நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 31, 2024

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 18
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
 -: திருப்பழநி :-

தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த
தனத்ததன தான தந்த ... தனதான


மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை 
யேபு ரிந்து வகைக்குமனு நூல்வி தங்கள் ... தவறாதே

வகைப்படிம நோர தங்கள் தொகைப்படியி நாலி 
லங்கி மயக்கமற வேத முங்கொள் ... பொருள்நாடி

வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி 
னைந்து மிகுத்தபொரு ளாக மங்கள் ... முறையாலே

வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து
 மிகுக்குமுனை யேவ ணங்க ... வரவேணும்..

மனத்தில்வரு வோனெ என்று நடைக்கலம தாக வந்து மலர்ப்பதம தேப ணிந்த ... முனிவோர்கள்

வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கி
மருட்டிவரு சூரை வென்ற ... முனைவேலா

தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம நந்து
செகத்தைமுழு தாள வந்த ... பெரியோனே

செழித்தவளமே சிறந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த திருப்பழநி வாழ வந்த ... பெருமாளே...
-: அருணகிரிநாதர் :-


மனதில்  கவலை ஏதும் இல்லாமல், உனக்கு 
அடிமை செய்யும் பணியையே கொண்டு
வகையான நீதிகளில் இருந்து தவறாமல்,

 எண்ணங்கள் யாவும் நல்ல 
முறையில் அமைந்து,

சந்தேகம் தீர வேதத்தின் மெய்ப்பொருளை ஆராய்ந்து,
இருவினைக்குரிய பாதகங்களைத் தொலைத்து விட்டு
 மகிழ்ச்சியுடன் உனைத் தியானித்து,

மேலான பொருள் கொண்ட ஆகமத்தின் விதிப்படி, கோபத்தை  முற்றிலுமாகத் துறந்து , மகிழ்ச்சியுடன் கடமைகளைச் செய்து

 மேம்பட்டு விளங்குகின்ற
உனையே வணங்குவதற்கு வரவேணும்..


 வருவாய் எனத் தியானித்து
உனது அடைக்கலம் என்று  வந்து சேர்ந்து - மலர்த் திருவடிகளைப் பணிந்த முனிவர்களுக்கும்,

 யோகியர்க்கும் தேவர்களுக்கும், மனம் இரங்குபவனே..
அனைவரையும் அச்சுறுத்தி  நின்ற அசுரர்களைக் கூரிய வேலால் வென்றவனே,

 தினைப்புனத்திற்கு முன்னே நடந்து 
குறவர் தம் கொடியாகிய வள்ளியை மணந்து,
 
 உலகம் முழுவதையும் ஆட்கொண்ட பெரியவனே,
 செழித்து வளம் நிறைந்த சோலைகள் விளங்குகின்ற
 திருப்பழனி வாழ்வதற்காக வந்த பெருமாளே..
**
முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், மே 30, 2024

கருட சேவை 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 17 
வியாழக்கிழமை


வைகாசி 16 புதன் கிழமையாகிய நேற்று - தஞ்சை மாநகரில் மகோன்னதமான கருடசேவை வைபவம்.. 

ஆயிரக்கணக்கான மக்கள்  தரிசித்து பரவசம் எய்தினர்.. 

வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்தோர் சிறப்பான வைபவம் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்... 

கீழ ராஜவீதி தெற்கு ராஜவீதி மேல ராஜவீதிகளில் - காலையில் இருந்தே பக்தர்களுக்கு சித்ரான்னங்கள் வழங்கப்பட்டன.. 

வைபவத்தை இயன்ற வரை காட்சிப்படுத்தியுள்ளேன்..

இந்த அளவுக்கு கருட வாகனனின் கருணை..

அடியேனுக்கு ஆயுள் ஆரோக்கியத்தை அருளியுள்ளான்..

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார்


ஸ்ரீ நீலமேகப்பெருமாள்
ஸ்ரீ வீர நரசிம்மர்


ஸ்ரீராம ராம..தெற்கு ராஜவீதி   மண்டபம் ஒன்றில் கல்யாண விருந்து போல நடத்தியிருக்கின்றனர்..

