நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 28, 2021

தைப் பூசத் திருநாள்

  

இன்று 
தைப் பூசத்திருநாள்..


தமிழ் கூறும் நல்லோர்தம்
வழிபாட்டுக்குரிய
நன்னாட்களில்
தைப்பூசமும் ஒன்று..

தொன்மை வாய்ந்த
தைப்பூச வைபவத்தினை
ஞானசம்பந்தப்பெருமான்
தமது திருவாக்கினால்
திருமயிலைத் திருப்பதிகத்தில்
குறித்தருளியுள்ளார்..

திருநாவுக்கரசு ஸ்வாமிகளும்
தைப் பூச நன்னாளின்
மங்கல நீராடலைப் பற்றிப்
பாடியருள்கின்றார்..

ஸ்ரீ பெருவுடையார்
தஞ்சை

ஸ்ரீ சந்திரசேகரர் மனோன்மணி
உவரி

சிவாலயங்களிலும்
குமர கோட்டங்களிலும்
சிறப்பான வழிபாடுகள்..

திரு அரங்கத்திலும்
தைத்தேரோட்டம் சிறப்பு..



இந்நாளில்
நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
என வேண்டிக் கொள்வோம்..
***

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார்வயற் பொழில் செங்
கோடனைச் சென்று கண்டு தொழ
நாலாயிரங்கண் படைத்திலனே அந்த நான்முகனே!..
-: அருணகிரிநாதர் :-


கீழுள்ள
காணொளியில்
மலேஷிய நாட்டின்
பத்துமலை
ஸ்ரீ முத்துக்குமரனின்
தீப ஆராதனையைத்
தரிசிக்கலாம்..


அருட்பெருஞ்சோதி
அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி!..
***

இந்நன்னாளைப்
பொது விடுமுறை என
அறிவித்த
தமிழக அரசிற்கு
நன்றி..

வெற்றிவேல் முருகனுக்கு
அரோஹரா..
வீரவேல் முருகனுக்கு
அரோஹரா..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

செவ்வாய், ஜனவரி 26, 2021

இனிய பாரதம்

 

இன்று 
தாய்த் திருநாடு
குடியரசு ஆகிய நன்னாள்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

அனைவருக்கும்
அன்பின் இனிய
குடியரசு தின நல்வாழ்த்துகள்..



வெள்ளிப் பனிமலையின்
மீதுலவுவோம்  - அடி
மேலைக் கடல் முழுதும்
கப்பல் விடுவோம்..
பள்ளித் தலமனைத்தும்
கோயில் செய்குவோம் எங்கள்
 பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்!..







பாரத நாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர்
இந்நினைவகற்றாதீர்..
-: மகாகவி பாரதியார் :-

வாழ்க தமிழகம்
வளர்க பாரதம்..

ஜெய்ஹிந்த்
ஃஃஃ

ஞாயிறு, ஜனவரி 24, 2021

மானிடராதல்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவினில்
காணொளி ஒன்று - அது
கண்களைக் குளமாக்கும்
கருத்தினில் நின்று..


அரியது கேட்கின் வரி வடிவேலோய்
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
மானிடராய்ப் பிறந்த காலையும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்வராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே..
-: ஔவையார் :-

வாழ்க நலம் எங்கெங்கும்..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

புதன், ஜனவரி 20, 2021

தங்களுடன் 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

தை மாதத்தின்
மூன்றாம் நாள்..

காணும் பொங்கலன்று
தஞ்சை 
அருள்மிகு பெருவுடையார்
திருக்கோயில் தரிசனம்..


அழகிய படங்களை
Fb ல் வழங்கிய
நண்பர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
***








பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக..
வாழ்க நலம் எங்கெங்கும்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

செவ்வாய், ஜனவரி 19, 2021

தங்களுடன் 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

தை மாதத்தின்
மூன்றாம் நாள்..

கடந்த 16.1.21 அன்று
தஞ்சை மேலராஜ வீதியில்
நடைபெற்ற கோலப் போட்டியின்
சில காட்சிகள்..








படங்களில் 
ஸ்ரீ விஜயராமர் திருக்கோயில்
ஸ்ரீ பங்காரு காமாக்ஷியம்மன்
திருக்கோயிலின்
ராஜ கோபுரங்கள்
தரிசனமாகின்றன..

பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிடட்டும்..
வாழ்க நலம் எங்கெங்கும்..
ஃஃஃ

சனி, ஜனவரி 16, 2021

மங்கலப் பொங்கல்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை மாதத்தின்
மூன்றாம் நாள்..
காணும் பொங்கல்..

கிராமங்களில்
இளையோருக்கான
குறிப்பாக
இளம்பெண்களுக்கான
திருநாள்..

ஊர் மந்தையில்
அல்லது
கோயில் வாசலில்
கோலாட்டம் கும்மி - என
குதுகலிக்கும் நன்னாள்.

கிராம தேவதையை அழைத்துப்
பொங்கலிடும் வழக்கம்
தஞ்சை கும்பகோணம்
பகுதிகளில்
இன்றும் நிகழ்கின்றது..
***
இன்றைய கவிதை
அன்பின் ஸ்ரீராம் அவர்கள்
எபியில் கொடுத்த
ஈற்றடிக்கானது..

அவர் தமக்கு நன்றி..


வேளை விடியல் என்று வெள்ளியன்று நீராடி
பாளைப் பனி முகத்தில்
புதுமஞ்சள் திலகமிட்டு
நாளை நமது என்று
நகர்வீதி நடந்துவந்தால்
காளைக்கும் வந்திடுமே காதல்..
***



பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிடட்டும்..

பொங்கலோ பொங்கல்..
பொங்கலோ பொங்கல்..
ஃஃஃ

வெள்ளி, ஜனவரி 15, 2021

ஆநிரைச் செல்வம்..

 செல்வம் பசு..

உண்மையில் பசு தான் செல்வம்..


இதனால் தான் ஐயன் திருவள்ளுவர் -
கல்வியின் பெருமையைக் கூறும்போது

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை..

- என்று சிறப்பிக்கின்றார்..

கல்விதான் செல்வம்.. அதைவிடப் பெருஞ்செல்வம் வேறெதுவும் இல்லை.
செல்வம் என்பதனை மாடு எனும் சொல்லால் குறிப்பிடுகின்றார்...

தேவாரத் திருமுறைகளிலும் இவ்வாறே அருளப்படுகின்றது..

மருவி நின்பாதம் அல்லால் மற்றொரு மாடிலேனே!...

எம்பெருமானே.. நினது திருவடிகளை அன்றி மற்றொரு செல்வம் இலேன்!..
- என்று உருகுபவர் திருநாவுக்கரசு ஸ்வாமிகள்...

பொருள் எனும் செல்வத்தைப் பாதுகாத்த நாம் -
பசு எனும் செல்வத்தைப் பாதுகாத்தோமா!.. என்றால்

இல்லை!.. - என்பதே விடை..


இப்படி ஒரு சூழல் எதிர்காலத்தில் வரும்!..
- என்பதனை உணர்ந்திருந்த நம் முன்னோர்கள்
தை மாதத்தின் இரண்டாம் நாளை கால்நடைச் செல்வங்களுக்கானதாக உருவாக்கித் தந்தார்கள்...

ஆனால், நாம் உள்ளத்தில் கொள்ளவில்லை...

பெரும்பாலும் ஏழையின் வீட்டில் கூட கன்றும் பசுவும் இருந்தன ஒரு காலத்தில்...

அதனால் தான் 99% ஆரோக்கியம் நிலவியது கிராமங்களிலும் நகரங்களிலும்...


நாம் எல்லாரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே!..

ஏனெனில், வேளாண்மை தானே உலகின் ஆதி!..


உலகின் முதல் மனிதன் மண்ணில் கை வைக்காது இருந்திருந்தானே ஆயின் -
இம்மண்ணுலகு மண்ணுலகாகவே ஆகியிருக்கும்...

அப்படி அவன் காப்பதற்கு முனைந்தபோது
அவனுக்குத் தோள் கொடுத்து நின்றவை - காளைகள்..

அதனால் தான்
தான் வணங்கிய ஈசனுக்கு அருகில் கொண்டு போய் காளையை வைத்தான்...

கடவுளை வணங்கியதோடு காளையையும் வணங்கினான்...

தனது வாழ்க்கைக்குத் துணையாய் இருந்த அத்தனைக்கும் வணக்கத்தையும் மரியாதையையும் செலுத்தினான்..


