நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 26, 2015

நாட்டியாஞ்சலி 2015

மகா சிவராத்திரி விழாவையொட்டி, 17/2 செவ்வாய்க் கிழமை தஞ்சை பெரிய கோயிலில் தொடங்கிய பிரகன் நாட்டியாஞ்சலி விழா கடந்த 23/2 திங்களன்று நிறைவு பெற்றது.


பிரகன் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை, தென்னகப் பண்பாட்டு மையம், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் - ஆகியவை சார்பில் நடைபெற்ற
இந்த விழா, செவ்வாய் - அன்று மாலை  மங்கல இசையுடன் தொடங்கியது.


தொடர்ந்து -

சென்னை மயூரி நடனாலயா, ஸ்ரீதேவி நடனாலயா, பெங்களூரு நடன கலா கிராமம், தானே நித்திய கலா நிகிதன், சென்னை அக்ஷயா ஆர்ட்ஸ் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அஞ்சனா குப்தா குழுவினர் உள்பட மொத்தம் 15 குழுவினர் தமது நடன நிகழ்ச்சிகளை புதன்கிழமை அதிகாலை வரை நிகழ்த்தினர்.
17/2 செவ்வாய்







அதன் பின் - இந்த விழா தொடர்ந்து பிப்ரவரி 23-ம் தேதி வரை நாள்தோறும் மாலை 6.15 மணி முதல் இரவு 9.15 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.

பிரஜன் நாட்டியாஞ்சலியில் அறுநூற்றுக்கும் அதிகமான நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர்.

நிகழ்வுகளில் கதக், மோகினி ஆட்டம், ஒடிசி, குச்சிப்புடி, ஷத்ரியா - ஆகிய நடனங்கள் இடம்பெற்றன.
18/2 புதன்




19/8 வியாழன்





20/2 வியாழன்






21/2 வெள்ளி












ஏழு நாட்கள் நடைபெற்ற பிரகன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் -

தஞ்சாவூர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள நாட்டியப் பள்ளி மாணவ - மாணவியர் - நடனக் கலைஞர்கள் பங்கு பெற்றனர்.
மேலும் -

புதுதில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, குவாஹாத்தி, புவனேஸ்வர் - என நாட்டின் பிறபகுதிகளிலிருந்தும்,
மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா - என கடல் கடந்த நாடுகளிலிருந்தும்

- புகழ் பெற்ற நடனக் கலைஞர்களும் பங்கேற்றனர். 

அழகிய படங்களை FB-ல் வழங்கிய -
அன்பின் குணா அமுதன் அவர்களுக்கும் 
அன்பின் H. முகம்மது ஜாவீத் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!..

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை
தில்லையுள் கூத்தனை தென்பாண்டி நாட்டானை
தென்னாடுடைய சிவனை
எந்நாட்டவர்க்கும் இறைவனை

பாட்டும் பரதமுமாகப் பரவித் தொழுது
கண் களிக்கச் செய்த அனைவரும்
நல்லருள் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்களாக!..  

பத்தனாய் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ
எத்தினாற் பத்திசெய்கேன் என்னைநீ இகழவேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடுகின்ற
அத்தாஉன் ஆடல்காண்பான் அடியனேன் வந்தவாறே!.. (4/23)
-: அப்பர் பெருமான் :-

சிவாய திருச்சிற்றம்பலம்.
* * *

புதன், பிப்ரவரி 25, 2015

குவைத்

வளைகுடா நாடுகளுள் ஒன்றான குவைத் - மிகச் சிறிய நாடு.

எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு நாடுகளுள் எண்ணெய் வளத்தை 
ஆதாரமாகக் கொண்ட செல்வச் செழிப்பான நாடு.

இன்று 25/2 - தேசிய தினத்தையும் (National Day)
நாளை 26/2 ஈராக்கின் பிடியிலிருந்து 
தன்னாட்சியுரிமை ( Liberation Day ) 
பெற்ற நாளையும் கொண்டாடுகின்றது. 


இதன் தெற்கில் சவூதி அரேபியாவும் வடக்கிலும் மேற்கிலும் ஈராக்கும் கிழக்கில் அரபு வளைகுடாவும்  - எல்லைகளாக அமைந்துள்ளன.

குவைத் சிட்டி
குவைத் நகரம் - நாட்டின் தலைநகரமாகும்.

