நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூன் 28, 2014

வளம்தரும் ஸ்ரீவராஹி

அன்னை. 

அவளிடமிருந்தே இந்த பிரபஞ்சம் தோன்றியது. அவளே அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி!.. 

உயிர்கள் உய்வடைய வேண்டுமென்று அவளே கருக்கொண்டாள்!. 

பின் அவளே அனைத்துமாக உருக்கொண்டாள்!.

''..பூத்தவளே!.. புவனம் பதிநான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே!..'' - என்பது அபிராமி பட்டரின் திருவாக்கு!...

வானகமும் வையகமும் உய்வடையும் பொருட்டு அன்னை நிகழ்த்திய திருவிளையாடல்களும் - மேற்கொண்ட திருக்கோலங்களும் அனந்த கோடி!...


அப்படிப்பட்ட திருக்கோலங்களுள் ஒன்றுதான் - ஸ்ரீவராஹி.

அம்பிகையை வழிபடுதற்கு நவராத்திரி நாட்கள்  மிகச்சிறந்தவை என்பர்.

அம்பிகையை ஆராதிக்க அனைத்து நாட்களும் சிறந்தவைகளே!..

எனினும் -  அமாவாசை அடுத்த ஒன்பது நாட்களும் சிறப்பானவை என்று ஒரு திருக்குறிப்பு உண்டு.  அந்த வகையில்  -

ஆனி மாதத்தில் ஆஷாட நவராத்திரியும்,
புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும்,
தை மாதத்தில் சியாமளா நவராத்திரியும்,
பங்குனி மாதத்தில் வசந்த நவராத்திரியும் - சிறப்பானவை. 

ஆனால் - நாம் கொண்டாடுவது சாரதா நவராத்திரியைத் தான்.

இருப்பினும் பாரதத்தின் பல தலங்களில் இந்த விசேஷமான நவராத்திரி வைபவங்கள் அனுசரிக்கப்படுகின்றன.

இவற்றுள் முதலாவதாக இடம் பெறும் ஆஷாட நவராத்திரி - ஆனி மாதத்தின் அமாவாசையை அடுத்து வரும் நாட்களில் கொண்டாடப்படுவது.

வளமைக்கும் செழிப்புக்கும் இந்த மாதமே தொடக்கம். உயிர்களின் பசிப் பிணிக்கு மருந்தாகும் வேளாண்மையின் தொடக்கம் இந்த மாதத்தில் தான்.

ஆடியில் புது வெள்ளம் பெருகி வந்து குளம் குட்டைகள் நிறைந்து வயலில் -  நீர் பாய்வதற்கு முன்  - கோடையில் காய்ந்து கிடந்த நிலங்களில் எரு விட்டு உழவு செய்து ஆயத்தப்படுத்திக் கொள்வது ஆனியில் தான்!.. 

வேளாண்மை செழித்து ஓங்குவதே ஒரு நாட்டின் மேன்மைக்கு அடையாளம்!..

ஆதியில் இருந்தே விவசாயம் தான் ஆதாரத்தொழிலாக விளங்குவது. எனவே தான் - ''..சுழன்றும் ஏர் பின்னது உலகம்!..'' - என்றார் வள்ளுவப்பெருமான்!..

வேளாண் கருவிகளுள் - மேன்மையானதாக விளங்குவது ஏர்!..

இந்த ஏர் - தனைக் கையில் கொண்டு விளங்குபவள் - ஸ்ரீ வராஹி!.. 

ஸ்ரீ வராஹி  - வேளாண்மையின் ஆதாரம்!..  

ஸ்ரீ வராஹி - சப்த கன்னியருள் விளங்குபவள்.

தேவி புராணங்களில் சிறப்பாக வர்ணிக்கப்படுபவள்.

அளவற்ற சக்தியுடன் விளங்கும் ஸ்ரீவராஹி -  ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் அங்குசத்தில் இருந்து தோன்றியவள் என்பர்.

ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத்தளபதியாகத் திகழ்பவள்.  

வேண்டுவோர்க்கு வேண்டியவற்றை அருளும் கருணை உடையவள்.

ஆகவேதான்  - விவசாயம் பல்கிப் பெருகி, நாடு நலம் பெற வேண்டும் - என ஆஷாட நவராத்திரி நாட்களில் ஸ்ரீ வராஹி - ஆராதிக்கப்படுகின்றாள்.


அதன்படியே - 

தென்னகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் சோழவளநாட்டின் தனிப்பெருந் தலைநகராக விளங்கும் தஞ்சை மாநகரில்  -

ஈடு இணையின்றி  வானளாவித் திகழும் ஸ்ரீராஜராஜேஸ்வரம் எனும்  -

ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோயிலில் அருளாட்சி புரியும் ஸ்ரீ வராஹி அன்னைக்கு சிறப்பான முறையில் ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படுகின்றது!..

தமிழகத்தில் சிவாலயங்கள் பலவற்றிலும் சப்தகன்னியர் திருமேனிகள் விளங்கினாலும்  -

காசியம்பதிக்கு அடுத்து - தஞ்சை பெரிய கோயிலில் தான் அன்னை ஸ்ரீ வராஹி தனி சந்நிதியில் விளங்குகின்றனள்.  

ஸ்ரீ மஹாவிஷ்ணு வராக உருக் கொண்டு - இவ்வுலகை அசுரர்களிடம் இருந்து மீட்டபோது அவரிடம் விளங்கிய சக்தி - ஸ்ரீ வராஹி என்பது  திருக்குறிப்பு!..


