நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஆகஸ்ட் 12, 2015

மாதங்கம் என்றேன்..

அவள்.. பாணனின் மனைவி..

வீட்டிற்குள் சமையல் வேலையாக இருக்கின்றாள்..
வெளியே ஆரவாரம்.. கூச்சல்.. சலசலப்பு..


சமையலை விட்டு - வெளியே வந்து பார்க்க இயலாத சூழ்நிலை..

கூச்சலின் ஊடாக - கணவனின் குரல் கேட்கின்றது.. புரிந்து கொண்டாள்..

வீட்டினுள்ளிருந்தபடியே வினவுகின்றாள்..

வானளவுக்குப் பெரும் புகழ் கொண்ட வள்ளல் ராமனைப் புகழ்ந்து பாடுதற்குச் சென்றீர்களே!.. என்ன கொண்டு வந்தீர்கள்?...

வெளியில் நிற்கும் பாணன் மதிநலம் மிக்க, தனது - மனைவியின் வினாவுக்கு விடையளிக்கின்றான்..

வள்ளல் வாஞ்சையுடன் கொடுத்தது வம்பதாம் களபம்!..

ஆகா!.. நறுமணமுள்ள சந்தனமா!.. பூசிக்கொள்ளும்!..

சந்தனம் இல்லையடி.. ராசாத்தி!.. அது மாதங்கம்!..

சொக்கத் தங்கமா!.. கவலையில்லை.. இன்றுடன் நம் பிரச்னை எல்லாம் தீர்ந்தது!..

தங்கம் அல்ல என் தங்கமே!.. எனக்குக் கிடைத்தது பம்பு சீர் வேழம்!..

என்ன!.. கரும்புக் கட்டு தானா கிடைத்தது.. சரி.. தின்று தீர்க்கலாம்!..

கரும்பு இல்லையடி கண்மணி!.. நான் கொணர்ந்தது பகடு!..

அப்படிச் சொல்லுங்கள்!.. எருமைக் கடா.. வயற்காட்டு வேலைக்கு ஆயிற்று!..

இனியவளே!.. அது எருமையும் அல்ல!.. கம்பமா!..

கம்பு மாவு தருவதற்கா வள்ளலின் மனம் துணிந்தது?.. களி செய்து களிக்கலாம்!..

உண்டு களிக்க அல்ல.. கண்டு களிக்க!.. என்னுடன் இருப்பது கைம்மா!..

அதிர்ச்சியுடன் வெளியே ஓடி வந்தவள் -
கணவனுடன் கம்பீரமாக நின்றிருந்த யானையைக் கண்டு கலங்கினாள்..

இதைக் கட்டி யார் தீனி போடுவது!?.. - என்று..

வம்பதாம் களபம் என்றீர்.. மணமிகு சந்தனம் என்று மகிழ்ந்தேன்..
மாதங்கம் என்றீர்.. சீர்மிகு தங்கம் எனச் சிரித்தேன்..
பம்பு சீர் வேழம் எனப் புகன்றீர்.. சுவை மிகும் கரும்பு என நினைத்தேன்..
பகடு எனப் பகன்றீர்.. உழுதற்கேற்ற எருமை என உவந்தேன்..
கம்பமா என்று நவின்றீர்.. நானும் களிக்கு ஏற்ற கம்பு மாவு எனக் களித்தேன்..

கடைசியாக கைம்மா எனக் கூறீனீர்..
காரிகை நானும் களிற்றினைக் கண்டு கலங்கினேனே!..

என்ன ஒரு ரசனை!..

கவியாகிய - கணவனுக்கும் மனைவிக்கும் இடையே - அற்புதமான தமிழ்ச் சொல் விளையாட்டு!..

இதோ அந்த இனிய தமிழ்ப் பாட்டு!..

இம்பர்வான் எல்லை இராமனையே பாடி
என்கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களபம் என்றேன் பூசும் என்றாள்
மாதங்கம் என்றேன் யாம் வாழ்ந்தேம் என்றாள்
பம்புசீர் வேழம் என்றேன் தின்னும் என்றாள்
பகடு என்றேன் உழும் என்றாள் பழனம் தன்னை
கம்பமா என்றேன் நல்களியாம் என்றாள்
கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே!..

நயம் மிகும் இந்தப் பாடலை இயற்றியவர் - அந்தகக்கவி வீரராகவர்..

தொண்டை நாட்டில் பூதூர் என்னும் ஊரில் வாழ்ந்த வடுகநாத முதலியார் என்பவரின் மகன். பிறவியிலேயே பார்வையற்றவர்.

