நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 31, 2022

உச்சித் திலகம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று தை மாதத்தின்
பதினெட்டாம் நாள்..

அமாவாசை தினம்..

சைவ வைணவ மரபுகளில்
பொருந்தி வாழ்வோர்கள்
தத்தமது மரபின்
முன்னோர்களுக்குத்
தர்ப்பணங்களைச் செய்யும் நாள்..

திருவள்ளுவப் பெருமான் கூறும்
தென்புலத்தார் வழிபாட்டிற்கான நாள்..

 ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்பாக
இந்நாளில் தான்
திருக்கடவூர் திருத்தலத்தில்
பேரொளி ஒன்று வானில் தோன்றியது..

அந்தாதி எனும் ஒலி
கேட்டு  வந்தது அந்த ஒளி..

இன்றைய பதிவில்
அருள் திகழும்
அபிராமி அந்தாதி
எனும் அமுதக் கலசத்தில் இருந்து
சில துளிகள்..


உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி  மென்கடிக்குங்கும தோயம் என்ன 
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.. 1

மனிதரும்  தேவரும்  மாயா முனிவரும்  வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.. 4

பொருந்திய முப்புரை செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே.. 5


சுந்தரி எந்தை துணைவி  என் பாசத் தொடரை எல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.. 8

கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி
பண்ணியது உன்னிரு பாதாம்புயத்தில் பகலிரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.. 12

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னயன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.. 13


மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கை சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே.. 21

மணியே மணியின் ஒளியே  ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே 
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே.. 24

சொல்லும் பொருளும் என நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.. 28

கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.. 37


புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.. 41

பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக் கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.. 43

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம் அரண் நமக்கே.. 50


நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண் மால் திருத் தங்கச்சியே.. 61

தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.. 69

தாமம் கடம்பு படை பஞ்ச பாணம் தனுக் கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே.. 73


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்ச பாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே.. 77

உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ஒளிர்மதிச் செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.. 84

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச் சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க் குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே.. 85


குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும் கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே.. 100

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே..


ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி
ஓம்
***

ஞாயிறு, ஜனவரி 30, 2022

அஞ்சலி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று ஜனவரி 30


 

அஹிம்சை வீழ்ந்த
நாள்..
மகாத்மாவிற்கு அஞ்சலி..


வாழ்க நீ எம்மான்..
***

வெள்ளி, ஜனவரி 28, 2022

தை வெள்ளி 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று தை மாதத்தின் பதினைந்தாம் நாள்..
மூன்றாவது வெள்ளிக்கிழமை..


இன்றைய பதிவில்
திருமூலர் அருளிச் செய்த திருமந்திரத்தின் திருப்பாடல்கள்.. 
நான்காம் தந்திரம்..
வயிரவி மந்திரம்..

சூட்சுமங்கள்
நிறைந்த
வயிரவி ( பைரவி) மந்திரத்தில் ஐம்பது பாடல்கள்..

குரு உபதேசத்தின் வழியாகவே பெறுதல் வேண்டும்..
இவற்றுள் எளிமையானவை மட்டும் இன்றைய பதிவில்..


ஓதிய நந்தி உணருந் திருவருள்
நீதியில் வேத நெறிவந் துரை செயும்
போதம் இருபத் தெழுநாள் புணர்மதிச்
சோதி வயிரவி சூலம்வந் தாளுமே.. 6


சூலம் கபாலங்கை யேந்திய சூலிக்கு
நாலங் கரமுள நாகபா சாங்குசம்
மாலங் கயன்அறி யாத வடிவிற்கு
மேலங்க மாய்நின்ற மெல்லிய லாளே.. 7

மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி
சொல்லியல் கிஞ்ச நிறம்மன்னு சேயிழை
கல்லியல் ஒப்பது காணும் திருமேனி
பல்லியல் ஆடையும் பன்மணி தானே.. 8

பன்மணி சந்திர கோடி திருமுடி
சொன்மணி குண்டலக் காதி உழைக் கண்ணி
நன்மணி சூரிய சோம நயனத்தள்
பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே..9


