நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 01, 2014

ஸ்ரீ பாவா ஸ்வாமி

தஞ்சை ராஜதானி.

மராட்டிய மன்னர் அமர்சிங் (1787 - 1798) அரியணையில் இருந்த காலம்.

மழை வளங்குன்றாது பெய்த - அந்த கால கட்டத்தில் - ஏறக்குறைய 215 ஆண்டுகளுக்கு முன் -  ஒருநாள்.

அதுவும் ஐப்பசி மாதத்தின் அடைமழை நாள்.

சில தினங்களாக  - சிறிதும் இடைவெளியின்றி - தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது - மழை.

இரை தேட இயலாமல் பறவைகளும் கூட்டுக்குள் முடங்கிக் கிடந்தன. இடி மின்னல் - பலத்த காற்றுடன்  நல்ல மழை!..


''..அது கெட்ட மழையாகி விடக்கூடாதே!..'' என்று பெருங்கவலையுடன் உப்பரிகையில் உலவிக் கொண்டிருந்தார் மன்னர் அமர்சிங்.

மழைச்சாரல் மன்னரின் முகத்தில்  சில்லென - பரவிற்று. 

அடுத்தடுத்து வந்து கொண்டிருந்த செய்திகள் கூட - இந்த சில தினங்களில் தடைப்பட்டு விட்டது. காரணம் காவிரியின் வடக்கில் கொள்ளிடத்திலும் தெற்கில் குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாற்றிலும் கரை தழுவி ஓடும் வெள்ளம்.

இதோ - கண்ணுக்கு எட்டிய வடவாற்றில் கூட மழைநீர் பொங்கிப் பிரவாகமாக ஓடுகின்றது. கரை மீறிய வெள்ளப் பெருக்கு எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்ற நிலை.


மன்னரின் முகத்தில் கவலையின் ரேகைகள்.  

''.. மன்னர் பிரான் சிறிதும் அஞ்சவேண்டாம். கல்லணை பலப்படுத்தப்பட்டு ஆங்காங்கே கரை காவல் போடப்பட்டுள்ளது. தஞ்சையின் வடகிழக்கே சிதம்பரம் பூம்புகார் தொட்டு கிழக்கே நாகப்பட்டினம் முதற்கொண்டு தோப்புத் துறை, வேதாரண்யம், கோடியக்கரை தென்கிழக்கே முத்துப்பேட்டை, மல்லிப் பட்டினம், சேதுபாவா சத்திரம் வரை கடல் கொந்தளிக்கவோ சூறாவளி சுழற்றியடிக்கவோ வாய்ப்புகள் ஏதுமில்லை...''

மன்னரின் மனதையும் - வானிலையையும் ஆராய்ந்த வல்லுனர்கள் சொன்னார்கள். இருப்பினும் மன்னர் அமர்சிங் அமைதி கொள்ளவில்லை. 

மன்னர் அருந்துவதற்கென்று - மழைச்சாரலின் குளுமைக்கு இதமாக, விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட வெதுவெதுப்பான மூலிகை ரசம் வந்தது.

அதை நிராகரித்த மன்னர் - ''அமைச்சரை வரச்சொல்லுங்கள்'' -  என்றார்.

அடுத்த அரை விநாடியில் அரசரின் அருகில் அமைச்சர்.

'' ..உடனடியாக தஞ்சைக்கு வடக்கே உள்ள நிலவரம் தெரிய வேண்டும்!...'' 

''..உத்தரவு!..'' - தலை வணங்கிய அமைச்சர் பலவகையிலும் திறமையான ஆட்கள் உடன் வர - தஞ்சை மாநகரின் வட எல்லையில், வடவாற்றினை நெருங்கினார்.  

மாமன்னன் ராஜராஜசோழனின் ஆன்மீக குருநாதராகிய கருவூர் சித்தரின் திருவாக்கினால் புகழப்பெற்ற ஆறல்லவா வடவாறு!..


வடவாற்றில்  கரை புரண்டு ஓடியது வெள்ளம்.

அதை மேலும் அதிகப்படுத்தும் விதமாக - பலத்த சாரலுடன் மழை.

வடவாற்றின் தென்கரையில் சற்று தொலைவில் -   ராஜாகோரி எனும் பெரு மயானத்தை ஒட்டியபடி -

ஸ்ரீஅமிர்தவல்லி  சமேத ஸ்ரீசிதானந்தேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் .

திருக்கோயிலை நோக்கிக் கைகூப்பி - கண்களை மூடித்தொழுதார் அமைச்சர். 

சில நொடிகள் நகர்ந்தன. கண் விழித்த அமைச்சருக்கு பெரும் அதிர்ச்சி.

