நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திருப்பாவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருப்பாவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜனவரி 14, 2019

மங்கல மார்கழி 30

ஓம் 

தமிழமுதம்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது... (007)
அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 30




வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை 
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப்பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப் 
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே 
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் 
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்..

திருப்பாவையின் சிகரம்..
குன்றிலிட்ட விளக்கு..
ஆண்டாள் அளித்த அமுதம்..
அதனை அப்படியே அள்ளிப்
பருக வேண்டியது தான்...

ஆண்டாள் அரங்கனின்
நல்லருளும்
அமுதத் தமிழின்  நற்சுவையும்
நம்மை எல்லாம்
வாழ வைப்பதாக!..

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்
திருவடிகள் போற்றி!.. 
*


திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே 
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே 
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே 
உயரரங்கற்கே கண்ணியுகந் தருளிதாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே 
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே..
*

தித்திக்கும் திருப்பாசுரம் 


தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து.. (2344)
-: ஸ்ரீ பேயாழ்வார் :- 

இயற்கையின் சீதனம் 

பூசணி 


மஞ்சள் மற்றும் சாம்பல் என 
இரு நிறங்களில்
மனங்கவர்வதோடு
குலம் காப்பது...

நமது மண்ணுக்கே உரியது...



மார்கழி முழுதும்
தமிழ்ப்பாரம்பர்யத்தைப் பறை சாற்றுபவை
பூசணிப் பூக்களே...

அந்தக் காலத்தில்
கிராமம் நகரம் என்றில்லாமல்
மரபு வழி நிற்கும் ஹிந்து மக்கள் 
மார்கழிக் கோலத்தின் நடுவில் பூசணிப் பூவை
வைத்து குறிப்பால் உணர்த்துவார்கள்
இந்த வீட்டில் பருவ மங்கை இருக்கின்றாள்
என்பதை...

சமைந்த பெண்களின் முகம் பார்த்தறியாத
காலத்தில் நடைமுறையிலிருந்த
நளினமான நாகரிகம்...

அதன்பின் இருவீட்டாரும்
மனங்கலந்து பேசி விட்டால்
தை - மாசியில் கல்யாண மேளந்தான்!...



இப்படியான
பூசணி நீர்ச்சத்து மிக்கது...

உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுப்பது..
உடற்சூடு அடங்கி விட்டாலே
நோய் நொடிகள் வாராது...

சாம்பல் பூசணி சமையலில்
சிறப்பிடம் பெறுவதைப் போல
கண் திருஷ்டியைத் தீர்ப்பதிலும்
பில்லி சூனியம் முதலான
துஷ்ட திருஷ்டிகளை அகற்றுவதிலும்
சிறப்பிடம் பெறுகிறது...

சமஸ்க்ருதத்தில் பூசணிக்கு
கூஷ்மாண்டம் என்று பெயர்..

யாகசாலைச் சடங்குகளிலும்
ஸ்ரீ பத்ரகாளி பூஜையிலும்
பூசணியின் பங்கு குறிப்பிடத்தக்கது..

ஆனாலும் நம் மக்கள்
திருஷ்டி கழித்தபின்
நடுச்சாலையில் பூசணிக் காயைப்
போட்டுடைப்பது கண்டிக்கத்தக்கது..

மஞ்சள் பூசணியில் 
நோய் எதிர்ப்பினைக் கொடுக்கும்
பீட்டா கரோட்டின் நிறைந்திருப்பதாக
இப்போது கண்டறிந்திருக்கின்றார்கள்..
*

சிவதரிசனம் 
தஞ்சபுரி
-: தஞ்சாவூர் :- 

ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்.. 
இறைவன் - ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்  
அம்பிகை - ஸ்ரீ ஆனந்தவல்லி


தலவிருட்சம் - வில்வம்  
தீர்த்தம் - வெண்ணாறு

அம்பிகை திருவுடைக்கோடியம்மனாக எழுந்து
தஞ்சன் தஞ்சாக்கன் எனும் அசுரர்களை
வதம் செய்தருளியபோது
அஞ்சி நடுங்கிய தேவர்களுக்கு
ஈசன் எம்பெருமான் தஞ்சமளித்தருளிய திருத்தலம்..

