( ம்க்கும்!.. அப்படியே பதிலளித்து விட்டாலும்!?...)
பெரும் சிரமமாக இருக்கின்றது...
பொறுத்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்...
வெள்ளிக்கிழமை மட்டும் காலையில் ஓய்வு..
அதைப் பயன்படுத்தி புற வேலைகள் எல்லாவற்றையும் முடித்தாயிற்று...
இதோ, இப்பொழுது - தங்களுடன்!...
திருமலையில் ஆங்காங்கே - சுற்றிக் காட்டுவதற்காக
அனுமதி பெற்ற ஓட்டுநர்கள் ஜீப்புகளுடன் காத்திருக்கின்றனர்...
நமது முக விலாசத்தைக் கண்டதுமே
புன்னகையுடன் அருகில் வருகின்றனர்...
சுந்தரத் தெலுங்குடன் தமிழையும் கலந்தடித்து பேசுகின்றனர்...
ரூபாய்
150 ல் ஆரம்பித்து
120 ல் நின்று கொண்டார்..
நாங்கள் பேரம் பேசவில்லை...
மேலும், நாலு பேரை ஏற்றிக் கொண்டார்...
அவர்கள் கன்னடர்கள் என்று புரிந்தது...
அவர்களிடம் ஆளுக்கு
100 ரூபாய் பெற்றுக் கொண்டது
அப்புறமாகத் தான் தெரிந்தது... எனினும் பெரிதுபடுத்தவில்லை...
முதலாவதாக நாங்கள் சென்ற இடம் ஸ்ரீ ஸ்வாமி பாதம்...
திருமலையிலிருந்து பத்து நிமிடம் வனத்துக்குள் பயணம்..
பரந்தவெளி.. தெற்கு முகமாக 100 அடி உயர சிகரம்..
 |
| வட்டத்துக்குள் - ஸ்ரீ ஆனந்த நிலையம் |
அலர்மேல் மங்கையைச் சந்திப்பதற்கு
முன்பாகவோ பின்பாகவோ -
வேங்கடேசப் பெருமான் இங்கெல்லாம் சுற்றி நடந்திருக்கின்றார்....
ஸ்ரீ வேங்கடேசன் - இந்த சிகரத்தில் நின்றபடி கீழே நோக்கிய இடத்தில் தான்
இன்றைய ஆனந்த நிலையம்!..
 |
| ஸ்ரீ ஸ்வாமி பாதங்கள் |
ஸ்வாமி பாதத்துக்கு அருகில் பெரிய விருட்சம்..
அதன் கீழாக -வீடு வாசல் மனை - நல்லபடியாக அமைவதற்காக
சிறு சிறு கற்களை அடுக்கி வைக்கின்றனர் -
2015 ல் சென்றபோது கரடு முரடாக இருந்தன படிக்கட்டுகள்
இப்போது சீரமைக்கப் பட்டிருக்கின்றன...
நூற்றுக்கணக்கான வாகனங்கள்... சுற்றுலாத் தளம் போல இருக்கின்றது..
கொடைக்கானலுக்கு வந்ததைப் போல மக்களிடம் குதூகலம்.. கும்மாளம்...
ஸ்ரீ பாத தரிசன படிக்கட்டுகளிலும் தள்ளுமுள்ளு....
நின்ற நின்ற இடத்திலெல்லாம் ஆக்கங்கெட்ட செல்ஃபி...
ஸ்வாமி பாதத்திலிருந்து கிழக்காக நோக்கினால்
ஆனந்த நிலையம் தெரிகின்றது...
அங்கிருந்து -
சிலா தோரணம்...
இதன் வயது
250 கோடி வருடங்கள் - என்று கணக்கிடப்பட்டுள்ளது..
ஆதியில் -
ஸ்ரீ மகாலக்ஷ்மியைத் தேடிவந்த -
ஸ்ரீ ஹரிபரந்தாமன் இங்கிருந்து வெளிப்பட்டதாக ஐதீகம்...
 |
| சிலா தோரணம் |
சிலா தோரண தோட்டம் அழகாக பராமரிக்கப்படுகின்றது..
அந்த வனத்துக்குள்ளேயும் இரண்டு மயில்களையும்
சில வான்கோழிகளையும் கூண்டுக்குள் அடைத்து வைத்திருக்கின்றார்கள்...
அங்கிருந்து - சிறிது தூரம் நடந்து
இருபதடி ஆழ பள்ளத்தில் இறங்கினால்
சக்ரத் தீர்த்தம் என சிற்றருவி...
 |
| சக்ர தீர்த்தம் - 2015 |
 |
| சக்ர தீர்த்தம் - 2018 |
மழைக் காலத்தில் இந்த சிற்றருவியைக் கடக்க முடியாது...
இப்போது அந்த சிற்றருவில் தண்ணீர் இல்லை..
ஆனாலும் செல்ஃபி கூட்டம் விடுவதாக இல்லை...
