நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூலை 31, 2013

ஆடி கிருத்திகை

முருகன்!..

இந்த ஒற்றைச் சொல்லுடன் தான் தமிழர் தம் வாழ்க்கை முறை தொன்மைக் காலத்திலிருந்து தொடர்ந்து வருகின்றது. 


முருகப்பெருமானின் திருக்கரத்தினில் திகழும் ஆயுதங்களுள் மிகச் சிறப்புடையது வேல்!..

'' வெல்லுவது வேல்!..'' என்னும் சொற்குறிப்பினை உடையது.

வெங்காள கண்டர் கைச்சூலமும் திருமாயன் 
வெற்றி பெறு  சுடராழியும்

விபுதர் பதி குலிசமும் சூரன் குலங்கல்லி
வெல்லாது எனக் கருதியே..

சங்க்ராம நீ சயித்து அருள் எனத்தேவரும்
சதுர்முகனும் நின்றிரப்ப

சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
தனிஆண்மை கொண்ட நெடுவேல்

என முருகனின் வேலாயுதத்தினை, அருணகிரிநாதர் புகழ்ந்து பாடுகின்றார்.


வேல் - வெம்பகையை மட்டும் என்றில்லை!.. வெவ்வினையையும் வென்று தீர்ப்பது!.. அதனால் தான் -

 ''..வேலுண்டு வினையில்லை!..'' என்று இனிதாகச் சொல்லி வைத்தனர். 

வேலினை ஞானத்தின் அடையாளம் என வர்ணிப்பர்.

வேலனின் திருப்பெயர்கள் ஒன்றா!.. இரண்டா!.. - சொல்லச் சொல்ல இனிப்பவை. அல்லலுற்று - அவதுயுற்று அடைக்கலம் தேடி வரும் அன்பர் தம் மனக் குகையில் நித்ய வாசம் செய்து -  இருளினை ஓட்டி ஞானப்பிரகாசமாக விளங்குபவன். அதனால்  - குகன் எனப்பட்டவன். 

வேறு ஒன்றின் துணையில்லாமல் தானே ஒளிர்ந்து பிரகாசிப்பது எதுவோ அதுவே சுப்ரமண்யம்!. 

''..சேனாதிபதிகளுக்குள் நான் ஸ்கந்தனாக இருக்கின்றேன்!..'' -  என்கின்றான் பரந்தாமன்!.

ஏரகப்பதியில் - எம்பெருமானுக்குக் குருவாக அமர்ந்து ப்ரணவப் பொருளினை உரைத்து,

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
மன்னுயிர்க்கெல்லாம் இனிது

எனும் குறள் தோன்றுதற்கு காரணனாக விளங்கிய பூரணன்!.. 

யோகக்கலையில் மூலாதாரத்திலிருக்கும் குண்டலினி சகஸ்ராரத்தை நோகி மேலேறும் போது மணி பூரகச் சக்கரத்திற்கு அதிபதி மயில்வாகனன்!.. அதுமட்டுமின்றி ஆக்ஞா (நெற்றி) சக்கரத்தில் ஆறு பட்டைகளுடன் கூடிய ஒளிரும் மணியாக விளங்குகின்றான் என்கின்றனர் கற்றறிந்தோர்.

வேதம்  - ''சுப்ரம்மண்யோம்! சுப்ரம்மண்யோம்! சுப்ரம்மண்யோம்!'' - என்று முழங்குவதாக -  குருநாதராக விளங்கும் வாரியார் சுவாமிகள் குறிப்பிடுவார். 

அருணகிரியார், அண்ணாமலையில் முருகப்பெருமானால் தடுத்தாட்க் கொள்ளப்பட்டு, சும்மா இரு சொல்லற என உபதேசம் பெற்று தியானத்தில் ஆழ்ந்து விடுகின்றார். அதன் பின்னர் முருகப்பெருமானால் - அட்சர  தீட்சை பெறுகின்றார். முத்தைத் தரு எனும் முதற் பாடல் பிறக்கின்றது. 

மீண்டும் தியானம். ''..வயலூருக்கு வா!..'' என பெருமானால் அழைக்கப்பட்டு அங்கேதான் திருப்புகழ் பாட அறிவுறுத்தப்படுகின்றார். அப்படிப் பாடுங்கால் - அங்கே வீற்றிருக்கும் பொய்யாக் கணபதியின் தாள் வணங்கிப் பாடுகின்றார். அந்தப்  பாடல் தான் - ''..கைத்தல நிறைகனி..'' எனத் தொடங்கும் இனிமையான பாடல். 


அதிலே, ''..வள்ளிநாயகியின் மீது கொண்ட காதலால் துயருறும் சுப்பிர மணியனின் துயர் தீர, தினைக் காட்டுக்குள் யானையாகத் தோன்றி - குறவர் தம் குலக்கொடியாகிய வள்ளி நாயகியுடன், உனக்கு இளையோனாகிய முருகனை மணமுடித்து வைத்த பெருமானே!..''- எனப் போற்றுவது சிந்திக்கத் தக்கது. 

அப்படி அருணகிரியாரால் உச்சரிக்கப்பட்ட திருப்பெயர் - மந்திரத்தின் மறு வடிவான சுப்ரமண்யம் என்பதாகும்!..

முருகன்  - தமிழருடன் இணைந்த ஒரு சொல் என்று சொல்லி விட்டு என்ன - வடமொழியை கொண்டு வந்து புகுத்துகின்றீர்களே!..

