நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 30, 2014

அழகர் மலை

ஆயிரம் தோள்பரப்பி முடிஆயிரம் மின்னிலங்க
ஆயிரம் பைந்தலைய அனந்தசயனன் ஆளும்மலை
ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பலஆயிரமும்
ஆயிரம் பூம்பொழிலும்உடை மாலிருஞ்சோலையதே!.. (358)

- என்று, பஞ்சாயுதங்களுடன் கள்ளழகர் உறையும் மாலிருஞ்சோலையைக் கண்ணாரக் கண்டு பெருமைப்படுபவர் -பெரியாழ்வார் (4/மூன்றாம்திருமொழி).


ஆயிரம் திருமுடிகளுடன் ஈராயிரம் திருத்தோள்களுடன் - ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேஷன் மீது அனந்தசயனம் கொண்டிருக்கும் எம்பெருமான் மனம் விரும்பி இருந்து ஆட்சி செய்வது,   

ஆயிரம் ஆறுகள், ஆயிரம் பூம்பொழில்கள், பல்லாயிரம் சுனைகள் - இவற்றுடன் விளங்கும்   சோலைமலையாகும். 


இத்தகைய பெருஞ்சிறப்பினை உடைய மலையில் இருந்துதான் பெருமான் கள்ளழகராகத் திருக்கோலங் கொண்டு தென்கிழக்கே சுமார் 21 கி,மீ தொலைவில் உள்ள மதுரையம்பதியை நோக்கிப் புறப்படுகின்றார். காரணம்!?..

மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அருள்வதற்கு!..

கங்கையின் கரையினில் சிறு குடில். அது சுதபஸ் எனும் முனிவருடையது. ஆதவன் தனது பொற்கிரணங்களை விரித்துக் கிளம்புதற்கு முன்னதான ப்ரம்ம முகூர்த்தம். சுதபஸ் முனிவர் சந்தியாவந்தனம் செய்தற்கு  கங்கையில் இறங்கிய சமயம் துர்வாச முனிவர் அங்கே வருகின்றார். 

அந்த இளங்காலைப் பொழுதிலும் அவருக்குக் கோபம் கொந்தளிக்கின்றது.  விழிகள் சிவக்கின்றன. தன்னை மதிக்காமல் - சுதபஸ் கங்கையில் இறங்கினார் என்று!.. 

தாமரைக் குளத்தில் கிடந்தும்  தாமரையை அறியாதது தவளை. அதைப் போல பெரியவர்களோடு இருந்தும் அவர்தம் சிறப்பினை உணராது  மமதையில் உழலும் நீ மண்டூகம் ஆகக் கடவாய்!..

என்ன ஏது.. என்று புரியாமல் திடுக்கிட்ட  சுதபஸ் - அதிர்ந்தார். 

சுதபஸ் இவ்வாறு செய்யக்கூடியவர் இல்லையே.. அவருக்கு ஏன் இப்படி சோதனை!.. ஆங்காங்கே இருந்த மகா முனிவர்களும் அதிர்ந்தனர். வருந்தினர்.

சிந்தையில் பரம்பொருளைக் கொண்டிருந்த சுதபஸ் ஒருவாறு மனம் தேறினார். அவர் நிலை கண்டு இரங்கிய மற்ற முனிவர்கள் - துர்வாசரின் கோபத்தினைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

ரிஷிகளுள் மகோன்னதமானவரும் மூவுலகிலும் நிலைத்த புகழினை உடையவருமாகிய தாங்கள் - சினத்தினை விடுக்க வேண்டும். முக்காலமும் உணர்ந்த தாங்கள் - சுதபஸ்  தங்களை அலட்சியம் செய்ய வில்லை என்பதையும் அவர்தம் நாட்டம் முழுதும் நாராண மந்த்ரம் என்பதையும் அறிவீர்கள்.. அங்ஙனம் இருக்க  - இவ்வித கொடுஞ்சாபம் எதன் பொருட்டு!.. அதற்கு விமோசனம் தான் யாது!.. உரைத்தருள வேண்டும்!.. 

- என்று பணிந்து நின்றனர். மெல்ல புன்னகைத்தார் துர்வாசர்.

இது கொடுஞ்சாபம் அன்று. நான் இடும் சாபம்  - அவரவர்க்கு பெரும் பயனை நல்குவதற்கானதாகும். சந்தனக் கட்டையைத் தேய்க்கும் போதுதானே -  அதன் நறுமணம் எங்கும் பரவுகின்றது. அதுபோல்  சாபத்தினுள் உணர்வதற்கரிய பல தேவரகஸ்யங்கள் பொதிந்து கிடக்கின்றன. 

அன்றொருநாள் பரந்தாமன் - திருவிக்ரமனாக உலகளந்தபோது சத்ய லோகத்தினுள் நீண்ட அவனது திருவடியை, நான்முகன் - தன் கமண்டல தீர்த்தத்தினால் ஆராதித்து வழிபட்டான். 

அப்போது ஐயனின் திருவடி நூபுரத்தில் தோன்றிய கங்கையானது  - நூபுர கங்கை என புண்ணிய பாரதத்தின் தெற்கே கடம்பவனம் ஆகிய மதுரையம்பதியின் வடபால் ரிஷபாத்ரி எனும் புனித மலையில் விழுந்து பொங்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றது. 

அந்தமலை தோளுக்கினியான் ஆகிய பரவாசுதேவன் இருந்து ஆளும் திருமலை.  

சுதபஸ் மண்டூகமாகி வேகவதி எனப்படும் வைகையில் கிடக்க - மாமாயன் ஆகிய சுந்தரத் தோளுடையான் கள்ளழகன் எனும் திருப்பெயர் கொண்டு வைகையைக் கடக்க, வையகம் இன்புற்று உய்வடையும்  வேளை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அதன் பொருட்டே இந்த நாடகம். நலமடைவீர்களாக!.. 

மனம் தெளிந்த அனைவரும் துர்வாச முனிவரை வணங்கிக் கொண்டனர்.

சுதபஸ் முனிவரும் தவளையாகி தென் திசைக்கு வந்தார். மண்டூகர் எனும் பெயரையும் அடைந்தார்.

இப்படி - துர்வாசரின் சாபத்தினால் மண்டூகம் ஆகிய சுதபஸ் மகரிஷிக்கு விமோசனம் அருளி முக்தி நல்குவதற்காகத்தான் கள்ளழகர் சித்ரா பௌர்ணமி அன்று வைகையாற்றில் இறங்குகின்றார். 


அழகர் மலையின் ஐயனை - சந்தொடு காரகிலும் சுமந்து தடங்கள் பொருது வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற சுந்தரன்!.. - என்று புகழ்கின்றாள் சுரும்பார் குழல் கோதை நாச்சியார். 

இந்த அழகனுக்குத்தான் - அவள்,

நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்கார அடிசில்சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ!.. 

