நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 28, 2022

தரிசனம் 9

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

பாடகச்சேரி சுவாமிகள்..

மனிதர்கள் மட்டுமன்றி சாதாரண விலங்குகளிடத்திலும் அன்பைக் காட்டியவர்.. அந்நாட்களில் சிதிலமுற்றிருந்த பல ஆலயங்களை திருப்பணி செய்து வைத்தவர்..
அப்படியானால் அவரிடத்தில் பெரும் பொருட் செல்வம் இருந்திருக்க வேண்டுமே!..

அப்படியெல்லாம் எதுவும் இல்லை..
திரு அருட் செல்வராகிய ஸ்வாமிகள் - தமது
கழுத்தில் பித்தளைச் செம்பினைக் கட்டிக் கொண்டு
தெருத் தெருவாகச் சென்று யாசகம் ஏற்று அதனைக் கொண்டு திருப்பணிகளை நடத்தியவர்.. தர்மம் செய்தோர் அனைவருக்கும் புண்ணியத்தை சேர்த்தவர்..

யோகங்கள் பலவற்றையும் கற்றவர்.  பலருடைய பிணிகளைத் துரத்தியவர்.. அகாலத்தில் இறந்தவர்களை உயிர்ப்பித்துக் கொடுத்தவர்..

ஸ்வாமிகளின் திரு அவதாரம் நிகழ்ந்தது 146 ஆண்டுகளுக்கு முன்.. யுவ/ தாது வருடம் (1876) என்று அறியப்படுகின்றது..
கொங்கு  மண்டலத்தின் மஞ்சப் பாளையம் கிராமத்தில் ஸ்வாமிகள் தோன்றினார்.. 
கந்தஸ்வாமி - அர்த்தநாரி அம்மையார் எனும் புண்ணியர்களே ஸ்வாமிகளின் அருட்தந்தை தாய் ஆவர்..

இளம் வயதிலேயே தாய் தந்தையர் இறைவனடி சேர்ந்து விட்டனர்.. சிறு வயதில் துறவறம் மேற்கொண்ட ஸ்வாமிகள் தஞ்சை மாவட்டத்தின் பாடகச்சேரி கிராமத்துக்கு வந்த போது அவருக்கு வயது பன்னிரண்டு.. அவ்வூர் நிலக்கிழாரிடம் மாடு மேய்க்கும் வேலையை ஏற்றுக் கொண்ட போது பற்பல சித்திகளை அடைந்தார்..

கர்நாடகத்தை சேர்ந்த 
மகாயோகி எரிதாதா சுவாமிகள் எனப்பட்ட மகான் தமது சீடராக இவரை அனுகிரகித்தார்.. நேபாள சுவாமிகள் என்றழைக்கப்பட்ட ராஜாராம் ஸ்வாமிகளிடமும் பக்தி கொண்டவர்.. இவ்வேளையில் அருட் பிரகாச வள்ளலார் ஸ்வாமிகள்  அருவமாக பாடகச்சேரிக்கு வந்து ஸ்வாமிகளை ஆட்கொண்டதாக வரலாறு..

அதன்பின்,
ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சியளிப்பது, தன் உடலை மறைத்து விட்டு ஆகாய வழியில் செல்வது, தன் உடலைத் தானே பிரித்துப் போடுவது ( நவ கண்டம்), தொடுவதினாலும் விபூதி கொடுப்பதினாலும் பிறரது நோயைத் தீர்ப்பது, அகாலத்தில் இறந்தோரை உயிர்ப்பிப்பது - என, பாடகச்சேரி ஸ்வாமிகளின் அருட்பணி தொடர்ந்தது..

பாடகச்சேரியில் பல காலம் இருந்த ஸ்வாமிகள் - தஞ்சை ஸ்ரீ வெள்ளைப் பிள்ளையார் மற்றும் புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் களுக்குத் திருப்பணி மேற்கொண்டு குடமுழுக்கு செய்து வைத்திருக்கின்றார்.. தஞ்சை கரந்தை வடவாற்றின் கரையில் அன்பர் ஒருவரது இல்லத்திலும் சில காலம் தங்கி அருள் செய்திருக்கின்றார்..

