நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, அக்டோபர் 18, 2026

துலாமாதம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி
ஞாயிற்றுக்கிழமை

இன்று துலா மாதப் பிறப்பு... (18/10)

காவிரியாள் தனது மக்களுக்கு எல்லா வளங்களையும் வாரி வழங்கிச் செல்லும் சீர்மிகு நகர்களுள்  மயிலாடுதுறையும் ஒன்று... இதன் பெயர்களுள் ஒன்று மாயூரம்.

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா?..'' - எனும் சொல் வழக்கு தஞ்சை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தமானது. 

என்ன காரணம்?...


உமா மகேஸ்வரியாகிய
அம்பிகை மயிலாகத் தோன்றி  சிவபூஜை செய்து இறைவனின் மயூர தாண்டவத்தை இங்கு தான் காணப் பெற்றாள்...

இங்கு தான் காவிரியுடன் கலந்து  கங்கையும் புனிதம் கொண்டாள்..

அந்நாள் ஐப்பசியின் முதல் நாள்... 


அன்று தொட்டு கார்த்திகை  முதல் நாள் வரை இறைவனின் ஆணைப்படி கங்கா தேவி மயிலாடுதுறை துலா கட்டத்தில் காவிரியுடன் உறைகின்றாள் என்பது ஐதீகம்... 

இந்நேரத்தில் சோழ தேசத்தின் நீர்நிலைகளில் எல்லாம் கங்கா வியாபிக்கின்றாள் என்பர் ஆன்றோர்..

அந்த வகையில் நமது வீட்டிற்குள்ளும் கங்காதேவி வந்திருக்கின்றாள்...

இந்நாட்களில் மயிலாடுதுறை துலா கட்டத்தில் நீராடி - முன்வினை எல்லாம் நீங்கப் பெற்று அம்மையப்பனின் அருள் பெறுவோம்....

கங்கையாள் போற்றி
காவிரியாள் போற்றி..
***

வெள்ளி, அக்டோபர் 16, 2026

தமிழமுது


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி
 வெள்ளிக்கிழமை

திருநாவுக்கரசர் அருளிச்செய்த தேவாரம்


தலம் மேற்றளி
காஞ்சிபுரம்

செல்வியைப் பாகங் கொண்டார் 
  சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு 
  மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையி லாத 
  காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார் 
  இலங்குமேற் றளிய னாரே.. 4/43/8


பார்வதி பங்கராய் , முருகனை மகனாகக் கொண்டவராய் மல்லிகை மாலைகளுடன் கொன்றை மலர்களையும் முடி  சூடி
 
சூரியன் விளக்கமுற அவனொளிக்கு உள்ளொளியாய் - கல்வியில் சிறந்த  காஞ்சி மாநகரிலே , மேற்றளியனாராக பெருமான்  விளங்குகின்றார்...

ஓம் நம சிவாய
***

வெள்ளி, அக்டோபர் 09, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி
 வெள்ளிக்கிழமை

திருஞானசம்பந்தர் அருளிச்செய்த தேவாரம்


தலம்
திருக்கோளிலி
 (திருக்குவளை)

நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே.. 1/62/1

மட மனமே! 
உலகின்  நாள்கள் கழிவதற்கு முன்னரே நீலகண்டனாகிய சிவபெருமானுக்கு அடிமை பூண்டு அவனிடத்து அன்பு செய்வோம். 

பெருமானது திருநாமங்களை காதாரக் கேட்பாயாக. 

அவ்வாறு கேட்பின் நமது சுற்றத்தினரும் கிளைத்து இனிது வாழ்வர். 

துன்பங்கள் நம்மைத் தாக்காதவாறு 
கோள் வினைகளை நீக்கி அருள் புரிகின்ற பெருமான் திருக்கோளிலி என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்..

அவனை உணர்ந்து கொள்வாயாக...

ஓம் நம சிவாய
***

வியாழன், அக்டோபர் 08, 2026

இன்னருள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி
 வியாழக்கிழமை


கடந்த  வியாழனன்று (2/10) காலையில்  ஸ்ரீ விட்டல் நாதனின் தரிசனத்திற்காக தஞ்சையில் புறப்பட்டு அன்று மதியம் சென்னை வந்தடைந்தோம்..

தாம்பரத்தில் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருவின் அதிஷ்டான தரிசனம்... அன்னப்ரசாதம்...

சென்னையில் உறவினர்கள் சேர்ந்து கொண்டனர்..

மாலை 6:30 மணிக்கு சென்னையில்
இருந்து மும்பை விரைவு ரயிலில் பயணித்து வெள்ளிக்கிழமை காலையில் சோலாப்பூரை அடைந்து அங்கிருந்து வேறொரு ரயில் மூலம் ஸ்ரீ பண்டரிபுரத்தைச் சேர்ந்தோம்..

