நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூன் 16, 2018

ஸ்ரீவைகுண்ட தரிசனம்

அம்பாசமுத்திரத்தில் -
ஸ்ரீ அகத்தீஸ்வரர் தரிசனத்துக்குப் பின்
வந்து சேர்ந்த திருத்தலம் - ஸ்ரீ வைகுண்டம்....

நெல்லையிலிருந்து திருச்செந்தூர் வழியில்
30 கி.மீ., தொலைவில் உள்ள திருத்தலம் - ஸ்ரீ வைகுண்டம்....

திருச்செந்தூர் செந்தில்நாதனின் திருவருளால்
பேச்சு வரப்பெற்ற புண்ணியராகிய
ஸ்ரீ குமரகுருபரர் திருத்தோற்றமுற்ற திருநகர் - ஸ்ரீ வைகுண்டம்...

இவ்வூரில் தான்
நவ கயிலாயத் திருத்தலங்களுள் முதலாவதான
ஸ்ரீ கயிலாயநாதர் திருக்கோயிலும்

நவ திருப்பதிகளுள் முதலாவதான
ஸ்ரீ வைகுண்டநாதன் திருக்கோயிலும் சிறப்புடன் திகழ்கின்றன...

இவ்விரண்டு திருக்கோயில்களும்
தென்பாண்டி நாட்டின் நவக்ரஹ தலங்களின் வரிசையில்
பித்ரு தோஷம் நீக்கும் சூரியனுக்குரிய தலங்களாக விளங்குகின்றன...

அம்பாசமுத்திரத்திலிருந்து புறப்படும்போதே மாலை மயங்கி விட்டது..

அங்கிருந்து அவசர அவசரமாக 
திருநெல்வேலி ஜங்ஷனுக்கு வந்து 
திருச்செந்தூர் பாசஞ்சரில் பயணித்து -
ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்தபோது முன்னிரவு 7.30..

அங்கிருந்து 3 கி.மீ தொலைவில் ஸ்ரீ கள்ளர்பிரான் திருக்கோயில்..
ஆட்டோ ஒன்றில் பயணித்து திருக்கோயிலை அடைந்தோம்...

ஸ்ரீவைகுண்டம்


மூலவர் - ஸ்ரீவைகுந்தநாதன்
தாயார் - ஸ்ரீவைகுந்தவல்லி
உற்சவர் - ஸ்ரீகள்ளர்பிரான்
ஸ்ரீதேவி, பூதேவி
மூலஸ்தானம் - சந்திர விமானம்
தீர்த்தம் - தாமிரபரணி, கலச தீர்த்தம்
தலவிருட்சம் - பவளமல்லி

இத்திருத்தலத்தை
நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்..


ஒன்பது நிலைகளைக் கொண்ட நெடிதுயர்ந்த ராஜகோபுரம்...
அளவில் பெரியதான திருக்கோயில்...

ஐப்பசி மாத பௌர்ணமியன்று காலையில் 
சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதங்களில் படிகின்றன...


திருமூலஸ்தானமாகிய சந்திர விமானத்தின் கீழ் 
ஆதிசேஷன் குடை பிடிக்க மார்பில் ஸ்ரீமஹாலக்ஷ்மி திகழ - 
நான்கு திருக்கரங்களுடன் கிழக்கு முகமாக நின்ற திருக்கோலம். 

வாழ்வதற்கு வேறு வழியின்றி களவு செய்தவன் காலதூஷகன்.  
இவன் தன் பிழைக்கு வருந்தியவனாக - அற்றார்க்கும் அலந்தார்க்கும் - 
தான் திருடிய பொருள்களைப் பகிர்ந்து அளித்ததோடு 
இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமானுக்கும் ஒரு பங்கு அளித்தான். 

களவு கை கொடுத்தது - அவனுக்கு...
யாரிடமும் பிடிபடாத தைரியத்தில் - ஒருநாள் 
தன் கூட்டத்தாருடன் அரண்மனைக்குள் நுழைந்தான். 

அங்கே விரிக்கப்பட்டிருந்த வலையில் 
உடன் சென்றோர் சிக்கிக் கொள்ள இவன் மட்டும் தப்பிப் பிழைத்தான். 

சிக்கிக் கொண்ட கள்வர்களை நல்லபடியாகக் கவனித்தனர் - காவலர்கள். 

அதன் விளைவு!.. 

காலதூஷகனின் இருப்பிடம் தேடி விரைந்தனர் - வீரர்கள். 
பீதியடைந்த காலதூஷகன் பெருமாளை வணங்கி விட்டு 
சரணடைய முனைந்தான். 

அவனிடமிருந்து தானும் ஒரு பங்கினைப் பெற்றதால் - 
ஸ்ரீவைகுந்தநாதன் - தானே காலதூஷகன் போல உருமாறி 
அரண்மனைக்குச் சென்றான். 

அரசன் குடிமக்களைப் பரிபாலிக்கத் தவறிய பிழைதனை எடுத்துரைத்தான். 

அரசவையில் தைரியமாக வாதாடிய கள்வனின் பேரெழிலில் மனம் தடுமாறினான் அரசன்.   

அரசனின் மயக்கத்தைப் போக்கி தன்னுரு காட்டியருளினான் - தயாபரன்.
அரசனும் கள்வனும் மற்றோரும் பெருமானைப் பணிந்து நின்றனர். 

பெருமாள் தனக்காக - 
வாதாடிய வாஞ்சையைக் கண்டு மனம் திருந்திய கள்வன் - 
அரச தண்டனையை ஏற்க முனைந்தான்.

அரசன் அவனை மன்னித்து விடுவித்தான். 

அரசன் மீண்டும் நல்லாட்சி தர முனைந்தான்..
கள்வனும் மனம் திருந்தி நல்வழியில் நடந்தான்..

இருவருமே பெருமாளின் திருவடிகளில் நற்கதியடைந்தனர்.

கள்வனுக்காக வந்ததனால் பெருமாளுக்கு - 
கள்ளர்பிரான் எனத் திருப்பெயர்.


ஆங்காங்கே விளக்கு வசதிகள் இருந்தாலும்
இரவு நேரத்தில் முழுமையாக விளங்கிக் கொள்ள முடியவில்லை..

திருச்சுற்றில் 
ஸ்ரீ வைகுந்தநாயகியின் சந்நிதியும்
ஸ்ரீ சோரநாயகி சந்நிதியும்
தனித்தனியாக விளங்குகின்றன...


மனம் நிறைவான தரிசனம்...
ஆனாலும் மீண்டும் மீண்டும் தரிசிக்க மனம் விரும்புகின்றது...

