நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 30, 2015

காந்தி அஞ்சலிமகாத்மா காந்திஜியின் சத்திய சோதனை
முதல் பாகம் - எட்டாம் அத்தியாயம்
திருட்டும் பரிகாரமும்

புலால் உண்ட காலத்திலும், அதற்கு முன்னாலும், நான் செய்த வேறு சில தவறுகளையும் சொல்ல வேண்டியிருக்கிறது. இவை விவாகத்திற்கு முன்போ, விவாகமான உடனேயோ நடந்தவைநானும் என் உறவினர் ஒருவரும் புகை பிடிப்பதில் விருப்பம் கொண்டோம். சிகரெட் பிடிப்பதில் நல்லது உண்டு என்று நாங்கள் கண்டதோ, சிகரெட் புகையின் வாசனை எங்களுக்கு பிரியமாக இருந்ததோ இதற்கு காரணம் அல்ல

எங்கள் வாய்களிலிருந்து ஏராளமாகப் புகை விடுவதில் ஒருவகையான இன்பம் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டோம். என் சிற்றப்பாவுக்குச் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. அவர் புகை பிடிப்பதைப் பார்த்தபோது நாங்களும் அவரைப்போல் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் எங்களிடம் காசு இல்லை

ஆகவே, என் சிற்றப்பா பிடித்துவிட்டுப் போடும் சிகரெட்டுத் துண்டுகளைத் திருடி உபயோகிக்க ஆரம்பித்தோம்.

ஆனால், சிகரெட்டுத் துண்டுகள் எப்பொழுதும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதிலிருந்து அதிகப் புகை வருவதும் இல்லை. ஆகவே, பீடி வாங்க வேலைக்காரன் பணத்திலிருந்து காசு திருடக் கிளம்பினோம்ஆனால் பீடியை வாங்கி எங்கே வைப்பது என்று பிரச்சனை வந்தது. பெரியவர்கள் முன்னிலையில் நாங்கள் பீடி பிடிக்க முடியாது

சில வாரங்கள் வரையில் திருடிய காசுகளைக் கொண்டே ஒருவாறு சமாளித்துக் கொண்டோம். இதற்கு மத்தியில் ஏதோ ஒரு செடியின் தண்டு, துவரங்கள் உள்ளது என்றும், சிகரெட்டைப் போல அதைப் பிடிக்கலாம் என்று கேள்விப்பட்டு அதைத் தேடிப் பிடித்து இந்த வகையான புகை பிடிக்கலானோம்.


இவை போன்றவைகளினாலெல்லாம் எங்களுக்குத் திருப்தி உண்டாகவே இல்லை. எங்கள் இஷ்டம் போல் செய்ய எங்களுக்கு சுதந்திரம் இல்லையே என்று உணர்ச்சி மனத்தில் எழுந்தது. பெரியவர்களின் அனுமதியில்லாமல் எதையும் நாங்கள் செய்ய முடியாதிருந்தது - பொறுக்க முடியாததாகத் தோன்றியது. கடைசியாக வாழ்வே முற்றும் வெறுத்துப் போய் தற்கொலை செய்து கொண்டு விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டோம்


ஆனால் தற்கொலை செய்து கொள்ளுவது எப்படி?.. விஷம் எங்கிருந்து எங்களுக்குக் கிடைக்கும்?.. ஊமத்தம் விதை சரியான விஷமுள்ளது என்று கேள்வியுற்றோம். அவ்விதையைத் தேடிக் கொண்டு காட்டுக்குப் போய் அதைக் கொண்டு வந்துவிட்டோம்மாலை நேரம் இதற்கு நல்லவேளை என்று முடிவாயிற்று. கேதார்ஜி கோயிலுக்கு போய் அங்கே விளக்குக்கு நெய் வார்த்தோம். சுவாமி தரிசனம் செய்து கொண்டோம். பிறகு ஒதுக்குப் புறமான ஒரு மூலைக்குப் போனோம்

ஆனால் எங்களுக்குத் துணிச்சல் வரவில்லைஉடனேயே செத்துப் போகாமல் இருந்து விட்டால்?.. அதோடு தற்கொலை செய்து கொள்ளுவதால் தான் என்ன நன்மை..? சுதந்திரமின்மையைத்தான் ஏன் சகித்துக் கொள்ளக் கூடாது?.. 