சோலாப்பூரில் இருந்து பண்டரிபுரம்
76 கிமீ ..

கோயிலுக்கு அருகே
சந்திரபாகா நதிக் கரையில் ஸ்ரீ த்வாரகாநாத் மந்திர் மடத்தின் தங்குமிடத்தில் தங்கி சந்திரபாகா நதியில் நீராடி விட்டு ஸ்ரீ சிருங்கேரி  ஸ்ரீ பாரதி தீர்த்த அன்ன கூடத்தில் அன்ன ப்ரசாதம்...

அதன் பின் ஓய்வு..

மறுநாள் சனிக்கிழமை.. 
எங்களுக்கு அனுமதி நேரம் காலை ஏழு மணி...
நீண்ட வரிசையில் சென்று சந்நிதியை அடைந்து
அவனருளால் அவன் திருவடிகளில் தலை வைத்து வணங்கி நின்றோம்...


பண்டரிநாதனின் வலப்புறம் ஸ்ரீ ரகுமாயி சந்நிதி... பிரகாரத்தில் பல சந்நிதிகள்... அவற்றுள் ஸ்ரீ சிவபெருமானின் சந்நிதியும் ஒன்று...

திருக்கோயிலுக்குள் கைத்தொலைபேசிகளுக்கு அனுமதி இல்லை..

விட்டல் நாதன் தரிசனம் கண்டபின்
மதியத்தில்  அக்கல்கோட் மகானின் அதிஷ்டான தரிசனம்.. அன்னப்ரசாதம்... 


பண்டரிபுரத்திலிருந்து சுமார் 115 கிமீ தொலைவில் உள்ளது  அக்கல்கோட்...

மூன்று மணியளவில் அக்கல்கோட்டில் இருந்து 65 கிமீ தொலைவில் 
துளஜாபூர்..



சத்ரபதி சிவாஜிக்கு வீரவாள் வழங்கிய  ஸ்ரீ பவானி அன்னை தரிசனம்... 

சிறு பெண் பிள்ளைகளை தேவி போல அலங்கரித்து கோயிலுக்கு அழைத்து வருகின்றனர்...

பிறகு துளஜாபூரில் இருந்து புறப்பட்டு 45 கிமீ தொலைவில் உள்ள - சோலாப்பூர் 
ஸ்ரீ சித்தேஸ்வரர் தரிசனம்..  


சுற்றிலும் அகழி சூழ்ந்திருக்க  கோட்டைக்குள்  கோயில் உள்ளது...
அங்கும் அன்ன ப்ரசாதம் வழங்கப்பட்டது..

இரவு ஒன்பதரை மணியளவில் சோலாப்பூரில் புறப்பட்டு மறுநாள் இரவு நல்லபடியாக இல்லம் வந்து சேர்ந்தோம்...

முழங்கால் வலியுடன் நடந்ததும் படிக்கட்டுகள் ஏறி இறங்கியதும் கனவு போல இருக்கின்றன.. 

அனைத்தும் இறையருள்...

படங்கள் நன்றி இணையம்..

விட்டல விட்டல பாண்டுரங்க...
விட்டல விட்டல பாண்டுரங்க...
***

செவ்வாய், அக்டோபர் 06, 2026

அவனருள்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி
 செவ்வாய்க்கிழமை


புரட்டாசி வியாழன்று அதிகாலை தஞ்சையில் புறப்பட்ட நாங்கள் மூன்றாம் கிழமை காலையில்  ஸ்ரீ விட்டல் நாதனின் தரிசனம் இனிதே கண்டோம்..

அவனருளால் அவன் தாள் வணங்கி நின்றோம்... 

மதியத்தில்  அக்கல்கோட் மகானின் அதிஷ்டான தரிசனம்.. 

மூன்று மணியளவில் சோலாப்பூரில் இருந்து 46 கிமீ தொலைவில் உள்ள சத்ரபதி சிவாஜிக்கு வீரவாள் வழங்கிய துளஜாபூர் ஸ்ரீ பவானி அன்னை தரிசனம்...

இரவு ஏழு மணியளவில் சோலாப்பூர் ஸ்ரீ சித்தேஸ்வரர் தரிசனம்.. 

அங்கேயே அன்ன ப்ரசாதம்...

இரவு ஒன்பதரை மணியளவில் சோலாப்பூரில் புறப்பட்டு ஞாயிறு இரவு நல்லபடியாக இல்லம் வந்து சேர்ந்தோம்...

ஓம் ஹரி ஓம்

விட்டல விட்டல பாண்டுரங்க...
விட்டல விட்டல பாண்டுரங்க..
***

வெள்ளி, அக்டோபர் 02, 2026

தமிழமுது


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி
 வெள்ளிக்கிழமை 


இன்று
சுந்தரர் அருளிச்செய்த தேவாரம்...