தீர்த்தமும் திருத்துழாயும் 
சித்ரான்னமும் வழங்கினான் - கள்ளர்பிரான்...
கலையழகு மிக்க எழிலார் சிற்பங்களுடன்
நிறைந்து விளங்குகின்றது திருக்கோயில்....

இத்தகைய திருக்கோயில் வெள்ளையர்களின்
ஆக்ரமிப்பில் சிலகாலம் சிக்கியிருந்திருக்கின்றது..

இத்திருக்கோயிலை முழுமையாகத் தரிசிக்க
ஒரு நாள் போதாது என்பது உண்மை...

இன்றைய பதிவில் -
திருவேங்கடத்தான் மண்டபத்தில் எடுக்கப்பட்ட
ஒருசில படங்கள் - இதோ தங்களுக்காக!...








புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று
தெளிந்தஎன் சிந்தையகங் கழியாதே என்னைஆள்வாய் எனக்கருளி
நளிர்ந்தசீருலக மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பளிங்குநீர் முகிலின்பவளம் போல்கனிவாய் சிவப்ப நீகாணவாராயே!..
(3795)
-: நம்மாழ்வார் :-

கள்ளர்பிரான் திருவடிகள் போற்றி...
ஓம் ஹரி ஓம்.. 
***

புதன், மே 23, 2018

பாபநாச தரிசனம் 2

அருள்தரும் சொரிமுத்து ஐயனார் தரிசனத்துக்கு முன்பாக
பாபநாசத்தில் எடுக்கப்பட்ட மேலும் சில படங்கள்
இன்றைய பதிவில்!...

நெல்லை மாவட்டத்தில் சிறப்பாகக்
குறிப்பிடப்படும் நவ கயிலாயத் திருத்தலங்களுள்
முதன்மையானது - ஸ்ரீ பாபநாச நாதர் திருக்கோயில்...


நவ கயிலாயம் எனப்படும் திருத்தலங்கள்
நவக்கிரக தலங்களாகவும் இன்றைய நாட்களில் குறிக்கப்படுகின்றன...

கயிலாயத்துக்கு இணையான திருத்தலங்களை
நவக்கிரகங்களுக்கு உரிய தலங்கள் என்று சொல்வது எப்படி!?...

புரியவில்லை!...

நவக்கிரக தோஷ பரிகாரத் தலங்கள்
என்று சொல்லப்படும் அளவில்
பாபநாசம் -  முதலாவதாகின்றது..

திருக்கோயிலுக்குப் பின்னால் உள்ள ஐயனார் சந்நிதி
இங்கு தாமிரபரணியில் நீராடி ஈசனை வழிபடுவதனால்
பித்ரு தோஷம் நீங்குகின்றது என்பது சிறப்பு...

எனவே இங்கு தோஷ பரிகார வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன..
அமாவாசை நாட்களில் பெருந்திரளாக மக்கள் வந்து வழிபடுகின்றனர்...


எனினும் திருக்கோயில் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றது.
திருக்கோயிலில் மழைநீர் சேகரிப்பது பாராட்டுக்குரியது..



தாமிரபரணியின் படித்துறையும் சுற்றுப் புறங்களும்
சொல்லும் நிலையில் இல்லை...

ஈரத்துணிகளைக் கழற்றிப் படித்துறையில் போட்டுவிட்டுக் கரையேறுவதையே மக்கள் இலட்சியமாக் கொண்டிருக்கின்றனர்...

அங்கே வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளில்
பழந்துணிகளைப் போடுவார் மிகக் குறைவே...

படித்துறைகளில் எண்ணெய் மற்றும் ஷாம்பு தேய்த்துக் கொண்டு
அந்தக் கழிவுப் பைகளை அங்கேயே விட்டுவிட்டுச் செல்கின்றனர்..

அவை எல்லாம் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தானவை
என்பதை உணர்ந்து கொள்வதேயில்லை..

தாமிரபரணியின் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும்
பாறைச் சிற்பங்களின் மீது சோப்பு ஷாம்பு முதலியவற்றின்
இரசாயனங்கள் படிந்திருப்பதைக் காண்பதற்கு வருத்தமாக இருந்தது...




அதேபோல
இந்த மக்கள் செய்யும் தவறுகளுக்குள் மிகப் பெரிய தவறு
பாலிதீன் பைகளில் உணவுப் வகைகளைக் கொண்டு வந்து
தின்று விட்டு மிச்சம் மீதியை அப்படியே குரங்குகளிடத்தில் எறிவது...


உடை மாற்றும் அறைகள்
மேலே காணும் படத்திலுள்ள அறைகள் -
தாமிரபரணியில் குளித்து விட்டுக் கரையேறும் பெண்கள்
உடை மாற்றுவதற்கானவை..

ஆனால், இந்த அறைகளைப் பயன்படுத்துவதற்குக் காசு வசூலிக்கிறார்கள்...

என்ன நியாயம் என்று தெரியவில்லை...

அதானே.. எனக்கும் ஒன்னும் புரியலையே!..
நல்லவேளை.. நாம கொரங்காவே இருந்துட்டோம்!..
பாலிதீன் பையைக் கைப்பற்றிய குரங்கு
அதில் ஏதோ அமிர்தம் இருப்பதைப் போல
அதை எடுத்துக் கொண்டு ஓடுவதும்
மற்ற குரங்குகள் அதைத் துரத்துவதும் -
அந்தப் பாலிதீன் பையை தாறுமாறாகத்
தலையில் மாட்டிக் கொண்டு தடுமாறுவதும் - கொடுமை....

அந்தக் காட்டுக் குரங்குகளின் அல்லலைப் பார்த்து
இந்த நாட்டுக் குரங்குகள் சிரித்து மகிழ்வது அதைவிடக் கொடுமை...

இயற்கையையும் மற்ற விலங்குகளையும்
வாழவிட வேண்டும் என்பதில் கொஞ்சங்கூட
ஆர்வமேயில்லை....

எல்லாரும் நல்லாருக்கணும்.. பெருமானே!..
பாபநாசம் கோயிலிலிருந்து மலைக்கு மேலே
மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது அகத்தியர் அருவி...

அருவிக்கு முன்னால் முருகன் கோயிலும் அதனுடன் இணைந்ததாக
அகத்தியர் சந்நிதியும் விளங்குகின்றன...

நேரமின்மையால் அகத்தியர் அருவிக்குச் செல்லவில்லை..

முருகன் கோயிலுக்கு அருகில் எடுக்கப்பட்ட படங்கள்
இதன் கீழுள்ளவை...



