நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 02, 2014

ஆலய தரிசனம் - 3

ஆலய தரிசனம் தொடர்கின்றது.

அருள் தரும் அபயாம்பிகையையும்  மயூரநாதரையும் தரிசனம் செய்தபின் - திருக்கோயிலில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வந்து - பத்து நிமிட இடைவெளியில் அருமையான காபியை பருகி விட்டு சீர்காழி செல்லும் பேருந்தில் அமர்ந்த போது மணி பத்தரை. 

சூரியனை மறைத்து மேகங்கள் விளையாடிக் கொண்டிருக்க  - அவ்வப்போது மழைச்சாரல்..

இருபத்தைந்து நிமிடங்களில்  - அதோ வைத்தீஸ்வரன் கோயில்!..


புள்ளிருக்குவேளூர் எனப் புகழப்படும் திருத்தலம்!..

வெண்மணல்  கொண்டு சிவலிங்கம் அமைத்து - 
மனிதர்களோ.. ரிஷிகளோ.. மகான்களோ.. தேவர்களோ...  அல்ல - 

இரண்டு கழுகுகள் வழிபட்ட திருத்தலம்!..

தக்கார் தகவிலர் என்பது அவரவர் 
எச்சத்தாற் காணப்படும்..

- என்பது வள்ளுவப் பெருமானின் திருவாக்கு!..

ஒருவர் மதிக்கத் தக்கவரா என்பது அவருடைய செயல்களால் கண்டுணரப் படும். அதே வேளையில் செயற்கரிய செய்தவர் எவராயினும் அவரை - மேலோர் எனக் கொள்வது மரபு.. அவ்வாறே -

ஐந்தறிவு ஜீவனாகப் பிறந்த சம்பாதியும் ஜடாயுவும் தமது செயலினால் - வானவரும் வணங்கத்தக்க நிலையை அடைந்தனர்.


ஸ்ரீராம கைங்கர்யத்தில் ஈடுபட்டு சீதா தேவியை தசகண்ட ராவணனிடமிருந்து மீட்கப் போராடி - தன்னுயிர் துறந்த ஜடாயு - ஸ்ரீ ராம பிரானின் தந்தை எனும் அந்தஸ்தினை அடைந்தான்!..

கீழைக் கடற்கரையில் - மலையிடுக்கினுள் சிறகுகள் அற்றுப் பதுங்கிக் கிடந்த சம்பாதி - ராம நாமத்தினைக் கேட்ட புண்ணியத்தினால் - மீண்டும் சிறகுகள் வளரப் பெற்றான்!..

பின்னாளில்  - அம்பிகையின் திருமுலைப்பாலுண்ட  திருஞானசம்பந்தப் பெருமான் - புள்ளிருக்கு வேளூரில் பதிகம் பாடியபோது  - பதிகம் முழுதும் சம்பாதியையும்  ஜடாயுவையும் போற்றிப் புகழ்ந்தார்!..

புள்ளிருக்கு வேளூர் எனும் திருத்தலத்தைனைப் போற்றி வணங்காமல் - வாழ்நாட்களை வீணாகக் கழித்து விட்டேனே!..  - என்று உழவாரச் செம்மல் திருநாவுக்கரசு ஸ்வாமிகள் மனம் வருந்துவதும் - அதனால் தான்!..

சூரியனின் தேரோட்டி - அருணன். அருணனின் சகோதரனே - கருடன்.
அருணனின் புத்திரர்கள் - சம்பாதியும் ஜடாயுவும்.

சம்பாதி மூத்தவன்.  ஜடாயு இளையவன்

வேறு வேலை ஏதுமற்ற ஒரு நடுப்பகல் நாளில், காற்றிலேறி - அந்தக் கதிரவனைத் தொட்டு விட ஆவல் கொண்டு பறந்தான் - ஜடாயு.

