தனிமா மணியாய் மலரும் பொருளே
ஒளிமா மணியாய் திகழும் அருளே
சிவமா மணியின் செல்வத் திருவே
தவமா மணியே கணபதி சரணம்..
மாணிக்கம்
வருவாய் வருவாய் வாழ்வின் ஒளியாய்
வருவாய் வருவாய் வளர்தமிழ் வடிவாய்
கடைக்கண் நோக்கில் காரிருள் தீர்ப்பாய்
திருவடி தொழுதேன் தினமும் காப்பாய்..
பேணிக் கொண் டாடிடும் அடியார் தமக்கு
காணிப் பொன்ன ளந்திடும் கருணா சாகரி
மாணிக்க மூக்குத்தி மாநகர் மீனாள்
காணிக்கை என்கவி நின் மலரடிக்கே.. 1
வைரம்
உயிரா வணமாய் உன்புகழ் பாட
பயிரார் வயல் தனில் பாயும் புனலே
வயிரம் அணிந்திடும் வாழ்வே போற்றி
வாழும் வகையில் தருவாய் போற்றி
பயில்வார் தனையே பார்த் தருள்வாயே..
அருளும் அங்கயற் கண்ணி போற்றி
பாண்டியன் மகளே பதமலர் போற்றி
காணிக்கை என்கவி நின் மலரடிக்கே.. 2
மரகதம்
மயில் வாகனனை மார்பினில் ஏந்தும்
மங்கல கௌரி மலரடி போற்றி
மதுரையின் அரசி மங்கலம் போற்றி
மரகதப் பூங்கொடி பொன்னடி போற்றி
போற்றும் அடியார் புத்தியில் மலரும்
ஆனந்த மலரே அருள்வாய் போற்றி
பூத்திடும் சங்கத் தமிழே போற்றி
காணிக்கை என்கவி நின் மலரடிக்கே.. 3
கோமேதகம்
நா மேவிய நற்றமிழால் போற்றி
தா மேவிய நல்லடியார் தலையில்
பா மேவிய நல்லருளே எழுதும்
கோ மேதகமே சரணம் சரணம்
தீ மேவிய தெள்ளமுதே சரணம்
கா மேவிய நற்கனியே சரணம்
பூ மேவிய பொன் மயிலே சரணம்
காணிக்கை என்கவி நின் மலரடிக்கே.. 4
நீலம்
பாலாம்பிகையே பர்வத வர்த்தனி
நீலாம்பிகையே நின்னடி சரணம்
நீள்விழி மலர்கள் நீலம் என்றே
தாள்மலர் போற்றி தாயே சரணம்..
கனலாய் புனலாய் விளைவாய் சரணம்
கதிராய் நிலவாய் கனிவாய் சரணம்
வெயிலாய் புயலாய் புவியாய்த் திகழ்வாய்
காணிக்கை என்கவி நின் மலரடிக்கே.. 5
வைடூரியம்
வானவர்க் கரணாய் வைடூரிய வாள்
வளைக்கரம் ஏந்தி வரும்பகை தீர்த்தாய்
குஞ்சரம் குடையுடன் குலமகள் போற்றி
கொடிமீன் படையுடன் கோமகள் போற்றி
நாமகள் போற்றும் நங்காய் போற்றி
நலந்தரு நாரணன் தங்காய் போற்றி
வளந்தரு மதுரையில் என்தாய் போற்றி
காணிக்கை என்கவி நின் மலரடிக்கே.. 6
முத்து
பித்தாய் நானிங்கு புகல்வதும் இனிதோ
பேரருளே உன்னைப் புகழ்வதும் எளிதோ
பித்தா னவனின் பெருந்திரு மேனியில்
பிரியா தென்றும் படருங் கொடியே
பொற்றா மரையில் பூத்திடும் நிலவே
முத்தெனுந் தமிழாய் முன்வரும் அமுதே
பூத்தேன் பொழியும் பொதிகையின் வாழ்வே
காணிக்கை என்கவி நின் மலரடிக்கே.. 7
பவளம்
பவளம் நகையாய் நானிலம் காக்க
நிகழும் பொழுதும் நிழலாய் காக்க
சுழலும் உலகில் சூழ்வினை விலகத்
திகழும் திருமலர்ப் பாதங்கள் போற்றி
புகழும் மதுரையின் புனிதம் போற்றி
புண்ணிய வைகைப் பொலிவே போற்றி
பூத்திடும் மல்லிகை மாமலர் இதழாய்
காணிக்கை என்கவி நின் மலரடிக்கே.. 8
புஷ்ப ராகம்
கதம்ப வனத்தில் களிப்புறு குயிலாய்
கருதிடும் மனத்துள் மகிழ்ந்திடும் மயிலாய்
வலக்கரம் ஏந்திடும் கிளியாய் எனையே
வளர்த்தி டுவாயே எந்தன் அன்னையே
பூமணி புஷ்ப ராகம் பொலிந்திடும்
புகழ்மணி நூபுரத் திருவடி போற்றி
தேசம் உடையாய் திருவடி சரணம்
காணிக்கை என்கவி நின் மலரடிக்கே.. 9
மணி மணியாக நவமணி மாலை
மங்கல மார்பினில் மல்லிகை மாலை
அணிதிகழ் மாலை ஆயிரம் இலங்கும்
அன்பினில் மீனாள் மனமெனத் துலங்கும்
மணியுடை நூபுரம் மணித்தமிழ் பேசும்
திருவடி யதனில் அருளொளி வீசும்
சுந்தரன் பங்கில் சுந்தரி போற்றி..
கைதொழுதேன் கழல் அடியினை போற்றி.. 10
**
ஓம் சக்தி ஓம்
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***