நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, செப்டம்பர் 26, 2014

அரைக்காசு அம்மன்

நாமெல்லாம் கவனக் குறைவாக ஏதாவதொரு பொருளை எங்கேயாவது வைத்து விட்டுத் தேடுவது உண்டு.

தவிரவும் எதையாவது தொலைத்து விட்டு அல்லல் படுவதும் உண்டு.

அந்த வேளைகளில் நமக்கு - அன்புக்குரிய அன்னையாக கை கொடுத்து உதவி செய்பவள் ஒரு அம்மன்!..

அவள் திருப்பெயர் - ஸ்ரீ அரைக்காசு அம்மன்!..


தொலைந்து போன பொருட்கள் கிடைக்க வேண்டி அரைக்காசு அம்மனை மனதார நினைத்து பிரார்த்தனை செய்து விட்டுத் தேடினால் தொலைந்த பொருள் உடனடியாகக் கிடைக்கின்றது.

அப்படி பொருள் கிடைத்த உடன் அவரவர் வீட்டிலேயே பூஜை மாடத்தில் வெல்லத்தை வைத்து அதை அம்மனாகப் பாவித்து தீர்த்தம் கொடுத்து பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இந்த வெல்லத்தை வீட்டிலுள்ள அனைவரும் பிரசாதமாக உட்கொள்ளலாம்.

அவளுடைய திருவுருவப்படம் வீட்டில் இல்லாவிட்டாலும் கூட - 
அவள் திருவுருவம் எப்படி இருக்கும் என்பது தெரியாவிடாலும் கூட - 
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவுகின்றனள்.

மேலும் - களவு போன பொருட்கள் கிடைக்கவும், கொடுத்த பணம் ஒழுங்காகத் திரும்பி வரவும், இழுபறியாக இருக்கும் சொத்து தங்கள் கைக்கு வரவும் அரைக்காசு அம்மனை நினைத்து வழிபட்டால் நிச்சயம் அவள் உதவுகின்றாள்.

இத்தகைய பிரார்த்தனைகள் கைகூடியதும் அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து நன்றிக் கடன் செலுத்தலாம்.

வாய்ப்பு கிடைக்கும் போது அவளுடைய திருத்தலத்திற்குச் சென்று சந்நிதியில் அவளைக் கண்ணாரக் கண்டு இன்புறலாம்.

சரி - அவள் எங்கே வீற்றிருக்கின்றாள்!?..

சில தினங்களுக்கு முன் சகோதரி இளைய நிலா இளமதி அவர்கள்  - இதைப் பற்றிய தகவல்களைக் கேட்டிருந்தார்கள். 

தொலைந்து போன பொருளை மீட்க உதவும் ஸ்லோகம். பிரசித்தமான கோயிலின் அன்னையின் பெயரில் பாடப்பட்டது அது. எழுதி வைத்திருந்தேன். எங்கோ தவறி விட்டது . முடிந்தால் தேடித் தாருங்கள்!.. பலருக்கும் பயன் கிட்டும்!.. - என்று.

நானும் அவர்களுக்காகத் தேடினேன். 

ஸ்லோகம் பாடப்பட்ட கோயில் எது?.. 

தெரியாது!..

அந்த அம்பாளின் பெயர்!..

அதுவும் தெரியாது!..

அப்புறம் எப்படித் தேடுவாய்?!..

அம்பாளைத் தேடுவதே ஆனந்தம் !..   - என்று தேடினேன்.

அந்த வேளையில் மிக வியப்பான தகவல்களை அந்த அம்பிகையே முன் வந்து அருளினாள்.

திருத்தலம் - திருக்கோகர்ணம், புதுக்கோட்டை நகர்.
ஸ்வாமி - ஸ்ரீ கோகர்ணேஸ்வரர்.
அம்பாள் - ஸ்ரீ பிரகதாம்பாள்.

