நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

மகா சிவராத்திரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகா சிவராத்திரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026

சிவராத்திரி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
மாசி
 ஞாயிற்றுக்கிழமை

இன்று மகா சிவராத்திரி


தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்
ஆயம் ஆய காயந்தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே..2/50
-: ஸ்ரீ திருஞானசம்பந்தர் :-

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ 
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ 
ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சந் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.. 6/95
-: ஸ்ரீ திருநாவுக்கரசர் :-


பண்ணிடைத் தமிழொப்பாய்
பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய்
கடு இருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள்
மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே..7/29
-: ஸ்ரீ சுந்தரர் :-


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே..
-: ஸ்ரீ மாணிக்கவாசகர் :-


கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே..
-: ஸ்ரீ பட்டினத்தடிகள் :-

சிவாய
திருச்சிற்றம்பலம்
***

புதன், பிப்ரவரி 26, 2025

சிவ சிவ

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மகா சிவராத்திரி

மாசி 14 
புதன்கிழமை


திருநாகேஸ்வரம்

இறைவன் 
ஸ்ரீ நாகேஸ்வரர்
ஸ்ரீ சண்பகாரண்யேஸ்வரர்

அம்பிகை
ஸ்ரீ பிறையணி வாணுதலாள்
ஸ்ரீ குன்றமுலை நாயகியாள்

பாம்புகளின் அரசனாகிய நாகராஜன் தனது சாபம் நீங்குவதற்காக
சிவராத்திரியின் முதற்காலத்தில் திருக்குடந்தை 
ஸ்ரீ நாகேஸ்வரன் கோயிலில் வழிபட்ட பின்னர்
 இரண்டாம் காலத்தில் வழிபட்ட திருத்தலம்..

மூன்றாம் காலத்தில்
திருப்பாம்புரம் ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் ஆலயத்திலும்
நான்காம் காலத்தில் 
திருநாகை ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் ஆலயத்திலும் வழிபட்டதாக ஐதீகம்..
**

திருநாவுக்கரசர் அருளிச்செய்த திருப்பதிகம்

நான்காம் திருமுறை
அறுபத்தாறாம் திருப்பதிகம்


கச்சைசேர் அரவர் போலுங் 
  கறையணி மிடற்றர் போலும்
பிச்சைகொண் டுண்பர் போலும் 
  பேரரு ளாளர் போலும்
இச்சையால் மலர்கள் தூவி 
  இரவொடு பகலுந் தம்மை
நச்சுவார்க்கு இனியர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  1

வேடுறு வேட ராகி 
  விசயனோ டெய்தார் போலுங்
காடுறு பதியர் போலுங் 
  கடிபுனற் கங்கை நங்கை
சேடெறி சடையர் போலுந் 
  தீவினை தீர்க்க வல்ல
நாடறி புகழர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  2

கற்றுணை வில்ல தாகக் 
  கடியரண் செற்றார் போலும்
பொற்றுணைப் பாதர் போலும் 
  புலியதள் உடையார் போலுஞ்
சொற்றுணை மாலை கொண்டு 
  தொழுதெழு வார்கட் கெல்லாம்
நற்றுணை ஆவர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  3

கொம்பனாள் பாகர் போலுங் 
  கொடியுடை விடையர் போலுஞ்
செம்பொனார் உருவர் போலுந் 
  திகழ்திரு நீற்றர் போலும்
எம்பிரான் எம்மை யாளும் 
  இறைவனே என்று தம்மை
நம்புவார்க் கன்பர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  4 


கடகரி உரியர் போலுங் 
  கனல்மழு வாளர் போலும்
படவர அரையர் போலும் 
  பாரிடம் பலவுங் கூடிக்
குடமுடை முழவம் ஆர்ப்பக் 
  கூளிகள் பாட நாளும்
நடநவில் அடிகள் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  5  

பிறையுறு சடையர் போலும் 
  பெண்ணொரு பாகர் போலும்
மறையுறு மொழியர் போலும் 
  மால்மறை யவன் தனோடு
முறைமுறை அமரர் கூடி 
  முடிகளால் வணங்க நின்ற
நறவமர் கழலர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  6  