ஸ்ரீ பால சாஸ்தா
தேவர்களைக் காப்பாற்றும் பொறுப்பினை
ஏற்றுக் கொண்டதால் இத்தலத்தில் 
ஸ்ரீ சிறை காத்த ஐயனார் என்று திருப்பெயர்...

குபேரன் இத்தலத்தில் வழிபாடு செய்துதான்
இராவணனிடம் தான் இழந்த செல்வங்களை
மீண்டும் பெற்றான்..

மேற்கு நோக்கிய திருத்தலம்..

கடன்கள் தீர்வதற்கும்
இழந்த செல்வங்களைத் திரும்பப் பெறுவதற்கும்
வழிபட வேண்டிய ஐந்து திருத்தலங்களுள்
முதன்மையானது - தஞ்சபுரி..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து
திருஐயாறு - ஐயம்பேட்டை
செல்லும் பேருந்துகள் எல்லாம்
திருக்கோயிலின் அருகில்
நின்று செல்கின்றன...


ஸ்ரீ வீரநரசிங்கப்பெருமாள் - தஞ்சை.. 
இத்திருக்கோயிலின் எதிரில் தான்
யாளி நகர் எனப்படும்
தஞ்சை மாமணிக் கோயில்களுள் ஒன்றான
ஸ்ரீ வீரநரசிங்கப்பெருமாள் திருக்கோயில்
அமைந்துள்ளது...
***

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைகாப்பு


ஸ்ரீ பிரகதீஸ்வரரும் அம்பிகையும்
விடை வாகனத்தில்.. 
மந்திர நான்மறை ஆகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.. (3/22)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்
ஸ்ரீ அல்லியங்கோதை உடனாகிய
தியாகராஜப்பெருமான் - தஞ்சை.. 
நம சிவாயவே ஞானமும் கல்வியும்
நம சிவாயவே நானறி இச்சையும்
நம சிவாயவே நாநவின் றேத்துமே
நம சிவாயவே நன்னெறி காட்டுமே..(5/90)

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருத்தொண்டத் தொகை
திருப்பாடல் 10 -11


பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தை சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருஆரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிசார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே... (10) 

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவலூர்க் கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே... (11)

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவாசகம்


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச்
சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவது இனியே..
*
இந்த அளவில்
சிந்திக்கவும் வந்திக்கவும் செய்த
ஈசன் எம்பெருமான் திருவடிகள் போற்றி.. போற்றி!..


பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி.. 
***

அன்பின் நண்பர்களுக்கு
வணக்கம்..
மார்கழி முழுதும் தொடர்ந்து வந்து 
உற்சாகமும் ஊக்கமும் அளித்த
தங்களுக்கெல்லாம் மனமார்ந்த நன்றி...

தங்களுடைய கருத்துரைகளுக்கு 
என்னால் உடனுக்குடன்
பதிலளிக்க இயலவில்லை...
குறைதான்..
இருப்பினும் மனதிற் கொள்ளற்க..

இணைய வேகம் ஒருபுறம் இருக்க
எதிர்பாராத விதமாக இருப்பிடம் மாற்றம் ஆனது..
அத்துடன் வேலை நேரமும் மாற்றம் ஆனது..

எல்லாவற்றையும் கடந்து
மார்கழிப் பதிவுகளை உங்கள் முன்பாக
சமர்ப்பித்து விட்டதில் மகிழ்ச்சி 
***

இன்று போகி..
எங்கெங்கும்
புன்மைகள் விலகி
நன்மைகள் பெருகட்டும்..


அனைவருக்கும் 
அன்பின் இனிய
பொங்கல் நல்வாழ்த்துகள்.. 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

ஞாயிறு, ஜனவரி 13, 2019

மங்கல மார்கழி 29

ஓம் 

தமிழமுதம் 

முயற்சி திருவினையாக்கும்முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.. (616)
*

அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 29 


சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்..
*
இந்த இளங்காலைப் பொழுதில்
எழுந்து நீராடி முடித்து
உன்னைச் சேவித்து
உனது பொற்றாமரைத் திருவடிகளைப் போற்றி
நிற்பதற்கான காரணம் தான் என்ன!..

