நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஆடிப் பெருக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆடிப் பெருக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 03, 2026

ஆடிப்பெருக்கு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 18
 திங்கட்கிழமை
மங்கல நாள்


அனைவருக்கும்
ஆடிப் பெருக்கு நல்வாழ்த்துகள்..
 

கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பேராளர் மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில் நுழைந்து கூர்வாயால் இறகு உலர்த்திக் கூதல் நீங்கிச்
செங்கானல் வெண்குருகு பைங்கானல் இரைதேரும் திருவையாறே.. 1/130/3

சிவந்த கால்களையுடைய வெண்ணிறக் குருகுகள் தேன் நிறைந்த சோலைகளுக்குள் நுழைந்து கூரிய அலகுகளால் தமது இறகுகளைக் கோதி - குளிர் நீங்கப் பெற்று பசுமையான சோலைகளில் தமக்கு வேண்டும் இரைதனைத் தேடும் இடம் திரு ஐயாறு - என்கின்றார் ஞானசம்பந்தப் பெருமான்..

திரு ஐயாற்றின் இத்தகைய வளத்திற்குக் காரணம் காவிரி..

அணைகள் திறக்கப்படாததால் 
தஞ்சை வள நாட்டின் ஜீவநாடியான காவிரியில் தண்ணீர் இல்லை..

தஞ்சையில் இருந்து திரு ஐயாறு வரைக்கும் உள்ள ஐந்து ஆறுகளும் வானம் பார்த்திருக்கின்றன.  
வெண்ணாற்றுப் படுகையில் மட்டும் ஏதோ கொஞ்சம்  தண்ணீர்... அதுவும் இன்னும் சில  நாட்களில் வற்றிப் போகும்...

பழி பாவங்கள் மிஞ்சிப் போனதால் காவிரி வறண்டு கிடக்கின்றாள்.. 

ஆற்று நீர் பாசனம் தொடங்கப்படவே இல்லை.. 

அடுத்த சாகுபடிக்கு முன்னதாக காவிரியாள் தந்த வயல்வெளிகளை வீட்டு மனைகளாக்கி விடவேண்டும் - என, முனைந்திருக்கின்றனர்.

ஆடிப்பெருக்கும் அதனை ஒட்டிய விழாக்களும்  விடை இன்றி தவிக்கின்றன...

ஒன்றும் சொல்வதற்கில்லை...



கூடிய விரைவில் 
காவிரியாள் தடைகளைக் கடந்து 
பொங்கி வருவாளாக..
புது வெள்ளமெனப் பெருகி வருவாளாக..

காவிரிப் பெண்ணே வாழ்க  - உன்
காலடி மலர்களும் வாழ்க வாழ்க..
***

ஞாயிறு, ஆகஸ்ட் 03, 2025

ஆடிப்பெருக்கு

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 18
ஆடிப்பெருக்கு
ஞாயிற்றுக்கிழமை


அன்னை 
காவிரிக்கு 
அடியேனின் பாமாலை

தங்கி வளம் தழைத்திடவே
தங்க மகள் பெருகி வந்தாள்
மங்கலங்கள் செழித்திடவே
எங்கும் விளைவாகி வந்தாள்..

தமிழ் மூன்றும் தழைத்திடவே
தானுவந்து ஓடி வந்தாள்
அமிழ்தென்று மகிழ்ந்திடவே
ஆனந்தமாய் பாடி வந்தாள்..

மாவிலையும் தோரணமும்
பொலிந்திடவே வருக
மஞ்சளுடன் செங்கரும்பும்
துலங்கிடவே வருக..

பசுமை எங்கும் நிறைந்திட வருக
செழுமை இங்கே சிறந்திட வருக
பகையும் பிணியும் நீங்கிட வருக
பாரில் தமிழகம் ஓங்கிட வருக..

நீரின்றி அமையாத உலகம்  தன்னில்
நின்புகழே எங்கும் துலங்கிட வேண்டும்
நெஞ்சார நின்னை நினைப்பவர் தம்மை
நீயே தாயாகி வாழ்த்திட வேண்டும்..


பெற்று வந்த வளங்களுடன் 
நெல் மணிகள் நிறைவாகி
உற்ற பசி தீர்ந்திடவே
உன் பாதம் சரணம் அம்மா..

காவிரி போற்றுதும்
காவிரி போற்றுதும்..

ஆடிப் பெருக்கு 
நல்வாழ்த்துகள்
ஓம் நம சிவாய நம ஓம்
**

சனி, ஆகஸ்ட் 03, 2024

ஆடிப்பெருக்கு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்றுஆடி 18
ஆடிப்பெருக்கு
சனிக்கிழமை


மஹாளய பட்சத்திற்கே காவிரி வறண்டு கிடந்தது.. 

தை அமாவாசைக்கும் அதே கதிதான்.. 

