நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 30, 2014

தல விருட்சங்கள் - 3

தல விருட்சங்கள் தொடர்கின்றன!..

முன்பெல்லாம் கிராமம் என்றால் - பொதுவான ஒரு குளக்கரை. அதனைச் சுற்றிலும் பலவிதமான மரங்கள். தெளிந்த நீரில் தாமரை, அல்லி, ஆம்பல், ஆரை - என பலவிதமான நீர்த் தாவரங்கள்.

கரையோரத்தில்- அருகு, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லி, தர்ப்பை - என பலவிதமான மூலிகைகள்.

குளிர்ந்த நீரில் தெள்ளுப்பூச்சி முதல் தவளைகள், நீர்ப் பாம்புகள், மீன்கள் மற்றும் ஆமைகள் - என அனைத்தும் அடைக்கலமாகியிருக்கும்.


அந்தக் குளத்தங்கரை -  நிச்சயம் அரசு, வேம்பு , புங்க மரங்களை உடையதாக இருக்கும். அரச மரத்தினடியில்  பிள்ளையார் - நாக விக்ரகங்கள் சூழ்ந்திருக்க வீற்றிருப்பார்.

குளத்தை சுற்றி - ஆங்காங்கே படித்துறைகள்.. இருப்பினும்,

மூலைக்கு மூலை அந்தக் குளத்தின் நீரை மக்கள் பலவிதமாக பயன்படுத்திக் கொண்டிருப்பர். இவற்றை எல்லாம் மீறி இயற்கையாக - அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தும் மக்களுக்கு - அந்த நீரால் வியாதிகள் ஏதும் ஏற்பட்டதில்லை.

மண்ணும் நீரும் மாசு படுத்தப்பட்ட பின்னரே -  நீரிலிருந்து மக்களுக்கு வியாதிகள் ஏற்பட்டன.

இப்படிப்பட்ட குளக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் குளிப்பதையே பெரும் பாக்கியமாகக் கருதினர் அந்தக் காலத்தில்!..  - ஏன்!?..

சூரியன் உதிக்காத, பனி விலகாத இளங்காலைப் பொழுது - ப்ரஹ்ம முகூர்த்தம் எனப்படும். இந்த நேரத்தில் - நீர் நிலைகளின் மேற்பரப்பிலும்  பசுமையான மரங்கள் நிறைந்த சோலைகளிலும் ஓசோன் படலம் பரவி இருக்கும்.


அதனால் தான் - ப்ரஹ்ம முகூர்த்த வேலையில் குளிக்க வேண்டும் என்கின்றனர் பெரியோர்.. அப்போது நம்முள் கலக்கும்  ஓசோன்,  உடலுக்கும் உள்ளத்துக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். 

அந்த கிராமத்தில் வேறு பெரிய கோயில்கள் இருந்தாலும், இந்த அரச மரத்தடியே பிரதான வழிபடும் இடமாகவும் பொது இடமாகவும் திகழும்.

நெடிதுயர்ந்ததாகவும் விரிந்து பரந்த கிளைகளை உடையதாகவும், விளங்கும் அரச மரத்தின் இலைகள் இதய வடிவம் உடையவை 

அரச மரத்தின் உலர்ந்த சுள்ளிகள் மட்டுமே எல்லாவித ஹோமங்களுக்கும் உகந்தவை.

பசுமையான இலைகளால் நிறைந்து - அதிக அளவு பிராண வாயுவை வெளியேற்றும் மரங்களுள் அரசும் ஒன்று. இந்த நிர்மலமான ஆக்ஸிஜன் - நம் மூளையும், பிற உறுப்புகளும் அதிக ஆற்றல்  பெற உதவுகின்றது.  

அடர்ந்த இலைகள் கொண்டு கிளைத்து வளரும் தன்மையுடைய அரசமரம் நீண்ட ஆயுள் கொண்டது.  இதய வடிவத்தில் இருக்கும் இலைகளும் பழங்கள், மரப்பட்டைகள் எனப் பல மருத்துவக் குணம் உடைய இம்மரம் ஒரு மருத்துவ அற்புதம்.
 
சைவ வைணவ சமயங்களும்,  புத்த சமயமும் அரச மரத்தைப் புனிதமாகக் கருதுகின்றன. இது பிப்பலாச விருட்சம், அரணி, அஷ்வதா - என்று பலவாறு அழைக்கப்படுகின்றது. இது ஆலமரம், அத்திமரம் போன்று புனிதத் தன்மை கொண்டது.

சரஸ்வதி நதியானது நான்முகனின் கமண்டலத்திலிருந்து தோன்றி பலாசம் எனும் அரச மரத்தினுள் ஊடுருவி வெளிப்பட்டு  ஹிமாசல மலையில் வழிந்து ஓடிவருகின்றது - என ஸ்கந்த புராணம் குறிப்பதாக சான்றோர்கள் கூறுகின்றனர்.


வாழ்வின் அர்த்தம் தேடி - அரண்மனையின் சுக போகங்களைத் துறந்து ஞானம் தேடிப் புறப்பட்ட சித்தார்த்தர் - ஒருநிலையில் ஞானம் எய்தி,  கௌதம புத்தர் ஆனார் என்பது வரலாறு.

சித்தார்த்தர் அமர்ந்து தியானம் செய்தது - அரச மரத்தின் நிழலில்!..  

சைவத்தில் - அரச மரம்,  ஞான விருட்சம் எனக் குறிக்கப்படுகின்றது.

நாயன்மார்களுள் ஒருவராகத் திகழும் திருமூலர்- மூலன் எனும் இடையனின் உடம்பிற் புகுந்த சிவயோகியார். இவர் திருக்கயிலை மாமலையில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர். இவரே மகத்தான திருமந்திரம் அருளியவர்.

திருவாவடுதுறைத் திருக்கோயிலை வழிபட்டு அங்குள்ள அரசமரத்தின் நீழலில்  பல்லாண்டுகள் சிவயோகத்தில் அமர்ந்திருந்தவர்.  அவரே - இதனைத் நமக்குத் தெரிவிக்கின்றார்.

சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே
. (
பாயிரம்.திருப்பாடல் - 18)

அரச மரத்தை சிவபோதி என திருமூலர் குறிக்கின்றார். போதம்  எனில் - ஞானம். சிவ ஞானத்தைத் தருவது சிவபோதி - என்பது திருக்குறிப்பு.

திருமந்திரம் பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் இடத்தில் வைத்துப் போற்றப் படுகின்றது.

புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த அரசின் அடியில் அமர்ந்து தியானம் செய்ய முடியும் என்பர். தியானம் செய்யும் போது மனம் தெளிவடைந்து ஒரு நிலைப்படும். நல்ல சிந்தனை மனத்தினுள் தோன்றும்.  நல்ல சிந்தனையால் நம்மைச் சுற்றிலும் நேர்மறை ஆற்றல் விளங்கும்.

அரச மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் மனம்  தெய்வ சிந்தனை ஊற்றெடுக்கும். ஞானம் கிட்டும்.

ஆக - ஆரோக்கியமான வாழ்வுக்கு அரச மரம் உறுதுணை என்பது தெளிவு!..

ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூரில்  அவதரித்து - பதினாறு ஆண்டு காலம் - சடகோபன் எனத் தவமிருந்து - நம்மாழ்வார் என ஞானப்பேரொளியாக வெளிப்பட்டது புளியமரத்தின் அடியில் இருந்து!..


அம்பிகையின் திருக்கரத்தினில் திகழ்வது கரும்பு!.. கரும்பு மங்கலப் பொருட்களுள் ஒன்று.

கருப்பஞ்சாற்றிலிருந்து பெறப்படும் சர்க்கரை - வெல்லம் இல்லாமல் நம்மிடையே எந்த மங்கலச் சடங்குகளும் இல்லை. 

வெல்லத்தையே பிள்ளையாராகக் கொண்டு செய்யப்படும் வெல்லப் பிள்ளையார் வழிபாடு பிரசித்தமானது. 

தஞ்சையிலிருந்து நீடாமங்கலம் செல்லும் வழியில் உள்ளது கோயில் வெண்ணி.

இதன் புராதனப் பெயர் திருவெண்ணியூர்.  எம்பெருமான் - ஸ்ரீ கரும்பேஸ்வரர். அம்பிகை - சௌந்தரநாயகி.

இறைவனின் சிவலிங்கத் திருமேனி -  கட்டுகளாக கட்டப்பட்ட கரும்பு போல விளங்குவதே விசேஷம். இதனால் - இறைவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, சர்க்கரை தானம் வழங்கினால் - இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுகின்றது என்பது அபூர்வ செய்தி.


இத்திருக்கோயிலில் பங்குனி 2,3,4 ஆகிய தேதிகளில் சிவலிங்கத் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது.
 
ஞான சம்பந்தரும் நாவுக்கரசரும் பாடிப் பரவிய திருத்தலம்.

கரும்பேஸ்வரர் கோயில் தீர்த்தங்கள் - சூர்ய சந்திர தீர்த்தங்கள். தலவிருட்சம் வெண்ணி எனும் பூச்செடி. இதன் மறு பெயர் நந்தியாவட்டை.

கோயில்வெண்ணியில்   அமைந்த  போர்க்களமே வெண்ணிப் பறந்தலை. இங்குதான் சோழ மாமன்னன் கரிகாற்பெருவளத்தான்  - சேர மன்னன் பெருஞ் சேரலாதனை வென்றான். சங்க காலப் புலவரான வெண்ணிக் குயத்தியார் இவ்வூரினர்.

பாரதத்தில் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் பயன்பாட்டில் உள்ளது கரும்பு.  சர்க்கரையும் வெல்லமும் ஆயுர்வேதத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளவை.


முன்பெல்லாம்  - வீடுகளில் வெகுவாகப் புழங்கிய வெல்லத்தை, நாகரிகம் மேலுற்றதால் -  மக்கள் வெறுத்து ஒதுக்கினர்.

சர்க்கரை மற்றும் வெல்லம்  - இவற்றைப் பற்றி ஆய்வாளர்கள் கூறுவதைப் படிப்பதற்கான இணைப்பு  - Sweet Health - There was no guilt while eating jaggery


சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை (White Sugar) அதிகமாகப் பயன்படுத்தி மகிழ்ச்சியில் திளைத்து விட்டு - இப்போது மருத்துவமனைகளைத் தேடி ஓடி வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

தொண்டையிலும் நுரையீரலிலும்  புழுதியினாலும் தொடர்ந்த புகையிலைப் பழக்கத்தினாலும் ஏற்படும் சிதைவுகளை வெல்லத்தின் மூலக்கூறுகள் சரி செய்கின்றது .

சூழ்நிலையின் காரணமாக ஏற்படும் செரிமான கோளாறுகளைக் குணப் படுத்தும் தன்மையுடைய வெல்லம் -  இரும்புச் சத்து, மக்னீஷியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் வைட்டமின் B1, B2, வைட்டமின் C - முதலானவை நிறைந்தது.

- என்றெல்லாம்  ஆய்வாளர்கள்  கண்டறிந்து கூறியதும், மறுபடியும் வெல்ல வேட்டை ஆரம்பமாகியுள்ளது.


அசோக வனத்தில்  -  ஐயனின் தூதுவனாக வந்து ஆறுதல் மொழி கூறிய ஆஞ்சநேயனை - அன்னை ஜானகி வாழ்த்தினாள்.

நீ சிரஞ்சீவியாக இருப்பாயாக!..

அப்படி வாழ்த்திய போது - அன்னை ஜானகி, ஆஞ்சநேயனின் சிரசில் வைத்தது - வெற்றிலையை!..


தாம்பூலம் என்பது - வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மட்டும்  அல்ல!.. தரமான மருந்தும் கூட!..

தற்போதைய ஆராய்ச்சியில், 

நமது உடலில் சுரக்கும் 24 விதமான அமினோ அமிலங்கள் வெற்றிலையில் உள்ளன. இந்த அமினோ அமிலங்களை வெற்றிலை மூலம் நாம் அடையும் போது  ஜீரணம் எளிதாகின்றது  - என்றும்,

வெற்றிலையில் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருக்கின்றது - என்றும்,

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் இரும்புச்சத்து, கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் C  - ஆகியனவும் உள்ளன - என்றும்,  கண்டறிந்துள்ளனர்.

அதனால் தானே - நம் முன்னோர்கள் உணவுக்குப் பின் தாம்பூலம் தரித்தனர்.

தமிழகத்தில் தாம்பூலம் தந்து உபசரிப்பது மிக உயர்ந்த மரியாதையாகும்.

பொதுவாக காவிரிப் படுகையின் வெற்றிலை சற்று காரம். ஆனாலும் திருவையாறு  சோழவந்தான் வெற்றிலைகள் - இளந்தளிராகவே மிளிர்பவை.


தஞ்சை மாவட்டத்தில் - திருவையாறு, சுவாமிமலை, ராஜகிரி - பகுதிகளில் இருந்த வளமான வெற்றிலைக் கொடிக்கால்கள் எல்லாம்  -  வறண்ட மனைப் பிரிவுகளாகிப் போயின.

வெற்றிலையின் சிறப்பினால் திருவாரூருக்கு அருகில் கொடிக்கால் பாளையம் என்றே ஒரு ஊர் உள்ளது.

வெற்றிலை மகத்தான மருத்துவ குணங்களை உடையது.

தஞ்சை கீழவாசல் பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான கடைகளில் - வாராது வந்த வரங்கள் என, தனியானதொரு நறுமணத்துடன் - கமழ்ந்து கொண்டிருந்தன வெற்றிலைக் கவுளிகள்!..

இன்று அவையெல்லாம் காணாமல் போய் - விஷத் தன்மையுடன் கூடிய பான் பராக் மற்றும் கலப்பட வாசனை பாக்குத் தூள் சரங்கள் தொங்குகின்றன.

ஆனால்,  யாருக்கு வேண்டும் - பாரம்பர்யமும் எளிய மருத்துவமும்!?..

தெய்வாம்சம் உடைய அரச மரம் - வணங்கி வலம் வருவதற்குச் சிறந்த மரம்!..

