நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 15, 2023

கரும்பு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 2 
   சனிக்கிழமை

நன்றி
படங்கள் : விக்கி
 

கரும்பு, சர்க்கரை, வெல்லம் இவற்றின் தாயகம் நமது நாடே..

அக்காரம் என்றால் வெல்லம். அடிசில் என்றால் சோறு.. இது நமது பாரம்பரியம்..

சென்ற பதிவில்  கரும்பும் சர்க்கரையும் நம்முடன் வேத காலத்தில் இருந்தே பின்னிப் பிணைந்திருக்கக் கண்டோம்..

விக்கியோ -
முற்காலத்தில் நியூகினியா எனும் நாட்டிலிருந்து தான் நம்நாட்டிற்குள் கரும்பு வந்தது என்கின்றது!.. 

இங்கிருந்த புத்த துறவிகள் கரும்பு சர்க்கரையை
சீனாவுக்குக் கொண்டு சென்றதாகவும்  சீனர்கள் பழுப்பு சர்க்கரையை வெள்ளையாக மாற்றி அனுப்பியதாகவும் வழிவழிச் செய்திகள்..  

வெள்ளையாய் உருமாறி வந்த சீனத்து சர்க்கரை என்னும் சொல் வழக்கே சீனி சர்க்கரை என்று பிரிந்து விட்டது.. - என்று எங்கள் தமிழாசிரியர் சொல்வார்..

அரபு நாடாகிய குவைத்தில் சில காலம் இருந்த போது அங்கே நம்மவர்களை இந்தி என்றும் சீனர்களை சீனி என்றும் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கின்றேன்..

அரபியில் ஷூகர் என்றே சொல்லப்படும் சர்க்கரைக்கு 
ஆங்கிலத்தில் என்ன பெயர் என்று எல்லாருக்கும் தெரியும்..

மேலை நாட்டவர் - தாம் கைப்பற்றிய நாட்டின் மக்களைத் தமது கரும்புத் தோட்டங்களில் அடிமைப் படுத்தியது உலக வரலாற்றில் இரத்தம் தோய்ந்த பக்கங்கள்..

சர்க்கரை எனும் நமது சொல் தான் இதற்கு வேர்ச்சொல்..

கரும்புச் சாற்றினைப் பக்குவமாக காய்ச்சி அந்தப் பாகினை பெரிய பலகையில் ஊற்றி திரட்டித் திரட்டி தயாரிக்கப்படுவது சர்க்கரை.. 


அச்சுகளில் ஊற்றி எடுக்கப்பட்டால் வெல்லம். பதமான சூட்டில் இருக்கும் பாகினை கைகளால் உருட்டைப் பிடித்தால் உருண்டை வெல்லம்..

பனையின் பதநீரில் இருந்து பெறப்பட்டதே
கரிய நிற கருப்பட்டி. பனங்கருப்பட்டி நமது மண்ணுக்கே உரியது..


பருவம் அடைந்த பெண்களுக்கு 
வெல்லத்துடன்  உளுந்தங்களி  செய்து கொடுப்பது வழக்கம் என்றால் உளுந்தங்களியில் கருப்பட்டி சேர்த்துக் கொடுப்பது தென் தமிழத்தில் வழக்கம்..

கார்போஹைட்ரேட்டும் இரும்புச் சத்தும் நிறைந்துள்ள கருப்பட்டி ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கின்றது..

வெல்லத்தில் இரும்புச் சத்து, சுக்ரோஸ், பிரக்டோஸ், மக்னீஷியம், பொட்டாசியம், மாங்கனீஸ் ஆகிய சத்துகள்
 நிறைந்துள்ளன. 
 
வெல்லத்தில் இரும்புச் சத்தும், கால்சியமும்  உள்ளதால் பெண்கள் குறிப்பிட்ட சில நாட்களில் சிறிதளவு வெல்லத்தைத் தின்பது மிகவும் நல்லது. 

சித்த மருத்துவத்தில் சில  மருந்துகளைத் தயாரிக்க இன்றும் வெல்லத்தைத் தான்  பயன்படுத்துகின்றார்கள்.

வெல்லத்தினால் உடலிற்கு கேடு ஒன்றும் இல்லை.

பண்டைய நாட்களில்
உணவு  உண்ட பிறகு ஒரு துண்டு வெல்லத்தைத்  தின்பது வழக்கம்.. ஏனெனில்.  ஜீரணத்தை சரி செய்கிற சக்தி வெல்லத்துக்கு உண்டு..

விருந்துகளில் வெல்லப் பாயசம் பரிமாறப்படுவது இதன் அடிப்படையில் தான்

பித்தம் குறைவதற்கு வெல்லத்தைப் பிரதானமாகக் கொண்ட பானகம் மிக மிகச் சிறந்தது.. 