இவ்வருடம் காவிரியில் ஆடிப்பெருக்கும் அமாவாசையும் நிகழுமா என்று தவித்திருந்த வேளையில் பொங்கிப் பெருகி வந்திருக்கின்றாள் காவிரி..

ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே 
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்தது..

இதனால், மாநிலத்தின்  பிரதான அணைகள் முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில்,

கர்நாடக அணைகளுக்கு வந்து சேர்கின்ற மழை நீர் முழுவதுமாக தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது..

இதனால், தமிழகத்தின் மேட்டூர் அணையிலும் நீர் இருப்பு கணிசமாக அதிகரித்தது..

இந்நிலையில் காவிரி வடிகால் பாசனத்திற்காக
 28/7 ஞாயிற்றுக் கிழமை மாலை 3:10 மணியளவில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.. 

இந்தத் தண்ணீர் அகண்ட காவிரியில் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு 30/7 மாலை வந்தடைந்தது.

முக்கொம்பு கடந்த புது வெள்ளம் - தஞ்சை மாவட்டத்தின்  எல்லையான கல்லணைக்கு 31/7 அதிகாலை வந்து சேர்ந்தது.. 

இந்த அளவில் புதன் கிழமை (31/7) காலை 10:00 மணியளவில் காவிரியின் நாற்பது கண்களிலும், தண்ணீர் திறந்து விடப்பட்டது.. இதையடுத்து வெண்ணாறு,  கல்லணைக் கால்வாய் ஆறுகளிலும் தண்ணீர் திறக்கப்பட்டது..

வழி நெடுகிலும் காத்திருந்த மக்கள்
நுங்கும் நுரையுமாக ஆர்ப்பரித்து வந்த நீரில் பூக்கள், நெல் மணிகளைத் தூவி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்..

எப்படியோ
மேட்டூரில் இருந்து கல்லணை கடைமடை கழிமுகம் வரை வறண்டு கிடந்த வளநாடு சற்றே மலர்ந்திருக்கின்றது..

ஆகவே 
இந்த அளவில் காவேரியை மகிழ்வுடன் வரவேற்போம்..

நாளை ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை... அப்பர் பெருமான் திரு ஐயாற்றில் திருக்கயிலாயக் காட்சி கண்ட நாள்..


தஞ்சை - கரந்தையில் ஐந்து கோயில்களில் ஆடித் தீர்த்தவாரியும்  தொடர்ந்து தஞ்சையின் ராஜ வீதிகளில் உலாவும் நிகழ்ந்துள்ளது...

திருமுறைகளின் வழி நித்திய வழிபாடுகள் நடத்தப் பெறுகின்ற கோயில்கள் இவை..

திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ சூரியனார் கோயில் ஆதீனத்தின் மகா சந்நிதானம் அவர்களால் இவ்விழா துவக்கப்படுகின்றது..

 1) ஸ்ரீ சிதானந்தீஸ்வரர் திருக்கோயில் கரந்தை..
2) ஸ்ரீ நாகநாகேஸ்வரர் திருக்கோயில் கரந்தை..
3) ஸ்ரீ கேசவதீஸ்வரர் திருக்கோயில் வடக்கு வாசல்
4) ஸ்ரீ திருநீலகண்ட நாயனார் திருமடம், கரந்தை..
5) ஸ்ரீ வளர்மதீஸ்வரர் திருக்கோயில், வலம்புரி, கரந்தை..

இவை ஐந்தனுள் ஒரு கோயிலில் எள்ளளவு பங்களித்த விதியுடையன் ஆனேன்...

மாதர்ப் பிறைக்கண்ணியானை
  மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
  புகுவா ரவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல்
  ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங்
  களிறு வருவன கண்டேன்

கண்டேனவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்..4/3/1
-: திருநாவுக்கரசர் :-

அனைவருக்கும் ஆடிப்பெருக்கு
நல்வாழ்த்துகள்..

ஓம் ஹரி ஓம் 
ஓம் சிவாய நம ஓம்
***

புதன், ஜூலை 17, 2024

ஆடிப் பட்டம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி முதல் நாள்  
புதன்கிழமை
தக்ஷிணாயன புண்ய காலம்


ஆண்டின் நான்காவது மாதம்.. 

ஜோதிட இயலின்படி கற்கடக மாதம்..

சூரியனின் பயணத்தில்  தக்ஷிணாயண புண்ணிய காலம் ஆடியில்  தொடங்குகின்றது..

வழிபாட்டிற்கு உகந்ததாக ஆடி மாதம் திகழ்கின்றது..

