நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 30, 2024

ஊற்றத்தூர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 16  
ஞாயிற்றுக்கிழமை


திருத்தலம்
திருஊற்றத்தூர்

இறைவன்
ஸ்ரீ சுத்த ரத்னேஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி

தீர்த்தம்
பிரம்ம தீர்த்தம்
தலவிருட்சம்
வில்வம்

சிறுநீரகக் கோளாறுகளைத் தீர்க்கின்ற திருத்தலம் என்று இன்றைய நாளில் அனைவராலும் கொண்டாடப்படுகின்ற திருக்கோயில்..

இந்தக் கோயிலில் தான் உலகிலேயே  அரிதான, பஞ்சநத கல்லில் வடிக்கப்பட்ட
நடராஜர் விளங்குகின்றார்..

பஞ்சநத நடராஜர்..

அதென்ன பஞ்சநத நடராஜர்!..


ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், கஜ நதனம், யாழி நதனம்  - என்ற ஐந்து வகையான கற்களில் பஞ்சநதனம் என்பது ஒளி வீசும் தன்மை உடையது..

ஸ்ரீ சிவகாமசுந்தரி
மிகவும் அரிதான, இந்த பஞ்சநத கல்லில் செய்யப்பட்டது தான் இக்கோயிலின் நடராஜர் திருமேனி. 

பஞ்சநத கற்கள் சூரியனில் இருந்து வருகின்ற ஆரோக்கியக் கதிர்களை ஈர்த்து வைத்து வழங்குகின்ற ஆற்றல் உடையனவாம்.. 

இந்த வகைக் கல் தற்போது எங்குமே கிடையாது என்று கூறப்படுகிறது.

சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதனப் பாறையினால்  நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

எனவே இந்த கோயில் பஞ்சநத நடராஜர் கோயில் என்ற போற்றப்படுகின்றது..

இன்றைய ஊட்டத்தூர் முற்காலத்தில் ஊற்றத்தூர்.. 
வரலாற்றுச் சிறப்புடன் விளங்கிய ஊர்..

ஸ்ரீ சுத்த ரத்னேஸ்வரர் திருக்கோயில்  ராஜராஜ சோழரின் திருப்பணி.. 

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், திருச்சிக்கு முன்னதாக பாடாலூர் என்ற ஊரில் இருந்து நான்கு கிமீ. தொலைவில் அமைந்திருக்கிறது அருள்மிகு சுத்த ரத்னேஸ்வரர் திருக்கோயில்.. 

ராஜராஜ சோழன் வழிபட்டு நோய் நீங்கப் பெற்றதாகச்  சொல்லப்படும் இந்தக் கோயில்  பற்பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.

இந்தக் கோயிலில் வேறு எங்குமே காண முடியாதவாறு, ஸ்வாமி சந்நிதிக்கு நேர் எதிரிலேயே தீர்த்தம் அமைந்திருப்பது. 

மற்றொரு சிறப்பம்சம், இங்கே தனிச்சந்நிதி கொண்டிருக்கும் ஆடல்வல்லான்!..

சிறுநீரகக் கோளாறுகளைத் தீர்க்கின்ற திருத்தலம் என்று அனைவராலும் கொண்டாடப்படுகின்ற திருக்கோயில்..

சிறுநீரகக் கோளாறுகள் என்றில்லை, நமது சகல பிரச்னைகளுக்கும் தீர்வெனும் மருந்து என - இத்தலத்தின் இறைவனான  ரத்தினேஸ்வரர். 

வருடந்தோறும் மாசி மாதம் 12,13,14 ஆம் நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவலிங்கத் திருமேனியில் படர்கின்றன.. 

பஞ்சநதனக் கல்லிற்கு மருத்துவச் சிறப்புகள் உள்ளதாக சித்தர்கள் திருவாக்கு..  

பஞ்சநதனக்கல் நடராஜருக்கு வெட்டிவேர் மாலை அணிவித்துப் பின்னர் அம்மாலையைப் பிரம்ம தீர்த்தத்தில் ஊறவைத்து - அந்த தீர்த்தத்தை நாற்பத்தெட்டு நாட்கள் பருகினால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை..

ஒருமுறையேனும் இந்தத் தலத்துக்குச் சென்று, ஸ்ரீ சுத்த ரத்னேஸ்வரரையும், அகிலாண்டேஸ்வரி அம்மனையும்
 நடராஜப் பெருமானையும் தரிசித்து, உடற்பிணிகளோடு மனப் பிணிகளும் நீங்கிட வேண்டும் என்று வணங்கி  வருவோம்...

இப்பதிவினை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

அப்பர் பெருமான் 
இத்தலத்தினை வணங்கியுள்ளார்... 

ஆயினும் 
தனியான திருப்பதிகங்கள் 
கிடைக்கப் பெறவில்லை..