எப்படி!?..

மகாபாரதம். குருக்ஷேத்ரத்தின் யுத்த களம்.

அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாக   -  முன் நிற்பவன்  ஸ்ரீ பரந்தாமன்.

ஆயினும்,  உற்றாரையும் மற்றோரையும் மாய்த்து ஒரு வெற்றி தேவையா?... என மனங்கலங்கி சோர்வுற்று, காண்டீபத்தினை நழுவ விட்டவனாக தேர்த்தட்டில்  சரிகின்றான் - விஜயன்.


அந்த வேளையில், அர்ச்சுனனின் மனம் தெளிவடைவதற்கு -  இதோபதேசம் என கீதோபதேசம் செய்தருளினான் - ஸ்ரீபார்த்தசாரதி!..

ஸ்ரீகீதையின் பத்தாவது அத்யாயம் எனும் விபூதி யோகத்தில் -  மரங்களுள், அச்வத்த - அரச மரமாகத்  தான் திகழ்வதை எடுத்துக் கூறுகின்றான்.

தானே அரச மரம்!.. -  என விளங்குவதாகத் தெய்வம் கூறுகின்றது.

ஆழ்ந்து செல்லும் வேர்ப் பகுதியில் நான்முகனும், 
நீண்டு வளரும்  நடுப்பகுதியில் மஹாவிஷ்ணுவும், 
விரிந்து விளங்கும் மேற்பகுதியில் பரமேஸ்வரனும், 

- என மும்மூர்த்திகளுடன், விருட்சங்களுக்கு அரசன் என விளங்கும் அரச மரத்தை வணங்குகின்றேன்.

மூலதோ ப்ருஹ்ம ரூபாய 
மத்யதோ விஷ்ணு ரூபிணே அக்ரத: 
சிவ ரூபாய வ்ருக்ஷ ராஜாயதே நம: 

ஓம் நம சிவாய சிவாய நம் ஓம்

புதன், மார்ச் 26, 2014

தல விருட்சங்கள் - 2

தல விருட்சங்களின் பெருமைகள் தொடர்கின்றன!..

சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர் எனும் நால்வருக்கும் சிவபெருமான் யோக நிலையில் குருமூர்த்தியாக வீற்றிருந்து ஞானோபதேசம் செய்வித்தது ஆலமர நிழலில் !..


எம்பெருமான் அளந்த ஒரு நாழி நெல்லினைக் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் வழுவாது  இயற்றியவளாய் அம்பிகை தவமிருந்தது -  மாமர நிழலில்!..  திருத்தலம் - மாங்காடு!.

அம்பிகை கம்பை ஆற்றின் கரையில் மாமர நிழலில் -  மணலில் சிவலிங்க ஸ்தாபனம் செய்து வழிபட்ட திருத்தலம்  - காஞ்சி!.

அம்பிகை மயில் வடிவாக எம்பெருமானைப் பூஜித்தது புன்னை வனத்தில்!.. அந்த புன்னை வனமே திருமயிலை!..

அம்பிகை - ஐயனை வழிபட்ட தலங்களுள் சிறப்பானது திருஆனைக்கா..  இங்கே - தல விருட்சம் - நாவல்!..

விக்னங்களைத் தீர்த்தருளும் விநாயகப்பெருமானுக்கு உகந்தவை அருகம் புல்லும் எருக்கம்பூவும்!..

ஞான சம்பந்தர் - திருமயிலையில் பூம்பாவையை எழுப்பும்போது பாடியருளிய திருப்பதிகத்தின் முதல் வரியே,

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை!.. - என்பது தான்.

அடியவர் பொருட்டு ஞானசம்பந்தப் பெருமான்  திருப்பதிகம் பாடியருள, ஆண் பனைகள், பெண் பனைகளாகி குலை ஈன்று, தல விருட்சமாகி நின்றதுவும் திருஓத்தூர் எனும் திருத்தலத்தில்.

ஆழிமிசைக் கல் மிதப்பில் அணைந்த பிரானாகிய திருநாவுக்கரசர் - கடலில் இருந்து கரையேறியதும் முதலில் தரிசித்த தலம் திருப்பாதிரிப்புலியூர். அங்கே  - தலவிருட்சம் - பாதிரி!..  திருஆரூரிலும் தலவிருட்சம் - பாதிரி!..

ஆன்மீக தாகத்தில் தவித்துக் கொண்டிருந்த திருவாதவூரருக்காக - இறைவன் குரு வடிவாகக் காத்திருந்தது குருந்த மரத்தின் நிழலில்!.. மாணிக்கவாசகர் எழுப்பிய ஆவுடையார் கோயில் எனும் திருப்பெருந்துறையின் தலவிருட்சம் - குருந்த மரம்!.

சுந்தரர் - சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டு, நான் உன்னைப் பிரியேன் என்று சங்கிலியாரிடம் வாக்களித்தது  - திருவொற்றியூர் மகிழ மரத்தின் கீழ்!..
 
சீர்காழியில் - பாரிஜாதம்.  திருநெல்வேலியில் - மூங்கில்.

பஞ்ச பாண்டவர்கள் -  தமது அஞ்ஞாத வாசத்தின் போது -  ஆயுதங்களையும் மந்த்ராஸ்திரங்களையும் பொதிந்து வைத்த மரம் - வன்னி!..

யமதர்மன் பணி செய்து வணங்கும் திருப்பைஞ்ஞீலியில் தலமரம் - வாழை!.

சனைச்சரன் தொழுதுநிற்கும் திருத்தலமாகிய திருநள்ளாறு - தர்ப்பைவனம்!.. 

பிரம்மாண்டமான சிவலிங்கத் திருமேனியைத் தன்னகத்தே கொண்டதும் பலநூறு ஆண்டுகளைக் கண்டதுமான - 

ஸ்ரீராஜராஜேஸ்வரம் விளங்கும்  தஞ்சை மாவட்டத்தில் - சிவலிங்க ஸ்தாபனமே இல்லாமல் ஒரு திருக்கோயில் புகழ் பெற்று விளங்குகின்றது. 

நெடிதுயர்ந்த - தக்ஷிணமேரு எனும் மூலஸ்தான ஸ்ரீவிமானத்துடன் விளங்குவது தஞ்சை அருள்மிகு பெருஉடையார் திருக்கோயில்.

தஞ்சை பெரிய கோயில் - கோபுரம் கொடிமரம் என்ற எல்லா அங்கங்களும்  கொண்டு விளங்குவது.

ஆனால், இவை எதுவும் இல்லாமல் - திருக்கோயிலாகத் திகழ்வது  - விரிந்து படர்ந்து நிழல் கொண்டு விளங்கும் - ஆல மரம்!.. 

பரக்கலக்கோட்டை அருள்மிகு பொதுஆவுடையார் திருக்கோயில்.

பொதுஆவுடையார் சந்நிதி
சந்நிதிக்கு எதிரே - நந்தி மட்டுமே!.. 

அம்பாள் சந்நிதி, முருகன் சந்நிதி, சண்டிகேசர் சந்நிதி - என்று எதுவுமே இங்கு கிடையாது. 