பாலிதீன் பையுடன் அப்பாவி வானரம்


இன்றைய பதிவிலுள்ள -
தாமிரபரணி பாறைச் சிற்பங்கள், பாபநாசம் கோயில் மற்றும்
சிங்கவால் குரங்களின் படங்கள் தங்களைக் கவர்ந்திருக்கும் -
என, நம்புகின்றேன்...

அடுத்த பதிவில் -
ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் திருக்கோயில் தரிசனம்..

வாழ்க வளமுடன்..
ஃஃஃ 

திங்கள், மே 21, 2018

பாபநாச தரிசனம் 1

ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது
தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல்
திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுகின்றது...

உலகின் சமநிலை கெடுகின்றது.. அச்சமயத்தில் -

எல்லம் வல்ல எம்பெருமான் - கும்பம் ஒன்றிலிருந்து
முனிவர் ஒருவரைத் தோற்றுவிக்கின்றார்...


அவர் தான் கும்பமுனி என்று புகழப்படும் அகத்தியர் பெருமான்..

அகத்தியனே... உடனடியாகத் தென்பகுதிக்குச் சென்று வையகத்தைச் சமப்படுத்துவாயாக!..

இறைவனிடமிருந்து கட்டளை ...

இதனால் முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்த 
அவர்களுக்கு அகத்திய மாமுனிவர் ஒருவர் சமம் என்றாகின்றது... 

ஆனால், அகத்தியரோ மிகவும் வருந்துகின்றார்...

எல்லா ஜீவராசிகளும் தங்களது திருமண வைபவத்தைக் காண இங்கே காத்துக் கிடக்கும் போது நான் ஒருவன் மட்டும் அந்த பாக்கியத்தை இழந்தேனே... ஏன் ஸ்வாமி!?.. - என்று பரிதவிக்கின்றார்...

அம்மையும் அப்பனும் புன்னகைக்கின்றனர்...

அகத்தியனே.. அகிலம் முழுதும் எம்மைத் தேடி வருகின்றது..
ஆனால், நாங்கள் உன்னைத் தேடி வருவோம்.. அஞ்சற்க!..

- என்று, அகத்திய முனிவரை ஆற்றுப்படுத்துகின்றனர்...

அதன்படி அமைதியடைந்த அகத்தியரும்,

உலகம் சமநிலை பெறவேண்டும்..
உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்!..

என்று வேண்டிக்கொண்டு - தென்பகுதிக்கு வருகின்றார்...

தமிழ் கூறும் நல்லுலகின் பொதிகை மலைக்கு வந்தபோதே
வடகோடு தனது பழைய நிலையை அடைகின்றது...

இறைவனின் திருக்கல்யாணமும் இனிதே நிறைவேறுகின்றது...

அவ்வண்ணமாக - தாமிரபரணி நதிக்கரையில்
அம்மையப்பனின் திருக்கல்யாண தரிசனத்தை எண்ணிவாறு
தவத்தில் அமர்ந்து விடுகின்றார் - அகத்தியர்...

இறைவனும் தானளித்த வாக்கின்படி
அகத்திய முனிவரைத் தேடிவந்து
திருக்கல்யாண தரிசனத்தை நல்குகின்றார்...

மேலும்,
எங்கெல்லாம் அம்மையப்பனை அகத்தியர் நினைக்கின்றாரோ
அங்கெல்லாம் அவருக்கு திருமணத் திருக்காட்சி அளிப்பதாக
கூடுதல் வரத்தையும் வழங்குகின்றார்....

இப்படியாக நம்பொருட்டு அகத்தியர் திருக்கல்யாண தரிசனம் பெற்ற
திருத்தலங்களுள் தலையாயது - பாபநாசம்...

தாமிரபரணிக் கரையில் சூரிய உதயம்
நெல்லை மாவட்டத்திலுள்ள
நவ கயிலாய திருத்தலங்களுள் முதன்மையானது...

பொதிகையிலிருந்து பொங்கிப் பெருகி வரும் தாமிரபரணி
இங்கு தான் சமநிலையை அடைகின்றாளாம்...


மதுரையிலிருந்து இரவு 11.15 மணியளவில் புறப்பட்ட புனலூர் பாசஞ்சர்
பின்னிரவு மூன்று மணியளவில் திருநெல்வேலியை அடைந்தது....

ஜங்ஷனை விட்டு வெளியே வந்ததும் ஆளுக்கொரு காஃபி...

வழியில் ஸ்ரீ கொடிமாடஸ்வாமியை வணங்கி விட்டு
புதிய பேருந்து நிலையத்தை அடைந்தோம்...

விடியற்காலையில் அங்கிருந்து பாபநாசம் செல்லும் பேருந்தில் பயணித்து
6.30 மணியளவில் பாபநாசம் திருக்கோயிலை அடைந்தோம்...



காணும் இடம் எங்கும் மக்களை விட
அதிக எண்ணிக்கையில் சிங்கவால் குரங்குகள்...

அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு -
பெரியவர்களையும் குழந்தைகளையும் பரவசப்படுத்தின..

எண்ணிக்கையில் அதிகமிருந்தும் மக்களுக்கு
எவ்வித தொந்தரவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....

சாலையின் தென்புறமாக திருக்கோயில்...

திருக்கோயிலுக்கு எதிரில் நூறடி சரிவில்
தமிழகத்தின் ஜீவநதியாகிய தாமிரபரணி...

தண்ணீர் அதிகமில்லை எனினும் இழுவை அதிகம்...
கலங்கலாகத்தான் ஓடிக்கொண்டிருந்தாள் தாமிரபரணி...

கடைசிப் படியில் இருந்தவாறே தீர்த்தத்தைத்
தொட்டு வணங்கி ஒருவாய் பருகி வினை நீங்கப் பெற்றோம்..

பாறைகளின் ஊடாக மெல்ல நடந்து சென்று
ஆட்கள் குளிக்கும் பள்ளத்தில் இறங்கி தீர்த்தமாடினோம்...

ஆறேழு ஆண்டுகளுக்கு முன் சென்றபோது
தண்ணீர் அதிகமாக ஓடிக் கொண்டிருந்தது..


அப்போது நீரினுள் மூழ்கி - பார்வைக்குத் தென்படாதிருந்த 
பாறைச் சிற்பங்கள் - இப்போது மிகத் தெளிவாக...



ஈரத்துடன் கரையேறி கைத்தொலைபேசியை
எடுத்துக் கொண்டு வந்து அத்தனையையும் கவர்ந்தாயிற்று...

