நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 29, 2016

இதயம் ஒரு கோயில்..

உள்ளம் பெருங்கோயில்!.. - என்றார், திருமூலர்..

அப்படியே அதை ஏற்றுக் கொண்டு -
வாழ்வில் நிரூபித்துக் காட்டிய பூசலார் போன்ற அடியார்கள்..

அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் -

ஏதோ தங்களால் இயன்ற அளவில்
மாட மாளிகையாக நிலை நிறுத்தியவர்கள்..

மாட மாளிகையாக இல்லாவிட்டாலும்
ஓலைக் குடிசையாக அமைத்துக் கொண்டவர்கள்..

அந்த வகையில் வாழ்ந்தவர்கள் ஒரு சிலர் எனில்,

ஒன்றுக்கும் உதவாத
படுகுழியாக ஆக்கி பாழாய்ப் போனவர்களும் பலர்..

இத்தனைக்கும் காரணம் - சிந்தனை..

அதனால் தான் - மனம் போல மாங்கல்யம்!.. - என்றனர் ஆன்றோர்..


சிந்தையும் செயலும் ஒன்றுபட்டு விட்டால்
நன்மையோ தீமையோ - விளைவுகள் நிச்சயம்..

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியார் ஆகப் பெறின்.. (0666)

- எனும் அமுத மொழி சிந்திக்கத் தக்கது...

வெற்றி பெறுவோம்!.. - என்ற உறுதி உள்ளத்தில் இருந்ததால் தானே -
பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்கப் பதக்கத்தினை வென்றெடுத்தார்...

எண்ணங்கள் எல்லாம் கருக் கொள்வதும் உருக் கொள்வதும் மூளையில் தான்!.. -  என்றாலும் ,

நாமெல்லாரும் அன்றிலிருந்து இன்றுவரை - சுட்டிக் காட்டிச் சொல்வது -

இதயத்தைத் தான்!..


இதயத்தைத் தான் - உள்ளம் என்பதும் மனம் என்பதும் நெஞ்சம் என்பதும்!..

நெஞ்சைத் தொட்டுச் சொல்லு - என் ராசா
என்மேல் ஆசையில்லையா?..

- என்று இளகும் போதும்,

இதயம் போகுதே.. எனையே மறந்து!.. -  என்று உருகும் போதும்

அங்கே பெருஞ்சுமை ஏற்றப்படுகின்றது..

இதயம் இருக்கின்றதே.. தம்பி..
இதயம் இருக்கின்றதே!.. - என்று பாசத்தினால் பதறும் போதும்,

நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால் -
நெஞ்சு பொறுக்குதில்லையே!.. - என்று கோபத்தில் குமுறும் போதும்

உணர்வுகளால் நைந்து போகின்றது...

தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்.. (0293)

நமது நன்மைக்கும் தீமைக்கும் நெஞ்சமே சாட்சி..
நம்மை வேறு யாரும் தண்டிக்க வேண்டியதில்லை..
நமது நெஞ்சமே தீயாகச் சுட்டு தண்டிக்கும்!..

- என்கின்றார் வள்ளுவப் பெருமான்..

ஒழுக்க கேடுகளில் புரண்டு கொண்டிருக்கையில்
மனமே தீயாகித் தண்டிக்கும் என்றால் -

நற்குணங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது
மனமே தென்றலாகி வாழ்விக்கும்!..

இதுதான் சத்தியம்!..


இப்படியெல்லாம் நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து விட்டால் -
உலக மக்களின் உள்ளங்களில் எல்லாம் உள்ளவராகி விடலாம்..

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.. (0294)

- என்றும் வள்ளுவப் பெருந்தகை தீர்க்கமாக உரைக்கின்றார்..

நம்முடைய எண்ணமும் இயக்கமும் -
இதயத்துடன் எவ்வித தொடர்பும் கொண்டிருக்கவில்லை...

ஆனால்,
அவற்றால் நன்மை வரும்போது மகிழ்ச்சியுடன் துடிப்பது இதயம்..
ஆற்றாத தீமை வரும்போது துன்பத்துடன் துவள்வதும் இதயம்..

ஒரு கட்டத்தில் - அதிர்ச்சியில் அடங்கிப் போவதும் இதயம் தான்!..

அத்தகைய இதயத்தைக் காப்பதும் கவனிப்பதும் நம் கையில் தான் உள்ளது..

எண்ணங்களால் இளைப்பாறுகின்றது இதயம்..
அதன் வண்ணங்களால் களிப்பாகின்றது இதயம்..

நல்ல உணர்வும் நல்ல உணவும் - இதயத்திற்கான கவசங்கள்...

இளமையிலிருந்தே -
எண்ணங்கள் எல்லாம்
நல்லனவாக ஆகியிருந்தால்
ஈராயிரம் ஆண்டுகளானாலும்
இதயம் இளைத்துப் போவதில்லை..
கலங்கிக் களைத்துப் போவதும் இல்லை!..

எண்ணங்கள் எல்லாம் நல்லனவாக ஆவதற்கு என்னங்க செய்றது?..

வாய்மை!.. வாய்மை ஒன்றே இதயத்தை வாழவைக்கும்...

புறந்தூய்மை நீரானமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப்படும்.. (0298)

வாய்மை ஒன்றினால் தான் உள்ளம் தூய்மையாகும்..

அப்படி உள்ளம் தூய்மையாகி விட்டால் -

தூய்மையான உள்ளத்தை உடையவன் எவனோ -
அவனே தவம் செய்வாரை விடவும் தானம் செய்வாரை விடவும் மேலானவன்!..

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.. (0295)

வாழ்வாங்கு வாழ்வதற்கு வாய்மையே வகை செய்யும்!..
- என்று வள்ளுவப் பெருந்தகை வகுத்துரைக்கின்றார்..

இப்படியாக இதயத்தைக் காப்பதற்கு முனையும் போது
நல்ல உணவுப் பழக்கமும் அவசியமாகின்றது...

