நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஜடாயு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜடாயு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூன் 10, 2013

ஜடாயுவின் சிவபூஜை

சூரியனின் தேர்ச்சாரதியான அருணனின் புத்திரர்கள் - சம்பாதி, ஜடாயு..

ஒரு சமயம் -  இவர்கள் இருவரும் ஆவலினால் உந்தப் பெற்று சூரிய மண்டலம் வரை பறந்து சென்றனர். 

சூரியனின் வெப்பம் தாளாமல் ஜடாயு துடிக்க  - சம்பாதி தன் சிறகுகளை  விரித்து நிழலாக - தன் தம்பியைக் காப்பாற்றினான். 

ஆனாலும் சம்பாதியின் சிறகுகள் சூரியனின் வெப்பத்தினால் கருகிப் போயின.


வேதனை தாளாது தவித்த இருவரும் ஆளுக்கு ஒரு திசையாய் பிரிந்து - ஜடாயு இங்கே விழ,  சம்பாதி மகேந்திரமலையில் வீழ்ந்தான்.  

தன் அன்புக்குரிய, ரத சாரதி அருணனின் மகனான - சம்பாதியின் நிலைமை கண்டு  இரக்கங்கொண்ட  சூரியன்  

- ''..ஸ்ரீராம நாமத்தினைக் கேட்கும் போது சிறகுகள் முன் போலவே வளரும்!...'' என மொழிந்தான்.

காலச் சக்கரம் சுழன்றது .

சிவபெருமான் அருளியபடியே - ஸ்ரீராம சரித்திரத்தில் சம்பாதி மற்றும் ஜடாயு இவர்களின் பங்கு சிறப்பானதாக அமைந்தது.

ஜடாயு ஸ்ரீராமபிரானின் திருக்கரங்களினால் அரவணைக்கப்பட்ட பெருமைக்கு உரியவனான்.

சம்பாதியும் - சீதையைத் தேடி வந்த வானர சேனை தம்மை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்து,

கடற்கரையில் அமர்ந்து ஸ்ரீராமபிரானைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த வேளையில் - முன் பெற்ற வரத்தின் படியே சிறகுகள் வளரப் பெற்றான்.

தன் சகோதரன் ஜடாயுவுக்கு இராவணன் செய்த கொடுமையை அறிந்து மனம் வருந்தியதோடல்லாமல் - தன்னுடைய தூரதிருஷ்டியினால்,

''...சீதை தென் திசையிலுள்ள  இலங்கையில் இருக்கின்றாள்!...'' - என உரைத்து வழிகாட்டி உய்வடைந்தான்.

இப்படி பெருஞ்சிறப்பினை உடைய பறவைகளான -
சம்பாதியும் ஜடாயுவும் சிவபூஜை  நிகழ்த்திய திருத்தலம் -

மயிலாடுதுறையை அடுத்துள்ள  புள்ளிருக்கு வேளூர்.


இன்று இத்திருத்தலம் ''வைத்தீஸ்வரன் கோயில்'' என வழங்கப்படுகின்றது.

ஜடாயு இத்தலத்தில் இறைவனை வழிபட்டு நலமும் வரமும் பெற்றதை  தலபுராணம் கூறுகின்றது. 

சம்பாதியும் ஜடாயுவும் இங்கே சிவபூஜை  நிகழ்த்திய பாங்கினையும் ஜடாயு செய்த அற்புத வீரச்செயலையும் திருஞானசம்பந்தர் - பத்து திருப்பாடல்களால் புகழ்ந்து திருக்கடைக்காப்பு செய்தருள்கின்றார்.

கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடிஎம் பெருமானார் உறையுமிடந்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே. (2/43)


பறவையாய்ப் பிறந்தாலும் தள்ளத் தகாதபடி உயர் நலங்கொண்டு விளங்கும் சம்பாதி, ஜடாயு எனும்  இருவர் வழிபட அவர்கட்கு அரசனும் ஆகி  - தேன் ததும்பும் கொன்றை மலருடன்  நாற்றமிகுந்த  ஊமத்தம் பூவும் , ஒளி திகழும் சந்திரனும் சேர்ந்து விளங்கும் சடைமுடியுடன் திகழும் எம்பெருமானாகிய சிவபிரான் உறையும் தலம் புள்ளிருக்கு வேளூர்.

