நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, அக்டோபர் 07, 2022

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று புரட்டாசி 20
வெள்ளிக்கிழமை..

அருணகிரிப் பெருமான் 
அருளிச் செய்த 
திருத்தணிகைத்
திருப்புகழ்..

இன்றைய சூழ்நிலையில்
ஒவ்வொருவருக்கும் 
தேவை நோய் நொடியில்லாத 
நல்வாழ்வு..

நமது வலைத் தளத்திற்கு வருகை தந்து ஊக்கம் அளிக்கும் அன்பு நெஞ்சங்கள் பலவும் ஏதோ ஒரு வகையில் உளக் குறையினாலும் உடல் நோவினாலும் வருத்தமுற்றிருக்கின்றனர்.. 

அன்புக்குரிய கீதாககா அவர்கள் நலக்குறைவினால் பதிவுகளுக்கு வருவதில்லை.. வல்லியம்மா, கமலா ஹரிஹரன் ஆகியோரும் அப்படியே.

அவர்களது நலத்திற்காகப் பிரார்த்தனை 
செய்து கொள்ளும் இவ்வேளையில்
உற்றாரும் மற்றோரும் பின்னும் ஊரும் உலகும் பிழைகளினின்று நீங்கி நலங்கொண்டு வாழ்தற்கு எம்பெருமான் முருகவேள் இன்னருள் நல்குவானாக!..

அதற்கான 
அற்புதத் திருப்புகழ் 
இது..


தனதன தான தனதன தான
தனதன தான ... தனதான

இருமலு ரோக முயலகன் வாதம் 
எரிகுண நாசி ... விடமேநீ

ரிழிவுவி டாத தலைவலி சோகை 
எழுகள மாலை ... இவையோடே

பெருவயி றீளை எரிகுலை சூலை 
பெருவலி வேறு ... முளநோய்கள்

பிறவிகள் தோறும் எனைநலி யாத 
படிஉன தாள்கள் ... அருள்வாயே..

வருமொரு கோடி அசுரர்ப தாதி 
மடியஅ நேக ... இசைபாடி

வருமொரு கால வயிரவர் ஆட 
வடிசுடர் வேலை ... விடுவோனே

தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி 
தருதிரு மாதின் ... மணவாளா

சலமிடை பூவின் நடுவினில் வீறு 
தணிமலை மேவு ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
(நன்றி : கௌமாரம்)

இருமல், முயலகன் எனும் வலிப்பு, வாத நோய்கள்,

எரிச்சலுடைய மூக்கின் நோய், விஷ நோய்கள், நீரிழிவு,

நீங்காத தலைவலி, ரத்த சோகை,

கழுத்தைச் சுற்றி மாலை போல உண்டாகும் புண் இவற்றுடன்,

மகோதர நோய், நுரையீரலில் சளி, நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி,

மற்றும் 
கண், காது, வாய், தொண்டை, கழுத்து, தோள், முதுகு, இடுப்பு, கை கால் மூட்டுகள் சிறுநீரகம், ஜனனேந்திரியங்களில் - பெரு வலியுடன் கூடிய பிற நோய்கள் எவையும் -

பிறவிகள் தோறும் தொடர்ந்து வந்து எனைப் பீடித்து வருத்தாதபடிக்கு,

உன்னுடைய திருவடிகளைத்
தந்தருள்வாய் முருகா!..

உன்னை எதிர்த்து கோடிக் கணக்கில் திரண்டு வந்த 
அசுரர்களின் படை

மடிவதற்காக (வும் நீ போரிடும் அழகைக் காண்பதற்காகவும்) வெற்றிச் சங்கொலியுடன் வீர முழக்கமிட்டுக்  கொண்டு வந்த - கால பைரவர் போர்க் களத்தில் ஆனந்த நடனம் ஆடும்படிக்கு,

ஒளிமிகுந்த வேலினை அசுரர்கள் மீது எறிந்தவனே,

மேக வாகனனாகிய இந்திரனால் கற்பக விருட்சத்தின் நிழலில் இருந்து அன்புடன் வளர்க்கப்பட்ட அழகு நங்கை தேவயானையின் மணவாளனே,

கடலால் சூழப்பட்டிருக்கும் 
பூவுலகின் மத்தியில் சிறப்புடன் விளங்கும் திருத்தணிகை மலையின் மீது வீற்றிருக்கும் பெருமாளே!..