தேவாரத்தில் அப்பர் பெருமான் அழகாகச் சொல்கின்றார்.

ஆரியன் கண்டாய்! தமிழன் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே! (6/23/5)

வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண்...

சிவனவன்காண் சிவபுரத்து எம்செல்வன் தானே! (6/87/1) 

அப்பனே அப்படி - சர்வ வியாபியாகத் திகழ்ந்து பரிபாலிக்கும் போது, மகன் மட்டும் என்ன  - தனித்தா இருப்பான்!... மொழிக்கெல்லாம் அப்பாற்பட்ட மூலப்பரம் பொருள் அல்லவா - முருகன்!..

அத்தகைய  அரும்பொருள் - ஆறுமுகத்தரசு - அருள் மழை பொழிய வேண்டும் என்று அன்பரெல்லாம் கூடிக் கொண்டாடும் நல்ல நாட்களுள் ஒன்றுதான் கிருத்திகை!.. 

அதிலும் ஆடிக்கிருத்திகை - அளவிடற்கரிய பெருமைகளை உடையது!..


ஐந்தாம் படைவீடாகிய திருத்தணிகையில் பெருந்திருவிழா நிகழ்கின்றது!.. லட்சக் கணக்கில் பக்தர்கள் கூடி மகிழ்கின்றனர். இந்த வேளையில் -

இருமலு ரோக முயலகன் வாத
எரிகுண நாசி விடமே நீ

ரிழிவுவிடாத தலைவலி சோகை
எழுகள மாலை இவையோடே

பெருவயிறீளை எரிகுலை சூலை
பெருவலி வேறுமுள நோய்கள்

பிறவிகள் தோறும் எனைநலி யாத
படியுன தாள்கள் அருள்வாயே!.. 

வருமொரு கோடி அசுரபதாதி
மடிய அநேக இசைபாடி

வருமொரு கால வயிரவராட 
வடிசுடர் வேலை விடுவோனே

தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி
தருதிரு மாதின் மணவாளா

சலமிடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே!... 

- என, எல்லாம் வல்ல எம்பெருமானாகிய கந்தவேளின் மலர்த் தாமரைகளைச் சிந்தித்து - நோய் நொடியில்லாத நல்வாழ்வினைப் பெறுவோமாக!...

இந்தப் பதிவினை தட்டச்சு செய்யும் நேரம் -  இங்கே  - குவைத்தில் நள்ளிரவு 12.30. 

என்னைச் சுற்றிலும் சாம்பிராணி தூபத்தின் நறுமணம் கமழ்கின்றது!. இந்த நேரத்தில் சாம்பிராணி தூபம் இடுவோர் யாரும் இங்கே கிடையாது!..

இந்த மாதிரி - பல சந்தர்ப்பங்களில் நிகழ்ந்துள்ளது. என் ஐயன் என்னுடன் இருந்து என்னை இயக்கிக் கொண்டு இருக்கின்றான் என்றே  உணர்கின்றேன்!..


எப்போதெல்லாம் என் மனம் சஞ்சலப்பட்டு துயருறுகின்றதோ -  அப்போது எல்லாம் சிந்தையை ஒருங்கு கூட்டி, நெற்றியில் சில நொடிகள் நிலைக்க வைத்து - நான் உச்சரிக்கும் மந்திரம் -   

சுப்ரம்மண்யோம்!.. சுப்ரம்மண்யோம்!.. 
சுப்ரம்மண்யோம்!..

செவ்வாய், ஜூலை 30, 2013

ஸ்ரீ வீரபத்ரர் - 01

தட்சன் வெகுகாலம் தவம் செய்து, நிறைவாக - பெரும் யாகம் ஒன்றை நடத்தினான். அது மூலப்பரம்பொருளாகிய சிவபெருமானைக் குறித்து.


வேள்வியின் உக்ரம் கண்டு மனம் குளிர்ந்த சிவபெருமான் தட்சனின் முன் தோன்றினர். அவரைப் போற்றிப் பணிந்த தட்சன் ஒரே ஒரு வரம் கேட்டான். 

''..அம்பிகை எனக்கு மகளாக வேண்டும். தாட்சாயணி என - என் அன்பில் வளர்ந்த மகளை, எம்பெருமான் மணம்கொண்டு அருள் புரியவேண்டும்!..''

வேண்டுவார் வேண்டுவதே ஈந்தருளும்  ஈசன் அவ்வாறே அருள் புரிந்தார்.

காலங்கள் வேகமாக ஓடின. தாட்சாயணி மணக்கோலங்கொள்ளும் காலமும் நெருங்கிற்று.

அம்பிகையைத் திருமணங்கொண்டு, திருக்காட்சி  நல்கும்படி   - தேவர்களும் முனிவர்களும் - ஐயனை வேண்டிக் கொண்டனர். 

ஐயனும் அடுத்த காட்சியினை இயக்க வேண்டி - அன்புடன் இசைந்தார்.

ஆயிற்று. மணமகன் சார்பாக தவத்தில் பழுத்த மகாமுனிவர்கள் திரண்டு பெண் கேட்டுச் சென்றனர் தட்சனின் அரண்மனைக்கு. அவனோ -  

அரண்மனையின் உச்சியில் அல்ல! -  ஆணவத்தின் உச்சியில் நின்றான்!.. 

பெரியோர்கள் முறைப்படி பெண் கேட்டனர்.

தட்சன் - '' ..எதற்கு?.. '' என்றான்.

