நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூன் 30, 2018

ஆனந்த தரிசனம்


நீரார்க் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏராலம் இளந்தளிர்மேல் துயில் எழுந்தாய்
சீரார் திருவேங்கட மாமலை மேய
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே!..{1040}
-: திருமங்கையாழ்வார் :-


ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறு ஏழ்வென்றான் அடிமைத் திறமல்லால்
கூனேறு சங்கம் இடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே!..{0676} 
-: குலசேகராழ்வார் :-


உண்டாய் உறிமேல் நறுநெய் அமுதாக
கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே
விண்தோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா அடியேனுக்கு அருள் புரியாயே!..{1041} 
-: திருமங்கையாழ்வார் :-


ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே..{0677}
-: குலசேகராழ்வார் :-


மானேய்மட நோக்கித் திறத்து எதிர்வந்த
ஆனேழ் விடைசெற்ற அணிவரைத் தோளா
தேனே திருவேங்கட மாமலை மேய
கோனே என்மனம் குடிகொண்டு இருந்தாயே!..{1044}
-: திருமங்கையாழ்வார் :-


ஒண்பவள வேலை உலவுதண் பாற்கடலுள்
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருவுடையேன் ஆவேனே..{0680}
-: குலசேகராழ்வார் :-


வந்தாய் என்மனம் புகுந்தாய் மன்னிநின்றாய்
நந்தாத கொழுஞ் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனியான் உன்னை விடேனே..{1046}
-: திருமங்கையாழ்வார் :-


கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலைமேல்
தம்பமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே..{0681}
-: குலசேகராழ்வார் :-


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துநின் பவளவாய் காண்பேனே..{0685}
-: குலசேகராழ்வார் :-
***
மலையேறிச் சென்றதும்
சற்றும் தாமதிக்காமல்
அதிகாலையில் குளித்து முடித்து
ஆறுமணியளவில்
பெருமானின் தரிசனத்திற்காகப்
புறப்பட்டோம்...

காலை ஒன்பது மணிக்கு
நூற்றுக்கணக்கான அன்பர்கள் காத்திருக்க
நடை திறக்கப்பட்டது...

மதியம் பன்னிரண்டு மணியளவில்
ஆனந்த நிலையத்துள் புகுந்தோம்..  

இன்றைய பதிவில்
ஆனந்த நிலையத்துள்
ஆராஅமுதனின் தரிசனமும்
ஆழ்வார் தம் அமுதமொழிகளும்...

ஸ்ரீ வேங்கடேச சரணம்.. சரணம் ப்ரபத்யே..
ஓம் நமோ நாராயணாய..
ஃஃஃ

வியாழன், ஜூன் 28, 2018

திருமலை தரிசனம் 3

ஆங்காங்கே அமர்ந்து சற்று இளைப்பாறி மெதுவாகச் சென்றாலும்
மூன்றில் இரண்டு பங்கு தூரத்தைக் கடந்தாயிற்று...

இதோ - படிக்கட்டு எண் 2083..

ஒன்றரை மணி நேரத்தில் -
நள்ளிரவு 10 மணியளவில் காலி கோபுரத்தை வந்தடைந்து விட்டோம்...

இங்கு தான் ஆதார் அட்டையைப் பரிசோதித்தபின்
திவ்ய தரிசனத்திற்கான அடையாளச் சீட்டு வழங்கப்படுகின்றது...

இங்கே எந்நேரமும் இயங்கும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது..

பலவிதமான கடைகளும் மக்கள் குறை தீர்க்கின்றன...

மக்கள் ஆங்காங்கே வழக்கத்தை மீறாமல் -
கையில் சிற்றுண்டிகளுடன் அமர்ந்து கொண்டிருக்கின்றனர்..

நிறைய பெண்கள் அங்கே இருந்தனர்...
மிகப் பிரகாசமான தொகுப்பு விளக்குகள் வேறு..

வேறு என்ன!.. - படங்கள் ஏதும் எடுக்கவில்லை...

காலி கோபுரம். படிக்கட்டு எண் 2083
எப்பாவம்பல வும்இவையே செய்திளைத் தொழிந்தேன்
துப்பாநின் அடியேதொடர்ந் தேத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார்த் திண்வரைசூழ் திருவேங்கட மாமலையென்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே!..(1032)
-: திருமங்கையாழ்வார் :-


காலி கோபுரத்திலுள்ள சிற்பங்கள்.. 
காலி கோபுரத்தைக் கடந்து -
தொடர்ந்த வழியில் மான்கள் விளையாடித் திரிகின்றன...
மக்கள் பழக்கி விட்டதால் வழிச் செல்வோரை உற்று நோக்குகின்றன...