ஆனி மாதத்தின் தொடக்கத்திலேயே அங்குமிங்குமாக பரம்படித்தல், எருவிடுதல் என,
வேளாண் பணிகள் தொடங்கப்பட்டாலும் 


மேட்டூரிலும் அடுத்து கல்லணையிலும் காவிரிக்குக் கதவுகள் திறந்து விடப்பட்டன என்ற செய்தியே விவசாயிக்கு நாடி நரம்புகளில் புது இரத்தம் பாய்ந்த மாதிரி இருக்கும்... 

ஆறுகளில் புது வெள்ளம் பெருக்கெடுக்கும் நாளே விவசாயிகளுக்குப் பொன்னாள்..


மணற்தடத்தில் ஊர்ந்து வருகின்ற ஆற்று நீரை மங்கலகரமாகத் தொழுது வணங்கி தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர்...

காளைகளின் கழுத்து மணிகள் கணகணத்த காலம் காற்றோடு போய் விட்டது..  இன்றைக்கு உழவுப் பணிகள் இயந்திர மயம்...

அன்னலக்ஷ்மி ஆராதிக்கப்படுகின்ற மாதம் ஆடி..


ஆடிப்பட்டம் தேடி விதை.. - என்ற தொல்லறிவின் மாதம்...

ஆடி மாதமானது விதைகள் முளைப்பதற்கு தகுந்த மாதம்.. ஆடியின் பருவநிலை சிறப்புடையது..


ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள் ஆடிப் பெருக்கு என, மக்களால் போற்றி வணங்கப்படுகின்றது..
புதுமணத் தம்பதியர்க்கு மாங்கல்யப் பெருக்கு விசேஷமாக நடத்தப்பெறும்..


ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப் பதினெட்டு, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் என அடுத்தடுத்து வழிபாட்டிற்கான நாட்கள்.. 


ஸ்ரீ வராஹி அம்மன் வழிபாடும்
சப்த கன்னியர் வழிபாடும் ஆடியின் சிறப்புகள்.. 


வேம்பு தழைக்கின்ற மாதம் ஆடி..


மழைக்கு உரியவளாகக் கருதப்படுகின்ற மாரியம்மன் கோயில்களில் ஆடி மாத வைபவச் சிறப்புகள் சொல்லி முடியாதது.. 

பசித்த வயிற்றுக்கு அன்னம் எனும் ஆடிக்கூழ் நேர்ச்சை மகத்தானது...


ஆடி மாதம் விண்ணோர் தமக்கு அந்திப் பொழுது..
விளக்கேற்றும் நேரம்..
இறை வழிபாட்டிற்கு உரிய நேரம் இது...

நமது பண்பாட்டில் பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அந்தி நேரத்தில் - வீட்டிலோ வெளியிலோ -  சாப்பிடுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள்.. இப்போது அப்படி ஏதும் இல்லை.. 

மாலை நேரத்தில் குறிப்பாக புலால் உணவகங்களில்  அலை போல மக்கள்..

இதே போல அந்திப் பொழுது.. விளக்கு வைக்கும் நேரம் - என்று பணம் எடுப்பதற்கோ கொடுப்பதற்கோ அனுமதி கிடையாது..

கலி காலத்தில்  ஆடி மாதத்தின்  நாட்கள் அற்புதமாக ஆடம்பரமாக இருக்கின்றன..

துணிக்கடையில் இருந்து கறிக்கடை வரைக்கும் ஆடித் தள்ளுபடி போட்டு விட்டார்கள்..

மக்களின் கையில் இருக்கின்ற காசைப் பிடுங்கி விட வேண்டும்  என்ற உத்வேகம்...

நமது கையிருப்பைக் குறைப்பதற்காக நமது வீட்டுக்குள் வந்து சின்னப் பெண்கள் வண்ண மயமாக குலுங்கிக் குலுங்கி ஆடுகின்றதைக் காணும் போது உற்சாகமாக இருக்கின்றது..

ஆகவே விரும்பியவர்கள் விரும்பியவாறு
ஆடித் தள்ளுபடி எனும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு  விருப்பப்பட்ட நன்மைகளைத் தேடி அழைத்துக் கொள்ளலாம்..


பெண்மை சிறப்பிக்கப்படுகின்ற மாதம் ஆடி மாதம் எனில் மிகையல்ல..

வாழ்க நலம்

சிவாய நம ஓம்
***

வியாழன், ஆகஸ்ட் 03, 2023

வருக.. வாழ்க..

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 18
 வியாழக்கிழமை


இன்று 
ஆடிப் பெருக்கு 
காவிரி அன்னையை 
வாழ்த்தி வணங்குவோம்..


கலையாய் வருகின்ற காவிரி வாழ்க..
நிலையாய் வளந்தரு வாழ்வே வருக..
அலையாய் அழகாய் அமுதாய் வருக..
இலையாய் மலராய் கனியாய் வாழ்க..

கலைமிகு நின்றன் கழனிகள் வாழ்க..
விலைமிகு வேளாண் புகழுடன் வாழ்க..
சிலையொடு கோயிற் கோலம் வாழ்க..
நிலைதரு  தெய்வக் களஞ்சியம் வாழ்க..