இதனை உய்த்துணராத மூடர்கள் -

கல்லை வணங்குகின்றான்...
காற்றை வணங்குகின்றான்..
மண்ணை வணங்குகின்றான்... மரத்தை வணங்குகின்றான்...
மாட்டையும் வணங்குகின்றான்... காட்டுமிராண்டி!..

- என்று கதைத்து வைத்தார்கள் கருத்தழிந்தவர்களாய்!....,.

இப்படி இவன் இவற்றைச் சிறப்பித்து வணங்கி
அடுத்த தலைமுறையினரிடம் கொடுத்திராவிட்டால் -

கருத்தறிந்து கதைத்தவர்களும் காட்டுமிராண்டிகளாகவே இருந்திருப்பார்கள்..


வேளாண்மையும் தாளாண்மையும் தான் தமிழனின் முதுகெலும்பு...
அதனுள் ஓடும் உயிர் நாளம் தான் கால்நடைச் செல்வம்!..

- என்பதைப் புரிந்து கொண்ட ஆதிக்க வெறி பிடித்த அந்நியர்கள்
உயிர் நாளத்தை அறுத்து முதுகெலும்பை முறிக்க முனைந்தார்கள்..

அதிலே வெற்றியும் கண்டார்கள்..

அதன் விளைவாக -
இன்றைக்கு கிராமங்களில் கூட
கால்நடைகள் அறுகிப் போயின...

பாரம்பர்யங்களை மாற்றியதால்
கழனிகளும் களங்களும் கருகிப் போயின...

கால்நடைகளின் அழிவினால்
இயற்கை எருவிற்குப் பஞ்சமானது..
இரசாயனங்களைக் கொட்டியதால் வயல் வெளியும் பாழானது...

நாட்டுப் பசு ஒரு வேளைக்கு உழக்கு பால் கொடுப்பதே அரிது..

ஆனால், அந்த உழக்குப் பாலின் துளிகள் அத்தனையும் அமுதமாக இருந்தன..


காலம் மாறிய சூழ்நிலையில்
நாட்டுப் பசுவுக்கு மாற்றாக செயற்கை முறையில்
கருவூட்டப்பட்ட பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டன...

இதன்பின் -
ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருந்த
நாட்டுப் பசுக்களும் செயற்கைக் கருவூட்டலுக்கு ஆளாயின...

அதனால் பொலி காளைகளுக்கு வேலை இல்லாமல் போனது..

ஏறு எனப்பட்ட காளைகள்
தமது இணைகளின் முகங்களைப் பாராமலேயே -
கொலைக் களத்தில் வெட்டி வீழ்த்தப்பட்டு
வீட்டுச் சட்டிக்குள் கொதித்து அடங்கின...


காளையின் தழுவல் இல்லாமல்
கருவுற்ற பசுக்கள் - கன்றினை ஈன்ற பின்
குடம் குடமாக பாலைக் கொடுக்கும் - என்று எதிர்பார்த்தால்
ஏமாற்றமே மிச்சமாகப் போனது பேராசைக்காரர்களுக்கு...

அத்தோடு விடாமல் பால் சுரப்புக்கு என்று ஒரு மருந்தைக் கண்டுபிடித்து
கறப்பதற்கு முன்பாக அந்த மருந்தை ஊசி மூலம் பசுவிற்குச் செலுத்தி
தனது ஆசையைத் தணித்துக் கொண்டான் மனிதன்..

இப்போதெல்லாம் மாடுகளின் உலர் தீவனத்திலேயே
பால் பெருக்கத்துக்கான மருந்துகள் கலக்கப்படுவதாக சொல்கின்றார்கள்...

இப்படி கிரியா ஊக்கிகள் மூலமாகப் பெறுவதனால் தான்
தமிழகத்தில் இரவு பகல் எந்நேரமும் பால் தடையின்றி
கடைகளின் குளிர் சாதனப் பெட்டிக்குள் கிடக்கின்றது...

சரி.. இந்தப் பால் நல்லது தானா?..

இல்லை..

இந்தப் பாலே கிரியா ஊக்கிகளின் மூலமாகப் பெறப்பட்டது..

இப்படிப் பெறப்பட்ட பாலின் கட்டமைப்பும்
இரசாயனங்களின் மூலமாக மாற்றப்பட்டு விடுகின்றது..

