நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 29, 2024

உயிரே உணவே 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 15 
 திங்கட்கிழமை


தஞ்சையில் - 
கடந்த டிசம்பர் 30, 31 - ஜன 1 ஆகிய நாட்களில் - நளன் உணவகத்தினர்  நடத்திய உயிர் காக்கும் உணவு எனும் நிகழ்வில் வழங்கப் பெற்ற கையேட்டில் ஒன்பது தலைப்புகளின் கீழ் குறிக்கப்பட்டிருந்த விஷயங்கள் சற்று 
மெருகேற்றப்பட்டு இன்று முதல் நமது தளத்தில்  வெளியாகின்றன..

பகுதி 1

 தேர்ந்தெடுத்தல்


வாதம் பித்தம் கபம் என்று குறிக்கப்பட்ட மூன்றனுள் நமது உடல் வாகு எது என்பதை அறிந்து அதற்கேற்ற உணவு வகைகளை உண்பதே சாலச் சிறந்தது..

உடலுக்கு ஒவ்வாத உணவுகளை ஒதுக்கி விடுதல் நல்லது..

அன்றாட உணவில் ஓரளவு அரிசியுடன் இதர தானியங்கள், பருப்புகள், கீரைகள் காய்கள், கனிகள்  ஆகியனவும் இடம் பெறுதல் வேண்டும்..

இன்று நவீன விவசாயத்தில் இரசாயன உரங்கள் கொண்டு காய்கள் பலவும் விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருவதால் கல் உப்பு கரைக்கப்பட்ட நீரில் காய்களை நன்கு கழுவி எடுத்த பின்னர் பயன்படுத்த வேண்டும்..

பருவ காலத்திற்கு ஏற்ற உணவைத் தேர்ந்தெடுத்து உண்ணுதல் வேண்டும்.. கோடையில் உடலுக்கு இயற்கையாகவே  குளிர்ச்சியூட்டும் உணவுகளையும் மழைக் காலத்தில் உடலுக்கு உஷ்ணம் தருகின்ற உணவுகளையும் உண்பது அவசியம்..

எளிதில் ஜீரணமாகின்ற உணவுகளே ஏற்றவை..நாம் அன்றாடம்  பயன்படுத்துகின்ற தானியங்கள், பருப்புகள், கீரைகள் காய்கள், கனிகள் இவற்றைப் பற்றி அறிந்திருத்தல் அவசியம்..

உண்ணும் உணவில் இயன்றவரை அறுசுவைகளும் சீராக இருப்பது நல்லது.. 

கழிவுகள் தேங்காமல் இருப்பதற்கு நார்ச்சத்து அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..

வேறு வேறு சுவையுள்ள பழங்களை (ஆரஞ்சு/வாழைப்பழம் ) உண்பது கூடாது..

சமைத்த உணவுடன் பச்சைக் காய்கள் ( வெள்ளரிக்காய்) மற்றும் பழங்கள் இவற்றைச் சாப்பிடுவதும் கூடாது..

தேநீர், காஃபி, நவீன முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது..

இரவு கண் விழித்து தூக்கம் கெட்டிருந்தால் மறு நாள் அகத்திக் கீரை சேர்த்துக் கொள்வது நல்லது.. 

அதே நேரத்தில் -
சித்த மருந்துகள் எடுத்துக் கொள்வதாயின் அகத்திக் கீரை கத்தரிக்காய் பாகற்காய் இவற்றை முற்றாகத் தவிர்த்திட வேண்டும். 

இவற்றால் மருந்து முறிவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன..


மூன்று வேளையும் சமைத்த உணவு உண்பதை விடுத்து
(வாரத்தின் சில நாட்களில்) ஒரு வேளையாவது சமைப்பதற்கு அவசியம் இல்லாத காய்களையோ பழங்களையோ உண்பது நல்லது..

வாரத்தில் மூன்று நாட்கள் வசதிக்கு ஏற்றவாறு கம்பு சோளம் கேழ்வரகு இவற்றில் ஏதாவதொன்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்..

வெள்ளை நிற சீனி, அதிக காரம் (மிளகாய்), புளிப்பு, மைதா இவை உடலுக்குக் கேடானவை..

செயற்கையான  சுவை, நிறம் மணம் - ஏற்றப்பட்ட உணவு வகைகளில் விலகி இருப்பது நல்லது..

உண்ணும் உணவு கொதிக்கக் கொதிக்க இல்லாமல் வெதுவெதுப்பாக இருத்தல் வேண்டும்..

காலை உணவு - கஞ்சி, இட்லி, இடியாப்பம், பொங்கல் என்று இருப்பது நல்லது..


வாரத்தில் ஓரிரு நாட்கள் துளசி, வேம்பு, அருகம்புல்,  கற்பூரவல்லி - ஏதாவதொரு மூலிகையைப் பயன்படுத்த வேண்டும்..

நோய் வாய்ப்பட்டோர் நோய் தீர்க்கும் உணவை அறிந்து உண்ணுதல் வேண்டும்..

கருகிய அல்லது சமைக்கும் போது அடிபிடித்த உணவுகள் உண்பதற்குத் தகாதவை..

மேலும்
குறிப்புகள்
அவ்வப்போது
வெளிவர இருக்கின்றன..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..

