நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 09, 2023

முருங்கை

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 26
 ஞாயிற்றுக்கிழமை

ஊட்டச் சத்து விவரங்களுக்கு 
நன்றி - விக்கி..

அகநானூறு வரிகளுக்கு நன்றி - 
தமிழ் இணையப் பல்கலைக் கழகம்..


முருங்கை..

நமது நாட்டிற்கே உரிய சிறப்பு மிகு தாவரங்களுள் இதுவும் ஒன்று..

எல்லா வகை நிலங்களிலும் செழித்து வளரும் தன்மையுடைய முருங்கை - எளிதில் ஒடிந்து விழக் கூடிய கிளைகளை உடைய பெருஞ்செடி..


ஆறு மாதத்திற்கு ஒருமுறை பூத்து மூன்று மாதங்கள் வரைக்கும் பலன் தருவது..

முருங்கை வழங்குகின்ற நன்மைகள் ஏராளமானவை..

இலை, பூ, காய், முற்றல் - என அனைத்தும் நற்குணம் உடையவை..

வெண்ணெயை உருக்கும் போது இரண்டு இணுக்கு முருங்கைக் கொழுந்தினைப் போட்டு முறிப்பது இந்தப் பக்கத்து வழக்கம்..

முறுகிய முருங்கைக் கொழுந்து சுவையோ சுவை!..

அப்படியான புத்துருக்கு நெய் எல்லாம் வீட்டில் செய்தால் தான் உண்டு!..


நாற்பதாண்டுகளுக்கு முன்பு வரை இலை மறைவாக இருந்த முருங்கைக் காய் விஷயத்தைப் பொது வெளியில் அம்பலப்படுத்திய பெருமை அந்த திரைப்படத்தையே சேரும்.. 

அதற்குன் பின் முருங்கைக் காயைப் பற்றி பேசினாலே மர்மப் புன்னகை மலர்கின்றது.. 


ஒருவித ஏளனச் சிரிப்பு என்றாலும்  ஆனந்தத்தின் அடிப்படை ஆரோக்கியம் என்ற மறைபொருள் அதனுள் இருக்கின்றது..

முருங்கையின் இலைகளுக்கு -  கீரை என்றே பெயர்.. 

இதில் அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்து உள்ளன..

வைட்டமின்கள் B , C, K , புரோவிட்டமின் A என்னும் பீட்டா கரோட்டின், கால்சியம், மாங்கனீஸ்,  புரதம்,  மற்றும் அமினோ அமிலங்கள்  நிறைந்துள்ளன.. 

மனிதர்களுக்குத் தேவையான
இருபது அமினோ அமிலங்களில் பதினெட்டு 
அமிலங்கள் முருங்கைக் கீரையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

மனித உடலால் தயாரிக்க இயலாத எட்டு அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இறைச்சியில் மட்டுமே கிடைக்கின்றன. 

அந்த எட்டு அமிலங்களையும் கொண்ட ஒரே தாவர உணவு முருங்கைக் கீரை.

சமையலறையின் இனிமை முருங்கைக் காய்.. சாம்பார் என்றதும்  முதலில் நினைவுக்கு வருவது முருங்கைக் காய் தான்..


முருங்கைக் கீரையை ஆய்ந்து எடுப்பது சற்றே அலுப்பானது..  இந்த ஒரு கீரை மட்டுமே எண்ணற்ற பலன்களைத் தருகின்றது என்பதை நினைத்துக் கொண்டால் எல்லாம் எளிதாகி விடும்..

ரத்த விருத்திக்கு மிகச் சிறந்தது முருங்கை கீரை..

முருங்கை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் வராமல் தடுக்கலாம்.

பாசிப் பருப்புடன் முருங்கைப் பூ , சின்ன வெங்காயம் சேர்த்துச்  சமைப்பதே மன்மத விருந்து.. 

இதனால் தாது விருத்தியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.. 

பிரசவித்த பெண்களுக்கு பால் சுரப்பினை அதிகரிப்பதில்  முருங்கைக் கீரைக்கே முதலிடம்..


