நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 20, 2021

சிவ தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி மாதத்தின்
நிறைநிலா நாள்..


சகல சிவாலயங்களிலும்
சிவலிங்கத் திருமேனிக்கு
அன்னாபிஷேகம்
நடைபெறுகின்றது..

முளைத்தெழுகின்ற
வித்துகள் எல்லாம்
சிவலிங்க வடிவம்..
அதுபோல
அருள் வடிவாகிய
அன்னத்தின் வடிவமும்
சிவலிங்கம்..

தற்சமயம்
விரிவானதொரு
பதிவினைச் செய்வதற்கு
இயலவில்லை..

இன்றைய பதிவில்
தேவார - திருவாசகத்
திருப்பாடல்களுடன்
சிவதரிசனம்..

ஆருயிர்கள் அனைத்தும்
பசியும் பிணியும் இன்றி
வாழ்வதற்கு
எல்லாம் வல்ல இறைவனிடம்
இந்நாளில் வேண்டிக் கொள்வோம்..


நாளாய போகாமே
நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம்
மடநெஞ்சே அரன்நாமம்
கேளாய்நங் கிளைகிளைக்குங்
கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன
கோளிலியெம் பெருமானே..1!62/1
-: ஸ்ரீ திருஞானசம்பந்தர் :-



மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே
முறைமையால் எல்லாம் படைக்கின் றானே
ஏத்தவனாய் ஏழுலகும் ஆயி னானே
இன்பனாய்த் துன்பங் களைகின் றானே
காத்தவனாய் எல்லாந்தான் காண்கின் றானே
கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் அபயம் நானே..6/44/1
-: ஸ்ரீ அப்பர் ஸ்வாமிகள் :-



எனக்கினித் தினைத்தனைப் புகலிட மறிந்தேன்
பனைக்கனி பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினி யவன்தமர்க் கினியவன் எழுமையும்
மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே..7/72/1
-: ஸ்ரீ சுந்தரர் :-



அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே..
-: ஸ்ரீ மாணிக்கவாசகர் :


வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலகம் எல்லாம்..
-: ஸ்ரீகச்சியப்ப சிவாச்சார்யார் :-
***
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
-:-:-:-

திங்கள், அக்டோபர் 18, 2021

கங்கா வருக..

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புனிதம் மிகுந்த
துலா மாதம்..

சூரியோதயத்திற்கு
சற்று முன்பாக
வடதிசையின் கங்கையானவள்
தென்னகத்தைத்
 தேடி வந்து
காவிரியுடன்
கலப்பதாக ஐதீகம்..

ஒரு சமயம் கங்காதேவி
தன்னைத் தானே
வியந்து கொண்டாள்..


""சர்வேஸ்வரனின்
திருமுடியில் இருக்கின்றோம்..
நம்மை விட உயர்ந்தவர் யார்!.."

இந்நினைப்பினால்
அவளுக்கு
விளைந்தது கேடு..

துலா மாதத்தின் முப்பது நாட்களும்
தமிழ் நிலத்தில
அம்பிகை மயிலாக
வழிபாடு செய்து நின்ற
மயிலாடுதுறையின்
காவிரியில் மூழ்கி அங்கே
சிவ வழிபாடு செய்து
பாவம் நீங்கப் பெறுமாறு
பணிக்கப்பட்டாள்..

அதன்படி
நாளும் காவிரியில்
கலந்து மூழ்கி
அஞ்சொல் அம்பிகையையும்
மயூரநாதரையும்
வணங்கி - முப்பதாம் நாள்
அம்மையப்பனின்
தரிசனம் பெற்று
சாபம் நீங்கினாள்..

இதன்படி
துலா மாதமாகிய
ஐப்பசி முழுவதும்
காவிரியுடன் கங்கா தேவி
கலந்திருக்கின்றாள்..

இம்மாதத்தில்
காவிரியில் நீராடி
சிவ வழிபாடு செய்வோர்
கங்கையில் நீராடிய
புண்ணியத்தை எய்துவர் என்பது ஆன்றோர் வாக்கு..

"ஆயிர மா முகத்தினொடு
வானில் தோன்றும்
கங்கை நங்கை "
- என்று குறிக்கின்றார் அப்பர் பெருமான்...