சாதிக்கும் ஆவலில் பறந்த ஜடாயுவைத் தடுக்காத - சம்பாதி, ஒரு கட்டத்தில் பதறித் துடித்தான். 

காரணம் - சூரியனின் வெப்பத்தால் ஜடாயுவின் சிறகுகள் கருகின. 

தனது தம்பியைக் காத்திட வேண்டி - அவனை முந்திச் சென்று அவனுக்கு மேலாக குடை விரித்தாற் போல பறந்து  ஜடாயுவைக் காப்பாற்றினான். 

அதற்குப் பலனாக அவனது சிறகுகள் கருகின. தனது ரத சாரதி அருணனின் மக்கள் என சூரிய தேவன் கருணைகொண்டான். 

அதனால் உயிர் பிழைத்த இருவரும் ஆளுக்கொரு திசையில் விழுந்தனர்.

தண்டகாரண்யத்தில் விழுந்து உயிர் பிழைத்த ஜடாயு தான் - சீதையுடன் தென்னிலங்கைக்கு விரைந்த ராவணனை வழி மறித்துப் போரிட்டவன்.

ஜடாயுவின் வீரத்தை எதிர் கொள்ள இயலாத ராவணன் - சிவபெருமான் அளித்த சந்திரஹாசம் எனும் வாள் கொண்டு சிறகை வெட்டி வீழ்த்தினான்.

சிறகிழந்த ஜடாயு பூமியில் விழுந்தான். ஸ்ரீராமனும் லக்ஷ்மணனும் சீதாதேவியைத் தேடி வரும் போது சீதை ராவணனால் கடத்தப்பட்ட செய்தியினைச் சொல்லி விட்டு உயிர் துறக்கின்றான்.


தன் கரத்தில் மரித்த ஜடாயுவை மார்புறத் தழுவிக்கொண்டு கண்ணீர் வடித்த ஸ்ரீராமசந்த்ரன் - ஜடாயுவுக்கு ஈமக்கிரியைகளைச் செய்து - வைகுந்தத்திற்கு ஏற்றுகின்றான்.

இந்த சம்பவம் நிகழ்ந்தது  இங்கே என்பது ஐதீகம்.

சூரபத்மனைத் தொலைப்பதற்கு தேவ சேனாபதியாக திருக்குமரன் பூதப் படைகளுடன் தென்திசைக்கு வரும்போது - இங்கே சிவபூஜை செய்ததாக தலபுராணம்.

மேலும் - ஸ்ரீராமனும் லக்ஷ்மணனும், நான்முகனும் சரஸ்வதியும், ரிக் வேதமும் சூரியனும் பராசரரும் துர்வாசரும் அங்காரகனும் - வணங்கிய திருத்தலம் எனக் குறிக்கப்படுகின்றது. 

பிறவிப் பிணி தீர்க்க மஹா வைத்யநாதனாக - பரமேஸ்வரன் எழுந்தருளிய போது அம்பிகை தைல பாத்திரத்துடன் ம்ருத்யு சஞ்சீவினி மூலிகையையும் திருக்கரத்தினில் ஏந்தி உடன் வந்த பெருமைக்கு உரியது இத்திருத்தலம்!..

ஈ எறும்பு என எண்ணாயிரங்கோடி யோனி பேதத்தில் தோன்றும் உயிர்களுக்கு ஏற்படும் நாலாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டு நோய்களையும் ஐயனும் அம்பிகையும் தீர்த்து வைப்பதாக ஐதீகம்.

ஐதீகம்  மட்டுமல்ல - கண்கண்ட உண்மை!..

பெருநிலப்பரப்பு, நஞ்சை புஞ்சை, தோட்டம் துரவு, ஆடம்பர மாளிகை , பெரிய வீடு - அதெல்லாம் விடுங்கள்!..

ஒரு குடிசையாவது நிரந்தரமாக அமைவதற்கு அங்காரகனின் துணை வேண்டும். ஏனெனில், அங்காரகன் தான் பூமிகாரகன்!..