வீரஹத்தி விநாயகர் சந்நிதி மட்டும் - அதுவும் கோயிலுக்கு வெளியே!..

ஆலமரத்திற்கு ஏதும் கேடு நேராதபடி சுற்றுச் சுவர் மட்டுமே உண்டு!..

ஸ்வாமி ஏகாந்த மூர்த்தி. வன்மீகம் எனப்படும் புற்று வடிவமா?. இல்லை!. சிலாரூபமா?. இல்லை!. பஞ்சலோகத் திருமேனியா?. இல்லை!.  பின்னே!?.


ஸ்வாமி - சுயம்பு திருமேனி!.. ஒரு உயிர்த் திரளின் உள்ளிருந்து முளைத்தவர். 

விரிந்து படர்ந்து விளங்கும் ஆல மரத்தின் கிழக்கு பாகத்தில் ஒன்றரை அடி உயரத்திற்கு   முளைத்தெழுந்து  விளங்குகின்றது -  அடிவேர்!.. 

அதுவே சிவலிங்கம்!.. - இயற்கையாக மூண்டெழுந்ததால் ஆவுடை எல்லாம் கிடையாது. ஆனாலும் திருப்பெயர்  - பொது ஆவுடையார்!.. 

இந்தத் திருமேனிக்கு திருவாசி சாத்தி திருநீற்றுப் பட்டம் சூட்டி,

வாரம் ஒருமுறை - ஒரே முறை -  திங்கட்கிழமை மட்டும் இரவு பதினோரு மணிக்கு மேல், வழிபாடுகள் செய்யப்படும். அதுவும்,

தில்லைச் சிற்றம்பலத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்து நடைஅடைத்த பிறகே!.

ஏனெனில், சிதம்பரத்தில் நடை அடைத்த பிறகு  - அங்கிருந்து புறப்பட்டு, இங்கே எழுந்தருளி - முனிவர் இருவருக்கிடையே இருந்த பிரச்னையை தீர்த்து மத்யஸ்தம் செய்து வைத்ததாக ஐதீகம். 

அதனால், மத்தியஸ்தபுரீஸ்வரர் எனவும் திருப்பெயர்.

இந்த பொதுஆவுடையார் திருக்கோயில் விளங்குவது - பட்டுக்கோட்டையில் இருந்து கிழக்கே முத்துப்பேட்டை சாலையில் தாமரங்கோட்டை கிராமத்திற்கு அடுத்ததாக இருக்கும் பரக்கலக்கோட்டை கிராமத்தில்!..

இந்த தாமரங்கோட்டை கிராமத்தில் சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் - தன் கணவனின் சிதையோடு ஒன்றி உடனாகி தீக்குள் தீயாகி நின்ற திருவிளக்கு - நல்லம்மாள் எனும் மாதரசி!.. 

அந்த அம்மையார் தீக்குள் புகுந்த இடத்தில் முளைத்தெழுந்தது - ஒரு மாங்கன்று. சிலவருடங்களில் அதை அரவணைத்து  ஆல் ஒன்றும் முளைத்தது. மாங்கன்று ஆலமரத்தினுள் ஐக்கியமாகி விட - இப்போது அங்கே விளங்குவது பிரம்மாண்டமான ஆலமரம் மட்டுமே. 


மாதரசி நல்லம்மாள் இன்னும் இந்த ஆலமரத்தில் உயிர்ப்புடன் உறைகின்றாள். அதனாலே - தீப்பாய்ந்த அம்மன் என்றும் தீப்பாய்ந்த நாச்சியார் என்றும் சித்திரை முதல் நாளில் பெரியதொரு விழா  எடுத்து கொண்டாடி மகிழ்கின்றார்கள். 

அவருக்கு பிள்ளைகள் இல்லை எனினும்  - ஊர் முழுதும் உள்ள அவரது உற்றார் உறவு முறையானவர்கள் வழிவழியாக - இந்த ஆலமரத்தைப் பாதுகாத்து, நாச்சியாருக்கு பஞ்சலோக திருமேனி எடுப்பித்து வழிபாடுகளை நடத்தி வருகின்றார்கள். 

இந்த ஆலமரக்கோயில், பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலையில் - சாலையின் ஓரத்திலேயே விளங்குகின்றது. 

தாமரங்கோட்டையிலிருந்து வடக்கே - இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் அத்திவெட்டி பிச்சினிக்காடு.


இந்த கிராமத்தில் தான்,  இயற்கை .. இயற்கை!..  - என வாழ்நாள் முழுதும் மண்னும் மக்களும் பயனுற வேண்டி - அலைந்து திரிந்த, பசுமைப் போராளி நம்மாழ்வார் அவர்களின் இறுதி மூச்சு இயற்கையுடன் கலந்தது.

இங்கே - ஆவாரங்காட்டுக்குள் ஒற்றைப் பனை - விளங்குகின்றது. அதன் எதிரே - எந்த காலமும் சிலு சிலு என குளிர்ந்து விளங்கும் அழகான தடாகம். பனையின் கீழ் சிறு கொட்டகை மட்டுமே.. மற்றபடி மாலை சந்தனம் குங்குமம் எல்லாம் -  ஒற்றைப் பனைக்கே!..

இந்த ஒற்றைப் பனையில் - சத்தியத்தின் வடிவாக - குடிகொண்டு அருள்பவர் - ஸ்ரீவைரவர்.

நம் பக்கம் நியாயம் இருந்து, வைரவா!.. நீ கேள்!.. என்று முறையிட்டால் போதும்!.. அந்தக் கணத்திலேயே  - எதிரிக்கு பளார் என்று அறை விழுகின்றது.

நம் பக்கம் நியாயம் இருக்கிறது. ஆனாலும் எதிரி வஞ்சனை வழக்கிட்டு வம்புக்கு இழுக்கின்றான். எதிரியை நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை எனில்  - இருக்கவே இருக்கின்றார் - ஸ்ரீவைரவர்!..

ஆனால், நாம் எதிரியைக் குறித்து ஒருவார்த்தை கூட துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. கொதித்துக் குமுறிய உள்ளம் குளிரும்படிக்கு - குளத்தில் குளித்து விட்டு  - வைரவா சாட்சி!.. என்று விழுந்து வணங்கினால் - அதற்கு மேல் நடக்க வேண்டியவைகளை ஸ்ரீவைரவர் பார்த்துக் கொள்கின்றார். 

அதனால் அன்றோ - சுற்றுப்புற கிராமங்களில் வைரவசுந்தரம், வைரவமூர்த்தி, வைரவ சுந்தரி - என்றெல்லாம் நூற்றுக்கணக்கில் பிள்ளைகளுக்குப் பெயர் விளங்குவது.

மதுக்கூரில் புகழ் பெற்ற பெரமையா சுவாமி கொலு இருப்பது மரக் கூட்டங்களில்  தான்!. அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஸ்ரீ காளி குடி கொண்டிருப்பது - உடை மரம் எனும் ஒருவகை அபூர்வ மரத்தில்!..