நமது தமிழ் நிலத்திற்கு
வருகின்ற கங்காதேவியை
வரவேற்போம் - வாருங்கள்!.
-:-

கங்கையில் சூர்யோதயம்

பனிமலை படரும் பைங்கொடி வருக..
பரமன் திருமுடி திகழ்வோய் வருக..
பழவினை தீர்க்கும் திருவே வருக..
பதமலர் பணிந்தேன் பகீரதி வருக..1

ஆயிர மாமுக அன்னாய் வருக..
தாயினும் இனித்திடுந் தமிழாய் வருக..
பாயிரப் புலவோர் பரவிட வருக..
ஆயிரம் பேர் திகழ்  அழகே வருக..2

வெள்ளிய பனிமுகப் புன்னகை தவழ 
முன்னெடுத் தோங்கும் கங்கா வருக..
துள்ளிடு மீனொடு மின்திகழ் காவிரி
தன்னொடு கலந்திட கங்கா வருக..3

தழைத்திடு காவிரிக் கரை தனில் வருக..
உழைத்திடு உழவர் உளத்தினில் வருக..
பிழைத்திடும் ஆருயிர் செழித்திட வருக..
இழைத்திடு அன்பின் அமுதாய் வருக..4


தென்றலில் திகழும் தென்கரை வருக..
இன்புறு எழிலாய் வடகரை வருக..
நன்மையும் நலமும் மலிந்திட வருக..
பொன்மயி லாடு துறைதனில் வருக..5


பொன்தரு பொன்னியும் காத்திருக் கின்றாள்..
பூவிழி மலர்ந்து பார்த்தி ருக்கின்றாள்..
நன்மனை வாழ நலந்தர வருக
காவிரி களித்திட கங்கா வருக..6

கோமுகி - கங்கோத்ரி

குலமகள் அரைத்த மஞ்சளில் குளிக்க
கோமுகி விளைத்த குலக்கொடி வருக..
காவிரி விளைத்த நறுமலர் களிக்க
கங்கோத்ரியின் கன்னிகை வருக..7


அங்கயல் மீனாள் குங்குமம் தரிக்க
மங்கல மாமுக கங்கா வருக..
பைந்தமிழ் வண்ணப் பட்டும் உடுத்த
பண்பின் பகீரதி பரிவுடன் வருக..8

மலருடன் தீபம் ஏந்தியே நின்றோம்
மங்கல முகத்தினில் மகிழ்வுடன் வருக..
நீருடன் நீரும் நெகிழ்வுறும் வகையில்
ஊருடன் ஊரும் உறவினில் வாழ்க..9


பரணியும் வைகையும் தோழியர் ஆக
தரணியில் நன்மை நல்கிட வருக..
சரண்நீ என்னும் அடியவர் வாழ்வில்
அரணென அறந்தனைக் காத்திட வருக..10

ஊர் கொண்ட உலகம் உருப்பட வேண்டி
பேர் கொண்ட கங்கா சீர் கொண்டு வருக..
தேர் கொண்ட மன்னர் திசை கொண்ட மண்ணில்
நீர் என்ற மங்கலம் நிறை கொண்டு வருக. 11

நீருடன் பிறந்து நீரினில் கரையும்
நிலையில் சிவகதி தந்திட வருக
சீருடன் வாழ்ந்து சிறப்பினில் தோயும்
கலையில் தவகதி பொங்கிட வருக..12


அஞ்சொல் அம்பிகை அவளுடன் ஐயன்
ஆனந்தங் காண கங்கா வருக..
பசுமையின் வண்ணன் பரிமள ரங்கன்
பதமலர் போற்ற பகீரதி வருக..13

காவிரி அதனுடன் கலந்திடும் கங்கை
கலந்திடும் நலந்தனில் தமிழகம் வாழ்க
கருணையின் கரங்கள் வளந்தனைப் பொழிந்திட
காலம் முழுதும்  களிப்புடன் வாழ்க..14

கங்கையும் வாழ்க காவிரி வாழ்க..
கலந்திடும் அன்பினில் பாரதம் வாழ்க..
காவிரி போற்றி கங்கையும் போற்றி..
காலங்கள் தோறும் கை தொழும் போற்றி..15
-:- 
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
-:- -:- -:-

ஞாயிறு, அக்டோபர் 17, 2021

எங்கெங்கு காணினும்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
கடந்த
வெள்ளிக்கிழமை
விஜய தசமி நாளன்று
வெளியிடுவதற்காக
வைக்கப்பட்டிருந்த
பதிவு இது..

