நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 17, 2015

சிவ தரிசனம் - 05

மஹா பிரசாதம்!..

''...என்னங்க... இப்படி செய்து விட்டீர்களே!..'' உமையம்மை பரிதவித்தாள்.

மெல்லிய புன்முறுவலுடன் பெருமான் அம்பிகையின் முகத்தை நோக்கினார்.

''..இந்தப் பசங்களைக் காப்பாற்ற இதை விட்டால் வேறுவழி இல்லையே!..'' - ஐயன் புன்னகைத்தார்.


பெருமிதம் பொங்கி வழிந்தது வடிவுடை நாயகியாகிய அம்பிகைக்கு. 

பெருமானின் திருமுகத்தைத் - தன் தோள் மீது சாய்த்துக் கொண்டாள்.

வளைக்கரத்தினால் ஐயனின் கழுத்தை வாஞ்சையுடன் மெல்ல வருடினாள்.

ஈசனின் திருமுகத்தில் துளிர்த்த முத்துக்களைத் தன் முந்தானையால் ஒற்றி எடுத்த - ஏலவார்குழலி,

''..மடியில் சாய்ந்து கொள்ளுங்கள்!..'' - என்றாள்..

ஈசன் தானும் - ''..வெகு நாளாயிற்று!..'' - என்று, தேனார்மொழி உமையாளின் திருமடியில் நிம்மதியாக பள்ளி கொண்டார்.


தவளே!.. இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினாள்!..

ஸ்ரீசர்வமங்களாம்பிகை சமேத 
ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வரர் திருவடிகள் போற்றி.. போற்றி!..
* * *

என்ன இப்படி ஆகி விட்டதே - என தேவர்களும் அசுரர்களும் பதைபதைத்தனர்.

''..எல்லாம் உன்னால் தான்!.. வெளியில் வா.. கவனித்துக் கொள்கிறேன்!'' - என்கிற மாதிரி ஒருவரை ஒருவர் உக்ரத்துடன் பார்த்துக் கொண்டனர்.

மயங்கிக் கிடந்த வாசுகியின் மயக்கத்தினை தெளிவித்தான் திருமுருகன்.

மனம் நெகிழ்ந்த வாசுகி - ''முருகா!.. நான் என்றும் உனக்கு அடிமை..'' என்றது.

நான்முகனும் பெருமாளும் ஓடிவந்து ஆதரவாக அருகில் நின்று கொண்டனர்.

மற்றவர்கள் ஈசனின் திருமுகத்தைக் காண்பதற்கு முயற்சித்தனர்.

நந்தியம்பெருமான் - முன்வந்து - '' எல்லோரும் விலகி நில்லுங்கள்!....'' என்று சொல்லி விட்டு , ஈசனைக் கை கூப்பி வணங்கினார்.

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி!
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி!
எண்ணும் எழுத்தும் சொல்லானாய் போற்றி!
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி!
விண்ணும் நிலனும் தீயானாய் போற்றி!
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி!
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!...


நெஞ்சுருகப் பாடிப் பரவினார். 

அனைவரும் பெருமானைப் பாடித் துதித்தனர். 

விஷயம் அறிந்து - விநாயகர் விரைந்து வந்தார்.

''..அப்பா.. ஏதோ திருவிளையாடல் நடத்துகின்றார்..'' எனப் புரிந்து கொண்ட விநாயகர் தம்பியுடன் ஓர் ஓரமாக உட்கார்ந்து கொண்டார்.

அப்போது கூட -
விநாயக மூர்த்தியைக் கண் கொண்டு நோக்கி, கை கொண்டு வணங்கி -
நலம் ஏதும் விசாரிக்கவில்லை - தேவேந்திரன்.

சப்த லோகங்களில் இருந்தும் - யோகியரும் மகரிஷிகளும் திரண்டனர்.

வடங்கெழு மலை மத்தாக வானவர் அசுரரோடு
கடைந்திட எழுந்த நஞ்சங் கண்டு பல்தேவரஞ்சி
அடைந்து நும் சரணம் என்ன அருள்பெரிது  உடையராகித்
தடங்கடல்  நஞ்சமுண்டார் சாய்க்காடு மேவினாரே!...


- என்று செழுந்தமிழில்  பாடிப் புகழ்ந்தனர்.

கின்னரரும் கிம்புருடரும் ஐயனைத் துதி செய்து யாழ் மீட்டினர்.

நஞ்சினை அருந்திய நிலையில் - ஐயனைத் தூங்க விடாமல் கவனித்துக் கொண்டனர்.