ஊற்றத்தூர் சொல்லப்பட்டுள்ள திருவூர்த் தொகை (க்ஷேத்ரக் கோவை) யின் இரண்டு திருப்பாடல்கள்..


நறையூரிற் சித்தீச்சரம் நள்ளாறு
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூல மங்கை
தோணிபுரந் துருத்தி சோமீச் சரம்
உறையூர் கடலொற்றியூர் ஊற்றத்தூர்
ஓமாம் புலியூரோர் ஏட கத்துங்
கறையூர் கருப்பறியல் கன்றாப் பூருங்
கயிலாய நாதனையே காண லாமே.. 6/70/10..

பிறையூருஞ் சடைமுடியெம் பெருமா னாரூர்
பெரும்பற்றப் புலியூரும் பேரா வூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும்
நாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
அளப்பூரோ மாம்புலியூர் ஒற்றி யூருந்
துறையூருந் துவையூருந் தோழூர் தானுந்
துடையூருந் தொழ இடர்கள் தொடரா அன்றே.. 6/71/4
-: திருநாவுக்கரசர் :-

ம் நம சிவாய
சிவாய நம ஓம் 
*** 

சனி, ஜூன் 29, 2024

இன்சொல்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 15  
சனிக்கிழமை


" இப்போ தான் அழகா இருக்கறீங்க!... "

" ஏன்!.. உம் புள்ள மறுபடியும் தப்பு பண்ணிட்டானா?... "

" கோபம் வந்தாலும் அம்சமாத் தான் இருக்கறீங்க!.. "

 
-: நன்றி :-


மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன்சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலையானே பொன்னிசூழ் திரு அரங்கா
எனக்கினிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே.. 901
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
நமோ நாராயணாய 
***


வெள்ளி, ஜூன் 28, 2024

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 14  
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
-: பொது :-


தன்னன தனதன தன்னன தனதன
தன்னன தனதன ... தனதான

கன்னியர் கடுவிட மன்னிய கயலன
கண்ணிலு மிருகன ... தனமீதுங்

கன்மைகள் மருவிய மன்மத னுருவிலி
மென்மைகொ ளுருவிலு ... மயலாகி

இன்னல்செய் குடிலுட னின்னமு முலகினி
லிந்நிலை பெறவிங ... னுதியாதே

யெண்ணுமு னடியவர் நண்ணிய பதமிசை
யென்னையும் வழிபட ... விடவேணும்

பொன்னவ மணிபயில் மன்னவ புனமற
மின்முலை தழுவிய ... புயவீரா

புண்ணிய முளபல விண்ணவர் தொழுமுதல்
எண்மலை யொடுபொரு  ... கதிர்வேலா

தன்னிறை சடையிறை யென்முனி பரவரு
இன்னிசை யுறுதமிழ் ... தெரிவோனே

தண்ணளி தருமொரு பன்னிரு விழிபயில்
சண்முக மழகிய ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


நஞ்சுடைய மங்கையரின்
கயற் கண்களிலும் தனங்களிலும்

கல் மனத்தனும் உருவமிலாதவனும் ஆகிய  
மன்மதனின் மலரம்புகளினால்

காமம் கொண்டு துன்பப்படுகின்ற 
அவல நிலையில் மீண்டும் நான் பிறவாமல்,

உன்னைத் தியானித்து உனது திருவடியில் 
வழிபாடு செய்கின்ற அடியார்களைப் போல 
என்னையும்  நன்னெறியில் 
செலுத்த வேண்டுகிறேன்...

பொன் முதலாய நவ மணிகளையும் அணிந்துள்ள மன்னவனே.. 
தினைப் புனத்தில்  வேடர் குலக்கொடி 
வள்ளி நாயகியின் தனங்களைத் 
தழுவிய மாவீரனே...

புண்ணியத்துடன் சுவர்க்கத்தில் 
தேவர்கள் பலரும் தொழுது நிற்கின்ற 
முதல்வனே..

கிரவுஞ்ச மலையொடு
அசுரர்க்கு அரணான நின்ற 
ஏழு மலைகளையும் தூளடித்த 
கதிர்வேலவனே..

 தனக்குத் தானே தலைவன் ஆகி - 
சடா முடியுடைய சிவபெருமானின் 
புகழினைப் பாடுதற்கு இன்னிசை தந்த 
ஞானசம்பந்தப் பெருமானாக 
வந்தருள் செய்தவனே..

தண்னருள் புரிகின்ற 
பன்னிரு திருவிழிகளை உடையவனே.. 
எங்கள்  பெருமானே!..
**

முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், ஜூன் 27, 2024

பெரிதினும் பெரிது..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 13  
வியாழக்கிழமை


தஞ்சை ராஜராஜேஸ்வரத்தின் இரண்டாவது ராஜ கோபுரமாகிய ராஜராஜன் திருவாயிலில் வழக்கம் போல வட, தென் புறங்களில் பிரம்மாண்டமான துவாரபாலகர்கள்.. 
இப்படி - தென்புறத்தில்
அமைந்துள்ள துவார பாலகருடைய கதாயுதத்தைக் கவனியுங்கள்..