எங்கள் பிளாக்கில்
எழுப்பப்பட்ட கேள்வி
ஒன்றினால்
சற்றே தாமதம்..


பாவேந்தர்
பாரதிதாசன் அவர்கள்
மகாகவியின்
முன்பாக இயற்றிய பாடல்
என்பது மேலதிகச் செய்தி..



எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா!..


அங்கு தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத் தாயின்
கைப்பந்தென ஓடுமடா
கங்குலில் ஏழு முகிலினமும்  வந்து கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ? - எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!..


எங்கெங்கு காணினும் சக்தியடா!..

காளை ஒருவன் கவிச் சுவையைக் - கரை
காண நினைத்த முழு நினைப்பில் - அன்னை
தோளசைத் தங்கு நடம்புரிவாள் - அவன் தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த
வைய முழுவதும் துண்டு செய்வேன் – என
நீள இடையின்றி நீ நினைந்தால் அம்மை நேர்படுவாள் உன்றன் தோளினிலே!..


எங்கெங்கு காணினும்
சக்தியடா!..
-:-
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
-:--:--:-

சனி, அக்டோபர் 16, 2021

கோவிந்த தரிசனம் 5

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி மாதத்தின் ஐந்தாவது
சனிக்கிழமையாகிய இன்று 
ஸ்ரீ திருமங்கையாழ்வார்
அருளிச் செய்த
திருப்பாசுரங்களுடன்
ஸ்ரீ வேங்கடேசப் பெருமான்
திவ்ய தரிசனம்..

முந்தைய நான்கு வாரங்களிலும்
உற்ற துணை நல்கிய
ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கும்
உற்சாகம் அளித்த
அன்பு நண்பர்கள்
அனைவருக்கும்
நன்றி.. நன்றி..


ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச் செய்த 
பெரிய திருமொழி
ஒன்றாம் பத்து ஒன்பதாம் திருமொழி..
-:-

தாயே தந்தை யென்றும் தாரமே கிளை மக்களென்றும்
நோயே பட்டொழிந்தேன் உன்னைக் காண்பதோரா சையினால்
வேயேய் பூம்பொழில் சூழ் விரையார் திருவேங்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியா ளென்னைக் கொண்டருளே. 9.1 (1028)

மானேய் கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து
நானே நானாவித நரகம்புகும் பாவம்செய்தேன்
தேனேய் பூம்பொழில்சூழ் திருவேங்கட மாமலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட் கொண்டருளே.9.2 (1029)


கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோ ளொன்றிலாமையினால்
என்றேனு மிரந்தார்க்கு இனிதாக வுரைத்தறியேன்
குன்றேய் மேகமதிர் குளிர்மாமலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட்கொண்டருளே. 9.3 (1030)

குலந்தா னெத்தனையும் பிறந்தே யிறந்தெய்த் தொழிந்தேன்
நலந்தா னொன்றுமிலேன் நல்லதோரற ம்செய்துமிலேன்
நிலம்தோய் நீள்முகில்சேர் நெறியார்த் திருவேங்கடவா
அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை யாட்கொண்டருளே. 9.4 (1031)

எப்பாவம் பலவும் இவையே செய்திளைத் தொழிந்தேன்
துப்பா நின்னடியே
தொடர்ந்தேத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார்த் திண்வரைசூழ்  திருவேங்கட மாமலை என்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை யாட்கொண்டருளே. 9.5 (1032)


மண்ணாய் நீரெரி கால் மஞ்சுலாவு மாகாசமுமாம்
புண்ணாராக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்தெய்த் தொழிந்தேன்
விண்ணார் நீள்சிகர விரையார்த் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை யாட்கொண்டருளே. 9.6 (1033)