ஒருகாலத்தில் பாலைக் காய்ச்சி
உறையூற்றி தயிராக்கி
அதைக் கடைந்து அதிலிருந்து
வெண்ணெயையும் மோரையும் பிரித்து
அந்த வெண்ணெயை உருக்கி
நெய்யாக்கினார்கள்..

ஒரு வீட்டில் வெண்ணெயை உருக்கினால் அந்தத் தெருவே மணக்கும்...

சர்.... சர்... சர்... - எனத் தயிரைக் கடைவதனால் எழுந்த சத்தத்துடன்
நறுமணமும் எழுந்து தயிர் கடைந்த ஆய்ச்சியர்களின் மீது படிந்திருந்தது!..

வாச நறுங்குழல் ஆய்ச்சியர்!.. - என்கின்றாள் சூடிக் கொடுத்த சுடர்க்கோடியாள்...

இன்றைக்குக் கடைகளில் விற்கப்படும்
செயற்கை நெய்யில் மணம் என்பதே இல்லை..

பாட்டில்களில் அடைபட்டிருக்கும் நெய்யைப் போட்டுக்
கொளுத்தினால் கூட நறுமணம் கமழ்வதில்லை...

நெய்யில்லா உண்டி பாழ்!.. - என்றார் ஔவையார்..

ஔவையாரை விட அறிவாளியாகிய
இன்றைய நவீன மருத்துவம்
நெய்யை நினைத்துக் கூடப் பார்க்காதே!.. - என்கின்றது..

இதிலிருந்தே உண்மையினை உணர்ந்து கொள்ளலாம்...

ஆயிரம் ஆயிரம் டன் கணக்கில்
ஆஸ்திரேலியாவிலும் ஐரோப்பாவிலும்
வெண்ணெயையும் நெய்யையும் தயாரித்து
அவற்றை உலகின் பல நாடுகளுக்கும்
ஏற்றுமதி என - அனுப்பி வைக்கின்றார்கள்..

இவை நல்லவை தானா?.. 
இவற்றைக் கொண்டு தயாராகும் உணவு வகைகளை நாளும் உண்பவர்களின் கதி!?...

சந்தேகமின்றி மருத்துவமனை தான்!..

இந்த நிலைமை நமது நாட்டிலும் பரவிக் கொண்டிருக்கின்றது...

இதைப் பற்றி இன்னும் எழுதலாம்..
ஆயினும் அவற்றை வேறொரு பொழுதில் சிந்திப்போம்...


தஞ்சாவூர் பெரிய நந்தி..

ஆகவே, இன்றைய நிலையில்
நலம் நாடுவோர் எவராயினும் இயன்றவரைக்கும்
பழைய வாழ்க்கை முறையைக் கடைபிடித்தல் அவசியமாகின்றது...

இனிவரும் நாட்களில் நாட்டுப் பசுவையும் அதன் பாலையும் ஆதரிப்போம்..

இப்போது கூட தமிழகத்தின் பல பகுதிகளிலும் நாட்டுப் பசுவின் பால் விற்பனை செய்யத் தொடங்கி விட்டார்கள்..ஆனாலும் விலை சற்று அதிகம்..

தேவை அதிகம்.. உற்பத்தி குறைவு..
நாட்டுப் பசுவிற்கு பராமரிப்பும் சற்று அதிகம்..

எல்லாரும் நாட்டுப் பசுவின் பாலை ஆதரித்தால்
உண்மையான பசுமைப் புரட்சி ஏற்பட வாய்ப்புண்டு...

அந்த நாளை ஆவலுடன் வரவேற்போம்!..

வீட்டில் கால்நடைகள் இல்லாவிட்டாலும் அவற்றின் நலனுக்காக பொங்கல் வைத்து விளக்கேற்றி வேண்டிக் கொள்வோம்..


ஆநிரைகளை வாழ வைப்பதுவே
உண்மையான மாட்டுப் பொங்கல்!..

ஆநிரைகள் வாழ்ந்தால் 
அதனை அண்டியுள்ள மக்களும் 
நலமுடன் வாழ்வர் என்பது திண்ணம்..

ஆன்றோர்கள் காட்டிய வழியில்
ஆநிரைகளைக் காத்து நிற்போம்!..
ஆநிரைகளின் நல்வாழ்வினுக்கு
வேண்டிக் கொள்வோம்!..


வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே!.. (3/54)
-: திருஞானசம்பந்தர் :-

வாழ்க நலம்.. வளர்க வளம்!. 
***