எனினும் தளராத முயற்சியினால் தமிழ் கற்று பெரும் புலவராக விளங்கியவர்.

இதனால் மக்கள் அவரை அந்தகக் கவி வீரராகவர் என அழைத்திருக்கின்றனர்.

யானைக்குரிய பெயர்களான - களபம், மாதங்கம் வேழம், பகடு, கம்பமா, கைம்மா - எனும் சொற்களைக் கொண்டு பாடல் நயம் மிக்கதாக நம்மை மகிழ்விக்கின்றது..

யானை -  இதற்கு மேலும் - பல பெயர்களைக் கொண்டதாம்!..


குருவாயூர் - ஆனையோட்டம்
அதனால் தானே - இருந்தாலும் ஆயிரம் பொன்!.. இறந்தாலும் ஆயிரம் பொன்!.. என்றனர் - நம் முன்னோர்..

ஆனால், கொன்றாலும் ஆயிரம் பொன்!.. - என மனித இனம் துணிந்து விட்டது..

அதன் தலையெழுத்து படுமோசமாகப் போனதால் தான் கடந்த 2012ல் இருந்து சர்வதேச அளவில் யானைகளுக்காக ஓர் நாள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது..

அந்த நாள் இன்று - ஆகஸ்ட் 12.. சர்வதேச யானைகளின் தினம்!..

காவிரிப்பூம்பட்டினத்தின் கடற்கரையில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல்களைக் கண்டார் உருத்திரங்கண்ணனார்..

கப்பல்கள் அலைகளால் அலைப்புறுவதையும் கண்டார்..  

வெளில் இளக்கும் களிறு போலத்
தீம்புகார்த் திரை முன்றுறைத்
தூங்கு நாவாய்..

அசையாத கம்பத்தினில் கட்டப்பட்டுள்ள யானை - அங்குமிங்கும் அசைந்தவாறு நிற்பதைப் போல அலைகடலில் நாவாய்கள் அசைந்து கொண்டிருக்கின்றன!..  - என்று பட்டினப்பாலையில் பாடி வைத்தார்..

மேலும், சிறு பாலகன் என்றெண்ணி - பகைவர் சிறை பிடித்த வேளையில் -
அங்கிருந்து கரிகாற்சோழன் தப்பித்துச் சென்ற வீரத்தினை -

அருங்கரை கவியக்குத்திக் குழி கொன்று
பெருங்கையானை பிடிபுக்காங்கு..

தன்னைப் பிடிப்பதற்காக வெட்டிய குழிக்குள் விழுந்து விட்ட -
பெரிய கையினை உடைய யானையானது - கூர்மையான தந்தங்களால் - குழியின் சுவரைக் குத்தி இடித்துத் தூர்த்து - அந்தக் குழியிலிருந்து தப்பித்து - தன் இணையிடம் சென்று சேர்ந்ததைப் போல!..

- என்று போற்றுகின்றார்..

பின்னும், தன் தாய்மாமன் இல்லத்தில் தலைமறைவாக இருந்த கரிகாற் சோழனுக்கு - யானை மாலையிட்டு - அரசுரிமை கொடுத்ததுவும் வரலாறு..


நால்வகைப் படைகளுள் - சிறப்பானது யானைப்படை..

அந்நாளில் அரசர்கள் ஆனையின் மீது அம்பாரியில் அமர்ந்து வீதிவலம் வருவதே மிக்க பீடுடையதாக இருந்திருக்கின்றது..

சிறப்புக்குரியவர்களை யானையின் மீது அமர்த்தி பெருமைப்படுத்துவது பண்பாடு..

குலோத்துங்க சோழன் - பெரிய புராணம் பாடிய சேக்கிழார் பெருமானை -  யானை மீது அமர்த்தி சிறப்பு செய்தான்..

அரவணையில் துயிலும் அரங்கனுக்குத் திருப்பள்ளி எழுச்சியில் -

தேவர்களும் அரசர்களும் உன் சந்நிதியின் முன் கூடி விட்டனர்.. களிறுகளும் பிடிகளும் அவற்றினோடு முரசுகளும் சேர்ந்து முழங்கும் போது அலை கடலைப் போல இருக்கின்றது. அரங்கனே நீ துயில் எழுந்தருள்வாயாக!..

- என்று,  தொண்டரடிப்பொடியாழ்வார் பாடுகின்றார்..