என்றாலும் இரண்டு, மூன்று விதைகளை விழுங்கி விட்டோம்இன்னும் அதிகமாகத் தின்னத் தைரியமில்லை. எங்கள் இருவருக்குமே சாவதற்கு பயம்
மனத்தைத் தேற்றிக் கொள்ள ராம்ஜி கோயிலுக்குப் போய் தற்கொலை எண்ணத்தையே விட்டுவிடுவது என்று முடிவு செய்தோம்.


தற்கொலை செய்துகொள்ள எண்ணுவதைப் போலத் தற்கொலை செய்து கொண்டு விடுவது அவ்வளவு எளிதானதே அல்ல என்பதைப் புரிந்துக் கொண்டேன். அதிலிருந்து, யாராவது தற்கொலை செய்துகொள்ளுவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் அறிந்தால், நான் கொஞ்சமும் பயப்படுவதே இல்லை


தற்கொலை எண்ணத்தினால் முடிவாக ஒரு நன்மையும் உண்டாயிற்று. துண்டுச் சிகரெட்டுகளைப் பொறுக்கிப் புகை பிடிக்கும் வழக்கத்தையும், புகை பிடிப்பதற்காக வேலைக்காரனின் காசைத் திருடுவதையும் நாங்கள் இருவரும் விட்டுவிட்டோம்.
நான் வயதடைந்துவிட்ட பின்பு, புகைப் பிடிக்கவேண்டும் என்று விரும்பியதே இல்லை. புகை பிடிக்கும் பழக்கம், காட்டுமிராண்டித்தனமானது, ஆபாசமானது, தீமையை விளைவிப்பது என்று நான் எப்பொழுதும் கருதி வந்திருக்கிறேன்

உலகம் முழுவதிலும் புகைபிடிப்பதில் இவ்வளவு வெறி ஏன் இருக்கிறது என்பது விளங்கவே இல்லை. புகை பிடிப்பவர்கள் நிரம்பிய வண்டியில் பிரயாணம் செய்யவே எனக்குச் சகிப்பதில்லை.  மூச்சுத் திணறி விடுகிறது.


இந்தத் திருட்டையும்விட மிக மோசமான ஒன்று, அதற்குச் கொஞ்சம் பின்னால் நான் செய்த குற்றமாகும். பன்னிரெண்டு அல்லது பதின்மூன்று வயதிருக்கும் போது காசுகள் திருடினேன், வயது எனக்கு இன்னும் குறைவாகவே இருந்திருக்கலாம். நான் செய்த மற்றொரு திருட்டோ, எனக்குப் பதினைந்து வயதாக இருக்கும்போது. 

இச்சமயம், மாமிசம் தின்னும் என் அண்ணனின் கைக்காப்பிலிருந்து கொஞ்சம் தங்கத்தைத் திருடினேன். கையில் கெட்டித் தங்கக் காப்பு அணிந்திருந்தார். அதிலிருந்து கொஞ்சம் தங்கத்தை வெட்டி எடுத்துவிடுவது கஷ்டமன்று.


சரி, அப்படியே செய்யப்பட்டது, கடனும் தீர்ந்தது. ஆனால், இக்குற்றம் என்னால் பொறுக்க முடியாததாயிற்று. இனிமேல் திருடுவதே இல்லை என்று முடிவு செய்து கொண்டேன். இக்குற்றத்தை என் தந்தையாரிடம் சொல்லி விடுவது என்றும் தீர்மானித்தேன். ஆனால், சொல்லத் துணிவு வரவில்லை. என் தந்தையார் என்னை அடிப்பார் என்று நான் பயப்படவில்லை

எங்களில் யாரையுமே அவர் அடித்ததாக எனக்கு ஞாபகமில்லை. அவருக்கு நான் உண்டாக்கக்கூடிய மனவேதனையைக் குறித்தே அஞ்சினேன். அதற்கும் துணிந்துதான் ஆகவேண்டும் என்று தோன்றியது. எல்லாவற்றையும் அவரிடம் சொல்லி விட்டாலன்றிப் பாவம் தீராது என்று கருதினேன்.