மனிதன் எல்லாவற்றையும் அடக்கி விட்டதாக ஆர்ப்பரித்தாலும்
மரணம் எனும் பிடிக்குள் அடங்கிப் போகின்றான்...

இயல்பான மரணம் என்பது ஒழிந்து
எங்கு பார்த்தாலும் எதிர்பாராத மரணம் என்றாகி விட்டது..

அதற்கான முக்கிய காரணங்கள் பற்பல..
ஆயினும், அவற்றுள் ஒன்று - உணவுப் பழக்கம்!..


மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.. (0945)

ஒவ்வாத உணவுகளை ஒதுக்கி விட்டு ஒருவன் உண்பானேயானால்
அவனுக்கு நோயும் இல்லை.. நோயினால் துன்பமும் இல்லை!..

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே - அறிவுறுத்தப்பட்டு விட்டது..

உணவே மருந்து!.. - என்றனர் ஆன்றோர்..

நாம் தான் கேட்கவில்லை...
அதனால் தான் ஆங்காங்கே மருத்துவ மனைகள் பெருகித் திளைக்கின்றன..
நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும்...

நாங்கள் இருக்கின்றோம்!.. - என்பன எல்லாம் வெற்று விளம்பரங்களே..

தாயினும் சாலப் பரிந்து!.. - என்று, இறைவனை மாணிக்கவாசகர் குறிக்கின்றார்...

இறையை ஏற்பதும் மறுப்பதும் அவரவருடைய விருப்பம்..

ஆனால், நம்மைப் பெற்றெடுத்துக் காத்த தாய்
தாய்க்குப் பின் நம்மைக் காக்கும் தாரம் - இவர்களை மறுக்கக் கூடுமோ!..

அன்பின் உறவுகள் பின்னிப் பிணைந்தது தான் - இல்லறம்..

அந்த இல்லறத்தில் -
வாய்மையும் தூய்மையும் 
நிறைந்து விட்டால் அதுவே நல்லறம்!..

நல்லறம் ஒன்றே 
எல்லாவற்றிலிருந்தும் நம்மைக் காக்கும்!..

இதயம் என்றும் கோயில் ஆகட்டும்..
இனிய வாய்மை அங்கே தெய்வமாகட்டும்!..

இனிய உறவுகள் இளமைக்கு நலம்!..
இனிய உணவுகள் இதயத்திற்கு நலம்!.. 

இனிமை சேர்ப்போம்..
இதயம் காப்போம்!..

வளமிகு பூமியில்
வாழ்வாங்கு வாழ்வோம்!..

வாழ்க நலம்!.. 
***

செவ்வாய், செப்டம்பர் 27, 2016

ஊர் சுற்றலாம்..

இன்று செப்டம்பர் 27..

உலக சுற்றுலா நாள்!..

வேலைகள் பல இருந்தாலும் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு -
வாருங்கள்.. ஊர் சுற்றிப் பார்க்கலாம்!..

எந்த ஊருங்க!?..

எங்க ஊருங்க!..

ஓ!..


பிறந்த ஊரின் பெருமையைப் பேசுவதற்கு யாருக்குத் தான் ஆசையிருக்காது?..
கலை கலாச்சாரம் வரலாறு வாழ்வியல் அரசியல் ஆன்மீகம் - என, எல்லாம் ஒன்று சேர்ந்து விளங்கும் நகரங்களுள் தனிச்சிறப்புடன் திகழும் -

தஞ்சாவூர்!..

அதனால் தான் -
தென்னகத்தின் பண்பாட்டு மையம் இங்கே அமைக்கப்பட்டது..

நீண்ட நெடும் வரலாற்றைத் தன்னகத்தே கொண்டது தஞ்சை மாநகர்..

கி.பி. 850ல் முத்தரையர்களிடமிருந்து விஜயாலய சோழர் தஞ்சையை கைப்பற்றி புலிக்கொடியினை நாட்டினார்..

அதன்பின் அந்தப் புலிக் கொடியினை -
விண்ணுயரத்திற்கு ஏற்றைவைத்த பெருமைக்குரியவன் -
மாமன்னன் ராஜராஜ சோழன்!..

சோழப் பரம்பரையின் திலகமான ராஜராஜ சோழன் -
தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு - கடல் கடந்த நாடுகளான
முன்னீர்ப் பழந்தீவுகள் பன்னீராயிரத்தையும் ஈழத்தையும் ஆட்சி செய்த பெருமைக்குரியவன்..


மாபெரும் சிவபக்தனான ராஜராஜ சோழன் -
தஞ்சை மாநகரில் எடுப்பித்த பெருங்கோயில் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு அவனது பெருமையைப் பேசிக்கொண்டிருக்கும்..

உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டிருக்கும் தஞ்சை பெரிய கோயிலின் பெருமையைப் பேசி முடியாது..

மாபெரும் கலைச்சின்னம் - தஞ்சை பெரிய கோயில்..

உலக மக்களைக் கவர்ந்திருக்கும் இந்தத் திருக்கோயில்
ஏறத்தாழ - மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது..

பெரிய கோயிலின் எதிர்புறத்தில் தான் -
புகழ் பெற்ற ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை..

இந்த மருத்துவமனை - ராஜ ராஜ சோழனின் தமக்கையான குந்தவை பிராட்டியாரால் தொடங்கப்பட்டிருக்கும் - என்பது முக்கியமான குறிப்பு..

பெருமைக்குரிய சோழனின் அரச மாளிகை - தஞ்சையின் வடமேற்கில் களிமேடு பகுதியில் இருந்திருக்கக் கூடும் என்றும்

அதெல்லாம் இல்லை!.. இப்போதுள்ள நாயக்க - மராத்திய அரண்மனையின் அடித்தளமே சோழரின் அரண்மனை தான் என்றும் சொல்கின்றார்கள்..