 

தீர்த்தம் - கபில தீர்த்தம் எனும் வற்றாத சுனை.
தலவிருட்சம் - மகிழ மரம்.
தலப்பெருமை - சாபத்திற்கு ஆளான காமதேனு வழிபட்டு நலம் பெற்றதலம்.

ஸ்ரீ பிரகதாம்பாளின் செல்லப்பெயர் - அரைக்காசு அம்மன்.

திருக்கோகர்ணம் குடைவரைக் கோயிலாகும். புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் - புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.

நாமறிந்த மொழியில், மலர் கொண்டு வழிபட - நூறு நூறு நன்மைகளை அள்ளித் தருபவள் அரைக்காசு அம்மன்!.. எனப் புகழ்கின்றனர் இறையன்பர்கள்.

அன்பு கொண்ட மனங்களைத் தேடி அவளே வருகின்றாள் - என்பதற்கு நிறைய சாட்சிகள்!..

இதோ - அன்னையின் திருவடிகளில் எளியேன் அர்ச்சித்த பாமாலை!..

ஸ்ரீ பிரகதாம்பாள் எனும் அரைக்காசு அம்மன் 
போற்றிப் பாமாலை.

108 மலர் வழிபாடு.

 ஓம்

அன்பின் உருவாம் பிரகதி போற்றி
நின்திரு மலரடி பணிந்தேன் போற்றி
நாவளர் நற்றமிழ் நங்காய் போற்றி
தூமலர் தூவித் துதித்தேன் போற்றி!.. {4}

கரிமா முகனைப் பயந்தாய் போற்றி
அரிபிர மாதியர்க் கரியாய் போற்றி
இளையவன் கந்தனை ஈந்தாய் போற்றி
விளைநலம் எங்கும் விதிப்பாய் போற்றி!..{8}

சுரும்பார் குழலுமை கௌரி போற்றி
வருந்தா வகையெனக் கருள்வாய் போற்றி
மங்கல நாயகி மாமணி போற்றி
எங்கும் நிறைந்திடும் இறைவி போற்றி!..{12}

யாழ்நிகர் மொழியாய் யாமளை போற்றி
சூழ்வினை தீர்க்கும் சூலினி போற்றி
பல்வளை நாயகி பார்ப்பதி போற்றி
நல்வழி அருளும் நாயகி போற்றி!..{16}

போகம் ஆர்த்த பொற்கொடி போற்றி
பாகம் பிரியாய் பராபரை போற்றி
ஐயாற மர்ந்த அறமே போற்றி
ஆனைக் காவின் அம்பிகை போற்றி!..{20}

உலகுயிர் வளர்க்கும் உமையே போற்றி
அலகில் புகழ்நிறை அம்பிகை போற்றி
சிவகாமி எனும் செல்வி போற்றி
நவமா மணியே நாரணி போற்றி!..{24}

கத்துங் கடல்தரு முத்தே போற்றி
நத்தும் நல்லவர் நட்பே போற்றி
கற்றவர்க் கின்பக் கதியே போற்றி
உற்றவர்க் குகந்த நிதியே போற்றி!..{28}

அற்றவர்க்கு ஆரமுது ஆனாய் போற்றி
செற்றவர் செருக்கு சிதைப்பாய் போற்றி
செண்டாடும் விடைச் சிவையே போற்றி
உண்ணா முலையெம் அன்னாய் போற்றி!..{32}

வடிவுடை நங்காய் வாழ்வே போற்றி
கொடியிடைக் கோமள வல்லி போற்றி
மங்கலம் அருளும் மங்கலி போற்றி
சஞ்சலம் தீர்த்திடும் சங்கரி போற்றி!..{36}

பாழ்மனம் பதைக்க எழுவாய் போற்றி
சூழ்பகை முடித்துத் தருவாய் போற்றி
யாழ்நகர் வளமுற வருவாய் போற்றி
யாழ்வளர் வளரென அருள்வாய் போற்றி!..{40}