என்னை யாரும் விளையாட்டுக்கு சேத்துக்க மாட்டீங்களா!..
முக்கியமாகச் சொல்லவேண்டுமென்றால்
நமது ஜனங்கள் சற்றும் பொறுப்பின்றி இருப்பது...

ஆங்காங்கே எண்ணெய் தேய்த்துக் கொண்டு
பாறைகளை ஆபத்துக்குள்ளாக்குவது...

பழைய துணிகளை அங்கேயே கழற்றிப் போடுவது...
அலட்சியத்துடன் புழங்கி பிறத்தியாரை இன்னலுக்குள்ளாக்குவது..

இவர்கள் திருந்துவதற்கு இன்னும் எத்தனை காலமோ!?..

இறைவனை நினைந்த வண்ணமாக நீராடி முடித்து
உடை மாற்றிக் கொண்டு திருக்கோயில் தரிசனம்...

திருத்தலம் - பாபநாசம்


இறைவன் - ஸ்ரீ பாபவிநாசநாதர்..
அம்பிகை - உலகநாயகி

தீர்த்தம் - தாமிரபரணி
தல விருட்சம் - முக்கிளா

ராஜகோபுரம் கடந்து நந்தி மண்டபம்... திருக்கொடி மரம்..
சித்திரை விசுவுக்காக கொடியேற்றம் ஆகியிருந்தது...


திருமூலத்தானத்துள் - ஸ்ரீ பாபவிநாச நாதர்..

எத்தனை எத்தனையோ ஜன்மங்களில் செய்த
பழிகளும் பாவங்களும் தொலைந்ததாக உணர்வு...

அதற்கு மேல் என்ன சொல்வது!..

ஈசனை வணங்கி திருநீறு பெற்றுக் கொண்டோம்...

இத்தலம் திருக்கல்யாண க்ஷேத்திரம் ஆகையால்
ஐயனின் சந்நிதிக்கு வடபுறமாக கிழக்கு நோக்கியவாறு
அன்னை உலகநாயகியின் சந்நிதி...

ஒருசேர வலம் வந்து அம்பிகையின் சந்நிதிக்கு
எதிரில் உள்ள கல்லுரலில் வாங்கிச் சென்றிருந்த
மஞ்சளை இட்டு இடித்து காணிக்கை செலுத்தினோம்...

உள்திருச்சுற்றில்
அம்மையும் அப்பனும் ரிஷபவாகனராக அகத்தியருக்கு
கல்யாண தரிசனம் நல்கும் திருக்காட்சி..

குள்ள பூதம் ஒன்று வெண்கொற்றக்குடையுடன் சேவை செய்கின்றது..
பெருஞ்சிற்பமாக கண்நிறைந்து விளங்குகின்றது...

வெளித் திருச்சுற்றில் கோயில் மரமான முக்கிளா..
வேதங்கள் இங்கே ஈசனை வணங்கியதாக ஐதீகம்..



மரத்தின் வேர்பகுதியில் ஈசனுடன் அகத்தியரும் அருள்பாலிக்கின்றார்..
மரத்திற்குக் கீழே - நிலவறையில் மற்றொரு லிங்கமும் இருக்கின்றதாம்..

திருக்கோயில் மிகப் பழைமையானது என்றாலும்
இத்தலத்திற்கான தேவாரத் திருப்பதிகம் கிடைக்கவில்லை..

ஆயினும்,
அப்பர் பெருமான் தமது க்ஷேத்திரக்கோவையில் (6/70)
மஞ்சார் பொதியின் மலை - என்றும்
பாவநாசத் திருப்பதிகத்தில் (4/15)
பொதியின் மேய புராணன் - என்றும்,
தமது திருவாக்கினால் குறித்தருள்கின்றார்..

கோயிலுக்குள் படம் எடுக்க அனுமதியில்லை..
இருப்பினும் வெளித் திருச்சுற்றில் சில படங்கள்...

கொடி மரத்தடியில் விழுந்து வணங்கி
விடை பெற்றுக் கொண்டோம்...


மதிலின் மேலிருந்த பூதம் கவனத்தை ஈர்த்தது...

எல்லாரும் நல்லபடியாக சிவதரிசனம் செய்து விட்டு
நலமுடன் வீட்டுக்கு சென்று சேரவேண்டும்!.. - என்பது போல பாவனை...

திருக்கோயில் தரிசனம் நல்லபடியாக முடிந்ததும்
அங்கே அருகிலேயே காலை உணவு....

அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டோம் -
அருள்மிகு சொரிமுத்து ஐயனார் திருக்கோயிலை நோக்கி!...


வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயகன் ஆதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.. (5/100)

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

வெள்ளி, மே 18, 2018

மீனாட்சி தரிசனம்

அந்த மாலைப் பொழுதில் மதுரை ஜங்ஷனில் இருந்து -
ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயிலைச் சென்றடைவதற்குள்
வீதியெங்கும் விளக்கேற்றி விட்டார்கள்...


தெற்கு வாசல் வழியாகத்தான் அனைவருக்கும் அனுமதி...

சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தின் எதிரொலியாக கெடுபிடிகள் ..
வழக்கத்தை விட பாதுகாப்பு நடைமுறைகள் அதிகமாக இருந்தன...

கையிலிருக்கும் செல்போன் ஒன்றுக்கு பத்து ரூபாய் பாதுகாப்புக் கட்டணம் வசூலிக்கப்பட்டது...

எங்களிடம் இருந்த மூன்றையும் கொடுத்தோம் ..
ஒரே பையில் போட்டுக் கட்டி ரசீது கொடுத்தார்கள்...

இரண்டு பைகளை பாதுகாத்துத் தருவதற்கு கட்டணம் என்றால்
செருப்புகளை வைத்திருந்து கொடுப்பதற்கும் காசு கேட்டார்கள்...

அதற்குள் - பக்கத்தில் கூச்சல்...

வடநாட்டவர் சிலருக்கும் -
பொருள்களைத் திரும்பக் கொடுப்பவர் ஒருவருக்கும் பிரச்னை...

நான் கொடுத்த தொப்பியைத் திருப்பிக் கொடுக்கவில்லை!.. - என்று
அந்த இளம் பெண் ஹிந்தியில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள்...

அவர்களின் மொழி இவர்களுக்குப் புரியவில்லை...

தலையில் கை வைத்து தொப்பி.. தொப்பி.. - என்றாள் அந்தப் பெண்..

இவர்களோ -
தொப்பியை உங்கள் ஆட்கள் வாங்கிச் சென்று விட்டனர்!..
- என்று சாதித்தனர் - தமிழில்!...