என் குற்றத்தை ஒரு கடிதத்தில் எழுதி என் தந்தையிடம் கொடுத்து, மன்னிப்புக் கேட்பதென்று கடைசியாகத் தீர்மானித்தேன். ஒரு துண்டுக் காகிதத்தில் அதை எழுதி நானே என் தந்தையாரிடம் கொடுத்தேன். அக்குறிப்பில் நான் என் குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்ததோடு அதற்குக் தக்க தண்டனையை எனக்குக் கொடுக்குமாறும் கேட்டிருந்தேன். என் குற்றத்திற்காக அவர் தம்மையே தண்டித்துக் கொள்ள வேண்டாம் என்றும் முடிவில் அவரைக் கேட்டுக் கொண்டிருந்தேன்

இனிமேல் திருடுவது இல்லை என்றும் நான் பிரதிக்ஞை செய்து கொண்டேன்.


குற்றத்தை ஒப்புக்கொண்டு எழுதியிருந்த காகிதத்தை என் தந்தையாரிடம் நான் கொடுத்தபோது என் உடலெல்லாம் நடுங்கியது. அப்பொழுது அவர் பவுத்திர நோயினால் பீடிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார்சாதாரண மரப்பலகையே அவர் படுக்கை. என் கடிதத்தை அவரிடம் கொடுத்து விட்டு, அப்பலகைக்கு எதிரில் உட்கார்ந்தேன்.


அவர் முழுவதையும் படித்தார். முத்துத் துளிகள் போல் அவர் கன்னங்களில் கண்ணீர் வழிந்து காகிதத்தை நனைத்தது. ஒரு கணம் கண்ணை மூடிக் கொண்டு சிந்தித்தார். பிறகு கடிதத்தைக் கிழித்தெறிந்தார்

அக்கடிதத்தைப் படிப்பதற்காக எழுந்து உட்கார்ந்தவர்திரும்பவும் படுத்துக் கொண்டார்நானும் கதறி அழுதேன்

என் தந்தையார் அனுபவித்த   வேதனையை நான் காண முடிந்தது. நான் ஓவியக்காரனாக இருந்தால் அக்காட்சி முழுவதையும் இன்று சித்திரமாக எழுதிவிட முடியும். அது இப்பொழுதும் மனத்தில் தெளிவாக இருந்து வருகிறது.
முத்துப்போன்ற அந்த அன்புத்துளிகள் என் உள்ளத்தைச் சுத்தப்படுத்தி, என் பாவத்தையும் அலம்பிவிட்டனஅத்தகைய அன்பை அனுபவித்தவர்கள் மட்டுமே, அது இன்னது என்பதை அறிய முடியும். அன்புக் கணைகளினால் எய்யப்பட்டவன் எவனோ, அவனே அறிவான் அதன் சக்தியை என்று ஒரு பாடலும் கூறுகிறது

அகிம்சா தருமத்தை அறிவதற்கு இது எனக்குச் சரியானதோர் பாடமாயிற்று. இதில் தந்தையின் அன்பைத் தவிர வேறு எதையும் நான் அப்பொழுது காணவில்லை. ஆனால், இன்றோ, அதுதான் சுத்தமான அகிம்சை என்று அறிகிறேன்

அத்தகைய அகிம்சை எல்லாவற்றிலும் வியாபிப்பதாகி விடும்போது. அது தொட்டதையெல்லாம் தன்மயமாக்கி விடுகிறதுஅதனுடைய சக்திக்கு ஓர் எல்லையே இல்லை.


இவ்விதமான உயர்வான மன்னிக்கும் குணம் என் தந்தைக்கு இயல்பானதன்று. கோபமடைவார், கடுஞ்சொற்களைக் கூறுவார், தலையில் அடித்துக் கொள்ளுவார் என்றெல்லாம் நான் நினைத்திருந்தேன். ஆனால், அவரோ அவ்வளவு அற்புதமாக அமைதியுடன் இருந்தார். மறைக்காமல் எல்லாவற்றையும் நான் ஒப்புக்கொண்டதே இதற்குக் காரணம் என்று நம்புகிறேன்