காண்கிற தெல்லாம் கவினுடன் வாழ்க..
பூண்கிற தெல்லாம் பொலிவுடன் வாழ்க..
தாங்கி நலந்தரும் தமிழ் நலம் வாழ்க
ஓங்கி வளந்தரும் உயிர்க் குலம் வாழ்க..


அன்பினில் ஆருயிர்ச் சுடர்களும் வாழ்க
நன்றியில் நின்றோர் நற்குலம் வாழ்க..
தென்றலில் தெய்வத் திருவருள் வாழ்க..
சென்றிடும் திசை தனில் செல்வங்கள் வாழ்க..

கவினுறு காவிரி கண்களில் வாழ்க
கலைதரு காவிரி நெஞ்சினில் வாழ்க
நவில்தொறும் நலங்கள் நாளும் தருக
நிலைபெறு மங்கல மாண்புகள் தருக..


அலைபுனல் காவிரி அன்புடன் வருக..
ஆருயிர்க் குலங்கள் தழைத்திட வருக..
அலைதவழ் செல்வக் காவிரி வருக..
சிலைமுக தேவி திருவருள் தருக

மனந்தொட்டு வாழ்வோர் மாண்புகள் வாழ்க
தனந்தொட்டுத்  தருவோர் தகவுற வாழ்க
இதந்தொட்ட தமிழினில் வந்தனை வாழ்க
பதந்தொட்டுப் பணிந்த கவியினில் வாழ்க..
ஃஃஃ


காவிரி வாழ்க கலைகளும் வாழ்க..
கைதொழுவார் மனை மங்கலம் வாழ்க..
**

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

ஞாயிறு, ஆகஸ்ட் 02, 2020

ஆடிப் பதினெட்டு

நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
ஆடிப் பதினெட்டு
அன்பினில் மனந்தொட்டு
ஆடிக் கொண்டாடிடுமே..
கார்முகில் கனங்கெட்டு
நெற்றியில் நீர்மொட்டு
ஏர்வழி நூறாகுமே..


காவிரிக் கரைதொட்டு
கழனியில் முளைகட்டு
கதிர்களும் விண்முட்டுமே..
ஓடிடும் நீர்தொட்டு
உதித்திடும் உயிர்கட்கு
ஓங்கிய பொருளாகுமே..

கூடிக் குளிர்ந்திட்டு
கோதையின் தமிழ்தொட்டு
கொண்டாடு பண்பாடியே..
சூழ்ந்திடும் இருள்கெட்டு
சூரியன் ஒளிபட்டு
வாழ்ந்திட வாழ்வாகுமே..


நாற்றினைக் கைதொட்டு
சேற்றினில் தான்நட்டு
காத்திடப் பொன்சேருமே..
பொன்மகள் கரந்தொட்டு
பொலிந்திடும் நலம்எட்டு
பூமீது புகழாகுமே..



காவிரிப் படிக்கட்டு
காதலின் கல்வெட்டு
கைவளை மொழியாகுமே..
கண்களின் மைதொட்டு
காவியம் பலகட்டு
தென்றலும் தூதாகுமே..


நன்றி - ஸ்வாமி ஸ்டுடியோ
தஞ்சை..
தீந்தமிழ்த் தேன்தொட்டு
தீவினை விலக்கிட்டு
விளக்கிட வழிகாணுமே..
வாழ்ந்தவர் தாள்தொட்டு
வாழ்வதில் இசைகொட்டு
குன்றேறிப் புகழ் வீசுமே..
***

நாடெங்கும் வாழ்க..
நலமெலாம் சூழ்க..

அனைவருக்கும்
ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

திங்கள், ஆகஸ்ட் 03, 2015

பொங்கி வந்த பொன்னி

நான் காவிரி!..

..... ..... .....!?

பொன்னி என்றும் அழைப்பார்கள் என்னை!..

உறங்கிக் கிடந்த நான் - கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டேன்...

என்னை நினைவில்லையா!... நடந்தாய் வாழி!.. - என்று, இளங்கோவடிகள் புகழ்ந்துரைத்தாரே...

திக்கென்றிருந்தது....


தாயே!.. நீங்களா... நாடெங்கும் ஓடி நல்லதெல்லாம் வளர்த்த தாங்களா!...

மெல்லப் புன்னகைத்தாள் - காவேரி!..

என்னையும் நாடி வந்த நற்பொருளே.. வருக.. வருக.. இவ்விடத்தில் அமர்க.. தாயே!..

தூக்கக் கலக்கத்திலும் கரங்கூப்பி வணங்கினேன்..

நன்றி.. மிக்க நன்றி!..