கையில் கொண்டு சென்ற பழங்களையும் பிஸ்கட் வகைகளையும் கொடுத்தோம்...

இவ்வாறு கொடுக்கக் கூடாது தான்!..
ஆனாலும் மனம் கேட்கவில்லை...

தவிரவும் - மான்களுக்குக் கொடுப்பதற்கென்று
அங்கே பழங்களும் விற்கப்படுகின்றன...

மான்களுக்குப் பழம் கொடுக்கின்றான் - என் மகன்.. 
காலி கோபுரத்தைக் கடந்ததும்
சற்றே சரிவாக - நடப்பதற்கு இலகுவாக சாய்தளமான படிக்கட்டுகள்....


படிக்கட்டுகளுக்கு அருகிலேயே வாகனங்களின் ஓசை... இரைச்சல்... 

திருமலையிலிருந்து கீழே இறங்கும் சாலையில் வாகனங்கள் விரைந்து கொண்டிருக்கின்றன....

மலைப்பாதைக்கு மேலாக சாலை அமைத்திருக்கின்றார்கள்...
சற்றே கீழிறங்கி மேலேறுகின்றோம்...

பிரகாசமான விளக்கொளியுடன் பரந்தவெளி...

அதோ - ஸ்ரீ ஆஞ்சநேயர்!...

ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர் 
விஸ்வரூபமாக கண் நிறைந்த தரிசனம்..

நெடிதுயர்ந்து விளங்கும் ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர்...

மாருதியைக் கண்டதும் மனமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளம்...

பக்தர்கள் வலம் வந்து -  கற்பூரம் ஏற்றி வணங்குகின்றனர்

ஆஞ்சநேயரின் திருமேனியை நோக்கியபடி ஒளி மிளிரும் விளக்குகள்...
எனவே, உற்று நோக்கி அவரைப் படமெடுக்க இயலவில்லை..

ஆஞ்சநேயர் பீடத்தில் கட்டப்பட்டுள்ள மணிகள் 

அங்கிருந்து தொடர்ந்து நடக்க வழியில்,
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில்... 
திருநடை அடைக்கப்பட்டிருந்தது...

நரசிம்ம ஸ்வாமி கோயிலின் அருகில் -
காலி கோபுரத்தில் கொடுக்கப்பட்ட தரிசன சீட்டை
சரிபார்த்து அதில் முத்திரை வைக்கின்றார்கள்..

சற்றே அங்கு இளைப்பாறி விட்டு நடக்கின்றோம்..

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயிலிலிருந்து
ஒரு கி.மீ., நடந்த அளவில் திருமலையில் இருந்து
இறங்கும் சாலையுடன் இணைந்து கொள்கிறது மலைப்பாதை...

அந்த சாலையிலேயே ஒரு ஓரமாக பயணிக்க
நேர் எதிரில் பெரிய ராஜகோபுரம்...

அப்போது நேரம் - நள்ளிரவு 1.45 மணி.

இந்த இடம்தான் மோக்காலு மிட்டா கோபுரம்..
இங்கே படிக்கட்டு எண் 2910 என்று குறிக்கப்பட்டுள்ளது...

இந்த இடத்தில் செங்குத்தான படிகள்..
இந்த இடமே முழங்கால் முறிச்சான் எனப்படுகின்றது...

திருமலையில் கால் பதித்து நடப்பதற்கு அஞ்சிய
ஸ்ரீ உடையவர் முழங்கால்களால் தவழ்ந்தே ஏறினார்...
இங்கே அவரது கால் எலும்புகள் இற்று உடைந்தன...

- என்று, ஏற்கனவே படித்திருக்கிறேன்...

அந்த இடத்தை நேரில் கண்டபோது கண்கள் கலங்கின.. 

மேலும்,

ஸ்ரீ அன்னமாச்சார்யா
அன்னமாச்சார்யார் ஸ்வாமிகள் - தமது இளவயதில்
முதன்முதலாக திருமலையில் ஏறியபோது
பசி தாகம் இவற்றால் துவண்டு வாடிய வேளையில்
ஸ்ரீமஹாலக்ஷ்மி ஆட்கொண்டு அருள்வதாக -

அன்னமய்யா - திரைப்படத்தில் காட்டப்படும்...