மன்னிப்பு அளிப்பதற்கு உரிமை உள்ளவரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக்கொண்டு விடுவதோடு, இனி அத்தகைய பாவத்தைச் செய்வதில்லை என்றும் உறுதிமொழி கூறுவதே செய்த குற்றத்திற்காகச் சரியான வகையில் வருத்தப்படுவதாகும். என் குற்றத்தை நான் ஒப்புக் கொண்டுவிட்டது, என்னைப் பற்றிக் கவலையே இல்லை என்று என் தந்தையாரை உணரும்படி செய்தது என்பதை அறிவேன்

என் மீதுள்ள அவரது அன்பையும் அளவு கடந்து அதிகரிக்கும்படி இது செய்தது.


எல்லாவற்றிற்கும் அறம் தான் அடிப்படை.
அந்த அறத்திற்கே உண்மைதான் அடிப்படை!..
-: காந்திஜியின் பொன்மொழி :-

வாழ்க நீ எம்மான்!..
* * * 

புதன், ஜனவரி 28, 2015

தென் பழனி

இன்று தை - கார்த்திகை நாள்.

சர்வேஸ்வரனால் வாழ்த்துரைக்கப்பட்ட நட்சத்திரக் கூட்டம் - கார்த்திகை!..

தெய்வீக மணம் கமழும் தை மாதத்தின் சிறப்புகளில் மற்றொன்று!..

வெள்ளிக் கிழமையும் வளர்பிறை சஷ்டியும் கிருத்திகையும் முருகனருள் பெறச் சிறந்தவை!.. 

ஏன்!.. எப்படி?.. - என்று கேட்டால் -

வாரத்தின் ஆறாம் நாள் வெள்ளிக்கிழமை. 
திதிகளில் ஆறாவது சஷ்டி. 
ஆறு தேவ மங்கையரின் அம்சம் கார்த்திகை நட்சத்திரக் கூட்டம். 

ஈஸ்வரன் ஆறு திருமுகங்கள் கொண்டே, திருமுருகனைத் தோற்றுவித்தார்.


அருவமும் உருவம் ஆகிஅநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகிக்
கருணைசேர் முகங்கள் ஆறும்கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!..
கந்தபுராணம்.

உலகம் உய்வதற்காக - திருமுருகன் உதிக்க வேண்டும்!..

அதற்காகவே - பரம்பொருளாகிய சிவபெருமான் - தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஈசானம் எனும் ஐந்து முகங்களுடன் அதோ முகமும் கொண்டு திருவருள் புரிந்தார். 

ஐயனின் ஆறுமுகங்களிலிருந்தும் ஆறு தீப்பொறிகள் தோன்றின. 

அவற்றை வாயுவும் அக்னியும் சேர்ந்து கங்கா நதியில் விட - கங்கை சரவணத்தினில் சேர்த்தனள். 

சரவணத்தின் கமலங்களிலிருந்து ஆறு குழந்தைகள் தோன்றின. 

அந்த ஆறு குழந்தைகளையும் 

நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்த்தயேந்தி, அம்பா, துலா - எனும்

தேவ மங்கையர் அறுவர் தம் திருக்கரங்களில் ஏந்தி சீராட்டி பாராட்டி பாலூட்டி வளர்த்தனர். 

அது கண்டு மகிழ்ந்த ஐயனும் அம்பிகையும் ரிஷப வாகனராக  அறுவருடன் விளையாடும் தன் அன்புச் செல்வங்களைக் காண வந்தருளினர். 

அம்பிகையை நோக்கி ஐயன் - நின் மகன்தனைக் கொண்டு வருக!.. என்றார்.

சரவணந்தனில் தனதுசேய் ஆறு உருத் தனையும் 
இருகரங்களால் அன்புடன் எடுத்தனள் புல்லித்
திருமுகங்கள் ஓராறு பன்னிருபுயம் சேர்ந்த 
உருவம் ஒன்றெனச் செய்தனள் உலகம் ஈன்றுடையாள். 

அந்த வேளையில் - கந்தன் என்று பேர் பெற்றனன் கௌரி தன் குமரன்.

கந்தனை வாரி அணைத்து  கொங்கையில் பொழிந்த அமுதினை - அன்பு மிக ஊறியவளாக - தன் மகற்கு அன்பினால் அருத்தினாள் கௌரி.