தெரியென் பாலகனாய்ப் பலதீமைகள் செய்துமிட்டேன்
பெரியேனாயின பின் பிறர்க்கே யுழைத் தேழையானேன்
கரிசேர்ப் பூம்பொழில்சூழ்  கனமாமலை வேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை யாட்கொண்டருளே. 9.7 (1034)


நோற்றேன் பல்பிறவி உன்னைக் காண்பதோ ராசையினால்
ஏற்றேனிப் பிறப்பே யிடருற்றன னெம்பெருமான்
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலை சூழ்வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட்கொண்டருளே. 9.8 (1035)

பற்றேலொன்று மிலேன் பாவமே செய்து பாவியானேன்
மற்றே லொன்றறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல்தேன் பாய்ந்தொழுகும் கமலச்சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட்கொண்டருளே. 9.9 (1036)


கண்ணா யேழுலகுக்கு உயிராய வெங் கார்வண்ணனை
விண்ணோர் தாம்பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திருமங்கையர்க் கோன் கலியன்
பண்ணார்ப் பாடல் பத்தும் பயில்வார்க் கில்லை பாவங்களே.9.10 (1037)
-:-
கோவிந்தோ.. கோவிந்த..
கோவிந்தோ.. கோவிந்த..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ

வெள்ளி, அக்டோபர் 15, 2021

வெற்றித் திருநாள்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி மாதத்தின்
மகத்தான வைபவம்
நவராத்திரி..


முதல் மூன்று நாட்கள்
ஸ்ரீ துர்காம்பிகையாகவும்


அடுத்த மூன்று நாட்கள்
ஸ்ரீ மஹாலக்ஷ்மியாகவும்
வழிபடப்பெற்ற அம்பிகை


நிறைவான மூன்று நாட்களில்
ஸ்ரீ மஹா சரஸ்வதியாகவும்
வணங்கப் பெற்றாள்..

இன்று
பத்தாம் நாள்
விஜய தசமி..
வெற்றித் திருநாள்..

கடந்த புதனன்று
எங்கள் பிளாக்கில்
கேள்வி ஒன்று..

கொலு வைக்கும் பழக்கம்
எப்போது தோன்றியது?..
என்று..

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி
எப்போது மகிஷனை
வீழ்த்தினாளோ
அப்போது என்று என்மனதிற்குத் தோன்றியது..

மகிஷமர்த்தனம்
எல்லாருக்கும் தெரிந்த
ஒன்று தான்..

இருப்பினும்
மீண்டும் ஒருமுறை!..


மகிஷாசுரனின் கொடுமைகளைத் தாங்க இயலாத தேவர்கள் கண்ணீர் சிந்தியபடி எல்லாம் வல்ல பரம்பொருளைச் சரணடைந்து நின்றனர்..
அவர்களது துன்பங்களைக் கண்டு மனம் இரங்கிய திரிபுர சுந்தரி ஆகிய அம்பிகை - வாலை எனத் தோன்றி நின்றாள்..

" இவளா!.. இந்தச் சின்னஞ்சிறு பெண்ணா அக்கொடியவனை மாய்க்கப் போகிறாள்?.. "

வாலை என வந்தவளைக் கண்டதும் மேலும் குழப்பம் எய்தினர் தேவர்கள்..

' இளம் பெண் ஒருத்தி தான் 
தனக்கு முடிவுரை எழுத வேண்டும்!.. ' - என்று இறுமாப்புடன் வரம் ஒன்றினை வாங்கி வைத்திருக்கின்றான் மகிஷன்  - என்பதை மறந்து விட்ட தேவேந்திரன் வழக்கம் போலத் தடுமாறி
நின்றான்...

அவள் -
சின்னஞ்சிறு பெண் போல
சிற்றாடை இடையுடுத்தி
சிவகங்கைக் குளத்தருகே
வீற்றிருக்கும் ஸ்ரீ துர்கை!..
- என்பதனை அவன் உணர்ந்தானில்லை..

சின்னஞ்சிறு பெண்ணாக மலர்ந்திருக்கும் ஸ்ரீ துர்கை
சீற்றம் மிகவானவள்..
சிந்தூர வண்ணம் தானானவள்..
சிம்மம் ஒன்றை வாகனம் எனக் கொண்டவள் - என்பதை எல்லாம்
தேவேந்திரனும் ஏனையோரும் சிந்தித்து அறியவில்லை..