வஞ்சகர்க்கு அரியர் போலும் 
  மருவினோர்க்கு எளியர் போலுங்
குஞ்சரத்து உரியர் போலுங் 
  கூற்றினைக் குமைப்பர் போலும்
விஞ்சையர் இரிய அன்று 
  வேலைவாய் வந்தெ ழுந்த
நஞ்சணி மிடற்றர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  7 


போகமார் மோடி கொங்கை 
  புணர்தரு புனிதர் போலும்
வேகமார் விடையர் போலும் 
  வெண்பொடி யாடு மேனிப்
பாகமா லுடையர் போலும் 
  பருப்பத வில்லர் போலும்
நாகநா ணுடையர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  8  

கொக்கரை தாளம் வீணை 
  பாணிசெய் குழகர் போலும்
அக்கரை அணிவர் போலும் 
  ஐந்தலை அரவர் போலும்
வக்கரை அமர்வர் போலும் 
  மாதரை மையல் செய்யும்
நக்கரை உருவர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  9  

வின்மையாற் புரங்கள் மூன்றும் 
  வெந்தழல் விரித்தார் போலும்
தன்மையால் அமரர் தங்கள் 
  தலைவர்க்குந் தலைவர் போலும்
வன்மையால் மலையெ டுத்தான் 
  வலியினைத் தொலைவித் தாங்கே
நன்மையால் அளிப்பர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.. 10
திருச்சிற்றம்பலம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

செவ்வாய், பிப்ரவரி 25, 2025

சாய்க்காடு

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 13
செவ்வாய்க்கிழமை

நாளை சிவராத்திரி


திரு சாய்க்காடு
ஐராவதம் வணங்கிய தலம்

பூம்புகாருக்கு அருகில
 உள்ளது.

இறைவன்
ஸ்ரீ சாயாவனேஸ்வரர்
அம்பிகை
குயிலின் நன்மொழியாள்

திருநாவுக்கரசர் அருளிச்செய்த
திருப்பதிகம்

எம்பெருமானின் பத்து அருஞ்செயல்கள் இப்பதிகத்தில் கூறப்பட்டுள்ளன..

நான்காம் திருமுறை
அறுபத்தைந்தாம் திருப்பதிகம்

மார்க்கண்டேயருக்கு அருளியது

தோடுலா மலர்கள் தூவித் 
  தொழுதெழு மார்க்கண் டேயன்
வீடுநாள் அணுகிற் றென்று 
  மெய்கொள்வான் வந்த காலன்
பாடுதான் செலலு மஞ்சிப் 
  பாதமே சரண மென்னச்
சாடினார் காலன் மாளச் 
  சாய்க்காடு மேவி னாரே.  1  

ஆலகால நஞ்சினை அருந்தியது

வடங்கெழு மலைமத் தாக 
  வானவர் அசுர ரோடு
கடைந்திட எழுந்த நஞ்சங் 
  கண்டுபல் தேவ ரஞ்சி
அடைந்துநும் சரண மென்ன 
  அருள்பெரி துடைய ராகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார் 
  சாய்க்காடு மேவி னாரே.  2  

சிலந்திக்கு அருளியது

அரணிலா வெளிய நாவல் 
  அருள்நிழ லாக ஈசன்
வரணிய லாகித் தன்வாய் 
  நூலினாற் பந்தர் செய்ய
முரணிலாச் சிலந்தி தன்னை 
  முடியுடை மன்ன னாக்கித்
தரணிதான் ஆள வைத்தார் 
  சாய்க்காடு மேவி னாரே.  3  

பார்த்தனுக்கு அருளியது

அரும்பெருஞ் சிலைக்கை வேட 
  னாய்விறற் பார்த்தற் கன்று
உரம்பெரி துடைமை காட்டி 
  ஒள்ளமர் செய்து மீண்டே
வரம்பெரி துடைய னாக்கி 
  வாளமர் முகத்தின் மன்னுஞ்
சரம்பொலி தூணி ஈந்தார் 
  சாய்க்காடு மேவி னாரே.  4 


