நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 16, 2015

ஆடிப்பூரம்

இன்று மங்களகரமான ஆடிப்பூரம்..

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
அம்பிகை - பொங்கும் மங்கலத்தில் பூத்து நின்ற நாள்  - பூரம்!..

ஊழிகளின் தொடக்கத்தில் - புவனம் முழுதையும் பூத்து அருள்வதற்காக - ஜகத் ஜனனியாகிய அம்பிகை - புஷ்பவதியாக பூத்து நின்றருளினள்.

அந்த மங்கலம் அனுசரிக்கப்படும் நாளே - ஆடிப் பூரம்!..

அம்மன் சந்நிதிகள் கோலாகலமாக விளங்கும் நாள் - ஆடிப்பூரம்!..

பற்பல திருக்கோயில்களிலும் ஆடிப்பூர வைபவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன..

ஸ்ரீ கற்பகவல்லி
திருமயிலை ஸ்ரீகற்பகவல்லி - இன்று காலை திருவீதி எழுந்தருள்கின்றாள்..

கபாலீச்சரத்தின் தீர்த்தக் கரையில் - அம்பிகைக்கு வளைகாப்பு வைபவம்..

மாலை - மூலஸ்தானத்தில் சந்தனக்காப்பு அலங்கார ஆராதனை...
இரவு கந்தர்வி வாகனத்தில் எழுந்தருள்கின்றாள்..

இதேபோல - நாகை ஸ்ரீநீலாயதாக்ஷி அம்மனும் ஆடிப்பூர திருவிழா காண்கின்றாள்.

முதல் நாளில் மஹாலக்ஷ்மி திருக்கோலம் கொண்ட நீலாம்பிகை - தொடர்ந்து கிளி, ரிஷபம், கமலம், குதிரை, பல்லக்கு - என பல்வேறு வாகனங்களில் திருவீதி எழுந்தருளி மக்களுக்கு மங்கலங்களை அருள்கின்றாள்..


ஐயனும் அம்பிகையும் - திருவையாறு
திருவையாற்றில் - ஐயாறப்பருடன் இனிது உறையும் அறம் வளர்த்த நாயகி ஆகிய ஸ்ரீ தர்மசம்வர்த்தனை அம்பிகைக்கு ஆடிப்பூர விழா - கடந்த ஆகஸ்ட்/7 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது..

நாளும் சிறப்பு அலங்கார ஆராதனைகளுடன் திருவீதி எழுந்தருளினள்..

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி


ஒவ்வொரு நாளும் காலையில் பல்லக்கில் எழுந்தருளிய அம்பிகை - இரவில் ரிஷபம், சேஷம், கிளி, காமதேனு - என வாகனங்களில் வீதி வலம் கண்டாள்.

ஆடிப்பூரத்தன்று - திருத்தேரில் பவனி வருகின்றாள்..

திருவையாறு ஆடிப்பூர திருவிழா படங்களை அளித்த -
திருவையாறு சிவசேவா சங்கத்தினருக்கு மனமார்ந்த நன்றி!..


நெல்லையில் ஆடிப்பூர வைபவம் கடந்த ஜூலை/11 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் சிறப்புடன் நடைபெற்றது..

முதலாம் திருநாள் தொடங்கி - காந்திமதியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நிகழ்ந்தன..


ஜூலை/14 அன்று நண்பகலில் காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம் சிறப்புடன் நடந்தது. வளையல்கள் மற்றும் மங்கலங்களைச் சமர்ப்பித்து - காந்திமதியம்மனை பக்தர்கள் வழிபட்டனர்.

அன்று மாலையில் அம்பிகை வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி வலம் எழுந்தருளினாள்..

திருவிழாவின் பத்தாம் நாள் (ஜூலை/20 திங்கள்) அம்மன் சந்நிதியின் முன்னுள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூர முளைக்கொட்டு வைபவம் நடைபெற்றது.

விரதமிருந்த பெண்கள் நவதான்ய முளைப்பாரிகளை எடுத்து வந்ததுடன் - பட்சணங்களைப் படைத்து வழிபட்டனர்..

இதே சமயத்தில் பாளையங்கோட்டையில் ஸ்ரீ திரிபுராந்தேஸ்வரருடன் இனிது உறையும் ஸ்ரீ கோமதி அம்மனுக்கும் - வளையல்களுடன் சீர்வரிசை வழங்கி வழிபட்டு மகிழ்ந்தனர்.