- என்று நேர்ந்து கொண்டாள். ஆனால், நேர்ச்சையை நிறைவேற்ற அவளால் இயலவில்லை. 

காலச்சக்கரம் உருண்டோடியது.

நூறு நூறு ஆண்டுகளைக் கடந்த பின், ஒருநாள்!.. 

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் ஆவலை  அறிந்து கொண்ட உடையவர் - மாலிருஞ் சோலைக்கு எழுந்தருளி,  ஆண்டாள் நேர்ந்து கொண்டபடியே நூறு தடா வெண்ணெயும் நூறு தடா அக்கார அடிசிலும் பராவி வைத்து ஆரா அமுதனை வணங்கி நின்றார். 

பின் அங்கிருந்தபடியே ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். 

அங்கோர் அதிசயம் நிகழ்ந்தது. உடையவர் - அர்த்த மண்டபத்திற்கு ஏகிய போது - திரு மூலஸ்தானத்தில் இருந்த ஸ்ரீ ஆண்டாள் - அர்த்தமண்டபத்தில் ப்ரசன்னமாகி - ''..வாரும் எம் அண்ணாவே!..'' - எனக் கொண்டாடினாள். 

அதன் பின் அர்த்தமண்டபத்திலேயே ஆண்டாள் குடி கொண்டதாக ஐதீகம். 

இத்திருத்தலத்தில் ஆடி மாதத்தில் நிகழும் பிரமோற்சவ பெருந்திருவிழாவின் போதும் ஆயிரம் ஆயிரமாய் மக்கள் கூடுகின்றனர்.

பங்குனி உத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் -  

கள்ளழகர் ஆகிய  ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் ஏகாசனத்தில் இருக்க - ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி, ஆண்டாள்  உடனாகிய திருமண வைபவம்  நிகழ்கின்றது 

ஆயினும்,  சித்திரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்குவதைத்தான் பெருந் திருவிழா என்று - பெருவாரியான மக்கள் அறிந்திருக்கின்றனர்.


 


அழகர் வைகையாற்றில் இறங்கும் விழா, தமிழக விழாக்களில் - மிகப் பிரபலமானதாகும். லட்சக்கணக்கான மக்கள் பங்கு கொள்ளும்  இந்தத் திருவிழா மக்களின் திருவிழா என புகழப்படுகின்றது.

இத்திருவிழாவில் கலந்து கொள்பவர்கள்  கிராமத்து மக்களே!..

இவர்களில் நேர்ந்து கொண்டவர்கள்  பல நாட்கள் விரதம் இருக்கின்றனர்.

விழாவின் போது - நெற்றியில் திருமண் தரித்து அழகர் மற்றும் கருப்பசாமி என வேடம் தாங்கி , அழகரின் முன்பு ஆடிப்பாடி அகமகிழ்கின்றனர்.

பெருமான் எழுந்தருளும்போது - ஆங்காங்கே கருப்பசாமி, அழகர் கதைப் பாடல்களைப் பாடிக் கொண்டிருக்க - அதைக் கேட்டு  நூற்றுக்கணக்கானோர் மெய் மறந்திருக்க - கள்ளழகரும் தன்னை மறக்கின்றார்.

திருமாலிருஞ்சோலை - வண்டியூர் பயணத்தின் போது அழகர் ஆங்காங்கே தங்கிச் செல்வார்.

அப்படி - அழகர் தங்கும் இடங்களுக்கு திருக்கண்கள் எனப் பெயர். இவற்றுள் பல நிரந்தர கல் மண்டபங்கள். மேலும், அழகரின் வருகையினை முன்னிட்டு - தற்காலிக பந்தல்களும் அமைக்கப்படுகின்றன.

இவ்வாறு மொத்தம் நானூறுக்கும் மேற்பட்ட திருக்கண்கள் வழியில் உள்ளன. போகும்போதும் வரும்போதும் என - இருமுறை இவைகளில் அழகர் தங்குகிறார்.மீனாட்சி திருமணத்திற்காக அழகர் வருகிறார் என்பது மக்கள் மத்தியில் நிலவும் சுவையான கதை மட்டுமே. 

திருமலை நாயக்கர்  மதுரையில் ஆட்சி செய்தபோது,  சைவ  வைணவ சமயப் பூசல்களைக் களையும் விதமாக - மாசியில்  நடந்த  மீனாட்சி அம்மன் திருக் கல்யாணத்தையும்  

சித்திரையில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவையும் சேர்த்து நடத்தினார் என்று அறியப்படுகின்றது. 

மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அருள்வதற்காகவும்,

சுந்தரத் தோளுடையான் எனச் சொல்லி, நூறு தடா வெண்ணெயும் அக்கார அடிசிலும் தந்து ஆராதித்த  ஆண்டாள், தன் தோள்களில்  சூடி - களைந்த மாலையை,  தனது சுந்தரத் தோள்களில் அணிந்து கொள்வதற்காகவும்,

வைகை கரைக்குச் சென்ற கள்ளழகர் - சித்திரைத் திருநாளின் வைபவங்களை இனிதே முடித்துக் கொண்டு  மலைக்குத் திரும்பியதும் - மிக உற்சாகத்துடன் வரவேற்கப்படுகின்றார். 


பதினெட்டு பூசனிக் காய்களில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழிக்கப்படுகின்றது. மக்கள் ஆரவாரத்துடன் மூன்று முறை வலம் வந்து வணங்குகின்றனர். 

அழகர் மூலஸ்தானம் சென்று அடைந்த பின் - உற்சவ சாந்தி நிகழ்கின்றது.

மாலிருஞ்சோலையில் தான், ஆண்டாளும் ஆழ்வார்களும் புகழ்ந்த - நூபுர கங்கை எனும் சிலம்பாறு சுரக்கின்றது.

இம்மலையின் காவல் தெய்வம் - ராக்காயி அம்மன்..

கோபுர வாசலை அடைத்துக் கொண்டு - பதினெட்டாம்படி கருப்பசாமி!..

ராக்காயி என்றும் கருப்பர் என்றும் தென்பாண்டிச் சீமை எங்கும் - மணக்கும் பெயர்கள் - இவர்களுடையதே!..

ஏழை எளிய மக்களின் வாழ்வுடன் 
பின்னிப் பிணைந்த பெருமான் - அழகர்!..
கார்மேகமாகக் காத்தருளும் பெருமான் - கள்ளழகர்!..

பார்த்தனுக்கு அன்றருளிப் பாரதத்தொரு தேர்முன்னின்று
காத்தவன் தன்னைவிண் ணோர்கரு மாணிக்க மாமலையை
தீர்த்தனைப் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்ற
மூர்த்தியைக் கைதொழ வும்முடி யுங்கொலென் மொய்குழற்கே!.. 
திருமங்கை ஆழ்வார்(1835)9/9
* * *

திங்கள், மே 26, 2014

ஸ்ரீதில்லைக் காளி

பிரச்னை அங்கே தான் தோன்றியது. 