நம் உடலில் இலங்கும் ஆறு ஆதார சக்கரங்களில் ஐந்தாவதாக நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்தின் அதிபதி - ஸ்ரீ வராஹி.

ஆஷாட நவராத்திரி நாட்களிலும் நடுநாயகமாகத் திகழும் ஐந்தாவது நாளாகிய பஞ்சமி  - மிகச் சிறப்பான நாள்.  வேளாண்மைக்கு உரியதான ஏர் மற்றும் தொழிலுக்கு உரியதான உலக்கை இரண்டும் ஸ்ரீ வராஹி அன்னையின் திருக்கரங்களில் விளங்குகின்றன!..

ஸ்ரீ வராஹி மிகச் சிறந்த வரப்ரசாதி!..

ஸ்ரீ வராஹிக்கு சதுரங்க சேனாநாயிகா எனும் திருப்பெயர் உண்டு.  

ஸ்ரீ லலிதாம்பிகையின்  நால்வகைப் படைகளுக்குத் தலைவி இவளே!..

நம் மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை நிறைவேற்றித் தருவதில் இவளுக்கு நிகர் யாருமில்லை!.. 


மாமன்னன் ராஜராஜசோழனின் இஷ்ட தெய்வம் ஸ்ரீவராஹி என்று அறிய முடிகின்றது. ஸ்ரீவராஹியின் துணை கொண்டே -   குமரி முதல் நர்மதை வரை அரும்பெரும் வெற்றிகளை எளிதாக சாதிக்க முடிந்தது.

சோழ வளநாடு, இப்புகழினை எய்தியதற்கு -   ஸ்ரீ வராஹி அம்மனின்  பெருந் துணையே காரணம்  என்பதை எளிதாக உணரலாம். 

கடல் கடந்தும் வெற்றிகளைக் குவித்திட  - மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு உறுதுணையாக இருந்தவள் ஸ்ரீ வராஹி!..

தென்னகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் சோழவளநாட்டின் தனிப்பெருந் தலைநகர்  தஞ்சை மாநகரில்  - தண்ணருள் பொழிபவள் ஸ்ரீ வராஹி!..

இன்றும் - தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோயிலில்  கைகூப்பி வணங்கும் பல்லாயிரம் பக்தருக்கும் உற்றதுணை என வருபவள் ஸ்ரீ வராஹி!..

மிகுந்த இனிப்புடன் கூடிய பொங்கல், கேசரி, பாயசம், ஜிலேபி போன்ற நிவேத்யங்கள் அம்பிகைக்கு மிகவும் உகந்தவை.  

மருக்கொழுந்து, வில்வம், கிருஷ்ணதுளசி அல்லது மல்லிகை கொண்டு அர்ச்சிக்க - அல்லல்கள் அடியோடு அழிவதை உணரலாம். தீராத பிரச்னைகள் தீர்வதற்கு கருநீலம் அல்லது கரும்பச்சை வண்ணத்தில் புடவை சாத்தி நேர்ந்து கொள்ள அன்னையின் அருள் பரிபூரணமாகக்  கிட்டும். 

திருக்கரங்களில் ஏர்கலப்பையும் உலக்கையும் தங்கி விளங்குவதால் -  ஸ்ரீவராஹி அம்மனை வணங்குபவர் வீட்டில் உணவுக்குப் பஞ்சமே வராது!.

தவிரவும் - வீட்டில் நிலவும் கடன், நோய் போன்ற பிரச்னைகள் தொலைந்து போகும்!. வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் ஆரோக்கியமும் ஆயுளும் பொங்கிப் பெருகும்!..


ஆன வராக முகத்தி பதத்தினில் 
ஈனவராகம் இடிக்கும் முசலத்தோடு 
ஏனை எழுபடை ஏந்திய வெண்ணகை 
ஊனம் அற உணர்ந்தார் உளத்தோங்குமே!.. 
                                                                           - திருமந்திரம் 4/5/28. 

- என,  ஸ்ரீ வராஹியின் பராக்கிரமத்தினை - திருமூலர் புகழ்கின்றார்.

திரிபுரசுந்தரியானவள் - இழிகுணத்தினை உடைய ஈனர்களின் தேகத்தினை இடித்து நசுக்கி ஒழிக்கும் (முசலம்) உலக்கை மற்றும் ஏழு படைக்கலன்களை ஏந்தி, புன்னகை தவழும்  - வராக முகத்தினளாக - தங்கள் துன்பங்கள் தீர வேண்டும் என - தன்னைத் தியானிக்கும் அன்பர்களின் உள்ளங்களில் என்றும் ஓங்கி விளங்குகின்றாள் - என்பது திருமூலரின் திருவாக்கு!..

நமது நேர்மையான கோரிக்கைகளுக்கு - ஸ்ரீ வராஹி நிச்சயம் அருள் புரிவாள் என்பது தெளிவு!..

அபிராமபட்டர் அபிராமி அந்தாதியிலும், திருப்பதிகத்திலும் பல இடங்களில் ஸ்ரீவராஹியின் திருப்பெயரினைப்  புகழ்கின்றார்.

''..மருந்தினும் இனிய சொற்பைங்கிளி வராஹி!.'' என்பது அவற்றுள் ஒன்று!

இங்கே, மருந்து எனக் குறிப்பிடப்படுவது - அமிர்தம்!..

