நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 03, 2024

தமிழமுதம் 18

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 18
புதன் கிழமை

 குறளமுதம்

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது.. 103
**

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் 
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய் வந்து 
எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தர்மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின 
காண் பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப 
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்..
**

மதம் கொண்ட யானையைப் போன்றவரும், 
பகைவர் அஞ்சி நடுங்கிடும் 
தோள்வலி உடையவருமான 
நந்தகோபருடைய மருமகளே.. 

மணங்கமழ் குழலி நப்பின்னையே.. 
நீயாகிலும் 
வந்து கதவைத் திறப்பாயாக..

கோழிகள் அழைப்பதையும்  
மல்லிகைப் பந்தலில்  குயில்கள் 
கூவுவதையும் கேட்பாயாக..

மலரினும் மெல்லிய விரல்களையுடையவளே..
உன் கணவனுடைய திருநாமங்களைப் 
பாடுவதற்காக வந்துள்ளோம். 

வளையல்கள் ஒலிக்கின்ற
செந்தாமரைத் திருக்கரத்தினால் மகிழ்வுடன் 
வந்து கதவைத் திறந்தருள்வாயாக!..
**
திருப்பாசுரம்


பொருளால் அமருலகம்  புக்கு இயலல் ஆகாது
அருளால் அறம் அருளும் அன்றே அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த  மணிவண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை.. 2222
-: பூதத்தாழ்வார் :-
**

சிவதரிசனம்
தேவாரம்
திருக்கடைக்காப்பு


வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழி தேவிபாகம்  ஆயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க்கேதும் ஏதம் இல்லையே.. 3/53/1
-: திருஞானசம்பந்தர் :-
**

 போற்றித்
திருத்தாண்டகம்
(திரு ஆரூர்)


வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி
நம்புமவர்க்கு அரும்பொருளே போற்றி போற்றி
நால்வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 7
-: திருநாவுக்கரசர் :-
**

திருவாசகம்


 பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்
பற்றுமா றடியனேற்கு அருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து
பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.. 7
-: மாணிக்கவாசகர் :-
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

 1. "சாமி..  சத்யபாமா கதவைத் திறவாய்.."  பாடல் நினைவுக்கு வருகிறது!  கடைசி படம் கொஞ்ச அதிக எல்லாம் ரசிக்க வைத்தது.  மனிதர்கள் (Bhaa)பாவம் காட்டலாம்.  அந்த செல்லத்தின் உடல் மொழியில்  வழியும் அந்த நேசம்..  குழைவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம் ..

   நீக்கு
 2. படங்கள் அருமை, அதுவும் கடைசி படம் மிக அருமை.
  பாடல்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ..

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. படங்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது. பாசுரங்களைப் பாடி, விளக்கமுணர்ந்து மகிழ்ந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..