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்
மங்கலங்களுடன் மங்கலமாக -

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளின் திருஅவதாரத் திருநாளாகவும் திகழ்கின்றது - ஆடிப்பூரம்!..

திரு ஆடிப்பூரம் - கோதை நாச்சியாரின் திரு அவதாரத் திருத்தலமாகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது..

கடந்த ஆகஸ்ட்/8 சனிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.ஐந்தாம் திருநாளான ஆகஸ்ட்/12 அன்று ஐந்து கருட சேவை நடைபெற்றது..

ஏழாம் திருநாளான ஆகஸ்ட்/14 அன்று கிருஷ்ணன் கோயிலில் - ஸ்ரீ ஆண்டாள் மடியில் ஸ்ரீரங்க மன்னார் சயனத் திருக்கோல சேவை சாதித்தருளினார்..
எட்டாம் திருநாளான ஆகஸ்ட்/15 அன்று புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினாள்.

ஒன்பதாம் திருநாளான (ஆகஸ்ட்/16) இன்று திருத்தேரோட்டம்..

இதை முன்னிட்டு - நேற்று முன் தினம் ஸ்ரீரங்கத்திலிருந்து -
ஸ்ரீ ஆண்டாளுக்கும் ஸ்ரீ ரங்க மன்னாருக்கும் வஸ்திர மரியாதை செய்யப் பெற்றது..

பட்டு வேஷ்டி, பட்டுப் புடவை முதலான சீர்வரிசைகள் 15 தட்டுகளில்
ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வஸ்திர மரியாதையை ஏற்றுக் கொண்டு - ஆண்டாள் ஸ்ரீரங்கமன்னாருடன் திருத்தேரில் எழுந்தருள்வாள்..

பன்னிரண்டாம் திருநாளான ஆகஸ்ட்/19 அன்று  புஷ்ப யாகத்துடன் ஆடிப்பூரத் திருவிழா நிறைவடைகின்றது..

திருவாடானை
சிரிப்பு - சிந்தனையுடன் கலகலக்கும் தளத்திற்குரிய அன்பின் கில்லர்ஜி அவர்களுடைய ஊராகிய தேவகோட்டைக்கு அருகில் உள்ளது திருவாடானை..

சில ஆண்டுகளுக்கு முன் - சபரிமலைக்கு செல்லும் வழியில் -  இத்தலத்தைத் தரிசித்துள்ளேன்..

இத்திருத்தலத்தில் தான் - பற்பலருக்கும் மத்தியில் - எளியேனை, குருசாமி சிறப்பித்தார்..

தேவாரப் பதிகம் பெற்ற திருத்தலம்.. 
பாண்டிய நாட்டின் பதினான்கு தலங்களுள் ஒன்று..

நானே பிரகாசமானவன்!.. - என்று ஆணவங்கொண்டான் சூரியன்.

அதனால்  - ஒளியிழந்து நலங்குன்றினான்..

அவன் - தனது பிழை தீர வேண்டி - ரத்னக் கல்லை வைத்து சிவபூஜை செய்த திருத்தலம்..

ஒருசமயம் வருணனின் மகன் - தனது நண்பர்களுடன் துர்வாச மகரிஷியிடம் அகம்பாவத்துடன் நடந்து கொண்டான்..

சினங்கொண்ட முனிவர் சாபம் கொடுத்தார்..

நீ உனது தகுதிக்குப் பொருந்தாத செயலைச் செய்ததால் ஆட்டுத் தலையும் ஆனை உடலும் கொண்டு அவலமாகத் திரிந்து அலைவாயாக!..

மனங்கெட்டுப் போனதால் மானமும் கெட்டுப் போனது...

வருணனின் மகன் - வருந்தினான்.. மனம் திருந்தினான்.. சிவபூஜை செய்தான்..

திரும்பவும் அவன் - தேவ வடிவம் பெற்றது - திருவாடானையில்!..

ஸ்ரீ சிநேகவல்லி அம்மன்
இத்திருத்தலத்தில் -
ஸ்ரீ ஆதிரத்னேஸ்வரருடன் இனிது உறைகின்றாள் சிநேகவல்லி அம்பிகை..

இங்கே - ஆடிப்பூரத் திருவிழா திருக்கல்யாணத் திருவிழாவாக நிகழ்கின்றது..

கடந்த ஆகஸ்ட்/7 அன்று கொடியேற்றமானது.