எம்பெருமான் ஸ்ரீகாளியுடன் நடனம் ஆடி - ஊர்த்துவ திருக்கோலத்தில் நின்றது  ஆலங்காட்டில்!. இதுவே - பஞ்ச சபைகளுள் ஆதியான - ரத்ன சபை!.  திருஆலங்காட்டில் தான், பங்குனி - சுவாதி அன்று காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்தார்!.


தாடகை எனும் இளம்பெண் சிவபூஜையின் போது புஷ்பாஞ்சலி செய்து பூமாலை சூட்டிய வேளையில் அவளது மேலாடை நழுவிற்று. நிலைகுலைந்த அவளது இன்னலைக் கண்டு - எம்பெருமான் தலைகுனிந்து பூமாலையை ஏற்றுக் கொண்டார். 

அவளது மேலாடையும் நழுவாது தோளிலே நின்றது. ஆனால் சிவலிங்கத் திருமேனி ஒரு புறமாக சாய்ந்து விட்டது. தகவல் அறிந்து திரண்டு வந்த எவராலும் சிவலிங்கத் திருமேனியை நிமிர்த்த முடியாமற் போனது. 

இதனை அறிந்து அடியார் ஒருவர் வந்தார். கயிற்றில் சுருக்கிட்டு ஒரு முனையைத் தன் கழுத்தில் மாட்டிக் கொண்டார். மறு முனையை சிவலிங்கத் திருமேனியுடன் பிணைத்தார். 

''..பெருமானே!.. நீ ஒளி பெற்று எழ வேண்டும். இல்லையேல் உயிரற்று நான் விழ வேண்டும்!..'' - அடியவர் இதற்கு மேல் வேறு ஒன்றும் பேசவில்லை. 

கழுத்தில் சுருக்கிட்ட கயிற்றுடன் - இழுத்தார். அன்பினுக்கு ஆட்பட்டு சாய்ந்த சிவம்  - அதே அன்புக்குக் கட்டுப்பட்டு நிமிர்ந்தது. இந்த அருஞ்செயல் நிகழ்ந்த திருத்தலம் - அருணஜடேஸ்வரர் என, ஐயன் உறையும் திருப்பனந்தாள்.  இங்கே  தலவிருட்சம் - பனை!..

திருமழபாடியில் - பனை!.. திருஐயாற்றுக்கு அடுத்துள்ள ஆடுதுறையில் - தென்னை!.. 

கழுத்தில் சுருக்கிட்டு  இழுத்தவர் - குங்கிலியக் கலய நாயனார்.  அபிராம வல்லியும் அமிர்தகடேஸ்வரரும் உறையும் திருக்கடவூரைச் சேர்ந்தவர். திருக்கடவூரில் தலவிருட்சம் - முல்லைக் கொடி. 

திருவிடைக்கழி - குமரன்
திருமுருகன் திருப்பாதங்கள் பதிய நடந்தருளிய திருத்தலம் திருவிடைக் கழி. இங்கே,  தல விருட்சம் - குரா மரம்.

பஞ்ச வன க்ஷேத்ரங்கள் எனத் திகழ்வன:-

திருக்கருகாவூர் - முல்லை வனம்
திருஅவளிவ நல்லூர் - பாதிரி வனம்
திருஅரதைப் பெரும்பாழி  (ஹரித்வார மங்கலம்) - வன்னி வனம்
திருஇரும்பூளை (ஆலங்குடி) - பூளை வனம்
திருக்கொள்ளம்பூதூர் - வில்வ வனம்

மகமாயி புற்றுருவாக எழுந்த புன்னை வனம் தான் - தஞ்சை புன்னை நல்லூர்!.. 

தல விருட்சங்களின் பெருமைகள் நம்மைத் தொடர்கின்றன - என்றாலும், நாம் தல விருட்சங்களைத் தொடர வேண்டும்!.. அதுவே நமக்குப் பெருமை!.. 

மரங்களில் தெய்வங்கள் நிலை பெற்றிருப்பது - மண்ணும் மக்களும் பயனுறவே!..

மரங்கள் - இறைவன் அளித்த வரங்கள்.

இதில் பொதிந்து கிடப்பது - 
இயற்கையே இறைவன்!.. - இறைவனே இயற்கை!..
எனும் உண்மை.

சிவாய திருச்சிற்றம்பலம்!..

திங்கள், மார்ச் 24, 2014

தல விருட்சங்கள் - 1

ஒவ்வொரு கோயிலிலும் தலவிருட்சம் என தனித்துவத்துடன் ஒரு மரம் விளங்குவதை அறிந்திருப்போம்.

அத்தகைய மரங்கள் பாதுகாக்கப்பட்டால் - அந்த வட்டாரம் பாதுகாக்கப்பட்டதைப் போல!..

ஆனால் - நடந்ததென்ன?..


மதுரையம்பதியின் ஆதி திருப்பெயர் - கடம்பவனம். அன்னை மீனாட்சியின் திரு நாமங்களுள் ஒன்று - கடம்பவன வாசினி. கடம்ப வனத்தில் வசிப்பவள்.

இன்றைக்கு மதுரையில்  - இருக்கின்ற கடம்ப மரங்கள் எத்தனை!?..

பொன்னம்பலமாகிய திருச்சிற்றம்பம் விளங்குவதே தில்லை வனத்தில்!..

ஆனால் - சிதம்பரத்தில் தில்லை மரங்களே இல்லை. அவை இப்போது பிச்சாவரம் காட்டில் உள்ளன - என்கின்றனர்.

அம்பிகை - நீரால் லிங்கம் அமைத்து பூஜித்தது - நாவல் மர நிழலில்!..

இந்த தலத்தில் இது முக்கியத்துவம் என்று  ஞானிகளாலும் மகான்களாலும் உணரப்பட்ட உண்மையே - தலவிருட்சம்!..  

பசுமையான மரங்கள் பேணி வளர்க்கப்பட்டால் நாட்டில் மழை வளம் பெருகும் என்ற அடிப்படையே - தலவிருட்சம்!..   

சிறப்பான குணநலன்களைக் கொண்டு  மரங்கள் விளங்குகின்றன. 

வில்வம்

குறிப்பாக மருத்துவ குணங்கள் நிறைந்த வில்வம், வன்னி, மகிழ் - போன்ற மரங்களை - தற்காலத்தில்  திருக்கோயிலைத் தவிர வேறு இடங்களில் பார்ப்பதே அரிதாக இருக்கின்றது.

தமிழிலக்கியங்கள் போற்றும் கொன்றையும், மருதமும் எத்தனை மகத்துவம் நிறைந்தவை!..

தெய்வாம்சமும் பேரருளும் பெற்ற கொன்றை மரங்களும், மருத மரங்களும் நம் தமிழகத்திற்கே உரித்தான மரங்கள். திருக்கோயில்களில் தல விருட்சங்களாக விளங்கி சகல துன்பங்களையும் நீக்கி, எப்பிணியும் வராமல் காப்பவை.

பிள்ளையார் பட்டியிலும் திருஇடைமருதூரிலும் தலமரமாக விளங்குவது  - மருத மரம். திருக்குமரன் திகழும் மலைகளுள் ஒன்று - மருதமலை. 