பூரித்த பூவிதழ் எட்டினுக் குள்ளேஓர்
ஆரியத் தாள்உளள் அங்கெண்மர் கன்னியர்
பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும்
சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே.. 10

கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை யோகி இறைவி பராசத்தி
அண்டமொ டெண்டிசை தாங்கும் அருட்செல்வி
புண்டரி கத்தினுட் பூசனை யாளே.. 11

பூசனை கந்தம் புனைமலர் மாகோடி
யோசனை பஞ்சத் தொலி வந்துரை செய்யும்
வாச மிலாத மணிமந் திரயோகம்
தேசந் திகழும் திரிபுரை காணே.. 12


நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே.. 23

கோலக் குழலி குலாய புருவத்தள்
நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன்னமு தானந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.. 26

கொண்டனள் கோலம் கோடி அனேகங்கள்
கண்டனள் எண்ணெண் கலையின்கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
தண்டலை மேல்நின்ற தையல்நல் லாளே.. 28

ஸ்ரீ வைரவி - ஸ்ரீ வைரவர்

அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சம்என் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க்
கின்சொல் லளிக்கும் இறைவிஎன் றாரே.. 35
***
ஓம் சக்தி ஓம்
சக்தி ஓம் சக்தி
ஓம்
***

வியாழன், ஜனவரி 27, 2022

பனிமலைச் சாரலில்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட
வேண்டும்..
***

நேற்று பாரதத்தின் எழுபத்து மூன்றாவது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது..


இதனிடையே
பனி படர்ந்த
இமயமலைச் சாரலில் 
பாரதத்தின் தவப்புதல்வர்கள் குடியரசு நாளைக் கொண்டாடிய செய்திகளுடன் இன்றைய பதிவு..


லடாக் எல்லையில் 15 ஆயிரம் அடி உயரத்தில்  மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் குளிரில்
இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்
 குடியரசு தின விழாவை உற்சாகமாகக்  கொண்டாடியுள்ளனர்.


உத்தர்கண்ட் மாநிலம் மனா பள்ளத்தாக்கு பகுதியில் 11 ஆயிரம் அடி உயரத்தில் 
இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 
" பாரத் மாதா கி ஜே!.. " என்ற முழக்கத்துடன் குடியரசு தினத்தைக் கொண்டாடியுள்ளனர்..


உத்தர்கண்ட் மாநிலத்தில் 12 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள குமாண் - ஆலி பகுதியில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் குளிரிலும் இந்தோ திபெத்திய பாதுகாப்பு படையினர் குடியரசு தினத்தைக் கொண்டாடியிருக்கின்றனர்.


ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மற்றும் பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களும் தேசியக்கொடி ஏற்றி குடியரசு தினத்தை கொண்டாடியுள்ளனர்..
***
செய்தித் தொகுப்பும்
படங்களும் தினமலர் இணைய தளத்தில் இருந்து..

வாழிய பாரதம்
வாழிய வாழியவே!..
வந்தே மாதரம்.. வந்தே மாதரம்!..
***

புதன், ஜனவரி 26, 2022

வந்தே மாதரம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட
வேண்டும்..
***

இன்று
நமது தாய்த்திரு நாட்டின்
குடியரசு தினம்..


இம்மண்ணிற்காக
அனைத்தையும் ஈந்த
உத்தமர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
***
அனைவருக்கும்
அன்பின் இனிய 
குடியரசு தின
நல்வாழ்த்துகள்..


பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வர் - இந் நினைவகற் றாதீர்!..
பாரத நாடு பார்க்கெலாம் திலகம்
நீரதன் புதல்வர் - இந் நினைவகற் றாதீர்!..

ஜய ஜய பவானி..
ஜய ஜய பாரதம்!..
ஜய ஜய மாதா!..
ஜய ஜய துர்கா!..
-: மகாகவி பாரதியார் :-

வந்தே மாதரம்..
வந்தே மாதரம்!..
***

ஞாயிறு, ஜனவரி 23, 2022

ஜெய் ஹிந்த்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட
வேண்டும்..
**
இன்று
மாவீரர் நேதாஜி
சுபாஷ் சந்த்ர போஸ்
அவர்களது
நூற்றிருபத்தைந்தாவது
பிறந்த நாள்..