நீள நினைந்தடியேன் உமை
  நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண் மடவாள் அவள்
  வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை 
யூர்ச் சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் 
அவை அட்டித் தரப்பணியே..
7/20/1


திருக்கோளிலி தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே, 

வாள் போலுங் கண்களை உடைய எனது இல்லாள் பரவை தனது வாழ்க்கையை நடத்த இயலாமை கருதி மனம் வருந்தாதபடி குண்டையூரில்  நெல் மூட்டைகள் சிலவற்றைப் பெற்றேன். 

ஆயினும்
அவைகளை அவள்பாற் சேர்ப்பிப்பதற்கு எனது வசம் ஆட்கள் எவரும் இலர்.. 

அடியேன், எப்போதும் உம்மையே நினைத்து வணங்குகின்ற பணியை உடையவன்..

நான் வேறு யாரை வேண்டுவேன்! 

இந்த நெல் மூட்டைகளை ஆரூரில் சேர்ப்பித்து உதவும்படி  எவர்க்கேனும் உத்தரவிட்டு அருள்வீராக..


இதன் பின்
குண்டையூர்க் கிழாரால் சுந்தரர்க்கு வழங்கப்பட்ட நெல் மூட்டைகள் நெல்மலையாய் உயர்ந்து நின்றன..

அன்றிரவு  எம்பெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட பூத கணங்கள்  சுந்தரரை அணுகி " எமக்கு இங்கு பணி யாது?.." என வினவ,

சுந்தரரும் " இந்நெல்மலையை ஆரூரில் இல்லம் தோறும்  நிறைத்திடுக.." - என்று மொழிந்து அருட் தன்மையில் பொலிந்து நின்றார்...

பூத கணங்களும் அவ்வாறே இல்லங்கள் தோறும் நெல்லை நிரப்பிச் சென்றன...

குண்டையூர் கிழாரிடம் சுந்தரர் நெல் பெற்ற இப்பதிக பாராயணத்தால் இல்லத்தில் வறுமை வாராது என்பது ஆன்றோர் வாக்கு...

இன்றும் இவ்வைபவம் மாசியில் திருவிழாவாக நிகழ்கின்றது..


சுந்தரர் திருவடிகள்  போற்றி

ஓம் நம சிவாய
***

புதன், செப்டம்பர் 30, 2026

தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி
 புதன் கிழமை


எதிர்வரும் வெள்ளி அல்லது சனிக்கிழமை பண்டரிபுரத்தில் ஸ்ரீ ரகுமாயி சமேத ஸ்ரீ விட்டல் மகராஜனைத் தரிசனம் செய்யும் பொருட்டு சிறு குழுவாக நாளை புறப்படுகின்றோம்...

மூன்று மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்ட ஆலய தரிசனம்  இது..

அவனருளால் அவன் தாள் வணங்கி -  ஞாயிறு அல்லது திங்கட்கிழமையில் இருந்து புதிய பதிவுகள்..


விட்டல விட்டல பாண்டுரங்கா..
ஹரி நாராயண..
***

வெள்ளி, செப்டம்பர் 25, 2026

தமிழமுது


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி
 வெள்ளிக்கிழமை


இன்று
திருநாவுக்கரசர் அருளிச்செய்த
தேவாரம்

தலம் திருப்பயற்றனூர்

பார்த்தனுக் கருளும் வைத்தார் 
  பாம்பரை ஆட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் 
  சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார் 
  கோளரா மதியம் நல்ல
தீர்த்தமும் சடைமேல் வைத்தார் 
  திருப்பயற்றூர னாரே.. 4/32/4


பஞ்ச பாண்டவருள் பார்த்தனுக்கு அருள் புரிந்து பாசுபதம் நல்கிய
திருப்பயற்றூர் ஈசன் ,  இடுப்பில் ஆடுமாறு பாம்பினை
இறுகக் கட்டியவர் 

சாத்தன் ஆகிய ஐயனாரை மகனாகக் கொண்டவர்.. 

காளிக்காகச் சாம வேதம் பாடியவாறு கூத்து நிகழ்த்தி - 
கொடிய பாம்பு , பிறை , கங்கை ஆகியவற்றைச் சடையில் தரித்தவர் ஆவார்..