முஞ்சிகேச முனிவரும் கார்க்கோடகனும் அம்மையப்பனின் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்ணாரக் கண்டு களிக்க வேண்டும் என காலகாலமாகச் செய்த தவம் அன்று ஆலங்காட்டினில் அற்புதமாக நிறைவேறிற்று. 

அதனால்,  ஆலங்காடு - திருஆலங்காடு என்றானது. நிருத்த சபையும் - ரத்ன சபை எனப்பட்டது. ஈசனும் ரத்னசபாபதி என புகழப்பட்டார். 

அம்மையப்பனின் திருக்கூத்தினைக் கண்டு களித்துக் கொண்டிருந்தவர் எவருமே - நினைக்கவில்லை - இப்படி ஆகும் என்று!..


ஐயனுடன் ஆடிக் கொண்டிருந்த அம்பிகை - தான் தனிமைப்படுத்தப்படுவதாக உணர்ந்தாள். அவளின் உள் மனதில் தோன்றிய அந்த எண்ணத்தை உணர்ந்த ஐயன் குறுநகை புரிந்தான். ஆயினும், முனிவர்களுக்காக - திருநடனம் நிகழ்த்திக் கொண்டிருந்தான். 

ஆட்ட நாயகனாக ஆடிக் கொண்டிருந்த ஐயனைக் கூர்ந்து நோக்கினாள். 

தன்னைக் கவனிக்காத பாவனையுடன் - ஈசன் நடமாடுவதாக உணர்ந்தாள். அம்பிகையின் முகம் கறுத்தது.

தன்னை இப்படி மாற்றியது ஆனந்தக் கூத்தனின் அலட்சியமே - எனக் கொண்ட அம்பிகை,  மெல்ல  உக்ரமானாள். கோரப்பல் காட்டிச் சிரித்தாள். 

கோபத்துடன் கோரத் தாண்டவம் நிகழ்த்தினாள்.

எம்பெருமானின் மாணிக்கக் கூத்து எதற்காக!?.. 

பத்ரகாளி  என்பவள் யார்?.. 


முன்பொரு சமயம்  - தட்ச யக்ஞத்தில் தேவி அவமானப்படுத்தப்பட்ட போது அவளுடைய திருமேனியில் இருந்து கௌசிகை என வெளிப்பட்டவள். கரிய நிறம் கொண்டிருந்ததால் -   பத்ரகாளி என்பதும் திருப்பெயர். வீரபத்ரருடன் கூடி தட்சனின் யாகத்தை அழித்தவள் இவளே!.. 

மகிஷாசுரனை வதைத்த போதும்  சண்ட முண்டர்களைத் தொலைத்த போதும் இரத்தச் சகதியில் விளையாடிக் களித்தவள் இவளே!.. 

சும்பநிசும்பன் எனும் அசுரர்களை மாய்க்கும் வேளையில் ரக்தபீஜன் என்பவன் உடலிலிருந்து சிதறிய இரத்தத் துளிகளில் இருந்து மேலும் அசுரர்கள் தோன்றுவதைக் கண்டு - அவனுடைய குருதியைக் குடித்து அவன் வாழ்வை முடித்து சாமுண்டி எனச் சிரித்தவள் இவளே!..  

அசுரனின் உடலைப் பிளந்து உதிரம் குடித்த காரணத்தால், விளைந்திருந்த மயக்கத்தினைத் தன்னுள் இருந்து நீக்குவதற்கே திருஆலங்காட்டில் மாணிக்கக் கூத்து என்பதை அம்பிகை அறிந்தாளில்லை. அவ்வேளையில்,

கருணைக் கடலாகிய எம்பெருமான் - தேவி!.. இத்துடன் நிறுத்திக் கொள்!.. -  என்றான். 

காளி ஆகி நின்ற கற்பகமோ - சீற்றத்துடன் முன் நின்று எதிர்வாதம் புரிந்தாள். 

தாண்டவத்திற்கு உரியவர் தாம் மட்டுமோ?. எனில், எதிர்த்து நின்று ஆடுக!.  - என்றாள். 


டலரசனின் கண்கள் சிவந்தன. கங்கை நீர் ததும்பும் வார்சடைக் கற்றைகள் ககனம் எங்கும் விரித்தெழுந்தன. 

தன்னில் ஒருபாகமாய் இருந்து சிவசக்தியாய் ஒளிர்ந்தவளின்  அறைகூவலை ஏற்றுக் கொண்டான். பேருவகையுடன்  நர்த்தனம் புரிந்தான். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுக்களும் சுழன்றன. அண்டங்கள் அதிர்ந்தன.

வேறொரு நாட்டியம் அங்கு ஆரம்பமானதைக் கண்ட முஞ்சிகேச முனிவரும் கார்க்கோடகனும் பரவசம் மாறி பரிதவித்து நின்றனர்.  

காலத்துக்கு கட்டுப்படாத - தாண்டவத்தைக் காண வந்து குழுமிய தேவாதி தேவர்களும்  -  வெற்றி பெறப் போவது, மகேஸ்வரனா!..  மகா காளியா!.. - என விடை தெரியாது திகைத்தனர். 

அந்த வேளையில் - அண்டப் பிரபஞ்சமெங்கும் எண்தோள் வீசி நின்றாடிய எம்பெருமானின் திருச்செவியில் இருந்து மகர குண்டலம் நழுவி விழுந்தது.

காளியும் அதைக்  கண்டாள். 

என்ன செய்வார் ஈசன்!?..  - விக்கித்து நின்றது கூடியிருந்த சபை.  

எட்டுத் திசைகளையும்  வீசி அளந்த ஈசனின் - திருப்பாதம் கீழே கிடந்த மகர குண்டலத்தை மெல்லப் பற்றியது. 

உக்ர காளியின் திருவிழிகள் விரிந்தன.


ஒரு பாதத்தினை ஊன்றி குண்டலத்தினைப் பற்றிய பாதத்தினை செங்குத்தாய் தூக்கி நின்றார். திருச்செவியில் மகர குண்டலத்தினை சூட்டிக் கொண்டார். 

காளி - புயல் என சிலிர்த்தாள். தானும் ஊர்த்துவ தாண்டவம் ஆடுதற்குத் திருப்பாதம் உதைத்து நின்றாள். 

அச்சமயம், மஹாவிஷ்ணுவும் - நாரதாதி முனிவர்களும் கூடி நின்று - 


தாயே.. தயாபரி!.. ஈசனுக்கு எதிராக - ஊர்த்துவ தாண்டவம் நிகழ்த்த வேண்டாம். தானொரு பாதியல்லவோ - தயாபரனின் திருமேனியில்!.. தமது திருநடனத்தின் தரம் கூறவல்லார் யார்!.. வென்றவர் இவர் எனக் கூறுதற்கு எவர் உளர் இவ்விடத்தில்!..  வெற்றி எனும் பரிபூரணம் இருவருக்கும் உரியதன்றோ!.. சினத்தை விடுத்து ஈசனோடு  - சேர்ந்திருந்து பொலிக!..  - என பலவாறாகத் துதித்து நின்றனர்.