நானல்லவோ தங்களுக்கு நன்றி கூற வேண்டும்.. நாளெல்லாம் நானிலம் நயந்து நிற்பது தங்களை அல்லவோ!.. நீரின்றி அமையாது உலகு.. என்ற வள்ளுவப் பெருமானின் வாக்கு தங்களுக்கே உரியதன்றோ!..

மீண்டும் புன்னகைத்தாள் பொன்னி!..

அதெல்லாம் அந்தக் காலம்.. இன்று நானே - தங்களை நயந்து நிற்க வேண்டிய சூழ்நிலையாயிற்று!..

மாமரத்தின் கீழே கிடந்திருந்த கல்லில் அமர்ந்திருந்தாள் அன்னை..

ஆடி மாதத்தின் பௌர்ணமி கழிந்து இரண்டு நாட்களாகின்றன..

சற்றே உச்சியில் இருந்தது - கிருஷ்ண பட்சம் எனும் தேய்பிறை நிலவு..

மாமரக்கிளையின் ஊடாக சந்திரனின் பொன்னிறக் கதிர்கள் திட்டு திட்டாக தரையில் படிந்திருந்தன..

காற்றில் அசையும் இலைகளின் சலனத்தால் சந்திரக் கதிர்கள் பொன்னியின் மேனியில் சதிராடிக் கொண்டிருந்தன..

வியந்து நோக்குவது என்ன?..

தாங்கள் எங்களைக் காத்தளிக்கும் தாய்!.. ஆனாலும் நித்ய கன்னி!.. எனினும் அன்பினொடு ஒருமையில் பொன்னி என்று அழைப்பதில் தவறொன்றும் இல்லையே!..

வாழி அவன்தன் வளநாடு
மகவாய் வளர்க்கும் தாயாகி
ஊழி உய்க்கும் பேருதவி
ஒழியாய் வாழி காவேரி!..

என்றல்லவா சிலம்பு என்னை வாழ்த்தியது.. ஒருமையில் என்னை அழைத்த போதும் கடுமை கொள்ளேன் யான்!..

ஒரு ராஜகுமாரியைப் போல சர்வ அலங்கார பூஷிதையாகத் தான் - தம்மை இதுவரைக்கும் காட்சிப்படுத்தி இருக்கின்றார்கள்.. அகத்தியர் திரைப்படத்தில் கூட நாங்கள் - அப்படித்தான் அழகின் உருவமாகக் கண்டிருக்கின்றோம்!. ஆனால் - இன்றைக்கு திருமேனி பொலிவிழந்து நிற்பதுவும் ஏனம்மா!?..

அகத்தியர் திரைப்படத்திலா!.. அது என்ன விஷயம்?..

ஆமாம்.. நாற்பது வருஷத்துக்கு முன்னால் வந்த திரைப்படம் அது.. அகத்தியர் வரலாறு கூறும் போது தங்களையும் தங்கள் துடுக்குத் தனத்தையும் கூறியிருப்பார்கள்..

மீண்டும் பொன்னியிடம் மெலிதான புன்னகை...

அதெப்படி.. உங்களால் தமிழ் முனிவரான அகத்தியரை எதிர்த்து வாதாட முடிந்தது?. அதெல்லாம் நிஜம் தானா!...

தலைக்காவிரி
அது.. குடகு மலையில் பிறந்ததனால் விளைந்த குறும்புத்தனம்.. அதற்காகத் தான் - அகத்தியரின் கமண்டலத்துக்குள் சிறைப்பட்டுக் கிடந்தேனே!..

..... ..... .....

விநாயகர் காக்கை வடிவாக வந்து கமண்டலத்தைக் கவிழ்த்து விட - அவருடைய திருவடி தீட்சையினால் அல்லவோ - வாழ்வு கிடைத்தது!..

ஆனாலும் எங்கும் பரந்தோடி இல்லம் செழிக்க வைக்கும் பொன்னியை அடைத்து வைத்தது தவறு தானே!..

தவறு தான்!. ஆனாலும் அது தானே இன்றும் செய்யப்படுகின்றது.. சிறைப் படுத்துவதும் என்னைக் கறைப்படுத்துவதும் காலகாலமாகத் தொடர்கின்றது தானே!..

என்ன கஷ்டம் இது!..

அவர்கள் என்னை சிறைப்படுத்தினால் - நீங்கள் அதற்குச் சற்றும் குறையாமல் என்னைக் கறைப்படுத்துகின்றீர்கள்.. அதனால் அல்லவோ பொலிவிழந்தேன்!..

தவறுதான்.. ஆயினும் நான் ஒரு பிழையும் அறியேன்.. அம்மா!..

அதை நான் அறிவேன்.. ஆயினும் அதுதானே நிகழ்கின்றது இன்றைக்கும்!.. பல்லுயிர்த் திரளைப் பரிபாலிக்கும் என்னைப் பணி செய்ய விடாமல் தடுத்தார்களே.. அணை என்னும் பெயரால் அடைத்தார்களே!..