 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
***

வியாழன், செப்டம்பர் 24, 2026

முத்து

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி 
 வியாழக்கிழமை

2014 ல் பதிவு செய்யப்பட்ட பிள்ளைத் தமிழ் பாடலுக்கு விளக்கம் கேட்டிருந்த  அன்பருக்காக இந்தப் பதிவு


திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்

கத்தும் தரங்கம் எடுத்தெறியக்
கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்
கரையில் தவழ்ந்து வாலுகத்தில்
கான்ற மணிக்கு விலையுண்டு
தத்துங் கரட விகடதட தந்திப் 
பிறைக் கூன் மருப்பில் விளை
தரளந் தனக்கு விலையுண்டு
தழைத்து கழுத்து வளைந்த மணிக்
கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக்
குளிர்முத் தினுக்கு விலையுண்டு
கொண்டல் தரும் நித்திலம் தனக்குக்
கூறுந்தரமுண்டு உன் கனிவாய்
முத்தம் தனக்கு விலை உண்டோ
முருகா முத்தம் தருகவே
முத்தம் சொரியும் கடல் அலைவாய்
முதல்வா முத்தம் தருகவே..
-: பகழிக்கூத்தர் :- 


கடலில் அலையடித்து வலம்புரிச் சங்குகள் கரையில் தவழ்ந்து உமிழும் முத்துக்கு விலை உண்டு.

யானையின் தந்தத்தில் உண்டாகும் முத்துக்கும் விலை உண்டு.

வயலில் தழைத்து விளைந்த  குளிர்ச்சியான நெல் முத்தினுக்கும் மேகங்கள் பொழிந்த நீர் முத்துக்களுக்கும் விலை உண்டு.

 இவையனைத்தும் மதிப்பு மிக்கவை; ஆனால், 

முருகா நீ உந்தன் கனி இதழ்களால் தரும் முத்தமோ விலைமதிப்பற்றது, அதற்கு விலையே இல்லை..

முருகா... முத்தம் தருக..

முத்துக்களைத் சொரிகின்ற திருச்செந்தூரின் முதல்வா.. முத்தம் தருகவே!..

முருகா
முருகா...
***

செவ்வாய், செப்டம்பர் 22, 2026

அன்பு எனும் ஆலமரம்

 


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி 
 செவ்வாய்க்கிழமை

கைத்தலபேசியில் பழைய குறிப்புகளைக் கிளறிக் கொண்டிருந்த போது கிடைத்த கதை இது...

சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் பிளாக்கில் வெளியாகி உள்ளது...

தலைப்பு நினைவில் இல்லை...

எனது பேத்திகளை நினைத்துக் கொண்டு அரைமணி நேரத்தில் தட்டச்சு செய்யப்பட்ட சிறுகதை...

கதையின் கருவிற்கும்
படத்திற்கும் சம்பந்தம் இருக்கலாம்...


காமாட்சியம்மாளுக்கு ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யம்...
இருக்காதா பின்னே!..

புது வீடு தரை மட்டத்திலிருந்து மூன்றடி உயரம் என்பதற்காக - அன்று முதல் இன்று வரை
தை.. தை.. என்று தாண்டிக்
குதித்துக் கொண்டிருக்கின்றவர் - நான்கைந்து நாட்களாக மாடிப் படிகளில் ஏறுவதும் இறங்குவதுமாக!.. 
ஒரு நாளைக்கு எத்தனை தடவை என்பது அவருக்கே வெளிச்சம்!..

அவர் என்றால் அகத்துக்காரர் - சுந்தரம்...
நாற்பது ஆண்டுகளுக்கு முன் கல்யாணப் பத்திரிக்கையைப் பார்த்ததுமே உறவு முறைகள் அத்தனையும் சொல்லிச் சொல்லி கேலி செய்து களித்தன...

மணமகன் சுந்தரம்
மணமகள் காமாட்சி..
சுந்தர காமாட்சி
காமாட்சி சுந்தரம்..
எப்படிப் பார்த்தாலும் பெயர்ப் பொருத்தம் அழகோ அழகு என்று..

அப்படியே சொல்லுக்குச் சொல் மாறாமல் ஓடிப் போயின வருடங்கள்...

இத்தனை வருடங்களில் இருவருக்கும் இடையே ' முணுக் ' என்றொரு பார்வையும் கிடையாது.. ' நறுக் ' என்றொரு வார்த்தையும் கிடையாது..

அன்பு பாசம் என்றால் அப்படியொரு விதம்..
மகளும் மகனும் என்று இல்லறம் இனிமையாயிற்று.. மகளும் மருமகனும் பெங்களூரில்.

வளைகுடா நாடொன்றில் நல்ல வேலையில் மகன்..
சுபஸ்ரீ, ஸ்ரீஹரி - என செல்வக் களஞ்சியங்கள்..

மருமகனும் மகளும் அவ்வப்போது பிள்ளைகளுடன் பெங்களூரில் இருந்து வந்து செல்வார்கள்.. அந்த வகையில் இவர்களுக்கு கொஞ்சம் நிம்மதி...

மகனோ வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்துடன் விஜயம்.. அங்கும் இங்கும் சென்று வருவதிலேயே நாட்கள் ஓடிவிட - பேரன் பேத்திகளுடன் விளையாடிக் களித்த நேரம் என்பது மிக மிக சொற்பமாக இருக்கும்..
ஏமாற்றம் மிஞ்சியிருக்க  - அடுத்த விடுமுறை எப்போது என்ற எதிர்பார்ப்புடன் விமான நிலையத்தில் கையசைக்கும் போது இருவர் மனதிலும் ஏற்படும் வேதனை  - கன்னங்களில் வழிந்திடும்.. 