அருகிருந்த பெண் காவலர்கள் -
யார் வீட்டு விருந்தோ.. - என்று கண்டு கொள்ளவே இல்லை...

தொப்பியைப் பறி கொடுத்த அந்தச் சின்னப் பெண் மிகவும் கலங்கியிருந்தார்...

எனக்குத் தெரிந்த ஹிந்தியில் அந்தப் பெண்ணுக்கு சமாதானம் கூறினேன்...
அருகிருந்த பெரியவர் ஒருவர் அவர்கள் பக்கத்து நியாயத்தைக் கூறினார்...

நான் அவர்களிடம் ஹிந்தியில் உரையாடுவதைக் கண்டதும் -
பொருள்களைத் திரும்பக் கொடுக்கும் பணியிலிருந்த பெண்

இந்த மாதிரி சொல்லுங்கள்.. - என்று
வேறொரு மாதிரியாக சொல்லச் சொன்னார்..

அது எனக்கு நியாயமாகப்படவில்லை...

நீங்கள் ஒருமுறை உள்ளே தேடிப் பாருங்களேன்.. - என்றேன்...

அதை அவர்கள் யாரும் பொருட்படுத்தவில்லை...

அதற்குள் தொப்பியைப் பறி கொடுத்தவர்கள் அவர்களாகவே அகன்று போனார்கள்..

அடுத்து பாதுகாப்பு வளையத்துக்குள் நுழைந்தோம்...

என்னைச் சோதனையிட்ட காவலர்
சட்டைப் பையிலிருந்த மூக்குக் கண்ணாடியைக்
காட்டவில்லை என்று கோபித்துக் கொண்டார்...

பெண்கள் பகுதியில் என் மனைவி வைத்திருந்த
கைப் பை சோதனையிடப்பட்டது...

அதனுள்ளிருந்த கற்பூரம், திரிநூல், தீப்பெட்டி, முகம் பார்ப்பதற்கான சிறிய கண்ணாடி - இவற்றை எல்லாம் அனுமதிக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள்...

பொருள் பாதுகாப்பு கூடத்துக்குச் செல்வதென்றால் அங்கே பெருங்கூட்டம்...
சென்று திரும்புவது எனில் மேலும் தாமதமாகும்..

இங்கே ஓரமாக வைத்து விட்டு திரும்ப வந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள்...

அப்படியே செய்து விட்டு தரிசனத்திற்கு விரைந்தோம்....

அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களைப் பிணைத்தவாறு
பளபளக்கும் குழாய்கள்... வரிசை என்ற பெயரில் மிகப்பெரிய இடைஞ்சல்...

குழாய்களின் அமைப்பு மிகக் குறுகிய இடைவெளியாக இருக்கின்றது..
சற்றே காலை எட்டி வைத்தால் கண்டிப்பாக இடித்துக் கொள்ள நேரும்...

உள்பிரகாரங்களை அடைத்தவாறு மடக்கி மடக்கி
தரிசனத்திற்கான வரிசை அமைக்கப்பட்டிருந்தது...

பக்தர்கள் முறையாக மூலஸ்தானத்தை
வலம் வரமுடியாதபடிக்குச் செய்திருந்தார்கள்...

மனம் உறுத்தலாக இருந்தது...

அம்பிகையின் சந்நிதிக்கு முன்பாக
சிறு பிள்ளைகளுக்கு மட்டும் - பால் வழங்கிக் கொண்டிருந்தனர்...

இது திருக்கோயிலின் சார்பாக 
எவ்வித விலையும் இன்றி வழங்கப்படுவதாகும்...

மனதார பாராட்டி விட்டு
வரிசையோடு வரிசையாக நகர்ந்து
மீனலோசனியின் சந்நிதிக்குள் நுழைந்தோம்...

சற்று உயரமான பலகை நடையில்
ஏறி இறங்கும்படி செய்திருக்கின்றார்கள்..

பச்சைப் பட்டுடுத்தி மல்லிகை மாலைகளுடன்
புன்னகை பூத்திருந்தாள் - அங்கயற்கண்ணி...


சுரும்புமுரல் கடிமலர்ப் பூங்குழல் போற்றி 
உத்தரியத் தொடித்தோள் போற்றி
கரும்புருவச் சிலைபோற்றி கவுணியர்க்குப் 
பால்சுரந்த கலசம் போற்றி
இரும்புமனம் குழைத்தென்னை எடுத்தாண்ட 
அங்கயற்கண் எம்பிராட்டி
அரும்பும் இளநகை போற்றி ஆரணநூபுரம் 
சிலம்பும் அடிகள் போற்றி!..
-: திருவிளையாடற்புராணம் :-

அம்மா!.. அம்மா!.. - என்று அரற்றியது மனம்...

கண் குளிரக் குளிர தரிசனம்...

மங்கலக் குங்குமத்தைப் பெற்றுக் கொண்டு -
சந்நிதியை விட்டு வெளியே வந்தோம்..

இரும்புக் குழாய்களால் தடுக்கப்பட்டிருந்ததால் -
திருமூலத்தானத்தை வலம் வரமுடியவில்லை...

ஆனாலும், நிருதி மூலை வரைக்கும் சென்று திரும்பி
ஐயனின் சந்நிதியை நோக்கி நடந்தோம்...


வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளை ஏற்றான் தன்னைச்
சுடர்த்திங்கள் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மையானைத்
தலையாய தேவாதி தேவர்க்கு என்றும்
சேயானைத் தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே!...(6/19)

நாவுக்கரசரின் தேவாரம் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருந்தது...

ஐயனின் சந்நிதியிலும் அருமையான தரிசனம்...

மந்திரமும் தந்திரமுமாகிய திருநீற்றைத் தரித்துக் கொண்டு
திருச்சுற்றின் மூர்த்திகளைத் தரிசித்தோம்..

திருக்கோட்டத்திலிருந்த ஸ்ரீதுர்க்காம்பிகைக்கு
வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டிருந்தது...

அருகில் எல்லாம் வல்ல ஸ்ரீசித்தர் பெருமான்...

திருச்சுற்றில் எங்கு காணினும் வண்ணச் சரவிளக்குகள்
மின்னிக் கொண்டிருந்தன..

ஏனெனில்,
அடுத்த சில தினங்களில் சித்திரைப் பெருந்திருவிழா தொடக்கம்...

நந்தி மண்டபத்தின் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும்
பேருருவான ஸ்ரீ வீரபத்திர ஸ்வாமி , ஸ்ரீ பத்ரகாளீஸ்வரி....