எப்படியிருந்தாலும் - நாயக்கர்களின் அரண்மனை கி.பி. 1673ல் நடந்த போரில் சிதைவுற்றது..

அதன்பின் 1675ல் தஞ்சையை மராட்டியர்கள் கைப்பற்றினர்..

மீண்டும் பல நிலைகளில் - மாடமாளிகை கூட கோபுரம் - என அரண்மனை எழுந்தது..

மன்னர் சரபோஜியின் அரசவை, பெருமைமிகும் சரஸ்வதி மஹால் நூலகம், சங்கீத மஹால், மணி கோபுரம், காவற்கோபுரம், ஷார்ஜா எனும் ஏழடுக்கு மாடி- எனத் திகழ்கின்றது..

மணிக் கோபுரம்
காவல் கோபுரம்

ஷார்ஜா மாடி
இன்று காணும் அரண்மனையும் பல சிதைவுகளுடன் தான் விளங்குகின்றது..

எனினும் மிச்சம் மீதி என எஞ்சிய பகுதிகள் பாதுகாப்புடன் பராமரிக்கப்படுகின்றன..

இன்றைய அரண்மனை வளாகம் சுற்றுலா பயணிகளுக்கு மாபெரும் விருந்து என்றால் மிகையில்லை..


உலகின் தொன்மையான நூலகம் சரஸ்வதி மஹால்..

பிற்காலச் சோழர்களால் உருவாக்கப்பட்ட சரஸ்வதி பண்டாரகம் என்பதே பின்னாளில் சரஸ்வதி மஹால் என்றானது - என்பது அறிஞர் தம் கூற்று..

இசை, நாட்டியம், சிற்பம், சமயம், தத்துவம், மருத்துவம் , அறிவியல் - என, பல்வேறு துறைகளிலும் சிறந்த நூல்கள் இங்கேயுள்ளன..

தொன்மையான ஓலைச்சுவடிகளும் பழைமையான அச்சுப் பிரதிகளும் இங்கே  பாதுகாக்கப்படுகின்றன..

தற்போது - சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஒலி ஒளிக் காட்சி தொடங்கப்பட்டுள்ளது.. 

இதற்கென - 156 இருக்கைகளுடன் முழுதும் குளிரூட்டப்பட்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.. 

தஞ்சையின் பாரம்பர்யம், சோழ மன்னர்களின் வரலாறு, தஞ்சையைச் சுற்றியுள்ள சிறப்பு மிகும் தலங்கள் - என, 

நமது பெருமையினை சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் - தமிழ், இந்தி, ஆங்கிலம், பிரஞ்ச் ஆகிய மொழிகளில் ஒலி ஒளிக் காட்சிகள் தினமும் நடைபெறுகின்றன..

அரண்மனை வளாகத்தினுள் மூன்று அருங்காட்சியகங்கள் விளங்குகின்றன..

கலைநயம் மிக்க ஐம்பொன் சிலைகளும் கல் படிமங்களும் மரச் சிற்பங்களும் போர்த் தளவாடங்களும் மற்றும் பல அரியவகைப் பொருட்களும் காணக் கிடைக்கின்றன..

தஞ்சை பீரங்கி
தஞ்சை அரண்மனை வளாகத்தை விட்டு வெளியே - கிழக்காக நடந்தால் கீழவாசல்...

கோட்டையின் கிழக்கு வாசல் இதுவே..

இங்கிருந்த மிகப் பெரிய நுழைவு வாயிலை பழுதாகி விட்டதெனக் கூறி
40 ஆண்டுகளுக்கு முன் இடித்துத் தள்ளி தரைமட்டமாக்கி விட்டனர்..

சாலைத் திட்டுக்கு வடபுறமாக உயரமான மேட்டில் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட பெரிய பீரங்கி ஒன்றினைக் காணலாம்..

சுமார் முப்பதடி உயமுடைய இந்த இடத்திற்கு பீரங்கி மேடு என்றே பெயர்..

தஞ்சையை ஆட்சி செய்த ரகுநாத நாயக்கர் (1600 - 1645) 1620ல் இந்த பீரங்கியை அமைத்தார்..

25 அடி நீளமுடைய இந்த பீரங்கி 22 டன் எடையுள்ளது..
இதன் வாய்ப்பகுதி இரண்டு அடி (25 அங்குலம்) அகலமுடையது..

400 ஆண்டுகளாக வெயிலில் காய்ந்து மழையில் நனைந்தாலும்
எள்ளளவு கூட - துரு பிடிக்காமல் கம்பீரமாக விளங்குன்றது...

ஆனாலும் - பீரங்கியின் இருபுறமும் இருந்த கனமான வளையங்களை
சமூக விரோதிகள் அறுத்தெடுத்து தங்கள் ஆளுமையைக் காட்டிவிட்டனர்..

இந்த பீரங்கி உலகின் பெரிய பீரங்கிகளுள் நான்காவதாகத் திகழ்கின்றது...

இந்த பீரங்கி மேட்டில் நின்றுகொண்டு மேற்குத் திசையில் நோக்கினால் - ஷார்ஜா மாடியும் அரண்மனை கோபுரங்களும் அழகாகத் தெரியும்..

ஆனால் - சரியான பராமரிப்பு இல்லாததால் சமுக விரோதிகளின் புகலிடமாக விளங்குவது வருத்தத்துக்குரியது..


முதல் உலகப் போர் நினைவு கல்வெட்டு
பழைய பேருந்து நிலையத்தின் தெற்குப் புறம் - அரசு மருத்துவமனைக்கு முன்பாக நீண்டுயர்ந்து விளங்குவது நூறாண்டுகளைக் கடந்த மணிக்கூண்டு..

1883ல் கட்டப்பட்ட இந்த மணிக் கூண்டிற்கு ராணி கோபுரம் என்று பெயர்..

