நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 29, 2015

சோலைவனச் சுற்றுலா 1

மஞ்சள் வண்ணம் உடையது.. பளபளப்பு மிக்கது..

ஒருவனை நல்லவனாகவோ கெட்டவனாகவோ மாற்றவல்லது..

இரும்புப் பெட்டிக்குள் வைக்கப்படுவனவற்றுள் உயர்வானது..

ஒரு குண்டுமணி அளவாவது வாங்கி வைத்திருக்க வேண்டும்!.. - என்ற, ஏக்கத்தை - விருப்பத்தை - அனைவருக்கும் ஏற்படுத்துவது..

ஒரு நாட்டின் நாணய மதிப்புக்கு ஆதாரமாகக் கொள்ளப்படுவது..

ஒரு நிலையில் மருந்தாகவும் உரு மாற்றம் கொள்வது..

ஆடம்பர சூழல்களில் முதலிடம் வகிப்பது..

வேண்டுதல் வேண்டாமையற்ற மெய்ப்பொருளாகிய கடவுளுக்குக் காணிக்கை எனத் திகழ்வது..

கர்வம் கொண்டோர் - இல்லக் கதவுகளின் கைப்பிடியாக விளங்குவது..

காலங்கள் மாறினாலும் - மாறிடாதபடிக்குக் கள்வர்களின் இலக்காக இருப்பது..


தங்கம்...

செவிச் செல்வம் அல்லாத செல்வங்களுள் சிறந்ததாக இலங்குவது..

அதனால் தான் - நல்லவர் தம் மனங்களைக் குறிப்பதாயிற்று..

நாம் பெற்ற செல்வங்களைக் கொஞ்சி மகிழும் பெயராகவும் ஆயிற்று..

அரபு நாடுகள் தலையெடுக்கும்  - முன் சிங்கப்பூர் தங்க நகைகளை சிறப்பாகச் சொல்வார்கள்..

இப்போதும் அப்படித்தான்!..

ஆயினும், சமீபகாலமாக தங்க நகைகளின் மீதான மக்களின் கவனம் - துபாய்!..

சிலதினங்களுக்கு முன், துபை மாநகரைச் சுற்றி வந்த போது -
சென்ற இடம் - தங்க நகர் (Dubai City of Gold)..

கீழுள்ளவற்றில் முதல் மூன்று படங்கள் மட்டும் - இணையத்தில் பெற்றவை..

ஏனைய படங்களும் பதிவும் தங்களைக் கவரும் என நம்புகின்றேன்..

Thanks -Google
Thanks - Google
Thanks  Google

இந்த தங்க நகைக் கடைத் தெருவிற்குச் சென்றபோது - இரவாகி விட்டது..

மேலும் நெரிசலான கடைத்தெரு..

எல்லாவற்றையும் விட,
அங்கே உலவிக் கொண்டிருந்த - அரேபிய ஆப்ரிக்க பெண்கள்..

சமயத்தில் சிக்கல்கள் உருவாகிவிடக்கூடும்..

எனவேதான் - இன்னும் சிறப்பாக படமெடுக்க இயலவில்லை..
இருநூற்றுக்கும் மேலான கடைகள் இங்குள்ளன..

நம் நாட்டிலிருந்தும் - நகை வர்த்தக நிறுவனங்கள் இங்கு வந்து பெரிய அளவில் வணிகம் செய்கின்றனர்..

தங்கம் அறியப்பட்டதிலிருந்து அதை அடைவதற்கே மனிதன் மிகவும் முயற்சிக்கின்றான்..

குறுக்கு வழியில் தேடுவோர்க்கு இடையில் -
உழைப்பின் வழி நாடுவோர் தம் இல்லத்தில் உண்மையிலேயே தங்க மழை பெய்து கொண்டுதான் இருக்கின்றது..

அகமானாலும் புறமானாலும் - பழந்தமிழகத்தின் பனுவல்கள் பலவற்றிலும் தங்கத்தைப் பற்றி அறியக் கிடைக்கின்றது..

திருவாசகமாக - மாணிக்கவாசகப்பெருமான் - இறைவனைப் போற்றும்போது,

ஆடக மதுரைக்கு அரசே போற்றி!.. - எனத் துதிக்கின்றார்..

நால்வகைத் தங்க வகைகளுள் ஆடகம் என்பது ஒளிரும் செம்பொன்..

ஏனயவை - கிளிச்சிறை, சாதரூபம், சாம்புநதம் - என்பன..

