நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 13, 2024

அஞ்சறை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 30 
திங்கட்கிழமை


அந்தக் காலத்து சமையலறைகளில் சிறியதான  பெட்டி  ஒன்று இருக்கும்..

அஞ்சறைப் பெட்டி என்பர்..

அதனுள்ளிருக்கும் பொருட்கள் - மஞ்சள், சீரகம், சோம்பு, மிளகு,
வெந்தயம், கடுகு, பெருங்காயம், பட்டை, கிராம்பு, ஏலக்காய்  என்பவை.. 

ஐந்து அறை - அஞ்சறை என்றாலும் ஏழு, ஒன்பது என்ற அளவிலும் அவரவர் தேவைக்கு அமைத்திருப்பர்.. 

அடுப்பு மேடையில், கைக்கு அருகில் உப்பு இருக்க -
இதர பொருட்களான மல்லி, மிளகாய், பருப்பு வகைகளை தனித்தனியே அடுக்கு கலன்களில் வைத்திருப்பர்..

அஞ்சறைப் பெட்டி,  அடுக்கு கலன்களை மஹா லக்ஷ்மியாகப் பாவித்து திலகம் வைத்து தூப தீப ஆராதனைகள் செய்வதுண்டு..

இன்ன குழம்பு என்று தீர்மானம் ஆனதும் அஞ்சறைப் பெட்டியில் இருந்து மஞ்சள் முதலானவற்றை எடுத்து அம்மியில் வைத்து நீர் தெளித்து அரைத்து சாந்தாக 
வழித்தெடுப்பர்.. 

அம்மா முதற்கொண்டு தங்கை வரை இந்தக் கைங்கர்யத்தில் ஈடுபடுவர்.. 

கூட்டுக் குடும்பங்களில் நாளுக்கு ஒருவர் என்றாலும் அனைவருடைய பங்களிப்பும் தவறாமல் இருக்கும்..

நாளடைவில் நாகரிகம் மாற்றப்பட்டு விட - 
கொள்ளையர்கள் நாட்டுக்குள் புகுந்து பரவிய மாதிரி கொள்ளை நோய்களும் பரவின..

நமது பாரம்பரிய வாழ்க்கை முறையும் இதற்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது..

குடும்பத்திற்காக ஆண்கள் பொருள் ஈட்டிய காலம் கடந்து பெண்களும் பொருள் ஈட்டுவதே நாகரிகம் என்று ஆக்கப்பட்ட நிலையில் -

நல்ல சாப்பாட்டிற்கு ஆறு நாள் தவமாய்த் தவம் கிடந்து -

ஏழாம் நாள் உணவகத்தை நாடினால் அங்கே கலப்படம்.. கலப்படம்..

உணவகத் தொழிலில்
இன்றைக்கு தொட்டது தொண்ணூறும் மோசடியாகவே இருக்கின்றன..

மீண்டும் தற்சார்பு வாழ்க்கை எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்பது அவரவர் சூழ்நிலையைப் பொறுத்தது....

மஞ்சள் மற்றும் மிளகாய்ப் பொடிகளில் ஒவ்வாத நிறங்கள் கலப்பு..

துணிகளுக்கான நிறங்கள் கலக்கப்பட்டிருந்த மஞ்சள் மற்றும் மிளகாய் பொடிகள்  பறிமுதல் செய்யப்பட்டதாக  செய்திகள் வருகின்றன..

தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், அரசு அனுமதி எண் -  இதர குறிப்புகள் இல்லாமல் விற்கப்படுகின்ற மசாலாப் பொருட்கள் என்றைக்குமே ஆபத்தானவை.. 

உணவுப் பொருட்களில் கலப்படம் செய்தால் ரூ.5 லட்சம் வரை அபராதம் என்றும் சட்டம் இருக்கின்றதாம்.. 

இதை விட வேறு நல்ல தண்டனைகளை உணவுப் பொருள் கலப்படத்திற்கு வழங்கி அவற்றை உடனடியாக  நிறைவேற்றுதலே நல்லது..

கலப்பட மசாலாப் பொடிகள் - சிறுநீரகம்  கல்லீரல் - ஏனைய உள்ளுறுப்புகளில்  பாதிப்பு மற்றும் வேறு பல கடுமையான  பிரச்னைகளுக்கு வழி வகுக்கின்றன என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்..

எங்கள் வீட்டில் எந்த ஒரு மசாலாத் தூளையும் வாங்குவதில்லை..

விற்பனைக்கு வருகின்ற
மசாலாப் பொருட்களைத் தான் பயன்படுத்தியாக வேண்டும் என்ற சூழ்நிலையில் இருக்கின்றவர்கள் - இயன்ற வரை கவனமாக இருக்க வேண்டும்..

வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும்..
அது ஒன்று தான் பாதுகாப்பு..

கண்ணில் தென்படுகின்ற மசாலாப் பொடிகளை எல்லாம் நம்புகின்ற வெள்ளந்திகளாக இருக்காமல் விழிப்புணர்வு பெற வேண்டும்.. 