ஆளுமை, நம்பிக்கை, நாணயம், வைராக்யம், கோபம், கண்டிப்பு, கம்பீரம் - இவைகளுக்கு அதிபதி. ரண சிகிச்சைகளுக்கு பலனை அளிப்பவன் அங்காரகனே!..


சிவப்பு நிறத்திற்கு அதிபதியாகி செவ்வாய் எனப்படும் அங்காரகனுக்கு  மங்களன் என்ற பெயரும் உண்டு.

திருமணத்தில் - செவ்வாயின் பங்கு அனைவரும் அறிந்ததே!..

போர் வீரர்கள் தொட்டு உள்ளூர் முரடன் வரைக்கும் அவர்களுடைய போராட்ட குணமாக - குருதியில் கலந்திருப்பவன் அங்காரகனே!..

அங்காரகன் குருதிக்குள் கட்டுப்பட்டானேயாகில் - உலகில் அடிதடி வெட்டு குத்து - இரத்தக் களறி ஆகியன இல்லாமல் போகும்!..

அத்தகைய அங்காரகன் சிவபூஜை செய்த தலம்.

குருதி கொதிப்பதால் - நோய்கள் உண்டாகின்றன என்கின்றது மருத்துவம்.

குருதியில் ஆட்சி செய்யும் அங்காரன் நம் குணத்தில் ஆட்சி செய்து  குளிர்ந்து நின்றால் - எவ்வளவு நல்லது!..

ஆனால் - கோபம் குறைய வேண்டும் என வேண்டிக் கொண்டே - கோபம் குறையாதபடி பார்த்துக் கொள்கின்றோம்!..


மேற்கு நோக்கிய திருக்கோயில்.

இருபுறமும் கடைகளுடன் கூடிய நீண்ட வழியினூடாக  நடந்து இரண்டு ராஜ கோபுரங்களைக் கடக்கின்றோம்.

வலப்புறம் சித்தாமிர்த தீர்த்தம்.


சித்தர்கள் - எம்பெருமானை  அபிஷேகித்த அமிர்தம் திரண்டு தீர்த்தமாக விளங்குகின்றது. திருக்குளத்தின் நடுவில் நீராழி மண்டபம்.

இத்திருக்கோயில் தருமபுர ஆதீனத்தின் சீரிய பராமரிப்பில் இருக்கின்றது .

திருக்குளத்தைச் சுற்றிலும் படித்துறையும் பிரகாரமும் செம்மையாக சுத்தமாக இருக்கின்றது.

ஆனாலும், பரிகாரம் என்ற பேரில்  - யாரோ எதையோ சொல்லிக் கொடுக்க - குளத்தில் நீராடுபவர்கள் - ஆடைகளை அங்கேயே கழற்றிப் போட்டு அசுத்தமாக்குகின்றனர்.


ஆடைகளைக் கழற்றிக் குளத்தில் போடாதீர்கள் - என அறிவிப்பு எழுதி வைத்திருந்தாலும் ஜனங்கள் கேட்பதாக இல்லை.

பாவம் தீர என்று கோயிலுக்கு வந்து விட்டு  - கோயிலிலேயே பாவம் செய்யாவிட்டால் எப்படி!?..

திருக்குளத்தைச் சுற்றி வந்து கரையேறும் போது - நேராக தரிசனம் தருபவள் - அன்னை தையல் நாயகி!..

இடப்புறம் கற்பக விநாயகர். அவரை வலம் வந்து வணங்குகின்றோம்.

நெடிதுயர்ந்த இரண்டு கொடி மரங்கள். வெள்ளிக் கொடிமரம் சற்றே சிறியது. 
 
கம்பீரமாக நந்தியம்பெருமான்.

நின்று வணங்கி நிமிர்ந்தால் - அம்பிகையின் சந்நிதி.