''.. எல்லாம் அறிந்த நீ - இப்படிக் கேட்கலாமா!.. சக்தி சிவத்துடன் கூடினால் தானே பிரபஞ்ச இயக்கம்  நிகழ்வுறும். உன் தவத்தின்படி கேட்டுப் பெற்ற - பெரியநாயகியை, பிரியமுடன் பெருமானுக்கு கன்யாதானம் செய்து கொடுத்து பெருவாழ்வினை அடைவாய்!..''

''.. அப்படியானால் சக்தியற்ற சிவன் சாதாரணன்!.. உங்கள் கூற்றுப்படி நானே பெரியவன் ஆகின்றேன்!... அல்லவா!.. அப்படியானால் இனி எனக்கே சகல லோகங்களிலும் முதல் - இல்லை.. இல்லை.. எல்லா மரியாதைகளும் செய்யப்பட வேண்டும்!.. அந்தச் சிவனே என்னிடம் வந்து வணங்கிப் பெண் கேட்க வேண்டும்!..'' 

தட்சன் கொக்கரித்தான். அடியவனாக இருந்தவன் கொடியவன் ஆனான்.

யாரும் போய்ச் சொல்ல வேண்டிய அவசியம் இன்றி ஈசனுக்கு - அங்கே நடந்த விஷயம் விளங்கிற்று.  புன்னகைத்தார். 

அரண்மனையில் - அம்பிகையின்  சிவபூஜையினைத் தடை செய்தான் தட்சன். அம்பிகை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஸ்தூல வழிபாட்டினை சூட்சும நிலைக்கு உயர்த்துகின்றார் தந்தை - என்று அகமகிழ்ந்து லிங்கத் திருமேனியினைத் தன் இதயத்தாமரையில் பிரதிஷ்டை செய்து கொண்டாள். 


அப்புறம் என்ன!.. சக்தியுடன் சிவம் கலந்ததா!.. சிவத்துடன் சக்தி கலந்ததா!.

ஆனந்தக் கூத்தாடி அகமகிந்த ஐயன் அம்பிகையின் வளைக்கரம் பற்றினார். 

சகல உயிர்களும் மகிழ்வெய்தின - தட்சன் ஒருவனைத் தவிர!..

''..அன்று, வரம் கேட்டபொழுது -  என் அன்பில் வளர்ந்தவளை, எம்பெருமான் மணங்கொண்டு அருளவேண்டும்!. - என்று தானே கேட்டேன். நான் மணம் முடித்துத் தரவேண்டும் - எனக்கேட்டேனா? இல்லையே! பிறகு ஏன் புகைச்சல்  - எனக்குள்?..''

''..சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக்கொண்டு,  நடுச்சாமத்தில் பேய்களுடன் கூடி - கூத்தாடிக் களிக்கும் சிவனா என் அன்பு மகளின் மனங் கவர்ந்தான்!.  என்னால் நம்ப முடியவில்லையே!..''

''..அட!.. அப்படியே மனங் கவர்ந்திருந்தாலும் என் அன்பு மகளுக்காக எதையும் செய்வேனே!.. அந்த சுடுகாட்டுப் பித்தன் என்னிடம் வந்து வணங்கி நின்று கேட்டிருந்தால்!.. ''

''.. நான்  வளர்த்தவனாயிற்றே!.. சிவன் - என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்க வில்லையே!. கண் பார்த்துக் கொண்டிருக்கும்போதே - திடு.. திடு.. என்று ஆடிக் கொண்டு வந்தான்!... வாஞ்சையுடன் வளர்த்த மகளை வாரி அணைத்து - ஒரு முரட்டுக் காளையில் ஏற்றிக் கொண்டு போய்விட்டான்!..''

''.. தாட்சாயணி - என் செல்லமகள்!.. தங்கக் குதிரையில் ஆரோகணித்தவள் ஆயிற்றே!. யானை மீது வைர அம்பாரியில் வையகத்தை வலஞ்செய்தவள் ஆயிற்றே!. எப்படி.. எப்படி.. இதனைப் பொறுப்பேன்!..''

''.. இனி அவனை  - அவனென்ன அவன் - அவளையும் சேர்த்து மறப்பேன்!.. அடியோடு வெறுப்பேன்!..''

தட்சன் கொதித்தான்.. குமுறினான்!..

இருப்பினும் - அனைவரும்  எடுத்துக் கூறினர். மனதைக் கல்லாக்கிக் கொண்டு கயிலை நோக்கிச் சென்றான்!.. மகளையும் மருகனையும் கண்டு வருவோம் - என!..

ஆனால் அங்கே சுற்றிக் கொண்டிருந்த குள்ள பூதங்கள் எள்ளி நகையாடி -

''..சிவ நிந்தனை செய்தவனுக்கு இங்கே இடமில்லை!..'' - என்று, கயிலையின் அருகில் கூட அனுமதிக்காமல் விரட்டி விட்டன.

கொதித்த உள்ளத்துடன் - அரண்மனைக்குத் திரும்பிய தட்சன்  - 

''.. யாரடா அங்கே!..'' - கர்ஜித்தான். ஓடிவந்து நின்றவர்களிடம் உத்தரவுகளைப் பிறப்பித்தான். மளமள என்று காரியங்கள் நடந்தேறின.

மூவுலகில் இருந்த - எல்லாரும் திரண்டு வந்தனர்.