அமிர்தத்தினை விட இனிய சொற்களைப் பேசுபவளாம் அன்னை!..

தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ வராஹி அம்மனுக்கு - ஆனி 13 (ஜூன் 27) வெள்ளியன்று காலை மஹாகணபதி ஹோமத்துடன்  ஆஷாட நவராத்திரி விழா சிறப்பாகத் தொடங்கியுள்ளது. 


ஜூலை ஏழாம் தேதி வரை நிகழும் இத்திருவிழாவில் முதல் நாள் தொட்டு -

இனிப்பு வகைகள், மஞ்சள், குங்குமம், சந்தனம் - எனும் மங்கலங்களால் அலங்கரிக்கப்படுகின்றாள் அன்னை.

அடுத்தடுத்த நாட்களில்  -

தேங்காய் பூவினாலும், மாதுளை முத்துக்களாலும், நவதானியங்களாலும், அலங்கரிக்கப்படும் வராஹி வெண்ணெய் அலங்காரம் கொண்டும் திகழ்வாள்.

கனிகளாலும், காய்களாலும் மலர்களாலும் திருக்கோலங்கொள்ளும் வராஹி அன்னைக்கு ஜூலை ஏழாம் நாள் பூச்சொரிதல்!..

அன்று மாலை - கோலாகலமாக  திருவீதி எழுந்தருள்கின்றாள்.

செண்டை வாத்யமும் சிவகண கயிலாய மங்கல வாத்யங்களும் முழங்க  அலங்கார ரதத்தில் எழுந்தருளி - ராஜவீதிகளில் பவனி கண்டருள்கின்றனள். 

விழா நாட்களில் - காலையில் மூலமந்த்ரத்துடன் யாக சாலை பூஜை, மஹாஅபிஷேகம். மாலையில் சிறப்பு அலங்காரமும் மகாதீபாராதனையும் நிகழும்.

அன்னையின் ஆராதனையில் அன்னதான வைபவமும் இன்னிசை நிகழ்ச்சிகளும்  - குறிப்பிடத்தக்கவை.

அன்னை ஸ்ரீ வராஹி  - எதிர்ப்புகளை தகர்ப்பவள். வேளாண் தொழில்களில் மேன்மையை அருள்பவள். நம் வீட்டில் தன தான்ய மழையைப் பொழிபவள். பில்லி, சூனியம் போன்ற கொடுவினைகளை அடியோடு அழிப்பவள்.

நம்மிடம் நேர்மை இருக்கும் பட்சத்தில் - நமக்கு உற்ற துணையாகி நல்வழி காட்டுபவள்.  


இந்த ஆண்டில் எங்கள் இல்லத்தில் மங்கல நிகழ்வாக - என் மகளின் திருமணம்.

இணையத்தின் வழியாக ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொண்டபின் - முதல் முறையாக மாப்பிள்ளையும் பெண்ணும் சந்தித்துக் கொண்டது - 

பிரகதீஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவராஹி அம்மனின் சந்நிதியில் தான்!..

இவளே முன் நின்று திருமண வைபவத்தை நடத்திக் கொடுத்தாள்..

நியாயமான செலவுகளுக்காக வாங்கிய கடனை - திருப்பிக் கொடுக்க இயலாத சூழ்நிலையிலும், 

நம்பிக்கையுடன் கொடுத்த கடன் - எதிர்பார்த்தபடி திரும்பக் கிடைக்காத சூழ்நிலையிலும்,

அளப்பரிய அன்புடன்  - நமக்குக் கை கொடுப்பவள் ஸ்ரீ வராஹி. 

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்ச பாணி வஞ்சர் 
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே!..(77) 

என்று  - ஸ்ரீவராஹியை அபிராம பட்டர் போற்றி வணங்குகின்றார்.

ஆஷாட நவராத்திரி நாட்களின் - மாலை நேரத்தில்,

உங்கள் வீட்டின் பூஜை அறையில் அல்லது வழிபடும் இடத்தில் -

நெல் அல்லது பச்சைப் பயிறு கொண்டு கோலமிட்டு,  நெய் விளக்கேற்றி வைத்து - அதிக இனிப்புடன் கூடிய (கேசரி, பாயாசம், ஜிலேபி போன்ற) பட்சணத்தினை நிவேதனம் செய்து ஸ்ரீ வராஹி அன்னையை வணங்குங்கள்.

உங்கள் இல்லத்திற்கும்
வரந்தர வாராஹி வருவாள்!..
வழித்துணை ஆகவும் வருவாள்!..

அம்பா சூலதனு கசாங்குஸதரி அர்த்யேந்து பிம்பாதரி
வாராஹி மதுகைடப ப்ரஷமனி வாணி ரமா ஸேவிதா
மல்லாத்யாசுர மூகதைத்ய மதனி மாஹேஸ்வரி சாம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீராஜராஜேஸ்வரி
* * *

வியாழன், ஜூன் 26, 2014

ஆனித் திருமஞ்சனம்

கோயில் என்று  வழங்கினாலே சைவத்தில் தில்லைத் திருச்சிற்றம்பலம் ஆகிய  நடராசப் பெருமானின் திருக்கோயிலைத்தான் குறிக்கும். 

திருஊரின் திருப்பெயர் தில்லை மரங்கள் அடர்ந்திருந்தபடியால் - தில்லை. 
திருக்கோயிலின் திருப்பெயர் திருச்சிற்றம்பலம். 

