நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 11, 2025

முசுகுந்தர் 1

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 27
வெள்ளிக்கிழமை

வீதிவிடங்கர் பற்றிய பதிவின் தொடர்ச்சியாக இன்று..


தேவேந்திரனைக் கண்டதும் சத்திய லோகத்தின் கதவுகள் திறந்து கொண்டன..

நான்முகப் பெருமானின் நான்கு முகங்களிலும் புன்னகை...

" வழக்கம் போலவே பிரச்னை... இம்முறை விருத்திராசுரன் வருகின்றானாம் பெரும் படையுடன்..." 

" தேவேந்திரா!.. உடனடியாக பூவுலகம் சென்று முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியைக் கேள்... அவர் ஒருவரால் மட்டுமே  அசுரப் படைகளை அழித்து உனக்கு உதவ முடியும்.. "

" அவரிடம் அப்படி என்ன மகத்துவம்?.."

" அவர் ஒருவரே அகந்தையை அழித்துப் பிறந்தவர்.. அதைப் பிறகு தெரிந்து கொள்ளலாம்.. இப்போது உடனடியாக பூவுலகத்திற்குச் செல்!.." 

பிரம்மதேவர் மொழிந்ததைக் கேட்ட இந்திரனுக்கு அமரலோகம் மறந்து போனது.. அரம்பையரும் மறந்து போயினர்...

திரு ஆரூரை நோக்கி விரைந்தான்.. 

ஐராவதத்தினைத் தொடர்ந்து உச்சைச்சிரவமும் ஓடிற்று..

வந்து நின்ற தேவேந்திரனை வணங்கி வரவேற்று உபசரித்தார் முசுகுந்தர்..

தேவேந்திரன் தனது பிரச்னையை விளக்கினான்.

உதவியென வந்து நிற்கின்ற
 தேவேந்திரனுக்கு ஆறுதல் கூறி அவனுக்குத் துணையாகச் சென்று அசுரப் படைகளை அழித்தார் முசுகுந்த சக்ரவர்த்தி..

தேவேந்திரன் பூரித்திருந்தான்...

" என்ன வேண்டும் கேளுங்கள்... தருகின்றேன்!.. "

ஈசனின் கருணையினால் நல்லதோர் எண்ணம் தோன்றிற்று முசுகுந்தரின் மனதில்..


" ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் திருமார்பில் இருந்து வெளிப்பட்டதும் தாம் பூஜித்துக் கொண்டிருப்பதுமான ஸ்ரீ சோமாஸ்கந்த  மூர்த்தியை அடியேனுக்கு அளிக்க வேண்டும்!.. "

தேவேந்திரன் அதிர்ந்தான்..
இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை..

" சரி... நாளை உதயத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்... "

மறுநாள் உதயத்தில் முசுகுந்தர் அதிர்ந்தார்...

காரணம் அங்கே ஏழு சோமாஸ்கந்த விடங்கத் திருமேனிகள் இருந்தன... 

இந்திரன் அர்த்தத்துடன் புன்னகைத்தான்.. 

மூலத் திருமேனியை விட்டுக் கொடுக்க விருப்பம் இல்லாமல் அதைப் போலவே ஆறு திருமேனிகளை  உருவாக்கி ஒன்றாகக் கலந்து வைத்திருந்தான்..

" முசுகுந்தர் அவர்களே..  இவற்றுள் ஒன்று மட்டுமே மூலமானது.. அதனைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.. தாங்கள் தான் தபோ பலமும் மனோ பலமும் ஈசனிடம் பேரன்பு மிக்கவர் ஆயிற்றே!... "

முசுகுந்தர் ஒரு விநாடி ஈசனைத் தியானித்தார்.. 

உண்மையான விடங்கத் திருமேனி அவரது நெஞ்சுக்குள் ஒளிர்ந்தது..

ஓடிச் சென்று அதன் திருப்பாதங்களைத் தொட்டார்.. அந்த அளவில்  ஏனைய ஆறு திருமேனிகளும் சுயம் பிரகாசமாக ஒளிர்ந்தன...

தனது திட்டம் தவிடு பொடியானதை உணர்ந்து கொண்ட இந்திரன் எல்லாவற்றையும் முசுகுந்தரிடமே ஒப்படைத்து கௌரவித்தான்..

முசுகுந்தர் அவற்றை திருவாரூர் முதலான ஏழு தலங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்...

இருந்தாலும் மனம் ஆறவில்லை அமரர் கோனுக்கு..

" முசுகுந்தரது மகத்துவம் தான் எத்தகையது?!.. "

ஈசனின் அருள் வாக்கு ஒலித்தது...

" தினமும் மாலைப் பொழுதில் ஆரூர் வந்து வழிபடுவாயாக... கீழைத் திருவாசல் வழியாக எழுந்தருளும் போது எம்மை நீ பற்றிக் கொள்... "

விடங்கர் சந்நிதியில் சுந்தரர்

நித்ய பிரதோஷ திருத் தலம் ஆனதால் ஸ்வாமிக்கு எதிரில் நந்தீசன் நின்று கொண்டு இருக்கின்றார்.. 

கீழைத் திருவாசல் வழியாக ஸ்வாமி எழுந்தருள்வது எப்போது என்று இந்திரனும் காத்துக் கொண்டிருக்கின்றான்..

ஓம் 
சிவாய நம ஓம்
**

4 கருத்துகள்:

  1. என்ன ஒரு புராணக்கதை... தேவர்கள் மனிதப்பிறவியை உதவி கேட்டு வந்து நின்ற பொழுது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. தேவேந்திரன் கவரும் நோக்கில் வராமல் தரிசன நோக்கில் வரும் ஒரு நாளில் இறைவன் அவன் வசப்படலாம்!

    பதிலளிநீக்கு
  3. எல்லாம் இறைவன் சித்தம்

    தங்கள் அன்பின் வருகையும்
    கருத்தும் மகிழ்ச்சி

    நன்றி ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..