ஆபத்தான அந்த இடத்தை ஆண்களும் பெண்களுமாக
அதகளம் செய்து கொண்டிருந்தார்கள்...
முட்டாள்களான வாலிபர்கள் அந்தப் பள்ளத்துள் குதித்து
அப்படியும் இப்படியுமாகத் தாவி - வீரத்தைக் காட்டிக் கொண்டிருந்தனர்..
மலையிடுக்குகளையும் விட்டு வைக்கவில்லை - இந்த மூடர்கள்!...
அந்தக் கூட்டத்தின் இடையே படமெடுக்க விரும்பவில்லை...
அருவியைக் கடந்து அந்தப் பக்கம் கரை ஏறினால்
கரையில் ஸ்ரீ விநாயகரும் ஸ்ரீ சிவலிங்கமும் நந்தியும்...
புடைப்புச் சிற்பங்களாக ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மர்.. ஸ்ரீ சுதர்ஸனர்...
 |
| ஸ்ரீ சிவ தரிசனம் |
ஸ்வாமி தரிசனம் செய்தபின் அங்கிருந்து புறப்பட்டோம்..
அடுத்த இலக்கு -
பாபவிநாச தீர்த்தம்...
வழியில்
ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில்...
 |
| ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில் |
இந்த வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில் வளாகத்தில்
ஸ்ரீ ஹதிராம் பாவாஜி அதிஷ்டானம்...
ஸ்ரீ ஹதிராம் பாவாஜியுடன் பெருமாள் தாயம் விளையாடியதாக வரலாறு...
ஸ்ரீ ஹதிராம் பாவாஜி அதிஷ்டானத்தில் -
நிறைய பெண்கள் சேவித்துக் கொண்டிருந்ததால்
வழக்கப் போல படங்கள் எடுக்கவில்லை...
அதன்பின் - அங்கிருந்து
ஆகாச கங்கா..
ஆகாச கங்கா என்பது சிற்றருவி...
சாலை மட்டத்திலிருந்து கீழே இறங்குவதற்கு அருமையான படிக்கட்டுகள்...
 |
| ஆகாச கங்கை |
இருநூறடி பள்ளத்தில்
ஸ்ரீ அஞ்சனாதேவி திருக்கோயில்...
ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் அவதார ஸ்தலம் என்கின்றார்கள்...
சிற்றருவிக்கு மேல்கரையில்
ஸ்ரீ அஞ்சனாதேவி திருச்சந்நிதி.. தரிசித்துக் கொண்டோம்...
அவ்வளவாக தண்ணீர் பொழியவில்லை என்றாலும் -
பத்தடிப் பள்ளத்தில் இறங்கினால் சிலுசிலு என தண்ணீர்...
படிக்கட்டுகளைக் கடந்து விட்டால் பாறைகள் வழுக்குகின்றன...
நாங்கள் இறங்கி தீர்த்தம் எடுத்துக் கொண்டோம்...
மகன் தீர்த்தமாடிக் கரையேறினான்....
 |
| பாபவிநாச தீர்த்தக் கட்டம் |
அடுத்தது
பாபவிநாச தீர்த்தம்...
திருமலைக்குரிய தீர்த்தங்களுள் முக்கியமானது...
 |
| நன்றி - கூகுள் |
தீர்த்தக் கரையில் சிறு அணைக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது...
இதன் ஒரு பகுதியாக -
ஸ்ரீ வேங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா இலங்குகின்றது..
சாலையிலிருந்து சரிவான படிக்கட்டுகள்
தீர்த்த கட்டத்திற்கு இட்டுச் செல்லுகின்றன....
 |
| நன்றி - கூகுள் |
குளுகுளு என காற்று வீசுகின்றது..
தீர்த்தக் கரையில் சிறியதாக ஒரு கோயில்...
ஸ்ரீ கங்கா தேவியும் ஸ்ரீ ஆஞ்சநேயரும் திருக்கோயிலில் திகழ்கின்றனர்....
ஆகாச கங்காவிலிருந்து புறப்பட்ட போதே
கைத்தொலைபேசியில் மின்சக்தி தீர்ந்து போயிருந்தது...
பாபவிநாசக் கரையில் சூழ்நிலை இருந்தும் எந்த ஒரு படமும் எடுக்கவில்லை...
எதற்கும் ஒரு மிச்சம் மீதி வைக்க வேண்டுமல்லவா!..
மாலைப் பொழுது நெருங்கிக் கொண்டிருந்தது...
சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டபின் -
ஆனந்த நிலையத்தை மீண்டும் வணங்கி விடைபெற்றுக் கொண்டோம்...
திருமலை பேருந்து நிலையத்திலிருந்து -
திருப்பதியை வந்தடைந்து விட்டோம்...
அன்று பிரதோஷம்...
எங்கள் இலக்கு - திருக்காளத்தி...