திகைத்து நின்றாள் - சக்தி. 

பெருமானின் ஊர்த்துவ தாண்டவத்தை எதிர்த்து ஆடவேண்டாம் என தடுக்கப் பட்டதால் அதிர்ந்தாள். தான்-வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்தாள். வெகுண்டாள்.  

அம்பிகையின் கோபம் எல்லை மீறி வெளிப்பட்டு - சௌந்தர்யம் மறைந்தது.

உமையன்னை உக்ரகாளி ஆனாள். ஊழித் தீயாய் - சூறைக் காற்றாய் ஆனாள்.

அம்பிகையின் அதிபயங்கரத்தோற்றத்தினைக் கண்டு அஞ்சிய தேவர்களுக்கு அடைக்கலம் அருளிய ஐயன் புன்னகைத்தார். 

அம்பிகை எம்முடன் மாறுபட்டு நிற்கின்றனளே அன்றி வேறுபட்டு நிற்கின்றாளில்லை. அவளால் அழிய வேண்டிய அதர்மங்கள் இன்னும் இந்த அவனியில் மிஞ்சிக் கிடக்கின்றன. அம்பிகையின் இலக்கு தாருகன் வதம். அது நிறைவேறும் வேளையில் - ஆனந்தத் தாண்டவம் நிகழும்!..  - என அருளினார்.

காளி என கிளர்ந்தெழுந்த அம்பிகை ஈரேழு புவனங்களையும் - கோப அக்னி கொந்தளிக்க சுற்றி வந்தாள்.


வார்கொண்ட வனமுலையாள் - வஞ்சக தாரகனின் உயிரை அவிர் என உண்டு வக்ரம் ஆனாள். உக்ரம் ஆனாள். அடாதன செய்த அரக்கர்கள்  எவரும் தப்பி விடாதபடி துரத்திப் பிடித்து வதம் செய்தாள்.  கொடுவாள் சூலமொடு கதை எனும் ஆயுதங்களை - குருதிப் புனலில் நீராட்டிக்  களித்தாள்.

கோபம்  தணியாத சூறைக் காற்றென -  எங்கும் சுற்றிச்சுழன்ற  மாகாளி, அந்தத் தில்லை வனத்தினில்  திருவடி வைத்த வேளையில் - ஐயன் அருளியபடி அனுக்ரஹ நேரமும் நெருங்கியது.

ஈசன் உரைத்தபடி - திக்கெட்டும் தீமைகளை வென்றவளாய் - திகம்பரியாய் - அடர்ந்த தில்லை வனத்தினுள் - அம்பிகை வந்தமர்ந்த போது, அவளுடைய திருமேனியில் இருந்து வெளிப்பட்ட அக்னி ஜூவாலைகளால் - அந்த வனம் தகித்தது.

தொலை தூரத்தில் சலங்கைச் சத்தம்!..

அசுரர்களின் தலைகளைக் கோர்த்து மாலையாகப் போட்டுக் கொண்டிருந்த பத்ரகாளியின்  திருச்செவிகளில் எதிரொலித்தது.

ஆடல் வல்லான் ஆடுகின்றான் போலும்!..

வானலையில் - வாணியின் கச்சபி  தவழ்ந்தது. கூடவே நாரதரின் மகதி யாழும் இழைந்தது.  நாரணனின் முழவும் கேட்டது. நான்முகனின் ஜதியும் கேட்டது. நாதாந்த நட்டத்தில் - நந்தியின் சுத்த மத்தளமும் கேட்டது.

இன்றாவது வென்று விட வேண்டும்!.. 

சிவசக்தியே அனைத்திற்கும் ஆதாரம் என்பதை மறந்து - தானே அனைத்தினும் முதன்மை என்று தன்னைத் தயாபரனிடமிருந்து பிரித்துக் கொண்டிருந்த தயாபரி - கோபம் கொண்டு எழுந்தாள்.

எழுந்த அந்தக் கணமே - அம்பிகையின் முன்னால் ஆனந்த சிரிப்புடன் ஐயன்.

ஐயனின் ஆனந்த தாண்டவத்தினைக் கண்ட  காளி அதிர்ந்தாள்.  ஒரு கணம் காளி உட்பட, தேவாதி தேவர்களும்.தேவியர்களும், பிரம்மனும், விஷ்ணுவும், பிறரும் தங்களை மறந்து ஈசனோடு ஈசனாய் கலந்தனர்.

மறுகணம் ஐயனின் திருமேனியில் இருந்து மீண்டும் வெளிப்பட்டனர்.

ஈசனின் திருவிழிகள் அம்பிகையை நோக்கின. 

காளி தன்னை உணர்ந்தாள்.  தான் - ஈசனின் இடப்பாகம் என்பதை அந்தக் கணத்தில் உணர்ந்தாள். வெல்வது யார்!.. என்ற நிலையைத் தாண்டி, யாதுமாகி நின்ற - சிவசக்தி ஸ்வரூபத்தினை உணர்ந்தாள்.

ஐயனின் விழிகளில் பொங்கித் ததும்பிய அருள் வெள்ளத்தினைக் கண்டு அம்பிகை  சாந்தம் அடைந்தாள்.

தில்லை வனத்தினில் - ஆனந்தக் கூத்தினை நிகழ்த்தும் ஐயன் அன்று திரு ஆலங்காட்டினில் நிகழ்த்தியது அருள் கூத்து என்பதை உணர்ந்தாள்.

ஊர்த்துவமாக அண்ட பிரம்மாண்டங்களை - அன்று அளாவியதில் தன் பங்கினையும் உணர்ந்தாள்.


பொற்பதிக் கூத்து எனும் ஆனந்த நடனத்தில்  - சிருஷ்டி, ஸ்திதி , சம்ஹாரம், திரௌபவம், அநுக்ரகம் - என, வாம பாகத்தின் திருவடியை அல்லவா ஐயன் சுட்டிக் காட்டுகின்றார்!...

சோம சுந்தரனின்  - வாம சுந்தரி ஆகிய அம்பிகையின் நெஞ்சில் அன்பு சுரந்தது.
சிவகாம சுந்தரி என  சிவபெருமானின் இடப் பாகத்துடன் ஒன்றினாள்.

தில்லையம்பலம் எனும் பொன்னம்பலம் ஏகினாள்.

தில்லையின் எல்லையில் நின்றிருந்த காளியின் முன் நின்று - திசைக்கு ஒன்றெனத் திருமுகங்கொண்ட நான்முகன் வேதமந்திரம் கொண்டு வழிபட  - அம்பிகையிடம் இருந்த கோபம் தனியே பிரிந்தது.

ஸ்ரீதில்லைக் காளி
தில்லையின் எல்லையில் அமர்ந்தது. அம்பிகையின் ஆங்காரம் - தில்லைக் காளி என விளங்கட்டும் என வாழ்த்தப்பட்டது.