''..மஹாயக்ஞம்!.. தட்சன் நடத்துகின்றான் எனில் கேட்க வேண்டுமா!.  தன் தவ வலிமையால் - அம்பிகையை - மகளாகப் பெற்றவன் ஆயிற்றே!..''

- என்று புகழ்ந்து பேசிக் கொண்டு வந்த அனைவரும் ஆசனங்களில் அமர்ந்த பின் தான் புரிந்தது இந்த யாகத்தை - தன் மருகனாகிய இறைவனைச் சிறுமைப் படுத்துவதற்காக நடத்தப்படுவது என்று!..

''.. இத்தகைய யாகம் செய்வது தகாது!..'' - என ததீசி முனிவர் எடுத்துரைத்தும் தட்சன் கேட்காததால் - ததீசி முனிவர்  கோபமுற்றுச் சென்று விட்டார் என்று - பிறகுதான் தெரிந்தது!.

''.. அப்படியே எழுந்து ஓடிவிடலாம்!..'' - என்று வாசல் பக்கம் பார்த்தால் - யம தூதர்களைப் போல  - காவலர்கள்.

அடிவயிற்றைக் கலக்கினாலும், ''..அழைத்தவன் அவன். அழைப்பை மறுத்தால் மித்ரதோஷம் வராதா!.. நட்பை நாடி அழைத்தான். நாமும் அதையே நாடி வந்துள்ளோம்!..'' - என, தமக்குத் தாமே ஆறுதல் கொண்டார்கள்.

இதற்கிடையே - திருக்கயிலாய மலையில் -

ஐயனின்  - சொல்லை மீறி, அம்பிகை  யக்ஞத்துக்கு - புறப்படுவதைக் கண்டு மனங்கலங்கி நின்றார் நந்தியம்பெருமான்.

சற்று முன் பெரும் வாக்குவாதம்!..  யாருக்கு வெற்றி என்று சொல்லத் தெரிய வில்லை!.. ஏதும் சொல்ல மொழியின்றி கை கட்டி நின்றார்.


தனித்திருந்த சிவம் தவத்தில் ஆழ்ந்தது. ஐயனின் முகம் நோக்கியவாறு முன் அமர்ந்தார் - நந்தியம்பெருமான்.

சிறு பொழுது கூட ஆகவில்லை!.. கண் விழித்தது சிவம். திருமேனி எங்கும் தீப்பிழம்புகளாக கோபக்கனல். திடுக்கிட்டார் நந்தி.

மகளென்றும் பாராமல் - சொல்லம்புகளை வீசி - அம்பிகையை தட்சன் அவமதித்த விஷயம் புரிந்தது. வியர்த்து வழிந்தது - நந்திக்கு!..

''..என்ன நடக்கப் போகின்றதோ!..''

அதோ அம்பிகையும் சீறிச் சினந்த முகத்தினளாக ஓடி வந்து ஈசனைப் பணிந்து பரிதவிக்கின்றாள். இப்படியோர் அவமானம் நிகழ்ந்ததே - என்று!..

ஈசனின் கோபம் - அவர் தம், நெற்றிக்கண்ணில் இருந்து  - ஆயிரம் முகங்கள்  இரண்டாயிரம் திருக்கரங்கள் கொண்டு,  அக்னிப் பிழம்பென - வெளிப்பட்டது.


அண்ட பகிரண்டம் முழுதும், ''வீரபத்ரன்!.. வீரபத்ரன்!..'' எனும் திருநாமம் எதிரொலித்தது!..


அதே சமயம் - அம்பிகையின் திருமேனியிலிருந்து - அவள் கொண்ட கோபம் - ஸ்ரீபத்ரகாளி - என வெளிப்பட்டது!..

ஸ்ரீவீரபத்ரருக்கும் ஸ்ரீபத்ரகாளிக்கும் இலக்கு - தட்சனின் யாகசாலை!..

தட்சன் ஆடிய ஆட்டத்திற்கு எதிர் ஆட்டமாக -  ஸ்ரீவீரபத்ரரும், ஸ்ரீபத்ரகாளியும் - ஆடிய ஆட்டம், தட்சனின் தலை அறுபட்டு யாகத்தீயில் விழுந்ததோடு முடிவடைந்தது!..

தடம் மாறிச் சென்றதனால் - தலையற்ற தட்சன் - தனியே நின்று தடுமாறிக் கொண்டிருந்தான்.

அம்பிகையை வளர்த்த புண்ணியம் - அவன் உயிரைக் காத்து நின்றது!.

சப்தரிஷிகள் கூடி நின்று- ஈசனையும் இறைவியையும் போற்றினர். அவர்கள் முன் விடை வாகனத்தில் தோன்றிய எம்பெருமான் - அழிக்கப்பட்ட வேள்விக் களத்தில் குற்றுயிராய்க் கிடந்த அனைவரையும் உயிர்ப்பித்தார்.


தட்சனின் தலை அக்னிக்கு இரையாகிப் போனதால், புதிதாக ஆட்டின் தலை பொருத்தப்பட்டது. மறுவாழ்வு பெற்ற தட்சன் - தான் செய்த பிழையினைப் பொறுத்தருள வேண்டி நின்றான்.

அங்கே நடந்தது  ஈசனின் அட்ட வீரட்டங்களுள் ஒன்றெனப் புகழப்பட்டது.

இதுவே பின்னர் - அம்பிகை பர்வத ராஜ - குமாரியாகத் தோன்றுவதற்கு தொடக்கம். சூரபத்மனால் தேவர்கள் சிறைப்படவும்  - தாமரைத் தடாகத்தில் , சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் முருகப் பெருமான் உதித்து எழவும்  - தட்ச யக்ஞமே காரணம்.

