நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 26, 2021

கோவிந்த ஸ்வரூபிணி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
திருக்கோடிக்கா
சோழ நாட்டில்
காவிரிக்கு வடகரைத் தலம்


இறைவன்
ஸ்ரீ கோடிகா நாதர்
அம்பிகை
ஸ்ரீ திரிபுர சுந்தரி


தல விருட்சம் - பிரம்பு
தீர்த்தம் - காவிரி.

கும்பகோணத்திலிருந்து காவிரி வடகரையில் மயிலாடுதுறைக்குச் செல்லும் சாலையில்
அமைந்துள்ள தலம்
திருக்கோடிக்கா..

ஞானசம்பந்தப் பெருமான்
அப்பர் ஸ்வாமிகள்
ஆகியோரால்
திருப்பதிகம் பெற்ற திருத்தலம்..

இத்திருத்தலத்தில்
ஸ்ரீ திரிபுரசுந்தரி 
ஆகிய அம்பிகை
புரட்டாசி மாதத்தின்
இரண்டாம்
சனிக்கிழமையன்று
ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளாகத்
தரிசனம் தருகின்றாள்..

முன்பொரு சமயம்
துர்வாச மகரிஷி முதலானோர்
இத்தலத்தில் அவசர கதியில் வழிபாடுகளை நிறைவு செய்தபோது
ஏனென்று வினவினாள்
அம்பிகை..

புரட்டாசி மாதத்தின்
இரண்டாம் சனிக்கிழமை
ஆகிய அன்று திருமலையில் வேங்கடவன் தரிசனத்தை
விழையும் விவரத்தைக்
கூறியிருக்கின்றனர்
மகரிஷிகள்..

அதைக் கேட்ட அம்பிகை
" நான் கோவிந்த ஸ்வரூபிணி
என்பதை மறந்தீரோ!.. "
- என்று புன்னகைத்து
தானே - வேங்கடவனாக
திருக்காட்சி நல்கினாள்..


அந்த வைபவம் இன்றும் சிறப்பாக
நிகழ்கின்றது..

அந்தத் திருக்காட்சிகள்
இன்றைய பதிவில்..

வைபவத்தை
அழகிய படங்களாக
வலையேற்றிய
திரு. அகில் மற்றும்
அன்பர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
***


ஸ்ரீ கோடிகா நாதனின்
தரிசனத்தைத் தொடர்ந்து
அம்பிகையின் 
அழகு தரிசனம்..
இன்றுநன்று நாளைநன்று
என்று நின்ற விச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப்
போகவிட்டுப் போதுமின்
மின்றயங்கு சோதியான்
வெண்மதி விரிபுனல்
கொன்றை துன்று சென்னியான்
கோடிகாவு சேர்மினே.. (2/99)
-: திருஞானசம்பந்தர் :-

வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்
திருவாரூர்த் திருமூலட் டானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே..(6/081)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
 ஃஃஃ


சனி, செப்டம்பர் 25, 2021

கோவிந்த தரிசனம் 2

  

நாடும் வீடும் நலம்
பெற வேண்டும்
பகையும் பிணியும் 
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி மாதத்தின்
இரண்டாம் சனிக்கிழமை..

இன்றைய பதிவில்
ஸ்ரீ பூதத்தாழ்வார்
அருளிச் செய்த
இரண்டாம் திருவந்தாதியின்
திருப்பாசுரங்களுடன்
திரு அல்லிக்கேணி
ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள்
திவ்ய தரிசனம்
***

அன்பே தளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை யிடுதிரியா நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.. 2182

அடிமூன்றி லிவ்வுலகம் அன்றளந்தாய் போலும்
அடிமூன் றிரந்தவனி கொண்டாய் படிநின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
ஆரோத வல்லார் அறிந்து?.. 2186


பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய் மண்ணிரந்து
காத்தனை புல்லுயிரும் காவலனே ஏத்திய
நாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
காவடியேன் பட்ட கடை.. 2191


கொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய்,
ஒண்டிறலோன் மார்வத் துகிர்வைத்தது - உண்டதுவும்
தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்,
வான்கடந்தான் செய்த வழக்கு.. 2199


தாழ்ந்துவரங் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் தாழ்ந்த
விளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ்க் கொண்ட அவன்.. 2204


மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் மற்றும்
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான் எனைப்பலரும்
தேவாதி தேவ னெனப்படுவான் முன்னொருனாள்
மாவாய் பிளந்த மகன்.. 2209


அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்
அமுதன்று கொண்டுகந்தான் என்றும் அமுதன்ன
சொன்மாலை யேத்தித் தொழுதேன் சொலப்பட்ட,
நன்மாலை யேத்தி நவின்று.. 2266
***
கீழுள்ள காணொளியில்
ஸ்ரீ ஹரி பரந்தாமன்
அரவணையில் 
பெரிய பெருமாளாகக்
கிடந்தருளும்
திவ்ய தேசம் எது என்று
தெரியவில்லை..


ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ

வியாழன், செப்டம்பர் 23, 2021

அன்பினில்..

 நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..