கொன்றை, வில்வம், ஆல், வன்னி, மகிழ் - ஆகியன சிவபெருமானின் அம்சங்கள். இம்மரங்களின் கீழிருந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். வில்வ இலைகளால்  சிவபெருமானைப் பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும். 


பந்தநல்லூர், அச்சிறுபாக்கம் முதலிய தலங்களின் தலமரம் - கொன்றை.

திருஅரங்கத்தில் மஹாலக்ஷ்மியின் சந்நிதிக்கு அருகில் விளங்குவது வில்வம்!..

திருஐயாறு, தஞ்சை (ஸ்ரீபிரகதீஸ்வரர்), இராமேஸ்வரம், திருவெண்காடு, திருவைகாவூர் - இன்னும் பல சிவ ஸ்தலங்களின் தலமரம் - வில்வம். பெரும்பான்மையான திருக்கோயில்களில் முதலிடம் பெற்று விளங்குவது வில்வம்!..

ஆலமரத்தின் விழுதுகள் ஆண்மை குறைவை நீக்கும் தன்மையுடையன.  ஆனால் - தகுந்த மருத்துவரின் ஆலோசனை இன்றி தன்னிச்சையாக முயற்சி செய்யக்கூடாது.

திருஆலங்காடு, திருஆலம்பொழில், திருப்பழுவூர் - முதலிய திருத் தலங்களின் தலமரம் - ஆல்.

திருப்பூந்துருத்தி, திருவான்மியூர், தஞ்சை (ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர்) - ஆகிய தலங்களின் தலமரம்  - வன்னி. வில்வத்திற்கு அடுத்து அதிக தலங்களில்  விளங்கும் பெருமையை உடையது - வன்னியே.

குளிர்ந்த நிழலையும் மணம் கமழும் மலர்களையும் உடையது மகிழ். இது வகுளம் எனவும் புகழப்படும்.

திருஅண்ணாமலை, திருஒற்றியூர், தஞ்சை (ஸ்ரீகொங்கணேஸ்வரர், யாளி நகர்) - ஆகிய தலங்களில்  மகிழ மரம் விளங்குகின்றது..

தஞ்சை பட்டுக்கோட்டைக்கு அருகில் மகிழங்கோட்டை (தொக்காலிக்காடு) எனும் ஊரில் இறைவனின் திருப்பெயர் - மகிழவனேஸ்வரர்.

புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருவேங்கை வாசல் எனும் திருத்தலம் - மகிழவனம் - வகுளாரண்யம் எனும் திருப்பெயருடையது. 

ஏரி  காத்தருளிய ஸ்ரீராமன் விளங்கும் மதுராந்தகம் - வகுளாரண்யம் எனப்படும்.

பிருந்தா எனப்படும் துளசி விஷ்ணுவின் அம்சம். துளசி உள்ள இடத்தில் மஹாவிஷ்ணுவும் மஹாலக்ஷ்மியும் குடியிருப்பர். அதனால் தான் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. 

பல மருத்துவ குணங்களை உடைய துளசி இருக்கும் இடத்தில் நாகங்கள் வராது.
             
சந்தன மரம்,  அத்தி மரம் - விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் இன்றி சுபகாரியங்களும், பூஜைகளும் ஏது!.. சந்தன மரத்திலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிப்படுகின்றன என்கின்றனர். 

ஸ்ரீ வாஞ்சியத்தின் தலமரம் - சந்தனமரம்.

காஞ்சி வரதர் அத்தி மரத்தினால் ஆனவர். மயிலாடுதுறையை அடுத்த கோழி குத்தி வானமுட்டிப் பெருமாளும் அத்தி மரத்தில் விளங்குபவரே!..

விலக்கப்பட்ட கனியை உண்டதனால் கர்த்தர் கோபம் கொண்டு - ஆதாம் ஏவாள் இருவரையும் ஏடன் தோட்டத்திலிருந்து நிர்வாணமாக பூமிக்கு வெளியேற்றிய போது - அவர்கள் இருவரும் தமது ஜனனேந்திரியங்களை மறைப்பதற்கு பயன்படுத்தியது - அத்தி மரத்தின் இலைகளை!..

இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள் - சொர்க்கத்தின் பழம் என  அறிவிப்பது அத்திப் பழத்தையே!..

ஜோதிடத்தில் ஏழாம் இடமாகிய களத்ர ஸ்தானத்திற்கு அதிபதி சுக்ரன். இவரே - அத்தியின் அதி தேவதை!..

சுக்ரன் - ஜனன உறுப்புகளைக் காப்பவர். தம்பதியர் கடைசி வரையில் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக விரும்பி இருப்பதுவும் அதனால் வாழ்க்கை வளம் பெறுவதுவும் - சுக்ரனின் அருளால் தான்!..

மா , நெல்லி , மாதுளை, மருதாணி ஆகியன மஹாலக்ஷ்மியின் அம்சங்கள்.  
எல்லாவிதமான பூஜைகளிலும் சுபகாரியங்களிலும் மாவிலைகள் பயன் படுத்தப்படும் காரணம் - மஹாலக்ஷ்மியின் அம்சம் என்பதனால் தான்!..  

வீடுகளில் சுபகாரியங்கள் நிகழும் போது - கட்டப்படும் மாவிலைத் தோரணங்களின் அழகே அழகு!.


மா மரம் - காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் -  திருத்தலங்களின் தலமரம்.

நெல்லி மரத்தின் கீழிருந்து தானம் செய்தால், தானம் செய்பவருடைய சகல பாவங்களும் நீங்கும்.

நெல்லி
நெல்லி - திருநெல்லிகா, திருநெல்வாயில், பழையாறை  முதலிய திருத்தலங்களின் தலமரம்.

மாதுளை மரத்தின் கீழ் விளக்கேற்றி வைத்து - இளந்தம்பதியர் வலம் வந்து வணங்க தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்பு அகலாது இருப்பர்.

மருதாணி காய்களை  தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கெட்ட கனவுகள் வராது.

திருவாவடுதுறை, திருப்பரிதிநியமம் முதலிய சிவத்தலங்களின் தலமரம் - அரசு.

அரச மரத்தின் வேர்களில் மஞ்சள் நீர் ஊற்றி  நெய்தீபம் ஏற்றி வர புத்ர தோஷம் நீங்கும்.


வேம்பு சக்தியின் அம்சம்.  வேப்ப மரத்திற்கு  மஞ்சள் குங்குமம் சூட்டி  மாலை அணிவித்து மஞ்சள் ஆடையுடன் மரத்தை வலம் வந்து வணங்க மாரியம்மனின் அருள் கிட்டும். மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப மர நிழலும் காற்றும் க்ஷய ரோகம் எனும் காச நோயை விரட்டக் கூடியது.

இவற்றை எல்லாம் ஆய்வு செய்ததனால் அன்றோ - அமெரிக்கா -  வேம்புக்கு உரிமை கொண்டாடியது!..

குடந்தை வியாழ சோமேஸ்வரர் திருக்கோயில் மற்றும் வைத்தீஸ்வரன் கோயிலின் தல விருட்சம் - வேம்பு.