சிரித்தான் மகிடன்..
தனது மகுடம் மண்ணில் விழப் போவதையும் 
சிரம் அறுபடப் போவதை அறியாமல்
ஆணவத்திற்குள் அவன் ஆழ்ந்தான்..

அண்ட பகிரண்டமும் நடுக்கத்துடன் நடக்கப் போவதைப் பார்த்திருக்க பெரும் போர் மூண்டது..

மாயையில் உதித்த மகிடனின் வேலைகள் மகாமாயையிடம் செல்லுபடியாக வில்லை.. 

மகிடனின் அறியாமையைக் கண்டு மீண்டும் புன்னகைத்த அம்பிகை பேருருவம் கொண்டாள்..


பதினெட்டுத் திருக்கரங்களுடன்
விண்ணுக்கும் மண்ணுக்குமாக
விளங்கி நின்றாள்...

அத்தனை திருக்கரங்களிலும் விவரிக்கொணாதபடிக்கு ஒளி ததும்பும் ஆயுதங்கள்..
பெருங் கர்ஜனையுடன் பாய்ந்த சிங்கத்தைக் கண்டு மனம் பதைத்த மகிடன்
மயக்குற்று
 மண்ணில் வீழ்ந்தான்...

அன்பெனும் வலையுள்
அகப்படும் அமுதை
ஆயுதங்கொண்டு
எதிர்க்க முனைந்த அசுரன்
அடியற்ற மரம் போல்
அதிர்ந்து விழுந்தான்..

தேவியின் திரிசூலம் தீயவனின் நெஞ்சைப் பிளந்து கொண்டு உள்ளே நுழைந்தது..

அக்கினி விழிகளால் அவனைச் சுட்டு சாம்பலாக்கி இருப்பாள் தான்..

ஆனால், அவன் ஈசன் எம்பெருமானிடம் வரங்களைப் பெற்றவன்..  அந்த மேலைத் தவத்தால் தான் இப்போது வையம் துரகம் மதகரி மா மகுடம் 
சிவிகை செய்ய கனகம் பெருவிலை ஆரம் - என, மேன்மை மிகு சின்னங்கள் பலவற்றைத் தாங்கியிருக்கின்றான்..

அறிவற்ற மகிஷன்  - தன்னை அழிவற்றவன் என எண்ணிக் கொண்டு -  அருளற்ற அசுரர் குழாங்களைக் கூட்டிக் கொண்டு அவர் தமக்குத் தலைவன் தானே!.. என்று இருளுற்ற மனத்தினனாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கின்றான்..

 பஞ்ச மா பாதங்களுக்கும் உறைவிடமான அவன் -
பெண்களைப் பிழையாக நினைத்தவன்.. வதைத்தவன்..
மங்கல மங்கையரை
மதிக்க மறந்தவன்..
நல்ல எண்ணங்களைத் துறந்தவன்..

இதெல்லாம்
சிந்தனைக்கு வந்ததும்
தாள முடியாதபடிக்குக் கோபம் மூண்டெழுந்தது துர்காம்பிகைக்கு..


" டேய்!.. " - பேரிரைச்சலுடன் மகிடனின் தலை மேல் தனது பத்ம பாதத்தினைப் பதித்தாள் - அந்தரி நீலி அழியாத கன்னிகையான அம்பிகை..

அடியார்க்கும் அன்புடை நெஞ்சினர்க்கும் கோயில்களுக்கும் குளங்களுக்கும் மலைகளுக்கும் காடுகளுக்கும் அடாததைச் செய்த மகிடன் மண்ணோடு மண்ணாக மடங்கிப் போனான்..
ஆவி அடங்கிப் போனான்.. அம்பிகையின் அடியிணை பட்டு அழிந்து போனான்..


இப்பிறப்பில் யாதொரு
அறமும் புரியாமல்
இத்தனை நலங்களும்
நம்மை வந்து சேர்ந்தனவே..
என்று மகிழ்ந்து வாழாது
தர்மத்தின் வாழ்வதனைத்
தடம் மாற்ற முயன்று
தருக்கித் திரிந்ததால்
அன்றோ
மகிஷன் தலையற்று
வீழ்ந்தான்!..