இதன் கிழக்குப் புறம் - முதல் உலகப்போரில் சண்டையிட்டு உயிர் துறந்த நால்வரின் நினைவு கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது..

எண்கோண அமைப்பில் எழுந்து நாற்பட்டையாக உயர்ந்து உச்சியில் கோபுர விமானம் போல விளங்கும் - இந்த மணிக்கூண்டு முறையான பராமரிப்பின்றி இருக்கின்றது..

நான்கு புறமும் இருக்கும் பார்வை மாடங்கள் சிதைந்து விட்டன..

அப்போதெல்லாம் - ஒன்று இரண்டு என,
ஊரெல்லாம் கேட்கும்படி மணியோசை முழங்கும்...

அந்த வாய்ப்பினை இன்றைய தலைமுறையினர் இழந்து விட்டனர்..


வெண்ணாறு, வடவாறு, புது ஆறு என
நீர் வளமும் நிலவளமும் ஒருங்கே அமையப் பெற்ற தஞ்சை -
சிறப்பான பேருந்து மற்றும் இருப்புப் பாதை வசதிகளையும் உடையது..

தமிழகத்தின் எல்லா நகரங்களுடனும் பேருந்து வசதியிருந்தாலும் -
இன்னும் மேம்படவேண்டும் என்பது ஆவல்..

புது ஆறு எனப்படும் கல்லணைக் கால்வாய்
தஞ்சையின் வடக்கு எல்லையில் அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயிலுக்குப் பின்புறம் ஒரு கி.மீ தொலைவில் வெண்ணாற்றுப் படுகையில் பழைமையான நீரேற்று நிலையம் உள்ளது.. 

1880 களில் அமைக்கப்பட்ட இந்நிலையம் இன்னும் சிறப்பாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது..

மேலும் கொள்ளிடத்திலிருந்தும் நீர் கொண்டு வரப்படுகின்றது.. 
தமிழகத்தில் குடிநீர் பிரச்னை இல்லாத மாநகர் தஞ்சை..

மருத்துவக் கல்லூரி
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
பயிர் பதனிடும் தொழில் நுட்பக் கழகம்
Sukhoi SU30 - தஞ்சை விமான தளம்
மத்திய அரசின் பொலிவுறு நகர்களுள் தஞ்சை மாநகரும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே -
அனைத்து வகையிலும் சிறந்து விளங்கிய பெருமைக்குரியது சோழ மண்டலம்..

சிவகங்கைக் குளம்
அன்றைக்கே - நீர் மேலாண்மையில் சிறப்புற்றிருந்தனர்...

பெரிய கோயிலின் வடபுறமுள்ள சிவகங்கைக் குளத்தின் கீழ் -
ஜல சூத்திரம் எனும் அமைப்பில் நகரிலுள்ள கிணறுகளில்
நீர் நிறைந்திருக்கின்றது..

தஞ்சை நகரின் வடிகால் அமைப்பு சிறப்பானது.

தெருக்களின் இருபுறமும் அமைந்துள்ள - கழிவு நீர்த் தாரைகள்
ஆங்காங்கே பத்தடி ஆழத்தில் - வாரிகள் எனும் ஓடைகளில்
இணைக்கப்பட்டு வயற்புறங்களில் சேருமாறு அமைக்கப்பட்டிருக்கும்..

கால வெள்ளத்தில் மக்கள் அவற்றைச் சிதைத்துப் பாழ்படுத்தினர்..

தற்போது நகர் முழுதும் புதை சாக்கடைத் திட்டம் நடைமுறையில் இருந்தாலும் நான்கு ராஜவீதிகளிலும் பழைமையான நீர்த்தாரைகளை இன்னும் காணலாம்..

இருப்பினும்,

தங்கு தடையற்ற மின்சாரம், சூரிய ஒளியினால் மின்சக்தி, சிறப்பான கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள், பத்திரமான சாலைகள், மேம்படுத்தப்பட்ட குடிநீர் வசதி, மழை நீர் சேகரிப்பு, தூய்மையான கழிப்பறை மற்றும் வடிகால் வசதி, திடக்கழிவு மேலாண்மை ..

- என, பல்வேறு துறைகளில் மேம்படுத்தப்பட இருக்கின்றது - தஞ்சை மாநகர்..

தமிழ்ப் பல்கலைக்கழகம், தென்னக பண்பாட்டு மையம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் கால்நடை அபிவிருத்தி ஆராய்ச்சி நிலையம், இந்திய பயிர் பதனிடும் தொழில் நுட்பக் கழகம் (Indian Institute of Crop Processing Technology - IICPT)
இந்திய விமான படைத்தளம் - என மேன்மையுற்று விளங்கினாலும்

சிற்சில குறைகளும் ஆங்காங்கே இருக்கின்றன..

காலப்போக்கில் அவையெல்லாம் சரியாகும் என நம்புவோம்...


தென்னகத்தின் நெற்களஞ்சியமாகிய தஞ்சை மாநகரின் பெருமைகளில் இங்கே சொல்லியிருப்பது ஓரளவு தான்..

முழுதாகச் சொல்லுதற்கு இந்த ஒரு பதிவு போதாது - என்பதே உண்மை..

தஞ்சையைச் சுற்றி வந்து - நான் எடுத்து சேகரித்த படங்கள் எங்கே ஒளிந்து கொண்டிருக்கின்றன - என்று தெரியவில்லை..

ஒரு சில படங்களைத் தவிர மற்றவை இணையத்தில் பெற்றவை..

தஞ்சை ஓவியங்கள்தஞ்சாவூர் வீணை மற்றும் இசைக் கருவிகள், தஞ்சை கலைத் தட்டு, தஞ்சை ஓவியங்கள், தஞ்சை தலையாட்டி பொம்மை, தஞ்சை மரக்குதிரை..

தஞ்சாவூர் தாம்பூலம், தஞ்சாவூர் டிகிரி காபி, தஞ்சாவூர் நெய் புட்டு,
தஞ்சை அசோகா, தஞ்சை காரக்குழம்பு, தஞ்சை சந்திரகலா (இனிப்பு தாங்க!..)