..... ..... .....

மீறியும் ஓடிவந்தேன் நான் தஞ்சமென தமிழகத்திற்கு.. ஆனால் - வஞ்சகர் தம் செயலால் வனப்பிழந்தவள் ஆனேன்.. தமிழகம் எனக்குத் தந்த வெகுமதியால் -   இன்றைக்கு அள்ளி அருந்தவும் அருகதையற்றுப் போனேன்..

..... ..... .....

காவிரியில் கலக்கும் கழிவு 
சாயப்பட்டறைகள் என்னும் மாயப்பட்டறைகள் செய்த கொடுஞ்செயலால் - என் மக்களைக் காக்கவும் இயலாதவள் ஆனேன்.. போதாக்குறைக்கு நாளெல்லாம் தோண்டித் தோண்டி மண்ணை அள்ளியதால் அழகு கெட்டுப் போனேன்.. ஆக்கம் அற்றுப் போனேன்.. 

..... ..... .....

பள்ளம் படுகுழிகளால் பரிதவித்துப் போனேன்.. உள்ளம் குமுறக் குமுற ஒரு மொழி பேசவும் வகையற்றுப் போனேன்.. 

..... ..... .....

ஆட்சியை - அரசைக் காப்பவள் நான்!.. என்று அன்றைக்குப் புகழ்ந்தார்கள்.. இன்றைக்கு இங்கு ஆளும் அரசே என்னைக் கைவிட்ட நிலையாயிற்று... ஊற்றுப் பெருக்கால் உலகூட்டுபவள்.. என்று எனக்குப் பெயர்.. இன்றைக்கு இருக்கும் பிள்ளைகளுக்கு ஊற்று என்றால் என்னவென்றே தெரியாது..

..... ..... .....

ஏரி குளம் என்று எல்லாவற்றையும் கெடுத்து அழித்து விட்டு - ஆற்றையும் அழிக்க முனைந்து விட்டீர்கள்... என்றைக்காவது ஒருநாள் திருந்துவீர்கள் என்று தான் நானும் இருந்தேன்.. ஆனாலும்...

..... ..... .....


சாக்கடைகளைத் திறந்து விட்டு குப்பைக் கூளங்களைக் கொட்டி - குருவி குடிக்கவும் வகையற்றதாகச் செய்து விட்டீர்கள்.. நாகரிகம் என்று உங்களுக்கு நீங்களே குழி வெட்டிக் கொண்டீர்கள்...

வான் பொய்ப்பினும் தான் பொய்யாத காவிரி - கலங்கினாள்...

அவளுடைய நிலை கண்டு என்மனமும் நடுங்கியது...

பொன்னென நெல் குவித்ததால் மட்டும் என் பேர் பொன்னியல்ல!.. அள்ளிக் குடித்தவர்களும் நீரில் ஆடிக் களித்தவர்களும் - காவிரியாள் கொண்டிருந்த மகத்துவத்தினால் பொன்னென மேனி அழகு கொண்டாடினர்.. ஆனால் -

..... ..... .....

காவிரியின் நீரைக் கையில் அள்ளிக் குடித்தாலும் கடும் நோய்கள் வந்துறும்!.. என மருத்துவர்களும் ஆய்வாளர்களும் எச்சரிக்கின்றார்கள்.. எனக்கு ஏன் இந்த இழிநிலை!.. எண்ணிப் பார்த்ததுண்டா நீங்கள்?..

..... ..... ..... 

எதற்காக நதிகளை எல்லாம் பெண்களாகக் கூறினார்கள்.. சிந்தித்ததுண்டா?.. பெண்ணால் தான் ஆவதுவும்.. அழிவதுவும்.. போற்றி வணங்கப்படவேண்டிய ஒன்று உண்டென்றால் அது பெண்மை தானே!.. பெண் இன்றி பூமிக்கு ஏது சிறப்பு!.. பூமியே பெண் வடிவம் தானே!..

உண்மை.. உண்மை!.. 

பெண் என்றால் பேயும் இரங்கும் என்றனர்.. ஆனால் நீங்கள் இரங்க வில்லையே!.. என்னையும் என் அழகையும் அலங்கோலம் செய்தீர்களே!..

என் கண்களில் நீர் திரண்டு வழிந்தது...

எனக்கு மட்டும் தான் இந்த நிலை என்றில்லை.. வைகை, பாலை, பெண்ணை, பொருணை, நொய்யல், பவானி - என, ஏனைய தோழியருக்கும் இதே கதி தானே!.. உங்களுக்கு என்ன கெடுதல் செய்தோம் நாங்கள்?.. 

..... ..... .....