பகையும் பிணியும் 
தொலைந்திட வேண்டும்..
***

எங்கள் Blog ன்
நேற்றைய
பதிவில் இடம்
பெற்றிருந்த படங்களுள்
குழந்தை ஒன்று
பசுங்கன்றினைக்
கும்பிடுகின்ற படம்
மனதைக் கவர்ந்தது..

வளரும்
பிள்ளைகளின் மனதில்
நம்முடன் வாழும்
சிற்றுயிர்களைப் பற்றி
இப்படியான அன்பினை
விதைத்து விட்டால்
வையகம் சொர்க்கமாகி
விடும்..

அன்பும் கனிவும்
ததும்புகின்ற
இந்தப் படத்தைக் கண்டதும்
என் மனதில் எழுந்தவை
இன்றைய
 பதிவில்...

அழகாக படம் பிடித்தவர்க்கும்
படத்தினைப் பதிவினில்
வைத்தவர்க்கும்
நெஞ்சார்ந்த நன்றி..
***

கன்றோடு கன்றென்று
கைகூப்பி நின்று
கனிகின்ற நல்மனம்
வாழ்கவே நின்று..

சேயோடு சேயாகும்
செந்தமிழ்க் கன்று..
செம்மையாய் வாழ்கவே
சீர் பல கொண்டு..


தாய்க்கும் ஒரு தாயாகும்
தாய்மையின் தெய்வம்..
தூய்மையின் தொல்புகழ்
தாய்த்தமிழர் செல்வம்..

நாடுடைய நலந்தனை
மாடென்பது தமிழ்
பீடுடைய கல்விதனை
மாடென்பது குறள்..


குங்குமம் தனைக் கூறும்
குடித் தமிழர் பண்பு..
மங்கலம் மனையறம்
மடிப் பசுவின் அன்பு..


கன்றினைக் கட்டிடும்
நடுதறியும் லிங்கம்
சைவத்தில் ஓங்கிடும்
சத்தியம் தாங்கிடும்..


கன்றதன் கால்வழி
கண்ணனின் குழல்வழி
கண்ணனின் சொல்வழி
நன்றெமக்கு அவ்வழி..

நன்றி எனச் சொல்வதற்கு
வகை ஒன்றும் இல்லை..
நயந்து உடன் வாழ்வதுவே
நலம் காட்டும் எல்லை..
***
வாழ்க வையகம்
வாழ்க மகிழ்வுடன்..
ஃஃஃ

ஞாயிறு, செப்டம்பர் 19, 2021

தென்னாங்கூர் தரிசனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் 
தொலைந்திட வேண்டும்..
***

புரட்டாசி மாதத்தின்
முதல் சனிக்கிழமை ஆகிய
நேற்று
திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசிக்கு அருகிலுள்ள
தென்னாங்கூர் க்ஷேத்திரம்
ஸ்ரீ ரகுமாயி உடனாகிய
ஸ்ரீ பாண்டுரங்கன் திருக்கோயிலில்
நிகழ்ந்த திவ்ய தரிசனம்..

Fb வழியே
காலையில் தரிசிக்கக்
கிடைத்தது...

நான் பெற்ற இன்பம்
பெறுக இவ் வையகம் -
என்று, இக்காணொளி
இன்றைய பதிவில்!.…

 பெருமாள் தரிசனத்தை
Fb ல் வலையேற்றிய
நல்ல உள்ளங்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
***

கீழுள்ள படங்கள்
இணையத்திலிருந்து
பெறப்பட்டவை..
அனைத்தும் நம்மை
ஸ்ரீ கிருஷ்ண பக்தியில் ஆழ்த்துபவை..

ஸ்ரீ பாண்டுரங்க தரிசனத்தைப் பற்றி
பதிவில் எழுதும்போது
மனதில் எழுந்த
சில வரிகள்..


விண்தாங்கு புகழ் கொண்ட
வைகுந்தன் பேர் பாடி
மண்தாங்கு உயிர்களும்
மடியேந்தி நின்றன..
கண்தாங்கு கருணையில்
கரியவன் மனங் கொண்டு
பண்தாங்கு  தென்தமிழ்
நாங்கூரில் வந்து நின்றான்!..


ஆண்டு கொள் எமை யென்று
அடியவர் ஏத்திடவும்
பாண்டு ரங்கன் என வந்த
வடிவனே வளர்சோதி நிலவனே!.
பூண்டு கொள் தமிழ் மாலை
என்றவர் புகழ் சாற்ற
வேண்டுவார் விழிகளில்
ஒளியான உத்தமன் வாழ்க வாழ்க!..


வருமாயை தனை தீர்க்க
ரகுமாயி வந்தனள் போற்றி
 தனமகள் தன்னோடு
முகிலான ரங்கனே போற்றி..
திருவாகி விளைவாகி பொருளாகி நின்றனை போற்றி..
அருளாகி தென்னாங்கூர் தனையாளும் மன்னனே போற்றி!..


மருளாகித் தவிக்கின்ற
மனதினில் ஒளியாகி
இருளானவை தீர்க்கும்
தென்னனே போற்றி போற்றி..
கருவான உயிர்கட்கு கருணையே அருள்கின்ற
திருவான மூர்த்தியே
போற்றி.. போற்றி!..
***
சர்வம்
ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்..
 ஃஃஃ

சனி, செப்டம்பர் 18, 2021

கோவிந்த தரிசனம் 1

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..