கடம்பவ னத்துறை கயற்கண் போற்றி
கடவூர் வளரும் கற்பகம் போற்றி
அபிராமி எனும் அமுதே போற்றி
மயிலா புரியில் மயிலே போற்றி!..{44}

சிவகதி காட்டும் சுந்தரி போற்றி
பரகதி அருளும் தற்பரை போற்றி
தையல் நாயகித் தாயே போற்றி
வையம் காத்திட வருவாய் போற்றி!..{48}

இமவான் பெற்ற இளங்கிளி போற்றி!..
மலையத் துவசன் மகளே போற்றி
முப்புரம் எரித்த ஏந்திழை போற்றி
முத்தமிழ் வடிவே முதல்வி போற்றி!..{52}

ஒளிக்குள் ஒளியாய் ஒளிர்வாய் போற்றி
வெளிக்குள் வெளியாய் மிளிர்வாய் போற்றி
மண்முதல் ஐம்பெரும் வளமே போற்றி
கண்முதல் களிக்கும் நலமே போற்றி!..{56}

பஞ்சமி பைரவி ரஞ்சனி போற்றி
நஞ்சுமிழ் நாக பூஷணி போற்றி
சும்பநி சும்ப சூதனி போற்றி
சண்டன் முண்ட மர்த்தனி போற்றி!..{60}

சிம்ம வாகினி ஜனனி போற்றி
மகிஷ மர்த்தனி துர்கா போற்றி
நீலி பயங்கரி நின்மலி போற்றி
தாரக மர்த்தனி காளி போற்றி!..{64}

ஆரணி பூரணி காரணி போற்றி
மாலினி சூலினி மதாங்கினி போற்றி
சூளா மணியே சுடரொளி போற்றி
ஆளாம் அடியர்க் கருள்வாய் போற்றி!..{68}

மேலை வினைகடி விமலி போற்றி
வாலை வளந்தரு வராஹி போற்றி
திருவும் அருவும் திகம்பரி போற்றி
பருவரை மருந்தே பகவதி போற்றி!..{72}

வேற்கண் அம்மை மீனாள் போற்றி
நாற்பயன் நல்கும் நங்காய் போற்றி
மாதவர்க் கிளைய மடக்கொடி போற்றி
மாதவர் போற்றும் சிவக்கொடி போற்றி!..{76}

பவளவரை மேற்பசுங் கொடி போற்றி
தவளவெண் நீற்றோன் தலைவி போற்றி
தீபச் சுடரில் திகழ்வாய் போற்றி
பாவத் தீவினை தகர்ப்பாய் போற்றி!..{80}

குழையா அகத்தைக் குழைப்பாய் போற்றி
இழையாய் எம்மை இழைப்பாய் போற்றி
புவனப் பொருளிற் பொருந்தினை போற்றி
பவளக் கனிவாய்ப் பைங்கிளி போற்றி!..{84}

சந்த்ர சடாதரி சாம்பவி போற்றி
சுந்தரி சுலக்ஷண ரூபிணி போற்றி
கலைமகள் பணியும் மலைமகள் போற்றி
அலைமகள் அடிபணி நலமகள் போற்றி!..{88}

திருக்கோ கர்ணத் திருவே போற்றி
ஒருகோடி நலந்தரு வடிவே போற்றி
நான்முக ரூபிணி ப்ராம்ஹணி போற்றி
நாரண ரூபிணி வைஷ்ணவி போற்றி!..{92}

பண்ணின் நேர்மொழிப் பாவாய் போற்றி
கண்ணின் மணியாய்க் காவாய் போற்றி
குமிழ்தா மரைமலர் கொடியிடை போற்றி
தமிழினும் இனிமை திகழ்ந்தாய் போற்றி!..{96}

அற்றார் அழிபசி தீர்த்தருள் போற்றி
உற்றார் உவப்புற சேர்த்தருள் போற்றி
பெய்யும் வளங்களில் இந்திரை போற்றி
வையகம் காத்திடும் வைஷ்ணவி போற்றி!..{100}