காண்பது கனவா!.. இதுவரைக்கும் காணப்படாத இவர் - இப்போது எப்படித் தோன்றினார்?.. எங்கிருந்து வந்தார்?..

மழை நீர் தழுவிச் செல்லும் வடவாற்றின் தென்கரைப் படித்துறையில், மழையில் நனைந்தபடி தவக்கோலத்தில் - சிவயோகத்தில் அமர்ந்திருந்த பெருந்துறவி ஒருவரைக் கண்டு அனைவரும் அதிர்ந்தனர்.

வடவாறு வற்றினாலும் - வற்றாத கருணை வெள்ளத்தினை அவருடைய திருமுகத்தில் கண்டனர்.

அமைச்சரின் முகக்குறிப்பினை உணர்ந்த பணியாளர்கள் -  பெரிய குடை ஒன்றினை மழையில் நனையும் துறவிக்கு ஆதரவாகப் பிடித்தனர். தவநிலை தடைப்பட்டது. 

துறவியார் மெல்ல கண் விழித்தார். அமைச்சரும் மற்றவர்களும் அவருடைய பாதம் தொட்டு வணங்கினார்கள். துறவியார் திருவாய் மலர்ந்தருளினார்.

''...அஞ்ச வேண்டாம்!... எந்தத் தீங்கும் நேராது. சிவம் துணைக்கு வரும்!... உனக்கும் மாலை வரும்!...'' - மீண்டும் மோனத்தில் ஆழ்ந்தார்.

துறவியாரின் - திருவாக்கினால், அமைச்சரின் மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது.

ஓடக்கோலுடன் தயாராக நின்ற ஓடக்காரர்கள் கட்டுத் தறியிலிருந்து கயிறை அவிழ்த்தனர். ஓடங்கள் பயணித்தன.

வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி - என  வெள்ளப் பெருக்கில் ததும்பிய ஆறுகளைப் பரிசலில் கடந்து,

பள்ளிஅக்ரஹாரம், சக்ர சாமந்தம், ராஜேந்திரம் ஆர்க்காடு, வேலூர், அம்மன் பேட்டை, அரசூர், கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி, திருவையாறு, விளாங்குடி, திருமானூர் - என,


ஊர் மக்களை நேரில் கண்டு அவர்களுக்கு ஆதரவாக ஆறுதல் கூறி - ஆங்காங்கே  அவர்களைக் கொண்டே ஆற்றின் கரைகளை சீர்படுத்தி -

அவசர காலத்தில், உணவு, உறையுள், மருத்துவம், பாதுகாப்பு -  என , மக்களுக்கும் கால்நடைகளுக்கும் பயிர் விளைந்து செழித்த நிலங்களுக்குமாக, எல்லா ஏற்பாடுகளும் செம்மையாகச் செய்யப்பட்டன. 

அரசருக்கு செய்தி அறிவிக்க அவ்வப்போது -  ஓலைதாங்கிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சில தினங்களாயின. இதற்குள் மழையும் ஓய்ந்தது. கரு மேகங்களைக் கடந்து கதிரவன் முகங்காட்டினான்.


அமைச்சர் - விரைவாக தலைநகருக்குத் திரும்பினார். 

திரும்பி வரும்போது - வடவாற்றின் படித்துறையில் - சில தினங்களுக்கு முன் கண்ட கோலத்திலேயே - அந்தத் துறவி அமர்ந்திருக்கக் கண்டனர்.

அச்சமும் வியப்பும் மேலிட்டது. ஆரவாரங்களினால் கண் விழித்த துறவியார் மீண்டும் கூறினார்.

''..சிவம் துணைக்கு வரும்!.. உனக்கும் மாலை வரும்!..'' - மீண்டும் மோனத்தில் ஆழ்ந்தார்.

அமைச்சர் விரைந்து அரண்மனைக்குச் சென்றார். தஞ்சை வடக்கு வாசலில் பெருந்தோரணங்கள். எங்கும் ஆரவார - ஜயகோஷங்கள். என்ன விசேஷம்!?...

வியப்படைந்த  அமைச்சரை பட்டத்து யானை மாலையிட்டு வரவேற்றது.

மங்கல வாத்தியங்கள் முழங்கின.  அரசர் எதிர்கொண்டு நின்றார். அறிவிற் சிறந்த அமைச்சர் அல்லவா!.. விஷயம் விளங்கிற்று.  நாணம் கொண்டார்.

அரசரை வணங்கியபடி சொன்னார் - '' நான் என் கடமையைத்தான் செய்தேன்!'' 

அரசர் சொன்னார் - '' அதையும் செம்மையாய் செய்தீர்கள் அல்லவா!...''