பகையும் பிணியும் 
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி மாதத்தின்
முதல் சனிக்கிழமை..


ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிச் செய்த முதல் திருவந்தாதியின் திருப்பாசுரங்கள் சிலவற்றுடன் 

ஸ்ரீ தேவி ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீமந் நாராயண மூர்த்தியின் திருவடித் தாமரைகளைச் சிந்திப்போம்...


வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக செய்ய சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன் மாலை இடராழி நீங்குகவே என்று.. (2082)

வாயவனை யல்லது வாழ்த்தாது கையுலகம் தாயவனை யல்லது தாம்தொழா - பேய்முலைநஞ்சு ஊணாக உண்டான் உருவொடு பேரல்லால் காணாகண் கேளா செவி.. (2092)


பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி அழுதேன் அரவணைமேல் கண்டு - தொழுதேன் கடலோதம் காலலைப்பக் கண்வளரும், செங்கண் அடலோத வண்ணர் அடி.. (2097)

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறிவெண்ணெய் தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை - ஊன்றி பொருதுடைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும் மருதிடைபோய் மண்ணளந்த மால்.. (2099)


மாலுங் கருங்கடலே என்நோற்றாய் வையகமுண்டு ஆலின் இலைத்துயின்ற ஆழியான் - கோலக் கருமேனிச் செங்கண்மால் கண்படையுள் என்றும் திருமேனி நீதீண்டப் பெற்று.. (2100)

பெற்றார் தளைகழலப் போர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படிகடந்த செங்கண்மால் நற்றாமரை மலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி நிரைமலர்கொண்டு ஏத்துவரால் நின்று.. (2101)


ஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான் நீற்றான் நிழல்மணி வண்ணத்தான் - கூற்றொருபால் மங்கையான் பூமகளான் வார்சடையான் நீண் முடியான் கங்கையான் நீள்கழலான் காப்பு.. (2155)

காப்புன்னை யுன்னக் கழியும் அருவினைகள் ஆப்புன்னை யுன்ன அவிழ்ந்தொழியும் - மூப்புன்னைச் சிந்திப்பார்க் கில்லை திருமாலே நின்னடியை வந்திப்பார் காண்பர் வழி.. (2156)

ம் ஹரி ஓம்

நமோ நாராயணாய

***

ஞாயிறு, செப்டம்பர் 12, 2021

திகழொளி ஞாயிறு 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும் 
தொலைந்திட வேண்டும்
***

இன்று 
ஆவணி மாதத்தின்
நான்காம் ஞாயிறு..


அம்பிகையின்
மலரடிகளை
மனதில் கொண்டு வாழ்த்துவோம்..

பழந்தமிழகத்தின்
இலக்கியங்கள் கூறுகின்ற
தொன்மையான விளையாட்டு
அம்மானை..


தமிழ் பாடும்
பிள்ளைத் தமிழில்
அம்மானையும் உண்டு..

மாணிக்கவாசகப் பெருமான்
அம்மானை பாடியுள்ளார்..

இளங்கன்னியர்கள்
மூவர், ஐவரெனக் கூடி
ஐந்து, ஏழு - என
கழங்கெடுத்து 
விளையாடுவர்..

கழங்கு எனப்படுவது
கூழாங்கல்..

பொன் முத்து பவளம் எனக்
கொண்டு அக்காலத்தில்
அரச மகளிர்
ஆடியிருக்கின்றனர்..

ஒற்றைக் கல்லை மேலே எறிந்து அது கீழே இறங்குவதற்குள்
மற்றொன்றை எறிந்து
கீழே வரும்
கழங்கினைப் பிடிக்க
வேண்டும்..

இப்படி விளையாடும் போது
இயல்பாகப் பாடுவது உண்டு..

ஒருத்தி பாட்டோடு
கேள்வி கேட்பதும்
மற்றவள் அதனோடு
பதில் சொல்வதும்
அந்த காலத்துக்
கிராமங்களில்
ஆனந்தம்...

தஞ்சை வட்டாரத்தில்
கல்லாங்காய் விளையாட்டு
எனப்படும் இது
இன்றைய நாட்களில்
வழக்கொழிந்து போனது..

ஆயினும்
அங்கு இங்கென்று
யாராவது விளையாடலாம்..

இதனை
எளியேன் மனதில் கொண்டு
எந்த ஒரு ஒழுங்கும் இன்றி
அன்னையின் திருப்பெயரை
சிற்சில வரிகளில்
எழுதி அம்மானை என்று
இந்தப் பதிவில்
வழங்கியுள்ளேன்..


அம்மானைப் பந்தெடுத்து 
அம்மானும் தேடி வர
அம்மானை முன்னெடுத்து
அம்மானை பாடுங்களே..

அம்மானைக் கொண்டவனின்
பொன்மானும் ஆடி வர
பொன்மானின் பேரெடுத்து
அம்மானை பாடுங்களே...

