நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, பிப்ரவரி 15, 2015

சிவ தரிசனம் - 03

திரண்டு வந்தது - எது!?..

மறுபடியும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்தனர்.

நேரம் ஆக ஆக - தேவர்களும் அசுரர்களும் விறுவிறுப்பாக - இப்படியும் அப்படியுமாக பாவப்பட்ட வாசுகியை  சுற்றிப் பிடித்து இழுக்க,


மலையின் கீழ் அச்சாக - அச்சுதன் பொருந்தி இருந்த சூட்சுமத்தில் மந்தர மலை படுவேகமாகச் சுழன்றது.

அலைகடலின் அடியில் காலகாலமாகப் படிந்து கிடந்த தொல்பொருட்கள் எல்லாம் மேலே வருவதும் கீழே போவதுமாக -

பாற்கடல் - தயிர்க் கடலாகிக் கொண்டிருந்தது.

ஆனால் - ஆதரவற்ற வாசுகியோ நொந்து நூலாகிப் போனது.

''..என்ன இது?.. கொஞ்சங்கூட ஈவு இரக்கம் இல்லாமல் இரண்டு பக்கமும்  இப்படிப் பிடித்து இழுக்கின்றீர்களே!.. கொஞ்சநேரம் ஓய்வு கொடுங்கப்பா!..''

- என்று,  தனக்குத்தானே இரக்கப்பட்டுக் கொண்டது.


மூளை  கலங்கிய - தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் வாசுகியின் வேதனை புரியவே இல்லை.

அவர்களுடைய ஒரே நோக்கம் - ஒன்று அமுதம் கிடைக்கவேண்டும்!...

இல்லையேல் மந்தரமலை தூளாக வேண்டும்... அதுவும் இல்லையென்றால் வந்த வரைக்கும் லாபம் என்று வாசுகி ஆளுக்கு ஒருபாதியாக வேண்டும்.

என்ன கொடுமை இது.. சரவணா!...

இவர்கள் விருப்பத்திற்கு எதையாவது  செய்வார்களாம்! அதற்கு அடுத்தவர்கள் கிடந்து அல்லற்படவேண்டுமாம்!..

திருப்பாற்கடலில்  - உறங்காமல் உறங்கிக் கிடக்கும் அழகனிடம் அமுதம் வேண்டும் என்று கேட்டிருக்கலாம்!.. அல்லது,

''தானே தவமாய் வீற்றிருக்கும் தவமே!. எங்கள் சிவமே!.'' என்று திருக்கயிலை அடிவாரத்தில் நின்று - மனதார நினைத்திருந்தாலும் -

மலை மேலிருந்து ஆனந்தம் மழையாய்ப் பொழிந்து - அமுத வெள்ளமாய் , அமுதக் கடலாய் - இந்நேரம் நிறைந்திருக்கும்!..

பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்த பிரான் அல்லவா -  எம்பெருமான்!..

என்ன செய்வது!.. விதி ஓடியாடி விளையாடும் போது அதன் குறுக்கே யார் தான் போகமுடியும்!..


கவனிங்க.. கவனிங்க!..  ''..தளுக்..முளுக்!..'' என்று ஏதோ சத்தம்.. கேட்கிறதா!..

கடலைக்  கடைகின்ற பேரிரைச்சலிலும்,  நன்றாகத் தெளிவாகக் கேட்கிறது.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கூட கேட்டது. அவ்வளவுதான் ... பெருத்த உற்சாகத்துடன் இன்னும் வேகமாக இழுத்தனர்...

இன்னும் நாலே நாலு இழுப்பு...

''...மாப்ளே!.. அமுதம் பொங்கிடுச்சுடா!..'' - எங்கிருந்தோ கூச்சல்.

யார்டா அது!?.. இப்படிச் சத்தம் போட்டது?. பங்காளிப் பிரச்னைக்குள்ளே - மாமன் மச்சான் மாப்பிள்ளை எங்கேயிருந்தடா வந்தான்!?..

பெருங்கூட்டத்தில் யாரென்று தெரியவில்லை.


சூரியன் பணி முடிக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

வாசுகிக்கு தாங்க முடியாத நரகவேதனை. பற்களைக் கடித்துக் கொண்டது..

பாற்கடலிலிருந்து ஏதோ கருப்பாகத் திரண்டு மேலே வருவதை எல்லோரும் கண்டனர். அது...

திடப்பொருளா.. திரவப்பொருளா.. வாயுப் பொருளா - ஒன்றும் புரியவில்லை.