- என, பற்பல சிறப்புகள்..

நாட்டியாஞ்சலி
தஞ்சையின் பரத நாட்டிய பாரம்பரியம் மட்டுமின்றி
தஞ்சை நால்வர் எனும் இசைச் சகோதரர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்..

தஞ்சையில் வசித்திருந்த - சத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் -
அரச ஆரவாரங்களைக் கண்டு ஒதுங்கி திருவையாற்றுக்கு குடிபெயர்ந்தார்...

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ ஸ்யாமா சாஸ்திரிகள் வசித்ததும் தஞ்சையில் தான்..

தஞ்சை பொய்க்கால் குதிரை, கரக ஆட்டம், மயிலாட்டம், புலியாட்டம், உறுமி மேளம், தப்பாட்டம் - என்பன மண்ணின் பெயர் விளங்கச் செய்வன..


இன்னும் பேசுதற்கு நிறைய உள்ளன..
மீண்டும் ஒரு இனிய வேளையில் 
அவற்றையெல்லாம் பேசி மகிழ்வோம்!..

வாருங்கள் எங்கள் ஊருக்கு!..
கண்ணுக்கும் கருத்துக்கும்
பொன்னான நாடு!..

எங்கள் தஞ்சை வளநாடு!..

வாழ்க வளமுடன்!..
***

சனி, செப்டம்பர் 24, 2016

புரட்டாசி தரிசனம் 2

அழகர்..

தமிழகத்தில் இந்தப் பெயரைக் கேட்டதும் மயங்காதவர் வெகு சிலரே!..

ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் தயாபரன்!..

மதுரையம்பதியில் நிகழும் -
சித்திரைத் திருவிழாவின் முத்திரைக் கதாநாயகன்!..

தான் வீற்றிருக்கும் திருமாலிருஞ்சோலையிலிருந்து
நானூறுக்கும் மேற்பட்ட திருக்கண் (மண்டகப்படி) களில்
நின்றும் இருந்தும் சேவை சாதித்து
மக்களுடன் ஒன்றி உறவாடியவனாக -

வாஞ்சையுடன் வைகைக் கரையில் எழுந்தருளும் வள்ளல் பெருமான்!..


நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறுதிரு வுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ!.. (0592)

இந்த பெருமானுக்குத் தான் -
நூறு தடாக்களில் வெண்ணெயும் நூறு தடாக்களில் அக்கார அடிசிலும்
பராவி வைப்பதாக சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் நேர்ந்து கொண்டாள்...

ஆனால், அந்த வேண்டுதலை அவளால் நிறைவேற்ற முடியவில்லை...

பின்னாளில் திருமாலிருஞ்சோலைக்கு எழுந்தருளிய 
உடையவர் ஸ்ரீ ராமானுஜர் - ஆண்டாளின் வேண்டுதலை ஈடேற்றினார்..

திருமாலிருஞ்சோலையில் ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்றிய பின் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு எழுந்தருளி -

திருக்கோயிலினுள் பிரவேசித்தபோது -

வாரும் எம் அண்ணாவே!..

- என்று, சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாள் முன்வந்து நல்வரவு கூறி வரவேற்ற அதிசயமும் நிகழ்ந்தது என்பர்..


சிறப்பு மிகும் கள்ளழகர் திருக்கோயிலில்
துர்முகி வருஷத்திற்கான ஆவணி பவித்ர உற்சவம் 14/8 அன்று நடந்தது..

பவித்ர உற்சவத்தின் போது 108 கலச திருமஞ்சனம் செய்விக்கப்பட்டது...

அந்த வைபவத்தின் சில திருக்காட்சிகள் இன்றைய பதிவில்..

FBல் அழகிய படங்களை வழங்கிய திரு ஸ்ரீநிவாஸன்
அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.. 
கருவிளை யொண்மலர்காள் காயாமலர் காள்திருமால்
உருவொளி காட்டுகின்றீர் எனக்குய்வழக் கொன்றுரையீர்
திருவிளை யடுதிந்தோள் திருமாலிருஞ் சோலைநம்பி
வரிவளை யில்புகுந்து வந்திபற்றும் வழக்குளதே.. (0589)
- : சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் :-
துங்க மலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற
செங்கட் கருமுகிலின் திருவுருப் போல்மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள் தொகுபூஞ்சுனை காள்சுனையில்
தங்குசெந் தாமரைகாள் எனக்கோர்சரண் சாற்றுமினே.. (0591)
- : சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் :-


காலை எழுந்திருந்து கரியகுருவிக் கணங்கள்
மாலின் வரவுசொல்லி மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ
சோலை மலைப்பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலி நிலைப்பெருமான் அவன்வார்த்தை உரைக்கின்றதே.. (0594)
- : சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் :-


சென்ற வாரம் வேங்கடேசப் பெருமாளைத் தரிசித்தோம்..

இந்த வாரத்தில் கள்ளழகர் எனும் சுந்தரராஜப் பெருமாளின் அழகு தரிசனம்..

புரட்டாசி மாதம் முழுதும் இயன்ற அளவுக்கு நாம் செய்யும் தான தர்மங்கள் ஏழேழு தலைமுறைகளைக் காக்கும் என்பது ஆன்றோர் வாக்கு...

நாம் செய்யும் தான தர்மங்கள் ஏழேழு தலைமுறைகளைக் காக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும் -

வாழும் நாளிலேயே -
நோய்நொடியின்றி நல்லபடியாக வாழ்வதை - நாம் உணரமுடியும்..

இன்றைய கால கட்டத்தில்
நோய்நொடியின்றி வாழ்வதே மிகப்பெரிய வரம்..

உண்ணும் போது ஒரு கைப்பிடி!.. - என்றார் திருமூலர்...