இதையெல்லாம் கண்ட
தேவர்கள் நடுநடுங்கித் திகைத்தனர்..
வெட்கம் அவர்களை
சூழ்ந்து கொண்டது..

" நாமும் வீரர் என்று வீண் பேச்சு பேசிக் கொண்டு ஆயுதங்களைத் தாங்கினோமே!.. " - என்று மனம் வெறுத்து ஆயுதங்களைத் துறந்தனர்.. 

நிராயுதபாணியாக நிமலையின் பாதக் கமலங்களில் சரணம்.. சரணம் என்று விழுந்தனர்..

 மண்ணும் விண்ணும் பதைபதைத்து பதுமைகளாகி நின்றன..
பஞ்ச பூதங்களும் செயலற்று சிலைகளாகித் தவித்தன..

இதைத் தான் கொலு எனக் கொண்டாடிக் களிப்பு எய்துகின்றோம்..

இதையெல்லாம் கண்டு நகைத்த  புவனேஸ்வரி தேவர்களைத் தேற்றி மீண்டும் பணி செய்யப் பணித்தாள்..

அந்த அளவில் அமரர்கள் மீண்டும் தத்தமது ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டு அவையெல்லாம் அம்பிகையின் அருட் பிரசாதங்கள் என்று பூஜித்து வணங்கி தலைமேற்கொண்டு ஆடி மகிழ்ந்தனர்..

இதையே
நாம் ஆயுத பூஜை என்கின்றோம்..

மகிடனின் தலைமேல் அம்பிகை திருவடிகளை வைத்திருந்த போது தேவேந்திரன் விண்ணப்பித்துக் கொண்டான்..

* தாயே.. அவனைப் பாதாளத்தில் அழுத்தி அழித்து விடாதீர்கள்... பாருலகுக்கு இவனுமொரு பாடமாக அமையட்டும்!. "


மகிடனின் முண்டம் 
ஸ்ரீ துர்க்காம்பிகையின் திருவடிகளுக்குக் கீழ் இருக்க -
மற்ற தண்டங்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாக மறைந்து போயின..

மகிடன் இன்றும்  பாருலகிற்குப் பாடமாகத் தான் இருக்கின்றான்..
நாம் தான் இன்னும்
பால பாடம் கூட படித்துக்
கொள்ள வில்லை...

அன்னை கிளியுடன்
கொஞ்சியபடி சாந்த ஸ்வரூபிணியாக இருந்தாலும்
அவளது ஆயுதங்கள் அனைத்தும் முனை மழுங்காமல் பளபளத்துக் கொண்டு தான் இருக்கின்றன..
-:-
காத்யாயனாய வித்மஹே
கன்ய குமாரி தீமஹி
தந்நோ துர்கே ப்ரசோதயாத்:

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
-:-:-:-

வியாழன், அக்டோபர் 14, 2021

கலைமகள் வாழ்க

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஸ்ரீ சரஸ்வதி பூஜை..

நாடெங்கும் 
மடமை எனும்
இருள் நீங்கி
நல்லறிவு எனும்
பேரொளி பரவுதற்கு
அன்னை கலைவாணியின்
மலர்ப்பதங்களை
இந்நாளில்
வேண்டிக் கொள்வோம்..

அனைவருக்கும்
அன்பின் இனிய 
சரஸ்வதி பூஜை
நல்வாழ்த்துகள்..


ஸரஸ்வதி நமஸ் துப்யம்
வரதே காம ரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவது மே ஸதா..
-:-
இன்றைய பதிவில்
மகாகவி பாரதியாரின்
திருப்பாடலுடன்
கலைமகள் தரிசனம்..


வெள்ளைக் கமலத்திலே 
அவள் வீற்றிருப்பாள் 
புகழ் ஏற்றிருப்பாள்..

கொள்ளைக் கனி
இசை தான் 
நன்கு கொட்டு நல் 
யாழினைக் கொண்டிருப்பாள்...