அவள் முன்பாக - அலங்கார அடுக்குத் தீபத்தில் நூற்றுக் கணக்கான தீபங்கள் சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றன.

அவளை ஒரு முறை வணங்கி விட்டு ஐயனின் சந்நிதிக்குள் நுறைகின்றோம்.

மேற்கிலிருந்து மூன்றாவது ராஜகோபுர வாசலின் இருபுறமும் கம்பீரமான துவார பாலகர்கள். அவர்களை வணங்கி விட்டு சந்நிதிக்குள் நுழையும் வழியில் வலப்புறம் அங்காரகன் சந்நிதி.


நேர் எதிரில் சிவசந்நிதி.
ஏற்றி வைத்த தீப ஒளியில் ஐயனின் திருக்கோலம்.

வெண்மணலில் திரண்டெழுந்த சுயம்பு மூர்த்தியான ஸ்ரீ வைத்யலிங்கம் .

கந்தவேள் திருக்கரத்தால் தொட்டு வணங்கிய சிவலிங்கம்!..

மகாவைத்யன், வைத்யநாதன், வைத்தீஸ்வரன் என்றெல்லாம் போற்றப்படும் பொன்னார் திருமேனியன்!..

ஜடாயுவுக்கும் சம்பாதிக்கும் நல்லருள் புரிந்த நாயகன்.

ஐயனையே பார்த்துக் கொண்டிருக்கின்றது மனம்.

ஏதொன்றும் நினைவில் இல்லை. அது வேண்டும் இது வேண்டும் என்று கூட கேட்கத் தோன்றவில்லை.  நாளும் கூறும் தேவாரம் கூட நாவில் எழவில்லை.

வேண்டத்தக்கது அறிவோய் நீ!.. - என நிர்மலமாகிப் போனது மனம்.

தீபஒளியில் திவ்ய தரிசனம் கண்டு மாமருந்தாகிய விபூதியினைப் பெற்று பஞ்சாட்சரத்துடன் தரித்தவாறே மூலஸ்தானத்தை வலம் வருகின்றோம்.

வடக்குத் திருச்சுற்றின் தொடக்கத்திலேயே - ஸ்ரீசெல்வ முத்துக்குமரனின் சந்நிதி!..


கந்தன் திருநீறணிந்தால் கண்ட பிணி ஓடி விடும் என்பார்கள். ஆனால் செல்வ முத்துக்குமரனைப் பார்த்த மாத்திரத்திலேயே பிணிகள் ஓடிப்போனதாக உணர்வு!..

திருச்செந்தூரில் பேசும் திறன் பெற்ற குமரகுருபரர் அங்கே கந்தர் கலிவெண்பா பாடினார். பின் மதுரையில் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் பாடினார். இங்கே முத்துக் குமரசாமி பிள்ளைத் தமிழ் பாடியிருக்கின்றார்.

கந்தப் பெருமானைக் கண்ணாரக் கண்டு வணங்கி - திருச்சுற்றில் நடக்க - திருக்கோஷ்டத்தில் ஸ்ரீ துர்கை!.. ஸ்ரீ சண்டேசரின் சந்நிதி..


கீழைத் திருச்சுற்றில் ஆளுக்கு ஒரு திசை என்றில்லாமல் - நவக்கிரக நாயகர்கள் - ஒரே வரிசையில் நிற்கின்றனர். அதனால் மூன்று சுற்று ஒன்பது சுற்று என்று சுற்றி வருவதற்கு இயலாது.

மேலும், தன்வந்திரியும் சாஸ்தாவும்  - வீற்றிருக்கின்றனர்.

தெற்குத் திருச்சுற்றின் திருக்கோஷ்டத்தில் - சனகாதி முனிவர்களுடன் ஸ்ரீதட்சிணாமூர்த்தி!.. மேல் மாடத்தில் ஸ்ரீ சட்டை நாதர் திகழ்கின்றார். எதிரில் சப்த மாதர்கள் விளங்குகின்றனர்.