பழங்காலத்தில் இருந்தே முருங்கையானது சித்த மருத்துவத்தில் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றது..

முருங்கைக்காயை வைத்துக் கொண்டு கண்டமேனிக்கு குழாயடியில் மருத்துவ குறிப்புகள் காணக் கிடக்கின்றன.. அவற்றுள் எது உண்மை.. எத்தனை உண்மை என்பது எவருக்கும் தெரியாது..

பண்டைய வைத்திய முறை ஒவ்வொன்றுக்கும் எதிராக பலப்பல ஆய்வுகள்.. அவற்றில் இருந்து 
முருங்கையும் தப்பிக்க வில்லை.. 

முருங்கையினால் பிரச்னைகள் என்றெல்லாம் எதிர் கருத்துகள்.. முருங்கையினால் பிரச்னை இருக்கலாம்.. அவை அனைத்தும் அற்பமானவையே!..

யாரும் நலமாக இருந்து விடக்கூடாது என்பதற்காகத் தானே மேலை நாட்டு  விஞ்ஜான (விஞ்ஞான) உணவு முறைகள் இங்கே வந்து கொண்டிருக்கின்றன..

சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு என்பதுடன் முருங்கையையும் சேர்த்துக் கொள்ளலாம்..

இன்றைய நாட்களில்
ஒரு கைப்பிடி முருங்கைக் கீரை பதினைந்து ரூபாய்
 வரைக்கும் விற்கப்படுகின்றது..

தனியாக முருங்கைக் காய் ஒன்றை பத்து ரூபாய்க்கும் மூன்றை இருபத்தைந்து ரூபாய்க்கும் இங்கே விற்றுக் கொண்டிருக்கின்றனர்..

வீட்டு வாசலில் ஒரு முருங்கை மரம் இருந்தாலே போதும்..  சாதாரணமாக காய்களை விற்று சம்பாதித்து விடலாம்..

ஆரோக்கியமான முருங்கை  ஆண்டொன்றுக்கு 450 காய்கள் காய்க்கக் கூடியது ..

வீட்டுத் தேவைக்குப் போக நமக்கு முருங்கை தருகின்ற ஆதாயத்தினை  உள்ளூர் விலையை அனுசரித்து நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்..

தற்போது வர்த்தக ரீதியில் முருங்கை வளர்ப்பு பரவலாகி உள்ளது.. 

முருங்கைக் காய்,  இலைப் பொடி  ஆகியன ஏற்றுமதி செய்யப்படும் சூழ்நிலையும் உருவாகியிருக்கின்றது.


பாரம்பரிய நெட்டை மரம் குட்டையான காய் வகைகள் சற்றே குறைந்து செடி முருங்கை எனும் இனம் பரவலாகக் காணப்படுகின்றது.. காய்களும் நீளமானவையாக இருக்கின்றன..

ஆனால்,  வீட்டு வாசலில் முருங்கை இருக்கக் கூடாது என்பார்கள்.. ஏனெனில் மாலையில் சற்றே சோர்வுடன் தூங்கு மூஞ்சி போல காணப்படும்...

வேதாளத்துடன் இணைத்துப் பேசப் படுவது முருங்கை.. ஆனாலும் அந்தக் கதை  முருங்கையின் வலுவற்ற  தன்மைக்காக சொல்லப்பட்டதே
அன்றி வேறொரு காரணமும் இல்லை..

முருங்கை -  
தான் வலுவற்று இருந்தாலும் உண்பவர் தம் உடலை  உறுதியாக்குவதை சிந்திக்க வேண்டும்..


நெடுங்கான் முருங்கை வெண்பூத் தாஅய்
(அகநானூறு 53)
நெடிய காட்டு முருங்கையில்  வெள்ளைப் பூக்கள் ..

முருங்கை மேய்ந்த பெருங்கை யானை
(அகநானூறு 167)

முருங்கையை - 
பெரிய தும்பிக்கை உடைய யானை தின்று தீர்த்து விட்டது.
( பாவம்... யானைக்கு என்ன பிரச்னையோ!..)