முன்னோர்க்கும் முன்னோர் தொட்டு உங்கள் பிள்ளைகள் வரைக்கும் உணவூட்டினோம்.. ஆனால் - நாளை வரும் சந்ததியர்க்கு நாங்கள் ஏதும் நலம் செய்யமுடியாதபடிக்கு எங்களை சீரழித்து விட்டீர்களே?.. 

அடியார்களும் ஆழ்வார்களும் பாடிப் பரவிய பெருமையை சற்றே எண்ணி இருந்தாலும் - நதி மங்கையை பாசுபடுத்த மனம் வந்திருக்காது உங்களுக்கு!..

பொன்னி!.. கலங்கி நிற்கும் உன்னை ஏது சொல்லித் தேற்றுவேன் நான்!.. இப்போது கையறு நிலையில் இருக்கின்றனர் - நல்லவர்கள்.. நிலைமையை உணர்ந்த இளையோர்களும் விழிப்புணர்வு கொண்டு செயல்படுகின்றனர்.. நிச்சயம் ஆறு குளங்கள் சீரமைக்கப்படும்,.. பசுமை மீண்டும் மலரும்!..

அதற்காகத் தானே நானும் காத்திருக்கின்றேன்!.. எனக்கென ஒரு பிடி நீங்கள் அளித்தால் நான் உங்களுக்கென ஒரு படி அளிப்பேன்!.. 

இரத்த நாளங்களை அறுத்தெறிந்து விட்டு இன்புற்று வாழ்தலும் கூடுமோ!.. ஆறு குளங்களை அழித்து விட்டு அடுத்தொரு நல்வாழ்வினை நாடுதலும் ஆகுமோ?. பிழைகளை உணர்ந்தோம். எங்களை மன்னிக்க வேண்டும் தாயே!.

தலை வணங்கி நின்றேன்..

கல்லணை
இன்னும் சிறு பொழுதில் விடிந்து விடும்.. மங்கலகரமான ஆடிப் பெருக்கு!.. 
காவிரிக் கரையின் மக்களுக்கெல்லாம் தேனாகத் தித்திக்கும் நன்னாள்.

இறையறம் ,  மனையறம் - இவ்விரண்டிலும் ஆனந்தம் பொங்கிப் பெருக  நீர் வளமே அடிப்படை. 

உலகோர் தம் கையைச் சோற்றில் வைக்க வேண்டி,  
உழவோர் தம் கால்களைச் சேற்றில் வைக்கும் மாதம்!.

உழவர்கள் தங்கள் பணிகளைத் துவக்கும் - ஆடி மாதம்!..


வயற்காடு மட்டுமின்றி - வீட்டுத் தோட்டத்திலும் கொல்லைக் காட்டிலும் - அவரை, பாகல், சுரை, பீர்க்கு என தோட்டப் பயிர்களுக்கு விதையிடுவர். மகிழ்ச்சியுடன் விவசாய வேலைகளைத் தொடங்கும் மாதம்.. 


உண்மை.. உண்மை.. 
நிலம் செழிக்க நீர் வேண்டும்.
நீர் செழிக்க குன்றாத இயற்கை வளம் வேண்டும். 

இயற்கையை வாழும் வாழ்க்கையோடு  - பின்னிப் பிணைத்தனர் நம் முன்னோர். 

அத்துடன் நிற்காமல் - இயற்கையைப் பலவிதங்களில் போற்றி மகிழ்ந்தனர். 

அந்தப் பண்பாட்டின் அடையாளம் தான் ஆடிப் பெருக்கு!..

சோழ வளநாட்டில் எல்லா ஆறுகளும் விழாக்கோலம் கொள்ளும் நாள் ஆடிப் பதினெட்டு..

கரைபுரண்டு வரும் காவிரியின் கரைகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழா - ஆடிப்பெருக்கு.


இல்லறம் ஏற்ற தம்பதிகள் பொங்கி வரும் காவிரியில் நீராடி, மங்கலப் பொருட்களைச் சமர்ப்பித்து வணங்குவர்.

நதியின் படித்துறைகளை சுத்தம் செய்து, அதிகாலையிலேயே நீராடி - தலை வாழையிலையில்  மஞ்சள் பிள்ளையாருடன் விளக்கேற்றி வைத்து -

காப்பரிசி, தாம்பூலம், மஞ்சள் குங்குமம், சந்தனம், மங்களச் சரடு, காதோலை கருகமணி, விளாம்பழம், நாவற்பழம், பேரிக்காய், வாழைப்பழம், எலுமிச்சங் கனி, நறுமலர்கள் - என எல்லா மங்கலப் பொருட்களையும் சமர்ப்பித்து தூப தீப கற்பூர ஆரத்தியுடன் உன்னை வணங்கி  மகிழ்கின்றோம்.

ஓடும் நீரில் மலர்களைத் தூவி தீபங்களை மிதக்க விட்டு -  

ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி!.. 
வாடியம்மா எங்களுக்கு வழித்துணையாக - எம்மை 
வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக!.. 