தரங்கெட்ட  மசாலாப் பொருட்களைத் தயாரிப்பவர் யார்?.. அவற்றைப் பயன்படுத்தும் உணவகங்கள் எவை?.. - என்றெல்லாம் தெருவில் இறங்கி ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்காமல் -

வீட்டுக்கு வெளியே உணவருந்திக் கொண்டாட்டம் போடுவதை முற்றாகக் கை விட வேண்டும்!.. 

அதுவே நல்லது..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

 1. அட, ரோடோரத்தில் விற்கும் தர்பூஸ் பழத்தில் கூட எதையோ ஊசி மூலம் கலந்து அக்கிரமம் செய்கிறார்கள்.  அப்புறம் என்ன சொல்ல...   மக்கள் மனசாட்சியை தொலைத்து விட்டார்கள்.  அது எங்கே போச்சோ.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மக்கள் மனசாட்சியைத் தொலைக்க வில்லை..

   வியாவாரிகள் தான்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம் ...

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  அருமையான பதிவு. அஞ்சறைப் பெட்டியின் மகத்துவத்தை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். இப்போது அவைகளை வீட்டுக்கு வீடு கண்கவர் பாட்டில்களில் அடுக்கி வைத்துக் கொள்கின்றனர். அதுதான் நாகரீகம் என ஆகி விட்டது.

  சாப்பிடும் அத்தனைப் பொருட்களிலும் ,ஏதோவொரு கலப்படம் வந்து விட்டது. அதற்கேற்ற மாதிரி, வியாதிகளும் பெருகி விட்டது. என்ன செய்வது? நல்ல ஆலோசனைகளை பதிவில் வழங்கியுள்ளீர்கள் . பதிவு அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /// வீட்டுக்கு வீடு கண்கவர் பாட்டில்களில் அடுக்கி வைத்துக் கொள்கின்றனர். அதுதான் நாகரீகம்///

   என்றாலும், தரமானவை என்றால் பிரச்னை இல்லையே..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   நீக்கு
 3. மிக நல்ல குறிப்பு. கலப்படம் இப்போ வியாபார முறையாகிவிட்டது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான்...

   தரம் இல்லாதவற்றை
   புறக்கணிப்பது ஒன்றே நமது இலக்கு..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ...

   நீக்கு
 4. நல்ல பதிவு. கூடுமானவரை வீட்டில் தயாரித்து கொள்ளலாம்.
  முன்பு கஷ்டபட்டு அம்மியில் அரைத்தோம், இப்போது தேவையானதை மிக்ஸியில் தயாரித்து வைத்து கொள்ளலாம்.
  கலப்படம் காலம் காலமாக இருக்கிறது, இப்போது இன்னும் அதிகமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   வாழ்க நலம்..

   நீக்கு
 5. நல்ல பதிவு துரை அண்ணா. நான் பெரும்பாலும் வீட்டிலேயேதான் எல்லாம் தயாரித்துக் கொள்கிறேன். அப்படியே கடைகளில் வாங்கினாலும் கவனமாக வாங்குவது வழக்கம். ஒரு சில பிரான்ட் வாங்குவதில்லை.

  தர்பூஸ் பழத்தில் கொண்டைப் பகுதியில் ஊசி போட்டு கெமிக்கல் சிரப் செலுத்துகிறார்கள். அது சுவையுடன் நல்ல இனிப்புடன் இருக்குமாம். ஆனால் பின் விளைவுகள் அதிகம்.

  சமீபத்தில் சுகாதாரத் துரை அமைச்சர் அவர்களுக்குக் கடும் வயிற்று வலி வந்து சரியாகாமல் எதனால் என்று பார்த்தப்ப அவர் அருந்திய தர்பூஸ் பழச்சாறு என்றுதெரிந்து, உணவுத்துறை அதிகாரி சென்னையில் சோதனை செய்ததில் எலி கடித்த பழங்கள், ஊசி போடப்பட்ட பழங்கள் எல்லாம் பய்னப்படுத்தப்படுகின்றன என்று கண்டுபிடிச்சதுல பல விற்பனையாளர்கள் பிடிபட்டாங்க.

  ஒரு காணொளி இருக்கு. அதில் அந்த் அதிகாரி சொல்வதும் எப்படி தர்பூஸ் மாம்பழம் வாழைப்பழம் எல்லாம் கலப்படமா என்பதைக் கண்டுபிடிக்கவும் டெமோ செய்து காட்டினார்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதெல்லாம் தெரிந்தவை தான்...

   மக்களுக்கு விழிப்புணர்வு வராத வரைக்கும் ஒன்றும் செய்ய முடியாது..

   அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   நன்றி சகோ..

   நீக்கு
 6. உண்ணும் உணவு எதிலும் கலப்படம் என்ற நிலை ஆகிவிட்டது. நாங்கள்தான் விழித்துக் கொள்ளவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான்..

   நாம் விழிப்பாக இருக்க வேண்டிய காலம்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி மாதேவி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..