கைவளைகள் ஆடிடவே
கன்னியரே பாடுங்களே..
பூவிழிகள் ஆடிடவே
அம்மானை பாடுங்களே..

அஞ்சு வண்ணக் கல்லெடுத்து
அம்மானை ஆடடியோ.
அஞ்சுகத்து சொல்லெடுத்து
அம்மானை பாடடியோ...

அம்மானைப் பாடடியோ
இம்மானும் மகிழ்ந்திடவே
அம்மானும் நெகிழ்ந்திடவே
அம்மானை பாடடியோ!..


மூக்குத்திப் பூவில் ஜோதி
என முன்னை
மூண்டு வரும் தமிழ் நீதியென
மூன்று கடல் அலை மத்தியிலே நின்ற முத்தழகி பெயர் சொல்லடியோ!..

மூன்று கடல் அலை பேர் பாட
அங்கு 
முந்துதமிழ் நின்று பண் பாட
நின்றவள் நித்தியக் கன்னியடி
தமிழ்த் தென்திசைக் குமரி அன்னையடி!..

மூங்கில் வனத்தினில் மூண்டெழுந்த அந்த மூர்த்தியின் தோள் தொட்டு நின்றவள் யார்?..
மூக்குத்திப் பொன்னொளி வீசிடவே நீயும்
முன் வந்து சொல்லடி செல்லக் கிளி!..


மூங்கில் வனத்தில் வந்துதித்த அந்த
மூர்த்தியின் தோள்
தொட்ட பைங்கிளியாள்
காந்திமதி என்று சொல்லடியோ
அவள் குங்குமம்
எடுத்து சூடடியோ!..


தந்தன  தந்தன தந்தனத் தோம் எனத் தண்டை 
குலுங்கிட ஆடி நின்றாள்!..
ஆகாசம் ஆடிட ஆடியவள் அன்று யாரென்று சொல்லடி செல்லப் பெண்ணே?..

விண்ணும்  இடிபட மண்ணும் பொடிபட
தண்டை குலுங்கிடத்
தான் ஆடினாள்..
தில்லை வனத்தினில் தீயானவள்
பத்ரகாளியின்
மஞ்சளைச் சூடடியோ!..


புன்னை வனத்தினில் புற்றாகி அதில்
புண்ணியம் பொங்கிடும் ஊற்றாகி
நஞ்சை நிலந்தனில் வாழ்வாகி வந்த
நாயகி யாரவள் ஞானப் பெண்ணே!..

தஞ்சை நிலத்தினில் தாயாகித் தளிர் வேம்பெனத் தழைத்து வந்தவளாம்..
வஞ்சமழித்திடும் மாரியவள்
அவள் பாதமலர் தனைச் சூடடியோ!..


முத்தமிழ் மூன்றும் முன் விளங்க அன்று அக்கினியில் வந்த கோமகளாம்
அண்டம் அளந்தவன்
தங்கை என வந்த
நங்கையும் யாரெனச் சொல்லடியோ!..

தேனவள் மானவள் தென்னவள் ஆனவள் 
தித்திக்கும் தமிழும் சொல்லுமடி..
அத்திசை எட்டுடன் அன்பர்கள் போற்றும்
அங்கயற் கண்ணியைப் பாடடியோ!..


மன்னவன் பெயரை
நாவில் கொண்டாள்
அந்த மங்கையும் மா மயில் கோலங் கொண்டாள்
மா வனம் தன்னிலே ஆடியவள் அவள் 
மங்கலம் தன்னைக் கூறடியோ..

மங்கையும் மா மயில் கோலங் கொண்டாள்
பொங்கும் காவிரிக் கரையில் ஆடி நின்றாள்
மன்னவன் மகிழ்ந்து
ஆடியே வந்தான்..
அந்த அஞ்சொல்லாள் பாதங்கள் தஞ்சமடி..


ஐயன் அளந்திட்ட நாழி நெல்லைக் கொண்டு
முன்னை நலந்தனைச்
செய்தவள் யார்?..

காஞ்சியின் கண்ணவள்
காவிரிப் பெண்ணவள்
ஐயாற்றின் கரையில்
அன்னையடி?..

ஆதியும் அந்தமும்
தானாகி யன்று
நாவல் வனத்தினில் வந்தவளாம்
நன்று விளைந்திட நின்றவளாம்
அந்த நாயகி பேரென்ன சொல்லடியோ..

ஆனையும் கும்பிட்டு நின்றதடி அங்கு
ஆனதும் சிலந்திப்
பந்தலடி அன்னையும் உகந்து வந்தனளே அவள்
அகிலம் ஆண்ட ஈஸ்வரியே!.


சஞ்சலம் தீர்த்திட
வந்தவள் யார்
இங்கு சந்நதி கொண்டு நின்றவள் யார்?..

சஞ்சலம் தீர்க்க
வந்தவளும் அந்த
சமய புரத்து சங்கரியாம்
சண்பகம் மல்லிகை சந்தனம் வைத்து
சந்ததமும் பதம் பாடடியோ!..


அற்புத அன்பினில் ஆர்த்தவளே பொற்
பூவெனத் தமிழில் பூத்தவளே..
அன்னைத் தமிழின் வண்ணத்திலே அந்த
அம்மானை நெஞ்சில் சேர்த்தவளே..