நான்கு வேதங்களால் உக்ரம் குறைந்த அம்பிகை - நான்கு திருமுகங்களுடன் பிரம்ம சாமுண்டி எனத் திருப்பெயர் கொண்டாள்.


பிரம்மனின் வழிபாட்டில் மனம் குளிர்ந்த அம்பிகை - சினம் தணிந்து உலக உயிர்களுக்கு அனுக்ரஹம் செய்தாள். 
 
இன்றும் இத்திருக்கோயிலினுள்  மென்மையாய் ஒரு அனல் நம்மை சூழ்ந்து கொள்வதை உணரலாம்.

தில்லைக் காளிக்கு நல்லெண்ணெய்யினால் மட்டுமே அபிஷேகம். வேறு அபிஷேகம் செய்தால் காளி குளிர்ந்து விடுவாளோ, அவள் குளிர்ந்தால் தீயவை பெருகி விடுமோ - என்று அஞ்சி - அக்காலத்திலிருந்தே வேறெந்த அபிஷேகமும் செய்வதில்லை.

அடைக்கலம் என்று  வருவோரை அரவணைத்து - ஆதரிக்கின்றாள். அவள் சந்நிதியில் நின்று வணங்க ஜன்ம ஜன்மங்களாய் தொடர்ந்து வரும் தீவினைகள் தொலைந்து போகின்றன.

தீய சக்திகளால் பாதிக்கப்பட்டோர் - இத்தலத்தில் காளியின் முன் திரு விளக்கேற்றி வைத்து வணங்க - தீவினைகள் தீய்ந்து போகின்றன.

இத்தகைய - சிறப்பு வாய்ந்த தில்லைக் காளியம்மன் திருக்கோயிலின் திருவிழா கடந்த வைகாசி ஐந்தாம் நாள் (மே/19) திங்கள் இரவு 10 மணிக்கு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

உற்சவ நாட்களில் தினமும் அம்பாள்  இனிதே திருவீதி எழுந்தருள்கின்றாள்.

தேர் கொண்ட தில்லைக் காளி
நாளை செவ்வாய்க்கிழமை (மே/27) தேர்த் திருவிழா.
மே/28  சிவப்பிரியை தீர்த்தத்தில் தீர்த்தவாரி - இரவு காப்பு களைதல்.

வியாழன்று (மே/29) மஞ்சள்நீர் விளையாட்டு, முத்துப்பல்லக்கு.

வெள்ளியன்று (மே/30) தெப்ப உற்சவம். சனிக்கிழமை (மே/31)  திருஊஞ்சல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகின்றது.

காளியை வழிபட பலவித விதிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. இருப்பினும், காளியின் அருள் பெற அவளது திருப்பெயரைச் சொன்னாலே போதும்.

அபிஷேக அர்ச்சனைகளால் அவள் மகிழ்ச்சியடைகிறாள். உள்ளன்புடன்  வழிபட்டால், காளியின் அருள் பெற்று சகல பாக்கியங்களையும் பெறலாம்.

குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே!.. (4/81) 


இனித்தமுடைய எடுத்தபொற் பாதம்!.. - என்றும், 
ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டதே!..  - என்றும் திருநாவுக்கரசர் கசிந்து உருகிக் குறிப்பது - அம்பிகையின் திருவடிகளையே!...

தில்லைக்காளி எப்போதும் வெண்பட்டு அணிந்து 
குங்குமக் காப்பினில் திகழ்கின்றாள்.

அவள் குங்குமமே  காப்பு!.. 
அவள் திருவடிகளே பாதுகாப்பு!..
ஓம் சக்தி ஓம்!..
* * *

வியாழன், மே 22, 2014

பால்குட திருவிழா

அக்னி நட்சத்திரம் முடிவடைந்ததும், ஆங்காங்கே - அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் மங்கலகரமாகத் தொடங்கியுள்ளன.
 
மக்களின் மனங்களுடன் சங்கமித்திருப்பவை - மாரியம்மன் கோயில்களும் காளியம்மன் கோயில்களும்!..


அத்தகைய  திருக்கோயிலின் திருவிழாவினை இன்று தரிசிப்போம்.


கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன்!..

- என்பது மாணிக்க வாசகப்பெருமானின் அருளுரை.

காளியோடு ஆடிய - நடனமே தில்லையில் நிகழ்த்தப்படுகின்றது- என்பது திருக்குறிப்பு.
 

சிவபெருமானுக்கும், அம்பிகைக்கும் ஏற்பட்ட  போட்டியில், பெருமானின் ஊர்த்துவ தாண்டவத்தை எதிர்கொள்ள முடியாமல் திகைத்து நின்றாள் - சக்தி.

தான் - வஞ்சிக்கப்பட்டதாக அதிர்ந்தாள். வெகுண்டாள்.  அம்பிகையின் கோபம் எல்லை மீறி - ஸ்ரீபத்ரகாளி என வெளிப்பட்டது.

இது நிகழ்ந்தது - திருஆலங்காடு எனும் திருத்தலத்தில்!.
ஈசன் - நடனமாடிய பஞ்ச சபைகளில் இது - ரத்னசபை.

ஒரு கட்டத்தில் - ஐயன் அம்பிகையை நெருங்கி சாந்தப்படுத்தினார். அந்த அளவில்  தில்லை வனமாகத் திகழ்ந்த தில்லைத் திருச்சிற்றம்பலம் எனும் சிதம்பரத்தின் வடதிசையின் எல்லையில்  அமர்ந்தாள்.

அம்பிகையின் கோபம் காளி என உருக்கொண்டு நின்ற போது நான்முகன் அவளை துதி செய்து வணங்கினார். பிரம்மனின் வழிபாட்டில் மனம் குளிர்ந்த அம்பிகை - சினம் தணிந்து உலக உயிர்களுக்கு அனுக்ரஹம் செய்தாள்.

பிரம்ம சாமுண்டீஸ்வரி என  - அங்கே கோயில் கொண்டாள். அதன் பின்,


தீவினைகளைத் தீர்க்க - திருஉளங்கொண்டு, ஊர்கள் தோறும் - பத்ரகாளி என எழுந்தருளினள் - அம்பிகை.  

அப்படி ஒரு நாள் - மழை பெய்த ஒரு மாலைப் பொழுதில் எம்மை ஆண்டு கொண்டவள் - அவளே!..

அன்று முதல் - அவளுக்குப் பிள்ளைகளாக இருந்த எங்களுக்கு, அவள் தானே - மகவாக ஆயினாள்.

அவ்வண்ணம் குடிகொண்டவள் -  ஸ்ரீவீரமாகாளி!..  தலம் - நாககுடி.

உக்ர ஸ்வரூபிணியான பத்ரகாளி. ஆயினும், அவள் - பொங்கிப் பெருகும் கருணை வெள்ளம். வற்றாது சுரக்கும் அன்பின் ஊற்று.