அரபு வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள குவைத் நகரிலேயே பாராளுமன்றமும் பெரும்பாலான அரசு அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களின் தலைமையகங்களும் அமைந்துள்ளன.


மேலும், மத்திய கிழக்கு நாடுகளின் கலாச்சார, பொருளாதார மையமாகவும்  குவைத் திகழ்கின்றது. 

நிறைய உயர் கல்விக் கூடங்கள் விளங்குகின்றன. 

2007- ல் இந்நாட்டின் மக்கள்தொகை 3.5 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இவர்களில் ஏறத்தாழ 2 மில்லியன் பேர் வெளிநாட்டினர்.

இஸ்லாம் தேசிய மதம். 

இந்நாட்டின்  குடிமக்கள், 75 - 80 சதவிகிதத்தினர் சன்னி பிரிவினர்.
மற்றையோர் ஷியா பிரிவினர்.

Kuwait Towers
இந்நாட்டில் வசிக்கும்  வெளிநாட்டினரில்,  கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை 3 - 4 லட்சம். 

இந்துக்கள் எண்ணிக்கை 3 லட்சம். பெளத்தர்கள் ஒருலட்சம் பேர். 
சீக்கியர்கள் பத்தாயிரம் பேர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 

  
மற்ற மதத்தினர் அவரவர் மத வழக்கங்களைப் பின்பற்றவும் திருமணம் முதலான நிகழ்வுகளை நடத்தவும் அனுமதியுண்டு.

ஈத்-உல்-ஃபிதர் எனும் ரமலான் (நோன்புப் பெருநாள்) ஈத்-உல்-அத்ஹா எனும்  பக்ரீத் (தியாகப் பெருநாள்) ஆகியன பெருஞ்சிறப்புடன் அனுசரிக்கப்படுபவை.

அப்படி இப்படி என்று - குறிப்பாக சில தனியார் நிறுவனங்கள் - தொழிலாளர்களை நடத்துவதில் குற்றம் குறைகள் இருக்கின்றன. 

இருந்தாலும் - சில விஷயங்களில் பாராட்டத்தக்க செயல்பாடுகள் நிறையவே உள்ளன.

பாலைவன நாடாகிய குவைத்தில் அரிய பொருள் - தண்ணீர்.

அதை - கடைக்கோடி குடிமகனுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் வழங்குகின்றது குவைத்.

உணவுப் பொருட்களைக் கையாள்வதில் - எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி கடுமையான ஒழுங்கமைப்புகளுடன் - சுத்தம் சுகாதாரம் பேணப்படுகின்றது.

உணவு சம்பந்தப்பட்ட தொழிலாளர் அனைவருக்கும் - வருடாந்திர மருத்துவப் பரிசோதனைகள் உண்டு. அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.

முடி திருத்துவோர், அழகு நிலைய பணியாளர், சலவைத் தொழிலாளர், மளிகைக் கடை நடத்துவோர் - என அனைவருக்கும் வருடாந்திர மருத்துவப் பரிசோதனைகள் உண்டு.

இந்த விஷயங்களை நம் நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஏக்கப் பெருமூச்சு தான் மிச்சம்!..

பிரிட்டிஷ் அரசு நம்மை ஆட்சி செய்ததில் இருந்தே - இந்திய நாணயங்கள் இங்கே புழக்கத்தில் இருந்துள்ளன. அந்த நாணயங்கள் இங்கே அரும்பொருள் காட்சியகத்தில் காணக் கிடைக்கின்றன.

பாரதம் சுதந்திரம் அடைந்த பின்னரும் இந்திய காசும் பணமும் குவைத்தில் புழக்கத்தில் இருந்துள்ளன. 

குவைத்தில் புழங்கிய இந்திய நாணயங்கள்
1961-ல் தனக்குத் தனியாக நாணயங்கள் தேவை என குவைத் அரசு முடிவு எடுத்ததன் பிறகு - இங்கிருந்து இந்திய காசும் பணமும் விலக்கிக் கொள்ளப் பட்டதாக அறியமுடிகின்றது.

இந்த முடிவு 1961 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட பிறகு - அடுத்து வந்த இரண்டு மாதங்களில் குவைத் நாட்டில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்ட இந்திய நாணயத்தின் மதிப்பு - 342 மில்லியன் IRs.