புன்னகைப் பூவின்
பூங்குயிலே
புன்னை வனத்தில்
ஆடும் பொன்மயிலே..
பொன் எனப் பூவெனப் பொன்னி நதியென
வண்ணத் தமிழில்
வந்த அன்பினளே..

கைவளை குலுங்கக் கழங்கெடுத்தோம்
கனித் தமிழும் குலுங்கப் பூத்தொடுத்தோம்
மைவிழி அம்பிகை  நல்கினளே அருள்
பொன் மலர்ப்  பாதங்கள் நாவினிலே...

ஒன்றாங் கல்லில் உமையவள் போற்றி
இரண்டில் மூன்றில் முன்னவள் போற்றி
நாலில் ஐந்தில்
அம்பிகை போற்றி
ஆறில் ஏழில்
ஈஸ்வரி போற்றி!..

போற்றி போற்றி போற்றியே!.. ..
***
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்..
ஃஃஃ

சனி, செப்டம்பர் 11, 2021

நேரம் முழுதும்

 நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..

பகையும் பிணியும் 
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மகாகவியின்
நினைவு நாள்..


மகாகவியின்
கண்ணன் பாடல்கள்
அனைத்தும் கனியமுதம்..
ஆயினும்
இந்தப் பாடல் எனக்கு
மிகவும் பிடித்தமானது...


ஸ்ரீ கிருஷ்ண பக்தியில் நம்மை ஆழ்த்துவது..

எட்டு கண்ணிகளை
உடைய இந்தப் பாடல்
இரண்டு கண்ணிகளுடன்
தெய்வத்தின் தெய்வம் எனும் திரைப் படத்தில்
இடம் பெற்றிருக்கின்றது..

அனைவரும் அறிந்த
அந்தப் பாடலுடன்
மேலும் ஒரு கண்ணியைச்
சேர்த்து இன்று
வழங்கியுள்ளேன்..

மகாகவியின்
திருவடிகளுக்கு
எளியேனின் வணக்கம்..


கண்ணன் மனநிலையை
தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி
தங்கமே தங்கம்..
எண்ணம் உரைத்துவிடில்
தங்கமே தங்கம்
பின்னர் ஏதெனிலும்
செய்வோமடி தங்கமே தங்கம்..

கண்ணன் மனநிலையை
கண்டுவர வேணுமடி தங்கமே..


சொன்ன மொழி தவறு மன்னவனு க்கே எங்கும்
தோழமை இல்லையடி
தங்கமே தங்கம்..
என்ன பிழைகள் இங்கு கண்டிருக் கின்றான்?அவை
 யாவுந் தெளிவு பெறக்
கேட்டு விடடீ..


ஆற்றங் கரையதனில் முன்னம் ஒருநாள் - எனை 
அழைத்துத் தனியிடத்திற்
பேசிய தெல்லாம் 
தூற்றி நகர்முரசு சாற்றுவன் என்றே 
சொல்லி வருவாயடி
தங்கமே தங்கம்..


நேர முழுதிலும் அப்பாவி
தன்னையே - உள்ளம் 
நினைத்து மறுகுதடி
தங்கமே தங்கம்
தீர ஒரு சொல் இன்று கேட்டு வந்திட்டால் - பின்பு
தெய்வம் இருக்குதடி
தங்கமே தங்கம்..
***

சர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்
ஃஃஃ

வெள்ளி, செப்டம்பர் 10, 2021

கணபதி தரிசனம்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..

பிணியும் பகையும் தொலைந்திட வேண்டும்..

***

தேவேந்திரன் செய்வதறியாது திகைத்து நின்றான்...

அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று அருகில் இருந்த எவருக்கும் தெரியவில்லை..

இத்தனை களேபரத்தினூடாக விஷயம் மெல்லக் கசிந்தது..

" இவன் அமுதக் கலசத்தை எங்கோ ஒளித்து வைத்து விட்டு நாடகம் ஆடுகின்றான்!.. "

" எனக்கு அப்பொழுதே தெரியும்!.. இவன் இப்படிச் செய்வான் என்று!.. "

திரண்டிருந்த அசுரர் கூட்டத்தினுள்ளிருந்து கலகக் குரல்கள் எழுந்தன...

மீண்டும் ஆயுதங்களைத் தூக்குவதற்குத் தயாராகினர்

வீண் பிரச்னை ஏற்படுவதை விரும்பாத நல்லோர் சிலர் -
இந்திரனை இழுத்துக் கொண்டு வந்து நான்முகனின் எதிரில் நிறுத்தினர்...

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமற் போயிற்றே!.. எத்தனை எத்தனை ப்ரயத்தனம் செய்து கடலைக் கடைந்து அமுதத்தினைப் பெற்றோம்!.. 

இப்போது அமுதக் கலசத்தைக்  காண வில்லையே.. மாயமாக மறைந்தது எப்படி!?..

பேசுதற்கு ஒரு வார்த்தையும்் இன்றி விக்கித்து  நின்றான் தேவேந்திரன்..