தக்கன் வேள்வி தகர்த்தது

இந்திரன் பிரமன் அங்கி 
  எண்வகை வசுக்க ளோடு
மந்திர மறைய தோதி 
  வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திர மறியாத் தக்கன் 
  வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற் கருள்செய் தாருஞ் 
  சாய்க்காடு மேவி னாரே.  5  

சண்டேச பதம் அருளியது

ஆமலி பாலும் நெய்யும் 
  ஆட்டிஅர்ச் சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப் 
  பொறாததன் தாதை தாளைக்
கூர்மழு வொன்றால் ஓச்சக் 
  குளிர்சடைக் கொன்றை மாலைத்
தாமநற் சண்டிக் கீந்தார் 
  சாய்க்காடு மேவி னாரே.  6  

பகீரதனுக்கு அருளியது

மையறு மனத்த னாய 
  பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயமில் லமர ரேத்த 
  ஆயிர முகம தாகி
வையகம் நெளியப் பாய்வான் 
  வந்திழி கங்கை என்னுந்
தையலைச் சடையில் ஏற்றார் 
  சாய்க்காடு மேவி னாரே.  7  

கண்ணப்பர்க்கு அருளியது

குவப்பெருந் தடக்கை வேடன் 
  கொடுஞ்சிலை இறைச்சிப் பாரந்
துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித் 
  தூயவாய்க் கலசம் ஆட்ட
உவப்பெருங் குருதி சோர 
  ஒருகணை யிடந்தங் கப்பத்
தவப்பெருந் தேவு செய்தார் 
  சாய்க்காடு மேவி னாரே.  8 

ஸ்ரீ வில்லேந்திய வேலவன்
சாய்க்காடு

ஸ்ரீ சக்ராயுதம் ஈந்தது

நக்குலா மலர்பன் னூறு 
  கொண்டுநன் ஞானத் தோடு
மிக்கபூ சனைகள் செய்வான் 
  மென்மல ரொன்று காணா
தொக்குமென் மலர்க்கண் ணென்றங் 
  கொருகணை யிடந்து மப்பச்
சக்கரங் கொடுப்பர் போலுஞ் 
  சாய்க்காடு மேவி னாரே.  9  

தசமுகனுக்கு அருளியது

புயங்கள்ஐஞ் ஞான்கும் பத்து 
  மாயகொண் டரக்க னோடிச்
சிவன்திரு மலையைப் பேர்க்கத் 
  திருமலர்க் குழலி யஞ்ச
வியன்பெற எய்தி வீழ 
  விரல்சிறி தூன்றி மீண்டே
சயம்பெற நாமம் ஈந்தார் 
  சாய்க்காடு மேவி னாரே.. 10
திருச்சிற்றம்பலம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

சனி, பிப்ரவரி 18, 2023

மகா சிவராத்திரி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 6
   சனிக்கிழமை

மகா சிவராத்திரி நாள்


இன்றைய பதிவில்
அப்பர் பெருமான்
அருளிச் செய்த
போற்றித் திருத்தாண்டகம்

ஆறாம் திருமுறை
திருப்பதிக எண் 32

அருளப்பெற்ற தலம்
திரு ஆரூர்


இறைவன்
ஸ்ரீ வன்மீகநாதர்

அம்பிகை
ஸ்ரீ அல்லியங்கோதை

தலவிருட்சம் பாதிரி
தீர்த்தம்
கமலாலய திருக்குளம்


கற்றவர்கள் உண்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லும் கதியே போற்றி
அற்றவர்கட் காரமுதம் ஆனாய் போற்றி
அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர் தம் புரம் எரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.,1

கஜ சம்ஹாரர் - வழுவூர்
வங்கமலி கடல்நஞ்சம் உண்டாய் போற்றி
மதயானை யீருரிவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
கொல்புலித் தோல் ஆடைக் குழகா போற்றி
அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி
ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..2


மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமேல் ஒற்றைக் கண் உடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலைவேல் ஏந்தீ போற்றி
ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி
சிலையால் அன் றெயிலெரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 3


பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
பூதப் படையுடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறைநான்கும் ஆனாய் போற்றி
மறியேந்து கையானே போற்றி போற்றி
உன்னுமவர்க்கு உண்மையனே போற்றி போற்றி
உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..4


நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி
தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..5


சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனோடு மாலுங் காணா
அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..6


வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
குரை கழலால் கூற்றுதைத்த கோவே போற்றி
நம்புமவர்க்கு அரும் பொருளே போற்றி போற்றி
நால்வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..7


உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
வெள்ளை ஏறேறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி
தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..8


பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி
திருமாலுக் காழி அளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை ஆண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..9


பிரமன்தன் சிரமரிந்த பெரியோய் போற்றி
பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி
கர நான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க்கு அரசே போற்றி
அன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளும்
சிரம் நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..10


திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசர் திருவடிகள் 
போற்றி போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

சனி, பிப்ரவரி 29, 2020

அம்பிகை வந்தாள் 1

தஞ்சை மாநகருக்குள் வடக்குப் புறமாக கரந்தை வழியாக வரும்போது கொடிமரத்து மூலை எனும் பகுதியை நெருங்கும் முன்பாக அகழிக் கரையிலிருந்து மேற்குத் திசையில் நோக்கினால் நெடிதுயர்ந்த கோபுரம் தென்படும்...

சென்னை , மயிலாடுதுறை, கும்பகோணம், ஆத்தூர், அரியலூர் பேருந்துகள் இவ்வழியாகத் தான் வருகின்றன...

16.2.2012
சரி இருக்கட்டும்... அது என்ன கோயில்?.. சிவன் கோயிலா?..

இல்லை!...

பெருமாள் கோயிலா?..

அதுவும் இல்லை!...

அப்புறம் என்ன?... புதிர் போட்டு விளையாடுகிறீரா!...

அந்தக் கோயிலின் பெயர் என்ன என்பது இன்னும் சரியாக யாருக்கும் தெரியாது!...

என்னது!... பேர் தெரியாதா?...

உண்மைதான்..
நீங்கள் சிவன் கோயில் என்று சென்றால் -

16.2.2012

16.2.2012 
ஸ்ரீ சிவேந்த்ர மூர்த்தி 
அங்கே ஸ்ரீ சக்கரத்தில் திருமேனியுடன் பத்துப் பன்னிரண்டு வடிவங்களைத் தரிசிக்கலாம்...
சிவராத்திரியன்று திருக்கோலம் 
பெருமாள் கோயில் என்று சென்றால்
பிரம்மாண்டமாக ஸ்ரீ சுதர்சன மூர்த்தியை மூலஸ்தானத்தில் தரிசிக்கலாம்...

மூலஸ்தானத்தில் ஸ்ரீ சுதர்சன மூர்த்தி 
17/1/20 அன்று ஸ்ரீ சுதர்சனருக்கு அலங்காரம் 
இதனால் தான் இக்கோயிலை ராஜகோபாலசாமி கோயில் என்று சிலர் சொல்கிறார்கள்...

ஆனால் இங்கு தான் ராஜகோபாலன் இல்லையே!...
எங்கே போனான் - அந்த ராஜகோபாலன்!...

இங்கிருக்கும் காளி ஆடிய கூத்தினால்
செண்பகாரண்யம் எனப்படும் மன்னார்குடிக்கு
ராஜகோபாலன் சென்று விட்டதாக சொல்கிறார்கள்...

இது நாயக்கர்கள் காலத்தினால் நடந்ததாம்...
மன்னார்குடியில் பிரம்மாண்டமாகக் கோயிலைக் கட்டி எழுப்பி
அங்கே ஸ்ரீமந் ராஜகோபாலனை எழுந்தருளப் பண்ணினார்களாம்...