ஐம்பது ஆண்டுகளுக்கு முன் - 
இந்தியாவிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்ட கோதுமை அரைக்கும் திருகை இயந்திரங்கள், ஜாடிகள், ஜாதிக்காய் மரப் பெட்டிகள், அஞ்சறைப் பெட்டிகள், சல்லடைகள் - என ஏகப்பட்ட பொருட்களை அருங்காட்சியகத்தில் காணலாம்.

இன்னும் கூட, அறுபது - எழுபது வயதைக் கடந்தவர்கள் - பாசத்துடனும் நேசத்துடனும் இந்தியாவை நினைவு கூர்கின்றனர்.

ஆனால் - இன்றைய இளந்தலைமுறையினருக்கு - நம்மவர்கள் எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும் -  அவர்களை அங்கீகரிப்பதற்கு தயக்கமும் மயக்கமும் இருக்கின்றது.

நம்மை அவர்கள் ஏளனமாகப் பார்ப்பதற்கு முக்கிய காரணம் - 
நம்முடைய அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சமும் ஊழலும், நிர்வாக சீர்கேடுகளும்!..

ஒருகாலத்தில் இந்தியாவின் உதவியை,  குவைத் மட்டுமல்ல -
அனைத்து அரபு நாடுகளுமே எதிர் நோக்கி இருந்தன..

ஆனால், இன்றைக்கு!?.. நீங்களே அறிவீர்கள்..

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?..
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?..

- என்று காது கிழிபட அறைந்தாலும் - திண்ணையில் கிடக்கும் கிழவன் கூட,

எங்காவது வெளிநாட்டுக்கு ஓடிப் போய் விடலாமா!.. 

- என்று ஏங்கும் வண்ணம் செய்வதிலேயே நமது அரசும் அரசு அலுவலர்களும் குறியாக இருக்கின்றார்கள்.

கைக்கு எட்டிய வேலை - 1972/73-ல் கையூட்டு கொடுக்க இயலாததால் கை நழுவிப் போனது.

திரும்பவும், 1980/81-ல் வழுக்கு மரத்தில் போராடி ஏறிய வேளையில் -  நிர்வாக சீர்திருத்தம் என்ற பேரில் - காலைப் பிடித்து இழுத்து விட்டார்கள்..

TNPSC - தேர்வுகள் எழுதி தேறிய பின்னரும் - 
மீண்டும் ஏற்றிவிட கேட்கப்பட்டது - கையூட்டு..

உன் பொங்கலும் வேண்டாம்!.. பூசாரித்தனமும் வேண்டாம்!.. - என்று பிழைக்க வழி தேடி - திசை மாறிய பறவையைப் போல் ஆனது வாழ்க்கை!.

அதன் பிறகுதான் - மலையும் கிணறும் காணாமல் போயின!..



எது எப்படியோ - நமக்கும் நம்மைப் போன்ற பலருக்கும் சோறும் தண்ணீரும் வெளிநாட்டில் என்றான பிறகு பழையனவற்றைக் கிளறுவதால் ஆகப் போவது யாதொன்றும் இல்லை.



வெளிநாட்டு வாழ்க்கை வரமா.. சாபமா.. தெரியவில்லை!..
எனது இன்ப துன்பங்களில் இணைந்து நிற்கின்றது குவைத்!.. 

இன்று 25/2 தேசிய தினத்தையும் (National Day)
நாளை 26/2 தன்னாட்சியுரிமை நாளையும் ( Liberation Day ) 
கொண்டாடும் குவைத் வாழ்க!...


வாழும் மண்ணிற்கு நல்வாழ்த்துக்கள்!..
* * * 

திங்கள், பிப்ரவரி 23, 2015

ஒற்றியூர் குடமுழுக்கு

திருஒற்றியூர்.

எல்லாம் வல்ல ஈசன் ஸ்ரீமாணிக்கத் தியாகேசனாக விளங்கும் திருத்தலம்.

இறைவனுக்கு - புற்றிடங்கொண்டார் என்பதும் திருப்பெயர்.


புற்று வடிவாகிய சிவலிங்கத் திருமேனி.

சுயம்பு மூர்த்தி.

சிவலிங்கமும் ஆவுடையாரும் சதுர வடிவில் அமைந்துள்ளன.
பெட்டி போன்ற சதுர வடிவ கவசம் ஸ்வாமிக்குச் சார்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதப் பௌர்ணமி அன்று - இக்கவசம் அகற்றப்பட்டு - புனுகு, ஜவ்வாது, சாம்பிராணித் தைலம் பூசப்படும்.