" நானே அனைத்தும் அறிவேன்.. என்ற ஆணவம் தான் உனக்கு அதிகம்.. ஆனால், எதைச் செய்ய வேண்டும்.. எப்படிச் செய்ய வேண்டும் என்பதை அறியவே மாட்டாய்.. உன்னால் விளைந்த விபரீதங்களே அதிகம் என்பதை உணர்வாயாக!... "

நான்முகனின் திருமுன் தலைகவிழ்ந்து நின்றிருந்தான் - தேவேந்திரன்...

" இனி என்ன செய்வது என்று தெரியவில்லை.. வழி காட்ட வேண்டும்.. தடைகளைக் கடந்து காரிய சித்தி எய்துதற்கு ஓர் உபாயம் அருளல் வேண்டும்.. "

" தடைகளைக் கடந்து காரிய சித்தி எய்துதற்கு வழி ஒன்றைக் கேட்கின்றாய்.. வழி எங்கும் வீற்றிருந்து தடைகளைக் கடத்தும் தலைப்பிள்ளையினை நீ அறிந்திலையோ!.. "

" தடைகளைக் கடத்தும் தலைப்பிள்ளை!.. யார் அது?.. "

" மனம் போன போக்கில் சென்று போகங்களில் திளைத்துக் கொண்டிருக்கும் தேவேந்திரனே!..  எல்லாம் மறந்தனையோ!.. ஆதியில் திருக்கயிலை மாமலையில் எம்பெருமானும் அம்பிகையும் தத்தமது பீஜாட்சர மந்திரங்களால் மகாகணபதிப் பெருமானை அருளியபோது நமக்கெல்லாம் என்ன கூறினார்கள்!.. "

" ஆம்... ஆம்!.. நினைவுக்கு வருகின்றது!.. "

அமுதம் வேண்டுமெனப் புறப்பட்ட போது ஐங்கரனை நீ நினைத்ததுண்டா?.. "

...... ......  ......  ......

" மந்தர மலை கடலுள் வீழ்ந்து மூழ்கிய போதும் கவலைப்பட்டு கணபதியை சிந்தித்ததுண்டா?.. "

...... ......  ......  ......

" அதன்பிறகு ஆலகாலம் எழுந்து வந்து அனைவரையும் துரத்தியடித்ததே!.. அப்போதாவது அந்த ஆனைமுகனை வந்தித்ததுண்டா?.. "

...... ......  ......  ......

" அலறியடித்துக் கொண்டு கயிலைமாமலையை நோக்கி ஓடி - அதனுள் உட்புகுந்தபோது - ஆங்கே வேலவனோடு விளையாடிக் கொண்டிருந்த விநாயக மூர்த்தியை ஒரு கணம் கண்டு கைகூப்பியது உண்டா?... "

...... ......  ......  ......

" நான் முன்பு  ஒருசமயம் இளைய பிள்ளையை எதிர்நோக்காமல் சென்றதால் - அவன் கையால் குட்டுப் பட்டதுடன் - படாத பாடு பட்டிருக்கின்றேன்.. நீயோ.. மூத்த பிள்ளையை மதிக்காமல் சென்று  -  வினையை நீயாக சேர்த்துக் கொண்டிருக்கின்றாய்!.. "

...... ......  ......  ......

" இதற்கிடையில் - தடைகளைக் கடத்து
ம் தலைப்பிள்ளை.. யார் அது?.. என்று கேள்வி வேறு கேட்கின்றாய்!.. "

..... ......  ......  ......

" தடைகளைக் கண்முன் முன்னே காட்டி நடத்துபவனும் அவன் தான்.. தாள் பணிந்து நிற்பவரை - தடைகளைத் தாண்டி கடத்துபவனும் அவன் தான்!.. "

..... ......  ......  ......

" சென்று - செல்வக் கணபதியின் பாதம் பணிவாய்!.. உன் புத்தியை நல் வழியில் செலுத்து.. எடுத்த செயல்களில் சித்தியைக் காண்பாய்!.. "  

நான்முகன் அறிவுரை கூறவும்,

" தாங்களும் உடன் வந்தருள வேண்டும்!.. "

தேவேந்திரன் பணிவுடன்  வேண்டிக்  கொண்டான்..

" எதற்கு?.. "

" உடன் வந்து நலங் காட்டவேண்டும்.. விநாயகப் பெருமானை வணங்கி வழிபடும் வகையறியேன்!.. "

" பிள்ளை.. யார் என்று கேட்டாயே.. அந்தப் பிள்ளையின் வழிபாடு எளிமை.. இருப்பினும் இப்போதைக்கு அருகம் புல்லையும் தும்பைப் பூக்களையும் கருப்பஞ்சாற்றையும் இனிப்பு மோதகத்தையும் எடுத்துக் கொள்.. இவற்றை நிவேதனம் செய்து தான் அகத்திய மகரிஷியின் மனையாள் லோபாமுத்திரை நற்பயன் எய்தினாள்.. "

நான்முகனின் தலைமையை ஏற்று அசுரர்களும் தேவர்களுமாக மீண்டும் திருக்கயிலாய மாமலையை நோக்கி நடையைக் கட்டினர்...