திரண்டு வருவது என்ன என்று தெரியாமல் - ''..ஆஹா!..'' என்று ஆனந்தக் கூச்சல்.

யாருக்குச் சந்தோஷமோ... இல்லையோ -

'' நம்மை விட்டது.. ஏழரை!..'' - என்று, வாசுகிக்கு மிக்க மகிழ்ச்சி.

தலையை நிமிர்த்திப் பார்த்து -  ''இதுதான் அமுதமா!..'' என்று வாய் திறந்தது.

அவ்வளவு தான்!..

அதுவரையிலும் வாசுகியின் வாயினுள் பல்லிடுக்கினுள் அடங்கிக் கிடந்த விஷம் - பீறிட்டு வழிந்தது.

''தலைக்கு மேல் என்ன.. அமுத மழையா..'' என்று அசுரர்கள் மேலே பார்க்க - அனற்திரளாக - விஷத்துளிகள்!..

''..ஐயோ!.. ஓடுங்கடா.. ஓடுங்க!..'' அசுரர்கள் வாசுகியை கை விட்டார்கள். தலை தெறிக்க ஓட்டம் பிடித்தார்கள்!.

அந்தப் பக்கம் - தேவர்கள் - திரண்டு வருவது அமுதமில்லை... என்று உணர்ந்து கொண்டு,

அந்தக் கணமே - அசுரர்கள் செய்த அதே வேலையை செய்தார்கள். இவர்களும் வாசுகியை கை விட்டார்கள்..


''..என்ன நடக்கின்றது மேலே!..'' - என்றபடி அலைகடலினுள் - ஆமையாகக் கிடந்த கருணைக்கடல் மெதுவாக வெளிப்பட்டது.

அந்த நொடியே - நெடியவனின் பொன் போன்ற திருமேனி விஷத்தின் வேகத்தினால் கரிய திருமேனியானது.

 மின்னல் வேகம் -   மாலவனையும் அங்கே காணவில்லை.

இருதரப்பினராலும் கைவிடப்பட்டு கடலினுள் ஆழ்ந்த வாசுகி - இற்றுப்போன உடம்புடன் மெல்ல ஊர்ந்து வெளியே வந்தது.

சுற்றிலும் பார்த்தது. யாரையும் காணவில்லை.

இதுதான் - காரியம் ஆனதும் கழற்றி விடுவான் என்பது!.

பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட கரிய நிற ''ஆலம்'' எனும் விஷமும்,

வாசுகியின் பல்லிடுக்கிலிருந்து பீறிட்ட நீலநிற ''காலம்'' எனும் விஷமும் -

தங்களுக்குள் ராசியாகி ஒன்று கலந்து உருக்கொண்டதில் -
திரண்டெழுந்த கொடும் விஷம் தான் - ''ஆலகாலம்''.

தேவர்களும், அசுரர்களும் - பாற்கடலைக் கலக்கியடித்துக் கடைந்த கடமைக்குப் பரிசாக - எல்லோரையும் கலங்கடித்துக் கொண்டிருந்தது.

அங்கும் இங்குமாக தேவர்களும் அசுரர்களும் பரிதவித்து  ஓட , ஆலகாலமும் அவர்கள் பின்னாலேயே தொடர்ந்து வந்து நிற்க விடாமல் துரத்தியடித்தது.

ஆறடி உயரத்தில் -  பெரும் தூண் என உருக்கொண்டு - ஓட ஓட - விரட்டியது.

ஆலகாலம் - தேவாசுரர்களை எதை நோக்கித் துரத்தியது? எங்கே விரட்டியது?..

மந்தையில் பசுக்களை மேய்ப்பவன் மாலையானதும் அவற்றை எங்கே துரத்துவான்?.. எதை நோக்கி விரட்டுவான்!..

பட்டியை - தொழுவத்தை நோக்கி அல்லவா!.. அது தாங்க.. விஷயம்!..

மந்தையைத் திரட்டி ஒருங்கு சேர்த்து - பட்டியை நோக்கி விரட்டும் ஆயனின் வேலையை - ஆலகாலம் அன்றைக்குச் செய்தது.

நல்வினை தீவினை என்று தேவர்களும் அசுரர்களும் ஜீவான்மாக்களைப் பாடாய்ப் படுத்தி எடுத்த பாவத்திற்கு - அன்று பழி தீர்த்தது ஆலகாலம்!..