- எனத் தொடங்கிய  திருப்பதிகத்தில், சம்பாதியைப் பற்றியும் ஜடாயுவைப் பற்றியும் விவரிக்கின்றார்.. 


வேத மந்திரங்கொண்டு  வெண் மணலையே சிவமாக நிறுவி - நிறைவான உயர் ஞானத்தால்  வழிபட்டான் - என்றும் சிறப்பித்துப் பாடியருள்கின்றார்.

பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி வாணாள் அதுடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.


கணக்கில் அடங்காதபடிக்கு மூன்று கோடி ஆண்டுகள் வாழ்வெனும் வரத்தினை -  சிவபெருமானிடம் இருந்து பெற்ற இராவணனை எதிர்த்துப் போரிட்டான்.  அவன் உடம்பை தன் கூரிய நகங்களால் கீறிக் கிழித்து புண்ணாகும்படிச் செய்தான். 

விடைத்துவரும்  இலங்கைக்கோன் மலங்கச் சென்று இராமர்காப்
புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.


இராமபிரானுக்காகச் சென்று இராவணனைத் தடுத்து நிறுத்தினான். அவனை எதிர்த்துப் போரிட்டான். 

சீறிச் சினந்து வந்த இராவணன்  - ''..ஒரு பறவை நம்மை எதிர்ப்பதா!...'' என - மதி மயங்குமாறு, 

அவனைச் சிறகுகளால் புடைத்து அவன் கர்வத்தையும்  வலிமையையும் அழித்தான். 


இத்தகைய வீரம் பொருந்திய ஜடாயுவினால் வழிபடப் பெற்ற பெருமான் உறையும் திருத்தலம் புள்ளிருக்கு வேளூர் என -  புகழ்ந்துரைக்கின்றார் திருஞான சம்பந்தர் .

அத்தனை பெருமைகளை உடைய திருத்தலமாகிய  - புள்ளிருக்குவேளூரை அடுத்து தரிசிப்போம்.  

இந்த அளவில் சிந்திப்பதற்கு வழித்துணை  -  ''திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்'', சீர் வளர் சீர் தருமபுர ஆதீனத்தின் பதிப்பு. 

பறவையாய்ப் பிறந்தும் செயற்கரியன செய்து 
நம் சிந்தையெல்லாம் நிறைந்த சிவநேசச் செல்வங்களான 
சம்பாதி, ஜடாயு திருவடிகள் போற்றி!... போற்றி!...

ஓம் நமசிவாய சிவாய நம..
* * *

திங்கள், ஜூன் 03, 2013

ஜடாயு

பஞ்சவடி வனத்தில் தனித்திருந்த சீதையை - மாயவேடமிட்டு வந்த ராவணன் வஞ்சனையால் கவர்ந்து கொண்டு ஆகாயத்தேர் மூலமாக -



தென்திசை நோக்கிச் சென்றதைத் தடுக்க முயன்றான் கழுகரசனாகிய ஜடாயு..

ஆனால் ராவணனால் கொடூரமாக தாக்கப்பட்டு மண்ணில் வீழ்ந்தான்..



சீதையைத் தேடிக் கொண்டு வந்த ஸ்ரீராமனிடம் ராவணனின் தகாத செயலை எடுத்துக் கூறிய ஜடாயு - ''..ராமா!..'' - என்றபடி ஸ்ரீராமனின் திருக்கரங்களில் இன்னுயிர் நீத்தான்.



தன் தந்தை தசரதனுக்கு இயற்ற இயலாத காரியங்களை - ஜடாயு எனும் கழுகிற்கு இயற்றி நீர்க் கடன்களையும் நிறைவேற்றினான் ஸ்ரீராமன்.

ஸ்ரீராமன், ஜடாயுவுக்கு கிரியைகளையும் நீர்க்கடன்களையும் - நிறைவேற்றிய திருத்தலம் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள திருப்புட்குழி என்பர் பெரியோர்.