கிளிச்சிறை என்பது வெள்ளியுடன் சேர்ந்த பசுந்தங்கம்..
சாதரூபம் என்பது வெட்டியெடுக்கப்பட்ட தூய தங்கம்..
சாம்புநதம் என்பது சற்றே செம்பு கலந்த மஞ்சள் நிறத் தங்கம்..

இதுவே - அணிகலன்களாகி நம்மிடயே இலங்குவது..

புற வாழ்வினில் மட்டுமின்றி
அக வாழ்வினிலும் பொன்னெனப் பொலிந்து
புகழ் பெறுவோம்!..

வாழ்க நலம்!..
* * * 

செவ்வாய், அக்டோபர் 27, 2015

சோறு தரும் சொர்க்கம்

இன்று பௌர்ணமி..

ஐப்பசி மாதத்தின் பௌர்ணமி..

சகல சிவாலயங்களிலும் - திருமூலஸ்தானத்தில்  விளங்கும் -
சிவலிங்கத் திருமேனிக்கு அன்னாபிஷேகம் நிகழும் நன்னாள்..

அன்னம் கொண்டு ஐயனை ஆராதித்து வணங்கும் திருநாள்..


சுத்தமான சோறு நல்லறிவின் வடிவம்..

சகல உயிர்களையும் படைத்தருளும் மூர்த்தியாகிய நான்முகப் பிரம்மனுக்கும் அவனது நாயகியாகிய நற்றமிழ்க் கலைவாணிக்கும்
அன்னமே வாகனம்..

அன்னம் என்ற சொல் -
நாம் உண்ணும் சோற்றையும் நீரில் இயங்கி நிலத்தில் வாழும் பறவையையும் குறிக்கும்..

இந்த அன்னப் பறவை பாலையும் நீரையும் பகுத்து உண்ணும் என்பது தொல்வழக்கு..

பால் - திரவ நிலை எனும் போது அதிலிருந்து நீரைப் பிரிப்பது எங்ஙனம்!..

பாலின் நிலைகளுள் உயர்ந்தது - நெய்!..

அதற்கு மேல் ஒன்றும் இல்லை..

அதன் உட்பொருள் - இருப்பதாக உணர்த்தி இல்லாத நிலையில் உயர்வடைவது!..

அந்த நிலையைக் குறிப்பால் உணர்த்துவது - அன்னம்!.. எனில் - சோறு!..

தமிழர் தம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் உடன் வருவது - அரிசி..

மங்கலகரமான அரிசி  இடம்பெறாத சடங்குகள் எதுவும் நம் வாழ்வில் கிடையாது..

வெளியுலகைக் காணும் முன்பே ஏழாம் மாதத்தில் -
கருவறையின் உள்ளிருக்கும் ஜீவனை வரவேற்கும் போது - அரிசி..

வையகத்திற்கு வந்து - வாழ்ந்த ஜீவன் விடைபெற்றுக் கொண்ட பின்,
சரீரத்தை வழியனுப்பும் போதும் - அரிசி!..

பல நிலைகளில் பக்குவமாகி நம்முடன் பயணிக்கும் அரிசி -
பக்குவத்தையே நமக்கு உணர்த்துகின்றது..

அரிசியின் பக்குவ நிலைகளில் உயர்ந்தது - சோறு!..

சோறு கண்ட இடம் சொர்க்கம்!.. - என்பர் தமிழில்..

அது சோம்பேறிகளுக்கு சொல்லப்பட்ட வார்த்தை அல்ல...

எவராயின் எத்தன்மையராயினும் -
அவர்தம் - பசித்த வயிற்றுக்கு உணவுதான் முதற்தெய்வம்.

உணவு என்பனவற்றுள்ளும் - முந்தியிருக்கும் பெருமையுடையது சோறு தான்...

அந்தச் சோறு சிவலிங்க வடிவமானது..
ஆம்.. சோற்றின் வடிவம் - சிவலிங்கம்!..

ஏர் முனையைப் போல் கூராயிருப்பன -  நெல்லும் அரிசியும்..

பலநிலைகளில் பக்குவமான பின் - உயிர்க்குலத்தின் உடன் பிறந்த பிணியாகிய  பசியை நீக்கும் போது அரிசி - சோறு எனும் தெய்வ நிலையை அடைகின்றது..


சோறு கொண்டு ஐயனை அபிஷேகிக்கும் போது -
உண்ணும் பொருட்கள் பலவற்றாலும் அலங்காரம் செய்வது வழக்கம்..