அதன் பிறகு இந்த கோயிலைக் கவனத்தில் கொள்ளவில்லை என்கிறார்கள்...

தற்காலத்தில் வடக்கு வீதி காளி கோயில் என்றால் தான் புரியும்...

மூலஸ்தானத்தில் ஸ்ரீ சுதர்சன மூர்த்தி...

அதற்குப் பின் புறமாக கன்னி மூலையில் பெரிய மண்டபம்..
அது தான் சிவேந்திரர் கோயில் எனப்படுவது...

இந்த மண்டபத்தினுள் தான் பல்வேறு சக்ர பீடங்களில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்றார்...

சிவபெருமான் என்றாலும் இருபுறமும் தேவியர் விளங்குகின்றார்களே!...
ஈசனுக்கு அப்படியான திருக்கோலம் எதுவும் கிடையாதே!..

சரியான கேள்விதான்... இருந்தாலும்
சிவ அம்சமும் நாராயண அம்சமும் ஒருங்கே விளங்குவதால்
அங்கே மேலராஜவீதி சங்கர நாராயணர் திருக்கோயிலில்
சங்கர நாராயண மூர்த்தி இருபுறமும் தேவியருடன் விளங்குவதைப் போல இங்கேயும் விளங்குவதாகத் தாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து...

ஓஹோ!.. இதுதான் முற்றான கருத்தா?...

அப்படியெல்லாம் இல்லை... இவ்வளவு நாள் இல்லாமல்
இந்தப் பதிவினை எழுதும்போது மனதில் உதித்த கருத்து இது!...
தங்களுக்கு உகந்தது எனில் உவப்புடன் கொள்க!...

அவ்வளவு தானா?...

இருக்கிறதே... மூலஸ்தானத்துக்கு ஈசான்ய மூலையில் இன்னொரு மண்டபம் அதனுள் இரு பிரிவாக ஒன்றில் ஏகப்பட்ட சிவலிங்கங்கள்...



16.2.2012
ஐந்தடி உயரத்துக்கு மேல் விநாயகர், பாலமுருகன், ஆஞ்சநேயர் - என திருமேனிகள்...

மேலும் யந்த்ர பீடத்துடன் கூடி வித்யாசமாக விளங்கும் நவக்ரக மூர்த்திகள்..

அந்தப் படங்கள் ஒன்றையும் இங்கே காணோம்!...

உண்மையைச் சொல்வதானால் -
அந்தத் திருவுருவங்கள்.. அங்கிருக்கும் அதிர்வலைகள் எல்லாம் சேர்ந்து கொள்ள அதிர்ந்து போனேன்... படமெடுக்கத் தோன்றவில்லை...

அப்படியானால் யாரும் வருவதில்லையா அங்கே!...

நல்ல கேள்வி கேட்டீர்கள்... காளி கோயில் என்றிருக்கும் போது பெண்கள் வராமலா இருப்பார்கள்!... நான் அங்கிருந்த போதே ஏராளமான பெண்கள் அவர்களாகவே சிவலிங்கங்களுக்கு மலர் சூட்டி தீபமேற்றி வழிபட்டுச் சென்றார்கள்...

எனக்குத் தான் சற்று நடுக்கம்... மண்டபத்தில் ஆங்காங்கே சின்னச் சின்ன ஓட்டைகள்.. பிளவுகள்.. சுப்புக்குட்டிகள் இருக்குமோ என்று...

எல்லாவற்றுக்கும் மேலாக அங்கே பெரிய சுப்புக் குட்டிகளின் திருமேனிகள் வேறு...


எல்லாம் சரிதான்... அம்பிகையின் படம் ஒன்றையும் காணோமே!...

அம்பிகை வந்தாள் என்று தலைப்பு மட்டுமா!...

அவள் வந்து தானே பதிவைப் போடு!.. - என்றாள்...
இந்தப் படங்கள் எடுக்கப்பட்டு எத்தனை வருடங்கள் தெரியுமா!..
சரியாக எட்டு ஆண்டுகள்... 