ஒரே ஒரு குறை... 
ராஜ வீதிகள் எதிலும் பொது சுகாதார வசதி இல்லாதது தான்...

இருப்பினும்,
பெருமாள் எவ்வித சிரமமும் ஏற்படாமல் அருளினார்..

அதுவே நிறை மங்கலம்!.. 

தொடர்ந்து  இன்று நவநீத சேவை நடைபெறுகின்றது..

ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர்
சுங்காந்திடல்

குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்  அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்  நாராயணா என்னும் நாமம்.. (956)
-:
திருமங்கை ஆழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
***

புதன், மே 29, 2024

சந்தனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 16  
புதன் கிழமை

இன்று
தஞ்சை மாநகரில் 
மகோன்னத கருடசேவை..சந்தனம்..

சந்தனம் நமது பாரதத்திற்கே உரியதாகும்..


இயற்கையாகவே நறுமணம் கொண்டது..
வெப்பமும் குளிர்ச்சியும் உடையது..

உவர் நிலம் தவிர்த்து ஏனைய நிலங்களில் வளரக்கூடியது..

வறண்ட நிலமாக இருந்தாலும் சந்தனக் காட்டில் அடிக்கடி மழை பெய்யும்..

உடல் சூட்டை தணிக்கும் சித்த வைத்திய முறைகளில் சந்தனமும் ஒன்று..

சந்தனக்கட்டையைத் தேய்த்து நீரில் கரைத்து அருந்தினால் வந்தால் இரத்தம் தூய்மையடையும்.. உடலுக்குக் குளிர்ச்சி உண்டாகும்..

அறுபது ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டில் சந்தனச்சுள்ளி, வெட்டிவேர், நன்னாரி வேர் இடப்பட்ட நீரைக் குடிக்கின்ற வழக்கம் இருந்தது..


சந்தனத்தின் நறுமணம் -
மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகின்றது.. 

இறை வழிபாட்டிற்கு உகந்தப் பொருட்களுள் ஒன்று சந்தனம்.. அபிஷேக அலங்கார ஆராதனை - என,  அனைத்திலும் சிறப்பிடம்..கோயில்களில் எவ்வித அலங்காரத்திலும்  சந்தனக்காப்பு உயர்வானது..

சந்தனக் கட்டையைக் கல்லில் தேய்த்தால் திரள்கின்ற சாந்தினை உடம்பில் - குறிப்பாக மார்பில் பூசிக் கொள்வது பாரத  மக்களின் கலாச்சாரம் ஆகும்..

சந்தனத் திலகம் மங்கலகரமானது..
லக்ஷ்மி விளங்குகின்ற மங்கலங்களுள் சந்தனமும் ஒன்று..

இயற்கையாகவே செந்நிறம் கலந்திருந்தால் செஞ்சந்தனம். மிகவும் உயர்வானது.. செஞ்சந்தனம் ஸ்ரீ வைரவர், ஸ்ரீ வீரபத்ரர் வழிபாட்டிற்கு உரியது.. 

சற்றே வெளுத்த மஞ்சள் நிறத்தை உடைய சந்தனம் இயல்பானது.. மாநுட மங்கலங்களுக்கு உரியது..

வெளுத்த நிறத்தை உடையது வெண் சந்தனம்.. இதுவும் இயற்கையானதே..  

முறையான ஆயுர்வேத சித்த மருத்துவ முறைகளில் சந்தனத்திற்கு தனியிடம் உண்டு.

சந்தன மரத்தில் இருந்து சந்தனத் தூள்  எண்ணெய் தைலம் சந்தன மெழுகு (அகர்)
போன்ற  உப பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன..

சிந்தனை நரம்புகள் ஒன்று கூடும் இடம் எனக் குறிப்பிடப்படுவது
இரு புருவங்களுக்கு நடுவில் - ஆக்ஞா சக்கரம்.. 

புருவ மத்தியில் பெருவிரல் அல்லது சுட்டு விரலை
வைத்தால், மனதில் ஒரு விதமான உணர்வலை தோன்றி உள்ளார்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும்.. 

ஆக்ஞா சக்ரமாகிய
இந்தப் புள்ளி உயர் படிநிலைகளுக்கு அடிப்படை.. 