கந்தா சரணம்
கடம்பா சரணம்
கார்த்திகை மைந்தா
சரணம்.. சரணம்!..
***

வியாழன், அக்டோபர் 06, 2022

புதுசு கண்ணா!..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

சோழ வம்சத்தினர்
சிவநேசச் செல்வர்களாக 
வாழ்ந்தவர்கள்..

ஆலயத் திருப்பணி அவர்களது 
உயிரினில் கலந்தது..

திரைக்கு வந்திருக்கும் நவீன திரைப்படத்தில் என்னென்ன மாற்றங்களோ..

நல்ல வேளை..
பழைய கதையில் படுத்த படுக்கையாகக் கிடந்த சுந்தர சோழர் ஈழத்துக் கடற்கரையில் குத்தாட்டம் போடவில்லை..

சரித்திர காலத்துக்குச் சற்றும் பொருந்தாத 
இசையும் பாடல்களும் என்ற கருத்துக்களும்
பரவலாக வந்திருக்கின்றன..

சரி.. எது எப்படி இருந்தால் என்ன?..

என் பிள்ளைகளுக்கா கல்கி அவர்களது பொன்னியின் செல்வன் முழுக் கதையும் என்னிடம் உள்ளது.. அது போதும்!.

இந்நிலையில்,
தஞ்சாவூரில் அப்படி..
பலயாரை(பழையாறை) யில் இப்படி என்று, 
குழாயடியில் ஏகப்பட்ட விரிவுரைகள் விளக்க உரைகள்!..

ஒரு நாள் மழையில் ஊர்க் குப்பைகள் மிதந்து வருவதைப் போலவும் ஓடுதற்கு வழியில்லாது தேங்கிக் கிடந்த கழிவு நீர் வாசலுக்கு வருவதைப் போலவும் பற்பல கருத்துகள்..
 
ராஜராஜ சோழனை ஹிந்து அரசனாக்குவது... 
- என்று ஏதேதோ உளறுகின்றது ஒரு பிறவி.. 

அந்த கால கட்டத்தில் ஹிந்து என்ற சொல் இருந்ததில்லை.. 

சைவ வைணவ சமயங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு இந்நாட்டின் அரசியல் அமைப்பு கொடுத்திருக்கும் பெயர் தான் ஹிந்து என்பதை அறியாதிருக்கும் மூடர்கள் பலர்..

இனி, அடுத்ததாக ராஜ ராஜேஸ்வரம் என்று, ராஜராஜ சோழனால் பெயர் சூட்டப்பட்ட - பெரிய கோயிலை எழுப்பியவன் அவனே அல்ல!.. - என்று கூவிக் கொண்டு யாரும் வரக்கூடும்!..

குழாயடியின் பக்கம் சென்றால் அங்கே, 
அருல்மொளி வர்மண், நன்டினி, பலவேட்டுராயர் - என்றெல்லாம் - சகிக்க முடியவில்லை..

எல்லாம் காலத்தின் கொடுமை...

இணையத்தில் சேகரிக்கப்பட்ட
படங்கள் இன்றைய பதிவில்!..

பொன்னியின் செல்வன் 
என்றும் நம்முடன்!..
செம்பியன் மாதேவியார்


அநிருத்த பிரம்மராயர்மணிமேகலை - வந்தியத்தேவன்

மந்தாகினி தேவி

பொன்னியின் செல்வன்


பூங்குழலியின் கனவு
சிற்றப்பனுக்கு மணிமுடி

Fb ல் இருந்து
பெறப்பட்ட
 காணொளியைக் 
காணுங்கள்..


நவீன - கேழ்வார்க்குடியான் பதற்றத்தில் எழுப்பும் கூக்குரலுக்கு ஏனைய மொழிகளில் நாராயணா என்று அர்த்தம் போலிருக்கின்றது..

ஆனாலும்,
நவீனத்தில் நாயக நன் மணிகள் நெற்றியில் வெள்ளைப் பொடியுடன் இருப்பது போல காட்டப்படுகின்றதே!..

ஓ.. அதக் கேக்றீங்களா.. அதுக்கு ஏதாவது ஏடாகூடமா பதில் வந்தாலும் வரலாம்!..
**
வாழ்க கல்கி  
வாழ்க வந்தியத்தேவன்
வாழ்க குந்தவை
வாழ்க அருள்மொழி
***

புதன், அக்டோபர் 05, 2022

விஜயதசமி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 18
புதன்கிழமை
விஜயதசமி நன்னாள்


இன்றைய பதிவில்
நவராத்திரியின் பஞ்சமி நாளன்று 
(வெள்ளிக்கிழமை)

தஞ்சையை அடுத்துள்ள
அரசூர் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை உடனாகிய
ஸ்ரீ அகஸ்தீஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் 
நடைபெற்ற 
ஸ்ரீ மஹா சண்டி ஹோமத்தின் காட்சிகள்..