ஆற்றுவார் ஆற்றல்பசி ஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.. (0225)

பசியைப் பொறுத்துக் கொண்டு விரதங்களைக் 
கடைப்பிடிப்பதை விட
பசித்திருப்பவரின் பசியைத் தீர்த்தல் சிறந்தது
என்பது திருக்குறிப்பு..

வாய்ப்பும் வசதியும் இருப்பின்
அற்றார் அழிபசி தீர்த்தல் நல்லது..

வளமும் நலமும் நம்மைத் தேடி வரும்..

வாழ்க வளம் வளர்க நலம்!..
***

புதன், செப்டம்பர் 21, 2016

புது வீடு தேடி..

அன்புக்குரிய கில்லர்ஜி அவர்கள் சில தினங்களுக்கு முன்பாக
தமது தளத்தில் சிறுகதை ஒன்றினைப் பதிவிட்டிருந்தார்...

அதனை இந்த இணைப்பில் காணலாம்..

அந்த சிறுகதை வெகுவாக மனதைப் பாதித்தது...

அப்போதே சொல்லியிருந்தபடி, அதன் தொடர்ச்சி இதோ!..


தாத்தா.. தாத்தா.. எங்கேயும் போகாதீங்க.. இங்கே நிழலுக்கு வாங்க!.. இங்கேயே நில்லுங்க!..

யாரும்மா.. நீ!.. ஏன் எங்களை நிக்கச் சொல்றே?..

எங்க அப்பா தான் நிக்கச் சொன்னாங்க!..

என்னது அப்பாவா?.. யாரு பெத்த புள்ளையோ தெரியலையே!.. இம்புட்டுப் பிரியமா பேசுது.. யாரடி தங்கம் நீ?.. உம் பேரு என்னா?.. எந்த ஊரு நீ!..

எம் பேரு.. ரத்ன காமாட்சி...

என்னது?..

ரத்ன காமாட்சி!.. நானு.. எங்க அப்பா அம்மா.. எல்லாரும் கோயிலுக்குப் போய்ட்டு வர்றோம்.. இதோ எங்க அப்பாவே வந்துட்டாங்க!....

அம்மா.. காமாட்சியம்மா... வணக்கம்.. நல்லாயிருக்கீங்களா... ஐயா.. நீங்க எப்படியிருக்கீங்க?.. என்னது.. வெயில் நேரத்தில பஸ்டாண்டு மத்தியில தடுமாறிக்கிட்டு நிக்கிறீங்க?...

யாரப்பா.. நீ?.. நினைப்புல வரலையே!.. கோவிச்சுக்காதேப்பா!..

நாந்தாம்மா.. செந்தில்!.. செந்தில் குமார்.. உங்க வீட்டுல ரெண்டு வருஷம் இருந்தேனே.. ஞாபகம் வருதா!.. என் கல்யாணத்துக் கூட வந்தீங்களே!..

ஆ.. செந்திலா.. என் ராசா!.. எப்படிய்யா.. இருக்கே!.. பாவி மனசுல மறந்து போச்சேய்யா.. வயசாயிடிச்சு.. அதான்.. என்னங்க.. யாரு தெரியுதா?.. நம்ம செந்திலு!..

காதருகே - கையைக் குவித்து வைத்த சொல்லவும் - பெரியவர் ரத்தினத்தின் முகத்தில் மலர்ச்சி..

தட்டுத் தடுமாறி இந்தக் கையில இருந்த கழியை அந்தக் கைக்கு மாற்றிக் கொண்டு புருவத்தின் மேல் நிழல் கூட்டியபடி உற்றுப் பார்த்தார்..

காமாட்சியைப் பார்த்தார்.. கண்கள் கலங்கின..

அவருக்குப் புரிந்து விட்டது போலும்...

மெதுவாக கையை செந்தில் குமரனை நோக்கி நீட்டினார்...

பெரியவரின் கையைப் பற்றிக் கொண்டான் செந்தில்..வெயில் நேரத்தில இங்க என்ன பண்றீங்க?.. அவன் .. கூட வரலையா?..

பெயரைக் கேட்டதும் சுளுக் .. என்று காமாட்சியம்மாவிடம் இருந்து விம்மல் வெளிப்பட்டது...

பதறிப் போனான் - செந்தில்..

என்னம்மா.. என்ன நடந்தது?..

அதெல்லாம் எதுக்கு ராசா.. நீ எப்படி இருக்கே.. உன் பொஞ்சாதி எங்கே?.. இவ உம்மகளா?..

ஆமா.. பேரு ரத்ன காமாட்சி!..

கேட்டதுக்கு சொன்னாளே!.. ராசாத்தி!..

ஐயா பேரையும் உங்க பேரையும் சேர்த்து வெச்சிருக்கேன்...

அப்போது தான் விளங்கியது காமாட்சியம்மாளுக்கு!..

விழிக்கடையில் நீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன...

சரி.. வாங்க போவோம்... அதோ.. நிக்கிது நம்ம கார்!.. கார்ல.. தான் உங்க மருமக சுந்தரி இருக்கா!..

செந்திலு.. நாங்க ரெண்டு பேரும் வெளியூருக்குப் போறோம்!...

அம்மா.. உங்களுக்குத் தான் பொய் பேசத் தெரியாதே!.. அப்புறம் எதுக்கு வீண் பேச்சு?.. எனக்கு எல்லாம் தெரியும்!...

ஆருமில்லாமப் போனோம்!.. - காமாட்சியம்மாளின் கண்கள் கலங்கின..

இருந்தாலும் ..

ஏன்.. நான் இல்லையா!... உரிமையா அங்கே வந்து இருக்க வேண்டியது தானே.. உங்களை நான் காப்பாத்த மாட்டேனா?.. என்னைய எப்படி அந்நியமா நெனைக்கலாம்?...


உனக்கு எதுக்கு செந்திலு கஷ்டம்?..

