்த கடும்மழையினால் காட்டாறுகளில் நீர்வரத்து அதிகரித்தது.

இதையடுத்து - மலைக்கோயிலிலிருந்து யாரும் இறங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

விபரீத நிலைமையைக் கண்டதும் தான் மக்களும் அடங்கியிருக்கின்றனர்.

இடைப்பட்ட நேரத்தில் மலைப்பாதையில் சென்றவர்களே விபத்தில் சிக்கிக் கொண்டவர்கள்..காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பக்தர்கள் சிக்கித் தவிப்பது குறித்து தகவல் கிடைத்ததும் -

விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய ஊர்களில் இருந்து 200 தீயணைப்பு வீரர்களும்,

மதுரையிலிருந்து 40 தீயணைப்பு வீரர்களும் விருதுநகர் மாவட்ட அதிரடிப் படை போலீஸாரும் தாணிப்பாறைக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

சதுரகிரி மலையில் சங்கிலிப் பள்ளம் மற்றும் குதிரை ஊற்று பகுதிகளில் வெள்ளத்திற்குத் தப்பி - மரக்கிளைகளில் தொங்கிக் கொண்டிருந்த பலரும் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டனர்.

வெள்ளத்தில் சிக்கித் தவித்த மூவாயிரம் பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சதுரகிரி மலையில் கோயில் அருகே தங்கவைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்களும் அடிவாரத்துக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர் 

மழைக் காலங்களில் சதுரகிரி மலைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டாலும், அதை மீறி பக்தர்கள் செல்வதே இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு காரணம் என மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு.எல்.சுப்பிரமணி கூறியிருக்கின்றார்.

மீட்புப் படையினரின் அயராத சேவை பாராட்டுதற்குரியது.

பதிவிலுள்ள படங்கள் இணையத்தில் பெற்றவை.
வலையேற்றிவர்களுக்கு நன்றி..

காட்டாற்று வெள்ளத்தினை கோயிலின் ஒருபகுதியில் இருந்து -
ஸ்ரீவில்லிபுத்தூர் - கூமாபட்டி எனும் ஊரைச் சேர்ந்த திரு. நல்லதம்பி என்பவர் தனது மொபைல் போன் மூலமாகப் படம் பிடித்துள்ளார்.

அடங்காத வேகத்துடன் ஆர்ப்பரித்து வரும் வெள்ளப் பெருக்கினைக் காட்டும் காணொளி - இதோ!..


இப்படியொரு வேதனை இனி வேண்டாம் - என வேண்டிக் கொள்வோம்..

இயற்கையைப் புரிந்து கொண்டால் 
இன்னல்கள் இல்லை.

இயற்கையைக் காணுதல் அழகு..
இயற்கையைப் பேணுதல் அழகு..

இயற்கையோடு இணைந்து வாழ்தல் அழகு..
எல்லாவற்றையும் விட
இயற்கையைப் புரிந்து வாழ்தல் மிக மிக அழகு!..

அல்லலுற்ற அன்பர்கள் அனைவருக்கும்
எம்பெருமான் 
ஆறுதலையும் தேறுதலையும் அருள்வானாக!..

இயற்கையுடன் கலந்த ஆன்மாக்களை 
இறைவன் தன் திருவடி நிழலில் சேர்த்துக் கொள்ளட்டும்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
* * *

ஞாயிறு, மே 17, 2015

வாழ நினைத்தால்..

இன்று மே மாதத்தின் பதினேழாம் நாள்!..அப்பு : ஒரு பாட்டு பாடேன்!..

சுப்பு : காதல் பாட்டா.. தத்துவப் பாட்டா?..

அப்பு : தத்துவப் பாட்டு!..

சுப்பு : எழுதுனது - கண்ணதாசனா.. வாலியா

அப்பு : கண்ணதாசன்!..

சுப்பு : இசை - மகாதேவனா.. விஸ்வநாதனா?..

அப்பு : விஸ்வநாதன்!..

சுப்பு : பாடினது - சீர்காழியா.. சௌந்தரராஜனா..?..

அப்புவுக்கு மண்டை சூடேறுகின்றது.. ஆனாலும், விடாமல்  - 

அப்பு : T.M.S..

சுப்பு : எம்ஜியாருக்குப் பாடியதா.. சிவாஜிக்குப் பாடியதா?..

அப்புவின் மண்டை காய்ந்தே விட்டது!..
(ஏண்டா.. ஒரு பாட்டு கேட்டது குத்தமாடா!?..)
ஆனாலும், மனம் தளராமல் -

அப்பு : நடிகர் திலகம்!.. 