சொல்லி மாளாது..

தற்போது வழக்கத்துக்கு மாறாக இரண்டு மாத விடுமுறையில் வருகின்றார்கள் என்றதும் கிழவன் கிழவி இருவரும் -  இருபது வயதுக்குத் திரும்பி விட்டார்கள்..
அதிலும் சுந்தரத்துக்கு ஏக சந்தோஷம்..
பேத்தி சுபஸ்ரீ பத்து வயதினள்.. அன்றைக்குக் கேட்டு விட்டாளாம்..

" தாத்தா.. Tell me something about your rural life.. " - என்று.. 

தலை கால் புரியவில்லை அவருக்கு..

தற்காலத்தில் மாடியில் தோட்டம்.. கேட்கிறோம்.. பார்க்கின்றோம்.. 
இவர் என்ன செய்தார் என்றால்
வீட்டின் முன்புறம்  செம்பருத்திச் செடியின் அருகில் இரும்புக் குழாய்களை நட்டு ஊஞ்சல் ஒன்றைத் தொங்க விட்டார்.. வீட்டை ஒட்டியிருந்த காலி இடத்தில் ரெண்டு ஆட்டுக் குட்டிகளை வாங்கி வந்து கட்டினார்.. 

மாடியை பண்ணை வீடாக மாற்றினார்...
மாடித் தளம் முழுவதற்கும் தென்னங்கீற்றால் கூரை வேய்ந்தார்.. சாரங்களில் சின்னச் சின்ன மண் தொட்டிகளில் கற்பூரவல்லி, பட்டு ரோஜா Money Plant என்று தொங்க விட்டார்... 

சற்றே பெரிய தொட்டிகளில் தும்பை, துளசி, கீழாநெல்லி, அந்தி மந்தாரை, ரோஜா என்று வளர்த்தார்.. 

வைக்கோலையும் தேங்காய் நாரையும் மண்ணுடன் கலந்து மாடித் தளம் முழுதும் பரப்பினார்..  

இன்னும் அழியாதிருக்கும் நாட்டுக் கோழிகளில் நான்கினை வாங்கி வந்து கூரை நிழலில் விட்டார்..

காக்காய் கழுகு உள்ளே வந்து விடாதபடிக்கு - சுற்றிலும் கம்பி வலையை வைத்து முறுக்கினார்..

காமாட்சியம்மாள் சிரித்தபடி கேட்டார்கள்..

" எல்லாம் பெட்டைக் கோழிகளாக இருந்தால் பாவம் இல்லையா?.."

அன்றைக்கே  வெள்ளைச்  சேவல் ஒன்று புது மாப்பிள்ளையாக வந்து சேர்ந்தது..

இப்போது தான் நிம்மதி..

ஆனால் மறுநாள் பொழுது விடிந்ததும் வேறு சில பிரச்னைகள் மனித வடிவாகி வாசலில் வந்து நின்றன...

எல்லாருமே அரசு அலுவலக ஊழியர்கள்..  வசதி வாய்ப்பு மிக்கவர்கள்.. சிலரிடம் சொகுசு வாகனங்கள் கூட இருக்கின்றன..

" உங்களுக்கே தெரியும் இங்கே ஆடு மாடு கோழி எல்லாம் வளர்க்கக் கூடாது.. ன்னு!.. "

" எருமே மாட்டை வாங்கிக்கிட்டு வரலை!..  நல்லவேளை.. அந்த சாணி மூத்திரத்துல இருந்து தப்புச்சோம்.. "

" நாங்க எல்லாம் இங்கே இருக்கிறதா?.. வீட்டை வித்துட்டுப் போறதா?.. "

" இது டவுனா.. பட்டிக்காடா?.. "

"  அந்தப் பொட்டைக் கோழி நாலு மணிக்கெல்லாம் சத்தம் போட்டு தூக்கத்தைக் கெடுத்துடுச்சி.. "

கூவுகின்ற கோழி எது என்று தெரியாத ஞான சூனியம்  ஒன்று..

" வாத்து.. தெரியுமா.. வாத்து.. அதிலயும் நாலு வாங்கிக்கிட்டு வந்து விட்டுருக்கலாமே!.. "

காழ்ப்புணர்ச்சி பல்வேறு வடிவங்களாக எதிரில் நின்றது...

உற்றுப் பார்த்தார் சுந்தரம்..
" கோப தாபம் இல்லாம ஒருத்தருக்கு ஒருத்தர் ஒற்றுமையா இருக்கணும்.. ங்கறது தான் எப்போதும் ஆசை.. நீங்க எல்லாரும் ஏதோ பதட்டத்துல வந்துட்டீங்க.. இருந்தாலும் பரவாயில்ல.. சாலை.. ல நின்னு 
பேச வேணாம்.. உள்ளே வாங்க!..
என்றபடி கம்பிக் கதவைத் திறந்தார்...