வாழ்க முருங்கை

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
***

27 கருத்துகள்:

  1. வாசனையான காய்.  அனைவருக்கும் பிடித்த காய்.  ருசியானதும் கூட.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ஆமாம்.. எனக்கு மிகவும் பிடித்தமானது..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. முருங்கைக்கீரை சிலருக்கு ஒத்துக்கொள்ளாது.  வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு உண்டாக்கி விடும்.  அவர்கள் அபாக்கியவான்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருங்கை மலச்சிக்கலை சரி செய்து விடும்..

      அதுதான் பிரச்னை..

      தங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. ஆய்வது எளிது!

    முருங்கைக் கீரையில் ஒரு செய்தித்தாளில் இரவு முழுவதும் சுற்றி வைத்திருந்து விட்டு, காலை எடுத்து லேசாகத் தட்டினால் இலைகள் உதிர்ந்து விடும்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      செய்தி புதிது. இரவு முழுவதும் விழுந்து விழுந்து படித்த களைப்பா? :)) அதன் செய்கை ரசனையாக உள்ளது. மற்ற கீரை வகைகளும் இப்படியே இருக்குமா? இருந்தால் ஆய்வது எளிதாக இருக்கும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. ஹா..  ஹா.. ஹா...   அர்த்தமே மாறுகிறதோ...

      ஒரு பழைய செய்தித்தாளில் முருங்கைக்கரையை பொதிந்து  சுருட்டி வைத்து விட்டு, மறுநாள் காலை அதனைப் பிரித்து, கட்டை எடுத்து லேசாக செய்தித்தாளில் தட்டினால் இலைகள் பெரும்பாலும் உதிர்ந்து விடும்.  இப்போ ஓகேயா?

      நீக்கு
    3. எங்கள் வீட்டில் எல்லாம். கீரையைப் பறித்ததும் ஆய்ந்து அடுத்த வேலை ஆரம்பம் ஆகி விடும்..

      பேப்பரில் சுற்றி வைப்பதெல்லாம் இல்லை..

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
    4. /// இரவு முழுவதும் விழுந்து விழுந்து படித்த களைப்பா? :)) //

      இருந்தாலும் இருக்கும்..

      நீக்கு
  4. முருங்கை மரத்தின் மற்றொரு அபாயம் அது கம்பளிப்பூச்சிகளுக்குப் பிடித்தமான இல்லம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கம்பளிப் புழுக்கள் வீட்டுக்குள் இழைந்து விடும்..

      முருங்கையை வீட்டுக்குப் பக்கத்தில் வைக்க வேண்டாம் என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.. கம்பளிப் புழுக்கள் ஒரு சீசன் மட்டுமே.. அப்போதெல்லாம் கம்பளிப் புழுக்கள் மீது சாம்பலைப் போடுவது வழக்கம்..

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. முருங்கை பற்றிய புராணம் அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. முருங்கைக்கார் சாம்பார் நல்லாருக்கும். அவியலில் போட்டால் கடுப்படிக்கும்.

    இங்க ஏகப்பட்ட முருங்கைக் கீரை 20 ரூ. எனக்கு பாதியை பத்து ரூபாய்க்குத் தந்திருக்கிறார்கள். 2 1/2 அடி காய்களையும் பார்த்திருக்கிறேன். மார்க்கெட்டில் முருங்கை கட்டு 20 ரூ (4-5). சீசனில் இன்னும் விலை மலிவு.

    நாங்கள் முருங்கை இலைக்குப் பதில் வெண்ணெய் காய்ச்சும்போது கறிவேப்பிலை உபயோகிப்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது சீசன் ஆரம்பித்து உள்ளது..

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி..
      நன்றி நெல்லை ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. வெண்ணை உருக்கும் போது போடும் முருங்கை கொழுந்தை சாப்பிட பிடிக்கும். அம்மா வீட்டில் முருங்கை மரம் இருந்தது . வெண்ணெய் உருக்கும் போது சிறு வயது நினைவுகள் வரும்.