இரு நான்கு திசைகளிலும் தேடிப் பார்த்தாயிற்று.. இறைவனை விடப் பெரியவன் என்று எவரையும் காணோம்!... - என்று சொல்லாமல் சொல்லுரைக்கும் துவாரபாலகர்.


வலிமையுடையது யானை.. அந்த யானையை அதை விட வலிமையுள்ள பாம்பு ஒன்று விழுங்க - அந்தப் பாம்பினை இவர் தனது கதாயுதத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்... இப்படி ஆனை விழுங்கியைக் கையாளும் இவரது பராக்கிரமம் தான் என்ன?... இத்தகைய துவாரபாலகரைப் பராமரிக்கும் இவரது தலைவனாகிய இறைவனின் கீர்த்திதான் என்ன!?..


இப்படியாகிய இறைவன் தான் அங்கே திரு மூலத்தானத்தில் குடி கொண்டுள்ளார்...


இறைவனை விடப் பெரியவர் எவரும் இல்லை என்ற ஒன்றினை மட்டும் மனதில் வைத்து நடந்து கொள்ளுங்கள்!.. 
- என்று அறிவுடன் அறமும் உரைத்து நிற்கின்றார்...

நமது பதிவு 2019 ல்..

தொடர்ந்து -
சிவத்திரு சிவாக்கர தேசிக ஸ்வாமிகளின் அருளுரையைக் கேளுங்கள்..


 நன்றி.. நன்றி..
**

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
 அருமறையின் அகத்தானை அணுவை யார்க்குந்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
 திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
 கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
 பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. 6/1/1
-: திருநாவுக்கரசர் :- 

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

புதன், ஜூன் 26, 2024

தேங்காய்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 12 
புதன்கிழமை


தேங்காய்..

பழந்தமிழில் தெங்கு எனக் குறிக்கப்படுகின்ற
தென்னையின் பழம் ஆகும்...  

தெங்கம் பழம் என்று நாலடியார் கூறுகின்றது..

இன்றைக்கு தேங்காய் எனப்படும் இதில் இருந்து தான் எண்ணற்ற நலன்களும் நன்மைகளும் நமக்குக் கிடைக்கின்றன..

ஆனால் இதனை மேலை மருத்துவம் ஒத்துக் கொள்பது இல்லை..

சமீப காலங்களில் வெளி மருத்துவங்கள் -  தேங்காய், தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய் ஆகியன ஆபத்தானவை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன...

இப்போது விளம்பரம் ஒன்றில்-  " சேச்சே.. தலைக்குத் தேய்க்கின்ற எண்ணெய் சமையலுக்கா?.. சமையலுக்கு என தனியான தேங்காய் எண்ணெய்.. " - என்று வருகின்றது...

இனி வரும் காலத்தில் கத்தரிக்காய் பொரியலுக்கு இந்தத் தேங்காய் எண்ணெய்... உருளைக் கிழங்கு வறுவலுக்கு அந்தத் தேங்காய் எண்ணெய்.. என்றெல்லாம் கூச்சல்கள் வரக் கூடும்..

தைப் பற்றி சிந்தித்துக் கொள்ள வேண்டியது அவரவர் பொறுப்பு..


இன்று தென்னங்காயில் இருந்து நாம் பெறுகின்ற தேங்காய்ப் பாலைப் பற்றி சில வரிகள்..

குரும்பை, வழுக்கை,
இளநீர், தேங்காய், நெற்று, கொப்பரை எனப்படும் அங்கங்களுக்கு ஆங்கிலத்தில் சொற்கள் இல்லை..

பாரம்பரிய  சமையலில் பெரும்பங்கு வகிப்பது தேங்காய்..

உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் திகழ்வது தேங்காய்..


இளநீரும் தேங்காயின் தண்ணீரும் மிக மிக சுத்தமானவை..


கோடை காலத்து வெயிலின் தாக்கத்திற்கு  இளநீர் தான் அருமருந்து...

நல்ல குணம் உடைய மக்களை தென்னைக்கு ஒப்பாகக் கூறுகின்றார் ஔவையார்..

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தரு தலால்..
-: மூதுரை :-

உலோபிகளின் செல்வம் நாய் பெற்ற தேங்காய்க்கு இணையானது என்கின்றது நாலடியார்..

வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி
வேய்முற்றி முத்துதிரும் வெற்ப அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம்.


தேங்காய் பாலில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உள்ளன. 

 Vitamin C, E,  மற்றும்  B Complex, Iron, Pottcium மற்றும் Magnesium  போன்ற தாதுக்கள் உள்ளன. 