அன்புடன் பசுக்களை மேய்த்து
அதனால் விளையும் நலன்களைத் துய்த்து வாழும்
ஆயர் குலத்தில் பிறந்த நீ
எங்களது பணியினை ஏற்றுக் கொள்ளாமல்
எங்கள் ஆவல் தீராது...

மங்கலம் எனும் பறைகளைக் கொள்வதற்காக
இன்று உன்னிடத்தே வந்தாலும்
இன்றைக்கும் இனிவரும் ஏழேழ் பிறவிக்கும்

உனக்கு உற்றவர்களாக ஆவோம்...
உனக்கே நாங்கள் ஆட்செய்வோம்...

அதற்கான வரத்தினைக் கேட்டுப் பெறவே
நாங்கள் கூடி வந்தோம்...

இப்பெரு வரத்தினை நீ நல்கும் வேளையில்
வேறெந்த ஆசைகளும் எம் மனதில் விளையாதபடிக்கும்
நல்லருள் புரிதல் வேண்டும்...

கோவிந்த சரணம்..
கோவிந்தா சரணம்!...
*

தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீ ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள்
மகர்நோன்புச்சாவடி, தஞ்சை.. 
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய் எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன்வீழச் சென்று குறருளுருவாய்
முன்னிலம் கைக் கொண்டான் முயன்று.. (2333)   
-: ஸ்ரீ பேயாழ்வார் :- 

இயற்கையின் சீதனம் 

நிலக்கடலை


கண்டு பூ பூத்து
காணாமல் காய் காய்க்கும் சிறப்பினை உடையது..

கடலைக்குக் களையெடுக்கப் போய்
தம்பிக்குப் பெண் பார்த்தான்!..
- என்று பழமொழி...

கடலைக் காட்டில்
பாடுபடும் பெண்ணானவள்
குடும்பத்தை மென்மேலும் முன்னேற்றுவாள்
என்பது பாரம்பர்ய நம்பிக்கை...


தமிழ் மண்ணோடு பின்னிப் பிணைந்தது
நிலக்கடலை..

இந்த Refind Oil வகையறாக்களைக் கண்டு
மதிமயங்கிய மக்களால் ஒழித்துக் கட்டப்பட்டதே
கடலெண்ணெய்...

ஊருக்கு நாலு இடத்தில் செக்குகள் இருந்த
அந்தக் காலத்தில் மக்களின்
வாழ்வையும் வனப்பையும் மேம்படுத்தியவை
தேங்காயும் கடலையும் எள்ளும்!...

நவீன வர்த்தகம்
காண்பித்த எண்ணெய் வகைகளால்
வாழ்க்கை பாழ்பட்டது தான் மிச்சம்..

இன்று நலம் நாடும் மக்கள் தேடுவது
இயற்கையாகப் பிழியப்படும்
எண்ணெய் வகைகளைத்தான் என்பது
குறிப்பிடத்தக்கது...



பால் மணம் மாறாத
பச்சைக் கடலையை அதிகமாகத் தின்றால்
அது பித்தத்தைத் தூண்டி விடும்..
வயிற்றுப் போக்காகும்..

அதற்கு ஒரே மருந்து வெல்லம்...

பச்சைக் கடலையுடன் வெல்லத்தைச்
சேர்த்துத் தின்றால் மிகச் சுவையாக இருக்கும்..

சற்று காய வைத்து
வறுத்துத் தின்றாலோ.. ஆகா!...



சர்க்கரைப் பாகு காய்ச்சி
வறுத்த கடலையைப் போட்டு
உருண்டையாகப் பிடித்து விட்டாலோ
ஆகா.. ஆகாகா!..

மண்மணம் மாறாத
பச்சைக் கடலையைக் கொண்டு
குருமா வைத்தால் ஊர் முழுதும் மணக்கும்...

கடலைக்காடு காய்த்து விட்டது என்றால்
எலிகளுக்கும் குழி முயல்களுக்கும் நரிகளுக்கும்
கொண்டாட்டம் தான்....