வலது திருக்கரத்தினில் சூலம். இடது திருக்கரத்தினில் கபாலம். மேல் திருக் கரங்களில் உடுக்கையும் நாகபாசமும். ஜடாமகுடத்தில் அக்னி ஜ்வாலைகள்.

மூலஸ்தானத்தின் வலப்புறம் ஸ்ரீவீரனார் ஸ்வாமியும் - இடப்புறம்  ஸ்ரீ கருப்ப ஸ்வாமியும் பரிவார மூர்த்திகள். கோயிலின் கிழக்குப் புறம்  - ஸ்ரீ வலம்புரி விநாயகர். அருகினில் வேம்பு நிழலில் - நாக ப்ரதிஷ்டையும் புற்றும்.

வடக்கு நோக்கிய திருமுக மண்டலம். திருக்கோயிலின் பின்புறம் பழவாறு எனப்படும் சிற்றோடை.

மூன்று புறமும் மயானங்கள் சூழ்ந்திருக்க - திரிகோண மத்ய ஸ்தானம் என   திருக்கோயில் கொண்டு அகமகிழ்வுடன் அருளாட்சி புரிகின்றனள்.

வருடாந்திர பால்குட திருவிழா - அக்னி நட்சத்திரம் முடிந்த - மறு வெள்ளிக் கிழமை தொடங்கி மூன்று நாட்கள் நிகழும். இதன்படி - 

வெள்ளிக்கிழமை (மே/23  -  வைகாசி/9) முதலாம் திருநாள். 

சுவாமிமலையில் - காவிரி வடகரையிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பெற்று அம்பிகைக்கு மங்கல நீராட்டு.

அம்பிகைக்கும் பரிவார மூர்த்திகளுக்கும்  கோயில் பிள்ளைகளுக்கும் காப்பு கட்டுதல் . 


முதலாம் திருநாள்
அன்று - முன்னிரவு நேரத்தில்,  கிராம தேவதா ப்ரீதியுடன் - பூத பலி.
அக்னி கொப்பரையும் கருப்ப ஸ்வாமியின் வேலும் உடன் வர -
சிம்ம வாகனத்தில் ஆரோகணித்தவளாய் - புஷ்ப ரதத்தில் - திருவீதியுலா.

விடியற்காலையில் உக்ரத்துடன் யதாஸ்தானம் திரும்பும் அன்னைக்கு, தயிர் பள்ளயம் நிவேதனம் செய்யப்படும்.

சனிக்கிழமை (மே/24  - வைகாசி/10) இரண்டாம் திருநாள்.  

இரண்டாம் திருநாள்

இரண்டாம் திருநாள் மகாதீபாராதனை
சனிக்கிழமை மாலையில் மகாஅபிஷேகமும் மகாதீபாராதனையும் நிகழும். அதன் பின் அன்னதானம்.

ஞாயிறு (மே/25-வைகாசி/11) மூன்றாம் திருநாள்.

காலையில், கிராம தேவதா ப்ரீதி. பிரத்யேக பூஜையுடன் அருள் வாக்கு பெற்று -  வெகு விமரிசையுடன் - பூங்கரகம் புறப்படும். 

நேர்ந்து கொண்டவர்கள் - மஞ்சளாடையுடன் பால் குடம் எடுப்பர்.

மூன்றாம் திருநாள்
அரிவாளின் மேல் ஸ்ரீகருப்பசாமியின் அருள்வாக்கு
இடது ஓரத்தில் என் மகன்

சக்தி கரகத்துடன் சகோதரர்
சீர்வரிசை தட்டுடன் என்மகள்


அன்பில் திகழும் அம்பிகைக்கு - இளங்கன்னியரும் பெண்களும் - சீர்வரிசை எடுத்து வீதிவலம் வந்து , பகல் உச்சிப் பொழுதில்  - 

ஸ்ரீ வீரமாகாளி அம்பிகையின் உளங்குளிர பாலாபிஷேகம் நிகழும். அதன்பின்
பட்டு வஸ்திரம் சாற்றி - மஹாதீபாராதனை. 

பக்தர்களுக்கு கற்பூர தரிசனம் ஆனதும் - கூழ் வார்த்தல், மாவிளக்கு, நீர்மோர், பானகம், துள்ளுமாவு வழங்குதல் என சிறப்பாக நிகழும். 

திருக்கோயில் திட்டத்துடன் உபயதாரர்களின் கைங்கர்யமும் உண்டு.

ஞாயிறு மாலை - அன்னைக்கு சந்தனக்காப்பு. பழவகைகளுடன் சித்ரான்ன நிவேத்யம். மகாதீபாராதனை. அதன்பின் அன்னதானம்.

பின்னிரவில் திருக்காப்பு கழற்றி,  செவ்வாய் அன்று பூங்கரகம் விசர்ஜனம். 

சுவாமிமலையிலிருந்து வடக்கே - 2 கி.மீ. தொலைவில் உள்ளது நாககுடி. ஊர் எல்லையில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோயில்.

கும்பகோணம் - திருவைகாவூர்  நகரப்பேருந்துகள் இவ்வூர் வழி செல்கின்றன.


இங்கே - பதிவில் உள்ள படங்கள் - கடந்த வருடம் சித்திரையில்  நிகழ்ந்த பாற்குட திருவிழாவின் போது எடுக்கப்பட்டவை.

ஸ்ரீவீரமாகாளி அம்பிகை என்னையும் - தன் பணிக்கு என ஆட்கொண்டவள். நெஞ்சில் நினைத்ததும் எதிர்நிற்பவள். அவளுடைய ஆலயத் திருப்பணியில் என்னையும் இணைத்து மகிழ்ந்தவள்.

அவளுக்குத் தீர்த்தக் கைங்கர்யம் செய்யும் பேற்றினையும், அபிஷேக அலங்காரம் செய்யும் மகாபாக்யத்தையும் அடியேனுக்கு வழங்கியவள்.

அன்னைக்கு அபிஷேகம் செய்யும் போது - ஏழு வயதுடைய குழந்தையை நீராட்டுவது போல இருக்கும்!.. அந்த அனுபவம் - விவரிக்க இயலாதது.

திருவிழா காலத்தில் - நான் கடல் கடந்து இருந்தாலும்
என் உள்ளம் அவள் காலடியில் கிடக்கின்றது.

நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வராகி சூலினி மாதங்கி என்றாய 
கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!..

ஓம் சக்தி ஓம்!..
* * *

செவ்வாய், மே 20, 2014

ஆயிரம் ஆயிரம்

ஆயிரம்!..

எண்ணளவில் ஆயிரத்துக்கு மேல் கோடி  - அதற்கு மேல் அற்புதம், கும்பம், பத்மம், சங்கம் - என வளர்ந்து வெள்ளம் என விரிந்து பிரம கற்பம் என நிறைவடைந்து நின்றாலும்,

ஆயிரம்  (சஹஸ்ரம்)  என்பதன் பெருமை  - பெருமையேதான்!..