இங்கேதான் - ஸ்ரீராமபிரான் ஜடாயுவை தகனம் செய்த குண்டம் இருக்கின்றது.

குண்டத்தைச் சுற்றி - ஸ்ரீராமலக்ஷ்மணர்களுடன் அனுமனும் முனிவர்களும் இருக்கின்றனர். ஜடாயு குண்டத்தில் வைக்கப்படும் விபூதி பிரசாதமாகின்றது.

குண்டத்தினை வலம் வந்து வணங்கி -  ஜடாயுவின் தியாகத்தினைப் போற்றுகின்றோம்.

உள் சுற்று முடியும் இடத்தில் வடக்கு நோக்கியதாக அங்காரகன் சந்நிதி.

செம்பட்டு அணிந்து செந்நிற மலர் மாலைகளுடன் அன்பு மயமாக அங்காரகன்.

அங்காரகனுக்கு பரிகாரத் தலம் ஆனதால் - பரபரப்பாக இருக்கின்றது. பரிகார பூஜைகள் நடந்து கொண்டிருக்கின்றன.  அங்காரகனை வணங்கி திருநீறு அணிந்து கொள்கின்றோம்.

மீண்டும் திருமூலஸ்தானத்தில் வைத்தீஸ்வர ஸ்வாமியை வணங்கிக் கொள்கின்றோம்.

அடுத்து - அன்னை தையல் நாயகியின் சந்நிதி.

சந்நிதியின் முன்னால் உயரமான அலங்கார அடுக்குத் தீபம்.

கூட்ட நெரிசல் ஏதும் இல்லையெனில் - இங்கு நின்றபடியே ஏக காலத்தில் ஐயனையும் அம்பிகையையும் தரிசனம் செய்யலாம்.


பெருந்தகையுடன் அமர்ந்த பெண்ணில் நல்லாள் அல்லவா!..
அம்பிகையின் ஆதுரம் அருள் விழிகளில் பிரகாசிக்கின்றது!..

தாயெனப் பரிந்து நோக்குகின்றனள்.
துயரெல்லாம் தூசு எனத் தொலைகின்றன.

தூயவளின் குங்குமம் நெற்றியில் மணக்கின்றது.
தொடரும் அன்பினில் கண்கள் பனிக்கின்றன.

அம்பிகையின் கருவறையை வலம் வந்து வணங்குகின்றோம்.

வெளித் திருச்சுற்றில் வடபுறம் ஸ்ரீ மகாகாளியின் திருச்சந்நிதி. அன்னையைப் பணிந்து நடந்தால் கீழ்த் திருச்சுற்றில் கணபதி, தண்டாயுதபாணி சந்நிதிகள்.

அங்கேயும் அங்காரகன் சந்நிதி. தெற்கு நோக்கியதாக விளங்குகின்றது.

வெளித் திருச்சுற்றில் தென்புறம் மேதா தட்சிணாமூர்த்தி சந்நிதி திகழ்கின்றது.


கொடிமரம். பலிபீடம். தலைக்குமேல் கரங்கூப்பி மீண்டும் மூலஸ்தானத்தை தரிசிக்கின்றோம். கொடிமரத்தினடியில் விழுந்து வணங்கி எழுகின்றோம்.

திருக்குளக்கரையில் - தேவஸ்தான கடை அமைந்துள்ளது. இந்தக் கடையில் - திருநீறு, சுத்தமான குங்குமம், ருத்ராட்சம் - என  பலவித பொருட்களும் விற்கப் படுகின்றன.

அவற்றுள் முக்கியமானது  - திருச்சாந்து உருண்டை!..

அது ஒருவிதமான மருந்து. சிறு சிறு உருண்டைகளாக - சிறிது திருநீற்றுடன் வைத்திருப்பர். 