புல்லர்கள் போயற புரிகுவை போற்றி
நல்லன நவின்றன நல்குவை போற்றி
குங்குமம் தந்தருள் திருவடி போற்றி
மங்கலம் தந்தருள் மலரடி போற்றி!..{104}

போற்றி நின்பொன்னடி புதுமலர் போற்றி
போற்றி நின்புகழ்நிறை திருவடி போற்றி
போற்றி நின்திருவடி பணிந்தேன் போற்றி
போற்றி பிரகதாம்பிகா போற்றி போற்றி!..{108}

ஓம்
* * *

இளமதி அவர்கள் கேட்டிருந்ததைப் போல ஸ்லோகம் அல்ல!..

தேடிச்சென்றபோது கிடைத்தது -  மலர் வழிபாட்டிற்கான பாமாலை.
108 வரிகளை உடையது.

அதனை முழுதும் வாசித்தேன். எழுத்துப் பிழைகளுடன் இருந்தது. ஒழுங்கு செய்து பதிவிடும் போது பிரத்யேகமான உத்தரவு. 

அதன் படி  - அந்த பாமாலையின் புது வடிவம் தான்  - இங்கே பதிவில் உள்ளது.
 
இந்த பாமாலையை நேற்று காலையில் நான் எழுதினேன். ஆனால் மூலப் பிரதி வேறு. அது  - சமீப காலத்தில் நல்ல மனம் கொண்ட இறையன்பரால் எழுதப்பட்டிருக்கின்றது.

பலருக்கும் அந்த மூலப் பிரதி கிடைத்து - நாள் வழிபாட்டில் இருக்கக் கூடும். அந்தப் பாமாலைக்கு இந்தப் பாமாலை மாற்று என்ற எண்ணத்தில் நான் இதனை எழுத வில்லை. அதைத் தான் பிழை திருத்தி வெளியிட முயன்றேன்.

ஆனால் - வேறு விதமாக அமைந்து விட்டது.

இதனைக் கொள்வோர் கொள்க!..


ஸ்ரீபிரகதாம்பாள் தான்  அரைக்காசு அம்மன் என அழைக்கப்படுபவள்!..

அரைக்காசு அம்மனை வேண்டினால் தொலைந்து போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும் என்பது பொதுவாக உள்ள கருத்து. 

அது உண்மையும் கூட. ஆனால் -

தொலைந்து போன பொருட்கள் கிடைப்பதற்கு மட்டுமின்றி நினைத்த நற்காரியங்கள் நிறைவேறவும் ஆத்மார்த்தமாக அம்மனை வழிபட்டு வருகின்றனர்.  

அப்படி நேர்ந்து கொண்ட காரியங்கள் கண்டிப்பாக நிறைவேறுகின்றன. 

புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்தபோது புழக்கத்தில் இருந்த காசுகள் இவை. பதினாறாம் நூற்றாண்டில் அச்சிடப்பட்டு மூன்று நூற்றாண்டுகள் புழக்கத்தில் இருந்தன இக்காசுகள். 

இந்தக் காசின் ஒரு புறம் ஸ்ரீ பிரகதாம்பாளின் அமர்ந்த திருக்கோலமும் மறு பக்கத்தில் ''விஜய'' என்ற தெலுங்கு வார்த்தையும் பொறிக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் காசு அப்போதைய அரை அணாவிற்கு சமமான மதிப்பை உடையது. 

அம்மன் சந்நிதியில் வைத்து நெல்லும் வெல்லமும் ஒரு கைப்பிடி அளவுக்கு அரைக்காசும் பக்தர்களுக்கு கொடுத்திருக்கின்றார்கள் அந்தக் காலத்தில்!..

அப்படிக் கொடுக்கப்பட்டதால் அம்மனும் அரைக்காசு அம்மன் என்று பெயர் பெற்று விட்டாள்.


நாற்பது ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டில் - சிறு கலசம் நிறைய இந்த காசுகள் இருந்தன. என் தந்தையும் தன் நண்பர்களுக்கு எல்லாம் இந்த காசுகளைக் கொடுத்தார். 