இன்று ஊர்ப்பெயராகிய தில்லை வழக்கத்தில் இருந்து மறைந்து விட்டது.


திருக்கோயிலின் பெயராகிய  திருச்சிற்றம்பலம் - சிற்றம்பலம் - என உருமாறி சிதம்பரம் என்றாகி விட்டது. ஆனால் - 

மூல மூர்த்தியோ அன்று முதல் இன்று வரை என்றும் மாறாத பாங்கினனாக, 

''..என்று வந்தாய்!.. எப்படி இருக்கின்றாய்!..'' - என நலம் விசாரிக்கின்றான். 

இந்த நலம் விசாரிப்பினை அப்பர் பெருமான் - நமக்கு அறிவிக்கின்றார்.

ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை
கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாய்எனும் எம்பெரு மான்தன் திருக்குறிப்பே!..(4/81/2)

இப்படி அன்புடன் நலம் கேட்டு அறியும் ஐயனின், திருமுகத்தைப் பார்த்துக் கொண்டியிருப்பதற்காக -

காலந்தோறும் மனிதப் பிறவியாக பிறந்து கொண்டேயிருக்கலாம் என்று அப்பர் ஸ்வாமிகள் ஆவலுடன் பாடுவதும் - அதனால் தானே!..

குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே!..
(4/81/4)


புவி எங்கிலும் இருக்கும் சிவாலயங்கள் அனைத்திலும் அர்த்த ஜாம வழிபாடு முடிந்தபின் அங்குள்ள சிவகலைகள் அனைத்தும் திருச்சிற்றம்பலத்தின் மூலஸ்தான சிவலிங்கத்தில் ஒடுங்கி - பின் உஷத் காலத்தில் விரிந்து எழுந்து பரவுவதாக ஐதீகம். 

மூண்டு முளைத்தெழும் வித்தெல்லாம் சிவலிங்கம் - எனவும், உருவம், அருவம், உருஅருவம் - எனவும் குறிக்கப்படும் தாவர ஜங்கம நிலை.  அசையும் அசையாப் பொருள்கள் அனைத்தும் இதற்குள் அடக்கம். 

அப்படி எனில் - எந்நேரமும் சிவகலைகள் ஒடுங்குவதும் விரிவதும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றது - எனப் பொருள்!.. 

இதன் காரணமாகவே - சிதம்பரம் அநாகத சக்ரம் எனும் இருதய ஸ்தானமாகக் குறிக்கப்படுவது.

மூலாதாரம்  - திருவாரூர்
ஸ்வாதிஷ்டானம் - திருஆனைக்கா
மணிபூரகம் - திருஅண்ணாமலை 
அநாகதம் - சிதம்பரம் (இருதய ஸ்தானம்)
விசுக்தி - திருக்காளத்தி  
ஆக்ஞா - காசி
சஹஸ்ராரம் - திருக்கயிலை
துவாதச சாந்தப்பெருவெளி - மாமதுரை

நுரையீரலின் சுவாசமும் இதயத்தின் துடிப்பும் இரத்த ஓட்டமும்  எப்போதும் இயங்கிக் கொண்டேயிருப்பதன் திருக்குறிப்பு தான் - திருச்சிற்றம்பலம்!.. 

தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் ஈசனின் ஆனந்த நடனம் ஓய்வதே இல்லை!.. என ஆன்றோர்கள் குறிப்பது இதைத்தான்.

அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் - என நால்வரும் திருப்பதிகம் பாடியருளிய திருத்தலம் சிதம்பரம்.


ஸ்ரீ சிவகாமசுந்தரியுடன்  ஸ்ரீ நடராஜப் பெருமான் அருளும் திருக்கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவம் நேற்று (ஜூன்/25) காலை பத்து மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.



அம்பிகையும் ஐயனும் வீற்றிருக்கும்  சித்சபையின் எதிரில் அமைந்துள்ள கொடிமரத்தில் - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளியிருக்க - மங்கள வாத்யங்கள் முழங்கிட, ஆயிரக்கணக்கான பக்தர்களின் சிவ கோஷத்துடன் ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது. 

பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவுடன் - ஆனித் திருமஞ்சனத் திருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறும். 

ஜூன்/26 இரவு வெள்ளி சந்திர பிரபையில் பவனி. 
ஜூன்/27 இரவு தங்க சூர்ய பிரபையில் பவனி. 

ஜூன்/28 இரவு வெள்ளி பூத வாகனத்தில் பவனி. 
ஜூன்/29 இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி. 

ஜூன்/30 இரவு வெள்ளி யானை வாகனத்தில் பவனி. 
ஜூலை/01 இரவு தங்க கயிலாய வாகனத்தில் பவனி. 

ஜூலை/02 மாலை தங்க ரதத்தில் ஸ்ரீபிக்ஷாடனர் பவனி. 
ஜூலை/02 மகம் - மாணிக்க வாசகர் குருபூஜை

ஜூலை/03 அதிகாலை 4.15 மணிலிருந்து 4.45 மணிக்குள், ஸ்ரீநடராஜப் பெருமான் தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் திரு உலா வந்தருளல்.


மாலை 5.30 மணியளவில் தேரிலிருந்து ராஜ சபை எனும் ஆயிரங்கால் மண்டபத்திற்கு எழுந்தருளல்.  இரவு ஏக கால லட்சார்ச்சனை நிகழும். 
 