சர்வரோக நிவாரணனின் சந்நிதி பிரசாதம் என அதை வாங்கி  - விடியற் காலையில் குளித்து விட்டு ஒரு உருண்டையை உட்கொண்டால் உடலில் உள்ள பிணிக்கூறுகள் அகலும் என்பது நம்பிக்கை. 

தரிசனம் செய்யும் சந்நிதிகளிலும் அலங்கார அடுக்கு தீபத்திலும் தீபங்களை ஏற்றி வைத்த மகிழ்வு. துன்பங்களும் நீங்கியதால் நெஞ்சகத்தில் நெகிழ்வு!..


இத்திருக்கோயிலுக்கு கிழக்கு வாசலாக இரண்டு ராஜகோபுரங்கள்.

அவற்றுக்கு நடுவில் தலவிருட்சமாகிய வேம்பு. அதன் கீழ் ஆதிவைத்யநாதர் சந்நிதியும் ஸ்ரீவீரபத்ரர் சந்நிதியும் விளங்குகின்றன.

அங்கே சித்ரான்னங்கள் விற்கப்படுகின்றன. பொங்கலும் புளியோதரையும் வாங்கிக் கொண்டோம்.வினை தீர்க்கும் வேம்பின் கீழ் அமர்ந்து நானும் என் மனைவியும் பகிர்ந்து கொண்டோம்.

அன்றைய பொழுதில், அடுத்த திருத்தலம் -  திருக்கடவூர்!..

ஐயனிடமும் அம்பிகையிடமும் விடைபெற்றுக் கொண்டபோது மணி ஒன்று.

கீழைக் கோபுர வாசலுக்கு வந்ததும் - பேருந்து வந்து நின்றது.

எங்கள் பயணம் தொடர்ந்தது - திருக்கடவூரை நோக்கி!..

கற்பக விநாயகனும் செல்வ முத்துக்குமரனும் 
வைத்தீஸ்வரனும் தையல் நாயகியும்
பக்தர்களின்  பிறவிப் பிணியைத்  தீர்த்து 
சகல நலன்களையும் அருள்கின்றனர். 

அதற்கு மேல் வேறு என்ன வேண்டும்!.. 

கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே!..(2/43)
திருஞான சம்பந்தர். 

பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே!..(6/54)
திருநாவுக்கரசர். 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

24 கருத்துகள்:

 1. கோயிலின் சிறப்புகள் அனைத்தும் அருமை ஐயா... நன்றி... பல தகவல்கள் அறியாதவை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. உங்களுடைய பதிவு மூலமாக நாங்கள் மறுபடியும் வைத்தீவரன்கோயிலைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. ஆலய தரிசனம்
  சாலவும் நன்று
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. வணக்கம் ஐயா!

  வைத்தீஸ்வரன் கோயில் வரலாறும் சிறப்புகளும் படங்களும்
  அதி அற்புதம் ஐயா! அருமை!

  அங்கிருந்து அங்கு கோயிலுக்குச் சென்று வந்தவர்கள்
  அந்தத் திருச்சாந்து உருண்டைகள் சில எனக்கும்
  கொண்டு வந்து தந்தார்கள்.. நீரிற் கரைத்து இவருக்குக் கொடுத்தேன்.. தொடர்ந்து கிட்டவில்லை!
  அருமை.. தொடருங்கள்!..

  நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   ஐயன் வைத்தீஸ்வரன் திருவருளால் - தங்கள் கணவர் நலம் பெறவேண்டும்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

   நீக்கு
 5. வேண்டத்தக்கது அறிவோய் நீ!.. - என நிர்மலமாகிப் போனது மனம்.