- என மனதார வேண்டிக் கொள்கின்றோம்.


மணமான இளம்பெண்கள் தாலிச்சரடை மாற்றி புதிதாக அணிந்து கொள்வதும்  
தம்பதிகள் - மணமாலைகளை ஓடும் நதியில் இட்டு, மங்கல வாழ்க்கைக்கு துணையிருக்க வேண்டிக் கொள்வதும்,

பெண்கள் - மூத்த சுமங்கலியர் தம் கைகளால் ஆராதிக்கப்பட்ட மஞ்சள் சரடினை அணிந்து கொள்வதும் அவர்கள் கையால் மஞ்சள் குங்குமம் பெற்றுக் கொள்வதும் ஆனந்த மயமான காட்சிகள்..  

ஒருவருக்கொருவர் தாம்பூலம் வழங்கி, அன்பின் உறவுகளுடன் கூடிக் குதுகலித்து உள்ளம் பூரித்து மகிழ்வுறும் நன்னாள்.


இந்த சந்தோஷ தருணங்களே என்னை சங்கடங்களில் இருந்து மீட்டெடுக்கின்றன..

இந்த நல்ல நாளில் நீர்நிலைகளைப் பாதுகாப்போம் - என உறுதி கொள்ளுங்கள் மக்களே!..

காவிரி புன்னகைத்தாள்..


தங்கள் சொல்லைத் தலைமேற்கொள்கின்றேன் தாயே!..

தொண்டரடிப் பொடியாழ்வார் - அரங்கனைத் துதிக்கும் போது -

 '' கங்கையிற் புனிதமாய காவிரி!..''

- என தங்களைப் புகழ்ந்து பாடுகின்றார். 

இறைவனிடம் - வேண்டிக்கொள்வது, அருளும் பொருளும்  நிறைந்த ஆனந்த வாழ்வினையே!..

அத்தகைய ஆனந்த வாழ்வினுக்கு ஆதாரம் - நீர்வளம்!..

அதனால் தான்  - ''..தண்ணீரும் காவிரியே!..'' - என்கின்றார் ஒளவையார்.

அப்பரும் ஞானசம்பந்தரும் சுந்தரரும் சோழநாட்டின் திருத்தலங்களைப் பாடும் போது தங்களையும் சேர்த்தே சிறப்பித்துப் பாடினர்..   

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் 
கண்டதோர் வைகை பொருணை நதி - என 
மேவிய ஆறுகள் பல ஓட 
திருமேனி செழித்த தமிழ் நாடு!..

- என்று முழங்கினார் மகாகவி பாரதியார்..


கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு!.. - என்பார் கவியரசர்..

கங்கையின் மேலான காவிரி தீர்த்தம்
மங்கல நீராட முன்வினை தீர்க்கும்!.. - என்றார் கவிஞர் வாலி..

இன்னும் எத்தனை எத்தனையோ புலவர்களும் கவிஞர்களும் தங்களைப் புகழ்ந்தே பாடியிருக்கின்றனர்..

ஆக - தமிழையும் காவிரியையும் பிரித்து அறிதல் என்பதே கிடையாது.. இன்றைக்கு இப்படியிருந்தாலும் நாளை நல்ல பொழுதாக மலரும்..

எங்களுடைய குற்றங்களை எல்லாம் மன்னித்து அருளவேண்டும்.. தாயே!..

புது ஆற்றில் புதுவெள்ளம் பொங்கிவர வேண்டும் 
புது நாற்றும் பூங்காற்றில் அசைந்தாட வேண்டும்!.. 
இளம் பயிரின் முகம் பார்த்து வான் பொழிய வேண்டும் 
களம் நிறையும் கதிர்மணியால் ஊர் வாழ வேண்டும்!.. 

- என்றபடி, நானும் கவி உரைத்து வேண்டினேன்..

பொன்னியை வலம் வந்து திருவடிகளில் வீழ்ந்து வணங்கினேன்..

அவளிடம் அனைவருக்காகவும் வேண்டிக் கொண்டேன்..

வாழ்க நலம்!.. - என்று புன்னகையுடன் வாழ்த்தினாள் பொன்னி..

அந்த அளவில் - ஒரு நீர்ச்சுழியாக மாறி எங்கும் கலந்து நின்றாள் - காவிரி!..

நான் விழித்துக் கொண்டேன்!..
* * *


அனைவருக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்!..

ஈசன் அருள் பெற அறஞ்செய்ய வேண்டும்.
மனிதன் செய்ய வேண்டிய அறங்களுள் 
எல்லாம் மிகப் பெரியது - சிறந்தது 
இயற்கையைப் பாதுகாத்தல்!.. 

இயற்கையை நாம் பாதுகாத்தால் - 
இயற்கை நம்மையும்  நம் குலத்தையும் பாதுகாக்கும்!..
* * *