சிந்தனை அற்றுப் போனதால் - அந்த நேரத்தில் என்ன செய்வதென்று யாருக்கும் தெரியவில்லை.

தேவகுரு - பிரகஸ்பதி. அசுரகுரு - சுக்ராச்சார்யார்.
இருந்தும் -  இவர்களை நல்ல வழி நடத்தவில்லை.
வழி நடத்தினாலும்  - இவர்கள் நடப்பதாக இல்லை.

திரண்டு  எழுந்த  கொடிய ஆலகாலம் விரிந்து பரந்து தேவ - அசுரர்களை விரட்டிக் கொண்டு வந்தது.

ஒன்றும் புரியாமல்  ஓட்டம் பிடித்த அனைவரும் ஓடிச் சென்று நின்ற இடம் -


திருக்கயிலை!..

காவாய்.. கனகத் திரளே..போற்றி!..
கயிலை மலையானே போற்றி!.. போற்றி!..

-: நாளை திருக்கயிலாயத் திருக்காட்சி :-

திருச்சிற்றம்பலம் 
* * *

24 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி. மகிழ்ச்சி..

   நீக்கு
 3. பல புதியனவற்றை அறிந்தேன். புகைப்படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. வணக்கம்
  ஐயா

  அருமையான கருத்தாடலுடன் பதிவை பகிர்ந்துள்ளீர்கள் படங்கள் எல்லாம் அழகு பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ரூபன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு மிக்க நன்றி..

   நீக்கு
 5. ஸ்வாரஸ்யமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறேன் ஐயா. தங்கள் நடை அருமையாக இருக்கிறது. மனதில் பசக்கென்று ஒட்டி விடுகிறது.

  என் தளத்தில் நான் எந்த மாற்றமும் செய்யவில்லை ஐயா. சிலருக்கு திறக்கிறது. பேஸ்புக் மூலமும் திறக்கிறது...நேரடியாகவும் திறக்கிறது. செக் செய்து விட்டேன்.தாங்களுக்கு ஏன் திறக்கவில்லை என்று தெரியவில்லையே...பார்க்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   இன்றைக்கு சரியாகியுள்ளது. ஆனாலும் அந்த எண்ணெய்க் கத்தரிக்காய் பதிவு மட்டும் திறக்கவில்லை.

   தங்கள் அன்பான விளக்கத்திற்கு மகிழ்ச்சி..

   நீக்கு
 6. நடை அருமையாக போகிறது தொடர்கின்றேன்.....
  இன்றுகூட முயற்சித்தேன் தங்களது தளத்தில் இணைக்க முடியவில்லை நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   அந்த மூலையில் சிறியதாக இரட்டைச் சதுரம் இருக்கின்றதே - அதன் வழியாக முயன்று பாருங்கள்.. எனக்கும் ஒன்றும் புரியவில்லை..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 7. பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு நன்றி..
   ஒற்றைச் சொல்லில் கருத்துரைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
  2. என் வீட்டில் கணிப்பொறி பிரச்சனை. உடனே சொல்ல வேண்டும் என்று விருப்பம். எனவே கிடைத்த நேரம் ஒற்றைச் சொல் வாழ்த்து. தங்கள் நடைக்கு வரமுடியுமா?. வாழ்த்துகள்.

   நீக்கு
 8. அன்பின் மகி பாலசந்திரன்..

  ஒற்றைச் சொல் - ஓராயிரம் பொருள் தரும்!..

  மீண்டும் வந்து கருத்துரைத்தற்கு நன்றி..
  நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. சிவ தரிசனம் ஆஹா அருமையான உரையாடலில் மனதிற்கு மிகவும் மகிழ்வாக உள்ளது ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் மகிழ்ச்சியே - எனது மகிழ்ச்சி..
   அன்பின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 10. அழகான நடையில் அற்புதமான வரலாறு ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

   நீக்கு
 11. தெரிந்த கதைதான் , ஆனால் சொல்லிசென்றவிதம் மிக அருமை.
  இது போல் சொன்னால் அனைவரும் புராணங்களை படிக்க விரும்புவார்கள்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் இனிய வருகையும் அன்பின் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

   நீக்கு
 12. ஆலகால விஷம் பற்றிய விளக்கங்கள் அருமை. புதிய விஷயங்கள் சில தெரிந்து கொண்டேன்.....

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகை மகிழ்ச்சி.. தொடர்வதற்கு நன்றி..

   நீக்கு