    முருங்கை மரம் வலுவற்றதுதான் காற்று அடித்தால் சாய்ந்துவிடும். நம் உடலை வலுவாக்கும்.
    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// முருங்கை மரம் வலுவற்றதுதான் காற்று அடித்தால் சாய்ந்துவிடும். நம் உடலை வலுவாக்கும் ///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. முருங்கையின் பலன்களை விபரமாக சொன்ன விதம் சிறப்பு. இங்கும் ஒரு முருங்கைகாய் விலை அதிகம். நேற்று எங்கள் வீட்டில் முருங்கைகாய் சாம்பார்தான். அதன் மணமே அலாதியானது. பதிவை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று கூடப் பார்த்தேன் (சாம்ராஜ்பேட், கே ஆர் மார்க்கெட் போன்ற இடங்களில்) 5 முருங்கை - 20 ரூபாய். உங்கள் இடத்தில், ஒரு முருங்கைக்காய் விலை என்ன? மரத்தை வச்சு, தண்ணீர் விட்டு, மழை புயல் அடிக்கலைனா, முருங்கை காய்த்து, அதிலும் பூச்சிலாம் வந்து பாழ் படுத்தக்கூடாது, பிறகு உரிய பருவத்தில் பறித்து, அதனைக் கட்டி, மொத்த வியாபாரியிடம் அடிமாட்டு விலைக்கு விற்று, அவன் சிறு குறு வியாபாரிகளுக்கு அனுப்பி, நமக்கு ஒரு முருங்கைக்காய் 4-5 ரூபாய்க்குக் கிடைக்குதுன்னா, வேர்வை சிந்தி, வாழ்க்கையைப் பணயம் வைத்து மரம் வளர்த்த விவசாயிக்கு 40 பைசாவாவது கிடைக்குமா? இல்லை மத்தவங்கள் வயிற்றுக்கு ஈன்ற புண்ணியம் மட்டும்தானா?

      நீக்கு
    2. // எங்கள் வீட்டில் முருங்கைகாய் சாம்பார்தான். அதன் மணமே அலாதியானது.//

      ஆகா!..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
    3. அன்பின் நெல்லை அவர்களுக்கு..

      இது தான் நம் நாட்டில் உள்ள பிரச்னை..

      வீட்டு வேலியில் இருக்கும் முருங்கையை இருப்பவன் பறித்தான்.. தானும் தின்றான்.. இல்லாதவனுக்கும் கொடுத்தான் - என்று இருந்தது.. பிரச்னையே இல்லை..

      பணப்பயிர்.. விற்பனைக்கு எனும்போது எல்லாமே தொந்தரவு தான்.. ஆதாயம் வேண்டுமே!..

      நீக்கு
  9. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன் ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  10. முருங்கை பயன்கள் பற்றிய பகிர்வு அருமை.

    எங்கள் வீட்டில் இரண்டு மரம் உண்டு. இப்பொழுது காய் க்கும் காலம் காய்கள் உள்ளன அனைவருக்கும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  11. அம்பத்தூர் வீட்டில் முருங்கை மரம் இருந்தது. இலைகள் கூட தித்திப்புச் சுவையுடன் இருக்கும். அடிக்கடி முருங்கைக்கீரையில் சூப், பருப்பு உசிலி, அடைக்கு எனப் பறித்துச் சேர்ப்பேன். இங்கே வந்தும் சந்தையில் வாங்கிய முருங்கைக்கீரையை அன்றே ஆய்ந்து எடுத்து சூப் தினமும் வைப்பது உண்டு. இப்போக் கொஞ்ச நாட்களாகக் கீரையோ, காய்களோ கிடைக்காமல் இருந்தது. இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சம் வர ஆரம்பித்துள்ளது.

    பதிலளிநீக்கு
  12. முருங்கை சூப் மிகவும் நல்லது..

    அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றியக்கா ..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..