அந்தப் பெருமை அனைத்தும் - உணவுப்பொருட்களை உண்டாக்கித் தந்த
உழவர் பெருமக்களையே சேரும்..

அன்னத்தின் பெருமையையும்
அன்னாபிஷேகத்தின் சிறப்பையும்
உள்ளுணர்ந்து சிவவழிபாடு செய்வோம்..

இன்றைய பதிவினில் நேற்றைய தினம் -
திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில் காலையில் நிகழ்ந்த திருக்குட முழுக்கு வைபவத்தையும் மாலையில் பஞ்சமூர்த்தி எழுந்தருளிய திருவுலாக் காட்சிகளையும் காணலாம்..

Facebook - ல் வழங்கிய திரு. வேங்கட சுப்ரமணியம் அவர்களுக்கும்
திரு. வசந்த குமார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி..

அன்னாபிஷேகம் பற்றிய முந்தைய பதிவை - இந்த இணைப்பில் காணுக..


தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற்கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே!.. (6/23)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.. 
* * *

ஞாயிறு, அக்டோபர் 25, 2015

திருமறைக்காடு

வேதங்கள் அனைத்தும் நிழல் தரும் மரங்களாக விளங்கிய -
அந்த வனத்தினுள் - மூலப்பரம்பொருள் லிங்க ரூபமாக முளைத்தெழுந்தது..

மேலும், ஆங்கே - மங்கலம் கூடிடும் வண்ணம் - அம்பிகையும்,
வேத நாயகியாகத் தோன்றினாள்..

சிவ சாந்நித்யத்தில் இந்திராதி தேவர்களும் கூடிநின்று வழிபாடு செய்த வேளையில் - 

நான்முகனின் தேவியாகிய நற்றமிழ்க் கலைவாணி, 
தன் திருக்கரங்களினால் - கச்சபி எனும் வீணையை மீட்டினாள்..

அதிலிருந்து எழுந்த இனிய நாதத்தைச் செவியுற்ற அம்பிகையின் -
செவ்விதழ்க் கடையில் புன்னகை தோன்றியது..

அவ்வளவு தான்!.. அவ்வளவே தான்!..

கலைவாணி தன் கரங்களில் இருந்த வீணையைக் கீழே வைத்து விட்டாள்..

யாழைப் பழித்த மொழி உமையாள்!.. - எனத் திருப்பெயர் மலர்ந்தது..

இதனையே - 

பண்ணின் நேர் மொழி உமையாள்!.. - என அப்பர் ஸ்வாமிகள் போற்றுகின்றார். 


திருமறைக்காடு என்று புகழப்பெற்ற இத்தலத்தின் திருக்கோயிலினுள் -
எலி ஒன்று சுற்றித் திரிந்திருந்தது. ..

வேறெதுவும் வேலையில்லாத அந்த எலிக்கு விருப்பமானது -
சிவாலயத்தின் திருவிளக்குகளில் ஊறிக் கிடக்கும் நெய்யினைச் சுவைப்பது தான்!..

ஒரு நாள் இரவு. அர்த்த ஜாமம் முடிந்து - திருநடை அடைக்கப்பட்டு விட்டது..

யாருமற்ற அந்தப் பொழுதில் வழக்கம் போல எலி கருவறையுள் நுழைந்தது..

திருவிளக்கில் நிறைய நெய் இருந்தாலும் - தூண்டுவாரில்லாததால் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது..

நிறைந்திருந்த நெய்யைக் கண்டதும் எலிக்குக் கொள்ளை ஆனந்தம்..

அவசரமாக நாவினை நீட்டி சுவைக்க முற்பட்டபோது - எதிர்பாராத விதமாக தீபச்சுடரில் மூக்கினைச் சுட்டுக் கொண்டது..

மூக்கின் நுனியில் - சுரீர்!.. - எனச் சுட்டதும் பதறித் துடித்தது.

அந்த வேளையில் நிகழ்ந்த பதற்றத்தால் - கருகிக்கொண்டிருந்த சுடர் தூண்டப் பெற்றது. மூலத்தானத்தினுள் ஒளி பரவியது..

அதே வேளையில் பஞ்ச வாத்யங்களின் ஒலி கேட்ட எலி அதிர்ந்து நின்றது..

தான் காண்பது கனவா.. நனவா!.. என்று.. தன்னையே நம்பமுடியவில்லை!..