திருச்செங்காட்டங்குடிக்கு விருந்து உண்பதற்கு, உருத்ராபசுபதி  என வந்த பெருமான் - முதலில்,  சிறுதொண்டரின் மனைவி திருவெண்காட்டு நங்கையிடம் - பிட்க்ஷை கேட்டபின் இளைப்பாறி அமர்ந்திருந்தது  - ஆத்தி மர நிழலில்!..

இலுப்பை

ருத்ர வழிபாட்டுக்கும் சகல தேவதா மூர்த்திகளுக்கும் உகந்தது - இலுப்பை எண்ணெய் தீபம். 

இலுப்பை எண்ணெய் கொண்டு ஆலயத்தில் தீபம் ஏற்றுவதன் மூலம் காரிய சித்திகள் பல கைவரப் பெறும் என்பது அசைக்க முடியாத உண்மை.

இலுப்பை தலமரமாக விளங்கும் திருத்தலம் - திருச்செங்கோடு.

சூர்யோதயத்தின் போது வெட்டவெளியில் - சில நியமங்களுடன் சூர்ய தேவனை - இலுப்பை எண்ணெய் தீபத்தினால் வழிபடுவதனால் அடையும் நன்மைகளைச் சொல்லி முடியாது.

தூங்குமூஞ்சி மரம் முருங்கை மரம் ஆகியன - சோம்பலைக் குறிப்பவை.

புளிய மரம், கருவேல மரம், எட்டி மரம்  - ஆகியன தீய அதிர்வுகளை வெளிபடுத்தக்கூடியன.  இவற்றின் நிழல் - உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்யும். இதனாலேயே - இந்த மரங்களை வீட்டுக்கு எதிரில் வளர்ப்பதில்லை.

இந்த மரங்களுக்கு மருத்துவ குணங்கள் இருப்பினும் - காய் மற்றும் வேர்களை  தவறான காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பொதுவாக பேய், பிசாசுகளுக்கு இம்மரங்களே அடைக்கலம் ஆவன.

லிங்கத்தின் மீது நாகம் குடை பிடித்தாற்போல அற்புத வடிவங்கொண்டு இலங்குவது நாகலிங்கப் பூ. நாகலிங்க மரம் சுற்றுப்புற காற்றில் உள்ள தூசியை வடிகட்டி தூய்மையாக்கும் தன்மை உடையது எனக் குறிக்கின்றனர்.

நாகலிங்கப் பூ
சென்னை - புலியூர் பரத்வாஜேஸ்வரர் ஆலய  தல விருட்சம் நாகலிங்க மரம்.

நல்ல மரங்களிலிருந்து வெளிப்படும் அதிர்வுகளால் நோய்கள் தீர்கின்றன.  மனம்  - நிம்மதியையும் மகிழ்ச்சியையும்  அடைகின்றது.   

மனிதனுக்கு - விருந்தெனவும் மருந்தெனவும் விளங்குவன மரங்களே!..

ஓடித் திரிந்த உயிரினங்கள் அனைத்திற்கும் ஆதரவாய் இளைப்பாற நிழல் தந்து காப்பவை  - மரங்களே!..

அமர்வதற்கும் அடைவதற்கும் என பறவைகளுக்கு உண்மையான சரணாலயமாக விளங்குபவை - மரங்களே!..

இப்படியாக, சமூகத்தின் அகத்திற்கும் புறத்திற்கும் நன்மைகளை அளிக்கும் -  விருட்சங்களின் குணநலன்கள் காலங்கள் தோறும் காக்கப்பட வேண்டும். 

அதனால் - மண்ணும் மக்களும் பயனுற வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம்.

தலவிருட்சமாக ஸ்தாபிக்கப்பட்ட மரம்  - அடுத்து வந்த தலைமுறையினரின் பாதுகாப்புக்கு உட்பட்டு நாளடைவில் சிறப்புக்கும் மதிப்புக்கும் உரியதாகியது. 

சிந்தை அங்கே குவிந்து விளங்கியதால் - சித்தம் சித்தி ஆயிற்று. 
அதன் அடுத்தடுத்த வளர்ச்சி - கோயில் என்றானது. 

மரங்கள் - இறைவன் அளித்த வரங்கள்.

இதில் பொதிந்து கிடப்பது - 
இயற்கையே இறைவன்!.. - இறைவனே இயற்கை!..
எனும் உண்மை.

சிவாய திருச்சிற்றம்பலம்!..

சனி, மார்ச் 22, 2014

வனமும் வளமும்

இயற்கை எனும் இளைய கன்னி..
ஏங்குகின்றாள் - துணையை எண்ணி!..

இயற்கை இளைய கன்னியாக இருந்தது தான் - 
இத்தனை அவலங்களுக்கும் காரணமா?..

இயற்கை இளைய கன்னி - என்பதால் தான், 
அவள் மீது - இத்தனை வன்கொடுமைகளா?.. 


நீரின்றி அமையாது உலகு!..  - என்றார் ,வள்ளுவப்பெருந்தகை. 

வான் மழை போற்றுதும்!.. வான் மழை போற்றுதும்!.. 

- என்று வணங்கினார் இளங்கோவடிகள். 

நீருக்குத்தான் - பூவுலகில் எத்தனை எத்தனை பெருமை!..

கடல், மழை, அருவி, நதி, ஏரி, குளம், கிணறு!..

இயற்கையோடு இணைந்து இனியதொரு வாழ்க்கை வாழ்ந்தனர் நம் முன்னோர். 

ஆற்றங்கரைகளில் தான் ஆதி  நாகரிகம் தோன்றியதாக அறியப்படுகின்றது.   

நம் முன்னோர்கள் மிகவும் அருமையாகத் திட்டமிட்டு - தமது வாழிடத்தை நிர்மாணம் செய்தார்கள்.

ஆனால் நாம் அவற்றைப் பாழிடம் ஆக்கி விட்டோம்!..

தாழ்வான பகுதிகளில் ஏரி கண்மாய் குளங்கள் அமைக்கப்பட்டதால் - நிலத்தடி நீர் வளம் பெருகிற்று. நீர் ஆதாரங்களைச் சூழ்ந்ததாக குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.நீரையும் அதனோடு இணைந்த தாவர சங்கமங்களையும் காக்கும் பொருட்டே, 

குளக்கரைகளில் அரசும் வேம்பும் வளர்க்கப்பட்டு - அங்கே விநாயகப் பெருமான் அமர்ந்தார். - காவல் நாயகனாக!..

கடலும் கிணறும்,  புனிதமாகின - இராமேஸ்வரத்திலும் திருச்செந்தூரிலும்.

அருவியும் பலாவும்,   புனிதமாகின - திருக்குற்றாலத்தில்.

பொற்றாமரைத் தடாகமும் கடம்ப மரமும் புனிதமாகின - மாமதுரையில்.

காவிரியும் வில்வமும் புனிதமாகின - திருஐயாறு முதலான திருத் தலங்களில்.
  

காவிரியை மேம்படுத்தி - கல்லணை அமைத்ததாலேயே இன்னமும் நாம் உண்ணும் ஒவ்வொரு கவளத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் - கரிகால் பெருவளத்தான்!..