ஏகாதசியன்று விஷம் உண்ட பெருமான் துவாதசி முழுவதும் பள்ளி கொண்ட நிலையிலேயே இருந்தார்.

பொழுதும் விடிந்தது.


போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது புங்கழற்கு இணைதுணை மலர்கள்
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்

சேற்றிதழ் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் என்னை உடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!..

ஸ்வாமி!..

மடியில் உறங்கிய மகேசனை மெல்ல அழைத்தாள் - நறுமலர்ப் பூங்குழலாள்..

பெருமானின் திருவிழிகள் மலர்ந்தன!..

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியின் மங்கல முகத்தில் பிரகாசம்.

அவ்விடம் சென்றது எவ்விடம்!?..  - விழிகளால் கேட்டாள் வேத நாயகி..

அவ்விடம் நின்றது இவ்விடம்!.. - புன்னகை பூத்தான் புவன நாயகன்..

ஈசனின் கழுத்திலேயே விஷம் தோய்ந்து நின்று நீலமணியாகப் பொலிந்தது.

கற்றவர்கள் உண்ணுங் கனியே போற்றி..
அற்றவர்க்கு ஆரமுதம் ஆனாய் போற்றி!..

வங்கமலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி..
அங்கணனே அமரர்தம் இறைவா போற்றி!..

நஞ்சுடைய கண்டனே போற்றி.. போற்றி..
நற்றவனே நின் பாதம் போற்றி.. போற்றி!..

செங்கனகத் தனிகுன்றே சிவனே போற்றி..
திருமூலட்டானனே போற்றி.. போற்றி!..

- என, அம்பிகை விளித்தாள். துதித்தாள்.

பெருமான் திருவிழி மலர்ந்தார் என்று எங்கெங்கும் சந்தோஷம்..

நந்தியம்பெருமானின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் - ஆறாகப் பெருகியது.

''...தாயே!.. வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகையே!.. நின் பாதம் என் சென்னியதே!...

- என்று அம்பிகையின் பாதங்களில் விழுந்து வணங்கினார்.


காலடியில் காத்துக் கிடந்த அனைவரையும் கருணையுடன் நோக்கி அருள் பொழிந்தார் - பரமேஸ்வரன்.

தேவேந்திரன் முன்வந்து நின்று - ''.. எமது பிழை பொறுத்து, அருள வேண்டும்!.'' - என்று தொழுது வணங்கினான்.

''..மீண்டும் முயற்சி செய்!..'' - திருவருளாணை பிறந்தது.

அனைவரும் அம்மையப்பனைப் பணிந்து வணங்கினர்.

வாசுகியும் கண்ணீருடன் வலம் செய்து வணங்கியது.

''அஞ்சவேண்டாம். உனக்கு  அடைக்கலம் தந்தோம்!..'' என்றனர் - அம்மையும் அப்பனும்.

சிவபெருமானின் அருளாணையைத் தலைமேற்கொண்டு மறுபடியும் ஆரம்பித்தனர் வேலையை.

திரயோதசி அன்று மாலையில் பாற்கடலில் இருந்து மங்கலப் பொருட்கள் ஒவ்வொன்றாகத் தோன்றின.


கற்பக விருட்சமும் காமதேனுவும் தோன்றின.
பாஞ்சஜன்யமும் சார்ங்கமும் வெளிப்பட்டன.

வைஜயந்திமாலை பிரகாசமாக வெளிப்பட்டது.
அமுத கலைகளுடன் சந்திரன் தோன்றினான்.

மக்களை வெற்றிக்கு உய்விக்கும் ஸ்ரீ ஜேஷ்டா தேவி தோன்றினாள்.
ஐஸ்வர்ய நாயகியாக ஸ்ரீ மஹாலக்ஷ்மி தோன்றினாள்.

சங்க நிதியும் பத்ம நிதியும் தோன்றின.
சகல மூலிகை மருந்துகளுடன் தன்வந்திரி தோன்றினார்.

காணாமற் போன பட்டத்து குதிரையும் உள்ளிருந்து ஓடி வந்தது.

யானையைக் காணோமே என்று திகைத்தான் இந்திரன்.. திருவெண்காட்டில் சிவபூஜை செய்து சாப விமோசனம் பெற்ற ஐராவதம் பெரும் பிளிறலுடன் உற்சாகமாக வந்து சேர்ந்தது.

பொங்கும் இளமை பூரித்துத் ததும்ப தேவகன்னியர் தோன்றினர். அவர்கள்
திரும்பவும் பேரெழில் பெற்றதில் தேவேந்திரனுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்!.

நிறைவாக அமுதம் நிறைந்த பொற்கலசம் பேரொளியுடன் தோன்றியது.