பெருமதிப்புடைய நவரத்ன மாலையினை அவருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

''செய்ததெல்லாம் குருநாதர்!..''

அன்று வடவாற்றங்கரையில் நடந்ததை அமைச்சர் விவரித்தார்.

அரசரும் மற்றவர்களும் ஓடி வந்தனர். வடவாற்றின் படித்துறையில் அதே நிலையில் குருநாதரைக் கண்டு தொழுது வணங்கினர்.


அனைவரையும் வாழ்த்தியருளினார் குருநாதர். மக்கள் வெள்ளமென வந்து அடி பணிந்தனர். அந்த மகானின் பார்வையினால் அனைவருக்கும் நலம் விளைந்தது.

மக்கள் அந்த மகானை '' பாவா '' என்று அன்புடன் அழைத்து அகமகிழ்ந்தனர்.

பின்னர் '' பஞ்சநத பாவா '' என்று அறியப்பட்டு,   பலகாலம் வீற்றிருந்தார்.

கலக்கமுற்றோருக்கும் கவலையுற்றோருக்கும் கதியற்றோருக்கும் - கரை காட்டும்  கலங்கரை விளக்காக, கருணையின் விளக்காகத் திகழ்ந்தார் மகான் பஞ்சநத பாவா.

அவரை அண்டினோர் எல்லாரும் அல்லல் தீர்ந்து - ஆனந்த வசப்பட்டனர்.

அனைவருக்கும் ஒளிவிளக்காகத் திகழ்ந்த - அந்த ஞானஒளியும் தன்னை ஒளித்துக் கொள்ளும் நாள் வந்தது. கண்ணீர் வெள்ளத்தில் மக்கள் வெள்ளம்.

அனைவருக்கும் நல்லாசி சுரந்த கருணையின் ஊற்று நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்தது.

அப்படி ஆழ்ந்த நாள் - மாசி மாதத்தின் அமாவாசை தினம். 

மகாசிவராத்திரியன்று தவநிலையில் -  சிவமாகப் பொலிந்த தவம், பொழுது விடிந்த வேளையில்,  விடிந்தது பொழுது என்று சிவநிலையினை எய்தியது.

நிர்விகல்ப சமாதியை நிலைப்படுத்தி சிவலிங்கம்  நிறுவினர்.


பாவா சிவயோகத்தில் அமர்ந்திருந்த படித்துறை
இன்றும்,  குருநாதர் ஸ்ரீ பஞ்சநத பாவா ஸ்வாமிகள் -

கலக்கமுற்றோருக்கும் கவலையுற்றோருக்கும் கதியற்றோருக்கும் - கரை காட்டும் கலங்கரை விளக்காக, கருணையின் விளக்காகத் திகழ்கின்றார். அவரை அண்டினோர் அனைவரும் அல்லல் தீர்ந்து  ஆனந்தம் அடைகின்றனர்.

நிர்விகல்ப நிலையின் மூல லிங்கம்

பூமிக்குக் கீழ் 15 அடி ஆழத்தில் உள்ள நிர்விகல்ப நிலை
மாசி அமாவாசை தினம். நம் குருநாதருக்கு ஆராதனை நாள்.

தஞ்சை மாநகரின்  ஒருபகுதியாக விளங்குவது வசிஷ்ட மகரிஷி சிவபூஜை நிகழ்த்திய  கரந்தை எனும் கரந்தட்டாங்குடி.

பெருமை மிகு கரந்தையில் பழைய திருவையாறு சாலையில் வடவாற்றின் கரையில் அமைந்துள்ளது - ஸ்ரீ பஞ்சநதபாவா ஸ்வாமிகளின்  அதிஷ்டானம்.

ஸ்ரீபஞ்சநதபாவா ஸ்வாமிகளின் நிர்விகல்ப சமாதி - பூமிக்குக் கீழ் பதினைந்தடி ஆழத்தில் சிறு குகை போல அமைந்துள்ளது.

தரை தளத்தில் இருந்து கீழே செல்ல படிக்கட்டுகள் உள்ளன.

கீழே இறங்கியதும்  - அங்கே நிற்கலாம்.

சற்று முன்னே செல்ல வேண்டுமாயின் - தலை குனிந்தபடி செல்லவேண்டும்.

இன்னும் சற்று முன் செல்ல வேண்டுமாயின் - உடலை வளைத்து குனிந்தபடி செல்லவேண்டும்.

மூல லிங்கத்தின் அருகின் செல்ல வேண்டுமாயின் - மண்டியிட்டவாறு தான்  செல்லமுடியும்.

மூலலிங்கத்தின் முன்பாக சற்று நேரம் அமர்ந்திருந்தாலே போதும். மனம் தானாகவே அமைதி அடையும்.  நிஷ்டையும் கை கூடும்.