ஆனால் இன்றைய நிலை!?..  

ஏரிகளும்  குளங்களும் வயல் வெளிகளுமாக இருந்த இடங்கள்  வசந்தம் நகர் - என வறட்டு மனைகளாக ஆக்கப்படுகின்றன. 

ஏரி குளங்களை அழித்து விட்டு கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள் - அமைப்பதை நாமே விரும்புகின்றோம். சோறு போட்ட வயற் காடுகளை அழித்து விட்டு புறவழிச் சாலைகள் நான்கு வழிச்சாலைகள்  அமைக்கப் போராடுகின்றோம்.  

கடைசியில் மழைநீர் சேமிக்கச் சொல்லி கூச்சல் போடுகிறோம். 

தொழிற்சாலைகளின் கரிப் புகைகளினால் -    காற்று மண்டலம் கழிவு மண்டலம் ஆனது.  வானமும் வீழ்ந்தது - ஓசோன் படலமும் கிழிந்தது.

நாம் செய்கிற காரியங்கள் சூழல் பாதிப்பை உண்டாக்கி விட்டன.  ஒரு சமயம் இது தெரியவில்லை. 

விவரங்கள் புரிந்தபின் - நமது செயல்கள் நமக்கே துன்பங்களை கொடுக்கும் என்று தெரிந்தும் சுற்றுச் சூழலுக்குக்  கேடு செய்வதில் இருந்து நாம் மீள வில்லை. 

தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறோம்

வனங்களை  அழித்து விட்டு  - யானைக் கூட்டத்தை விரட்டுங்கள் என்று சாலை மறியல். 

நீர்ப் பிடிப்பு பகுதிகளை அழித்து விட்டு - வெறுங்குடங்களுடன்  - வீதிகளில் போராட்டம்!..


இயற்கைச் சூழல் என்பதே பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பு!.. இதன் சிதைவு வெவ்வேறு விதங்களில் உயிரினங்களின்   சீரழிவாக ஆகின்றது.

அறிவியலும், தொழில்நுட்பமும் மனிதனைக் காப்பதற்கா?.. அழிப்பதற்கா?.. 

எங்கும் சுயநலம் மிஞ்சிக் கிடப்பதால்-

பல உயிர்கள் இன்புற்று வாழ வேண்டிய பூமி பலவிதமாக இன்றைய சூழலில் மாசுபடுத்தப்படுகின்றது. 

ஆற்றை,  ஆற்று நீரை மட்டுமல்லாமல்,  கடலையும் கூட  -  விட்டு வைக்க வில்லை.

அணுக் கழிவுகளையும் வேதிக் கழிவுகளையும் கொட்டி அலைகடலைச் சீரழித்தது நவீன அறிவியல்!..  


சல.. சலக்கும் நீரலைகளுடன் ஆறுகளும் குளங்களும்..

காற்றோடு சேர்ந்தாடும் கதிர் விளைந்த வயல்களும்....  நீண்டு நெடிதுயர்ந்து பரந்து விரிந்த மரங்களும்.... அவற்றில் பின்னிப் பிணைந்த கொடிகளும்..  புன்னகைக் கோலமாய் பூத்துக் குலுங்கும் செடிகளும்.. - என,   

பச்சைப் பசேலென்று பட்டாடை போர்த்தியவளாக விளங்கியவள் இயற்கை அன்னை..

இத்தனையும் அழிக்கப்பட்டு  - விளைநிலங்கள் யாவும் வீட்டு மனைகள் ஆகின்றன. புதிதாக நகர்கள் என வீட்டு மனைகள் உருவாகும் போது வயல் வெளிகளில் காலகாலமாக இருந்த நீர்வழிகள் அடைக்கப்படுகின்றன.  அதற்கு அப்பால் இருக்கும் வயல்களின் நீர் ஆதாரம் அழிக்கப்படுகின்றன. 

கழனிகள் எல்லாம் - கண் எதிரே -  கான்கிரீட் கட்டடங்களால் நிரப்பப் படுகின்றன. காடுகள் அழிந்து வீடுகளாய் மாறுகின்றன. பறவைகள் அடைவதற்கும் அமர்வதற்கும் என தழைத்திருந்த மரங்கள் வேரோடு வீழ்த்தப் படுகின்றன. 


ஒரு காலத்தில் -   வாழையும் கமுகும் தென்னையும் பனையும் - நெடிதுயர்ந்து காணக் கிடைக்காத காட்சிகளாய் விரிந்திருந்தன.

இன்று உண்மையில் அவை காணக் கிடைக்காதவைகளாகி விட்டன. 

எங்கெங்கும் - கிளை அற்ற நெடுமரங்களாக  செல்லுலார் கோபுரங்கள்  

இயற்கையின் மீது  அனைத்து உயிர்களுக்கும் உரிமை உள்ளது.  


இயற்கையை அழித்துவிட்டோமானால் எல்லாம் அற்றுப் போய் விடும் என்பதை உணர வில்லை. 

பிளாஸ்டிக் , வேதியியல் கழிவு இவற்றால்  நிலங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன.

மாசடைந்த சுற்றுச்சூழல் காரணமாக உலகின் வெப்பம் அதிகரித்து பல மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன.பனிப் பிரதேசங்கள் காணாமல் போகின்றன.  பனிப் பிரதேசங்கள் உருகி - பல பகுதிகள் கடலுக்குள் அமிழத் தொடங்கி விட்டன. இயற்கை நிலை சிதைந்து வருகின்றது!.. 

- என அறிவியலாளர்   எச்சரிக்கின்றனர்.  

ஆனால் - அது செவியிலும் விழவில்லை. சிந்தையிலும் ஏறவில்லை!..

எதையும் எதிர்க்க இயலாதபடி -  நல்லோர் மனம் மட்டும் நிற்கின்றது  சாட்சியாய்!..  நம்மை வளர்த்த பூமி - நம் கண் முன்னே வாடுகின்றது.. காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

பஞ்ச பூத தலங்கள் - என்று தேடித் தேடி வலம் வந்து வணங்குகின்றோம். 

ஆனால், நம்மை வாழவைக்கும் பஞ்ச பூதங்களுக்கும் நாம் எதுவும் செய்தோமில்லை. 

இனியும் இயற்கைக்கு ஆதரவாக நாம் செய்யப் போவது எதுவும் இல்லை - எனில், 

இயற்கை எனும் இளைய கன்னி..
ஏங்குகின்றாள் - துணையை எண்ணி!..

இனியதொரு துணையை எண்ணி 
இன்னமும் ஏங்குகின்றாள்!..
மீதமுள்ள உயிர் மூச்சை விட்டு
விடாமல் தாங்குகின்றாள்!..

அழகு ஆயிரம் அவளிடம் - அத்துடன்
கூரிய நகங்களும் உண்டு!..
கொடுங்குணம் ஒருநாள் கொண்டு
பகை முடிப்பாள்  - மனிதரை உண்டு!..

மார்ச் -22 - உலக தண்ணீர் தினம்.
நீரின்றி அமையாது உலகு!..

வாழ்க வையகம்!.. வாழ்க வளமுடன்!..