அப்படி ஆட்கொள்ளப்பட்ட இடம் மோக்காலு மிட்டா...
- என்று சமீபத்தில் அறிந்து கொண்டபோது மேனி சிலிர்த்தது...


மண்ணாய் நீரெரிகால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம்
புண்ணார் ஆக்கைதன்னுள் புலம்பித் தளர்ந்தெய்த் தொழிந்தேன்
விண்ணார் நீள்சிகர விரையார்த் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே..(1033)
-: திருமங்கையாழ்வார் :-

எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும் சரி...
சக்கையாய்ப் பிழிந்து எடுத்து விடும் இடம் - மோக்காலு மிட்டா...

வேங்கடசப் பெருமாளை முற்றுமாக நாம் உணர்வது 
- இந்த இடத்தில்தான்!..

இதில், யாதொரு ஐயமும் இல்லை!...



தெரியேன்பால கனாய்ப்பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேனாயின பின்பிறர்க்கே உழைத்து ஏழையானேன்
கரிசேர்ப்பூம் பொழில்சூழ் கனமாமலை வேங்கடவா
அரியேவந் தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே..(1034)
-: திருமங்கையாழ்வார் :-


இந்த கோபுரத்தை அடுத்துள்ள 45 ( அல்லது 48) படிகளையும் 
முடிந்தவர்கள் - முழங்காலிட்டுக் கடக்கின்றனர்...

இயலாதவர்கள் படிகளைத் தொட்டு வணங்கிவிட்டு
மேலே தொடர்ந்து நடக்கின்றனர்..

நாங்கள் ஒரு சில படிகளை மட்டுமே முழங்காலிட்டுக் கடந்தோம்..

ஸ்ரீ ஐயப்பன் மீன் வாகனத்தில்..
மோக்காலு மிட்டா கோபுரத்தைக் கடந்து
செல்லும் வழியில் ஒரு மண்டபம்...

அந்த மண்டபத்தில் உள் திண்ணை தட்டிகளால் அடைக்கப்பட்டிருந்தது..

அந்த மண்டபத்தூண் ஒன்றில் மீன் மீது அமர்ந்த விதமாக ஸ்ரீஐயப்பன்....
கன்னத்தில் கை வைத்த திருக்கோலம் மனதைக் கவர்கின்றது...

இந்த மக்களை எப்படிக் கரையேற்றுவது?.. 

- என்ற கவலையா!.. அல்லது,

என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார்களே!.. 

என்ற ஆதங்கமா!.. தெரியவில்லை....

அதைக் கடந்த சிறுபொழுதில் மலைப் பாதை முடிவுறுகின்றது...

இப்போது - இரவு 2.30 மணி...

இதோ படிக்கட்டு எண் - 3550...

நன்றி - கூகுள்..
வழி நெடுக தசாவதார மண்டபங்களில் 
பெருமாளின் திருக்கோலங்களைத் தரிசித்தோம்...

பெரும்பாலான மண்டபங்களைப் படம் எடுக்க இயலவில்லை...

தசாவதார மண்டபங்கள் முடிவுற்றதும் -
ஆழ்வார்களின் திருமேனி மண்டபங்கள் தொடர்கின்றன...

3550 படிக்கட்டுகளையும் கடந்த சிறிது தூரத்தில்
அடிவாரத்தில் கொடுத்த பொருள்களைத் திரும்பப் பெறும்
வளாகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் மண்டபத்தில் -

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்!...

அவளது திருவடிகளில் புஷ்பாஞ்சலி..

தாயே.. தமிழே!.. 
உனக்கு இவர்கள் செலுத்தும் மரியாதையைக் கூட
எங்கள் நாட்டில் செலுத்தவில்லையே!...

- என்று மனம் அரற்றியது...

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் 
பற்றேல் ஒன்றுமிலேன் பாவமேசெய்து பாவியானேன்
மற்றேல் ஒன்றறியேன் மாயனேஎங்கள் மாதவனே
கல்தேன் பாய்ந்தொழுகும் கமலச்சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே..(1336)
-: திருமங்கையாழ்வார் :-
***

இந்த அளவில் மலைப் பாதையைக் கடந்து
ஸ்ரீ வேங்கடாத்ரியை அடைந்து விட்டோம்...

இனி அடுத்தது
திருவேங்கடவனின் திவ்ய தரிசனம் தான்!..

நீரார்க் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏராலம் இளந்தளிர் மேல்துயில் எழுந்தாய்
சீரார் திருவேங்கட மாமலை மேய
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே!..(1040)

-: திருமங்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்..
***

புதன், ஜூன் 27, 2018

தயிர்சோறும் மாங்கனியும்

சிவாய திருச்சிற்றம்பலம்!...