தேவர்களும் அசுரர்களும் ஆனந்தக் கூத்தாடினர்..

''எனக்கு.. எனக்கு!..'' - என ஒரே கூச்சல்.. எங்கெங்கும் பெருஞ்சத்தம்.

நான்முகன் அனைவரையும் கடிந்து கொண்டார்.

''துயரப்பட்டு அழுதபோது கண்ணீரைத் துடைத்து, அருள் புரிந்த ஈஸ்வரனை மறந்தீர்களே?.. மீண்டும் மீண்டும் பிழை செய்யாதீர்கள்!..'' என்றார்.


பிழை உணர்ந்த அனைவரும் ஒன்று கூடி ஆரவாரத்துடன் திருக்கயிலை மலைக்குச் சென்று  - ஈசனையும் அம்பிகையையும் நன்றியுடன் பணிந்தனர்.

அனைவருக்கும் - தீர்த்தமும் திருநீறும் மகா பிரசாதமாக வழங்கப்பட்டது.

ஐயன் அருந்திய ஆலகாலத்தில் தன் பங்கும் உளதே!..

மன உளைச்சலில் தவித்த வாசுகி - அம்மையப்பனின் திருவடிகளில் தலை வைத்துக் கிடந்தது.

நாகபூஷணியாகிய அம்பிகை - வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தாள்.

யாருக்கும் கிட்டாத பெரும்பேறு வாசுகிக்குக் கிட்டியது..

நைந்து கிடந்த வாசுகி - நலிவு நீங்கி நலம் பெற்றது.

அமிர்தம் அருந்தாமலேயே - நித்ய வாழ்வு பெற்றது.

'' வலம்புரத்தில் எம்மை வணங்கி வளம் பெறுவாயாக!..'' என்று வாசுகிக்கு அருளினர் - ஐயனும் அம்பிகையும்.

மனங்கனிந்த பெருமான் டமருகத்தை ஒலித்தார். அம்பிகை அகமகிழ்ந்தாள்.

தலை தாழ்ந்து பணிந்து வணங்கிய நந்தியம்பெருமானின் சிரசில் -
இரு கொம்புகளுக்கு இடையில் திருநடனம் புரிந்தருளினார்.

மலைமகளும் பெருமானுடன் ஆடி மகிழ்ந்தாள்.

உமையவளை ஒருபுறம் கொண்டு ''சந்தியா நிருத்தம்'' எனும் நடனம் ஆடினார்.


கணபதியும்கந்தனும், திருமாலும் அலைமகளும், நான்முகனும் கலைமகளும்,
வியாக்ரபாதரும் பதஞ்சலியும், கணங்களும் தேவ கன்னியரும்,

முப்பத்து முக்கோடி தேவர்களும் அசுரர்களும், யோகியரும் மகரிஷிகளும், நாரதாதி முனிவர்களும், கின்னரர்களும் கிம்புருடர்களும்,

நாகர்களும் யட்சர்களும், விச்சாதரர்களும் வேதியர்களும் - கண்டு களித்து அம்மை அப்பனை வணங்கி இன்புற்றனர்.


சர்வம் சுப மங்கலம்

ஸ்ரீமஹா சிவராத்திரியுடன் பொருந்தி வரும் சம்பவங்களுள் இதுவும் ஒன்று.

இந்த வைபவம் - தொடர்ந்து மேலும் பல சம்பவங்களாக விரிகின்றது.

இப்படியாக -

தேவாசுரர் சேர்ந்து நின்று - கடல் கடைந்த வைபவத்தையும்,
கடலில் எழுந்த நஞ்சினை உண்டு அண்டங்களைக் காத்தருளிய திறத்தையும்,

அதன்பின் பெருமான் நிகழ்த்திய சந்தியா நிருத்தம் எனும் மங்கலத்தையும்

கேட்டவர்களும் படித்தவர்களும் உண்மையை உய்த்து உணர்ந்தவர்களும் -

சகலவிதமான ஐஸ்வர்யங்களும் நிறையப் பெற்று நோயும் பிணியும் நீங்கி வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

இன்று மாலை - நமது தளத்தில் சிவராத்திரி தரிசனம்!..
வருக.. வருக!.. - என, அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்!..

'' நம பார்வதீ பதயே.. ஹரஹர மகாதேவ!...''

தென்னாடுடைய சிவனே போற்றி.. 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!..

திருச்சிற்றம்பலம் 
* * *

16 கருத்துகள்:

 1. சிறப்பு...