சுப்பு : சந்தோஷ பாட்டா.. சரக்கடித்த பாட்டா?..

அப்பு : டேய்!... உன்னயப் பாடச் சொன்னேன் பாரு!.. என் புத்திய...

சுப்பு : அதால அடிக்கணுமா.. இதால அடிக்கணுமா!..

அப்புவின் உச்சி மண்டைக்கு இரத்தம் பாய்கின்றது!..


இன்று - உலக இரத்த அழுத்த தினம்!..

எரிச்சல்.. கோபம்!.. 

நம்மைத் தொடர்ந்து கொண்டிருப்பதோடு -
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இரட்டைப் பிறவிகள்!..

இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் நம்மை - 
வெகு விரைவாக காலனிடம் அழைத்துச் செல்லும் காரணிகள்!..

அம்மா - அப்பா, சகோதர சகோதரிகள், மனைவி மக்கள், உற்றார் உறவினர்கள்,   அடுத்த வீடு எதிர்த்த வீடு , போவோர் வருவோர் - என அனைவராலும் நமக்கு ஏற்படுவது!.. 

அதேபோல - அனைவருக்கும் நாம் ஏற்படுத்துவது!..

இதிலிருந்து மீண்டு விட்டால் - ஆரோக்கியம் ஆனந்தம்தான்!..

உயர் ரத்த அழுத்தம் - அப்பா அம்மாவுக்கு இருந்தால் - நமக்கும் பரம்பரையாக வருகின்றது.

வீட்டிலும் அலுவலகத்திலும் - கடுவன் பூனைகள் நிறைந்த சூழ்நிலை எனில் கண்டிப்பாக உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகின்றது.

நட்பு வட்டம் சரியாக அமையவில்லை. புகை, மது - இவையும் வழித்துணை எனில் வேறு வினையே வேண்டாம்.

உடல் பருமன், குருதியில் கொழுப்பு, சர்க்கரை குறைபாடு - இவையும் உயர் ரத்த அழுத்தத்தினை அழைத்து வருகின்றன.

இதனால் தான் - 
இன்றைய சூழலில் முப்பது வயதிற்கு மேல் கண்டிப்பாக மாதம் ஒருமுறை ரத்த அழுத்தத்தினை சோதித்துக் கொள்ளும்படி கூறுகின்றனர்.

சராசரியாக ஒருவரின் ரத்த அழுத்தம் என்பது 120/80 mmHg. 

ஆனால் - இது பொதுவானதே!.. ஆளுக்கு ஆள் நேரத்துக்கு நேரம் மாறுபடும்.


ஆகையினால் தான் - ஆரோக்கியமான ஒருவருக்கு 110/70 mmHg முதல் 140/90 mmHg என்ற அளவினை சரியான ரத்த அழுத்தம் என உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ளது. 

140/90 mmHg என்ற அளவினைத் தாண்டும் போது ஆபத்தான உயர் ரத்த அழுத்தம் என குறிக்கப்படுகின்றது.

ஒவ்வொருவருக்கும் அவரது சூழலைப் பொறுத்து -

பாரம்பரியம், வயது, அதிக எடை,  உணவுப் பழக்கம், உழைப்பு அல்லது உடற் பயிற்சி இல்லாதது, புகை மற்றும் மதுப் பழக்கம், சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை குறைபாடு எல்லாவற்றுக்கும் மேலாக - 

மன உளைச்சல் - மன அழுத்தம் - இவையெல்லாம் காரணிகள்..

பாரம்பரியம் - வயது இவற்றை ஒருபுறம் வைத்து விட்டு - சீரான உணவுப் பழக்கத்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

கொழுப்பு நிறைந்த துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட செயற்கையான உணவுகள் , இரசாயனம் மிகுந்த குளிர்பானங்கள் - இவை உடலின் எடை கூடுவதற்கான காரணங்கள்.

பசித்த பின் சாப்பிடுவதே சாலச் சிறந்தது. எளிமையான சரிவிகித உணவும் நல்ல தண்ணீரும் நம்மை நல்வாழ்விற்கு அழைத்துச் செல்வன.

அறுசுவை உணவு என முன்னோர்கள் வகுத்து வைத்ததை மறந்து விட்டோம்.

இன்றைய சூழலில் - மிதமிஞ்சிய புலால் உணவுகள் ஆரோக்கிய வாழ்வின் எதிரிகளாகி விட்டன.