கஷ்டமா?.. அன்னைக்கு ஆஸ்ரமத்தில இருந்து வெளியே வந்து மறுபடியும் அனாதையா நின்னப்போ சோறு போட்டு வளர்த்தீங்களே!.. அதுக்குப் பேரு என்ன?.. முழுசா ரெண்டு வருஷம் உங்க ஆதரவுல வாழ்ந்திருக்கேன்.. இன்னைக்கு நான் நல்ல இருக்கேன்..அப்படின்னா.. அதுக்கு நீங்க காரணம் இல்லையா!.. என்னையும் அவனையும் தனித்தனியாகவா வளர்த்தீங்க?...

ஆனாலும்.. பாவி.. மகன் .. இந்த மாதிரி சொல்லுவான்..னு நெனைக்கலையே!.. 

அவனை படிக்க வெச்ச பாவத்துக்கு இதுதான் தண்டனை.... அன்னைக்கே சுண்ணாம்புக் காளவாய்.. ல வேலைக்கு சேர்த்து விட்டுருக்கலாம்...

பாசம்.. நேசம்..ன்னு பார்த்ததுக்கு இப்படிப் பாதகஞ் செஞ்சிட்டானே!..

உஸ்..உஸ்.. - என்று ரத்தினம் தடுத்தார்.. ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று அர்த்தம்...

யாருப்பா.. தாத்தாவும் ஆத்தாவுமா!.. - ரத்ன காமாட்சி வினவினாள்...

ஆமாண்டா.. செல்லம்.. இனிமே நம்ம வீட்டுல.. தான் இருக்கப் போறாங்க!..

இது வரைக்கும் எங்கே இருந்தாங்க?..

இங்கே ஒரு சித்தப்பா வீடு.. அங்கே இருந்தாங்க!..

அப்படிச் சொல்லாதே.. உன் வாயால இன்னொருக்க அவனை தம்பி..ன்னு சொல்லாதே...

இருக்கட்டும்... இந்நேரம் கோப தாபம் தீர்ந்திருக்கும்..ன்னா அவன் வீட்டுக்கே போவோம்.. நான் கொண்டு போய் விடுறேன்... கண்டிச்சு வைக்கிறேன்...

இல்ல செந்திலு... உங்க ஐயாவே மனசு வெறுத்துட்டாரு... அப்பன் ஆத்தாளையே பாரமா நெனைக்கிற காலமா போச்சு.. எங்காவது சத்திரம் சாவடி..ன்னு பார்த்து எங்கள அங்கே கொண்டு போய் சேர்த்து விடு..  ஒனக்குப் புண்ணியமாப் போகும்!..

மறுபடியும் அந்த பேச்சு எதுக்கு..ங்கறேன்... இதோட உங்க கஷ்டம் எல்லாம் தீர்ந்தது.. ன்னு நெனைச்சுக்குங்க... உங்க ஆயுசுக்கும் நான் காப்பாத்தறேன்..  சரி.. முதல்ல.. வயித்துக்கு ஏதாவது சாப்பிட்டுட்டு.. கிளம்புவோம்..

செந்திலும் ரத்ன காமாட்சியும் ஆளுக்கு ஒரு பக்கமாக கையைப் பிடித்துக் கொள்ள - அருகிருந்த உணவகத்தை நோக்கி நடந்தார்கள்..

***

எங்கிட்டு வெச்சிடா.. பேசிக்கிட்டு இருந்தாங்க?..

இங்ஙன.. தாண்டா!.. அந்த ஆளு நல்லா டிப் டாப்பா இருந்தான்!..

வா.. அந்த பழக்கடையில கேப்போம்... அண்ணாச்சி... இங்கால எங்க ஐயாவும் ஆத்தாவும் ஒரு ஆளுகூட பேசிக்கிட்டு இருந்தாங்களாமே.. நீங்க கண்டிங்களா?...

உங்க அப்பனும் ஆத்தாளுமா.. அப்படின்னு தெரியாது!.. ஆனா அவங்க ஒரு இன்னோவா... ல ஏறிப் போயி அரை மணிக் கூறாவுதே!..

எந்தப் பக்கம் போனாங்கன்னு... கோவிச்சுக்கிடாதீங்க.. வண்டி நம்பரு என்ன..னு பார்த்தீங்களா?..

இல்லையே.. தம்பீ!..

சரிங்க.. அண்ணாச்சி.. நாங்க.. வாறோம்!..

கார்ல கூட்டிட்டுப் போற அளவுக்கு யாராயிருக்கும்?.. ஒருவேளை கிட்னி திருடங்களா இருப்பானுங்களோ?.. டேய்.. போலீஸ்.. ல சொல்லுவோமாடா?...

வேண்டாம்... இருக்குற பிரச்னையே போதும்!.. என்ன.. வீட்டு வேலைக்கு ஒரு நல்ல ஆளாப் பார்க்கணும்!..

என்னடா.. இப்படி சொல்றே?.. பெத்தவங்க இல்லையா?.. இப்படியே விட்டுடுறதா?..

வா.. போகலாம்!.. எங்கேயாவது பிழைச்சிருந்தா நல்லா இருக்கட்டும்!.. நிம்மதியா இருக்கட்டும்!..

கண்களைத் துடைத்துக் கொண்டான்..

கடும் வெயில் மாறி - சட்டென.. மழை இறங்கியதில் புழுதி வாசம் கிளம்பியது..

***

மழையினூடாக விரைந்து கொண்டிருந்தது கார்..

பையினுள்ளிருந்து ஒரு சால்வையை எடுத்துக் கொடுத்தாள் சுந்தரி...

ஆதரவாக அதைப் போர்த்திக் கொண்டார் ரத்தினம்..

அப்போ.. இது வரைக்கும் அவனுக்கு உண்மை தெரியாது!.. இல்லையா?..

ஆமாம்!.. அவனுக்குத் தெரியாது!.. 