  தீபஒளியில் திவ்ய தரிசனம் கண்டு மாமருந்தாகிய விபூதியினைப் பெற்று பஞ்சாட்சரத்துடன் தரித்தவாறே மூலஸ்தானத்தை வலம் வருகின்றோம்.
  படங்களும் அற்புதம் அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. கோவிலின் சிறப்புக்களை மிகச் சிறப்பான பகிர்வாக பதிந்திருக்கிறீர்கள் ஐயா...
  படங்களும் செய்திகளும் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. இது வரை இருபதாண்டுகளுக்கும்மேலாக ஒவ்வொரு வருடமும் செல்லும் ஆலயம், இப்போது உங்கள் பதிவின் மூலம் மீண்டும் சென்று வந்த உணர்வு. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகைக்கும் அன்பின் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. விரிவாக கோவிலின் சிறப்புகளை சொன்னது அருமை.

  படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. எத்தனை தகவல்கள்...........

  சேமித்துக் கொண்டேன். அப்பக்கம் சென்றால் பயன்படும் என்ற எண்ணத்துடன்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   பதிவின் குறிப்புகள் தங்களுக்குப் பயன்படும் என்பதில் - மகிழ்ச்சி..
   தங்களின் வருகைக்கு நன்றி..

   நீக்கு
 10. அருள்மிகு வைத்தீஸ்வரன் திருக் கோயில் பற்றி நிறைய தகவல்கள். சைவமும் வைணவமும் பின்னிப் பிணைந்து இருப்பதை தங்கள் விளக்கம் மூலம் தெரிந்து கொண்டேன். பரிகாரம் என்ற பெயரில் எல்லா கோயில்களிலும் அசுத்தம்தான் செய்கிறனர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   மக்கள் ஓரளவுக்காவது திருந்த வேண்டும்.
   திருக்கோயில்கள் நமது முன்னோர் தந்த செல்வங்கள். அவற்றை பராமரிப்பதில் எவ்வளவு சிரமங்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்தால் நல்லது..

   தங்கள் அன்பின் வருகை கண்டு - மகிழ்ச்சி..
   இனிய கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 11. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
  அன்பு நண்பரே.... எனது நண்பரொருவர் அவருக்கு கணினி அறிவு அத்தனையொன்றும் அறியாதவர் அவரது செல்போணில் எமது பதிவுகளை கண்டு வருகிறார் ஆனால் கருத்துரை இடத்தெரியாது நான் அழைத்தால் பாராட்டுவார் இந்தமுறை நமது இனியா இந்தியாவுக்கு வரும்போது தங்களது பதிவை அறிமுகப்படுத்தி வைத்தேன் காரணம் அவரும் தங்களைப்போன்றே பக்திமான் இப்பொழுது என்னை மறந்து விட்டார் தங்களை தொடர்கிறார்..... ஆனாலும் கருத்துரை இடத்தெரியாது நான் அழைத்தால் குவைத் நண்பரை எமது சார்பாக பாராட்டி எழுதிவிடு என அதிகாரமாய் சொல்கிறார் ஆகவே சொல்லி விட்டேன் நண்பரே... அவரின் பெயர் ஜி. கணேசன் எமது 30 வருட குடும்ப நண்பர் தேவகோட்டை.
  நண்பரே... எம்மை மறக்கடிக்கச் செய்து விட்டீர்களே... நியாயமா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்களது வருகைக்கும் நண்பர் திரு. ஜி. கணேசன் அவர்களை அறிமுகம் செய்தமைக்கும் மகிழ்ச்சி..

   நமது நண்பர் திரு. ஜி. கணேசன் அவர்களுக்கு எனது நன்றியையும் அன்பினையும் கூறுங்கள்..

   மறக்கடிக்கச் செய்வதா!.. தேவகோட்டைக்கும் குவைத்திற்கும் நட்புப் பாலமாகத் திகழ்வது - நீங்கள் தானே!..

   தங்களுக்கும் எனது நன்றி.. வாழ்க நலம்..

   நீக்கு
 12. வைத்தீஸ்வரன் கோவிலைப் பற்றி நன்கு அறிந்து கொண்டோம். வலம் வந்தோம்.நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தாங்கள் வருகை தந்து கருத்துரை வழங்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..