ஸ்வாமி சந்நிதிக்கு செல்லும் முன்பாக
ஆங்கொரு தூணில் பிள்ளைத்தாய்ச்சி அம்மன்..

இங்கே வேண்டிக் கொண்டு நாமே
பிள்ளைத்தாய்ச்சி சிற்பத்துக்கு எண்ணெய்க்காப்பு செய்விக்கலாம்...

சிற்பத்தின் மேலிருந்து வழியும் எண்ணெய்யை
சேகரித்து எடுத்துச் சென்று கர்ப்பவதியின் வயிற்றில்
தடவி வந்தால் சுகப்பிரசவம் நிகழும் என்பது நம்பிக்கை...

நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன் -
இங்கே வேண்டிக் கொண்டிருக்கின்றோம்..

முன்பு மேலாடையின்றி இருந்தது சிற்பம்..
இப்போது ஆடை அணிவித்திருக்கின்றார்கள்..

இருந்தாலும் நல்லெண்ணெய்யை
சிற்பத்தின் மேல் ஊற்றி சேகரித்துக் கொள்ளலாம்..

இங்கே எண்ணெய்க்காப்பு செய்யும் நடைமுறை..
இன்னும் வர்த்தகமாக்கப்படவில்லை..

நன்றி - Fb
மன நிறைவாக தரிசனம் செய்தபின்
பொற்றாமரைக் குளக்கரையில் சில நிமிடங்கள்...

செயற்கை நீரூற்றுகள் பொங்கிக் கொண்டிருந்தன..

அந்தப் பக்கம் திருச்சுற்று மண்டப மேல் தளத்தின் கற்கள் பிரிக்கப்பட்டிருந்தன...

அங்கே செல்வதற்கு இயலவில்லை.. இரும்புத் தடுப்புகள் இருந்தன..

நன்றி - Fb
அங்கிருந்து வெளியேறும்போது விபூதிப் பிள்ளையார் தரிசனம்...

திருக்கோயிலுக்குள் செல்லும் போது இரும்புத் தடுப்புகளின் வழியாக சென்றதால் திருநீற்றுப் பிள்ளையாரைத் தரிசிக்க இயலவில்லை...

விநாயகரின் மேலிருந்த விபூதியை எடுத்து பூசிக் கொண்டு
பெருமானிடம் விடை பெற்றுக் கொண்டோம்..

திருவாசலை ஒட்டினாற்போல சேவார்த்திகள்
சித்ரான்னம் விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள்...

மணக்க மணக்க புளியோதரை..
சந்தோஷத்துடன் வயிறார உண்டோம்....

நேரமாயிற்று...

இரவு உணவுக்குப் பின் -
புனலூர் பாசஞ்சரைப் பிடித்து திருநெல்வேலி செல்லவேண்டும்...

இருப்பினும் -

மீனாட்சியம்மன் திருக்கோயிலில் படமெடுக்க வேண்டும் 
- என்ற எண்ணம் இப்போதும் நிறைவேறவில்லை...

அந்த நாளை அவளே குறித்துக் கொடுப்பாள்..

ஐயனிடமும் அம்பிகையிடமும் விடைபெற்றுக் கொண்டோம்...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

செவ்வாய், செப்டம்பர் 27, 2016

ஊர் சுற்றலாம்..

இன்று செப்டம்பர் 27..

உலக சுற்றுலா நாள்!..

வேலைகள் பல இருந்தாலும் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு -
வாருங்கள்.. ஊர் சுற்றிப் பார்க்கலாம்!..

எந்த ஊருங்க!?..

எங்க ஊருங்க!..

ஓ!..


பிறந்த ஊரின் பெருமையைப் பேசுவதற்கு யாருக்குத் தான் ஆசையிருக்காது?..
கலை கலாச்சாரம் வரலாறு வாழ்வியல் அரசியல் ஆன்மீகம் - என, எல்லாம் ஒன்று சேர்ந்து விளங்கும் நகரங்களுள் தனிச்சிறப்புடன் திகழும் -

தஞ்சாவூர்!..

அதனால் தான் -
தென்னகத்தின் பண்பாட்டு மையம் இங்கே அமைக்கப்பட்டது..

நீண்ட நெடும் வரலாற்றைத் தன்னகத்தே கொண்டது தஞ்சை மாநகர்..

கி.பி. 850ல் முத்தரையர்களிடமிருந்து விஜயாலய சோழர் தஞ்சையை கைப்பற்றி புலிக்கொடியினை நாட்டினார்..

அதன்பின் அந்தப் புலிக் கொடியினை -
விண்ணுயரத்திற்கு ஏற்றைவைத்த பெருமைக்குரியவன் -
மாமன்னன் ராஜராஜ சோழன்!..

சோழப் பரம்பரையின் திலகமான ராஜராஜ சோழன் -
தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு - கடல் கடந்த நாடுகளான
முன்னீர்ப் பழந்தீவுகள் பன்னீராயிரத்தையும் ஈழத்தையும் ஆட்சி செய்த பெருமைக்குரியவன்..


மாபெரும் சிவபக்தனான ராஜராஜ சோழன் -
தஞ்சை மாநகரில் எடுப்பித்த பெருங்கோயில் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு அவனது பெருமையைப் பேசிக்கொண்டிருக்கும்..

உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டிருக்கும் தஞ்சை பெரிய கோயிலின் பெருமையைப் பேசி முடியாது..

மாபெரும் கலைச்சின்னம் - தஞ்சை பெரிய கோயில்..

உலக மக்களைக் கவர்ந்திருக்கும் இந்தத் திருக்கோயில்
ஏறத்தாழ - மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது..

பெரிய கோயிலின் எதிர்புறத்தில் தான் -
புகழ் பெற்ற ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை..

இந்த மருத்துவமனை - ராஜ ராஜ சோழனின் தமக்கையான குந்தவை பிராட்டியாரால் தொடங்கப்பட்டிருக்கும் - என்பது முக்கியமான குறிப்பு..

பெருமைக்குரிய சோழனின் அரச மாளிகை - தஞ்சையின் வடமேற்கில் களிமேடு பகுதியில் இருந்திருக்கக் கூடும் என்றும்

அதெல்லாம் இல்லை!.. இப்போதுள்ள நாயக்க - மராத்திய அரண்மனையின் அடித்தளமே சோழரின் அரண்மனை தான் என்றும் சொல்கின்றார்கள்..

எப்படியிருந்தாலும் - நாயக்கர்களின் அரண்மனை கி.பி. 1673ல் நடந்த போரில் சிதைவுற்றது..