தஞ்சை
மாரியம்மன்கோயிலில்
தஞ்சை ஸ்ரீ வெள்ளைப் பிள்ளையார் மற்றும் புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில்களில் ஸ்வாமிகளின் சுதை திருமேனிகள் விளங்குகின்றன..
குடந்தை ஸ்ரீ நாகேஸ்வரன் கோயில் ராஜ கோபுரத் திருப்பணியும் (1920) ஸ்வாமிகளுடையதே.. ராஜ கோபுரத்தின் முதல் தளத்தின் மத்தியில் ஸ்வாமிகளின் சுதை திருமேனி திகழ்கின்றது..

ஸ்ரீ பைரவ உபாசனை என்று ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான நாய்களுக்கு அன்னம் அளிப்பது ஸ்வாமிகளின் சிறப்புகளில் ஒன்று..

இலைகளில் பல வகையான பதார்த்தங்களுடன் அன்னத்தை இட்டு - கை தட்டி அழைத்ததும் மின்னல் வேகத்தில் அத்தனை நாய்களும் அந்த இடத்தில் தோன்றி இலையின் முன் அமர்ந்து அமைதியாகச் சாப்பிட்டு விட்டு வந்த வேகத்தில்  மறைந்து விடும் என்கின்ற குறிப்புகளும் உள்ளன..

தவிரவும்,
சென்ற நூற்றாண்டில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தாது (1936/37) வருடப் பஞ்சத்தின் போது இரண்டு முறை - ஒரே நாளில் இலட்சம் பேருக்கு மேல் அன்னதானம் செய்வித்திருக்கின்றார் ஸ்வாமிகள்..

கும்பகோணத்தில் முத்துப்பிள்ளை மண்டபம் என்னும் இடத்தில் திருமடம் ஒன்றை உருவாக்கி அங்கே ஏழைகளுக்காக கூழ்சாலை அமைத்து எளியவர்களின் பசிப்பிணி நீக்கியருளினார்..

விஷூ வருடம் (1942) ஆடி மாதத்தின் பூர நட்சத்திரத்தன்று திரு ஒற்றியூரில்  ஸ்வாமிகள் முக்தி எய்தினார்கள்..

ஆனாலும், கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தின் திருமடத்தில் ஸ்வாமிகள்  தாமே உருவாக்கிய பாதாள அறையிலும் ஜீவனுடன் இருப்பதாக - ஸ்வாமிகளே அருளிச் செய்ததாக அன்பர்கள் நம்புகின்றனர்..

அன்பும் இரக்கமும் கொண்ட நெஞ்சங்களில் என்றும் நிறைந்திருக்கிறார் பாடகச்சேரி ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள்..

பாடகச்சேரி கிராமம் கும்பகோணம் மன்னார்குடி சாலையில் ஆலங்குடிக்கு 2 கி.மீ முன்னதாக கிழக்காகப் பிரியும் சாலையில் உட்புறம் 2. கி.மீ தொலைவில் வெட்டாற்றின் கரையில் உள்ளது..









கடந்த 18/2 அன்று பாடகச்சேரி திருமடத்திற்குச் சென்றிருந்தேன்..  இருபது ஆண்டுகளுக்குப் பின் திருப்பணி நடந்து கொண்டிருக்கின்றது..


அன்னதானக் கூடம்


திருமடத்தின் முகப்பு

திருமடத்தின் எதிரில் திருக்குளம்

வெட்டாறு

அங்கு சென்றதும் ஓடி வந்து நம்மை வரவேற்பவர்கள் ஸ்ரீ ஸ்வாமிகளின் அன்புக்குரிய செல்லக்குட்டிகள்.

ஓம் ஸ்ரீ பாடகச்சேரி மகான் திருவடிகள் போற்றி.. போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

ஞாயிறு, பிப்ரவரி 27, 2022

கோசாலை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***


கோவிந்தபுரம்
ஸ்ரீ விட்டல் பாண்டுரங்க ருக்மணி சமஸ்தான் தரிசனத்தின் தொடர்ச்சியாக இன்றைய பதிவு - 
கோசாலையில் எடுக்கப்பட்ட சில  படங்களுடன்..