அந்திவான் பெருமேனியன் கறைமிடற்றணிந்த
எந்தை தன் வடிவாய் அவன் நுதல்விழியிடை
வந்து தோன்றியே முன்னுற நின்றனன் மாதோ
முந்து வீரபத்ரன் எனும் திறலுடை முதல்வன்!.

என்று  - ஸ்ரீவீரபத்ரரின் திருத்தோற்றத்தினை - கச்சியப்பர் கந்தபுராணத்தில் விவரிக்கின்றார்.

தட்சனின் யாகத்தைச் சிதைத்த ஸ்ரீவீரபத்ரரின் அருஞ்செயல் - சைவ திருமுறைகள் பலவற்றிலும் புகழ்ந்து போற்றப்படுகின்றது.

மயிலாடுதுறை - செம்பொன்னார்கோயில் அருகே கீழப்பரசலூர் என தற்போது வழங்கப்படும் திருப்பறியலூர் திருத்தலம் தான் - தட்சன் தலையைப் பறித்த வீரட்டானத் திருத்தலம்.

ஸ்ரீ வீரட்டேஸ்வரர்
ஈசன் வீரட்டேஸ்வரர் எனவும் அம்பிகை இளங்கொம்பனையாள் எனவும் விளங்குகின்றனர்.  சிவகங்கை தீர்த்தம். பலா தல விருட்சம்.

நவக்கிரகங்களில் சூரியனைத் தவிர வேறு எவரும் - இங்கே கிடையாது.  எனவே வினையின் வேர் அறுபடும் தலம்.

ஞானசம்பந்தப் பெருமானின் திருப்பதிகம் பெற்ற தலம்.

ஸ்ரீ வீரபத்ரரை வழிபடுவதற்கு - உகந்த நாள் செவ்வாய். ஸ்ரீ வீரபத்ரர் - கூடிக் கெடுக்கும் எதிரிகளின் தொல்லைகளை அகற்றி வீண் பயத்தினை ஒழிப்பார். 

காரணம் இன்றி உடலில் தோன்றும் நடுக்கம் வீரபத்ரர் வழிபாட்டினால் தீரும். வெற்றிலை மாலை சாற்றி - நெய் விளக்கேற்றி வழிபட நலங்கள் விளையும்.

ஸ்ரீ வீரபத்ர வழிபாடு பாரதத்தின் தொன்மையான வழிபாடுகளில் ஒன்று.

தஞ்சையில் கீழவாசல் வெள்ளைப் பிள்ளையார் கோயில் அருகில் ஸ்ரீவீரபத்ரர் கோயில் உள்ளது. தெற்கு ராஜவீதியில் - கோட்டை ஸ்ரீவிஸ்வநாத ஸ்வாமி திருக்கோயிலில் வீரபத்ரர் - பத்ரகாளி எழுந்தருள்கின்றனர்.

குடந்தையில் மகாமக குளக்கரையிலும், திருஆனைக்காவிலும் -  ஸ்ரீவீரபத்ரர் கோயில் கொண்டுள்ளார்.

ஸ்ரீவீரபத்ரரைப் போற்றி தக்க யாகப் பரணி பாடியவர்,  தமிழ்ப் பெரும்புலவர் ஒட்டக்கூத்தர். இவருடைய பக்திக்கு இணங்கி -  பத்ரகாளியுடன் தரிசனம் தந்தருளினார் ஸ்ரீவீரபத்ரர்.

மேலும்,  குடந்தையை அடுத்த தாராசுரத்தில் வீரபத்ரருக்கு கோயில் எழுப்பிய ஒட்டக்கூத்தர் - இந்தக் கோயிலிலேயே - ஜீவசமாதி எய்தினார்.

ஞானசம்பந்தப் பெருமான் தம் திருவாக்கினால் (3/51/3) அருளியபடி -

வீண்பழி, வன்பகை, கொடும் பிணி - இவையெல்லாம் தொலையும் வண்ணம் ஐயன் ஸ்ரீ வீரபத்ரரையும் ஸ்ரீ பத்ரகாளியையும் ஆடிச் செவ்வாய் அன்று போற்றி வணங்குவோம்!..

தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச்
சொக்கனே அஞ்சல் என்றருள் செய் எனை..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

ஞாயிறு, ஜூலை 28, 2013

அம்மன் தரிசனம் - 02

வெற்றி!.. எங்கும் வெற்றி!.. எதிலும் வெற்றி!..

வெற்றி வேல்!.. வீர வேல்!..


செந்திற் கடற்கரையில் எழுந்த ஜயகோஷம் அண்ட பகிரண்டம் முழுதும் எதிரொலித்தது.!..

மூம்மூர்த்திகளும் கூடி நின்று  பூமாரி பொழிந்தனர்!..

சூரன் வீழ்ந்தான்.. அவனுடைய ஆணவம் அழிந்து அடங்கி ஒடுங்கி, 

''..முருகா சரணம்!. முதல்வா சரணம்!.'' - என - 

 தன் காலடியில் கிடந்த சூரபத்மனைப் பரிவுடன் நோக்கிய கந்தப் பெருமான், - ''..இனி எமது மயில் வாகனத்துள் இன்புற்றிருப்பாயாக!..'' - என தீந்தமிழால் மொழிந்தான். 