ஆனி மாதத்தின் நண்பகல் வேளை...

கோடை கழிந்தும் வெயிலின் உக்ரம் தணியாமல் இருந்ததால்
உள்நடையில் அமர்ந்து பனை ஓலை விசிறி கொண்டிருந்தார் - புனிதவதி..

சற்றே இளைப்பாறிக் கொண்டிருந்த புனிதவதியின்
செவிகளில் தேனாகப் பாய்ந்தது - அந்தக் குரல்!..

புண்ணியமே வடிவான புனிதவதி - பிறப்பிலேயே கோடீஸ்வரி...

சோழ வளநாட்டின் வளமார்ந்த துறைமுக நகராகிய
காரைக்காலின் மிகப் பெரிய செல்வந்தர் தனதத்தரின் செல்வ மகள்!..

நாகப்பட்டினத்து இளம் வணிகனாகிய பரமதத்தனின் அன்பு மனையாள்!..

புனிதவதி - பரமதத்தன் இருவரது திருமண நாளன்று
காரைக்கால் நகரில் சிற்றுயிர் முதற்கொண்டு பேருயிர் வரை
எல்லா உயிர்களும் பசியாறி இன்புற்றிருந்தனவாம்!.....

கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று கேட்க - வீடு முழுதும் பணியாட்கள்...

ஆனாலும், தானே முன்னெழுந்தார்..

தாய்ப் பசுவின் குரல் கேட்ட கன்றாக - வாசலுக்கு ஓடினார்..

அங்கே -
மேனி முழுதும் வெண்ணீறு பூசிய துறவி ஒருவர் - பழுத்த பழமாக!..

அவரைக் கண்ட மாத்திரத்தில்
அவரது அடிக்கமலம் பணிந்து வரவேற்றார்..

வாருங்கள்.. ஐயா!.. அமுது செய்தருள்க!..

திருவடி துலக்க நீரளித்து
திருமேனி விளக்க நீறளித்து -
பெரியவரை வீட்டுக்குள் அழைத்தார் - புனிதவதி...

பனை ஓலை விரிப்பில் அமர்ந்தார் பெரியவர் ..

தலைவாழை இலை விரித்து - அதில்,
பலவகையான உணவுகளைப் பரிமாறினார் புனிதவதியார்...

மகிழ்ச்சியுடன் உண்டார் - பெரியவர்...

தழைக்கத் தழைக்க தயிர் அன்னத்தைப் படைத்து
- அதனுடன் மாம்பழத்தையும் பரிமாறினார்.. .

சற்று முன் - அங்காடித் தெருவிலிருந்து
கணவர் அனுப்பியிருந்த மாம்பழங்களில் ஒன்றுதான் அது..

உண்ணீர்... உண்ணீர்.. - என்று உவந்து அமுதளித்ததால்
ஒரு கையளவு அதிகமாகவே உண்டு மகிழ்ந்தார் பெரியவர்...

பசியாறிய அவரும்,
மனை வாழ்க!.. - என்று, மனதார வாழ்த்தி விட்டுச் சென்றார்...


சற்றைக்கெல்லாம் கடைத்தெருவிலிருந்து வீட்டுக்கு வந்தார் பரம தத்தன்...

அன்புடன் புருஷனை வரவேற்க -
அவரும் - கைகால் கழுவி விட்டு சாப்பிட அமர்ந்தார். 

புனிதவதியும் அருகிருந்து பரிமாறினார்கள்... மீதமிருந்த மற்றொரு பழத்தையும் துண்டுகளாய் அறுத்து வைத்தார்கள். 

மாம்பழத்தைச் சாப்பிட்ட பரமதத்தனுக்கு மகிழ்ச்சி.. 

புனிதா.. அந்த இன்னொன்றையும் கொண்டு வருக!.. - என்றார்..

புனிதவதிக்கு திடுக்கென்றிருந்தது.. 
அதைத்தான் சிவனடியார்க்கு அமுது படைத்தாயிற்றே!.. என்ன செய்வது!..

பூஜையறைக்குள் போய் - சிக்கல் தீர வேண்டும்!.. - என, வேண்டி நின்றார்கள்.. 

அவ்வேளையில் - ஈசனின் திருவிளையாடலாக -
புனிதவதியின் கையில் ஒரு மாம்பழம் கிடைத்தது..