அதன்பின் 1675ல் தஞ்சையை மராட்டியர்கள் கைப்பற்றினர்..

மீண்டும் பல நிலைகளில் - மாடமாளிகை கூட கோபுரம் - என அரண்மனை எழுந்தது..

மன்னர் சரபோஜியின் அரசவை, பெருமைமிகும் சரஸ்வதி மஹால் நூலகம், சங்கீத மஹால், மணி கோபுரம், காவற்கோபுரம், ஷார்ஜா எனும் ஏழடுக்கு மாடி- எனத் திகழ்கின்றது..

மணிக் கோபுரம்
காவல் கோபுரம்

ஷார்ஜா மாடி
இன்று காணும் அரண்மனையும் பல சிதைவுகளுடன் தான் விளங்குகின்றது..

எனினும் மிச்சம் மீதி என எஞ்சிய பகுதிகள் பாதுகாப்புடன் பராமரிக்கப்படுகின்றன..

இன்றைய அரண்மனை வளாகம் சுற்றுலா பயணிகளுக்கு மாபெரும் விருந்து என்றால் மிகையில்லை..


உலகின் தொன்மையான நூலகம் சரஸ்வதி மஹால்..

பிற்காலச் சோழர்களால் உருவாக்கப்பட்ட சரஸ்வதி பண்டாரகம் என்பதே பின்னாளில் சரஸ்வதி மஹால் என்றானது - என்பது அறிஞர் தம் கூற்று..

இசை, நாட்டியம், சிற்பம், சமயம், தத்துவம், மருத்துவம் , அறிவியல் - என, பல்வேறு துறைகளிலும் சிறந்த நூல்கள் இங்கேயுள்ளன..

தொன்மையான ஓலைச்சுவடிகளும் பழைமையான அச்சுப் பிரதிகளும் இங்கே  பாதுகாக்கப்படுகின்றன..

தற்போது - சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஒலி ஒளிக் காட்சி தொடங்கப்பட்டுள்ளது.. 

இதற்கென - 156 இருக்கைகளுடன் முழுதும் குளிரூட்டப்பட்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.. 

தஞ்சையின் பாரம்பர்யம், சோழ மன்னர்களின் வரலாறு, தஞ்சையைச் சுற்றியுள்ள சிறப்பு மிகும் தலங்கள் - என, 

நமது பெருமையினை சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் - தமிழ், இந்தி, ஆங்கிலம், பிரஞ்ச் ஆகிய மொழிகளில் ஒலி ஒளிக் காட்சிகள் தினமும் நடைபெறுகின்றன..

அரண்மனை வளாகத்தினுள் மூன்று அருங்காட்சியகங்கள் விளங்குகின்றன..

கலைநயம் மிக்க ஐம்பொன் சிலைகளும் கல் படிமங்களும் மரச் சிற்பங்களும் போர்த் தளவாடங்களும் மற்றும் பல அரியவகைப் பொருட்களும் காணக் கிடைக்கின்றன..

தஞ்சை பீரங்கி
தஞ்சை அரண்மனை வளாகத்தை விட்டு வெளியே - கிழக்காக நடந்தால் கீழவாசல்...

கோட்டையின் கிழக்கு வாசல் இதுவே..

இங்கிருந்த மிகப் பெரிய நுழைவு வாயிலை பழுதாகி விட்டதெனக் கூறி
40 ஆண்டுகளுக்கு முன் இடித்துத் தள்ளி தரைமட்டமாக்கி விட்டனர்..

சாலைத் திட்டுக்கு வடபுறமாக உயரமான மேட்டில் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட பெரிய பீரங்கி ஒன்றினைக் காணலாம்..

சுமார் முப்பதடி உயமுடைய இந்த இடத்திற்கு பீரங்கி மேடு என்றே பெயர்..

தஞ்சையை ஆட்சி செய்த ரகுநாத நாயக்கர் (1600 - 1645) 1620ல் இந்த பீரங்கியை அமைத்தார்..

25 அடி நீளமுடைய இந்த பீரங்கி 22 டன் எடையுள்ளது..
இதன் வாய்ப்பகுதி இரண்டு அடி (25 அங்குலம்) அகலமுடையது..

400 ஆண்டுகளாக வெயிலில் காய்ந்து மழையில் நனைந்தாலும்
எள்ளளவு கூட - துரு பிடிக்காமல் கம்பீரமாக விளங்குன்றது...

ஆனாலும் - பீரங்கியின் இருபுறமும் இருந்த கனமான வளையங்களை
சமூக விரோதிகள் அறுத்தெடுத்து தங்கள் ஆளுமையைக் காட்டிவிட்டனர்..

இந்த பீரங்கி உலகின் பெரிய பீரங்கிகளுள் நான்காவதாகத் திகழ்கின்றது...

இந்த பீரங்கி மேட்டில் நின்றுகொண்டு மேற்குத் திசையில் நோக்கினால் - ஷார்ஜா மாடியும் அரண்மனை கோபுரங்களும் அழகாகத் தெரியும்..

ஆனால் - சரியான பராமரிப்பு இல்லாததால் சமுக விரோதிகளின் புகலிடமாக விளங்குவது வருத்தத்துக்குரியது..


முதல் உலகப் போர் நினைவு கல்வெட்டு
பழைய பேருந்து நிலையத்தின் தெற்குப் புறம் - அரசு மருத்துவமனைக்கு முன்பாக நீண்டுயர்ந்து விளங்குவது நூறாண்டுகளைக் கடந்த மணிக்கூண்டு..

1883ல் கட்டப்பட்ட இந்த மணிக் கூண்டிற்கு ராணி கோபுரம் என்று பெயர்..

இதன் கிழக்குப் புறம் - முதல் உலகப்போரில் சண்டையிட்டு உயிர் துறந்த நால்வரின் நினைவு கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது..

எண்கோண அமைப்பில் எழுந்து நாற்பட்டையாக உயர்ந்து உச்சியில் கோபுர விமானம் போல விளங்கும் - இந்த மணிக்கூண்டு முறையான பராமரிப்பின்றி இருக்கின்றது..

நான்கு புறமும் இருக்கும் பார்வை மாடங்கள் சிதைந்து விட்டன..

அப்போதெல்லாம் - ஒன்று இரண்டு என,
ஊரெல்லாம் கேட்கும்படி மணியோசை முழங்கும்...

அந்த வாய்ப்பினை இன்றைய தலைமுறையினர் இழந்து விட்டனர்..