இப்போது - அதிர்ஷ்ட வசமாக ஒரே ஒரு காசு மட்டும் என்னிடம் உள்ளது.

இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னர் - அரைக்காசு அம்மனைப் பற்றிப் பதிவிடும் போது - அதன் மகத்துவத்தை நானும் தெரிந்து கொண்டேன்.

ஒரே ஒரு காசு மட்டும் என்னிடம்!.. - என்றால் - இங்கே குவைத்தில் என் பெட்டிக்குள் தான் இருக்கின்றது.

இத்தனை நாள் என்னுடன் இருந்த அரைக்காசு அம்மன் - தன்னை இப்போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றாள்..

என்னே - அவள் கருணை!..

இதற்காக இளைய நிலா இளமதி அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்!..

தொலைந்த பொருள் கிடைக்க 
அரைக்காசு அம்மனை வேண்டிக் கொள்க!.. 
அன்னை அருள் புரிவாள்!..

ஓம் சக்தி ஓம்
* * *

26 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா!

    என்னவெனச் சொல்ல என் மகிழ்வினை!.. கண்கள் தாரை தாரையாக உகுக்கப் படித்தேன்!
    அன்னையின் அருளும் ஐயா உங்கள் அன்பும் என்னை நெகிழச்செய்துவிட்டன!..

    ஸ்லோகம் என நான் சொன்னதற்குக் காரணம் 4 வரி கலிவிருத்தமாக இருந்தது நினைவு. ஆனால் இதே அரைக்காசு அம்மனை வேண்டித்தான் என்பது என் புத்திக்கு இப்போ தெட்டத்தெளிவாக நினைவில் வருகிறது!

    ஐயா!.. இங்கும் கூட அன்னையின் அற்புதம் நிகழ்ந்தது கண்டு மெய் சிலிர்த்துப் போனேன்.
    கண்ணெனக் காப்பேன் இதனை! என் உறவினர் ஒருவருக்கு ஏற்பட்ட மிகப் பெரிய ஒரு பொருட் தொலைவிற்காகத் தேட முற்பட்டேன்.
    அதையே உங்களிடம் கேட்கக் கிடைக்குமே என என் உள்ளுணர்வு சொன்னதால் உங்களிடம் கேட்டுவைத்தேன்!

    கைமேல் பலன். எப்படி என் நன்றியுணர்வை உங்களுக்குத் தெரிவிப்பேன்!..

    என் உளமார்ந்த நன்றி ஐயா!

    அன்னையின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்!

    மீண்டும் அன்பு நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் மகிழ்ச்சியைக் கண்டு நானும் உளம் நெகிழ்ந்தேன்.
      தங்கள் வாழ்த்துரைக்கு நன்றி.. வாழ்க நலம்..

      நீக்கு
    2. பெயரில்லா21 ஜூன், 2022 11:00

      அரைக்காசு அம்பாளின் திருவுருவப் படம் வேண்டும் ஐயா. உதவ முடியுமா. சிவ சிவ 🙏

      நீக்கு
  2. படித்து மலைத்து விட்டேன் இந்த பதிவை.... பாராட்ட எனக்கு தெரியவில்லை நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  3. அரைக்காசு அம்மன் அறிந்தேன் நன்றி ஐயா
    சில வார்த்தைகளைப் படிக்க இயலவில்லை, எழுத்துக்கள் உருமாறி உள்ளன
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      எதிர்பாராமல் எங்கோ பிழை நேர்ந்துள்ளது. பல நண்பர்களின் தளங்களில் பதிவு வெளியாகவில்லை. இப்போது தாங்கள் தளத்தில் காணும் குறைகளைக் கூறியிருக்கின்றீர்கள்.. வைரஸ் தாக்குதலாக இருக்கும் என்று கருதி தளத்தின் அமைப்பை மாற்றினேன். மேலும் என்ன செய்வதென்று தெரியவில்லை..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள்தான் அரைக்காசு அம்மன் என்று அறியும்போது அந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்கு இன்னும் அதிகமாக உண்டாகிறது. ஏனெனில், நானும் எத்தனையோ தடவை புதுக்கோட்டை சென்று இருந்தும் அந்த கோவிலுக்கு இதுநாள் வரை சென்றதில்லை. அவசியம் செல்ல வேண்டும். பதிவுக்கு நன்றி! நீங்கள் வைத்து இருக்கும் அதிர்ஷ்டக் (அம்மன்) காசு உங்களுக்கு பல வளங்களையும் உண்டாக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இந்தப் பதிவினால் எனக்கும் புது அனுபவம் கிடைத்துள்ளது.
      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி. நன்றி.