அவ்வண்ணமே - ஆகி - பெருவாழ்வு பெற்ற சூரன், இப்படியும் அப்படியுமாக நடை பழகி - தன் பசுந்தோகையை விரித்து ஆடியபடி - ஆறுமுகப்பெருமானை வலம் வந்து வணங்கினான்.

மயில் வாகனனாக ஆரோகணித்த எம்பெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கினர் - மறுவாழ்வு பெற்ற தேவர்கள்.


சர்வம் சுப மங்களம்  - என்றிருந்தது பிரபஞ்சம் முழுதும். 

அந்த வேளையில், ஏகாந்தமாக இருந்த எம்பெருமான் - தனக்குள் சிந்தித்தான்.

சிவபக்தனாக தவமிருந்த சூரன் - சிந்தை கெட்டதால் சீரழிந்தான்!.. தந்தையின் ஆணைப்படி - அவன் கொண்ட ஆணவத்தை அழித்தாயிற்று!.. 

ஆயினும் ... ஆயினும் ...

மயிலோனின் மனம் அமைதி கொள்ளவில்லை. 

அம்மையப்பனைத் தரிசித்து, வலம் வந்து வணங்கி நின்றான். மகனின் உள்ளக் கிடக்கையைத் தெரிந்து கொண்ட சிவப்பரம் பொருள் - புன்னகை பூத்தது.

இது நிகழ்ந்தது - திருக்கயிலை மாமலையில் என்றால் -  அங்கே திருப்பாற் கடலில் அரவணையில் தூங்காமல் தூங்கிக் கிடக்கும் திருத்துழாய் மார்பன் - தானும் புன்னகை பூத்தான்!..

தம்பியர் எண்மருடன் வீரபாகு உடன் வர -  பூதப்படையும் சூழ்ந்து வர  , 

பூவுலகம் வந்தடைந்த முருகனை - வரவேற்பது போல பிரம்மாண்டமாகத் தழைத்து நின்றது - இலந்தை மரம்.

தல விருட்சம் - இலந்தை
இது வடக்கே, சத்ய யுகத்தில் நிகழ்ந்ததன் - பின் விளைவு!.. 

ஆதியில், இமாலயத்தில் கந்தமாதன பர்வதத்தின் அடிவாரத்தில் -  உயிர்கள் கடைத்தேறும் பொருட்டு ஸ்ரீமந்நாராயணன் எழுந்தருளி ''ஓம் நமோ நாராயணாய!..'' எனும் திருமந்திரத்தை, மனுக்குலத்திற்கு உபதேசித்த போது  - அன்னை ஸ்ரீமஹாலக்ஷ்மி - இலந்தை மரமாகத் தோன்றி தழைத்துப் படர்ந்து நிழல் கொடுத்தாள்.

மஹாலக்ஷ்மியின் அம்சமே - முருகனின் - முன்நின்ற இலந்தை மரம்!..

நவ வீரர்களும் சூழ்ந்து நின்றனர். பூதப்படை அவர்களுக்கு அரணாக நின்றன. முருகன் தன் வேலினைக் கொண்டு ஒரு தடாகத்தை உண்டாக்கினான். சரவணப்பொய்கை எனப்பட்ட தீர்த்தத்தில் அனைவரும் நீராடினார்கள்.

ஒன்றிய மனத்துடன் கரங்குவித்து நின்ற செல்வக்குமரனின் முன் சுயம்பு லிங்கம் எழுந்தது. தாழ்ந்து பணிந்து வணங்கிய வள்ளல் பெருமான்  - தான் எண்ணி வந்த காரியத்தை ஈடேற்றத் தொடங்கினான்.


சில விநாடிகள் தான்!.. அங்கே நிலவிய அமைதி கெடும்படியாக - 

பெரும் ஓலத்துடன் ஆயிரம் ஆயிரமாக - அன்று போரில் மாண்டு அழிந்த அசுரர்களின் ஆவிகள் - முருகப் பெருமானைச் சூழ்ந்து கொண்டன. 

இதனை முன்பே உணர்ந்திருந்த வீரபாகு - பூதங்களுடன்  கூடி, ஆவிகளை எதிர்த்துப் போரிட்டார். அசுரர் - பாவிகளாக இருந்தபோதும் தொல்லை!.. ஆவிகளாக ஆன பின்னும் தொல்லை!..

சங்கல்பத்துடன்  - சிவபூஜையில் அமர்ந்திருந்த முருகன் தவித்தான். 

சிவபூஜையின் முதற்பொருளாக அமர்ந்திருந்த விநாயகர்  - வழிபாட்டினைத் தொடரும்படி அருளினார். இக்கட்டான சூழ்நிலை. நேரம் ஆக, ஆக - அசுர ஆவிகள் வெறிகொண்டு கொக்கரித்தன. கொட்டம் அடங்காமல் குதுகலித்தன.

செவ்வேள் முருகன் சிந்தித்தான். ''அன்னையே சரணம்!..'' - என வந்தித்தான்!.. 

இதைத்தானே - அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி எதிர்பார்த்திருந்தாள்...

வெகு நாளாயிற்று அவளும்  - இப்படி ஒரு வீர ஆவேசம் கொண்டு!... 

அண்ட பகிரண்டமும் அதிரும்படி ஆக்ரோஷமாக எழுந்தாள்!.. 

இட்ட அடியில் இடிபட்டு, எடுத்த அடியில் இற்று விழுந்தன தீவினைகள்!.. 