சிவபெருமானின் திருமுன் திருக்குமரனை இறைஞ்சு வித்திட - ஐயனும் மகனை அன்புடன் அணைத்து மகிழ்ந்து  தன்னருகில் இருத்திக் கொண்டான்.


ஏலவார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும் 
பாலனாகிய குமரவேள் நடுஉறும் பான்மை 
ஞாலமே லுறும் இரவொடு பகலுக்கும் நடுவாய் 
மாலையா னதொன்று அழிவின்றி வைகுமாறு ஒக்கும்.

அற்புதக் காட்சியினைக் கண்டு அகமகிழ்ந்த தேவ மங்கையர் அறுவரும் ஐயனையும் அம்பிகையையும் பேரன்புடன் பணிந்து வணங்கினர்.  

தாள் பணிந்த மங்கையர் அறுவருக்கும் பெருமான் தண்ணளி புரிந்தான்.

கந்தன்தனை நீர் போற்றிய கடனால் இவன் உங்கள் 
மைந்தன் எனும் பெயர் ஆகுக மகிழ்வால் எவரேனும் 
நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர் 
தந்தம் குறை முடித்தே பரந்தனை நல்குவம் என்றான்!.. 
 கந்தபுராணம்  - சரவணப்படலம்.

''..கந்தனாகிய இவனுக்கு நீங்கள் அறுவரும் அன்புடன் பாலூட்டி வளர்த்த காரணத்தால் - இது முதல் இவன் உங்கள் மைந்தன் எனும்படி கார்த்திகேயன் என அழைக்கப்படுவான். நீங்களும் சிறப்புற வானில் விண்மீண்கள் எனத் திகழ்வீர்களாக!.. உங்களுக்குரிய கார்த்திகை நாளில் விரதம் இருப்பவர் எவராயினும் அவர்தம் குறைகளை நீக்கி நல்வாழ்வினை அளித்து முக்தியும் அளிப்போம்!..''  - என சிவபெருமான் கருணையுடன் மொழிந்தார்..

- என்பது கந்தபுராணம் காட்டும் திருக்காட்சி!..


இத்தகைய கார்த்திகை விரதம் மாதந்தோறும் அனுசரிக்கப்பட்டாலும் - 

ஆடிக் கிருத்திகையும் தை கிருத்திகையும் வெகு சிறப்பு வாய்ந்தவை.

காரணம் - தேவர்களுக்கு விடியற் பொழுதின் முதல் மாதம் தை.
அந்திப் பொழுதின் முதல் மாதம் ஆடி.

சிறப்பு வாய்ந்த - தை மாத கார்த்திகை தினமாகிய இன்று - 

தென்பழனிக் குன்றில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபாலதண்டாயுதபாணியின் தை பூசப் பெருந்திருவிழாவிற்காக கொடியேற்றப்பட்டுள்ளது.


அறுபடை வீடுகளுள் பழனி மூன்றாவது படை வீடாக திகழ்கின்றது.

உண்மையில் மூன்றாவது படை வீடு - திருஆவினன் குடி எனப்படுவது பழனி மலையில் அடிவாரத்திலுள்ள திருக்கோயிலே!..

சிவபெருமானுக்குரிய பூசத் திருவிழா - செல்வச் சிறுவன் அறுமுகனுக்கு என ஆகி விளங்குகின்றது.

பழனியில் தைப்பூசத் திருவிழா என்று சொன்னாலும் அடிவாரக்கோயிலான - ஸ்ரீபெரியநாயகி உடனுறை ஸ்ரீகயிலாயநாதர் திருக்கோயிலில் தான் திருக் கொடியேற்றம் நிகழ்கின்றது.

தமிழகத்தில் நிகழும் பெருந்திருவிழாக்களுள் ஒன்று பழனி தைப் பூசம்!..

தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பாத யாத்திரையாக பழனியை நோக்கி வருகின்றனர்.

பால் காவடி, பன்னீர் காவடி, சர்க்கரைக் காவடி, சந்தனக் காவடி, புஷ்பக் காவடி - என பல்வேறு வகையான காவடிகள் நேர்த்திக் கடனாக பக்தர்களால் செலுத்தப்படுகின்றன.