இவ்வாறே -

ராஜராஜேஸ்வரம் விளங்கும் தஞ்சையின் பெருந்தெருக்களில் உலவிய களிறுகளின் பிளிறல் - உவர்ப்புடைய அலைகடலின் பெருஞ்சத்தத்தைப் போல இருந்தது!.. 

- என்று கருவூர் தேவர் பாடியருள்கின்றார்..

கானமுயலெய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது..

- என்று படைச்செருக்கினைக் குறிக்கின்றார் - வள்ளுவப்பெருமான்..

கயிலை மாமலையில் தரிசனம் காணச் சென்ற திருநாவுக்கரசருக்கு - எம்பெருமானும் அம்பிகையும் -

களிறும் பிடியுமாக  - முதல் திருக்காட்சி நல்கினர் -  திருஐயாற்றில்!..

புராணங்களிலும் வரலாற்றிலும் நீங்காத சிறப்புடன் திகழ்வன யானைகள்!..


பாரதத்தில் யானை - பல்வேறு வகைகளிலும் சிறப்பிக்கப்படுகின்றது..

தமிழகத்தில் - ஆலயங்களில் நிகழ்வுறும் திருவிழாக்களில் பெருமானும் அம்பிகையும் யானை மீது ஆரோகணித்து வீதிவலம் எழுந்தருள்வர்..

காலஞ்சென்ற வெள்ளையம்மாள் - தஞ்சை
முன்னவன் மூத்தவன் - வேழ முகத்தவன்!..

ஸ்ரீ விநாயகப் பெருமான் யானை முகத்துடன் விளங்குவதை அறியார் யார்!..

திருமுருகனுக்குரிய வாகனங்களுடன் யானையும் ஒன்று..

சுவாமிமலையில் சந்நிதி முன்பாக யானை வாகனம் இலங்குவதைக் காணலாம்.

தஞ்சை அரிசிக்காரத் தெரு ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி கோயிலிலும் யானை வாகனம் விளங்குகின்றது..

ஸ்ரீ தர்மசாஸ்தாவாகிய ஐயப்பனின் வாகனம் - யானை..

ஸ்ரீமஹாலக்ஷ்மியின் தோற்றங்களுள் -
இருபுறமும் யானைகளுடன் விளங்கும் கஜலக்ஷ்மி வடிவம் சிறப்புடையது..

இந்தத் திருவடிவம் தான் - வீடு, மற்றும் கோயில்களின் நிலைகளில் விளங்குவது..

மங்கல வடிவங்களுள் - யானையும் ஒன்று...


கல்லிலே கண்ட கலைவண்ணம்
யானை வரும் பின்னே.. மணியோசை வரும் முன்னே!.. - என்பது சொல்வழக்கு

யானை வருகின்றது என்றால் - தாத்தா பாட்டி முதற்கொண்டு பேரன் பேத்தி வரை - எல்லையில்லா மகிழ்ச்சி தான்!..

குழிக்குள் விழுந்த கன்று
போராடி மீட்கும் தாய்
பாதையில இனிமேலாவது குழி வெட்டாதீங்க.. 
யானைகளுக்கு இப்படியெல்லாம் சிறப்புகள் இருந்த போதும் - நாம் அவற்றைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம்..

ஐந்தறிவு எனப்படும் வனவிலங்குகளின் வாழ்விடங்களைப் பாழாக்கியது -மனித குலம்!..

மனிதன் கெட்ட கேட்டுக்கு - ஆறறிவு என்ற அடைமொழி வேறு!..

தஞ்சை - பெரியகோயிலில் கதை சொல்லும் யானை
தஞ்சை - பெரியகோயிலில் கதை சொல்லும் யானை
கும்பகோணம் - நாகேஸ்வரன்கோயில்
களிறும் காளையும் - தாராசுரம்
காலகாலமாக இருக்கும் யானை வழித்தடங்களை அழிப்பதே மனிதனின் வேலையாயிற்று..

சமீப காலமாக - பொதுமக்களின் மீதான யானைகளின் தாக்குதல் அதிகரித்திருக்கின்றது..



நீலகிரி, சத்தியமங்கலம், வால்பாறை, ஈரோடு - பகுதிகளில் இது போன்று நிகழும் மோதல்களுக்கு முக்கிய காரணம் - யானைகளின் வழித்தடத்தை மனிதர்கள் ஆக்ரமித்ததே என்கின்றனர்.

யானைகள் செல்லும் வழித்தடங்களில் உள்ள நிலங்களை அரசாங்கமே பட்டா போட்டு கொடுத்திருப்பதாக செய்திகள்..