இப்படியெல்லாம் நடக்குமோ!?.. - தன்னைத் தானே கிள்ளிக் கொண்டது.

நிஜம் தான்!.. தன் எதிரில் காட்சியளிப்பது  - ஸ்ரீபரமேஸ்வர சிவம் தான்!..

கண்ணீர் பெருக , இறைவனை வலம் வந்து  - வணங்கி நின்றது!..

திருக்கோயிலின் தீபத்தினைத் தூண்டிவிட்ட புண்ணியத்திற்காக - ஈசன் - அந்த எலியினை வாழ்த்தி மறைந்தார். 

ஈசன் விதித்தபடி - தன்னுடலை நீத்தது - எலி.. 

அசுர குலத்தில் ஸ்ரீபக்த ப்ரகலாதனின் வழித்தோன்றலாகப் பிறந்தது..

இதனை,

நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந்தன்னைக் 
கறைநிறத்து எலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட 
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகம் எல்லாம் 
குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே!. (4/49/8) 

- என்று , திருநாவுக்கரசர் திருக்குறுக்கை வீரட்டானத்தைத் தரிசிக்கும் போது - பாடி மகிழ்கின்றார்.

இப்படி - சிற்றுயிராகிய எலி சிவபுண்ணியம் பெற்ற திருமறைக்காடு எனும் திருத்தலமே -  இன்றைக்கு வேதாரண்யம் என வழங்கப்படுகின்றது..


இத்திருக்கோயில் பல ஆண்டுகளுக்குப் பின் நாளை திருக்குடமுழுக்கு நடைபெறுகின்றது..

எண்ணிலாப் பெருமைகளை உடையது - திருமறைக்காடு..

முசுகுந்தச் சக்ரவர்த்தி - தமக்குச் செய்த பேருதவியில் மனம் மகிழ்ந்த தேவேந்திரன் - தான் வழிபட்டு வந்த விடங்கத் திருமேனியுடன் மேலும் ஆறு திருமேனிகளை மனமுவந்து அளித்தான்..

முசுகுந்த சக்ரவர்த்தியும் அமரலோகத்திலிருந்து - தான் கொணர்ந்த ஏழு விடங்க மூர்த்தங்களில் முதலாவதானதை திரு ஆரூர் முதற்கொண்டு ஏழு திருத்தலங்களில் நிலைப்படுத்தினார்..

அத்திருத்தலங்கள் ஏழும்  - சப்த விடங்கத் திருத்தலங்கள் எனப்படுகின்றன..

சப்த விடங்கத் திருத்தலங்களுள் இரண்டாவதாகத் திகழ்வது திருமறைக்காடு..

தியாகேசரின் சப்த விடங்கத் திருமேனிகளுள் இங்கு  - புவன விடங்கர்..
திருநடனம் - ஹம்ச நடனம்..

காலை மாலை இருவேளைகளிலும் தியாகேசர் சந்நிதியில் பேழையின் உள்ளிருக்கும் மரகத லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நிகழ்கின்றன..

ஸ்ரீ ராமபிரான் - சீதையைத் தேடித் திரிந்த வேளையில் திருமறைக்காட்டில் சிவபூஜை செய்ததாக ஐதீகம்..

எனவே - ஆதி சேது எனவும் வழங்கப்பெறும்..

இத்திருத்தலத்தில் அகத்திய மாமுனிவருக்கு - ஈசன் எம்பெருமானின் திருமணத் திருக்காட்சி அருளப்பெற்றது..

எனவே, திருமூலத்தானத்தினுள் - சிவலிங்கத் திருமேனிக்குப் பின்புறம் ஈசனும் அம்பிகையும் திருமணக்கோலங்கொண்டு திகழ்கின்றனர்..

வேதங்களால் தாழிடப் பெற்ற திருக்கதவுகள்  -
திறப்பதற்கு அப்பர் பெருமானும்
மூடுவதற்கு ஞானசம்பந்தப்பெருமானும் - திருப்பதிகம் பாடியருளினர்..

அப்பர் பெருமானும் ஞானசம்பந்தப் பெருமானும் - திருமடம் கொண்டு தங்கி இருந்த திருத்தலங்களுள் - திருமறைக்காடும் ஒன்று..

அப்பர் பெருமானும் ஞானசம்பந்தப் பெருமானும் இங்கே தங்கியிருந்த சமயத்தில் தான் - மதுரையிலிருந்து ஓலை வந்தது..