கரும்பு வெல்லம் மற்றும் பனை வெல்லம் இவற்றில் இரும்புச் சத்தும் கால்சியமும் அதிகமாக உள்ளன. 


கரும்புச்சாறு சிறுநீரகங்களின் வேலையை சிறப்பாக்குகின்றது..

கருப்பஞ்சாற்றில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் போது, அதை வெண்மை ஆக்குவதற்காக சேர்க்கப்படும் ரசாயனங்களால் இயற்கை சர்க்க்ரையின் தன்மை கெடுக்கப்பட்டு  அழிக்கப்பட்டு ஆபத்தான நிலைக்கு ஆளாகின்றதே அன்றி 
வெல்லம் சர்க்கரை இவற்றால்  நேரடியான பாதிப்பு இல்லை என்பதே உண்மை...

எனினும், நீரிழிவு குறைபாடு உள்ளவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படியே வெல்லம் சர்க்கரை இவற்றைப் பயன்படுத்துதல் வேண்டும்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
***

16 கருத்துகள்:

  1. சிறப்பான தகவல்கள். இனிப்பான தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. எனது பள்ளிக்காலங்களில் மாதத்துக்கான சர்க்கரை அளவு சீக்கிரமே தீர்ந்து விடும்.  வீட்டில் டிக்கெட் ஜாஸ்தி!  மறுபடி சர்க்கரை வெளிமார்க்கெட்டில் மாதக்கடைசியில் உடனே வாங்குவது முடியாது.  காசுடப்பா பிரச்னை!  அப்போதெல்லாம் காபியில் வெல்லம் போட்டுக் குடித்திருக்கிறோம்.  முதலில் ஒரு மாதிரி இருந்தாலும் பழகியபின் அதுவே தனிச்சுவையாய் இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டிலும் நாட்டுச் சர்க்கரை தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. நான் வெல்லம் bபாவிப்பேன். இங்கு நல்ல கரும்புச்சாறு 20ரூபாய்க்குக் கிடைக்குறது. நான் அவ்வப்பொது வாங்குவது வழக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே கருப்பஞ்சாறு கிடைத்தாலும் குடிப்பதில்லை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி நெல்லை..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. நல்ல தகவல் பகிர்வு.
    வெல்லம் பண்டிகைகளில் கட்டாயம் இடம்பெறும்.
    உளுந்தங்களி அடிக்கடி அம்மா செய்வார்கள். இடுப்புக்கு பலம் என்று. கணவருக்கு பிடிக்காது என்பதால் நான் செய்யமாட்டேன்.
    தங்கை வீடுகளுக்கு போனால் செய்து தருவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. நம்நம் வீட்டிலும் வெள்ளைச் சர்க்கரையின் பயன்பாடு இல்லை. வெல்லம்தான் அதுவும் அரிதாக.

    எங்கள் ஊரில் ஒரு பாட்டி அதாவது சுதந்திர தினக்காலங்களில் இருந்தவர். அப்போது சர்க்கரை ரேஷனில் என்பதால் அந்தப் பாட்டி கருப்பட்டியை மிகச் சிறிய துண்டை வாயில் அடக்கிக் கொள்ளக் கொடுப்பாராம் எல்லாருக்கும் அதை அடக்கிக் கொண்டு காப்பியைக் குடிக்க வேண்டுமாம் தனித்தனியாகப் போடமாட்டாராம்!!!

    நல்ல பதிவு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் மேலதிகக் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. வெல்லப்பாகு வைத்துக் காஃபி, தேநீர் குடித்திருக்கேன். சின்ன வயசில். தாத்தா வீட்டில் மற்றபடி கரும்பை எல்லாம் கடித்துத் தின்றதே இல்லை. பொங்கலுக்கு வாங்கும் கரும்பில் மறுநாள் கணுப்பொடி வைக்க ஒரு துண்டை வைத்துக் கொண்டு மிச்சக்கரும்பை அப்படியே வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்துடுவார் அப்பா. கரும்பெல்லாம் சாப்பிடக் கூடாது என்பார். நான் தான் இல்லாத கேள்விகள் எல்லாம் கேட்டுவிட்டு வாங்கிக் கட்டிப்பேன். :) நேர்மாறாக மாமனார் வீட்டில் கட்டுக் கட்டாகக் கரும்பு. வாயினாலேயே எல்லோரும் அரைத்துத் தள்ளுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரும்பைக் கடித்துத் தின்ற காலங்கள் எல்லாம் போய் விட்டன..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நலம் வாழ்க..

      நீக்கு
  8. கரும்பு நல்ல தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..