காரணம்
இந்த சிறு விலங்குகளின்
இனப் பெருக்கம்
கடலையினால் தூண்டப்படுகிறது..   
*

சிவதரிசனம் 
திரு தென்குடித்திட்டை 

ஸ்ரீ வசிஸ்டேஸ்வரர்.. 
இறைவன்
ஸ்ரீ வசிஸ்டேஸ்வரர், ஸ்ரீ பசுபதீஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ சுகந்தகுந்தளாம்பிகை, ஸ்ரீ மங்களாம்பிகை

ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை.. 
தலவிருட்சம் - சண்பகம்..  
தீர்த்தம் - சூல தீர்த்தம்

வசிஷ்ட மகரிஷி
காமதேனுவின் பால் கொண்டு அபிஷேகித்து
வழிபாடு செய்த திருத்தலம்...

சிவலிங்கத்திற்கு நேர் மேலே
ஸ்ரீ விமானத்தின் உட்புறமாக
சந்திரகாந்தக் கல் பொருத்தப்பட்டுள்ளது..

இதனால் காற்றிலுள்ள ஈரப்பதம் ஈர்க்கப்பட்டு
24 நிமிடங்களுக்கு ஒருமுறையாக
ஒரு நீர்த் துளி
ஈசனுக்கு அபிஷேகமாகின்றது..

ஸ்ரீ பிரகஸ்பதி - குரு பகவான்.. 
இத்தலத்தில் தான்
நவக்கிரக மண்டலத்தில் விளங்கும்
தேவ குருவாகிய ஸ்ரீ பிரகஸ்பதி
தமது இன்னல் தீரும்படிக்கு
சிவவழிபாடு செய்து நலம் பெற்றார்..


திருக்கோயிலில்
கிழக்கு முகமாக விளங்கும் ஈசனுக்கும்
தெற்கு முகமாக விளங்கும் அம்பிகைக்கும்
நடுவில் - நின்ற திருக்கோலமாக
ஸ்ரீ பிரகஸ்பதி எழுந்தருளியுள்ளார்..

இதுவே
குரு ஸ்தலம்...

தஞ்சையிலிருந்து
ஆவூர் - பட்டீஸ்வரம் சாலையில்
5 கி.மீ., தொலைவிலுள்ளது...

பழைய பேருந்து நிலையத்திலிருந்து
திட்டை வழியாக திருக்கருகாவூர்
செல்லும் பேருந்துகள்
திருக்கோயிலின் அருகில் நின்று
செல்கின்றன...

தஞ்சை மயிலாடுதுறை இருப்புப் பாதை வழியில்
தஞ்சையை அடுத்த ஸ்டேஷன்..

எல்லா பாசஞ்சர் ரயில்களும்
திட்டை நிலையத்தில் நின்று செல்கின்றன...

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு 


முன்னைநாள் மறையவை முறைமுறை குறையொடுந்
தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநற்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.. (3/35)  

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம் 

அங்கமாய் ஆதியாய் வேதம் ஆகி
அருமறையோடு ஐம்பூதந் தானே ஆகிப்
பங்கமாய்ப் பலசொல்லுந் தானே ஆகிப்
பால்மதியோடு ஆதியாய்ப் பான்மை ஆகிக்
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி ஆகிக்
கடலாகி மலையாகிக் கழியும் ஆகி
எங்குமாய் ஏறூர்ந்த செல்வன் ஆகி
எழுஞ்சுடராய் எம்அடிகள் நின்ற வாறே.. (6/94)
*

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருத்தொண்டத் தொகை
திருப்பாடல் 09


கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை
மன்னவனாஞ் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.. (7/39) 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

சனி, ஜனவரி 12, 2019

மங்கல மார்கழி 28

ஓம் 

தமிழமுதம் 

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழும் குடி.. (542)
*
அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிய
திருப்பாவை
திருப்பாடல் 28


கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் 
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் 
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே 
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்..
*

அருளாளனே...

உனது பெருமை எதையும்
அறியாத பிள்ளைகளாக
உன்மீது கொண்ட அன்பினால்
சிறுபேர் சொல்லி அழைத்திருக்கின்றோம்...

அதற்காக
எங்கள் மீது கோபம் கொள்ளலாகாது!..