சைவத்தை மீட்டெடுக்க பாண்டிய நாட்டிற்கு வாருங்கள்!.. - என்று..

அவ்வேளையில் நாளுங்கோளும் சரியில்லாததை உணர்ந்த அப்பர் பெருமான் - ஞானசம்பந்தரிடமும் அதைக் கூறினார்..

அதற்கு மறுமொழியாகவே -
திருஞானசம்பந்தரின் திருவாக்கிலிருந்து கோளறு பதிகம் பிறந்தது..

பின்னாளில் - சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளும்
அருணகிரி நாதரும் இங்கு தரிசனம் செய்துள்ளனர்..

பெரும் சிறப்புகளை உடைய இத்திருத்தலத்தில் தான் -
திருவிளையாடற்புராணம் இயற்றிய பரஞ்சாதி முனிவரும்
மகாஞானியாகிய தாயுமானவ ஸ்வாமிகளும் பிறந்தருளினர்..

அஞ்ஞானத்தின் அடையாளமாகக் குறிக்கப்படும் எலி, நற்கதி பெற்ற திருத்தலத்தை - திருக்குடமுழுக்கு நாளில் சிந்தித்திருப்போம்!..

திருக்கோயிலின் விழாக்கோலக் காட்சிகளை - திரு. வேங்கட சுப்ரமணியன், திரு. திவாகர் தங்கதுரை, திரு. வசந்தகுமார்.. - Facebook - வழியாக வழங்கினர்..

அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என்றும் உரியது..மணிகர்ணிகை தீர்த்தம்

இறைவன்
திருமறைக்காடர், மறைக்காட்டு மணாளர், வேதாரண்யேஸ்வரர்..
அம்பிகை
பண்ணின் நேர்மொழியாள், யாழைப் பழித்த மொழி உமையாள், வேதநாயகி
தல மரம்
வன்னி..
தீர்த்தம்
மணிகர்ணிகை, வேத தீர்த்தம் - வங்கக் கடல்..

பண்ணின் நேர்மொழியாளுமை பங்கரோ
மண்ணினார் வலஞ்செய் மறைக்காடரோ
கண்ணிலால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே!.. (5/1)
அப்பர் பெருமான்

நுண்ணி யதாய்வெளிதாகி நூல்கிடந்திலங்கு பொன்மார்பில்
பண்ணி யாழெனமுரலும் பணிமொழி உமையொரு பாகன்
தண்ணி தாயவெள்ளருவி சலசல நுரைமணி ததும்பக்
கண்ணி தானுமோர் பிறையார் கலிமறைக் காடமர்ந்தாரே!.. (2/91)
திருஞான சம்பந்தர்

யாழைப் பழித்தன்ன மொழி மங்கையொரு பங்கன்
பேழைச் சடை முடிமேற்பிறை வைத்தானிடம் பேணில்
தாழைப் பொழிலூடே சென்று பூழைத்தலை நுழைந்து
வாழைக் கனிகூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே!.. (7/71)
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்

நாளுங்கோளும் நன்மை அருள
நம சிவாய.. சிவாய நம..

வாழ்க நலம்..
* * *

வெள்ளி, அக்டோபர் 23, 2015

சதயத்திருவிழா

இன்று ஐப்பசி சதயம்..

மறக்க ஒண்ணாத மகத்தான நாள்..

மாமன்னன் ராஜராஜ சோழன் இப்பூவுலகில் தோன்றிய திருநாள்..

பூமகள் பெருமை கொண்டு - ஆயிரத்து முப்பது ஆண்டுகள் ஆகின்றன. 

தஞ்சையில் நேற்று சதயத் திருவிழா சிறப்புடன் தொடங்கியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளும் சதயத் திருநாளில் கலந்து கொள்ளும் பேறு வாய்த்தது..

ஆனால் - இந்த ஆண்டு ..!?

ஐக்கிய அரபு அமீரகத்தில் - மகள் வீட்டில் இருக்கக் கூடியதாகி விட்டது..

ஆயினும், மனம்!..

அது மட்டும் தஞ்சை மாநகரில்!..

மகத்தான நந்தி மண்டபத்தில்!..
அருள்தரும் பெருவுடையாரின் திருச்சந்நிதியில்!..
மாபெரும் ராஜராஜேஸ்வரத்தின் திருச்சுற்றில்!..