ஆலயங்களில் நிகழ்த்தப்படும் சிறப்பு வழிபாடுகள் ஆயிரத்தின் அடிப்படையில் தான்!..

தெற்கே - தாமிரபரணிக்கரையில்,  ஆறுமுகமங்கலம் எனும் கிராமத்தில் - ஒரு மன்னன் ஆயிரத்தெட்டு அந்தணர்களுடன் மகா யாகம் செய்திட முனைந்த போது,  அங்கே கூடியோர் - ஆயிரத்து ஏழு பேர் மட்டுமே!..

ஆயிரத்தெண் விநாயகர் - உற்சவர்
மன்னனின் கவலையைப் போக்கிட - தானே வேதியராக வந்து யாகத்தினை சிறப்பாக நடத்தி - தன் முகம் காட்டி  அமர்ந்தவர்  - கரிமுக கணபதி!..

தமிழகத்தில் அபூர்வமாக சித்திரைத் தேரோட்டம் நிகழும்  திருக்கோயில் என ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் இன்றும் விளங்குகின்றார்.

கரும்பு ஆயிரங்கொண்ட விநாயகர் - என குடந்தையில் திகழ்கின்றார்.

சேலார்வயற் பொழில் செங்கோடனைக் கண்டு தொழ நாலாயிரங்கண் படைத்திலனே அந்த நான்முகன்.. - என்று வருந்துபவர் அருணகிரிநாதர்.

திருவேரகம் எனப்படும் சுவாமி மலையில் - வியாழக்கிழமை தோறும் - பேராயிரங்கள் உடைய தங்கப் பூமாலை சூடி அருள்கின்றான்  - சுவாமிநாதப் பெருமான்!..

திருப்பதியில்  - ஏழுமலையப்பனுக்கு சஹஸ்ர கலசாபிஷேகம்.

சபரிமலையில் ஐயப்பனுக்கும் சஹஸ்ர கலசாபிஷேகம் விசேஷமானது.

கார்த்திகை சோம வாரங்களில் - சிவபெருமானுக்கு ஆயிரத்தெட்டு (சஹஸ்ர) சங்காபிஷேகம் சிறப்பாக நிகழ்வுறும்.

அதிலும் சிறப்பாக சில ஆலயங்களில் அமைந்துள்ள சஹஸ்ர லிங்கத்திற்கு - ஒரு முறை அபிஷேகம் செய்து வழிபட்டால் - ஆயிரம் லிங்கங்களை வழிபட்ட பலன் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு!.. 

மோகத்தால் மூளை கெட்டு - அகலிகையைத் தீண்டி அவமானத்துக்கு ஆளான - இந்திரன் வழிபட்ட திருத்தலம் - கண்ணாயிரம் உடையார் திருக்கோயில்.


ஆயிரங்கண்ணுடையாள் - நினைத்தாலே இனிக்கும் திருப்பெயர். 

திருமலைராயன் பட்டினத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பேழையில் இருந்து எடுக்கப்பட்டு பூஜிக்கப்படுபவள் ஆயிரங்காளி எனப்படுகின்றாள். 

மூன்று நாட்கள் மட்டும் பூஜிக்கப்படும் அவளுக்கு நிவேதனங்கள் அனைத்தும் ஆயிரத்தின் கணக்கில் தான்!..

ஈசன் ஸ்ரீசரபேஸ்வரராகத் திருக்கோலம் கொண்ட போது அவருடைய சிறகினில் இருந்து ஆயிரம் திருமுகங்களுடன்  ஸ்ரீப்ரத்யங்கிரா தோன்றினாள்.

மேலும் - அம்பாளின் அருள் பெற்று உய்வதற்கு - ஸ்ரீ சஹஸ்ர சண்டி யாகம்!..

மகாமுனிவராகிய அகத்தியருக்கு - ஸ்ரீ ஹயக்ரீவர் - அருளி வழிகாட்டியது - ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்!..

ஆயிரம் - அதற்கு மேலும் இதழ்களைக் கொண்ட தாமரை மலரில் அமர்ந்திருப்பவள் அம்பிகை என்கின்றது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம். 

அதே போல வெகு சிறப்புடையது - ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம்!.. 

நமோ ஸ்த்வநந்தாய ஸஹஸ்ர மூர்த்தயே  
ஸஹஸ்ர பாதாக்ஷி ஸிரோரு பாஹவே 
ஸஹஸ்ர நாம்நே புருஷாய ஸாஸ்வதே 
ஸஹஸ்ர கோடி யுகதாரிணே நம:  
ஸஹஸ்ர கோடி யுகதாரிண ஓம் நம இதி!.. 

- என்பது ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பலசுருதி.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் -

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!.. (ஆறாம் திருமொழி)

என் கைத்தலம் பற்றிட - ஆயிரம் யானைகளுடன் - மைத்துனன் நம்பி மதுசூதனன் வருகின்றான்!.. - என, கனாக் காண்கின்றாள் - சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்.

கோதையைப் பாராட்டி சீராட்டி வளர்த்த பட்டர் பிரானாகிய பெரியாழ்வார் - தன்னோராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான் - கண்ணன்!.. -  (3/1/1) என்று கசிகின்றார்.


ஆயிரம் தோள்பரப்பி முடிஆயிரம் மின்னிலங்க
ஆயிரம் பைந்தலைய அனந்தசயனன் ஆளும்மலை
ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பலஆயிரமும்
ஆயிரம் பூம்பொழிலும்உடை மாலிருஞ்சோலையதே!.. (358)

- என்று, கள்ளழகர் உறையும் மாலிருஞ்சோலையைக் கண்ணாரக் கண்டு பெருமைப்படுபவர் - பெரியாழ்வார் (4/மூன்றாம்திருமொழி).

பேராயிரமுடைய பேராளன் பேராளன் என்கின்றாளால்
ஏரார் கனமகர குண்டலத்தன் எண்தோளன் என்கின்றாளால்
நீரார் மழைமுகிலே நீள்வரையே ஒக்குமால் என்கின்றாளால்
காரார் வயலமரும் கண்ணபுரத் தம்மானைக் கண்டால் கொல்லோ!..

- கண்ணபுரத்துக் கருமணியைக் காணும் போது - பேராயிரமுடைய பேராளன் என்றே - திருமங்கை ஆழ்வார் (8/1/6) உருகுகின்றார்.

ஓராயிர மாய்உல கேழளிக்கும்
பேராயிரங் கொண்டதோர் பீடுடையன்
காராயின காளநன் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரானிவனே!..

- என்று நம்மாழ்வார் (9/3/1) போற்றுகின்றார்.

தேவாரத் திருமுறைகளில் -

பரவு வாரையும் உடையார் பழித்து இகழ் வாரையும் உடையார்
விரவு வாரையும் உடையார் வெண்தலைப் பலிகொள்வ துடையார்
அரவம் பூண்பதும் உடையார் ஆயிரம் பேர்மிக வுடையார்
வரமும் ஆயிரம் உடையார் வாழ்கொளி புத்தூர் உளாரே!. (2/94)

- எனப் புகழ்கின்றார் - திருஞானசம்பந்தப்பெருமான்.