      நீக்கு
  5. அரைக்காசு அம்மன் பற்றிய விரிவான பகிர்வும், அம்மன் மேல் தாங்கள் எழுதிய போற்றியும் படித்தேன். மகிழ்ந்தேன். இளமதிக்கு நன்றி.
    புதுக்கோட்டைக்கு சென்று அரைக்காசு அம்மனை தரிசனம் செய்து இருக்கிறேன்.

    ஆலயம் பக்தி இதழுக்கு கொடுத்த அரைக்காசு அம்மன் படம் என் பூஜை அறையில் இருக்கிறது. தினம் கை மறந்தால் போல் வைத்த பொருளை தேடி கிடைக்காமல் அம்மனை வேண்டிக் கொள்வது இயல்பாய் நடக்கும்.
    இதே போல் காசு எங்கள் வீட்டில் இருந்தது.(என் அம்மா வீட்டில்)

    என் மகள் தொலைத்த ஒரு பொருள் பற்றி வெகு நாட்களுக்கு பின் தான் சொன்னாள் முன்பே சொல்லி இருக்கலாம் அன்னையிடம் வேண்டி இருப்பேன் என்றேன். இருந்தாலும் நம்பிக்கையுடன் அவள் வீட்டிலேயே கண்ணுக்கு தெரியாமல் மறைந்த பொருள் கிடைக்க வேண்டும் என்று வேண்டி வருகிறேன்.
    இந்த பதிவை படித்தவுடன் நம்பிக்கை இன்னும் உறுதியாகிறது.
    இளமதி அவர்களின் உறவினர் தொலைத்த பொருள் கிடைக்க அம்மன் அருள்வாள்.
    நன்றி, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இந்தப் பதிவினால் எனக்கும் புது உற்சாகம் கிடைத்துள்ளது.
      தங்களுடைய அனுபவத்தினை இங்கே பகிர்ந்து கொண்டது -
      அரைக்காசு அம்மனின் அன்பினை வெளிப்படுத்துவதாக உள்ளது.
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி. நன்றி.

      நீக்கு
    2. கோமதி அக்காவிற்கும் என் அன்பு நன்றி!

      நம்பிக்கைதான் வாழ்க்கை!
      நம்பிக்கைக்கு ஊக்குவிப்பாகச் சில விடயங்களைப்
      பரம்பொருள் எமக்கு அளித்துள்ளான்! அவற்றை இனங்கண்டு
      ஏற்று வாழ்வில் சிறப்போம்!

      ஐயாவுக்குத்தான் இங்கு எங்கள் நன்றியைக் கூறவேண்டும்!
      அவரின் அயராத சேவை மேலும் ஓங்கிடப்
      பரம்பொருளின் இன்னருளை வேண்டுகிறேன்!

      வாழ்க வளமுடன்!

      நீக்கு
    3. அன்பின் சகோதரி..
      நம்பிக்கை தான் வாழ்க்கை.. தாங்கள் கூறுவது சரியே!..
      தங்கள் மீள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      வாழ்க நலமுடன்!..