இத்தனை ஆண்டுகளாக ஏன் போடவில்லை?...  

எல்லாம் ஒரு மரியாதை தான்... அவள் என்ன சொல்வாளோ... என்ற தயக்கம் தான்!...

அப்படியிருக்க இப்போது என்ன திடீரென்று!...

அவள் தான் சிவராத்திரி அன்று வந்தாளே!.. சிரித்துக் கொண்டே வந்தாளே!..
வேறு சில தகவல்களையும் சொல்வார் மூலம் சொன்னாளே!..

எதையாவது உளறிக் கொண்டு இருக்காமல் எட்டு வருடங்களுக்கு முன்னால் எடுத்த மற்ற படங்களையும் பதிவில் போட்டு விட்டு மறு வேலை பார்க்கவும்...

ஆகா!.. அதை விட எனக்கு வேறு வேலை என்ன எனக்கு!..
உங்கள் ஆசைக்காக ஒன்றே ஒன்று.. மற்றவை அடுத்த பதிவில்!...


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே.. (077)
-: அபிராமபட்டர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

சனி, பிப்ரவரி 22, 2020

சிவதரிசனம்

ஸ்ரீ மஹாசிவராத்திரியன்று
தஞ்சை மாகரில் விளங்கும் சிவாலயங்கள் பலவற்றிலும்
சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நிகழ்ந்துள்ளன..

அவற்றுள் - இன்றைய பதிவில்
ஸ்ரீ சங்கர நாராயணர் திருக்கோயில், மற்றும் ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி கோயிலின் ஸ்ரீ சிவேந்திரர் சந்நிதி தரிசனம்...

ஸ்ரீ சங்கரநாராயண ஸ்வாமி
ஸ்ரீ பாலாம்பிகை 
ஸ்ரீ சங்கர நாராயணப்பெருமாள் 
வடக்கு ராஜவீதி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி திருக்கோயிலின்
ஸ்ரீ சிவேந்திரர் சந்நிதி தரிசனம்..





ஸ்ரீ சிவேந்திரர் கோயிலில் அக்னி கேசம் நெற்றிக் கண் விளங்க
ஸ்ரீ சக்கரத்தில் ஈசன் எழுந்தருளியுள்ளார்...

இருபுறமும் தேவியர் விளங்குவதால் நாராயண அம்சம் என்கின்றனர்...
ஸ்வாமிக்கு முன்பாக ரிஷபம், குதிரை, யானை - என வாகனங்கள் விளங்குகின்றன..

இவ்வாறாக சிறிதும் பெரிதுமான சக்கரங்கள் பத்திற்கும் மேல் விளங்குகின்றன...

இக்கோயில் ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி திருக்கோயில் எனப்பட்டாலும்
மூலவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஸுதர்சனப்பெருமாள்...


ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோயிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள பிரம்மாண்டமான அஷ்டபுஜ துர்கையும் ஸ்ரீ காளியும்...


ஸ்ரீ பகளாமுகி அம்மன் 

ஸ்ரீ பகளாமுகி அம்மன் 
இங்குள்ள காளி - ஸ்ரீ பகளாமுகி எனப்படுகின்றாள்...

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் இக் கோயிலில் படங்கள் எடுத்திருக்கின்றேன்..
ஆனால் அவை எனது கோப்பில் எங்கே இருக்கின்றன என்று தெரியவில்லை..

படங்களை Fb ல் வழங்கியவர் திரு. தஞ்சை ஞானசேகரன் அவர்கள்..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..

பெரிய கோயிலில் நிகழ்ந்த அபிஷேக அலங்கார தரிசன காணொளி..
Youtube ல் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டது..

ஸ்டூடியோவினருக்கும் நெஞ்சார்ந்த நன்றி...





நம்புவார் அவர் நாவில் நவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகுக் கெலாம்
நம்பன் நாமம் நம சிவாயவே..(3/49)
-: திருஞான சம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
ஃஃஃ