பத்து நாட்கள் நிகழும் இந்தத் திருவிழாவில் வெளிநாடுகளில் இருந்தும் முருகனடியார்கள் திரண்டு வருகின்றனர் என்றால் - 

அங்கே நின்று விளங்குவது முருகப்பெருமானின் நல்லருள் என்பதே!..


இந்த வருடத்திற்கான தைப்பூசத் திருவிழா - தை கார்த்திகை நாளாகிய இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக - ஸ்ரீமுத்துக்குமர ஸ்வாமி சந்நிதியில் ஆறு கலசங்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு - அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

வள்ளி தெய்வயானையுடன் ஸ்ரீமுத்துக்குமர ஸ்வாமி வெளிப் பிரகாரத்தில் வலம் வந்தருளி கொடி மண்டபத்தில் எழுந்தருளினார்.

வேலும் மயிலும் சேவலும் வரையப்பட்டிருந்த கொடிப் பட்டத்திற்கு பூஜையும் கலசத்திலிருந்த புனிதநீரால் கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டது.

தொடர்ந்து வாத்ய மேள தாளங்களுடன் வேதகோஷங்கள், திருமுறைகள், சரண கோஷங்கள் முழங்க - காலை 10.45 மணையளவில் கொடியேற்றம் நடந்தது.

வள்ளி தெய்வயானையுடன் வீற்றிருந்த ஸ்ரீமுத்துக்குமர ஸ்வாமிக்கு மகா தீப ஆராதனை நிகழ்ந்தது.

தொடர்ந்து வரும் நாட்களில் - 
ஸ்ரீமுத்துக்குமார ஸ்வாமிவள்ளி, தேவசேனா சமேதரராக -


சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை,
தந்தப் பல்லக்கு, தங்கக் குதிரை, தங்க மயில் என பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா எழுந்தருள்கிறார்.
பிப்/02 - திருவிழாவின் ஆறாம் நாள் திருக்கல்யாணம். வெள்ளி ரத புறப்பாடு.

பிப்/03 - திருவிழாவின் ஏழாம் நாள் - தைப்பூசம். திருத்தேரோட்டம்.

பிப்/04 - திருவிழாவின் எட்டாம் நாள் - தங்கக்குதிரை வாகனம்.

பிப்/05 - திருவிழாவின் ஒன்பதாம் நாள் - பெரிய தங்க மயில் வாகனம். 

பிப்/06 - திருவிழாவின் பத்தாம் நாள் - தெப்பம். துவஜ அவரோகணம்.

திருவிழா நாட்களில் அடிவாரத்திலுள்ள கலையரங்கில் இசை நிகழ்ச்சிகள், திருப்புகழ் விரிவுரைகள், பட்டிமன்றம், பரதநாட்டியம் - என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.


மலைக்கோயிலில் விளங்கும் திருமேனி நவபாஷாணங்களால் ஆனது. சித்தபுருஷரான போகர் வடித்தெடுத்த திருமேனி அது.

பாலதண்டாயுதபாணி மேற்கு முகமாகத் திருக்கோலம் கொண்டுள்ளான்.

முருகப்பெருமானின் சந்நிதிக்கு வெளியே போகரின் ஜீவசமாதி இருக்கின்றது

அருணகிரிநாதர் 90 திருப்புகழ்ப் பாடல்களால் பழனிமலை பாலகுமாரனைப் பணிந்து வணங்குகின்றார்.

வசனமிக வேற்றி மறவாதே
மனதுதுய ராற்றி லுழலாதே

இசைபயில் சடாக்ஷ ரமதாலே
இகபரசௌபாக்யம் அருள்வாயே!..

பசுபதி சிவாக்ய முணர்வோனே
பழநிமலை வீற்ற ருளும்வேலா

அசுரர்கிளை வாட்டி மிகவாழ
அமரர்சிறை மீட்ட பெருமாளே!..
அருணகிரிநாதர்.


வேலுண்டு வினையில்லை..
மயிலுண்டு பயமில்லை!..
குகனுண்டு குறைவில்லை மனமே..
குகனுண்டு குறைவில்லை மனமே!..

திருச்சிற்றம்பலம்!..   
* * *