வழியில் வைகுந்தத்திற்குச் சென்றனர்..

அமுதம் திரள்வதற்குக் காரணன் - ஜகன் மோகனன் -     ஸ்ரீ ஹரி பரந்தாமன்  தானும் அவர்களுடன் எழுந்தருளினான்..


அங்கே -
திருக்கயிலாயத்தில் - மேற்கு முகமாக விளங்கிய சிவலிங்கத் திருமேனியை வழிபாட்டுக் கொண்டிருந்தார் விநாயக மூர்த்தி..

அருகாமையில் பொற்பிரம்புடன் அதிகார நந்தீஸ்வரர்...

நந்தீசனைக் கண்டதுமே தேவேந்திரனின் அடிவயிறு கலங்கியது...

" என்ன விஷயம்?.. "

-  பார்வையினாலேயே வினவினார் நந்தியம்பெருமான்..

" மஹாகணபதியைத் தரிசிக்க வந்திருக்கின்றோம்!.. "

கைகட்டி வாய் பொத்தி நின்றான் - தேவேந்திரன்..

" இப்பொழுது கணேச மூர்த்தி சிவபூஜை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றாரே!.. தெரியவில்லையா?.. "

மறுபடியும் பிரச்னையா!.. +
இந்திரனின் மனம் தவித்தது..

" ஆயிரங்கண்ணிருந்தும் அந்தகனாகிப் போனேன்!.. மன்னித்தருள வேண்டும்.. ஸ்வாமி.. "

" சற்றே பொறுத்திருங்கள்!.. "
நந்தியம் பெருமான் விடையிறுத்தார்..

" தங்கள் சித்தம்!.. "

சிறிது நேரத்தில் விநாயகப் பெருமான் - திருக்கண் மலர்ந்தார்..

தனக்கு முன் திரண்டு நிற்கும் பெருங்கூட்டத்தை ஏறெடுத்து நோக்கினார்...

ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்
லம்போதரம் விக்ஷாலாக்ஷம் வந்தேஹம் கணநாயகம்..

ஸர்வ விக்னகரம் தேவம் ஸர்வ விக்ன விவர்ஜிதம்
ஸர்வ ஸித்தி ப்ரதாதாரம் வந்தேஹம் கணநாயகம்..

அறுகம் புல்லையும் தும்பைப் பூக்களையும்
மோதகங்களையும் கருப்பஞ் சாற்றையும்
பணிவுடன் சமர்ப்பித்து நின்றான் - தேவேந்திரன்..

விசாலமான காது மடல்கள் அப்படியும் இப்படியுமாக ஆடி அசைந்தன...

சின்னஞ்சிறு விழிகளால் தேவேந்திரனை உற்று நோக்கினார் - விநாயகப் பெருமான்..

அந்த அளவில் தேவேந்திரனின் அகங்காரம் உடைந்து சிதறியது..

ஆற்றாமையால் கண்ணீர் பெருக்கெடுத்தது.

" சத்தத்தினுள்ளே சதாசிவங்காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கங்காட்டி
அணுவினுக் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த்தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தில் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயகா விரை கழல் சரணே.. சரணே!.. "

நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினர் - அனைவரும்..

விநாயகப் பெருமான் முகமலர்ந்து புன்னகைத்தார்..

சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டியருளிய எம்பெருமான்
சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டியருளினார்..

நான்முகனுக்கும் தேவேந்திரனுக்கும் சித்தத்தினுள் சிவலிங்கம் தோன்றியது..

ஆனால் - என்னென்று கேட்கத் தோன்றவில்லை..

விநாயகப் பெருமான் உணர்த்தியருளினார்..

பிஞ்சிலம் எனப்படும் தேவமல்லிகை வனத்தினுள் தேஜோமயமாகத் திகழும் சிவலிங்கம்.. அங்கே சென்றால் அடுத்த விளக்கம் கிடைக்கும்..

மின்னலென விரைந்து வந்தனர் - அனைவரும்...


காவிரிக்குத் தென்கரை... 

மல்லிகை வனமாகிய இத்திருத்தலத்தில் நான் முன்பே சிவவழிபாடு செய்திருக்கின்றேனே!..

நான்முகனின் திருமுகத்தில் புன்னகை அரும்பியது..

அங்குமிங்கும் நோக்கினர் அனைவரும்..

ஆங்கே - அவர்களுக்கு முன்னதாகவே கணபதி வீற்றிருந்தார்..

மீண்டும் அவரைப் பணிந்தனர்...

திருக்கரத்தினால் எம்பெருமான் சுட்டிக் காட்டிய திசையில்...

சத்யோ ஜாதம் எனும் மேற்கு முகமாக ஒளிமிகும் சிவலிங்கம் விளங்கிற்று..

மீண்டும் திகைத்தனர்.. வேண்டி வந்தது அமுதக் கலசம்.. 

ஆனால், பிள்ளையார் மறுபடியும் சிவலிங்கத்தைக் காட்டியருள்கின்றாரே!..

திகைப்பினின்று விடுபட்ட
ஸ்ரீ ஹரிபரந்தாமன் - தனது ஆபரணங்களையெல்லாம் கழற்றி சிவலிங்கத் திருமேனியில் சாற்றினார்..