அந்தப் பக்கம் ஆட்டுக் குட்டிகள் தலை நிமிர்ந்து பார்த்து விட்டு மேய்வதில் கவனமாகின...

" வெளிநாட்ல இருக்கற என் பையன் குடும்பத்தோட  இன்னும் நாலு நாள்.. ல இங்கே வர்றான்.. பேரன் பேத்திகளோட சந்தோஷத்துக்காக இந்த ஜீவனை எல்லாம் இங்கே கொலு மாதிரி வெச்சிருக்கேன்.. "

" அதான் யூட்டூப் லே கார்ட்டூன் எல்லாம் வெச்சிருக்கானே!.. "

அதற்கு ஒன்றும் கூறாத சுந்தரம் - " ஒரு மாசம் இருந்துட்டு அவங்க போனதும் இதை எல்லாம் கலைச்சிடுவேன்.. கவலப் படாதீங்க!.. " - என்றார்..

" நாங்க எதுக்கு சொல்ல வந்தோம்.. னா!.. "

குறுக்காக வந்தார் - அந்த பேங்க் மேனேஜர்..

" கொஞ்சம் இருங்க!... இங்கே நீங்களும் நானும் கஷ்டப்பட்டு தான் வீட்டைக் கட்டி குடி வந்து இருக்கிறோம்.. யாரும் யாருக்கும் இடைஞ்சல் இல்லை.. "

சற்று நிறுத்திய சுந்தரம் தொடர்ந்தார்..

" ஒரு தலைமுறைக்கு முன்னால நீங்களும் பட்டிக்காட்ல இருந்தவங்க தான்.. மாட்டுச் சாணியிலயும் ஆட்டுப் புழுக்கையிலும் வளந்தவங்க தான்.. அதை மறந்துடாதீங்க.. 
அப்புறம் - "

" யூட்டியூப்.. ல ஆயிரம் இருக்கலாம் .. லட்சம் இருக்கலாம்.. அதெல்லாம் சொப்பனத்துல கண்ட அரிசி மாதிரி... சோத்துக்கு ஆகாது.. "

வந்திருப்பவர்களை உற்றுப் பார்த்தபடி சொன்னார்..

" நமக்கு எதிரிகள் இந்தக் கோழிகளோ ஆட்டுக் குட்டிகளோ  இல்லை!... "

ரிடையர்டு வாத்தியார்  ஏடாகூடமாக  ஏதாவது பேசி வைப்பார் - என்று வந்தவர்களுக்கு ஏமாற்றம்...

அதற்குள் காமாட்சியம்மாள் காஃபி குவளைகளுடன் வந்தார்கள்..

" காஃபி சாப்பிடுங்க!.. " உபசரித்தார் சுந்தரம்..

அடுத்த நான்கு நாட்களில் உற்சாகத்துடன் ஓடி வந்த பேரன் பேத்திகள்  வீட்டிலிருந்த பூச்செடிகள் கோழிகள் ஆட்டுக் குட்டிகளைக் கண்டு குதுகலமானார்கள்..

அவர்கள் வந்த நேரம் முட்டையிட்டுக் கொண்டிருந்த கோழி ஒன்று அடை காக்க அமர்ந்தது.. கூடையில் வைக்கோலைப் பரப்பி அதில் பத்து முட்டைகளை வைத்ததும் கோழி தானாகவே ஏறி அமர்ந்து கொண்டது.. 

கூரிய அலகினால் முட்டைகளைப் புரட்டிப் புரட்டி தனக்கு வாகாக வைத்துக் கொண்ட கோழி சிறகுகளை விரித்து முட்டைகளை அணைத்தபடி தூக்கத்தில் ஆழ்ந்தது..

இதைக் கண்ட பேத்தி சுபஸ்ரீக்கு ஆச்சர்யம்.. சின்ன மனதிற்குள் என்னென்னவோ நினைத்துக் கொண்டாள்..

அவ்வப்போது கோழி எழுந்து வெளியே ஓடும் சமயத்தில்
தாத்தாவின் துணையோடு முட்டைகளைத் தொட்டுப் பார்த்தாள்...  இளஞ்சூட்டில் இருக்கும் முட்டைகள் - இதுவரை கண்டிராத சந்தோஷம்..

இருபது நாட்கள் கடந்த நிலையில் முட்டை ஓடுகளில் மெல்லிய விரிசல்... 