கோசாலையின் நுழைவு வாயில் குழலுடன் கூடிய ஸ்ரீ கிருஷ்ண திருக்கரங்கள்..  அவனது அரவணைப்பில் இருப்பதைப் போல் இருந்தது..

தமிழகத்தின் உம்பளாச்சேரி ( தஞ்சை) மற்றும் காங்கேயம் இனங்களையும் சேர்த்து
பாரதத்தின் அனைத்து பசு இனங்களுடன் - ஆயிரம் பசுக்கள் இருக்கின்றன என்கின்றார்கள்.. 
ஆங்காங்கே அந்தந்த இனங்களின் சிறப்பு இயல்புகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் குறித்து வைக்கப்பட்டுள்ளன..





பிரம்மாண்டமான தொழுவத்தினுள் சுற்றிச் சுற்றி வந்த நேரம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..





கோசாலையிலும் கோவிந்தபுரம் ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள் அதிஷ்டானத்திலும் யோகி ஸ்ரீ ராம் சுரத்குமார் ஸ்வாமிகளின் தியான பீடத்திலுமாக பொழுது நகர்ந்தது..

இரவு 7:30 மணியளவில் ஸ்ரீ பாண்டுரங்கனுக்கு மகா ஆரத்தி.. நாம சங்கீர்த்தனம்.. புஷ்பாஞ்சலி.. பிரசாதம் வழங்கப் பெற்றது..







கோசாலையில்
தனது பக்த ஜனங்களுடன்
ஸ்ரீ விட்டலின் விஸ்வரூபம்..
அவர்களுடன் ஒருவராக நமக்கு இன்னும் எத்தனை பிறவிகள் வேண்டுமோ... 
அவன் ஒருனுக்குத் தான் தெரியும்!..

பிரிவதற்கு மனமில்லை.. ஆயினும் அங்கிருந்து புறப்பட்டு இல்லம் வந்து சேர்ந்த போது இரவு 10:30.. 

செயல் இழந்திருந்த செல்போனுக்கு சிறிது மின்னேற்றம் செய்துவிட்டுத் திறந்தால் - கண்ணனின் கனியமுதமாக
ஸ்ரீ பாண்டு ரங்கனின் திருமேனி அழகைப் பற்றிய காணொளி ஒன்று எனது மைத்துனர் அவர்களிடமிருந்து 
WhatsApp ல் வந்திருந்தது..
அவர் ஸ்ரீ விட்டலின் அன்பர்.. அடிக்கடி இங்கு வந்து செல்பவர்..
அந்தக் காணொளி தங்களுக்காக..


கேட்டவர்க்குக் கேட்டபடி
கண்ணன் வந்தான்..
கேள்வியிலே பதிலாக
கண்ணன் வந்தான்..

தர்மம் என்னும் தேரிலேறி
கண்ணன் வந்தான்..
தாளாத துயர் தீர்க்கக்
கண்ணன் வந்தான்..
***
ஹரே க்ருஷ்ண.. 
ஹரே க்ருஷ்ண..
ஓம் ஹரி ஓம்..
***

சனி, பிப்ரவரி 26, 2022

தரிசனம் 8

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில் -
கோவிந்தபுரம் ஸ்ரீ பாண்டுரங்க தரிசனம்..

கடந்த செவ்வாய்க் கிழமையன்று கும்பகோணத்தை அடுத்துள்ள கோவிந்தபுரம் ஸ்ரீ விட்டல் பாண்டுரங்க ருக்மணி சமஸ்தான தரிசனம்..

நன்றி - கூகிள்

கடந்த 2011 ல் இத்திருக்கோயில்
ஸ்ரீ ஸ்ரீ விட்டல் தாஸ் மகராஜ் ஸ்வாமிகளால் நிர்மாணிக்கப்பட்டு  திருக்குட முழுக்கு கண்டருளிய நிலையில் தற்போது நிகழும் பிலவ வருடம் தை 29  (11.2.22)  வெள்ளிக் கிழமையன்று இரண்டாவது திரு முழுக்கு நிறைவேறியுள்ளது..

நன்றி - கூகிள்

132 அடிகளுடன் மூலஸ்தான விமானம்.. 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் 27 படிகளுடன் கூடிய பிரம்மாண்டமான திருக் கோயில்..