மீண்டும் பேரொளி வெளிப்பட்டது.. அந்தப் பிழம்பினுள்ளிருந்து,

அம்பிகையாகிய பராசக்தி அழகுக்கு எவரும் ஒவ்வாத வண்ணமாக
அபிராமவல்லி எனத் திருப்பெயர் கொண்டு வெளிப்பட்டனள்...

" தாயே!.. பராசக்தி!.. " - விண்ணதிர எழுந்தது ஜயகோஷம்!..

புன்னகைத்து நின்ற பொற்கிளியாள் - 
தனது செல்வத் திருக்குமரனைக் கனிவுடன் நோக்கினாள்...

தாயையும் தந்தையையும் வலம் செய்து வணங்கினார் விநாயகப் பெருமான்..

அந்த அளவில் சிவலிங்கத்தின் உள்ளிருந்து அமுதக் கலசம் வெளிப்பட்டது..

தாழ்ந்து பணிந்து அதனைத் தன் கைகளில் வாங்கிக் கொண்டான் தேவேந்திரன்...

" தேவேந்திரா!.. உனக்கு இன்னுமா விளங்க வைத்தல்வில்லை!..  சித்தத்தினுள் சிவலிங்கம் காட்டிய கணபதி சிவமும் அமுதமும் வேறுவேறு அல்ல என்ற ஞானத்தை அருளியிருக்கின்றார்.. சிவமே அமுதம்.. அமுதமே சிவம்!.. "

" இனி இத்தலத்தில் எம்பெருமானுக்கு எந்நாளும் அமுதீசர், அமுதகடேசர், அமிர்த லிங்கம் எனவும் திருப்பெயர்கள் வழங்குவதாக!.. "

ஸ்ரீ ஹரிபரந்தாமன் திருவாய் மலர்ந்தருளினான்..

" அத்துடன், அமுத கலசத்தை ஒளித்து வைத்து விளையாடிய தங்கள் அன்பு மருகனுக்கும் கள்ள வாரணன் என்ற திருப்பெயர் விளங்குவதாக!.. "

நான்முகன் கூறியவுடன் -

திருமேனி குலுங்க புன்னகைத்தார் - விநாயகப்பெருமான்..

அமுதக் கடம் வெளிப்பட்டதால் திருத்தலம் - திருக்கடவூர் என்றானது..


துதியேன் எனினும் தொழுகேன் எனினும் தொழுபவர்தமை
மதியேன் எனினும் வணங்கேன் எனினும் வலியவந்து
கதியே தரும்வழி காட்டிடுவாய் நின்கருணையினால்
விதியே புகழ்க் கடவூர் வாழுங் கள்ள விநாயகனே!..
-: அபிராமி பட்டர் :-


இறைவன் அமிர்தகடேஸ்வரர்
அம்பிகை - அபிராமவல்லி
தல விநாயகர்
கள்ள வாரணப் பெருமான்

தல விருட்சம் - பிஞ்சிலம் எனப்படும் மல்லிகை
தீர்த்தம் - அமிர்த தீர்த்தம்

திருக்கடவூர் திருக்கோயிலில் இறைவனுக்கு முன்பாக சங்கு மண்டபத்தின் தென்புறமாக கள்ளவாரணன் எனப்படும் விநாயகப் பெருமானின் சந்நிதி அமைந்துள்ளது..

அந்தாதி பாடிய அபிராமி பட்டர் கள்ள வாரணப் பெருமானின் மீது பத்துப் பாடல்களைப் பாடியுள்ளார்..

கருணை வேண்டி நிற்கும் எவர்க்கும் நல்லருள் புரியும் நாயகன்..
நம்மைக் கலங்காமல் காத்தருள்வான்..

எளிமைக்கு எளிமையானவர் விநாயகப் பெருமான்..

திருப்புன்கூரில் நந்தனார் ஸ்வாமிகளின் பொருட்டு - திருக்குளம் அமைத்துக் கொடுத்த ஞானமூர்த்தி...

திருநாரையூரில் நம்பிக்கு எல்லாமும் தானே உரைத்து ஆளாக்கி வைத்தார்.

தில்லையில் ராஜராஜசோழனுக்கு தேவாரத் திருமுறைகளைக் காட்டியருளினார்..

திருஆரூரில் - சுந்தரருக்காக பொன்னை உரசி மாற்றுரைத்தார்..

உப்பூரில் - அடியவருக்காக வெயிலுகந்து விளங்குகின்றார்..

அகத்திய மாமுனிவரின் கமண்டலத்தினுள் சிறைப்பட்டுக் கிடந்த
காவிரி மீள்வதற்குக் காரணம் காக்கை வடிவாகிய கணபதியே!..


இன்று ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி..
ஸ்ரீ விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாள்..

அன்று போல் இன்றும் 
சிறைப்பட்டுக் கிடக்கும் காவிரியை மீட்டளித்து
சோழ தேசத்தின் துயர் தீர்க்க வேண்டி நிற்போம்..

அனைவருக்கும்
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்..

ஓம்
கம் கணபதயே நம: 
***