" Why like this தாத்தா!?.. "

" முட்டைக்கு உள்ளே இருக்கிற குஞ்சு வெளியே வரப் போகுது.. ம்மா.. "

" தாத்தா.. முட்டைக்குள்ளே குஞ்சு ஏன் போச்சு.. எப்படி போச்சு?.. "

" அது போகலைடா செல்லம்.. முட்டைக்குள்ளே இருக்கிற வெள்ளைக் கருவும் மஞ்சக் கருவும்  கோழியோட சூட்டுல உயிராகி உருவமா ஆகிடிச்சு.. இன்னும் கொஞ்ச நேரத்தில முட்டையை உடைச்சிக்கிட்டு வெளியே வரும்!.. "

வியப்பினால் விழிகள் விரிந்தன.. ஆனாலும் அந்தப்  பிஞ்சுக்கு உயிரின் ரகசியம் விளங்கவில்லை..

" இந்தக் குஞ்சுக்காக முட்டைக்குள்ளே காற்றையும் வெச்சிருக்கான் இறைவன்.. நீ இன்னும் படிக்கிறப்போ உனக்கு இதெல்லாம் புரியும்!.. "

ஓட்டைப் பிளந்து கொண்டு குஞ்சு வெளி வருவதைக் கண்ட குழந்தைக்கு ஆச்சர்யம்..

அன்றைய பொழுதுக்குள் ஓடுகளைப் பிளந்து கொண்டு எல்லாக்  குஞ்சுகளும் வெளியே வந்திருந்தன..

உடலின் ஈரம் உலர உலர -  செவ்வந்திப் பூக்களாக  அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தன குஞ்சுகள்.. கூடையில் இருந்து கோழியும் இறங்கி விட்டது..

குறு நொய்யும் தண்ணீரும் வைக்கப்பட்டன... எப்படி அவற்றைத் தின்பது என்று தாய்க் கோழி  குஞ்சுகளுக்குப் பயிற்றுவித்தது..

நெல்லின் முனை போன்ற அலகினால் குறு நொய்யைப் பொறுக்குவதும் தண்ணீரைக் குடிப்பதுமாகத் திரிந்த குஞ்சுகள் தாயின் சிறகுக்குள் ஓடிப் புகுந்து ஓய்வெடுத்துக் கொண்டன..

இதையெல்லாம் பார்த்துப் பார்த்து சந்தோஷப்படும்  பேத்தியைக் கண்டு ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்தனர் பெரியவர்கள்..

இதற்கிடையே - வாசலில் வந்து நிற்பதும் எட்டிப் பார்ப்பதுமாக -
அஞ்சு ,  ஸ்வேதா, பிரகதி, வருண், ஆகாஷ் என - அக்கம் பக்கத்துப் பிஞ்சுகள்..

சுபஸ்ரீ அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தாள்..

அதற்கப்புறம் அந்த வீட்டிற்குள் எந்நேரமும் ஆனந்தக் கூச்சல்.. வாசல் ஊஞ்சலில் ஆடிக் களித்த பிள்ளைகளுடன் தென்றலும் சேர்ந்து கொண்டது..

ரோஜாப் பூக்களை தொட்டுப் பார்ப்பதும் கோழிக் குஞ்சுகளைக் கையில் ஏந்திக் குதுகலிப்பதும் ஆட்டுக் குட்டிகளை அரவணைத்துக் கொள்வதும் - என,  எல்லாம் இன்ப மயமாகின..

பொழுதானதும் பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்கு பெரியவர்கள்  வந்தார்கள்..
நெஞ்சார்ந்த விசாரிப்புடன்
ஒருவரையொருவர் தெரிந்து கொண்டார்கள்.. புரிந்து கொண்டார்கள்... 
அங்கே காலம் மகிழ்ச்சியை விதைக்க ஆரம்பித்தது..

பேரன் பேத்திகள் வளைகுடாவிற்குத் திரும்பி ஒரு வாரம் ஆகியிருந்தது.. 
ஆனாலும் வீட்டிற்குள் அக்கம் பக்கத்துப்  பிள்ளைகளின் விளையாட்டு ஆரவாரம்..

சுந்தரமும் காமாட்சியம்மாளும் -
வீட்டிற்குள் விளையாடும் பிள்ளைகளுக்கு உண்ணக் கொடுப்பதும் முகம் துடைத்து விடுவதுமாக இருக்க -

அந்த அடுத்த வீட்டுப் பிள்ளைகளும் தாத்தா.. பாட்டி!..  என்று உறவு கொண்டாடிக் களிக்க -

அன்பு என்ற ஆலஞ்செடி அங்கே தழைத்திருந்தது..

மாடியறையில் வேறொரு கோழி அடை காத்துக் கொண்டிருந்தது..

ஃஃஃ

வெள்ளி, செப்டம்பர் 18, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி முதல் நாள்
 வெள்ளிக்கிழமை


திருநாவுக்கரசர்  அருளிச் செய்த தேவாரம்..