நாளும் வாழ்க
நன்றென வளர்க..
***

20 கருத்துகள்:

 1. ​நல்ல உபயோகமான பதிவு. படித்துத் தெரிந்து கொள்ளலாம். முடிந்தவரை பின்பற்றலாம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்துத் தெரிந்து கொண்டு. முடிந்தவரை பின்பற்ற வேண்டும்!..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. காலை உணவு கஞ்சி, இடியாப்பம், பொங்கல்... ஓகே.. பொங்கல் சாப்பிட்டால் அன்று முழுவதும் வேறெதுவும் சாப்பிட முடியாமல் போய்விடுகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலையில்
   பொங்கல் சாப்பிட்டால் அன்று முழுவதும் வேறெதுவும் சாப்பிட முடியாமல் போய் விடுகிறது!..

   ஒரு சில பேருக்கு இப்படியான பிரச்னை உண்டு..

   நீக்கு
 3. சமைத்த உணவுகளுடன் பச்சைக் காய்கறி சாலட் சாப்பிடக்கூடாதா?  இன்றைய அனைத்து விருந்துகளிலும் சமைத்த உணவுடன் இந்த சாலடுகள் அணிவகுக்கின்றனவே....  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /// இன்றைய அனைத்து விருந்துகளிலும் சமைத்த உணவுடன் இந்த சாலடுகள் அணி வகுக்கின்றனவே...///

   இது தவறான பழக்கம் என்கின்றது இயற்கை மருத்துவம்..

   நீக்கு
 4. மதுரையில் இருந்தபோது காந்தி ஆசிரமத்திலிருந்து சிலர் எங்கள் அழைப்பின்பேரில் வீட்டுக்கு வந்து சமைக்காத உணவு தயார் செய்து காட்டினார்கள்.  அடுப்பில் வைக்காமல் அறுசுவை உணவு.  நாங்கள் நண்பர்கள் பத்துப்பதினைந்து பேர்களை அழைத்திருந்தோம், அழைக்கச் சொல்லி இருந்தார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் அடுப்பில்லா சமையல் என்று இரண்டு மூன்று முறை இங்கே தஞ்சையில் சாப்பிட்டிருக்கின்றேன்..

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. முதல் படம் வெகு அருமையாக உள்ளது. நேரமின்மை காரணமாக இன்னமும் முழுதாக வாசித்து விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. சிறப்பான குறிப்புகள். பலவற்றை இப்போது நாம் தொடர்வதில்லை என்பது வேதனையான உண்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான்.. காலம் அந்த மாதிரி போய்க் கொண்டே இருக்கின்றது..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி வெங்கட்..

   நீக்கு
 7. சிறப்பான பதிவு.
  உண்ணும் வகை அறிந்து உண்டால் எல்லாம் நலம்.
  மாயவரத்தில் மாதம் ஒரு ஞாயிறு இயற்கை சங்கம் போவோம். அன்று சமைக்காத உணவு தருவார்கள். அவல் உணவு , ஊறவைத்த முளைகட்டிய பயிறு, காய்கறி சாலட், பழங்கள் தருவார்கள்.

  நம் வீடுகளில் வத்தல் குழம்பு, வைத்தால் அன்று பருப்பு போட்ட கூட்டு, அவியல் இருக்கும். சாம்பார் என்றால் உருளை, பாவைக்காய், வாழைக்காய் சேப்பங்கிழங்கு பொரியல் இருக்கும். மோர் குழம்பு, பொரிச்ச குழம்பு எண்ணெய் கத்திரிக்காய் என்று தினம் ஒரு விதமாய் தான் சாப்பிடுவோம். அதற்கு ஏற்ற தொட்டுக் கொள்ளும் காய்கள் செய்வார்கள்.
  காய்ச்சல் வந்தால் மிளகு ரசம், சுட்ட அப்பளம். பருப்பு துவையல் என்று பத்திய சாப்பாடு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயற்கை என்றும் சிறப்பானது..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ..

   நீக்கு
 8. வாதம் கபம் பித்தம் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதை மிக அருமையாக ஒரு காணொளி வெளியிட்டிருந்தார் ஒரு மருத்துவர். எழுதலாமா என்பது யோசனையா இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறந்த சித்த வைத்தியர் மூலமாகத் தான் தெரிந்து கொள்ள வேண்டும்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ..

   நீக்கு
 9. உணவு பற்றி நல்ல பயனுள்ள பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி மாதேவி..

   நீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. நல்ல பயனுள்ள பதிவு.

  /இரவு கண் விழித்து தூக்கம் கெட்டிருந்தால் மறு நாள் அகத்திக் கீரை சேர்த்துக் கொள்வது நல்லது/

  அதுதான் ஏகாதசி இரவு விரதம் இருந்து கண் முழிக்கும் போது, மறுநாள் உணவுடன் அகத்திக் கீரையை பரிந்துரைத்தார்கள். கூடவே நெல்லிக்காயையும். பழங்காலத்தில் நம் முன்னோர்கள் நமக்கு நல்லதைதான் சொன்னார்கள். நல்ல பயனுள்ள பதிவு இனியும் தொடரட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்னோர் சொல் அமிர்தம் என்றொரு பழமொழி உண்டு..

   ஆங்கில வழிக் கல்வியில் நமது கலாச்சாரம் தொலைந்து விட்டது..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..