நாற்றிசையிலும் சதுரங்க தாண்டவமாடிய தயாபரி  - அந்த ஆகாயத்திலும் வியாபித்து நின்றாள். தப்பிப் பிழைக்க வழியின்றித் தவித்த - ஆவிகள் அன்னையின் அடித்தாமரையின் கீழ் சிக்கி அழிந்தொழிந்தன!..

அதன்பின், சிவபூஜையினை சிறப்புடன் நிறைவேற்றிய சிவகுமரனும் - சர்வ லோகங்களும்  வாழும் பொருட்டு தீர்த்தமும் திருநீறும் கொடுத்தான்.

ஆனந்தம் பாடி நின்றது - வானமும் வையமும்!..

சூரனுடன் பொருதுவதற்கு முன், புள்ளிருக்கு வேளூரில் சிவபூஜை புரிந்தான் செல்வமுத்துக் குமரன்.

சூரன் வீழ்ந்ததும்,  செந்தூரில் - சிவபூஜை புரிந்தான் சிவசக்தி புதல்வன்.

பின்னும் தன்னைச் சுற்றி நின்று தொல்லை கொடுத்த பிரம்மஹத்தி அகலவும் - அழியவும் - சிவகுருநாதன் சிவபூஜை புரிந்த திருத்தலம் தான் - 

கீழ் வேளூர்!.. 


இன்று கீவளூர் என்று மருவி வழங்கப்படுகின்றது. சாலை மற்றும் ரயில் வசதி அமையப் பெற்ற  கீவளூர் -  திருஆரூருக்கும் நாகைக்கும் இடையில் உள்ளது. 

இத்திருத்தலத்தில் - தம்பிக்குத் துணையிருந்த பிள்ளையார் - பத்ரி விநாயகர் என விளங்குகின்றார்.

அருள்தரும் கேடிலியப்பர்
ஈசனின் திருப்பெயர்- கேடிலியப்பர். எம்பெருமானை வணங்கி நிற்க -

நமக்கு - எந்தக் கேடுகளும் இல்லை!.. இல்லை!.. இல்லவே இல்லை!..

உடனமர்ந்து அருளும் அம்பிகையின் திருப்பெயர் - வனமுலைநாயகி.

சுவாமி - அக்ஷயலிங்கேஸ்வரர் எனவும் வழங்கப்படுகின்றார். க்ஷயம்  - என்றால் தேய்வு, அழிவு எனும் அர்த்தம். அக்ஷயம் - எனில் அழிவிலாதது. ஆக, அடைக்கலம் என அண்டி நின்றவர் தேய்தல் இன்றி - தினமும் வளர் நிலவென வாழ்ந்து வளம் பெறுவர் என்பது - திருக்குறிப்பு.

ஒரு ரகசியம் சொல்லவா - உங்களுக்கு!.. 

கேடிலியப்பர் சந்நிதியில் சற்று நேரம் தியானத்தில் அமர்ந்தால் - உங்களின் முற்பிறவி உங்களுக்கு உணர்த்தப்படும்!..

அடியேன்,  அவ்வண்ணம் - உணர்ந்துள்ளேன்!..

வனமுலை நாயகி  - சுந்தரகுஜாம்பிகை எனும் திவ்யநாமத்துடன் திருவருள் பொழியும் திருத்தலம்.

சிவபூஜை செய்த தலம் ஆதலின், இங்கே முருகன் -  தேவியர் இன்றி தவக் கோலத்தில் வடக்கு நோக்கி விளங்குகின்றான்.

மஹாலக்ஷ்மி  - இங்கு இலந்தை மரமாக விளங்குவதனால் - வடதிசைக்கு அதிபதியான குபேரன் இத்தலத்திலேயே நித்ய வாசம் செய்கின்றான்!.. (அது போதாதா... நமக்கு!..)

அகத்தியர் வழிபட்டு எம்பெருமானின் திருநடனங்கண்டு ஆனந்தித்து - பெருமானின் வலது பாத தரிசனம் பெற்ற திருத்தலம்.

நான்முகனும் சூரியனும் சந்திரனும் அக்னியும் ஆதிசேஷனும் வணங்கி இன்புற்ற திருத்தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் - என சிறப்புற்ற திருத்தலம்.


திருநாவுக்கரசரும் ஞானசம்பந்தப் பெருமானும் - திருப்பதிகம் பாடி வழிபட்ட திருத்தலம். திருக்கோயில் கோச்செங்கணான் எழுப்பிய மாடக்கோயில்.

இத்தனை பெருமைகளுக்கும் சிகரம் வைத்தாற்போல - 

தன் செல்வ மகனின் வழிபாட்டினைக் காக்கும் பொருட்டு -  கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு எனும் நாற்புறத்துடன் ஆகாயம் என - ஐந்து புறத்திலும் வட்டமிட்டு ஆடி  - வன்பகையைக் கெடுத்தாளே!.. - அன்னை!.. பராசக்தி!..

அவள் தான் இங்கு பெருஞ்சிறப்பு!.. இத்தலத்தில் அவளுடைய திருப்பெயர் - 

அஞ்சுவட்டத்தம்மன்!.. 


அச்சம் தீர்ப்பவள்!.. ஆனந்தம் சேர்ப்பவள்!..
எச்சமயம் ஆயினும் இன்னலைத் தேய்ப்பவள்!..
அல்லலைத் தீய்ப்பவள்!.. வன்பகை மாய்ப்பவள்!..
சஞ்சலம் சாய்ப்பவள்!.. அருள் கொண்டு பார்ப்பவள்!..