ஜூலை/04 அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் அன்னை சிவகாமிக்கும், நடராஜப் பெருமானுக்கும் ஆனி திருமஞ்சனம் (மகா அபிஷேகம்). காலை பத்து மணிக்கு சித்சபையில் பூஜை. 

பஞ்ச மூர்த்தி உலா நிகழ்ந்த பின் - மதியம் 12 மணிக்கு மேல் ஆனந்தத் தாண்டவ தரிசனம். 

ஐயனும் அம்பிகையும் சித்சபை பிரவேசம். மகா தீபாராதனை.

ஜூலை/05 பஞ்ச மூர்த்தி முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் மங்கலகரமாக உற்சவம் நிறைவடைகின்றது. 

ஆனி உத்திர நட்சத்திரத்தன்று சகல சிவாலயங்களிலும் சிவகாம சுந்தரிக்கும் நடராஜப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிகழ்கின்றன.


செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச் 
செல்வ மதி தோயச் செல்வம் உயர்கின்ற 
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய 
செல்வன் கழலேத்தும் செல்வஞ் செல்வமே!..(1/80)
திருஞானசம்பந்தர்.

சாட எடுத்தது தக்கன்றன் வேள்வியிற் சந்திரனை
வீட எடுத்தது காலனை நாரணன் நான்முகனுந்
தேட எடுத்தது தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
ஆட எடுத்திட்ட பாதமன் றோநம்மை யாட்கொண்டதே!..(4/81) திருநாவுக்கரசர்.

தில்லைச் சிற்றம்பலத்துள் நடம் ஆடுதற்கு - ஐயன்  எடுத்திட்ட திருப்பாதம்  அன்றோ நம்மை ஆட்கொண்டது.

குஞ்சித பாதம் என்பது தூக்கிய திருவடி.  

ஐயன் ஆடுதற்கு எடுத்திட்ட திருப்பாதம் - ஆனந்த வாரிதியில் ஆன்மாவை அழுத்தும் பாதம் - என்பர் பெரியோர்.

தேவரொ டாடித் திருஅம் பலத்தாடி
மூவரொ டாடி முனிகணத் தோடாடிப் 
பாவினுள் ஆடிப் பராசத் தியில்ஆடிக்
கோவிலுள் ளாடிடும் கூத்தப் பிரானே.
திருமூலர்

சிவாய திருச்சிற்றம்பலம்
* * * 

திங்கள், ஜூன் 23, 2014

கவியரசர்

ஜூன் - 24.

கவியரசர் கண்ணதாசன் (24 ஜூன் 1927) அவர்களின் பிறந்த நாள்.
மேலும் கவியரசருடன் -  கிருஷ்ணகானம் இசைத்த மெல்லிசை மன்னர்  M.S.விஸ்வநாதன் (24 ஜூன் 1928) அவர்களின் பிறந்த நாள். 

தமிழ்த் திரை உலகம் எத்தனை எத்தனையோ -  மகத்தான கலைஞர்களைக் கொண்டிருந்தாலும்,

கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு இணையான ஒருவரைக்  கண்டதும் இல்லை.. இனிக் காணப்போவதும் இல்லை!..

அவர் அளித்தவற்றுள் முத்துக்கும் முத்தான பாடல்கள் ஆயிரம்.. ஆயிரம்!..

அவற்றுள், இன்றைய காலகட்டத்திற்கென சிந்திக்கத் தகுந்தது எனக் கருதிய ஒரு பாடல் - இன்றைய பதிவில்!..


உயிர் ஒன்று நிம்மதியாகத் தூங்குவதற்காக -  எந்த உயிர் தன் தூக்கத்தை துறக்கின்றதோ - அந்த உயிர் தான் தாய்மை!..  

நம்மை உறங்கச் செய்வதும்,  நம்மை நம்முள்ளிருந்து உயிர்த்தெழச் செய்வதும் தாய்மையே!..

அந்தத் தாய்மை  தனித்துவமாக நின்று - தான் வளர்க்கும் கன்றுக்கு நல்லுரை கூறும் போது எப்படியிருக்கும்!?..

அப்படிப்பட்ட தாயாகி நின்று - தங்கத் தமிழ் கொண்டு - தமிழ் கூறும் நல்லுலகிற்கு கவியரசர் அளித்த கொடை!..

இதோ - அந்தப் பாடல்!..

பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
இறப்பில் மறு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கமில்லை..
என்னரிய கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு

ஆரீராரீரீ ஆரீராராரோ ராரீஆரீராரோ.. ஓ..
ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீராரீரோ..

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே - தூக்கமில்லை மகளே

நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச்
சொல்லும் தெள்ளு தமிழ்ப் பாடல்

எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன்
போராடச் சொல்லுமடி - தீராத தொல்லையடி..

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே - தூக்கமில்லை மகளே

மாறும் கன்னி மனம் மாறும்
கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும் போது தூக்கம் என்பதேது?

தான் நினைத்த காதலனை சேர வரும் போது
தான் நினைத்த காதலனை சேர வரும் போது
தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது?
கண்ணுறக்கம் ஏது?

மாலையிட்ட தலைவன்
வந்து சேலை தொடும் போது
மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது? - கண்ணுறக்கம் ஏது?

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே - தூக்கமில்லை மகளே!..