கறவைகளின் பின் சென்று
அவற்றை அங்குமிங்குமாக
மேய்த்துத் திரிந்து

கூடிய கூட்டமாக
இடைப்பாடியின் பிள்ளைகள் அனைவரும்
சேர்ந்தமர்ந்து உணவினை உண்டு களிப்பதல்லால்
வேறெதையும் பகுத்தறியாத நாங்கள்

பிறவிகள் தோறும் எம் குலத்தில்
உன்னைப் பெறும் புண்ணியத்தை
உடையவர்களானோம்...

கோவிந்தனே!..
இத்தகைய வாழ்வினில்
உன்னோடு கூடியிருப்பதனால்
யாதொரு குறையும்
இல்லாதவர்கள் ஆனோம்...

எவராலும் பிரிக்க இயலாதபடிக்கு

உனக்கும் எமக்கும் ஆகிய
இந்த உறவு பெரும் பேறு..

இந்த உறவு
இவ்வண்ணமே நிலைத்திருக்க
அருள் பொழிவாய் எம்பெருமானே!...



தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீ பெருமாள் கருட சேவை - தஞ்சை.. 
அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணிமருதம் சாய்த்தான் அவனே
கலங்காப் பெருநகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரமெரித்தான் எய்து.. (2332) 

-: ஸ்ரீ பேயாழ்வார் :- 

இயற்கையின் சீதனம் 

எள்



இளைத்தவனுக்கு எள்!..
அர்த்தம் பொதிந்த சொல்வழக்கு..

அந்தக் காலத்தில் நேர்மையின் வழி நின்றே
எல்லாமும் நடைபெற்றன..

ஒன்றிரண்டு விதி விலக்கு இருக்கலாம்...

விடிந்த பின் நாலு நாழிகை கழித்து
கையில் ஒரு செம்புடன் செக்கடிக்குச் சென்றால்
சுத்தமான நல்லெண்ணெய் வாங்கி வரலாம்
நம்பிக்கையுடன்!...

வாணியப் பெருமக்களே
தம் பொறுப்பில் எண்ணெய் ஆட்டி வைத்திருப்பார்கள்..

சுத்தம் செய்யப்பட்ட கறுப்பு எள்ளை நன்றாக உலர்த்தி
அதன் அளவுக்கு ஏற்ப வெல்லமோ கருப்பட்டியோ சேர்த்து
மரச் செக்கில் ஆட்டி எடுத்து வைத்திருப்பார்கள்..

அந்தக் காலம் எல்லாம் இனி வருமா?..
என்று தெரியவில்லை..


ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் - ஓடிமண்டை
பற்றின் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடு பாம்புஎள் எனவேஓது..

- என்று, கவி காளமேகப்புலவரால்
பாடப்பெற்ற பெருமையுடையது எள்..

எள்ளும் அதன் எண்ணெயும்
மனிதர்க்குச் செய்யும் நலன்கள் பற்பல..

எண்ணெய் என்றாலே
அது எள்ளில் இருந்து பெறப்படுவது தான்..

இது ஒன்றுக்குத்தான்
நல்லெண்ணெய் என்று பெயர்...

எள்ளும் எண்ணெய்யும் மனிதருக்கு..
பிண்ணாக்கு கால்நடைகளுக்கு...

விடியற்காலையில்
எள்ளின் பூக்களைப் பறித்துத் தின்றால்
கண் நோய்கள் வரவே வராது...


நல்லெண்ணெயைத் தேய்த்துக் குளிக்க
உடற்சூடு குறைவதுடன் 
தோல் நோய்களும் விலகுகின்றன..

காலகாலமாக இருந்து வந்த இந்தப் பழக்கத்தினை
நாம் ஏன் துறந்தோம்!?...

இன்றைக்கு
சரும நோய் - பொடுகு என்றெல்லாம்
தொலைக்காட்சி ஊடகங்களில்
நிமிடத்துக்கொரு தரம்
ஊளையிடுகின்றார்கள்..

ஆனாலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதென்றால்
நம்மவர்களுக்கு அலுப்பு.. எரிச்சல்...

எள்ளும் வெல்லமும்
உடலுக்கு வேண்டிய இரும்புச் சத்தை வழங்குகின்றன...

எள்ளும் நல்லெண்ணெய்யும்
இளம்பெண்களின் மாதவிலக்குச் சுழற்சியை
சமன் செய்து - ஜனனேந்திரியங்களை
வலுவாக்குகின்றன.. 