பாரதத் தாய் பெற்றெடுத்த தவப்புதல்வர்களுள் தனித் தன்மையானவர் 
" நேதாஜி " என்று சிறப்புடன் அழைக்கப்பட்ட சுபாஷ் சந்த்ர போஸ்..

அவரது வாழ்க்கை நேர்மையும் வாய்மையும் வீரமும் மிக்கதாகவே இருந்திருக்கின்றது..

அதனால் தானே சர்வாதிகாரியான ஹிட்லரை நேரில் சந்தித்தபோது உங்களது அறிவுரை இந்தியர்களுக்குத் தேவையில்லை என்று சொல்ல முடிந்திருக்கின்றது..

சத்ரபதி சிவாஜி, சர்தார் வல்லப பாய் படேல் போன்ற உத்தமர்களைப் போல தாய் மண்ணை உயிருக்கும் மேலாக மதித்த மாணிக்கம்
நேதாஜி..


1919 ஏப்ரல் ஏழாம் தேதியன்று ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக் கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்தான் ஜெனரல் மைக்கேல் ஓ டையர் என்பவன்.. அவனை 1940 மார்ச் மாதம் 19 ல் சுட்டுக் கொன்றார்
மாவீரர் உதம் சிங்..

இச்செயலை விமர்சித்து கண்டித்தார் காந்திஜி..
உதம் சிங்கைப் புகழ்ந்துரைத்த நேதாஜி -
நாடே கொண்டாடிய மகாத்மாவிடம் அவரது கொள்கை தவறு என்றும்
வெள்ளையனை விரட்டியடித்து சுதந்திரம் பெறுவதற்கு ராணுவ நடவடிக்கையே சிறந்தது என்றும் முழங்கினார்..


1938 ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பு வகித்த நேதாஜி அவர்கள்  1939 ல் மறுபடியும் போட்டியிட்டார்..


அதனை விரும்பாத காந்திஜி தனது ஆதரவாளர் பட்டாபி சீதாராம் என்பவரை எதிராக நிறுத்தினார்..

தேர்தலில் நேதாஜி வெற்றி பெற்றார்.. உடனே தனது ஆதரவாளரின் தோல்வி தன்னுடைய தோல்வி என்று சொல்லி வழக்கம் போல உண்ணாவிரதம் இருந்தார் காந்திஜி.. 

அத்துடன் நேதாஜி காங்கிரஸை விட்டு விலகினார்..

1940 ல் ராஜ துரோகி என்ற குற்றச்சாட்டுடன் பிரிட்டிஷ் அரசு
நேதாஜியை சிறையில் அடைத்தது.. அவர் அங்கிருந்து தப்பித்து ஆப்கானிஸ்தான், இந்துகுஷ்  கணவாய் வழியாக  ரஷ்யாவை அடைந்தார்..


1941 ல் பெர்லினில் இருந்து இந்திய தேசிய வானொலியினை இயக்கி
பாரதத்தின் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்..


ஜப்பான் நாட்டின் ஆதரவுடன் 1943 ல் சிங்கப்பூரில் இந்திய
பெண்கள் படைப் பிரிவுடன் கூடிய தேசிய ராணுவத்தை அமைத்து   இந்திய சுதந்திரத்தை அறிவித்தார்.. சுதந்திரக் கொடியினை ஏற்றினார்..

மலேஷியா, பர்மா நாடுகளின் வழியே படை நடத்தி பாரதத்தின் அஸ்ஸாம் காட்டிற்குள் புகுந்து பிரிட்டிஷ் படைகளுக்குப் பெரும் பின்னடைவைக் கொடுத்தவர்..

இரண்டாம் உலகப் போரில் 1945 ஆகஸ்ட்  ஆறாம் நாளன்று ஹிரோஷிமா நகரின் மீதும் அடுத்த இரண்டு நாட்களில் நாகசாகி நகரின் மீதும்  அணுகுண்டுகளை வீசியது அமெரிக்கா.. அதனை அடுத்து ஜப்பான் சரணடைந்ததுடன் அதன் ஆதரவும்  தடைப்பட்டது..