ஆயிரந் தாமரை போலும் ஆயிரஞ் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரந் தோளுடை யானும்
ஆயிர ஞாயிறு போலும் ஆயிர நீண்முடி யானும்
ஆயிரம் பேருகந் தானும் ஆரூர் அமர்ந்தஅம் மானே!.. (4/4)

- என்று இறைவனின் திருத்தோற்றத்தை வர்ணிக்கும் அப்பர் சுவாமிகள்,


வண்டோங்கு செங்கமலங் கழுநீர் மல்கும்
மதமத்தஞ் சேர்சடைமேல் மதியஞ் சூடித்
திண்தோள்கள் ஆயிரமும் வீசி நின்று
திசைசேர நடமாடிச் சிவலோகனார்!.. (6/45)

- என்று ஈசன் ஆயிரந் தோள்களுடன் நடமாடுவதைக் காட்டுகின்றார்.

பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் பெம்மானைப் 
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே!.. (6/54)

- என உருகும் வேளையில், 

நிலை தளர ஆயிரமா முகத்தினோடு  
பாய்ந்தொருத்தி படர் சடைமேற் பயிலக் கண்டு 
பட அரவும் பனிமதியும் வைத்த செல்வர்..(6/93) 

- பகீரதனின் பொருட்டு வானிலிருந்து ஆயிரம் முகங்களோடு - பூமியை நோக்கிப் பாய்ந்தனள் கங்கை - என்பதையும் திருநாவுக்கரசர் பதிகத்தில் குறித்தருள்கின்றார்.

திகழும் மாலவன் ஆயிர மலரால்
ஏத்து வான்ஒரு நீள்மலர் குறையப்
புகழி னால்அவன் கண்ணிடந் திடலும்
புரிந்து சக்கரங் கொடுத்தல்கண் டடியேன்.. (7/66) 

- என்று திருமால் தினமும் ஆயிரம் மலர் கொண்டு ஈசனை வழிபட்டதைக் கூறுகின்றார் - சுந்தரர்

ஆரா அமுதே அருளே போற்றி..
பேராயிரம் உடைய பெம்மான் போற்றி!.. 

- என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் போற்றுகின்றார்.


மூலாதாரத்தில் இருந்து மேலெழும்பும் குண்டலினி - மணிபூரகம், ஸ்வாதிஷ்டானம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞா எனும் சக்கரங்களைக் கடந்து சென்று சேரும் இடம் - சஹஸ்ர தளபத்மம் எனவும் சஹஸ்ராரம் எனவும் வழங்கப்படும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை

ஆயிரம் பிறை கண்டவர் - என்பது சதாபிஷேகம் காணும் பெரியோர்களுக்கு வழங்கப் பெறும் சிறப்பு மொழி. 

எண்பது வருடங்களும் எட்டு மாதங்களும் நிறையப் பெற்றவரே ஆயிரம் பிறை கண்டவர். பிறை எனக் குறிக்கப்படுவது முழு நிலவு.  

எனில், ஆயிரம் பிறை என்பதற்கான கணக்கு :-

சாதாரணமாக வருடத்தில் பன்னிரண்டு சந்திர தரிசனம். (80 x 12 = 960). 
ஒவ்வொரு ஐந்து வருடங்களிலும் கூடுதலாக இரு பௌர்ணமிகள் நிகழும். இதன்படி 80 வருடங்களில் 16 x 2 = 32 கூடுதல். மேலும் - 8 மாதங்களுக்கு எட்டு பௌர்ணமிகள். 

ஆககூடுதல் - ஆயிரம் சந்திர தரிசனம். 

நாம் நம் கண்களால் ஆயிரம் முழு நிலவைப் பார்த்திருக்க இயலாது. 
எனினும் சந்திரன் நம்மைப் பார்த்திருக்கின்றான் என்பதே உண்மை!.. 

மகாகவி பாரதியாரும் -  சுதந்திர வேட்கையில்,

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் 
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?.. - என்று உருகுகின்றார்.

ஆயிரம் உண்டு இங்கு சாதி - எனில் 
அந்நியர் வந்து புகல் என்ன நீதி?.. - எனக் கொதிக்கின்றார். 

இப்படியெல்லாம் ஆயிரம் பெருமைகளைக் கொண்ட ஆயிரம் - தமிழ்த் திரைப் படங்களிலும் - தனிப்புகழ் கொண்ட பாடல்களில் கலந்து நின்றது. 

இருப்பினும் - 

இன்று நம் கைகளில் புழங்கிக் கொண்டிருக்கும் ஆயிரம் ரூபாய் எப்படி!?.. 

கள்ள நோட்டுகளும் உலாவிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் - ஓரளவுக்கு உற்று நோக்கியும் தடவிப் பார்த்தும்  கண்டறிந்து கொள்ளலாம்.

ரூபாய்த் தாளின் முன்புறமும் பின்புறமும் -  

ஊடுருவிப் பார்க்கக் கூடிய சித்திரங்கள், நீரோட்ட அச்சு, பச்சை நீலம் என இருவிதமாகப் புலப்படும்  எழுத்துக்கள், ஒளிரும் எழுத்துக்கள், பாதுகாப்பு நூல், இண்டாக்ளியோ எனும் தடித்த அச்சு, மறைந்திருக்கும் எழுத்துக்கள், 


பூதக்கண்ணாடியினால் மட்டுமே பார்க்கக் கூடிய எழுத்துக்கள், தொட்டு உணரக் கூடிய தடித்த குறியீடு, ரூபாய் அச்சடிக்கப்பட்ட வருடம், முன்னும் பின்னும் பொருந்தும் ஒளிச் சித்திரம் 

- என பதினோரு பாதுகாப்பு அம்சங்களுடன்,  புதிய 1000, 500 - ரூபாய் தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

மேலும் விவரங்களை கீழே உள்ள இணைப்பில் காணலாம்!..
http://www.paisaboltahai.rbi.org.in/index.htm?page=home

* * *
கள்ளநோட்டு எனத் தெரிந்த பிறகு அதை மாற்றுதற்கு முயற்சிக்க வேண்டாம்.

தெரிந்தோ தெரியாமலோ நம்மிடம் கள்ள நோட்டு வந்து சேர்ந்து விட்டால் - அதை வைத்திருப்பது மிகவும் ஆபத்து. கள்ள நோட்டு கையில் இருந்தாலே கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலையில், 

எங்கிருந்து வந்தது?. கொடுத்தவர் யார்?. - 
என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்காமல் - 
நம்மைக் காப்பாற்றிக் கொள்வது நம் பொறுப்பு!..
வாழ்க வையகம்!.. வாழ்க வளமுடன்!..
* * *