வெண்ணாறு, வடவாறு, புது ஆறு என
நீர் வளமும் நிலவளமும் ஒருங்கே அமையப் பெற்ற தஞ்சை -
சிறப்பான பேருந்து மற்றும் இருப்புப் பாதை வசதிகளையும் உடையது..

தமிழகத்தின் எல்லா நகரங்களுடனும் பேருந்து வசதியிருந்தாலும் -
இன்னும் மேம்படவேண்டும் என்பது ஆவல்..

புது ஆறு எனப்படும் கல்லணைக் கால்வாய்
தஞ்சையின் வடக்கு எல்லையில் அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயிலுக்குப் பின்புறம் ஒரு கி.மீ தொலைவில் வெண்ணாற்றுப் படுகையில் பழைமையான நீரேற்று நிலையம் உள்ளது.. 

1880 களில் அமைக்கப்பட்ட இந்நிலையம் இன்னும் சிறப்பாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது..

மேலும் கொள்ளிடத்திலிருந்தும் நீர் கொண்டு வரப்படுகின்றது.. 
தமிழகத்தில் குடிநீர் பிரச்னை இல்லாத மாநகர் தஞ்சை..

மருத்துவக் கல்லூரி
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
பயிர் பதனிடும் தொழில் நுட்பக் கழகம்
Sukhoi SU30 - தஞ்சை விமான தளம்
மத்திய அரசின் பொலிவுறு நகர்களுள் தஞ்சை மாநகரும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே -
அனைத்து வகையிலும் சிறந்து விளங்கிய பெருமைக்குரியது சோழ மண்டலம்..

சிவகங்கைக் குளம்
அன்றைக்கே - நீர் மேலாண்மையில் சிறப்புற்றிருந்தனர்...

பெரிய கோயிலின் வடபுறமுள்ள சிவகங்கைக் குளத்தின் கீழ் -
ஜல சூத்திரம் எனும் அமைப்பில் நகரிலுள்ள கிணறுகளில்
நீர் நிறைந்திருக்கின்றது..

தஞ்சை நகரின் வடிகால் அமைப்பு சிறப்பானது.

தெருக்களின் இருபுறமும் அமைந்துள்ள - கழிவு நீர்த் தாரைகள்
ஆங்காங்கே பத்தடி ஆழத்தில் - வாரிகள் எனும் ஓடைகளில்
இணைக்கப்பட்டு வயற்புறங்களில் சேருமாறு அமைக்கப்பட்டிருக்கும்..

கால வெள்ளத்தில் மக்கள் அவற்றைச் சிதைத்துப் பாழ்படுத்தினர்..

தற்போது நகர் முழுதும் புதை சாக்கடைத் திட்டம் நடைமுறையில் இருந்தாலும் நான்கு ராஜவீதிகளிலும் பழைமையான நீர்த்தாரைகளை இன்னும் காணலாம்..

இருப்பினும்,

தங்கு தடையற்ற மின்சாரம், சூரிய ஒளியினால் மின்சக்தி, சிறப்பான கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள், பத்திரமான சாலைகள், மேம்படுத்தப்பட்ட குடிநீர் வசதி, மழை நீர் சேகரிப்பு, தூய்மையான கழிப்பறை மற்றும் வடிகால் வசதி, திடக்கழிவு மேலாண்மை ..

- என, பல்வேறு துறைகளில் மேம்படுத்தப்பட இருக்கின்றது - தஞ்சை மாநகர்..

தமிழ்ப் பல்கலைக்கழகம், தென்னக பண்பாட்டு மையம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் கால்நடை அபிவிருத்தி ஆராய்ச்சி நிலையம், இந்திய பயிர் பதனிடும் தொழில் நுட்பக் கழகம் (Indian Institute of Crop Processing Technology - IICPT)
இந்திய விமான படைத்தளம் - என மேன்மையுற்று விளங்கினாலும்

சிற்சில குறைகளும் ஆங்காங்கே இருக்கின்றன..

காலப்போக்கில் அவையெல்லாம் சரியாகும் என நம்புவோம்...


தென்னகத்தின் நெற்களஞ்சியமாகிய தஞ்சை மாநகரின் பெருமைகளில் இங்கே சொல்லியிருப்பது ஓரளவு தான்..

முழுதாகச் சொல்லுதற்கு இந்த ஒரு பதிவு போதாது - என்பதே உண்மை..

தஞ்சையைச் சுற்றி வந்து - நான் எடுத்து சேகரித்த படங்கள் எங்கே ஒளிந்து கொண்டிருக்கின்றன - என்று தெரியவில்லை..

ஒரு சில படங்களைத் தவிர மற்றவை இணையத்தில் பெற்றவை..

தஞ்சை ஓவியங்கள்



தஞ்சாவூர் வீணை மற்றும் இசைக் கருவிகள், தஞ்சை கலைத் தட்டு, தஞ்சை ஓவியங்கள், தஞ்சை தலையாட்டி பொம்மை, தஞ்சை மரக்குதிரை..

தஞ்சாவூர் தாம்பூலம், தஞ்சாவூர் டிகிரி காபி, தஞ்சாவூர் நெய் புட்டு,
தஞ்சை அசோகா, தஞ்சை காரக்குழம்பு, தஞ்சை சந்திரகலா (இனிப்பு தாங்க!..)

- என, பற்பல சிறப்புகள்..

நாட்டியாஞ்சலி
தஞ்சையின் பரத நாட்டிய பாரம்பரியம் மட்டுமின்றி
தஞ்சை நால்வர் எனும் இசைச் சகோதரர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்..

தஞ்சையில் வசித்திருந்த - சத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் -
அரச ஆரவாரங்களைக் கண்டு ஒதுங்கி திருவையாற்றுக்கு குடிபெயர்ந்தார்...

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ ஸ்யாமா சாஸ்திரிகள் வசித்ததும் தஞ்சையில் தான்..

தஞ்சை பொய்க்கால் குதிரை, கரக ஆட்டம், மயிலாட்டம், புலியாட்டம், உறுமி மேளம், தப்பாட்டம் - என்பன மண்ணின் பெயர் விளங்கச் செய்வன..


இன்னும் பேசுதற்கு நிறைய உள்ளன..
மீண்டும் ஒரு இனிய வேளையில் 
அவற்றையெல்லாம் பேசி மகிழ்வோம்!..

வாருங்கள் எங்கள் ஊருக்கு!..
கண்ணுக்கும் கருத்துக்கும்
பொன்னான நாடு!..

எங்கள் தஞ்சை வளநாடு!..

வாழ்க வளமுடன்!..
***