ஏன் .. எப்படி..என்று யோசிக்காமல்
உடனே - பழத்தை நறுக்கி கணவனிடம் கொடுத்தார்கள்..

அதையும் தின்று தீர்த்த பரமதத்தனுக்கு அதிர்ச்சி..

புனிதா!.. ஒருகிளையின் இருகனிகளில் வெவ்வேறு சுவை இருக்குமா?..

அப்படியெல்லாம் இருக்காதே!.. 

இருக்கிறதே.. முதலில் உண்ட கனிக்கும் இப்போது உண்ட கனிக்கும் சுவையில் வேறுபாடு இருக்கிறதே!..

இதற்குமேல் மறைக்கக் கூடாது என்று - நடந்ததை விவரித்தார் புனிதவதி.

இந்தக் காலத்தில் இப்படியும் நடக்குமா!.. அப்படியானால் -
இன்னும் ஒரு பழத்தை நான் பார்க்கும்படியாக வரவழைத்துக் காட்டு..
- என்றார் பரமதத்தன்..

அதைக் கேட்டதும்
அங்கேயே - ஈசனை வேண்டி நின்றார் புனிதவதி. 

நொடிப் பொழுதில் அவர் கையில் மற்றொரு மாம்பழம்.. 


அதைக் கண்ட பரமதத்தன் பயந்து விட்டார். 

தான் பெற்ற பழத்தைக் கணவரின் கையில் கொடுத்தார் - புனிதவதி.

பரமதத்தன் - நடுங்கிக் கொண்டே அந்தப் பழத்தை வாங்கினார். 

அவ்வளவு தான் அந்தப் பழம் அவரது கையில் இருந்து மறைந்து போயிற்று.. சப்த நாடியும் ஒடுங்கிப் போனது பரமதத்தனுக்கு..

அஞ்சி நடுங்கிய பரமதத்தன் - 
தெய்வாம்சம் பொருந்திய புனிதவதியுடன் வாழ்தல் இனி தகாது!.. 
- என, தனக்குள் தானாக முடிவு செய்து கொண்டார்...

அடுத்த சிலநாட்களில் வணிகத்தின் பொருட்டு வெளியூர் செல்வதாகப் பொய்யுரைத்து தனக்கு வேண்டிய பொருளுடன் மதுரைக்குப் போய்விட்டார்.

நாட்கள் கழிந்தன - மாதங்கள் , வருடங்கள் - என...

வெளியூர் சென்ற கணவனைப் பற்றிய விவரம் ஏதும் அறிய முடியாமல் - சித்தம் எல்லாம் சிவமயம்!.. - என அறவழியில் நின்றார் புனிதவதியார்.

அங்கும் இங்கும் சென்று வாணிகம் செய்வோர் வந்து சொன்னார்கள் - 

பரமதத்தன் மதுரையில் பெரும் வணிகனாக இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தையுடன் வாழும் செய்தியை!...

அதிர்ச்சியடைந்த பெற்றோரும் உற்றாரும் உறவினரும் புனிதவதியாரை அழைத்துக் கொண்டு - மதுரைக்கே போனார்கள்.  

ஊர் எல்லையில் தங்கிக் கொண்டு தகவல் அனுப்பினார்கள். 


செய்தி அறிந்த பரமதத்தன், தன் மனைவியுடனும் மகளுடனும் ஓடோடி வந்து எதிர்கொண்டு வரவேற்றார். 

தம்முடைய  கருணையால் நலமுடன் வாழ்கின்றேன்...
என் மகளுக்கும் தங்கள் திருப்பெயரையே சூட்டியுள்ளேன்!...

- புனிதவதியாரின் கால்களில் விழுந்து வணங்கினார் - பரமதத்தன்...

இதனைக் கண்ட அத்தனை பேரும் அதிர்ந்து நின்றனர்!...

மனைவியின் கால்களில் கணவன் விழுந்து வணங்குவதாவது?....

அதிர்ச்சி அடைந்த அவர்கள் மனம் தெளியும்படி,  
அன்றைக்கு நடந்த மாங்கனி அதிசயத்தை விவரித்தார் - பரமதத்தன்...

மானுடம் தாங்கி, பெண் என வந்த பெருந்தெய்வம்... 
ஆதலின் பணிந்தேன் அவர் பொற்பாதம்!.. - என்றார்.

இதைக் கேட்ட அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.


காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலுஞ் சடைக் கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு..(65)
: அற்புதத் திருஅந்தாதி :-

கணவனின் செயல் கண்டு -
மிகுந்த வேதனையடைந்து மனம் கலங்கித் தவித்த புனிதவதியார் - 

என் கணவனுக்கு ஆகாத அழகும் இளமையும் இனி எனக்கு எதற்கு?.. 
அழகும் இளமையும் என்னை விட்டு நீங்குக!... 

- என்று சொல்லியபடியே - தன் பேரழகை தானாகவே நீத்தார்.

எவரும் விரும்பாத -  பேய் உருவினை வேண்டிப் பெற்றார்.

திருமகளைப் போல பேரழகுடன் திகழ்ந்த புனிதவதியார் - 
எலும்பும் தோலுமான கோர வடிவத்தை விரும்பிப் பெற்றார். 

காண்பதெல்லாம் என்ன!.. - என வியந்து நின்றார்கள் அனைவரும்...

அனைத்தையும் துறந்த அம்மையார் திருக்கயிலை நோக்கிச் சென்றார்...

திருக்கயிலை மாமலையில் கால் வைக்க அஞ்சிய
அம்மையார் தலையாலே ஊர்ந்து சென்றார்...

இவரைக் கண்ணுற்ற ஈசன்,
அம்மையே வருக!.. - என்றழைத்து மகிழ்ந்தனன்...

அம்மையப்பனை வலம் வந்து வணங்கினார் காரைக்காலம்மையார்...

அம்மையே...
திருஆலங்காட்டினில் உங்களது எண்ணம் ஈடேறும்!.. - என்றருளினன்...

காரைக்காலம்மையார்
திருஆலங்காட்டு மயானத்தில் அருளிய திருப்பாடல்கள் -
மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை, அற்புதத்திருஅந்தாதி - என்பன..

இவை பதினொன்றாம் திருமுறையில் இலங்குகின்றன..


சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆஆஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஓவாது நெஞ்சே உரை..(06) 
-: திரு இரட்டை மணிமாலை :-

அவ்வண்ணமே ஆலங்காட்டு மயானத்தில்
பங்குனி மாதத்தின் சுவாதி நட்சத்திரத்தன்று
ஈசனின் திருநடனங்கண்டு - இன்புற்று,
சிவகதியடைந்தார் - காரைக்கால் அம்மையார் .. 

இன்று ஆனி மாதத்தின் முழுநிலவு..

புனிதவதியார் - ஐயனுக்கு அமுது படைத்த திருநாள்...

காரைக்காலில் பெருந்திருவிழா நிகழ்ந்து கொண்டிருக்கின்றது...
இன்று காலை ஐயனுக்கு அமுதளித்தல்.. மாங்கனிதிருவிழா..

நாளை விடியற்காலையில் பேயுறு பெற்ற வைபவம்...
வெட்டிவேர் அலங்காரத்தில் திருக்கயிலை மாமலைக்கு ஏகுதல்...


திருஆலங்காடு ரத்ன சபையில் ஈசனுடன் காரைக்காலம்மையார்
என்னை உடையானும் ஏகமாய் நின்றானுந்
தன்னை அறியாத தன்மையானும் - பொன்னைச்
சுருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க்கு
அருளாக வைத்த அவன்..(92) 
-: அற்புதத் திருஅந்தாதி :-
***
காரைக்காலம்மையார்
அறுபத்து மூன்று நாயன்மார்களுள்
காரைக்கால் அம்மையார் ஒருவரே
அமர்ந்த கோலத்தில் விளங்குபவர்...

தாயும் தந்தையும் இல்லாதவன்!..
இப்பெருமைக்குரிய ஈசனே, 
புனிதவதியார் திருக்கரத்தினால் 
அமுதூட்டிக் கொள்ள விரும்பி வருகின்றான்.

பாருக்கெல்லாம் படியளக்கும் பரமசிவம் 
தானும் ஒரு பாத்திரம் ஏற்று
புனிதவதியாரைத் தேடி வருகின்றது 
என்றால்
அம்மையாருடைய பெருமையை 
என்னவென்று போற்றுவது!..



அடித்தலத்தின் அன்றரக்கன் ஐந்நான்கு தோளும்
முடித்தலமும் நீமுறித்த வாறென் - முடித்தலத்தின்
ஆறாடி ஆறாஅனலாடி அவ்வனலின்
நீறாடி நெய்யாடி நீ..(14) 
-: திரு இரட்டை மணிமாலை :-
***

அன்னமிடும் கைகளைத் தேடி 
ஆனந்தக் கூத்தனே வருகின்றான்!..

காரைக்காலம்மையார் 
திருவடிகள் போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
ஃஃஃ