அதிஷ்டான வளாகத்தில் - ''குருவே சரணம்!..'' என்று தஞ்சம் அடைந்த அணுக்கத் தொண்டர்களும் சிவகதியடைந்து நிலை கொண்டுள்ளனர்.

ஸ்ரீ பாவாசாமி மடத்தின் பின்புறமுள்ள வேறொரு மடம்
அதிஷ்டானத்திற்கு அருகில் -  பழைமையான ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீநாகநாத ஸ்வாமி திருக்கோயிலும், பின்புறம் - ஸ்ரீ அமிர்தவல்லி சமேத ஸ்ரீ சிதானந்தேஸ்வரர் திருக்கோயிலும் உள்ளன.

அதிஷ்டானத்தில் -   குருபூஜை  மாசி அமாவாசை அன்று வெகுசிறப்பாக அனுசரிக்கப்படுகின்றது.

மடத்தின் நிர்வாகிகளாலும் கோரக்கர் வழிபாட்டு மன்றம், குருவார வழிபாட்டு மன்ற அன்பர்களாலும் மற்றும் இறையன்பர்களாலும் - சிறப்பான முறையில் அபிஷேக ஆராதனைகளும் மதியம் விரிவான அன்னதானமும் நிகழ்கின்றது.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து கரந்தைக்கு நகர பேருந்துகள்  இயங்குகின்றன. கரந்தைத் தமிழ்ச் சங்கம் அருகே இறங்கி - பாவாசாமி மடம் என்று கேட்டால் - குரு அருளால் - யாரும் வழிகாட்டுவார்கள்.

ஸ்ரீபாவாசாமி மடம் , கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்தின்  - பின்புறம் பழைய திருவையாறு பூக்குளம் சாலையில், வடவாற்றின் தென்கரையில் உள்ளது. கரந்தையிலிருந்து ஆட்டோவில் எளிதாக சென்றடையலாம்.

குருநாதரைத் தரிசிக்க வாருங்கள்.
குருநாதரின் கருணை கவலைகளை ஓட்டும். 
கலங்கரை விளக்காகக் கரை காட்டும்.  

'' ஸ்ரீ பஞ்சநத பாவா திருவடிகள் சரணம்!..''

10 கருத்துகள்:

  1. பஞ்சநத பாவா இதுவரை அறியாதன அறிந்தேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  2. ஸ்ரீ பஞ்சநத பாவா அவர்களின் சிறப்புகளை பகிர்வின் மூலம் அறிந்தேன் ஐயா... தஞ்சை வரும் போது கண்டிப்பாக செல்ல வேண்டும்... மிக்க மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தஞ்சைக்கு - தங்களை வருக.. வருக.. என, இருகரம் நீட்டி வரவேற்கின்றேன்.
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  3. எத்தனை அதிசயங்கள் எத்தனை ஆச்சர்யங்கள் நிறைந்த பூமியிது !
    இந்தியா வந்தால் அனேகமாக எங்கள் உணர்வுகளில் புலப்படுவது
    இப்படியான புதுமை வாய்ந்த தெய்வங்களை தெய்வீகத் தலங்களைக்
    காண வேண்டும் தரிசிக்க வேண்டும் என்பது தான் .ஸ்ரீ பஞ்சநத பாவாவின்
    உடல் சமாதியடைந்த நாள் மாகா சிவரார்த்திரி என்று அறிந்த பொழுதில்
    சிவனின் மற்றொரு அவதாரமாக உணர முடிந்தது சுவாமியின் வருகை !
    அறியாத மிகச் சிறப்பான தகவலை எங்களுக்கும் அறியத் தந்த தங்களுக்கு
    என் மனமார்ந்த நன்றிகள் ஐயா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களது வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரா!
    பஞ்சநாத பாவா பற்றி இதுவரை நான் அறிந்தது இல்லை! மிக்க நன்றி ! எமக்கு தெரியாத விடயங்கள் எத்தனயோ எடுத்து அருமையாக சொல்வது அருமையே! தஞ்சை பெரிய கோவில் வந்துள்ளேன். எல்லாம் ஒரு லிஸ்ட் போட்டு வந்து அனைத்தும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. கொடுப்பினையும் இருக்க வேண்டும் இவை தரிசிக்க.
    நன்றி ! வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..

      அம்பாளடியாள் அவர்களும் தாங்களும் கூறுவது முற்றிலும் உண்மை. தெரியாத விஷயங்கள் நமக்கு முன் கடல் அளவாக இருக்கின்றன. எல்லாவற்றையும் கண்டு மகிழ இந்த ஒரு பிறவி போதுமா என்று தெரியவில்லை.

      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  5. பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.... நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..