ஐயிரண்டு திங்களிலும்
பிள்ளை பெறும் போதும்
அன்னை என்று வந்த பின்னும்
கண்ணுறக்கம் போகும் - கண்ணுறக்கம் போகும்

கை நடுங்கிக் கண் மறைந்து
காலம் வந்து தேடும்
கை நடுங்கிக் கண் மறைந்து
காலம் வந்து தேடும்
காணாத தூக்கமெல்லாம்
தானாக சேரும் - தானாக சேரும்

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே - தூக்கமில்லை மகளே!..

ஆரீராரீரீ ஆரீராராரோ ராரீஆரீராரோ.. ஓ..
ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீராரீரோ..
ஆரீராரீராரோ..

சித்தி எனும் திரைப்படத்தில் இடம் பெற்றது இந்தப் பாடல்.

அழும் குழந்தை உறங்குதற்குத் தேவை ஒரு தாலாட்டு தான்!..

ஆனால், அதை தத்துவப் பெட்டகமாகத் தந்தவர் கவியரசர்.

வாரியார் ஸ்வாமிகளுடன்
தாலாட்டுப் பாடலையும் - நுட்பமான அர்த்தங்களுடன் நூற்றுக் கணக்கான சுவை முத்துக்கள்  நிறைந்த மாதுளங்கனி எனத் தந்தவர் கவியரசர்.

பெண்களுக்குத் தூக்கம் என்பது குழந்தைப் பருவத்தில் மட்டுமே!.. 

பெண் வளர வளர - அவளுக்கு வகுக்கப்பட்ட பருவங்கள் ஏழிலும் அவளது தூக்கம் தொலைந்து விடுகின்றது!..

பெண் எப்படியெல்லாம்  குடும்பத்திற்காக தூக்கத்தைத் தொலைக்கிறாள்!..

- என்பதை,  கவியரசர்  தானே அனுபவித்தது போல  சித்தரித்தார்.

மெல்லிசை மன்னருடன்
அந்தச் சித்திரத்துக்கு இசையாலும் இனிய குரலாலும் உயிரூட்டியவர்கள் -  மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் அவர்களும் திருமதி P. சுசீலா அவர்களும்..

பாடலின் முழுப் பொருளும் இயக்குனர் திலகம் K.S.கோபாலகிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில் நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களின் அற்புத நடிப்பில் வெளிப்பட்டிருக்கும். 


குழந்தைக்குப் பாடிய தாலாட்டில் - அந்தக் குடும்பத்தின் மூத்தவரான (சுந்தரி பாய்) மூதாட்டியும்  தூக்கத்தில் ஆழ்வதாகக் காட்சியமைத்து (5.33) மகிழ்ச்சி கொண்டார்  இயக்குனர் திலகம். 

இப்பாடலைக் கேட்கும் எவருக்கும் அவரவர் தாயின் முகம் நிச்சயம் நினைவுக்கு வரும்.

பக்தி இலக்கியங்களில் கூட - நாயகி பாவத்தில் பற்பல பாடல்களை நாம் காணலாம். 

அரவணையாய் ஆயரேறே அம்மமுண்ணத் துயிலெழாயே 
இரவுமுண்ணாது உறங்கிநீபோய் இன்றுஉச்சி கொண்டதாலோ 
வரவும் காணேன் வயிறசைந்தாய் வனமுலைகள் சோர்ந்துபாய 
திருவுடைய வாய்மடுத்துத் திளைத்துதைத்துப் பருகிடாயே!..
இரண்டாம் பத்து/ இரண்டாம் திருமொழி

 - என, பெரியாழ்வாரும் தானொரு தாயாகி - இளங்கண்ணனை அமுது உண்ண அழைத்துக் கொஞ்சுகின்றார். 

அப்படியொரு பாவனையில் - 

இப்போதே தூங்கிக் கொள்ளடி என் மகளே!. இதை விட்டால் - இனி தூங்குதற்கு நேரம் கிடைக்காது?.. 

- என்று  இனிமையான தாலாட்டுப் பாடலில் எடுத்துரைத்தார் - கவியரசர்.

இப் பாடலின் பொருள் உணர்ந்து கேட்கும் எவர்க்கும் - எந்த சூழ்நிலையிலும் பெண்மைக்கு இடையூறு செய்ய எண்ணம் வரவே வராது என்பது திண்ணம்.


கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாள் ஜூன் 24.. 
கவியரசரை நினைவில் கொள்ளும் வேளையில்,

அவருக்கு உற்ற தோழனாக இருந்த 
மெல்லிசை மன்னர் அவர்களுக்கும் ஜூன் 24 பிறந்த நாள்!..
அவர்கள் பூரண நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்!.. 

தூக்கம் துறந்த தூய்மை!.. 
அதுவே உன்னதமான தாய்மை!.. 
அதுவே உலகத்தின் வாய்மை!.. 

அதனை நாம் உணரும்படி செய்த  
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் புகழ் வாழ்க!..


நீ நிரந்தமானவன் அழிவதில்லை..
எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை!..
* * *

சனி, ஜூன் 21, 2014

இப்படி ஒரு கேள்வி

அன்பின் வணக்கம். 

வாரம் ஒருமுறை வியாழனன்று இரவு பத்து மணி முதல் வெள்ளிக் கிழமை பகல் ஒரு மணி வரை வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை!.. 

மீண்டும் வெள்ளிக்கிழமை இரவு பத்து மணி முதல் சனிக்கிழமை காலை ஆறு  மணி வரை வேலை!..

இத்தகைய சூழ்நிலையில், நேற்று மதியம் இரண்டு மணிக்கு அறைக்குத் திரும்பியதும்  தளத்தில் நுழைந்தால் - 


இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?..