      நீக்கு
  6. ஐயா! இது அரிய தகவல்! அரைக்காசு அம்மன் என்பதே! எங்களுக்கு புதியதும் கூட! தெரிந்து கொண்டோம் அம்மனைப் பற்றி! குறித்தும் கொண்டோம்! செல்வதற்கு! பல புதிய அரிய தகவல்கள்!

    மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு! அதுவும் தேடி எடுத்து கொடுத்துள்ளீர்கள்! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      சரியான வழியில் தான் சென்று கொண்டிருக்கின்றோம் என்று - எனக்கும் புது உற்சாகம் கிடைத்துள்ளது.

      நான் ஏதும் பெரிதாகச் செய்து விடவில்லை..தேடலின் போது -
      தன் பிள்ளைகளுக்காக - அன்னை அவளே வந்து முன் நின்றாள்!..

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி. நன்றி.

      நீக்கு
  7. ஒரு சகோதரி பதிவருக்காக மெனக் கெட்டபோது வந்த பாடலும் பதிவும் அருமை. தொலைந்த பொருள் கால முளைத்து எங்கும் போகாது. சில நினைவுகள் மீண்டு வருவது அன்னையின் அருள் என்று நம்புவது நம் கலாச்சாரத்தின் அடிப்படையே. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      நினைவு தடுமாறிப் போகாமல் - தடம் மாறிப் போகாமல் இருக்க வேண்டுமே!..

      தங்கள் அன்பு வருகைக்கும் இனிய வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  8. முன்னரே இந்த ஆலயம் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் ஏனோ இங்கே செல்ல இன்னமும் நேரமும் வாய்ப்பும் அமையவில்லை.

    சிறப்பான தகவல்களுடன் உங்கள் போற்றி துதியும் மிக அருமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி.

      நீக்கு
  9. Ikk koiyilin ulle ammanin poorikal suvaril ullathu.Athu ithalathil kidaikkuma?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கு நல்வரவு..

      சென்ற ஆண்டு ஸ்ரீ பிரகதாம்பாள் திருக்கோயிலுக்குச் சென்றிருந்தேன்..

      தாங்கள் குறிப்பிட்டுள்ள அம்மனின் போற்றிகள் தனியாக சிறு புத்தகமாகவும் இருக்கின்றது..

      அதிலுள்ள சொற்பிழைகளைத் திருத்தி வெளியிட முயன்றேன்..
      ஆனால் - அம்மன் அருளால் அது வேறுவிதமாக அமைந்து விட்டது..

      ஆனாலும் தாங்கள் கேட்டிருக்கும் அம்மன் போற்றித் துதிகளைத் திருத்தமாக வெளியிட முயற்சிக்கின்றேன்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. இந்த அம்மன் விவரம் சமீபத்தில் கேட்டேன் எனது முக்கிய கோப்பினை வீட்டில் எங்கோகோ வைத்து விட்டு மறதி காரணமாக பல இடங்ககளில் தேடிப் பார்த்தும் கிடைக்காகாமல் போகவே அம்மனை மனதார வேண்டி கொண்டு தேடிய போது உடனே அந்த கோப்பினை கண்டு பிடித்தேன். என்னால் நம்ப முடியவே இல்லை. இந்த நிகழ்ச்சி என்வாழ்வில் புதுமையை உணர்ந்த நாளாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜோதி ராமலிங்கம்..

      தங்களுக்கு நல்வரவு..
      மிகுந்த அற்புதங்களை நிகழ்த்துகின்றவள் - அன்னை பிரகதாம்பாள்!..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  11. Super Sir.Ellam ammanin arul.en magan niyabagam ilanthu comavil irukiraan.avan tholaitha niyabagam thirumba thara thaai idam vendukiren.

    பதிலளிநீக்கு
  12. அக்காவின் நகை மற்றும் பணம் காணாமல் போய் விட்டது.. திரும்ப கிடைக்கும் அம்மாவிடம் மனதார பிரார்த்தனை செய்து வேண்டுகிறேன். இழந்த பொருள் திரும்ப கிடைக்கணும் அம்மா..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..