பௌர்ணமி முதல் - மூன்று நாட்களுக்கு மட்டுமே - கவசம் இல்லாமல் ஸ்வாமியை தரிசிக்க இயலும்.

அதன்பின் மீண்டும் கவசம் அணிவிக்கப்பட்டு - ஆண்டு முழுதும் ஸ்வாமி கவசத்துடனேயே தரிசனம் அளிக்கின்றார்.

அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே நடைபெறுகின்றது.

மாணிக்கத்தை முன் வைத்து - வாசுகி சிவபூஜை செய்த திருத்தலம்.

வாசுகியை - தன் மேனியுடன் இணைத்துக் கொண்டதால் - படம்பக்க நாதர் எனவும் திருப்பெயர்.

கருவறை - கஜபிருஷ்ட அமைப்பு.

இத்திருத்தலத்தில் நின்று தொழுவோர் - இதய நோய்களில் இருந்து விடுபடுவர் என்பது ஐதீகம்.

தலவிருட்சம் - மகிழ மரம். தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்.

ஆலயத்தில் திருவிளக்கு ஏற்றுவதையே திருப்பணியாகக் கொண்டவர் - கலியன்.

அந்த நற்காரியத்திற்கு - வறுமையால் தடை ஏற்பட்டபோது, தன்னையே மாய்த்துக் கொள்ளத் துணிந்தார்.

இச்சம்பவம் நிகழ்ந்தது - திருஒற்றியூரில்!..

அவரது அன்பினுக்காக மீண்டும் பொன்னும் பொருளும் என - இறைவன் வாரி வழங்கி வறுமையை நீக்கியதாக வரலாறு.

திருவிளக்கேற்றிய கல்லியன் - கலிய நாயனார் என புகழப்பட்டார்.

சுந்தரர் - பரவை நாச்சியார் திருமணம் நிகழ்ந்த திருத்தலம் இதுவே!..

மகிழ மரத்தின் கீழ் செய்து கொடுத்த உறுதிமொழியை மீறி - இங்கிருந்து திருஆரூருக்குப் புறப்பட்டதால் - சுந்தரர் இருவிழிகளிலும் பார்வை இழந்தார்.

முற்றும் துறந்த பட்டினத்தடிகளின் கையிலிருந்த பேய்க்கரும்பு இங்குதான் இனித்தது.

பட்டினத்தார் முக்தி எய்திய திருத்தலம் - திருஒற்றியூர்.

ஸ்ரீ மாணிக்கத் தியாகேசர்
அம்பிகை - ஸ்ரீ வடிவுடை நாயகி.

எண்ணிலாப் புகழ் கொண்டவள்.

வள்ளலார் ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகளுக்கு - அவர் தம் அண்ணியார் வடிவில் வந்து அடிக்கடி அன்னம் பாலித்து ஆதரித்தவள் - இவளே!..

தாயேமிக வும்தயவுடை யாள்எனச் சாற்றுவர்இச்
சேயேன் படுந்துயர் நீக்கஎன் னேஉளம் செய்திலையே
நாயேன் பிழைஇனி நாடாது நல்லருள் நல்கவரு
வாயேஎம் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே!.. (80)

வடிவுடை மாணிக்க மாலை என நூற்றிரண்டு பாடல்களைக் கொண்டு,
அன்னம் பாலித்த அம்பிகையைப் பாடித் தொழுதார் வள்ளலார் ஸ்வாமிகள்.

அப்பர், ஞான சம்பந்தர், சுந்தரர் - என அருளாளர் மூவரும் திருப்பதிகம் பாடிப் பரவிய திருத்தலம்.

தேவாரத் திருப்பதிகம் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தலங்கள் - 32.

இவற்றுள் - சென்னை எனும் பெருநகரப் பரப்பினுள் அமைந்திருப்பவை - ஆறு.

அவை - திருஒற்றியூர், திருவலிதாயம், திருவேற்காடு, திருமுல்லைவாயில், திருமயிலை, திருவான்மியூர் - என்பன.

கடற்கரையில் அமையப்பெற்ற திருத்தலங்களுள் திருஒற்றியூரும் ஒன்று.

ஸ்வாமிக்கும் அம்பிகைக்கும் இரண்டு மூலத்தானங்கள் விளங்குகின்றன.

திருக்கோயிலில் வட்டப்பாறை அம்மன் சந்நிதி மிகவும் சிறப்புடையது.