உப்பில்லா பண்டம் குப்பையிலே!.. - என்று சிறப்பிக்கப்பட்டாலும் ஒரு நாளைக்கு ஐந்து கிராம் உப்பு போதுமானது.

மிகுந்த உப்புடன் விளங்கும் ஊறுகாய் வகைகள், கருவாடு - போன்றவற்றைத் தவிர்ப்பதும் குறைப்பதும் நலம்.முக்கியமாக - ஜீனி (White Sugar) தவிர்க்கப்பட வேண்டியது.

பாரம்பர்ய சர்க்கரை, வெல்லம், பனங்கருப்பட்டி - என்பன சிறப்பானவை. 

தேங்காய் எண்ணெய், செம்பனை எண்ணெய் (Palm Oil) மற்றும் Refined Oil ஆகியன தவிர்க்கப்பட வேண்டியவை.

நல்லெண்ணெய் உடலுக்கு மிகவும் நல்லது.

கடலெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் - இரண்டாம் பட்சம்.

மேலும் - 

கொழுப்பு மிகுந்துள்ள இறைச்சி, முட்டை, தயிர், வெண்ணெய், நெய், பாலாடை, ஐஸ்கிரீம் போன்றவற்றையும்

எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட வறுவல் பொரியல் மற்றும் பூரி, அப்பளம், வடை, சமோசா, பஜ்ஜி,  போன்றவைகளையும் முற்றாக தவிர்க்கச் சொல்கின்றனர்.

நமது வாழ்க்கைச் சூழலில் முற்றாகத் தவிர்க்க இயலவில்லை எனில் - 
குறைத்துக் கொள்ளலாம்.

நார்ச்சத்து மிகுந்துள்ள உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
கேழ்வரகு, கோதுமை, கம்பு, வரகு, சோளம் பச்சைப்பயறு போன்ற தானியங்கள். 

காரட், முள்ளங்கி, பீட்ருட், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்றவை. 
புதினா கொத்தமல்லி மற்றும் பசுமை நிறைந்த கீரைகள்.

மாம்பழம்,கொய்யா, தர்பூசணி, மாதுளை ஆகிய பழங்கள்

இவையெல்லாம் நார்ச்சத்து மிகுந்தவையாக குறிப்பிடப்படுகின்றன.

இயன்றவரை தினசரி உணவில் இடம்பெற வேண்டியவை.

ரத்த அழுத்தம் சீராக இருக்க வேண்டும் எனில் - உடலின் எடையைப் பராமரிப்பது அவசியம்.


தினசரி உடற்பயிற்சியும் நடைப் பயிற்சியும் உடல் நலம் அளிப்பவை.

புகையும் மதுவும் அவசியமற்றவை. என்றுமே ஆபத்தானவை.

இரவில் கண் விழிப்பது கூடாது. நல்ல தூக்கம் அவசியம். 
ஆரோக்கியத்திற்கு ஆறு மணி நேர தூக்கம் மிக மிக அவசியம்.

ஓய்வு என்பது உடலுக்கும் உள்ளத்திற்கும்!..

மனதை அங்குமிங்கும் அலைய விடாமல் - எண்ணங்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

அதனால் நாம் அடையும் பலன்கள் சொல்லி முடியாததது. 


தியானம்!..

மனிதனை - மேல்நிலைக்கு ஏற்றுவது.. 

பள்ளி செல்லும் குழந்தையிலிருந்து முதியோர்கள் வரை அனைவரையும் அழுத்துவது மன உளைச்சல்!..

அதை வெல்லுவது - எளிது!..

ரத்த அழுத்தத்தை நாம் கவனிக்காவிட்டால் - அது நம் வாழ்வை முடித்து வைத்து விடும்.

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது!.. 

- என்றார் ஔவையார்.

எனில் கிடைத்தற்கரியது மானிடப்பிறவி என்பதை உணரமுடிகின்றது.


நம் வாழ்வு நம் கையில் உள்ளது.

வீட்டிலும் வெளியிலும் பரபரப்பைக் குறைத்துக் கொள்வது அவசியம்.

கோபத்தால் ஆகப் போவது ஒன்றுமே இல்லை..

சினம் சேர்ந்தாரைக் கொல்வது - என்கின்றார் வள்ளுவப்பெருமான்.

உணவு மற்றும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி உடல் நலனைக் காப்போம்.

வளமுடன் வாழ்வதிலும் நலமுடன் வாழ்வது சிறந்தது. 
வாழ்வாங்கு வையத்தில் வாழ்வோம்!..

வாழ்க வையகம்..
வாழ்க மானுடம்!..
* * *