சிறப்பான வைபவங்களுடன் - ஆகஸ்ட்/15 அன்று திருத்தேரோட்டம் நிகழ,

ஆகஸ்ட்/17 அன்று ஸ்ரீசிநேகவல்லி அம்மன் தவக்கோலங்கொள்கின்றாள்..

எம்பெருமான் அம்பிகைக்கு ரிஷப வாகனத்தில் திருக்காட்சி நல்குகின்றார்..

ஆகஸ்ட்/18 அன்று திருக்கல்யாண வைபவம்.. பஞ்ச மூர்த்திகள் திருவீதியுலா..

தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று -

ஆகஸ்ட்/21 அன்று மங்கல தீர்த்தம்.. திருவிழா நிறைவடைகின்றது..


எத்தனை எத்தனையோ மங்கலங்களுக்கு இருப்பிடம் ஆடி மாதம்!..

ஆடித் தள்ளுபடி!.. அது.. இது!.. -  என அலைவோர் மத்தியில் -
ஐயனையும் அம்பிகையையும் வழிபட்டு உய்வடைவோர் ஆயிரம்.. ஆயிரம்..

இந்த நாட்களில் - ஒருவருக்கொருவர் முகமன் கூறி - அன்பினைப் பரிமாறிக் கொள்ளுவதே சிறந்த நலன்களுக்கு அடிப்படை என்கின்றனர் ஆன்றோர்.

ஆடி மாதத்தில், அம்மன் கோயில்களில் - ஆடம்பரமின்றி -
ஏழை எளியவர்க்கு கூழ் வார்த்து வேண்டுதல் செய்வது அன்பின் வெளிப்பாடு..

மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல் இவற்றுடன் தாம்பூலம் வைத்து அக்கம்பக்கம் அண்டை அயலாருடன் நட்பைப் பேணுதல் சிறப்பு..

அதிலும் முக்கியமாக -

ஏழைப் பெண் குழந்தைகளுக்கு இயன்றவரை புத்தாடை வளையல்களை வழங்கி மகிழ்வித்தால் - அம்பிகையை மகிழ்வித்ததாக ஆகின்றது..

அம்பிகை மனம் மகிழ்ந்தால் - நிலையான செல்வம் நமது வீட்டில் குடி கொள்ளும் என்பது திருக்குறிப்பு..

ஆயுளும் ஆரோக்யமும் ஐஸ்வர்யமும் பெருகி - இல்லத்தில்
மகிழ்ச்சி நிலையாக குடிகொள்வதில் அனைவருக்கும் விருப்பம்!..

அவ்வண்ணம் நிகழ்வதற்கு அம்பிகையை வேண்டுவோம்!..

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து..

ஓம் சக்தி ஓம்..
* * *

15 கருத்துகள்:

 1. அம்பிகையின் பெருமை காணும் சிறப்புப் பதிவு ஐயா!
  கண்கொள்ளாக் காட்சிப் படங்கள்! அனைத்தும் அருமை!

  ஆரணி! பூரணி! அம்பிகை நல்லருள்
  சேரவே வேண்டினேன் சேர்ந்து!

  அனைவருக்கும் அம்பிகை நல்லருள் பொழியட்டும்!
  நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   அன்பின் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 2. திருவாடானை தவிர மற்ற அனைத்துக் கோயில்களுக்கும் சென்றுள்ளேன். ஆடிப்பூரத்தன்று எங்களை அனைத்துக் கோயில்களுக்கும் அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 3. வணக்கம்,
  அம்பிகையின் அழகிய படங்கள், அழகான காட்சிப்டுத்துதல்,
  அனைத்தும் அருமை,
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   அன்பின் வாழ்த்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 4. அன்பின் ஜி வணக்கம் தேவகோட்டைக்கு பக்கத்தில் உள்ள நான் அடிக்கடி சென்ற திருவாடானை கோயிலைப்பற்றிய விபரம் அறிந்து மகிழ்ச்சியும், நன்றியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   அன்பின் கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 5. ஆடிப் பூரம் பற்றிய அனைத்து தகவல்களும் சிறப்பு ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி நன்றி..

   நீக்கு
 6. ஆடிப் பூரத்தன்று தங்களால் நாங்களும் பயணித்தோம்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 7. அருமையான படங்கள் மற்றும் தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. தகவல்கள் படங்கள் எல்லாமே மிக மிக அருமை ஐயா....

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..