தலம் - திருநள்ளாறு

பூவிரியும் மலர்க்கொன்றைச் சடையி னானைப்
புறம்பயத்தெம் பெருமானைப் புகலூ ரானை
மாவிரியக் களிறுரித்த மைந்தன் தன்னை
மறைக்காடும் வலிவலமும் மன்னி னானைத்
தேவிரியத் திகழ்தக்கன் வேள்வி யெல்லாஞ்
சிதைத்தானை உதைத்து அவன்தன் சிரங்கொண்டானை
நாவிரிய மறைநவின்ற நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்தவாறே.. 6/20/7

ஓம் நம சிவாய
***

வியாழன், செப்டம்பர் 17, 2026

மதுரைக்கு அரசி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 31
 வியாழக்கிழமை


இன்று 
ஆவணி அனுஷம் .. 

வளர்பிறை சஷ்டி கூடிய சுபயோக தினத்தின் காலை 7:40 மணிக்குப் பிறகு கூடி வரும் சுப வேளைகளில் 

ராஜகோபுரங்களுக்கும் அம்மன் ஸ்வாமி விமானங்களுக்கு திருக்குட நன்னராட்டு..

மாமதுரை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்குப் பெரு விழா..

நல்லோர்க்கும் நலிந்தோர்க்கும் நாடி வந்து நல்லருள் புரிபவள் அங்கயற்கண்ணி அம்மை...


அந்த அம்மையப்பன் திருவடிகளைச் சிந்தித்து
நல்லருளை வேண்டி நிற்போம்..

மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
  வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
  பணிசெய்து நாள் தொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநாயகன் நால்
  வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
  ஆலவாய் ஆவதும் இதுவே.. 3/120/1
-: திருஞானசம்பந்தர் :-

மங்கலம் அருள்வாள்
மதுரைக்கு அரசி
***

இன்று குறிக்கப்பட்டிருந்த பதிவு
அடுத்த வியாழனன்று வெளியாகும்..
 ...

திங்கள், செப்டம்பர் 14, 2026

கணபதி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
விநாயக சதுர்த்தி
 திங்கள் கிழமை


தந்ததனத் தானதனத் ... தனதான
     தந்ததனத் தானதனத் ... தனதான

உம்பர்தருத் தேநுமணிக் ... கசிவாகி
     ஒண்கடலிற் றேனமுதத் ... துணர்வூறி

இன்பரசத் தேபருகிப் ... பலகாலும்
     என்றனுயிர்க் காதரவுற் ... றருள்வாயே..


தம்பிதனக் காகவனத் ... தணைவோனே
     தந்தைவலத் தாலருள்கைக் ... கனியோனே

அன்பர்தமக் கானநிலைப் ... பொருளோனே
     ஐந்துகரத் தானைமுகப் ... பெருமாளே...
 -: அருணகிரி நாதர் :-

அனைவருக்கும்
அன்பின் இனிய
நல்வாழ்த்துகள்

ஓம் கம் கணபதயே நம :
***

சனி, செப்டம்பர் 12, 2026

நூற்றாண்டு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
 சனிக்கிழமை


இன்று 
எனது தந்தை 
திரு ந. துரைராஜன் அவர்களின் நூறாவது பிறந்த நாள் 12/9/1926...


அவரது நல்லாசிகளுடன்
அவர் தாள் வணங்கிக் கொள்கின்றோம்...

நலம் வாழ்க
***

வெள்ளி, செப்டம்பர் 11, 2026

தமிழமுது



நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
 வெள்ளிக்கிழமை


இன்று
ஞானசம்பந்தப் பெருமான்
அருளிச்செய்த
திருக்கடைக்காப்பு

தலம் திரு அண்ணாமலை

இழைத்த இடையாள் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார்
தழைத்த சடையார் விடையொன்றேறித் தரியார் புரமெய்தார்
பிழைத்த பிடியைக் காணாது ஓடிப் பெருங்கை மதவேழம்
அழைத்துத் திரிந்தங் குறங்கும் சாரல் அண்ணா மலையாரே.. 1/69/4

இறைவன் இழை போன்ற இடையினை உடைய உமையம்மையை 
தன் மேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர்.
அடர்ந்து வளர்ந்த சடையினை உடையவர்.. விடையின் மீது சென்று தகுதியில்லாதவரின் முப்புரங்களையும் எரித்து சாம்பலாக்கியவர் அண்ணாமலை தலத்தில் உறைகின்றார்...

அந்த அண்ணாமலை யாதெனில் -

தன்னுடன் மேய்ந்திருந்து
 வழி மறந்த  துணையைக் கண்டறிய இயலாமல் 
பெரிய கையை உடையதும் மதம் பொருந்தியதுமான களிறு , குரல் கொடுத்தபடி அங்குமிங்கும் அலைந்து திரிந்து களைப்பினால்  உறங்குகின்ற பசுஞ்சாரலை உடைய பெருமையைக் கொண்டது...

(பிடி - பெண் யானை.,
களிறு  - ஆண் யானை)...
 
நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
***