(வெள்ளைக் கமலத்திலே)

 சொற்படு நயம் அறிவார்
இசை தோய்ந்திடத்
தொகுப்பதில் சுவை அறிவார் 
விற்பனத் தமிழ்ப் புலவோர் 
அந்த மேலவர் நாவெனும் 
மலர் பதத்தாள்..

(வெள்ளைக் கமலத்திலே)

கள்ளை கடலமுதை நிகர்
கண்டதோர் பூந்தமிழ்க்
கவி சொல்லவே
பிள்ளை பருவத்திலே 
என்னைப் பேண வந்தாள்
அருள் பூண வந்தாள்..

(வெள்ளைக் கமலத்திலே)

வாணியைச் சரண் புகுந்தேன்
அருள் வாக்களிப்பாள் 
எனத் திடம் மிகுந்தேன் 
பேணிய பெரும் தவத்தாள் 
நிலம் பெயரளவும் 
பெயர் பெயராதாள்..

வெள்ளைக் கமலத்திலே
அவள் வீற்றிருப்பாள் 
புகழ் ஏற்றிருப்பாள்...
-:-


ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய
உருப் பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்..
-: கவிச்சக்கரவர்த்தி கம்பர் :-
-:-
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
-:- -:- -:-

சனி, அக்டோபர் 09, 2021

கோவிந்த தரிசனம் 4

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி மாதத்தின் நான்காவது
சனிக்கிழமையாகிய இன்று 
ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார்
அருளிச் செய்த திருமாலை
திருப்பாசுரங்களுடன்
ஸ்ரீ ரங்கநாதப் பெருமான்
திவ்ய தரிசனம்..


ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார்
அருளிச் செய்த திருமாலை


பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே
ஆயர்தம் கொழுந்தே. என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகரு ளானே.. 873

விரும்பிநின் றேத்த மாட்டேன்
விதியிலேன் மதியொன் றில்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம்
இறையிறை யுருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த
அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன்
கண்ணிணை களிக்கு மாறே..888


இனிதிரைத் திவலை மோத
எறியும்தண் பரவை மீதே
தனிகிடந் தரசு செய்யும்
தாமரைக் கண்ண னெம்மான்
கனியிருந் தனைய செவ்வாய்க்
கண்ணணைக் கண்ட கண்கள்
பனியரும் புதிரு மாலோ
எஞ்செய்கேன் பாவி யேனே.. 889

குடதிசை முடியை வைத்துக்
குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித்
தென்திசை யிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவு ளெந்தை
அரவணைத் துயிலு மாகண்டு
உடலெனக் குருகு மாலோ
எஞ்செய்கே னுலகத் தீரே.. 890


பாயுநீ ரரங்கந் தன்னுள்
பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திருநன் மார்பும்
மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும்
துவரிதழ் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும்
அடியரோர்க் ககல லாமே?.. 891

பணிவினால் மனம தொன்றிப்
பவளவா யரங்க னார்க்கு
துணிவினால் வாழ மாட்டாத்
தொல்லைநெஞ் சே நீ சொல்லாய்
அணியனார் செம்பொ னாய
அருவரை யனைய கோயில்
மணியனார் கிடந்த வாற்றை
மனத்தினால் நினைக்க லாமே?.. 892

பேசிற்றே பேச லல்லால்
பெருமையொன் றுணர லாகாது
ஆசற்றார் தங்கட் கல்லால்
அறியலா வானு மல்லன்
மாசற்றார் மனத்து ளானை
வணங்கிநா மிருப்ப தல்லால்
பேசத்தா னாவ துண்டோ
பேதைநெஞ் சே நீ சொல்லாய்.. 893


கங்கையிற்புனித மாய
காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும்
பூம்பொழி லரங்கந் தன்னுள்
எங்கள்மா லிறைவ னீசன்
கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்
ஏழையே னேழை யேனே.. 894

வெள்ளநீர் பரந்து பாயும்
விரிபொழி லரங்கந் தன்னுள்
கள்ளனார் கிடந்த வாறும்
கமலநன் முகமும் கண்டு
உள்ளமே வலியை போலும்
ஒருவனென் றுணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்துன்
கள்ளத்தே கழிக்கின் றாயே.. 895