அத்துடன் வேறு காரணங்களும் சேர்ந்து கொள்ள இந்திய தேசிய ராணுவம் நிலை குலைந்தது..


ஆயினும் இந்தியாவை விட்டு ஓடி விடவேண்டும் என்று வெள்ளையர்கள் முடிவெடுக்க இந்திய தேசிய ராணுவமும் ஒரு காரணம் என்பதை எவரும் மறைக்க இயலாது..

1945 ஆகஸ்ட் 18 அன்று
தைவான் நாட்டில்
நிகழ்ந்த விமான விபத்தில்
நேதாஜி அவரகள்
சிக்கிக் கொண்டார் என்று சொல்லப்பட்டாலும்
அவரது மறைவின் முடிச்சுகள் இன்றுவரை அவிழாமலே இருக்கின்றன..

சிங்கப்பூர் தேசிய அருங் காட்சியகத்தில் நேதாஜி அவர்களைப் பற்றிய விவரங்கள் நிறைய இருக்கின்றன..


பதிவில் உள்ள
தகவல்களை
விக்கிபீடியா வழியாகத்
திரட்டி வழங்கியுள்ளேன்..


மேற்கு வங்கத்தின் கட்டாக் நகரில் ஜானகி நாத் போஸ் பிரபாவதி தேவி தம்பதியரின்
திருமகனாக 1897  ஜனவரி 23  அன்று  பிறந்தவர் சுபாஷ் சந்த்ர போஸ் .. 

" ஜெய் ஹிந்த் " என்ற  முழக்கத்தை முன்னெடுத்து நடந்த வீரத் திருமகனை நன்றியுடன் நினைந்து கை கூப்பி வணங்குவோம்..
***
ஜெய்ஹிந்த்.. ஜெய்ஹிந்த்..
ஃஃஃ

வெள்ளி, ஜனவரி 21, 2022

தை வெள்ளி 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட
வேண்டும்..
**
இன்று
தை மாதத்தின்
இரண்டாவது
வெள்ளிக்கிழமை..

அம்பிகையையும்
அவள் ஈன்றெடுத்த
அறுமுக வேலனையும்
வழிபடுவதற்கு
உகந்த நாள்..

இன்றைய
பதிவில்
அருணகிரிநாதர்
அருளிச் செய்த
வேல் விருத்தத்தின்
திருப்பாடல் ஒன்று..

அம்பிகையின்
திருப்பெயர்களை
அருணகிரி நாதர்
சொல்கின்ற
அழகே.. அழகு..

சிந்தித்து
இன்புறுவோம்!..


வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன்
வெற்றிபெறு சுடராழியும்

விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங் கல்லி
வெல்லா எனக்கருதியே

சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ்
சதுர்முகனும் நின்றிரப்பச்

சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
தனிஆண்மை கொண்ட நெடுவேல்


கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
கெளமாரி கமலாசனக்

கன்னி நாரணி குமரி த்ரிபுரை பயிரவி அமலை
கெளரி காமாக்ஷி சைவ


சிங்காரி யாமளை பவாநி கார்த்திகை கொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வச்


சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொன் திருக்கை வேலே..
***

வெற்றிவேல்
முருகனுக்கு
அரோஹரா..
வீரவேல் முருகனுக்கு
அரோஹரா!..
ஃஃஃ

வியாழன், ஜனவரி 20, 2022

தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
தைப்பூசத்
திருநாளின்
காணொளிகள்..இவை இரண்டும்
மலேஷிய நாட்டின்
பத்துமலை திருத்தலம்..


மேலே
சிக்கல்
ஸ்ரீ சிங்கார வேலவன்
தரிசனம்..


மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையும் அங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்
கைதான்  இருபது உடையான் தலை பத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.. 27
-: கந்தர் அலங்காரம் :-
**

தைப்பூசம்
தமிழர் தம்
வழிபாட்டின் திருநாள்..
தேவாரத்தில் பேசப்படும்
நன்னாள்..
பாரதன் புகழ்
பாரெங்கும் ஓங்குக..

வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா..
வீரவேல் முருகனுக்கு
அரோஹரா..
ஃஃஃ