திரு. கில்லர்ஜி அவர்கள் எனக்கு கொக்கி போட்டு வைத்திருக்கின்றார்.  

இப்படி ஒரு கேள்வி (!) என்று ஆரம்பித்து பத்து கேள்விக் கணைகள்..

இந்தக் கணைகளை நானும் பத்து நண்பர்களுக்குத் திருப்பி விட வேண்டும். 

அந்தப் பக்கம் - அம்பாளடியாள்
மற்றும் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் ஆகியோரும் 

முன்னதாகவே கணைகளை வீசி விட்டார்கள்.. 

நான் தொடரும் தளங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எனது தளத்தை தொடர்ந்து வருபவரும் சிலரே!..

அப்படியிருக்க, எனது வட்டத்தில் இருப்பவர்கள் - நான் தேடும் முன்னரே அவர்களுடைய கேள்விக் கணைகளுக்கு இலக்கு ஆகி விட்டார்கள்..

ரசனையான விளையாட்டுத்தான்!.. ஆனாலும் - 

மேலும் - புதிதாக பத்து நண்பர்களை எங்கிருந்து தேடுவேன்!?..

யார் யாருக்கு என்னென்ன பிரச்னைகளோ!..
எந்தெந்த சூழ்நிலைகளில் இருக்கின்றார்களோ?.. அறியேன்!..

எனவே - பத்து நண்பர்களை இதில் இணைப்பதற்கு  எனக்கு இயலவில்லை.

இருப்பினும் - 

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?..

தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இதோ!..
1. உங்களுடைய நூறாவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?..

அவ்வளவு தூரத்திற்கெல்லாம் ஆசைப்படவில்லை. இருப்பினும்,

கன்றாத வளமையும், (மனதில்) குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும் இருக்கும் பட்சத்தில் - 

எனைத் தொடர்ந்துவரும் அன்பின் இனிய உறவுகளுடன் - அன்பு மனைவியின் கரம் பிடித்தவாறு  ஆதரவற்ற உயிர்களை அரவணைத்து  அம்பாளின் சந்நிதியில் நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடுவேன்.

2. என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?..

உலகில் உள்ள நல்ல விஷயங்களை எல்லாம்!..

3. கடைசியாக  நீங்கள் சிரித்தது எப்போது - எதற்காக ?..

கடைசியாக என்பதில் உடன்பாடு இல்லை.
இன்னும் எத்தனையோ மகிழ்ச்சிகள் காத்துக் கிடக்கின்றன. இருப்பினும் - இன்று வீட்டில் உள்ளோருடன் ஸ்கைப் -ல் முகம் பார்த்து பேசியது  மகிழ்ச்சி.

4. 24 மணி நேரம் பவர் கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?..

இருக்கவே இருக்கின்றது இயற்கை - இணைந்து வாழ்வதற்கு!.. 

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாள் அன்று அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன ?..

அன்பு ஒன்று தான் அனைத்துத் தடைகளையும் தகர்க்கும் . எனவே எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது ஒருவருக்கொருவர் அன்பாக வாழுங்கள்..

6. உலகத்தில் நடக்கும் பிரச்னைகளை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்னையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள் ?..

நாரதரே!.. உலகம் என்றால் என்ன?.. பிரச்னை என்றால் என்ன?..
உலகம் தான் பிரச்னை!.. பிரச்னை தான் உலகம்!..
நன்றாகச் சொன்னீர்கள்!.. நாரதரே!..


எனினும் - 
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தீர்வதற்கு விரும்புகின்றேன்!..

7. உங்களுக்கு ஒரு பிரச்னை அதைத் தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க விரும்புவீர்கள் ?..

அட்வைஸ் யாரிடமும் கேட்பதில்லை. ஆலோசனை எனில் - அன்பு அகலாத மனைவியிடம் தான்!..

8. உங்களைப் பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார். அதைக் கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?..

செய்தி தான் தவறாயிற்றே!.. இருந்தாலும்,
அவன் எடுத்த மண்வெட்டி அவனுக்கே!..  - என்று விட்டு விடுவேன்.

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்து விட்டால் அவரிடம் என்ன சொல்வீர்கள் ?..

ஆறுதல் வார்த்தைகளையும்  - கடந்து சொல்வதானால் - அவருடைய வயது - சூழ்நிலையினைப் பொறுத்தது.

10. உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?..

நான் பாதுகாத்து வைத்திருக்கும் - எனது கதை, கவிதை, கட்டுரைகளை படித்துக் கொண்டிருப்பேன்.

வருகை தரும் அன்பு நண்பர்கள் - கருத்துக்களுடன் விடைகளையும்  பகிர்ந்து கொள்ளுங்கள்.. 

தங்களுடைய விடைகளைக்  காண ஆவலுடன் இருக்கிறேன்.

வாழ்க வளமுடன்!.. வளர்க நலமுடன்!..
* * *

வியாழன், ஜூன் 19, 2014

கருடசேவை 2

தஞ்சையில் இருபத்து மூன்று கருட சேவை!..

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியுடன் நீலமேகப்பெருமாள்
திருமங்கை ஆழ்வாரால்  - 

''வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை மாமணிக் கோயில்!''.. 