எண்ணரிய சிறப்புகளுடன் விளங்கும் திருஒற்றியூர் திருக்கோயிலின் மகாகும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

60 குண்டங்கள், 36 வேதிகைகள் அமைக்கப் பெற்று - யாக சாலை வேள்விகள் கடந்த வெள்ளியன்று தொடங்கின.

ஞாயிறு காலையில் திருக்குடமுழுக்கு நடைபெற்றது.

305 விக்ரக பீடங்களில் அஷ்ட பந்தனமும் ஸ்ரீ வடிவுடைய அம்பிகையின் பீடத்தில் ஸ்வர்ண பந்தனமும் சார்த்தப்பட்டது.

நான்காம் கால யாக சாலை பூஜைகள் ஞாயிறு அதிகாலை நான்கு மணிக்குத் தொடங்கி - காலையில் பூர்ணாஹுதி மகாதீபாராதனை நடந்தது.

அதன்பின் - யாகசாலையிலிருந்து 420 புனித நீர்க்கலசங்கள் புறப்பட்டன.

அறுபது சிவாச்சார்யர்கள் பங்கேற்று - வேத, தேவார திருவாசக திருமுறை பாராயணங்களுடன் கருவறை விமான மற்றும் ராஜ கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு வைபவத்தினை சிறப்பாக நடாத்தியிருக்கின்றனர்.

ஞாயிறு (22/2) காலை 7.32 மணியளவில் -
இருநூறு சங்குகள் முழங்க திருக்குடமுழுக்கு நடைபெற்றது. 

லட்சக்கணக்கான இறையன்பர்கள் - கண்டு கை தொழுது சிவதரிசனம் பெற்று மகிழ்ந்திருக்கின்றனர்.

அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேக காட்சிகள் - Fb-ல் கிடைக்கப் பெற்றவை.

பிரதோஷ வழிபாட்டுக் குழுவினர் வழங்கிய படங்களை - தளத்தில் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.



















வைபவத்தின் வண்ணமிகு படங்களை வலையேற்றிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

பந்துங் கிளியும் பயிலும் பாவை
சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர்
எந்தம் அடிகள் இறைவர்க் கிடம்போல்
உந்துந் திரைவாய் ஒற்றியூரே!.. (7/91)
சுந்தரர்.

விளிதரு நீருமண்ணும் விசும்போடனல் காலுமாகி
அளிதரு பேரருளான் அரனாகிய ஆதி மூர்த்தி
களிதரு வண்டுபண்செய் கமழ்கொன்றையி னோடணிந்த
ஒளிதரு வெண்பிறையான் உறையும்மிடம் ஒற்றியூரே!.. (3/57)
ஞான சம்பந்தர்.

அப்பர் பெருமான் திருமயிலையில் சிவதரிசனம் செய்தபோது -

அவருக்கு - தம்பதியராக எதிர் வந்து தரிசனம் நல்கினார் சிவபெருமான்!..

ஆடல் பாடலோடு ஆனந்தமாக வந்த - அத் தம்பதியினரைப் பார்த்து,

''..ஊர் எதுவோ.. கூறும்!..'' - என்று அப்பர் சுவாமிகள் வினவினார்.

''..ஒத்தமைந்த உத்திர நாள் தீர்த்தமாக ஒளிதிகழும் ஒற்றியூர்!..'' - என விடை கூறி தன்னுரு கரந்தனன் எம்பெருமான்.

அதன்பின் - அப்பர் சுவாமிகள் திருஒற்றியூருக்கு வந்து சிவதரிசனம் செய்து இன்புற்றனர்.

இதனை, அப்பர் சுவாமிகள் - தமது திருப்பதிகத்தில் (6/45) கூறி மகிழ்கின்றார்.

ஸ்ரீ வடிவுடை நாயகியும் வள்ளல் மாணிக்கத் தியாகேசரும்
நிறை மங்கலங்களைத் தந்தருள்வாராக!..

மனமெனுந் தோணிபற்றி மதியெனும் கோலையூன்றிச்
சினமெனுஞ் சரக்கை ஏற்றிச் செறிகட லோடும்போது
மதனெனும் பாறைதாக்கி மறியும்போது அறியஒண்ணா
உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூருடைய கோவே!.. (4/46)
அப்பர் பெருமான்.

சிவாய திருச்சிற்றம்பலம் 
* * *