இதெல்லாம்
நம்மவர்களுக்குப் பிடிக்குமா.. - என்பதை விட
ஆங்கில மருத்துவத்துக்குப் பிடிக்குமா?..

ஆங்கில மருத்துவத்தை
நாடி நின்றால் தான் தமிழர்களுக்குத் திருப்தி!..

ஆங்கில மருத்துவம் என்றில்லை..
பொதுவாக எந்த மருத்துவமும்
அதிகமாக தேவையிருக்காது
எள்ளை முறையாகப் பயன்படுத்துவோருக்கு!...

அதனால் தான்
இப்படிச் சொல்லி வைத்தார்கள்..

  வைத்தியனுக்குக் கொடுப்பதை
வாணியனுக்குக் கொடு!..
*

சிவதரிசனம் 
திரு வெண்ணி 


இறைவன் - ஸ்ரீ கரும்பேஸ்வரர்  
அம்பிகை - ஸ்ரீ சௌந்தர்யநாயகி

தலவிருட்சம் -  நந்தியாவட்டை
தீர்த்தம் -  சூரிய தீர்த்தம்..

வெண்ணிப் பறந்தலை..
இது தான் இத்தலத்திற்கு
சங்க காலத்தில் வழங்கப்பட்ட பெயர்..

இவ்வூரில் நிகழ்ந்த போரின் போதுதான்
சேர பாண்டியர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தான்
கரிகால் பெருவளத்தான்...


தற்காலத்தில் இவ்வூர்
கோயில் வெண்ணி எனப்படுகின்றது..

முசுகுந்த சக்ரவர்த்தி வழிபட்ட திருத்தலம்..

இத்திருக்கோயில் 
கரிகால்சோழனால் எழுப்பப்பட்டது...

கருப்பங்கழிகளை ஒன்றிணைத்தாற்போல்
சிவலிங்கத்தின் திருத்தோற்றம்...



இத்தலத்தில் வழிபாடு செய்வார்க்கு
நீரிழிவுக் குறைபாடுகள் சரியாகின்றன
என்று அறியப்பட்டுள்ளது...

இத்தலத்தில்
சர்க்கரையைத் தானமாகக் கொடுப்பது
சாலச் சிறந்தது..

அதேசமயம் - நாமும்
நம் வயதுக்கும் உடல் நலனுக்கும்
ஏற்ற உணவு வகைகளை அளவுடன் 
உட்கொள்வது மிகவும் அவசியமாகின்றது...

கண்டதையும் தின்று தீர்த்து
நோயை நமக்கு நாமே உண்டாக்கிக் கொண்டு 
கடவுளே.. கடவுளே.. - என்று
கதறினால் சரியாகுமா!..

என்றால் - ஒன்றும்
சொல்வதற்கில்லை..

இத்திருக்கோயில்
தஞ்சை - நாகை நெடுஞ்சாலையில்
20 கி.மீ., தொலைவில் உள்ளது..

பிரதான சாலையில் இறங்கி
ஒரு கி.மீ., தூரத்துக்கு
கிராமத்தின் உள்ளே நடக்கவேண்டும்...

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து
நீடாமங்கலம் செல்லும் நகரபேருந்துகள் அனைத்தும்
கோயில் வெண்ணியில் நின்று செல்கின்றன..

தஞ்சை நாகை - இருப்புப் பாதை வழியில் உள்ள
கோயில் வெண்ணி ஸ்டேஷனில் எல்லா பாசஞ்சர் ரயில்களும்
நின்று செல்கின்றன..
*

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்காப்பு

நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத்
தாரானைத் தையலோர்பாகம் உடையானைச்
சீரானைத் திகழ்தரு வெண்ணி அமர்ந்துறை
ஊரானை உள்கவல்லார் வினை ஓயுமே.. (2/14) 

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம் 

நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும்
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தாரும்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பா லாரும்
பூந்துருத்தி நகர்மேய புராண னாரும்
மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்
வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்
விருப்புடைய அடியவர்தம் உள்ளத் தாரும்
வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.. (6/59) 
*

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருத்தொண்டத் தொகை
திருப்பாடல் 08 


தொன்மயிலை வாயிலார் நாயனார்
கறைக்கண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த
கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.. (7/39)

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***