தூண்கள் ஏதும் இல்லாத மகா மண்டபம் அர்த்த மண்டபங்கள் - தங்க மயமான வண்ணங்களுடன்..  கருவறையின் வாசலில் அழகின் அழகாக துவார பாலகர்கள்..

இருப்பினும் கோயிலின் உள்புறம் படங்கள்/  காணொளி எடுப்பதற்கு அனுமதி இல்லை..


பக்தர்களால் எழுதப் பெற்ற நூறு கோடி விட்டல் நாமாவளி புத்தக சாந்நித்தியங்கள் வைக்கப்பட்டிருக்கும்  கீழ் அறையின் மீது நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மூலஸ்தானத்தினுள் 
கனிவு ததும்பிட ஸ்ரீரங்கனும் ரகுமாயி எனும் ருக்மணித் தாயாரும் நின்ற திருக் கோலத்தில் கருணை மழை பொழிகின்றனர்..


இக்கோயிலின் சிறப்புகளை எல்லாம் விஞ்சியதாக விளங்குவது கோசாலை.. பிரம்மாண்டமான தொழுவம்.. கண்ட மாத்திரத்தில் கண்கள் கலங்கி விட்டன.. ஸ்ரீ தொழுவத்தில் திகழ்ந்த வாசம் என்னை எனது பதினாறு வயதிற்கு இழுத்துச் சென்று விட்டது.. 





கோகுலத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் மேய்த்தருளிய பசுக்களின் வம்சாவளிகளும் இங்கே இருப்பதுடன் புனித பாரதத்தின் அனைத்து வகைப் பசுக்களும் இங்கே பராமரிக்கப்படுவதாக எழுதி வைத்திருக்கின்றார்கள்..
இவைகளைக் கவனித்துக் கொள்வதற்கு மருத்துவர்களும் பணியாளர்களும் இங்கேயே இருக்கின்றனர்..
பால் பொருட்கள் விற்கப்படுவது இல்லை.. 


திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கஸ்வாமியின் அபிஷேகத்திற்கு இருவேளையும் பால் இங்கிருந்தே செல்கின்றது.. இங்கே ஆயிரம் பசுக்கள் இருப்பதாகச் சொல்லப் படுகின்றது.. பதினொரு முறை வலம் வந்தால் கோடி புண்ணியம் என்று இருக்கின்ற நிலையில் நான் மூன்று முறை வலம் செய்ததாக நினைவு..



இந்தப் பசங்களும் இங்கே..

வழியில் என்னை மறித்துக் கொண்ட பசுங்கன்று வாஞ்சையுடன் தன் முகத்தை என் மீது வைத்துக் கொண்டது.. சிறிது நேரம் வருடிக் கொடுத்தேன்..


என் வழி மறித்துக் கொண்ட கன்று
அப்படியும் என்னை விட வில்லை.. மீண்டும் வருகின்றேன் - என்று சொல்லியபடி பால் மணக்கும் அதன் நெற்றியில் முத்தமிட்டபடி விடை பெற்றுக் கொண்டேன்..

மாலை 6:00 மணியளவில் அருகிலிருக்கும் ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகளின் அதிஷ்டான தரிசனம், ஸ்ரீ யோகி ராம்சுரத் குமார் ஸ்வாமிகளின் தியான பீட தரிசனம்..
இதற்கு முன்னரே கைப்பேசி செயல் இழந்து விட்டது..


இரவு 7:30 மணியளவில் 
ஸ்ரீ பாண்டுரங்கனுக்கு மகா ஆரத்தி.. நாம சங்கீர்த்தனம்.. புஷ்பாஞ்சலி.. நிறைவான தரிசனம்..

மகிழ்வான நெஞ்சத்துடன் இல்லம் வந்து சேர்ந்தபோது இரவு 10:30..
சிறிது மின்னேற்றம் செய்த பிறகு  செல்போனை இயக்கினால் WhatsApp ல் காணொளி ஒன்று.. 

அது.. அடுத்த பதிவில்!..
***

ஹரே க்ருஷ்ண
ஹரே க்ருஷ்ண
ஓம் ஹரி ஓம்
***