- என போற்றி வணங்கப்பட்ட திவ்ய தேசமாகிய தஞ்சையின் மகத்தான கருட சேவைப் பெருவிழா நேற்று மங்கலகரமாக வெகு சிறப்புடன் நிகழ்ந்திருக்கின்றது.

அன்ன வாகனத்தில் திருமங்கை ஆழ்வார்
திருமங்கைஆழ்வார் அன்னவாகனத்தில் மங்களாசாசனம் செய்தபடி முன் செல்ல, 

சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாளுடன் ஸ்ரீநீலமேகப்பெருமாளும்   
ஸ்ரீமணிக் குன்றப் பெருமாளும் 
யாளி நகர் ஸ்ரீவீரநரசிம்ஹப் பெருமாளும் 

- தனித்தனியே கருட வாகனத்தில் ஆரோகணித்து வீதிவலம் வந்தருளினர். 





அவர்களுடன் - மாநகரில் திகழும் மற்ற திருக்கோயில்களில் இருந்தும் கருடாரூடராக பெருமாள் எழுந்தருள - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து இன்புற்றனர். 

அன்ன வாகனத்தில் முன் சென்ற  திருமங்கை ஆழ்வாரைத்  தொடர்ந்து இருபத்து மூன்று கருட வாகனங்களின் வீதி உலா கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 





கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரண்டிருந்தனர். 

காலையில் இருந்தே ராஜவீதிகளில் ஆவலுடன் காத்திருந்த பக்தர்கள் - பகல் பொழுதில் - ஒவ்வொரு திருக்கோயிலின் பெருமாளையும் ஆத்மார்த்தமாக - கருட வாகனத்தில் தரிசித்து, எழுந்தருளும் ஆச்சார்யராகிய நம்மாழ்வார் அம்சம் எனும் சடாரி  சூட்டப் பெற்று மனம் நிறைவாகினர்.


தஞ்சையைச் சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் அன்பர்கள் திரண்டு வந்திருந்தனர். 

மகத்தான இருபத்து மூன்று கருடசேவையைக் கண்டு வணங்கிட - வெளி மாவட்டங்களில் இருந்தும் - திரளான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்ததாக அறிய முடிகின்றது. 



ராஜவீதிகளின் பல இடங்களிலும் பக்தர்களுக்கு -  நீர்மோர், பானகம் - என வழங்கப்பட்டது. சென்ற ஆண்டைக் காட்டிலும் திருவிழா வெகு சிறப்பாக நிகழ்ந்ததாக செய்திகள் கூறுகின்றன.



ஆதியில் பராசர மகரிஷிக்கும், பின்னாளில் திருமங்கை ஆழ்வாருக்கும் ப்ரத்யட்க்ஷமாகிய கருட வாகன தரிசனம் - 

எண்பது ஆண்டுகளுக்கு முன், தஞ்சை பள்ளியக்ரஹாரத்தில் வாழ்ந்த - ஸ்ரீதுவாதச கருடாழ்வார் ஸ்வாமிகளுக்கு மீண்டும் அருளப்பெற்றது.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்  - என, பன்னிரு கருட சேவையை, ஸ்ரீதுவாதச கருடாழ்வார் ஸ்வாமிகள் தான் தஞ்சை மண்ணில் துவக்கி வைத்து மக்கள் உய்யும் வழியைக் காட்டினார். 

அந்த மகத்தான அருளாளர் தொடங்கிய கருட சேவை - இன்று பரமன் அருளால் இருபத்து மூன்று கருட சேவை என தழைத்து விளங்குகின்றது.



தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறை மற்றும் ஸ்ரீராமானுஜ தர்சன சபையினர் இணைந்து விழாவினை சிறப்பாக நடத்தியுள்ளனர்.

இந்தப் பெருவிழாவினை அடுத்து -  நாளை (ஜூன்/20) வெள்ளிக் கிழமை அனைத்துத் திருக்கோயில்களிலும் நவநீத சேவை.

இதேபோல் - நான்கு ராஜவீதிகளிலும் வெண்ணெய்த் தாழியுடன் பெருமாள் எழுந்தருள்வார்.


இப்பெருவிழா சிறப்புடன் நிகழ்வதற்கு பலவகைகளிலும் உறுதுணையாய் இருந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணக்கமும் நன்றிகளும்!..

திருவிழாவின் படங்களை வழங்கிய - Thanjavur City Pages , திருஐயாறு சிவசேவா சங்கத்தினர் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்!..


இருப்பினும் - இந்த வைபவத்தில் கலந்து கொள்ள இயலாதவாறு மிகவும் நலிவடைந்த நிலையில் சில திருக்கோயில்களும் நகரில் உள்ளன.

எதிர் வரும் ஆண்டுகளில் அந்தத் திருக்கோயில்களில் இருந்தும் பெருமான் - திருவீதி எழுந்தருள வேண்டும் என்பது நமது பிரார்த்தனை. 

அத்துடன் வேறொரு விருப்பமும் மனதில் உண்டு. உலகளந்த மூர்த்தி உள்ளுறையும் எண்ணம் ஈடேறிட அருள வேண்டும்.

பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்வதன் 
உட்பொருள் மகத்தானது.

அழைத்தவர் குரலுக்கு வருபவன் - அவன்!..
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிபவன்  - அவன்!..

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்
தமருள்ளும் தண்பொருப்புவேலை - தமருள்ளும்
மாமல்லைகோவல் மதிட்குடந்தை என்பரே
ஏவல்ல எந்தைக்கு இடம்!.

பூதத்தாழ்வார். 
* * *