சில ஆண்டுகளுக்கு முன் கோவை ஷோரனூர் ரயில் வழித்தடத்தில் சிக்கி - பெண் யானையுடன் ஆண் யானையும் அதன் கன்றும் - பலியான கொடுமையை மறந்திருக்க முடியாது.. விபத்தில் இறந்த பெண்யானை கருவுற்றிருந்தது..



காடுகளை அழிப்பதை மனிதன் கைவிடவேண்டும். அதுவே ஏனைய உயிரினங்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் நல்லது என்கின்றனர் ஆய்வியலார்..

மனித சமுதாயம் கேட்குமா!.. 
மனம் வருந்தி திருந்துமா!..


காலம் தான் பதில் கூற வேண்டும்!..

வனங்களைக் காப்போம்!..
வளங்களைக் காப்போம்!..
* * *   

18 கருத்துகள்:

  1. யானையைப் பற்றி பதிவெழுத என்னென்ன தேடல்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. யானையைப் பற்றி சங்க இலக்கியம் தொடங்கி இன்றைய நாள் வரை பல செய்திகளைத் தேடிப்பிடித்து, காடு தொடங்கி கோயில் வரை எங்களை அழைத்துச்சென்று ஒரு நல்ல நாளை நன்கு நினைவுகூர்ந்து பாராட்டியமையறிந்து மகிழ்ச்சி, நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. என்னதொரு அழகான தமிழ்ப் பாட்டு ஐயா... மிகவும் ரசித்தேன்...

    உங்களின் தொகுப்பிற்கு ஒரு சல்யூட்...!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்,
    தங்கள் பதிவின் தொடக்கம் பார்த்து, தாங்களும் இலக்கிய பதிவு ஆரம்பித்துவிட்டீர்கள் என நினைத்தேன்.
    இன்று யானைகள் பாதுகாப்பு நாள், பொருத்தமான பாடல்கள்,,,,,,,,
    தாங்கள் தொகுத்து சொன்ன பாடல் அனைத்தும் அருமை,
    கம்பம் இருக்கும் கோயில்களின் படங்கள் என,,,,,,,,,
    அருமையாக இருக்கு பதிவு, வாழ்த்துக்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. யானைகள் பற்றிய அரியசெய்திகளின் தொகுப்பு ஐயா தங்களின் பதிவு
    காடுகள் இருக்கும்வரைதானே
    மனிதனால் இருக்க முடியும்
    நன்றிஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இந்தக் காடு இல்லையெனில் அந்தக் காடுதான்.. அதில் ஐயமில்லை!..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அன்பின் ஜி அருமை யானையைப்பற்றி. அரி. தகவல் களஞ்சியம் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. யானைகளுக்கும் தினம் கொண்டாடப்படுவது எனக்குப் புது செய்தி. யானைகளின் பெயர்களை வைத்துப் புனையப்பட்ட தமிழ்ப்பாடலை மிகவும் ரசித்தேன். காடுகளும் யானைகளின் வழித்தடமும் குறைந்து விட்டதால் அவை மனிதர் வாழும் இடங்களுக்கு வரவேண்டிய சூழ்நிலை. ஒரு காடு வளமாக இருக்கிறது என்பதை யானைகளின் எண்ணிக்கையை வைத்துத் தான் முடிவு செய்கிறார்களாம். யானைகளை வாழவிடவேண்டும் என்ற விழிப்புணர்வை ஊட்டும் பதிவுக்குப் பாராட்டுக்கள் துரை சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களின் விரிவான கருத்துரை மனம் நிறைகின்றது..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் தனிப்பாடலுக்கு நல்லதொரு இலக்கியச் சித்திரம் தந்தீர்கள். இது போல் அடிக்கடி சித்திரம் தீட்டுங்கள். அப்புறம் திடீரென்று ஒரு குழந்தையைப் போல யானை மீது உங்களது பாசம், பல தகவல்களைத் தந்தீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி..

      நீக்கு
  9. அழகிய பாடல்.

    யானை - பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும் எனக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      உங்களைப் போல அனைவருக்குமே -
      யானையைப்பார்த்துக் கொண்டிருக்க ஆசைதான்!..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  10. அழகிய தொகுப்பு! அரிய புகைப்படங்களுடனும் வரலாற்றுச் சான்றுகளுடனும் பாடல்களுடனும் அற்புதம் சகோதரா! வாசித்து மகிழ்ந்தேன். யானைகளின் அழிவு அவசியம் தடுக்கப் படவேண்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..