இந்தப்புள்ளியை அபிசார மாந்திரீகர்கள் வேறு விதமாகக் கையாள்வர்..

இதைப் பற்றி பொது வெளியில் பேசக் கூடாது..


புருவ மத்தியில் திலகம் வைப்பது
அபிசாரங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகவே..

சந்தனத்தை முறையாகப் பயன்படுத்தினால் நல்ல விவேகமும் மனமகிழ்ச்சியும் அதனால் நேர்மறை விளைவுகளும் ஏற்படும் என்பது ஆன்றோர் வாக்கு..

சந்தனம் சேர்ந்த பெயரை - 
சந்தனலிங்கம், சந்தன பாண்டியன், சந்தனத்தேவன்,
சந்தனவீரன், சந்தனமாரி, சந்தனவல்லி - என்று, தாமும் வைத்துக் கொள்பதில் பெருமை கொண்டவர்கள் தமிழர்கள்..

பழங்காலத்தில் அழகின் அழகு என, பெரிதும் பயன்படுத்தப்பட்டது சந்தனமே..

இப்போதும் அழகூட்டுகின்ற பொருட்களில்
சந்தனத்தின் பெயரைக் கேட்டு தான் மக்கள் ஏமாறுகின்றனர்..

இன்று சாலையோரக் கடைகளில் சந்தனம் என்று விற்கப்படுவது  - சந்தனமே அல்ல!..

இன்றுள்ள புதிய விதிகளின்படி நல்ல சந்தனக் கட்டையை வனத்துறையின் மூலமாக (விலை கொடுத்து) வாங்கி  முறையான அத்தாட்சியுடன் வீட்டில் வைத்திருக்கலாம்...


வைத்தீஸ்வரன் கோயிலில் கார்த்திகை தோறும் ஸ்ரீ செல்வ முத்துக்குமரனுக்கு நிகழ்த்தப்படுகின்ற சந்தனாபிஷேக தீர்த்தம் வெகு சிறப்புடையது..

அந்தண்மதி செஞ்சடைய ரங்கணெழில் 
கொன்றையொ டணிந்தழகராம்
எந்தமடி கட்கினிய தானமது 
வேண்டிலெழி லார்பதியதாம்
கந்தமலி சந்தினொடு காரகிலும் 
வாரிவரு காவிரி யுளால்
வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர் 
சிந்துமயி லாடுதுறையே..3/70/2
-: திருஞானசம்பந்தர் :-

தண்காட்டாச் சந்தனமுந் தவள நீறுந்
தழையணுகுங் குறுங்கொன்றை மாலை சூடிக்
கண்காட்டாக் கருவரைபோ லனைய காஞ்சிக்
கார்மயிலஞ் சாயலார் கலந்து காண
எண்காட்டாக் காடங் கிடமா நின்று
எரிவீசி இரவாடும் இறைவர் மேய
வெண்காடே வெண்காடே என்பீ ராகில்
வீடாத வல்வினைநோய் வீட்ட லாமே.  6/93/9
-: திருநாவுக்கரசர் :-

அரைவிரி கோவணத்தோ
  டரவார்த்தொரு நான்மறைநூல்
உரைபெரு கவ்வுரைத்தன்
  றுகந்தருள் செய்ததென்னே
வரைதரு மாமணியும்
  வரைச் சந்தகி லோடும் உந்தித்
திரைபொரு தண்பழனத்
  திருநாகேச் சரத்தானே.. 7/99/5
-: சுந்தரர் :-
 நன்றி 
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***
செவ்வாய், மே 28, 2024

கருட சேவைநாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 15
செவ்வாய்க்கிழமை
வைகாசி திருவோணம்


தஞ்சை மாமணிக் கோயில்!..


ஸ்ரீ வைகுந்த வாசன் இத்தலத்தில் - திருமங்கை ஆழ்வார் தமக்கு, வைகாசி திருவோண நாளன்று
கருட வாகனத்தில் 
தரிசனம் நல்கியதாக ஐதீகம்..