காமாட்சியம்மாளின் மடியில் செந்திலின் மகள் தூங்கிக் கொண்டிருந்தாள்..


என்னங்க.. தெரியாது!.. என்ன.. அது?.. - சுந்தரி ஆவலுடன் செந்திலைக் கேட்டாள்..

சாலையிலிருந்து கண்களை அகற்றாமலேயே - செந்தில் சொன்னான்..

அவன்.. இவங்களோட பிள்ளை இல்லை..ங்கறது!..

மழைத்துளிகள் - கண்ணாடியின் மீது விழுந்து -
அங்குமிங்குமாகத் தெறித்துக் கொண்டிருந்தன..

*** 

திங்கள், செப்டம்பர் 19, 2016

ஏறு எனும் பேறு

ஏறு எனும் சொல் மிகவும் பொருள் பொதிந்தது..

கால்நடைகளைப் பொதுவாக மாடுகள் என்று குறித்தாலும் -

மாடு எனும் சொல் - செல்வத்தைக் குறிப்பதாகவே அமைகின்றது..

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்றயவை.. (0400)

- என்ற திருக்குறள் ஒன்றே இதற்குச் சான்றளிக்கும்..

வீரமிகு காளையை - ஏறு எனக் குறித்தது பழந்தமிழ்...

வீரமிகும் காளையை அடக்குதல் ஏறு தழுவுதல் எனப்பட்டது..

ஏறு தழுவி வெற்றி கொண்ட - காளை (இளைஞன்) தான் விரும்பிய பெண்ணை மணமுடிப்பது மரபாக இருந்ததற்கு பல சான்றுகள் உள்ளன..

திடகாத்திரமான இளைஞனைக் கூட - காளை என்பதே வழக்கம்...

பாரம்பர்ய ஏறு தழுவுதலுடன் தொடர்புடையவை - புலிக்குளம் காளைகள் எனப்படுகின்றன..


இயற்கை நமக்களித்த செல்வங்களுள் மிகச் சிறந்தவை - காளையும் பசுக்களும்!..

அத்தகைய காளையும் பசுவும் சைவத் திருமுறைகளில் பலநூறு இடங்களில் புகழ்ந்து பேசப்படுகின்றன..

எனை ஆளுடைக் காளை!.. - என்றே, சிவபெருமானை - திருப்பூவனூர் திருப்பதிகத்தில் குறிக்கின்றார் திருநாவுக்கரசர்..

மேலும்,

இறைவன் நீ.. ஏறூர்ந்த செல்வன் நீயே!.. - என்று வணங்குகின்றார்..

நப்பின்னையை மணம் முடிக்கும் காலத்தில்
மாயக் காளைகள் ஏழினை ஸ்ரீ கண்ணபிரான் அடக்கிய வரலாற்றினை -

ஏறுடன் ஏழு அடர்த்தான்!.. - என்றும் திருக்குறுக்கைத் திருப்பதிகத்தில் என்றும் குறித்தருள்கின்றார் திருநாவுக்கரசர்....

இதனையே பெரியாழ்வார் -

நப்பின்னை தன்திறமா நல்விடை 
ஏழளவிய நல்லதிறலுடை நாதன்!.. (0070)

- என்று புகழ்ந்துரைக்கின்றார்..

திருஞான சம்பந்தப் பெருமான் - முதல் திருப்பதிகத்தின் முதல் வரியிலேயே

தோடுடைய செவியன் விடையேறி!..
- என்று ஈசன் எழுந்தருளும் திருக்கோலத்தைக் குறித்துப் பாடுகின்றார்..

மழலை வெள்ளேறு - என்றும் இளமையான காளை!.. - என்று குறிப்பவர் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்..

இவ்வாறு காளையையும் இறைவனையும் புகழ்ந்து சைவ சமயத் திருமுறைகளில் எங்கெங்கும் காணக் கிடைக்கின்றது..

இவை மட்டுமின்றி இன்னும் எத்தனை எத்தனையோ சிறப்புகள்..

இத்தகைய காளைகளை மீட்டெடுக்கும் வகையில் -

ஜல்லிக்கட்டு மற்றும் பாரம்பர்யம் மீட்புக் குழுவின் சார்பாக நேற்று (18/9) காலை முதல் மாலை வரை ஈரோடு AET பள்ளி வளாகத்தில் காங்கேயம் கால்நடைக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது..

இந்தக் கண்காட்சியினை நடத்தியவர்கள் -
சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தினர்..

சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தினர்
FBல் வழங்கிய படங்கள் இன்றைய பதிவில்..

தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக நடத்தப்படுகின்ற இந்த கண்காட்சியில் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய வட்டாரங்களின் கால்நடைகளுடன் அதன் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்..

தமிழகத்தின் பாரம்பர்யமான காங்கேயம், பர்கூர், உம்பளச்சேரி, ஆலம்பாடி இனங்களும் மற்றும் மலைமாடுகளும் பாதுகாக்கப்படவேண்டும்..

பாரம்பர்ய மாடுகளை வளர்க்க அரசு ஊக்கம் அளிக்க வேண்டும்..

என்று - கண்காட்சியில் நடந்த விழாவில் சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் திரு கார்த்திகேயா சிவசேனாபதி அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்..
வளரும் தலைமுறை
பெருந்திரளான விவசாயப்பெருமக்கள் கலந்து கொண்ட இந்த கண்காட்சியின்  பயனாக பாரம்பர்ய காளைகள் மீட்டெடுக்கப்படவேண்டும்..

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.. (1033)

உணவின் முன்னது உழவு..
உழவு இல்லையேல் உணவு இல்லை..
அந்த உழவின் முன் நடப்பவை காளைகள்..
அவற்றைப் பாதுகாப்பது நமது கடமை!..

பாரம்பர்யம் காப்போம்.. பண்பாடு காப்போம்..
பசுக்களையும் காளைகளையும் பாதுகாப்போம்!..

வாழ்க நலம்!..  
***