சென்ற ஆண்டினைப் போல - இந்த ஆண்டு சதய விழாவினைக் காண இயலவில்லை.. எனினும்,

மாமன்னனை நினைவு கூரவில்லை எனில் மனம் ஆறாது..

எனவே, சென்ற ஆண்டு நான் எடுத்த சில படங்களும் இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ளன.


சோழப் பேரரசை மீண்டும் நிர்மாணித்து புலிக்கொடியை ஏற்றியவர் விஜயாலய சோழர்( கி.பி.848- 871).

ஆயினும்,

சோழப்பேரரசின் புலிக்கொடி மகோன்னதமாக கடல் கடந்தும் பட்டொளி வீசிப் பறந்திடக் காரணமாக விளங்கியவன் - மாமன்னன் ராஜராஜ சோழன்.

ஐப்பசி சதய நட்சத்திரத்தில் (கி.பி.947) சுந்தர சோழருக்கும் {956 - 973} வானவன் மாதேவிக்கும் தோன்றிய அருந்தவப்புதல்வன்!..

தங்கத் தொட்டிலிலிட்டு - தாயும் தந்தையும் - சீராட்டிய போது, சூட்டி மகிழ்ந்த திருப்பெயர் - அருண்மொழிவர்மன்.

அருண்மொழியின் அன்புச் சகோதரன் - ஆதித்த கரிகாலன்.. மகத்தான வீரன்.

பாண்டிய நாட்டில் சோழப்பேரரசை நிறுவுதற்காக -  வீரபாண்டியனுடன் போர் செய்து அவன் தலையைக் கொய்தவன். 

அதன் காரணமாகவே பின்னாளில் படுகொலை செய்யப்பட்டு வீழ்ந்தவன்..


அன்புச் சகோதரி - குந்தவை நாச்சியார்..
நுண்ணறிவிலும் கலைஞானத்திலும் மிகச்சிறந்து விளங்கிய வீர மங்கை. அருண்மொழி சிவபக்தியில் சிறந்து விளங்கிடக் காரணமானவர்களுள் குந்தவையும் ஒருவர்.

மற்றொருவர் - செம்பியன் மாதேவியார்.

மகா சிவபக்தராகிய கண்டராதித்த சோழரின் பட்டத்து அரசி. 
பெரிய பிராட்டியார் எனப் புகழப்பட்டவர். 

கண்டராதித்த சோழர் சிவநெறிச் செல்வர். 
தில்லை ஆடவல்லானைத் தொழுது நின்ற தூயவர். 

இவர் இயற்றிய திருப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன.

அதுவரையிலும் சுண்ணாம்புச் சாந்தும் செங்கல்லுமாக விளங்கிய சிவாலயங்களை - கருங்கற்களைக் கொண்டு கற்றளிகளாக மாற்றிய பெருமையை உடையவர் - கண்டராதித்த சோழர்.

கணவரின் காலத்திற்குப் பிறகு சிவப்பணி செம்மலாக விளங்கியவர் -   செம்பியன் மாதேவியார்.

இவரது திருப்பெயரால் - இன்றும் தஞ்சை மாவட்ட கடற்கரை ஓரத்தில் விளங்கி வரும் ஊர் - செம்பியன் மாதேவிப் பட்டினம்.

தன் கொழுந்தனாரின் பேரப்பிள்ளைகளான குந்தவை, ஆதித்த கரிகாலன், அருள்மொழி ஆகியோரின் மீது அளப்பரிய பாசமும் நேசமும் கொண்டு வளர்த்த பெருமைக்கு உரியவர் செம்பியன் மாதேவியார்.

சோழ தேசத்தின் திருக்கோயில்கள் பலவற்றிலும் திருப்பணிகளை மேற்கொண்ட இவரது - வளர்ப்பினால் தான்,

அரியணை ஏறியதும் வானளாவிய ஸ்ரீவிமானத்துடன் பிரம்மாண்டமாக தக்ஷிணமேருவை தஞ்சைத் தரணியில் எழுப்பினான் - ராஜராஜ சோழன்!..
தனது தந்தை சிவகதி எய்திய பிறகு - அரியணை ஏறாமல்,

கண்டராதித்த சோழர் - செம்பியன் மாதேவியார் ஆகியோரின் மகனும் தனது சித்தப்பாவும் ஆகிய உத்தம சோழனை சோழ மண்டலத்தின் மன்னனாக ஆக்கி அழகு பார்த்தவன் - ராஜராஜ சோழன்!..