  தரிசனத்தையும் காண ஆவலுடன் உள்ளேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.
   மாலையில் மீண்டும் சந்திப்போம்.. நன்றி..

   நீக்கு
 2. நலந்தரும் நன்னாளில் "மகா சிவராத்திரி" சிறப்பினை பக்தி மணம் கமழும் நன்னெறிக் கருத்துக்களை, நெறிபட தொகுத்து தந்தமைக்கு ,மிக்க நன்றி! அய்யா!
  மனதுக்கு மகிழ்வை தந்த அரும் படைப்பு!

  நன்றியுடன்,
  புதுவை வேலு

  (எனது கவிதை படைப்பு "மங்கலம் தரும் மகா சிவராத்திரி (சிவ கவி)" காண வாருங்கள் நண்பரே!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நம்பி..
   தங்கள் இனிய வருகை கண்டு மகிழ்ச்சி..
   அழகிய கருத்துரை வழங்கியமைக்கு நன்றி..

   நீக்கு
 3. அவ்விடம் சென்றது எவ்விடம்? விழிகளால் வினவினாள் வோநாயகி.
  அவ்விடம் நின்றது இவ்விடம். புன்னகை பூத்தான் புவன நாயகன். அப்பப்பா வார்த்தைகள் என்னே லாவகம். என்னால் தங்கள் நடையை பாராட்ட இயலவில்லை. கடைசியில் மங்கள்ம் அருமையாக உள்ளது. உமது கூற்று மெய்யாகட்டும். இன்று மாலை வருகிறோம். இன்று சிவராத்திரி தான் அனைவருக்கும் உம் வலைதளத்தில். அதனால் என்ன? புண்ணியம் கிடைக்க கசக்குமா? என்ன?. புகைப்படங்கள் மிக அருமை. மனம் நிறையும் மகிழ்ச்சி.மாலை வரை காத்து இருக்கிறோம்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் மகி பாலசந்திரன்..

   இந்தப் பதிவை நேற்று மாலை எழுதும் போது கூட ஏதும் தோன்ற வில்லை. இரவு வேலை முடித்து இன்று விடியற்காலை வந்து படித்ததும் - என்னை அறியாமலேயே கண்கள் கலங்கின..

   நீங்கள் சிறப்பாக சொல்லும் எதற்கும் நான் உரியவன் அல்லேன்..

   அனைத்தும் - அம்மையப்பனுக்குத் தான்!..

   அவனன்றி ஆவது ஒன்றுமேயில்லை!..

   வருகை தந்து கருத்துரைத்த தங்களுக்கு மிக்க நன்றி..

   நீக்கு
  2. நான் இப்போ தான் பதில் தந்தேன். இன்னும் உங்களின் மற்ற பதிவுகளில் இருந்து பக்கத்தில் இருந்து செல்லவில்லை. உடனேவா மகிழ்ச்சி. இப்போ நான் ஏன் இங்கு வந்தேன் என்றால் பால மகி பக்கங்களிலும் சில கிறுக்கல்கள் உண்டு என கூற. மக்க மகிச்சி.

   நீக்கு
  3. அன்பின் பாலமகி..
   மகாகவியைப் பற்றி அரிய தகவல்களைப் பதிவு செய்து விட்டு கிறுக்கல் என்கின்றீர்களே!.. அருமை..அருமை!..

   நீக்கு
 4. மன்னிக்கவும் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் பாலமகி..
   நல்ல பதிவுகளைக் கண்டு மகிழ்வதே - முதல் வேலை!..
   வாழ்க நலம்..

   நீக்கு
 5. படித்தும் கேட்டும் இருந்த கதைகளை நேரம் காலம் பார்த்து ஒருங்கிணைத்து தருவதில் விற்பன்னர் ஆகி விட்டீர்கள், வாழ்த்துக்கள். .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   அனைத்திற்கும் ஐயன் அருளும் பெரியோர்களின் நல்லாசியுமே!..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சியும் நன்றியும்!..

   நீக்கு
 6. ஓம் நமசிவாய... நலம்..நலம்....அருமையாக போய்க் கொண்டு இருக்கிறது ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக.. வருக!..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. அருமையான கதை. ரிஷிகேஷில் இருந்து மேலே நீல்கண்ட் என்று ஒரு இடம் உண்டு. ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் அதன் பின்னர் இங்கே தான் சென்றதாக ஒரு கதை உண்டு. இரண்டு மூன்று முறை இக்கோவிலுக்குச் சென்றதுண்டு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   ரிஷிகேஷ் - நீல்கண்ட் தலத்தைப் பற்றி தகவல் அளித்தமைக்கு நன்றி!..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

   நீக்கு