இத்தலத்தில்
ஸ்ரீ துவாதச கருடாழ்வார் - என்று அழைக்கப்பட்ட ஸ்வாமிகளால் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு பன்னிரண்டு கருட சேவை எனத் தொடங்கி வைத்த வைபவமானது இன்றைக்கு இருபத்தைந்து கருட சேவை - என, அன்பர்களால் நடத்தப்பட்டு வருகின்றது..

முன்னதாக ,
இன்று வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் சந்நிதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெறுகின்றது..

தொடர்ந்து நாளை புதன்கிழமை மாபெரும் கருட சேவை..

திருமங்கை ஆழ்வார்
அன்ன வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் பெருமாளைச் சேவித்த வண்ணம் முதலில் செல்வார்.. 
அவரைத் தொடர்ந்து 
1) ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோதை நாச்சியாருடன் எழுந்தருள்வார்...  

தொடர்ந்து -
வெண்ணாற்றங்கரை
2) ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாள், 
3) ஸ்ரீ வீரநரசிம்மப் பெருமாள்,   
4) ஸ்ரீ கல்யாண வெங்கடேசப் பெருமாள், 

பள்ளியக்ரஹாரம்
5) ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி, 
வேளூர் 
6) ஸ்ரீ வரதராஜப் பெருமாள்

சுங்கான்திடல் 
7) ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள், 

கரந்தை 
8) ஸ்ரீ யாதவக் கண்ணன்,
கரந்தை - வாணியர் தெரு
9) ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள், 
 
கொண்டி ராஜ பாளையம்
10) ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்வாமி 
11) ஸ்ரீ கோதண்டராமர், 

கீழ ராஜவீதி 
12) ஸ்ரீ வரதராஜ பெருமாள், 

தெற்கு ராஜவீதி 
13) ஸ்ரீ கலியுக வெங்கடேசப் பெருமாள்,

ஐயன் கடைத்தெரு பஜார் 
14) ஸ்ரீ ராமஸ்வாமி, 

எல்லையம்மன் கோயில் தெரு 
15) ஸ்ரீ ஜனார்த்தனப் பெருமாள், 

கோட்டை 
16) ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், 
17) ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள், 
18) ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள்,

மேல ராஜவீதி
19) ஸ்ரீ விஜயராம ஸ்வாமி, 
20) ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி 

சகாநாயக்கன்தெரு  
21) ஸ்ரீ பூலோக கிருஷ்ண ஸ்வாமி,

மகர்நோம்புச்சாவடி 
22) ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி,
23) ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், 
 
கொள்ளுப்பேட்டைத்தெரு
24) ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி, 

மேட்டுத் தெரு
25) ஸ்ரீ வரதராஜப் பெருமாள் 

- என, இருபத்தைந்து கோயில்கள்..

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த பெருமாள் கோயில்கள் பதினெட்டு..
மற்றும் பிற  கோயில்கள் ஏழு - என மொத்தம் இருபத்தைந்து கோயில்கள்..

இருபத்தைந்து கோயில்களில் இருந்தும் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி -   தஞ்சையின் ராஜ வீதிகளான கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜ வீதிகளில் சேவை  சாதித்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்..

வியாழன்று 
 பதினாறு கோயில்களின்
நவநீத சேவை - வெண்ணெய்த் தாழி மகோற்சவம்..  

காலை எட்டு மணியளவில் கொடிமரத்து மூலையில் புறப்பட்டு - ராஜவீதிகளில்    அனைவருக்கும்
நவநீத சேவை
தரிசனம்... 

எதிர் வரும் வெள்ளிக் கிழமையன்று அந்தந்தக் கோயில்களில் விடையாற்றி விழா..

இன்றைய பதிவின் காட்சிகள் சென்ற ஆண்டின் கருட சேவை..
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்  
எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி  
அவருயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாம் சோலை மா மதிள் தஞ்சை 
மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் 
நாராயணா என்னும் நாமம்.. 953
-: திருமங்கையாழ்வார் :-

அனைவரும் வருக
கருட சேவை காண்க..
நல்லருள் பெறுக
நலமுடன் வாழ்க..
**
ஓம் ஹரி ஓம் 
நமோ நாராயணாய  
***