இந்த உத்தம சோழனே மதுராந்தகன் எனப்பட்டவன்.
செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள மதுராந்தக ஏரி - இந்த மன்னனின் சாதனை!..தென்னக வரலாற்றில் பொற்காலம் எனப் பெருமையுடன் குறிக்கப்படுவது ராஜராஜ சோழன் - ஆட்சி செய்தகாலமே!..


சங்கு சக்ர ரேகைகளுடன் மஹாவிஷ்ணுவின் அம்சமாகப் பிறந்தவன் - என மக்களால் கொண்டாடப்பட்ட - ராஜராஜ சோழன்,

குடஓலைத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு சோழ மண்டலத்தின் நிர்வாகத்தினை திறம்பட நடாத்தி -

மும்முடிச்சோழ மண்டலம் முழுமையையும் முறையாக அளந்து - நிலத்தின் தன்மைக்கேற்ப வரிவிதித்து - அதையும் கிராம சபைகளின் மூலமாக தணிக்கை செய்து நெறிப்படுத்திய பெருமைக்குரியவன்..தனது ஆட்சியின் நிகழ்வுகளை மக்களும் எதிர்வரும் சந்ததியினரும்  அறியும் பொருட்டு  ஆக்கி வைத்த கல்வெட்டுகள் மாமன்னனின் பெருமையைப் பேசிக் கொண்டிருக்கின்றன.. 


தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் நிலவறைக்குள் ஓலைச்சுவடிகளாகக் கிடந்த -  திருப்பதிகங்களைப் பெரும் முயற்சியால் மீட்டு -

திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அவர்களைக் கொண்டு தேவாரமாகத் தொகுத்தவன் - ராஜராஜ சோழன்!..

மூவர் அருளிய திருப்பதிகங்களைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு மீட்டளித்த அதனால்தான், சிவபாத சேகரன், திருமுறை கண்ட சோழன் - எனப் புகழ் கொண்டான்.

மும்முடிச்சோழன், ஜனநாதன், ஜயங்கொண்டான், சோழ மார்த்தாண்டன், ராஜ மார்த்தாண்டன், நித்ய விநோதன், பாண்டிய குலாசனி, கேரளாந்தகன் - என்பன மாமன்னன் ராஜராஜ சோழனின் சிறப்புப்பெயர்களுள் சில!..


சதய விழா - 2014 
மங்கலகரமாக நவராத்திரி வைபவங்கள் தொடர்ந்து நிகழ -
சதயத் திருவிழாவின் இரண்டாம் நாள் - இன்று..

திருக்கோயில் வளாகத்தில் விசாலமாக அமைக்கப்பட்டிருக்கும் அலங்காரப் பந்தலில் மங்கள இசையுடன் விழா நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

ஓதுவார்களின் திருமுறை அரங்கமும் அப்பர் சுவாமிகள் தேவார குழுவினரின் திருமுறை பாராயணங்களும் கருத்தரங்கமும் - எனத் தொடர்ந்து நிகழ்வுகள்..

மாலையில் பல்வேறு குழுவினரின் நாட்டியாஞ்சலி மற்றும் கலை நிகழ்ச்சிகள்.


நன்றி - தினமணி
இன்று காலையில் திருமுறை வலம். அதன்பின் -

ராஜராஜசோழனின் திருமேனிக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி. 

தொடர்ந்து -
நாற்பத்தெட்டு வகையான மங்கலத் திரவியப் பொருட்களால் ஸ்வாமிக்கும் அம்பிகைக்கும் சிறப்பு மஹா அபிஷேகம் நிகழ்வுறும்...


அபிஷேகங்கள் நிறைவுற்றதும் சிறப்பான அலங்காரத்துடன் பெருந்தீப வழிபாடு.

மாலைப் பொழுதில் இன்னிசை நிகழ்வுகளும் நாட்டியாஞ்சலி மற்றும் கருத்தரங்கமும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

அந்தி மயங்கும் வேளையில் -
ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்து தரிசித்து மகிழும் வண்ணம் -

மங்கல இசையுடன் திருக்கயிலாய சிவகண வாத்யங்கள் முழங்க, 
சர்வம் சிவமயம் என - பாரம்பர்ய பறையொலி கூத்தொலி முழங்க,
கைவளை குலுங்க காரிகையர் நிகழ்த்தும் கோலாட்ட கும்மி ஒலி முழங்க - 

ஸ்ரீ பெருவுடையார் ஸ்ரீ ப்ரஹந்நாயகி சமேதரராக பெரிய ரிஷப வாகனத்தில் திருவீதி உலா எழுந்தருள்வார்.