குறிப்பாக உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை நமது உடலிலின் நோயெதிர்ப்பு சக்தியை சிறப்பாக்குகின்றது, 
தேங்காய்ப் பால் எலும்பின் வளர்ச்சி ஆற்றல் ஆரோக்கியம் இவற்றில்
 பங்களிக்கின்றது..

தேங்காய் பால் அடிக்கடி அருந்துபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ்  அதிகம் சேர்கின்றது.. இதனால் எலும்புருக்கி நோய்  ஏற்படுவதில்லை.. 

மாதத்திற்கு ஒருமுறை   நாள் முழுவதும்  தேங்காய் பாலை மட்டும் அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் நீங்குகின்றன..
இரத்தம் சுத்தமாகின்றது.  உடல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கின்றது.. 

தேங்காய்ப் பால் அருந்துகின்ற வழக்கம் உடையவர்களுக்கு  சீக்கிரத்தில் தோல் சுருக்கங்கள் ஏற்படுவதில்லை.. தோலின் பளபளப்பு அதிகமாகி வயதான போதும் இளமைத் தோற்றமே நீடிக்கும்..

தேங்காய் பாலை சத்து அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்பு குறைகின்றது...

தேங்காய் பால் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே  தேங்காய் பாலை அடிக்கடி
அருந்துவதால் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்து கொள்ளலாம்...


தேங்காய் பால் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துவதால்  அனைத்து உடல் நலன் ஓங்குகின்றது.. ஓங்கிய உடல் நலத்தில் குறை ஒன்றும்  இருப்பதில்லை... 

இதனால் தான் தென்னையின்  இளங்குருத்தை - தென்னம் பிள்ளை என்றது தமிழ்!..


இப்போது விளங்கியிருக்கும் - தேங்காய் கெட்டது என்று சொல்லப்படுவதன் ரகசியம்!..


நம்முடைய நலம்
நமது கையில்..

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு..

பூங்கழல் தொழுதும் பரவியும் புண்ணியா 
புனிதா உன் பொற்கழல்
ஈங்கு இருக்கப் பெற்றேன் என்ன 
குறை உடையேன்
ஓங்கு தெங்கு இலையார் கமுகு 
இளவாழை மாவொடு மாதுளம் பல
தீங்கனி சிதறும் திருஆரூர் 
அம்மானே.. 4/20/4
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

செவ்வாய், ஜூன் 25, 2024

கலைக்கூடம் 6


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 11
செவ்வாய்க்கிழமை


தஞ்சையில் கருட சேவைக்கு மறுநாள் வெண்ணெய்த் தாழியன்று கீழ ராஜ வீதியில் நெரிசல்... இருசக்கர, நாற்சக்கர வாகனங்களோடு உள்ளூர் கழிசடைகளும் புழங்கிக் கொண்டிருந்தன...

அரண்மனை அஞ்சலகத்தின் அருகில் சுவர் ஓரமாக நின்று கொண்டிருந்த முதியவர்களுடன் மோதினான் கயவன் ஒருவன்...

அப்போது அறிமுகமான பெரியவர் ஒருவர் அரண்மனைக்குச் செல்கின்ற வழியைக் கேட்டார் 

அவர் திரு ஜெகந்நாதன் (87)... விருத்தாசலத்திற்கு அருகில் ஒரு கிராமம்...

அவருக்கு வழி சொல்வதை விட அழைத்துச் சென்று காட்டி விடுவோம் என, நானும் உடன் சென்றேன்.. 

அப்போது எடுக்கப்பட்டவையே கலைக்கூடத்தின் படங்கள்..

அரண்மனையின் ஒரு பகுதியில் இரண்டு மணி நேரம் கழித்த பின்பு பெரியவர் என்னைத் தம்முடன் அழைத்துச் சென்ற இடம் - தஞ்சை ஸ்ரீ கொங்கணேஸ்வரர் திருக்கோயிலில் எதிரே ஐயன் குளக்கரையில் அமைந்திருக்கும் தஞ்சை ராஜராஜ சமய சங்கம்..

அங்கே நூற்றுக்கணக்கான அடியார்கள் தங்கியிருந்தனர்... அறச் செயலாக மூன்று நாட்களும் அவர்களுக்கு அங்கே சாப்பாடு... சாப்பாடு எல்லாருக்கும் பொது... 

பெரியவரின் அன்பிற்குக் கட்டுப்பட்டு நான் அங்கே அவருடன் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினேன்...
திரு. ஜெகந்நாதன்


கலைக்கூட வளாகத்தின் 
வேறு காட்சிகளோடு
 அடுத்தொரு பதிவில் சந்திப்போம்..

வாழ்க கலை
வளர்க தஞ்சை..

சிவாய நம ஓம்
***