குளித்துமூன் றனலை யோம்பும்
குறிகொளந் தணமை தன்னை
ஒளித்திட்டே னென்க ணில்லை
நின்கணும் பத்த னல்லேன்
களிப்பதென் கொண்டு நம்பீ
கடல்வண்ணா கதறு கின்றேன்
அளித்தெனக் கருள்செய் கண்டாய்
அரங்கமா நகரு ளானே.. 896


போதெல்லாம் போது கொண்டுன்
பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டுன்
திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்ச மன்பு
கலந்திலே னதுதன் னாலே
ஏதிலே னரங்கர்க்கு எல்லே
எஞ்செய்வான் தோன்றி னேனே.. 897

குரங்குகள் மலையை தூக்கக்
குளித்துத்தாம் புரண்டிட்டோ டி
தரங்கநீ ரடைக்க லுற்ற
சலமிலா அணிலம் போலேன்
மரங்கள்போல் வலிய நெஞ்சம்
வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்க் காட்செய் யாதே
அளியத்தே னயர்க்கின் றேனே.. 898


உம்பரா லறிய லாகா
ஒளியுளார் ஆனைக் காகி
செம்புலா லுண்டு வாழும்
முதலைமேல் சீறி வந்தார்
நம்பர மாய துண்டே
நாய்களோம் சிறுமை யோரா
எம்பிராற் காட்செய் யாதே
எஞ்செய்வான் தோன்றினேனே.. 899

ஊரிலேன் காணி யில்லை
உறவுமற் றொருவ ரில்லை
பாரில்நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னே என்
கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர்க் களைக் ணம்மா
அரங்கமா நகரு ளானே..900

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஃஃஃ

சனி, அக்டோபர் 02, 2021

கோவிந்த தரிசனம் 3

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி மாதத்தின் மூன்றாவது
சனிக்கிழமையாகிய இன்றைய பதிவில்
ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிச் செய்த
மூன்றாம் திரு
அந்தாதியின்
திருப்பாசுரங்களுடன்
தேரழுந்தூர்
ஸ்ரீ ஆமருவியப்பன்
திவ்ய தரிசனம்..


ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று... 2282


மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன் - சினத்துச்
செருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்
வருநரகம் தீர்க்கும் மருந்து.. 2284


கழல்தொழுதும் வாநெஞ்சே கார்கடல்நீர் வேலை
பொழிலளந்த புள்ளூர்திச் செல்வன் - எழிலளந்தங்
கெண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை
நண்ணற் கரியானை நாம்.. 2288


நாமம் பலசொல்லி நாராய ணாவென்று
நாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே - வா மருவி
மண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்
கண்ணனையே காண்கநங் கண்.. 2289


வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடிமண்
நீயளந்து கொண்ட நெடுமாலே  - தாவியநின்
எஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி
அஞ்சா திருக்க அருள்.. 2299

கைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம்
வெய்ய கதை சார்ங்கம் வெஞ்சுடர் வாள் - செய்ய
படைபரவ பாழி பனிநீ ருலகம்
அடியளந்த மாயன்
அவற்கு.. 2317

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே யணிமருதம் சாய்த்தான் -  அவனே
கலங்காப் பொருநகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரமெரித்தான் 
எய்து.. 2332


தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவு மொன்றாய் இசைந்து... 2344
***

இன்று
அக்டோபர் 2.
அன்பின் வழி நின்ற
மகாத்மா பிறந்த நாள்..

தன் குடும்பத்திற்கு
கஷ்டம் ஒன்றையே
விட்டுச் சென்ற
லால் பகதூர் சாஸ்திரி
பிறந்த நாள்..

ஏழ்மையில் பிறந்து
ஏழ்மையில் வளர்ந்து
தமிழகத்தின்
முதலமைச்சராகத்
தொண்டாற்றிய
பெருந்தலைவர்
அமரத்துவம் அடைந்த
நாள்..

இத்தகைய நல்லோர்களை
இப்புண்ணிய பாரதத்திற்கு
மீண்டும் தருவாய்
ஹரி நாராயணா!..

ஓம் ஹரி ஓம்
நமோ  நாராயணாய நம..
ஃஃஃ