அன்னையின் பெருமை அளவிடற்கரியது!.. ஆற்றாது அழுத, கண்ணீரைத் துடைக்கும் அன்பு வடிவினளாக திருக்கோலம் கொண்டு, திருக்கோயிலின் வெளித் திருச்சுற்றில், வடக்கு நோக்கி சந்நிதி கொண்டு விளங்குகின்றனள்.

சிந்திப்போர் மனதில் சீர் கொண்டு விளங்குவாள்!.. 
வந்திப்போர் மனதில் வான் சுடராய் துலங்குவாள்!..

ஊன்றிய திரிசூலம் - உளங்கெட்ட வீணருக்கே!.. விழிகளில் -
தெறிக்கும் தீக்கனல் குணங்கெட்ட ஈனருக்கே!..

தாயே!.. சரணம்!.. - எனத் தாள் பணியும் 
அன்பருக்குத் தண்ணிலவு அவள்!..
துணை வேண்டும் தூயவர்க்குத் துணையாகி
வழிகாட்டும் வெண்ணிலவு அவள்!..

அவளைப் பணிமின் கண்டீர்!.. 
அமராவதி ஆளுகைக்கே!..

சனி, ஜூலை 27, 2013

கற்பது உன் நாமம்

ஆனந்தமாக இருக்கின்றது. அதே சமயம்  - 

அச்சமாகவும் இருக்கின்றது.

ஏன்?... 


நமது வலைத்தளத்தை நல்லோர் நயந்து உரைத்து முன் வைத்திருக்கின்றனர்..

அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!..



வலைச்சரம்   எனும் தளத்தில்,  அன்புக்குரிய அம்பாளடியாள் அவர்களால் - பல்சுவை விருந்தளிக்கும் முத்துக்களின் அணிவகுப்பு - என்ற தலைப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது ஆனந்தம்!.. - பகிர்ந்து கொள்வது, தங்களுடன்!..


அங்கே  - தஞ்சையம்பதிக்கு வழங்கப்பட்ட அணிந்துரை - 

தஞ்சையம்பதி இத் தளத்தினூடாக பக்தி மணம் கமழும் படைப்புகளை அள்ளி அள்ளி வழங்குகின்றார். இவரது எழுத்துக்களைப் பார்க்கும் போது தோழி இராஜராஜேஸ்வரி அவர்களுடைய வலைத் தளம் தான் நினைவிற்கு வருகின்றது. அத்தனை அழகாக எழுதுவதிலும் படங்களைப் பகிர்வதிலும் இவர் வல்லவராகத் தோன்றுகின்றார். மனம் கவர்ந்த பதிவுகள் இங்கு ஏராளம் உள்ளது. அதிலிருந்து ஒரு சிலவற்றை இங்கே பகிரலாம் என நினைக்கின்றேன் .

ஆடி வெள்ளி தொடர்

அம்மன் தரிசனம்

திருக்கடவூர் 

மேற்குறித்த அணிந்துரைக்கு - நமது வலைத்தளத்தின் அன்புக்குரிய வாசகர்களாகிய தாங்கள் தான் காரணம்!..

அதிலும், தோழி இராஜராஜேஸ்வரி அவர்களின் வலைத்தளத்தினை நினைவு கூர்ந்தது  - என் நெஞ்சில் நிற்கின்றது!..

அறிமுகத்திற்குப் பின் - அங்கே, நல்லோர் பலர் வரவேற்று வாழ்த்தியுள்ளனர்.

அனைவருக்கும்  - என்னுடைய பணிவான நன்றிகள் என்றும் உரியன!..


இனி - 

அச்சம்!.. - இது என்னுடன் மட்டும்!..

எல்லோருடைய அன்பின் துணை கொண்டு, நமது வலைத்தளத்தினை வரும் நாட்களில் சீருடனும் சிறப்புடனும் நடத்திட வேண்டும்!..

மாகவிஞன்  காளிதாசனின் வரலாறு  - மகாகவி காளிதாஸ் என -  நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் திரைக் காவியமாக வெளியான போது - அதில் கவியரசர் தன் பாட்டுத் திறத்தாலே பாலித்திருப்பார்..

அவற்றில்  - இந்த சந்தர்ப்பத்திற்காக - சில வரிகள்!..

குழந்தையின் கோடுகள் ஓவியமா!..

நான்  - இன்னும் தவழ்ந்து கொண்டிருக்கும் - குழந்தை தான்!.. 

பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்!..

இப்போதும் - கற்றுக் கொண்டிருக்கின்றேன்!..

என்னை,  நானே - புதிதாய் பெற்றுக் கொண்டிருக்கின்றேன்!..

இந்நிலையில் - வழித்துணையாய் வரும் தமிழையும் ,  

என்னை உயர்த்திய தமிழை - எனக்கு உணர்த்திய ஆசிரியர் அனைவரையும்,

தளராது எனைத் தாங்கிய என் தந்தையையும்,  

தன்னோடு எனைத் தாங்கிய என் தாயையும்,

நினைவு கூர்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்!..

இவ்வளவு தானா?

இன்னும் ஒரு தாய் இருக்கின்றனளே!.. அவளை நினைவு கூரவேண்டாமா!..


கண்ணியது உன்புகழ்  கற்பது உன்நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன்னிரு பாதாம் புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான்முன் செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே!..

எல்லாரையும் வழி நடத்தும் சிவம் 
என்னையும் வழி நடத்துமாக!..