சதய விழா - 2014 
சதய விழா - 2014 
ராஜராஜ சோழன் உலா
அச்சமயத்தில், எம்பெருமானின் திருக்கோலத்தைத் தரிசித்தவாறே -
ராஜராஜ சோழனும் ராஜவீதிகளில் வலம் வந்தருள்வார்.

திரு உலாவின் போது - நான்கு ராஜவீதிகளிலும் உள்ள திருக்கோயில்களின் சார்பாக - ஈசனும் அம்பிகையும் மாமன்னனும் வரவேற்கப்படுவர்.

ராஜவீதி நெடுகிலும் மாலைகள் சாற்றப்பட்டு மங்கல ஆரத்தி எடுப்பதுடன் - மாமன்னனுக்கு பரிவட்டமும் கட்டி மரியாதை செய்து மகிழ்வர்.

இன்றைய தினம் தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..

மாமன்னன் ராஜராஜசோழனின் பேர் சொல்லவும் நாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும்..

மாமன்னனின் சிறப்புகள் எத்தனை எத்தனையோ!..
மீண்டும் வெளியிடப்படவேண்டும்


ராஜராஜ சோழன் வழிநடத்திய கடற்படையின் துணையினைக் கொண்டே - பின்னாளில் ராஜேந்திர சோழன்  கடாரம், ஜாவா, சுமத்ரா -ஆகிய நாடுகளை வென்று புகழ்க் கொடியினை நாட்டினான்.

ராஜராஜனின் கடல் கடந்த போர்களாக ஈழத்தின் மீதும், முந்நீர்ப் பழந்தீவுகள் பன்னீராயிரம் எனப்பட்ட மாலத்தீவுகளின் மீதும் தொடுக்கப்பட்ட போர்கள் குறிக்கப் படுகின்றன.

பெரும் சிவபக்தனாக விளங்கினாலும் வைணவ ஆலயங்களையும் புத்த விஹாரங்களையும் எழுப்பிய விவரத்தினை கல்வெட்டுகள் கூறுகின்றன.

தமிழகத்தின் கட்டிடக் கலைக்கும் பாரதத்தின் பெருமைக்கும் எடுத்துக் காட்டாக விளங்குவது - 

தஞ்சை ராஜராஜேஸ்வரம் எனும் பெருவுடையார் திருக்கோயில்.

வானளாவி நிற்கும் இத்திருக்கோயில் மாமன்னனின் இருபத்தைந்தாம் ஆட்சி ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. 

பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய பின் கேரளத்தில் படை நடத்தி - காந்தளூர்ச் சாலைக் களமறுத்தருளிய கோப்பரகேசரி எனப்புகழ் கொண்டான். 

கொடுமை மிகுந்த சிங்களர்களிடமிருந்து ஈழ நாட்டைக் கைப்பற்றப்பட்டது. 

சிங்களரை அடக்கியதுடன் கன்னடத்தின் கங்கபாடியும் நுளம்ப பாடியும் தடிகை பாடியும் மேலைச் சாளுக்கியமும் வேங்கை நாடும் சோழப்பேரரசுக்கு உட்பட்டன. ஆண்டுக்கு ஆண்டு அத்தனையையும் பேசிக் கொண்டிருக்கின்றோம்..

அத்தனை சிறப்புகளுக்கும் ஒரே அடையாளத்துக்குள் பொதிந்து கிடக்கின்றன..

ஆயிரம் ஆண்டுகளாக அணி கொண்டு விளங்கும் அந்த அடையாளம் -
இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பொலிந்து விளங்கும்..

விண் கொண்ட பெருமை எல்லாவற்றையும் தமிழும் தமிழ் மண்ணும் கொண்டு நிற்கும் வண்ணம் செய்த பெருந்தகை - சக்ரவர்த்தி ராஜராஜ சோழன்..

பார் கொண்ட பெருமையெல்லாம் ஊர் கொண்டு நிற்கும் வண்ணம் 
பேர் கொண்டு நிற்கின்றது பெரிய கோயில்!..

தேர் கொண்ட மாமன்னன்  
சீர் கொண்டு நின்றனன்!..
பெரும்பேர் கொண்டு நின்றனன்!.. 
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு!..  

திருவீதி கண்டருளும்  
சிவபாத சேகரனின் பெரும்புகழ் ஓங்குக!..
***