வலக்கை ஓங்கிய வஞ்சி

சிங்க முகம் தெரிகின்றதா!..

தீப்பிழம்பில் ஸ்ரீமாரியம்மன்ஸ்ரீ காளி சந்நிதி


யாக அக்னியில் அம்பாள் ஆடி நின்றதை சில நொடிகள் கண்டேன்..

எனக்கு மட்டும் தான் அப்படித் தெரிந்ததா!.. நீங்கள் தான் சொல்ல வேண்டும்..

யாக பூஜையில் மந்திரார்ப்பணம் செய்து கொண்டிருந்த சிவாச்சாரியார்கள் வழக்கம் போல பூர்ணாஹூதிக்கு முன் ஸ்ரீ மாரியம்மனைப் பாடி அழைத்தனர்.

பெண்களில் சிலர் ஆவேசம் வந்து ஆடினர்..

பூர்ணாஹூதிக்குப் பின் கடங்கள் புறப்பட்டு வலம் வந்தன..

துர்கா சந்நிதியில் அபிஷேகத்தைப் படம் எடுக்க இயலவில்லை.. 

மூலஸ்தானத்தில் எடுத்த படத்தை வீட்டில் வந்து பார்த்தபோது தெளிவில்லாமல் இருந்தது..

தஞ்சை திருவையாறு சாலையில் அம்மன் பேட்டையை அடுத்து அரசூர்.. வெட்டாற்றின் கரையில் இருந்து ஒரு கி.மீ.. 

சுற்றிலும் வயல் வெளிகள்.. நடுவே சின்னஞ்சிறு கிராமம்.

இந்தக் கோயில் மேற்கு நோக்கியது.. கிழக்கு வாசலும் உள்ளது.. எனினும், தெற்கு வாசல் தான் பிரதானம்.. 

ராஜ கோபுரங்கள் கொடி மரம் இல்லை.. ஆனாலும் அருள் அதிர்வுகள் கோயிலுக்குள்..

ஒற்றைத் திருச்சுற்று.. மா, வேம்பு, அரசு, வில்வம் - என, திருச்சுற்றில் மரங்கள்..

பழமையான தலம்..
மராட்டியர் காலத்திய செங்கல் திருப்பணி..

வடக்கில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகன் சந்நிதி.. தெற்கில் ஸ்ரீ பிள்ளையார் சந்நிதி.. வடக்கு நோக்கி ஸ்ரீ காளி.. முன் மண்டபத்தில் ஸ்ரீ மாரியம்மன்.. 

மேற்கு முகமாக அருள்பாலிக்கும் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர்.. தெற்கு முகமாக ஸ்ரீ ஆனந்த வல்லி அம்மன்..

மேற்கு முகமாக அருள் பாலிக்கும் கோயில்களைச் சுற்றி வந்தால் - இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம்.. கடன்கள் தீரும்.. நோய் நொடிகள், பகை விலகும்.. யம பயம் அகலும் -  என்று சொல்லப்பட்டிருக்கின்றது..

தஞ்சை (தஞ்சபுரீஸ்வரர்), அரசூர், கண்டியூர், திரு ஆலம்பொழில், - என நான்கு திருக்கோயில்கள்.. 

ஐந்தாவதாக இன்னும் ஒரு கோயில் அருகில். அறியப்படாமல் இருக்கின்றது..

கோயிலுக்குள்ளேயே ஸ்ரீ காளி சந்நிதியும் இருப்பதால் இன்னமும் விசேஷம்.. ஆனால் வடக்கு முகம். அந்தப் பக்கமாக வந்து தான் தரிசிக்க வேண்டும்..  

அங்கே சென்று தரிசிப்பதற்கு இயலவில்லை..
**
நன்றி : தினமலர்நோய் நொடி விலகவும்
கடன்கள் தீர்ந்து செல்வம் சேரவும் பகை விலகவும் யமபயம் தீர்த்து அம்பாள் அனுக்ரஹம் செய்யவும்
விஜயதசமி நாளில்
வேண்டிக் கொள்வோம்..
**
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமாரீச தீமஹி
தந்நோ துர்கே ப்ரசோதயாத்

ஓம் மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யை ச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்

ஓம் சக்தி ஓம்
***