திருப்புட்குழி - காஞ்சியிலிருந்து 7 மைல் தொலைவில், பாலுசெட்டி சத்திரம் என்ற ஊருக்கு அருகில் இருக்கிறது.

இந்த அளவில்,  இந்தப் பதிவினை - வேறு முகமாகச் செலுத்தத் திட்டமிட்டு, எழுதிக் கொண்டிருந்தபோது -

எனது Facebook -  வரவுகளைக் காண வேண்டி,  அங்கே சென்ற எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.

அங்கே - சக்திவிகடன் ஜடாயு பற்றி படத்துடன் ஒரு குறிப்பினை வெளியிட்டிருந்தது.

''..எண்ணும் எண்ணங்களுடன் எம்பெருமானும் உடன் வருகின்றார்!..'' - என என்னுள் ஆனந்த அலைகள்..

சக்தி விகடன் வெளியிட்டிருந்த படம் இதோ உங்கள் பார்வைக்கு!...


இதுவரையிலும் - கண்டு வணங்கி இன்புற்ற திருத்தலங்கள் மட்டுமே பதிவிடப்பட்டுள்ளன.

திருத்தொண்டரான ஜடாயு - பதிவிடும் வேளையில் வழித்துணையென வந்தமையால் -

ஜடாயுவைப் பற்றியும் - இதுவரை தரிசனம் செய்திராத திருப்புட்குழி திருத்தலம் பற்றியும் தகவல்கள்.  இணையத்தில் திரட்டப்பட்டவை.

இந்தத் திருத்தலத்தில் எம்பெருமான்  - ஸ்ரீ விஜயராகவப் பெருமாள். தாயார் மரகதவல்லி. திருவிழாக் காலங்களில் பெருமாள் திருவீதியுலா எழுந்தருளும் போது ஜடாயுவுக்கு சகல மரியாதைகளும் வழங்கப்படுகின்றது.

மூலவர்  தொடையில் ஜடாயுவை வைத்துக் கொண்டு அருள் பாலிக்கின்றார். இத்தலத்தில் ஸ்ரீராமன் ஜடாயுவுக்காக தன் அம்பினால் உண்டாக்கிய தீர்த்தம்  - ஜடாயு தீர்த்தம்.   

ஸ்ரீ விஜயராகவப்பெருமாள் திருக்கோயில், திருப்புட்குழி
ஜடாயுவை, தன் வலப்புறம் வைத்து, தகனக் கிரியைகளைச் செய்தபோது  ஏற்பட்ட வெப்பம் தாளாமல் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி இடப்புறமும், இடப் புறம் இருந்த பூதேவி வலப்புறமும் மாறி அமர்ந்து அருள்வதாக ஐதீகம். 

திருப்புட்குழி, திருமங்கைஆழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலம். 

ஜடாயுவுக்கு கிரியைகள் செய்யப்பட்ட திருத்தலம் - ஆதலால், கொடிமரமும்  பலிபீடமும் கோயிலுக்கு வெளியே அமைந்துள்ளன.

இனி - ஏற்கனவே திட்டமிட்டபடி!...

இந்தப் பதிவில் - ஜடாயு மாபெரும் சிவபக்தன் என்றும் சிவபெருமானைக் குறித்து வேண்டுவதாகவும் வரைந்துள்ளேன்!..

ஏன் அப்படி!?...

திருஞானசம்பந்தர் - இனிக்க இனிக்க தமது திருப்பதிகத்தில் ஜடாயுவின் சிவபக்தியை, வீரத்தை, பெருமையைப் பாடி மகிழ்கின்றார்.

எனில், ஜடாயுவின் பெருமையை  நாம் விவரிக்கவும் முடியுமோ!...

ஜடாயு பெற்ற பேறுதான் என்னே!...

ஜடாயுவின் சிவபக்தியுடன் - அடுத்த பதிவில் சந்திப்போம்!... சிந்திப்போம்!...

ஸ்ரீராம ராம!... ஜயராம ராம!...
ஸ்ரீராம ராம!... சிவராம ராம!...